Advertisement

அத்தியாயம் – 3

“சித்து…. ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை..

“அத்தை….. ”

“போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லி பரிசம் போடுற அளவுக்கு வந்தோம்.. ஆனா நீ கமுக்கமா இருந்திட்டு, என் மகனை தூண்டிவிட்டு, என்னையவே எதிர்த்து பேச வச்சு, இப்போ அவனையும் வீட்டை விட்டு போக வச்சு, அநியாயமா சித்துவ இப்படி ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிட்டியே பாவி” என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தியவரை அதிர்ச்சியாய் பார்த்தாள் யசோதரா…

“ஏய் என்ன அப்படி பார்த்துட்டா, உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ச்சே அப்படியே அம்மா புத்தி… எத்தனை தடவை என் மகனுக்கு நான் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லியிருப்பேன்.. கேட்டானா… நீ என்ன தூபம் போட்டியோ. அய்யோ…. கடவுளே..” என்று இன்னும் என்னென்னவோ பேசிக்கொண்டே போனார்..

அதிர்ச்சி, குழப்பம், கோவம் எல்லாம் சேர்ந்து யசோதராவை அயர வைத்தாலும், கலைவாணிக்கு எந்த பதிலும் கூறாமல் மருத்துவமனை அறையில் படுத்துகிடந்த சித்தாராவை பார்த்தாள்..

எப்பொழுதுமே புன்னகையோடு திரிபவள், இப்படி கிடக்கிறாளே என்ற எண்ணமே அவளுக்கு அழுகை வந்தது… சித்து என்று அவளருகே நெருங்க விழைந்தாள், ஆனால் கலைவாணி விடவில்லை..

“அத்தை இப்போ ஏன் இப்படி பண்றீங்க.. சித்தாரா இப்படி செய்ததுக்கும் எனக்கு என்ன இருக்கு??? ”

“அப்படிக்கேளு டி என் அண்ணன் மகளே, நீ என் மகனை தூண்டி விட்டு தானே, அவன் இவளை வேண்டாம்னு சொல்றான்.. சொன்னது மட்டுமில்லாம, இப்போ உன்னை கட்டி வைக்கலைனா வீட்டுக்கே வரமாட்டேன்னு போயிட்டான்..” என்று கூறவும் விசாகனை எண்ணி தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது..

“ஆனா அத்தை எனக்கு எதுவுமே தெரியாது அத்தை ப்ளீஸ் நம்புங்க…. ”

“அட அட.. என்ன நடிப்பு மா… சும்மாவா சொல்றாங்க தாயை போல பிள்ளை நூலை போல சேலைன்னு… இந்த நடிப்பா நாம எங்க கண்டோம்”

“அத்தை போதும், இறந்து போனவங்கள பத்தி ஏன் இப்படி பேசுறிங்க…” அடக்க முடியாமல் விம்மல் வெடித்தது..

தனக்கு துணை வருவர் என்று வேதமூர்த்தி தேன்மொழியை பார்த்தாள் யசோதரா..    ஆனால் அவர்களோ எதுவுமே கூறவில்லை.. இப்படி பேசாதீர்கள் என்று கலைவாணியையும் கூறவில்லை, யசோதராவிற்க்கு ஆதரவாயும் பேசவில்லை..

“சித்தி.. ஏதாவது சொல்லுங்க சித்தி.. அத்தை பாருங்க இப்படி பேசுறாங்கன்னு.. சித்தப்பா நான் என்ன பண்ணேன்??? எனக்கு சித்துக்கு முடிவு பண்ண மாப்பிள்ள யாருன்னு கூட தெரியாதே சித்தப்பா.”

“அடடா…. என்ன பசப்பு மா…. நான் பேசினா என்கிட்டே பதில் சொல்லு.. ஏன்  அவங்கள இழுக்குற?? நீ என் மகன் கிட்ட சொல்லல போயி எங்க சித்தப்பாகிட்ட பேசுன்னு.. சொன்னயா இல்லியா….??” என்று சட்டமாய் கேட்டார்..

விக்கித்து தான் போய்விட்டாள் யசோதரா… தான் எந்த அர்த்தத்தில் கூறியது இப்பொழுது எப்படி வந்திருக்கிறது என்று.. மீண்டும் ஒரு முறை தன்னை வளர்த்தவர்களை திரும்பி பார்த்தாள்.. அவர்கள் முகத்திலும் கலைவாணி கேட்ட கேள்வி தான் இருந்தது…

நொடியில் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள் யசோதரா. இனி யாரை நம்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை.. தானே தான் தனக்காய் பேசவேண்டும் என்று அவள் எண்ணிய நேரம் விசாகன் அழைத்தான்..

