Advertisement

அத்தியாயம்- 19

இன்னும் சிறிது நேரம் தான், கௌதமன் கோர்ட்டினுள் செல்ல வேண்டும்.. அதிலும் இன்று கடைசி ஹியரிங் வேறு.. இத்தனை நாள் பாடுப்பட்டதற்கு எல்லாம் இன்று ஒரு முடிவு தெரியும் நாள். அனைத்து ஆதாரங்களும் பக்காவாய் இருந்தாலும் குற்றவாளியை மட்டும் இன்னும் பிடிக்க முடியவில்லை..

அவன் மட்டும் பிடிபட்டிருந்தாள் இன்று கௌதமனின் உணர்வுகளே வேறு.. ஆனால் இப்பொழுதோ கடைசி நேரம் வரை என்ன நடக்கும் என்று அவனுக்குமே தெரியவில்லை தான்.. எவ்வழக்கிலும் அவனுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது இல்லை..

ஒரு நொடி கண்கள் மூடியவனுக்கு அன்று காலை அவனிடம் யசோதரா கூறியது எல்லாம் நினைவு வந்தது..

“கெளதம், நீங்க இப்படி இருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.. ந கௌதமுக்கு இப்படி இருந்து பழக்கமே இல்லையே.. ஹ்ம்ம் என்னாச்சு உங்களுக்கு” என்று அவன் சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி கேட்டவளை ஒரு வெற்று பார்வை பார்த்தன் அவள் கணவன்..

“ம்ம்ச் என்ன கெளதம்…  ”

“என்ன சொல்ல சொல்ற யசோ… அந்த கேசவ் மட்டும் கிடைச்சு இருந்தா இந்நேரம் இந்த கேஸ் முடிஞ்சு இருக்கும்.. அவனால் எத்தனை ஏழைங்க பாதிக்க பட்டு இருக்காங்க தெரியுமா?? உதவி செய்ற மாதிரி செஞ்சு, அவங்ககிட்ட இருக்க கொஞ்ச நஞ்ச நிலத்துக்கும் பவர் வாங்கிட்டு, அதை எல்லாம் இவன் கோடி கணக்குல லாபம் பார்த்து வித்திருக்கான்.. இதுக்கு உடந்தை அந்த பூபதி பாண்டியனும், மோகனும்..

இவன் பண்ற ஏமாத்து வேலைய தட்டி கேட்கிறவங்களை அடி உதைன்னு கொலை வரைக்கும் பண்ணிருக்கான்.. இது  மட்டுமா இன்னும் எத்தனையோ.. இது போதாதுன்னு அரசாங்க நிலத்தை வேற இவன் பேருக்கு பட்டா போட்டு வித்து கோடி கணக்குல லாபம் பார்த்திருக்கான்.. இவனால் முக்காவாசி பதிக்கப்பட்டது எல்லாம் நடுத்தரத்துக்கும் கீழ இருக்கவங்க.. அதான் மனசு கொதிக்குது.. ச்சே கடைசி நேரத்துல எல்லாம் போச்சு” என்று சுவரை ஓங்கி குத்தினான்…

“ஸ் ஸ் என்ன கெளதம் இது ??”அவனது கைகளை பிடித்து

“இங்க பாருங்க கெளதம், நம்ம எல்லா விதத்திலும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்.. அதிலும் நீங்க ராத்திரி, பகலா இதுக்காக எவ்வளோ கஷ்டப்பட்டிங்கன்னு கூட இருந்தே பார்தவ நான்.. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் சரியா தான் செஞ்சிங்க.. எதோ