ஐயோ என்று வந்தது, இந்நேரத்திலா அழைக்க வேண்டும்.. எடுப்பதா வேண்டாமா என்று அவள் யோசிக்க, அவள் கையில் இருந்த அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கி பார்த்த கலைவாணி ரணபத்திர காளியாகவே மாறிவிட்டார்..

“ஐயோ…. ஐயோ…. தம்பி பாத்தியா, விசா போன் பண்ணுறான். அதுவும் இவளுக்கு.. ரெண்டு நாளா நான் போட்டதுக்கு பதிலே சொல்லாம இருந்தவன் இவளுக்கு பேசுறான்னா என்ன அர்த்தம், நடந்தது எல்லாத்துக்கும் இவ தான் காரணம்… அன்னிக்கே சொன்னேன் இதுங்களை நம்ம தலையில போட்டுக்காத, எதா ஹோம்ல சேத்து விடுன்னு, பாவி மகளே கேட்டியா… இன்னிக்கு உன் மக சாக கிடக்கா, என் மகன் எங்க இருக்கான்னே தெரியலை.” என்று ஒப்பாரி வைக்கவும்

அங்கிருந்த செவிலியர் ஒருவர் வேகமாய் வந்து மருத்துவமனையில் இப்படி எல்லாம் சத்தம் போடக்கூடாது என்று கடிந்து செல்ல அப்பொழுதும் கலைவாணி அடங்குவதாய் தெரியவில்லை..

“அத்தை போதும்….. இதுக்கு மேல ஒரு வார்த்தை நீங்க பேசக்கூடாது… பேசுறதுக்கான இடமும் இது இல்லை. சித்தப்பா, சித்தி உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் நிஜம் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கும் நடந்த எதுக்குமே சம்பந்தம் இல்லை. சித்து முதல்ல சரியாகி வீட்டுக்கு வரட்டும் பிறகு பேசலாம்” என்றவள் கலைவாணி கையில் இருந்த தன் அலைபேசியை வெடுக்கென்று பிடுங்கியபடி சென்றுவிட்டாள்..

அவள் சென்றபிறகும் கூட கலைவாணி அமைதியாய் இருக்கவில்லை.. யசோதராவின் தந்தை சத்திய மூர்த்தி, கலைவாணி, வேத மூர்த்தி, ஆகிய மூன்று உடன் பிறப்புகளில் கலைவாணிக்கே முதலில் திருமணம் நடந்தது..

அடுத்ததாக கலைவாணியின் நாத்தியை சத்திய மூர்த்திக்கு திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கவும், அவரோ தான் ஒரு பெண்ணை விரும்புவதாய் கூறி அதிலேயே உறுதியாயும் இருந்து, யசோதராவின் அன்னை பார்வதியை மணந்தார்.. அன்றிலிருந்து அண்ணன் மீதும், அண்ணன் மனைவி மீதும் தீரா வெறுப்பு கலைவாணிக்கு, இன்று அவர்களது பிள்ளைகளின் மீதும் பாய்கிறது.

யசோதரா எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்றே தெரியவில்லை.. நடந்த களேபரத்தில் வசுந்தராவை மறந்திருந்தவள் வீட்டிற்கு வந்த பிறகு தான் நினைவு கூர்ந்தாள்..

“என்ன கா நல்லா செமத்தியா வாங்கிட்டு வந்தியா” என்றபடி வந்தாள் இளையவள்.. அவள் தன் முகம் காணும் முன்பே வேகமாய் கண்களையும் முகத்தையும் துடைத்தாள் யசோதரா..

“ஹேய் வசு, என்ன டி இவ்வளோ கூலா பேசிட்டு இருக்க.. உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லையா.”

“நீ இன்னும் எந்த உலகத்துல கா இருக்க?? சித்து சும்மா இருக்காம இப்படி ஒரு வேலை பண்ணதுக்கு நான் ஏன் கவலை படனும். அவ நல்லா ஆகிடனும்னு எண்ணம் இருக்கு ஆனா பரிதாபம் எல்லாம் இல்லை.”

“இப்படி எல்லாம் பேசாத வசு… ”

“பேசாம.. ஸ்ஸ் லீவ் இட் கா… இதை பத்தி பேசினா சண்டை தான் வரும்.. எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும், சோ கோயிங் அவுட்.. பை” என்றுவிட்டு சென்றுவிட்டாள்..

அத்தனை பெரியவீட்டில், தனியாய் நின்றிருந்தாள் யசோதரா.. அதுவே அவளது நிலையை உணர்த்தியதோ என்னவோ.. வசுந்தரா போல் பட்டும் படாமல் இருந்திருந்தால் தனக்கு இத்தனை வேதனை இல்லையோ என்று எண்ணினாள். அனைத்திற்கும் யசோம்மா என்று அழைக்கும் வேதமூர்த்தியும், பாசமாய் பேசி சிரிக்கும் தேன்மொழியும் கண் முன்னே வரவும்

“ச்சே நமக்கு ஏன் புத்தி இப்படி போகுது… பணம் காசு இருந்தாலும், சின்ன வயசுல இருந்து ஒரு குறையும் இல்லாம அப்பா அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்து படிக்க வச்சு, அதுவும் இன்னிக்கு எனக்குன்னு ஒரு அடையாளம் தேடி கொடுத்தது எல்லாம் சித்தப்பா சித்தி தானே…”

“ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன எதுன்னு சொல்லிகொடுத்து, இன்னிக்கு வரைக்கும் எனக்கு பிடிச்சதை பண்ண வைச்சு எல்லாமே கத்துகொடுதத்து அவங்க தானே.” என்று தன் போக்கில் நினைவுகளில் மூழ்கியவளை மீண்டும் விசாகனின் அழைப்பு தொல்லை செய்தது…

“ஹலோ விசுத்தான்…. எங்க இருக்கீங்க முதல்ல, நீங்க எங்க இருந்தாலும் சரி உடனே கிளம்பி உங்க வீட்டுக்கு போங்க..”

….

“போதும் நிறுத்துங்க விசுத்தான், உங்கனால தான் இப்போ நான் பேச்சு வாங்குறேன்.. முதல்ல என்ன நடக்குதுன்னே எனக்கு தெரியலை. நீங்க வீட்டுக்கு வாங்க… ” என்று பற்களை கடித்தாள்..

மேற்கொண்டு அவன் என்ன கூறினானோ போனை படக்கென்று வைத்துவிட்டாள்..

“ச்சே.. தொல்லை பிடிச்சவன்… ஓ !!!! தலை வேற பிச்சு எடுக்குது…” என்றவளுக்கு அடுத்தடுத்து அலுவல் அழைக்க அந்த வேலைகளை கவனிக்க தொடங்கினாள்..

இரண்டு நாட்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது… விசகானிடம் இருந்து அடுத்து எந்த அழைப்பும் வரவில்லை… தேன்மொழியும் வேத மூர்த்தியும் வீட்டிற்கு வரவேஇல்லை.. யசோதராவின் பிடிவாதத்தால் வசுந்தராவும் மூத்தவளோடு மருத்துவமனை சென்றுவந்தாள்..

ஏன் வந்தாய் என்றும் கேட்கவில்லை, இருங்கள் என்றும் யாரும் கூறவில்லை.. பெயருக்கு இருவரும் பேசினர், கேட்டதற்கு பதில் கூறினர் பெரியவர்கள்.. இரண்டு நாட்களில் உறவுகள் இத்தனை அந்நியமாய் போகுமா என்று தோன்றியது யசோதராவிற்கு…

இயந்திர தனமாய் வீட்டிற்கும், தொழிற்சாலைக்கும், மருத்துவமனைக்கும் சென்று வந்தாள்.

இடையில் கௌதமன் வேறு வந்தான்.. வந்தவன் வேறு எதுவும் கேட்க வில்லை.. கேட்கவேண்டும் என்று அவள் எதிர் பார்க்கவும் இல்லை. தொழில் விசயமாய் பேசினான் அவ்வளவே, கிளம்பும் போது மட்டும் அவளை ஒரு பார்வை பார்த்தான், அவளும் பார்த்தாள்..

கண்ணும் கண்ணும் என்ன பேசினவோ யார் அறிவார்??  இல்லை கண்கள் வழியாய் மனங்கள் பேசியதோ தெரியவில்லை பிறகு அவரவர் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்..

மூன்றாவது நாள் காலை ஒருவழியாய் சித்தாரா வீடு வந்து சேர்ந்தாள்.. அவளுடனே கலைவாணியும் வந்தார் வருங்கால மருமகளை கவனித்துக் கொள்ளவென்று… அன்றிலிருந்து யசோதரா வீட்டில் இருக்கும் நேரத்தை மிகவும் குறைத்துக்கொண்டாள்..

ஆனாலும் என்ன செய்ய முடியும், அது தானே அவளது வீடும் சென்று தானே ஆகவேண்டும். கலைவாணி முன்பு எதுவும் பேசமாட்டார் தேன்மொழி.. வேத மூர்த்தி அலுவலகத்தில் மட்டும் பேசிக்கொள்வார். சித்தாரா கேட்கும் கேள்விக்கு பதில் கூறுவாள் அவ்வளவே.. இதை எல்லாம் கண்டு தானோ என்னவோ வசுந்தரா மீண்டும் விடுதிக்கே சென்றுவிட்டாள்..

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க கௌதமனும், அவனது அன்னையும் சித்தாராவை காணவென்று வந்திருந்தனர்.. அந்நேரம் பார்த்து யசோதராவும் வீட்டில் தான் இருந்தாள்.. கௌதமன் முகம் பார்த்தே புரிந்துகொண்டாள் அன்னையின் பிடிவாதத்தில் வந்திருக்கிறான் என்று..

கலைவாணியின் உறவில் ஒரு பெண்மணி வந்திருக்க பேச்சிற்க்கா பஞ்சம் அங்கே… அம்பிகாவோடு பேசிக்கொண்டிருந்த யசோதரா, கலைவாணியின் பேச்சு போகும் திசையை உணர்ந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.. கௌதமன் அனைத்தும் கவனித்துகொண்டு தான் இருந்தான். ஆனாலும் பெண்கள் பேசுவதில் தான் என்ன செய்ய முடியும் என்று அமைதியாய் இருந்தான்..

“ஏன் வாணி அண்ணன் மகள் இருக்க, தம்பி மகளுக்கு பரிசம் போட்டியே…” என்று வந்தவர் ஆரம்பிக்க இது ஒன்று போதாதா கலைவாணிக்கு

“அது ஏன் அண்ணி இப்படி கேட்டுட்டிங்க, தம்பி மக தங்கசிலை…அதிர்ந்து பேசமாட்டா, அடங்கி போவா.. குடும்பத்துக்கு ஏத்தவ.. ஆனா அவ இருக்காளே.. யப்பா.. நடந்த அத்தனைக்கும் அவ தான் காரணம். ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி இவ்வளோ நேரம் என்னமா பேசினா” என்று அங்கலாய்த்தார்..

“அட என்ன இப்படி சொல்லிட்ட, பெரியவளும் நல்லாதானே இருக்கா..”

“அதெல்லாம் நல்லா தான் இருப்பா, சண்டி ராணி. இஷ்டத்துக்கு போறதும் வரதும்.. யாரும் ஒருவார்த்தை சொல்லிட கூடாது.. யப்பா எனக்கு வேணாம் சாமி.. தங்க ஊசினாலும் கண்ணுல குத்திக்க முடியுமா அண்ணி. ”

அம்பிகா, தேன்மொழியை பார்த்தார், இதெல்லாம் என்னவென்பது போல, ஆனால் அவரோ வாயே திறக்கவில்லை சித்தாரவிற்கு தேவையானதை கவனிப்பதும் வேலையுமாய் இருந்தார்.. கௌதமன் நிறைய முறை அம்பிகாவை கிளம்புமாறு ஜாடை கூறிவிட்டான். ஆனால் அவரோ

“என்ன கலைவாணி என்ன இருந்தாலும் யசோ உன் அண்ணன் பொண்ணு, அவ தொழில்ல ஒத்தாசையா இருக்கான்னு நம்ம சந்தோசம் தான் படனும்” எனவும்

“அட என்ன கா நீங்க, உங்களுக்கு வேண்டும்னா நீங்க சந்தோஷ படுங்க.. ஆனா எனக்கு ஆரம்பத்தில இருந்தே எதுவும் பிடிக்கல.. என் மகன் வீட்டுக்கு வந்தா போதும்.. சித்தாரா தான் என் மருமக அதுல எந்த மாற்றமும் இல்லை.”

நடந்துகொண்டிருக்கும் அத்தனை பேச்சும் உள்ளே யசோதராவின் காதில் விழுந்தபடி தான் இருந்தது.. மனம் குமுறினாள்.. இவர்கள் எல்லாம் சொந்தங்கள் என்று சொல்லவே வெட்கமாய் இருந்தது..

கலைவாணி இத்தனை பேசியதற்கும் தேன்மொழி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதுவே அவளுக்கு மிகுந்து மன வருத்தத்தை கொடுத்தது..

“சித்தி ஏன் எதுவுமே பேசமாற்றாங்க…. ” என்று அவள் நினைக்கும் பொழுதே மீண்டும் வெளியே பேச்சு குரல் கேட்டது..

“அன்னிக்கே என் தம்பிக்கிட்ட சொன்னேன், இந்த ரெண்டு பேருலையும் எதையா ஒரு பணத்தை போட்டு ஹாஸ்டல்ல விடுன்னு கேட்கலை.. மக மகன்னு வளர்த்தான்.. இப்போ அவன் மக வாழ்க்கையவே பங்கு போட பார்க்கிறா” என்று கூறிய நொடி கௌதமன் படக்கென்று கோவமாய் எழுந்து நின்றான்,

அதே நேரம் கோவமாய் யசோதராவும் கதவை திறந்து வேகமாய் வெளியே வந்தாள்.. அவளது கோவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் கௌதமன் முகம் ரௌத்திரம் கொண்டது..

அம்பிகா, தேன்மொழி இருவரும் அதிர்ந்து நிற்க, கலைவாணி இதற்கெல்லாம் அசருவேணா என்பது போல நின்றிருந்தார்..

“அத்தை….” என்றவளுக்கு கோவத்தை அடக்க கண்ணில் நீர் முற்றியது.. தான் எத்தனை திடமானவள் என்று அவளுக்கே சந்தேகம் எழுந்தது.. கௌதமனோ தேன்மொழியை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தான்..

“அட என்னடியம்மா இல்லாததை சொல்லிட்டேன்… நீ சொல்ல போயி தானே என் மகன் இப்படி பண்ணான்.”

அதற்குமேல் யசோதரா என்ன கூறவந்தாளோ…

“அக்கா” என்றபடி வேகமாய் வேத மூர்த்தி உள்ளே நுழைந்தார்..

அவரை கண்டதும் யசோதராவிற்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது.. இனிமேல் இவர் பார்த்துக்கொள்வார் என்று கண்களை துடைத்தாள்..

“என்னக்கா ஏன் இவ்வளோ பேசுற.. நடந்தது எல்லாம் நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.. என் மக விசாகனை தான் கட்டுவேன்னு அடம் பண்ணா.. நீயும் அவளை தான் பெண் கேட்ட.. அதோட பேச்சை விடவேண்டியது தானே.. இப்போ வரைக்கும் நீ சொல்லி நான் என்ன கேட்கலை.

யசோ இருந்தா விசாகன் மனசு கடைசி நேரத்தில கூட மாறுமோன்னு சித்து பயந்தா அதுனால தான் அவகிட்ட கூட கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை.. ஆனா யசோ விசாகன் கிட்ட என்ன பேசினாளோ எங்களுக்கு தெரியாது.. எனக்கு தேவை இப்போ என் மக குணமாகனும், அவ கல்யாணம் நல்லபடியா நடக்கணும்..”

அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் சித்தாராவின் வாழ்கையின் மீதிருந்த கவலையும் அக்கறையும் தான் வெளிபட்டதே ஒழிய, சிறிதுகூட யசோதராவின் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறவில்லை.. அவரை பொருத்தமட்டில் கலைவாணி யசோதராவை இத்தனை பேசியது ஒரு பொருட்டே இல்லை.

சித்தாராவின் வாழ்கை நன்றாய் அமைய வேண்டும்… அவ்வளவே….

தேன்மொழியும் “அமா அண்ணி, எனக்கு மத்த எதை பத்தியும் கவலை இல்லை.. சித்து ஆசை பட்ட வாழ்க்கை நல்லபடியா அமையனும்.. அவ்வளவு தான்.. மேற்கொண்டு எந்த பேச்சும் வேண்டாம் அண்ணி.. நாங்களும் எதுவும் பேசினோமா இல்லையே..” என்று கூறவும்

அயர்ந்து போனாள் யசோதரா.. ஆக மொத்தம் அங்கே யாரும் அவளுக்காய் பேசவில்லை.. யசோதராவை யார் என்ன கூறினாலும், அவள் பக்கம் என்ன இருந்தாலும் அதெல்லாம் அங்கே ஒரு பொருட்டே இல்லை… அவர்களுக்கு சித்தாராவின் வாழ்க்கை தான் முக்கியம்… அப்பொழுது என் வாழ்கை ?? இந்த கேள்வி தோன்றவும் அவளது உணர்வுகளை சொல்லி மாளாது..

நடந்ததெல்லாம் இது தான், விசாகன் தன் அன்னையிடம் யசோதராவை விரும்புவதை சொல்ல, அவரோ மகனை என்ன சொல்லி சரி செய்தாரோ சித்தராவை பரிசம் போட்டாகிற்று..

ஆனால் விசாகன் மனதில் யசோதரா தான் இருக்கிறாள் என்று அனைவருக்கும் தெரிந்தும் சித்தாரா விரும்புகிறாள் என்ற ஒரே காரணத்திற்காக வேதமூர்த்தி யசோதராவிடம் மறைத்து, அவளை அணைத்து விசயங்களிலும் ஒதுக்கி வைத்து எல்லாம் முடிக்கும் நேரத்தில் விசாகன் இப்படி செய்வான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை..

அதிலும் சித்தாரா, யசோதராவை வென்று விட்டதாகவே நினைத்தாள்.. என்னதான் ஒன்றாய் வளர்ந்தவர்கள், அக்கா என்ற பாசம் இருந்தாலும், தன் காதல் என்று வரும் பொழுது சுயநலம் தான் ஜெயித்தது..

தன்னை விட அனைத்திலும் முதலாய் இருக்கும் யசோதராவை இந்த விசயத்தில் ஜெயித்திடவே துடித்தாள் சித்தாரா.. அதை செய்தும் காட்டினாள்.. யசோதராவை சரியாய் அவள் பிறந்த நாள் சமயத்தில் வெளியூருக்கு அனுப்ப செய்தாள் தந்தையை வைத்து..

கலைவாணியை வைத்து விசாகனை சரிகட்டினாள்..  பரிசம் போடும் நாளிலும் யசோதராவை அங்கே இருக்க விடவில்லை.. கடைசி நேரம் வரைக்கும் யார் மாப்பிள்ளை என்று கூறவில்லை.. இத்தனை செய்தும் விசாகன் இப்படி செய்தது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தர தன் முடிவை தேடும் பொருட்டு கையை அறுத்து கொண்டாள்..

ஒருவேளை அப்படி செய்தாலாவது தன் காதல் அவனுக்கு புரியும் என்று எண்ணினாளோ, இல்லை யசோதரா மனதில் வேறு வித எண்ணங்கள் இருந்தாலும் இதோடு அது தலைதூக்காது என்று எண்ணினாளோ தெரியவில்லை..

ஆனால் இவ்விசயத்தில் சித்தாராவே எதிர் பாராத ஒன்று தன் பெற்றோர்களின் உதவி கிட்டியது தான்.. எதற்கெடுத்தாலும் யசோ யசோ என்று இருப்பவர்கள் இந்த விசயத்தில் மகளுக்கு உறுதுணையாய் நின்றது தான் அதிசயம்..

இவை அனைத்தையும் தெரிந்துகொண்டபின் யசோதராவிற்கு முதலில் எந்த உணர்வுமே தோன்றவில்லை.. மரத்து போனது போல ஜடமாய் நின்றிருந்தாள்.. ஆனால் அவள் மனம் தான் ஸ்தம்பித்து இருந்ததே ஒழிய மூளை தெளிவாய் தான் இருந்தது போல..

யோசி யசோதரா யோசி யோசி என்று அவளை தூண்டியது…

ஆனால் அவ்விடத்தில் இன்னும் சில நொடிகள் நின்றாலும் தான் மிகவும் பலவீனாமாய் உணர்வோம் என்று நினைத்தாளோ என்னவோ தன் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டாள்..

அழுகை வெடித்தது.. முகத்தை மூடிக்கொண்டு ஓவென கத்தி அழுதாள்.. இத்தனை நாள் தோன்றாத எண்ணம் எல்லாம் தோன்றியது..

“அப்போ.. அப்போ என்னை அவங்க பொண்ணா நினைக்கலையா?? இதேது அவங்க பெத்த பொண்ணுனா என்னை ஒதுக்கி வச்சிட்டு சித்துக்கு நல்லது பண்ணிருப்பான்களா?? ஐயோ.” என்று கதறினாள்..

இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட தன் பெற்றோர்களை எண்ணி ஏங்கி அழுதது இல்லை.. முதல் முறையாய் அழுகிறாள் ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல். சொல்லபோனால் யசோதரா அழுததே இல்லை எனலாம்..

கீழே சரிந்து அமர்ந்தவள் மூட்டியில் முகம் புதைத்து அழுதாள்.. ஒவ்வொன்றாய் அவள் மனக்கண்ணில் காட்சிகள் விரிந்தது…

“சித்தி இந்த டிரஸ் நல்லாருக்கா ” என்று கேட்பாள் யசோ

“உனக்கு எது போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் ” என்பார் தேன்மொழி.. ஆனால் சித்தாராவிற்கு மட்டும் இது கலர் சரியில்லை, துணி சரியில்லை என்று ஆயிரம் நொட்டை சொல்வார்..

யசோதரா எந்நேரம் வீட்டிற்கு வந்தாலும் ஒரு சொல் கூறியதில்லை வேதமூர்த்தி, ஆனால் சித்தார்வை, என்ன?? ஏன்?? யாரோடு போனில் பேசினாய் ?? ஏன் இத்தனை நேரம்?? என்று கேள்விகளால் துழைத்து எடுத்துவிடுவார் தேன்மொழி..

அப்பொழுதெல்லாம் யசோதரா அகமகிழ்ந்து போவாள் தன் மீது தான் அவர்களுக்கு நிறைய பாசம் என்று.. அத்தனை நம்பிக்கை என்று.. அனைத்துமே தன் விருப்பம் தான் என்று எண்ணும் பொழுதே பூரித்து போவாள் யசோதரா..

ஆனால் இப்பொழுது நினைக்கும் பொழுது அது தனக்கு கொடுத்த சுதந்திரம் அல்ல தன்னிடம் அவர்கள் போட்டுக்கொண்ட எல்லை கோடு என்று புரிந்தது..

“நான் அவ்வளோ வேண்டாதவளா ?? இதுக்கு அத்தை சொன்ன மாதிரி முதல்லயே ஹாஸ்டல்ல விட்டு இருக்கலாமே.. ஐயோ இன்னும் கூட என்னால இதெல்லாம் நம்ப முடியலையே.. பணத்துக்காக மோசம் பண்றது ஒரு விதம்னா இது பாசம் காட்டி, அதெல்லாம் உண்மையின்னு நம்ப வச்சு ச்சே”..

இதற்குமேல் அவளால் எதுவும் யோசிக்க முடியவில்லை… ஆனால் யோசித்தே ஆகவேண்டுமே… அத்தனை சீக்கிரம் தளர்பவள் அல்ல இந்த யசோதரா என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள்…

முகத்தில் நீர் அடித்து கழுவி, உடை மாற்றி, எப்பொழுதும் இருப்பது போல வெளியே வந்தவள் வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள்.. யாரும் இல்லை.. கெளதமனும் அவன் அன்னையும் சென்றுவிட்டனர் போல.. சித்தாராவின் அறையில் பேச்சுக்குரல் கேட்டது..

யாரிடமும் எதுவும் கூறாமல் காரை பீச்சிற்கு செலுத்தினாள்..

அவளுக்கு எப்பொழுது மெரீனாவை விட சாந்தோம் பீச் தான் மிகவும் பிடிக்கும்.. கால்கள் மணலில் புதைய நடந்து சென்று சிறிது நேரம்  நீரில் நின்றிருந்தாள்..

என்ன செய்வது என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்தாள்.. யார் யார் என்ன பேசினார்களோ அனைத்தையும் மனதில் ஓட்டி பார்த்தாள்..

கண்கள் மூடி சில நொடிகள் நின்றவளுக்கு தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாய் புரிந்தது..

அவ்வளவே தெளிந்துவிட்டாள் யசோதரா… இனி எதற்கும் கலங்க போவதில்லை என்ற திடம் அவள் முகத்தில் வந்தது.. அவள் திடம் பெற்ற அந்த நொடி அவளருகில் யாரோ வந்து நிற்பது உணர்ந்து திரும்பி பார்த்தாள்…                

 

 

 

 

 

Advertisement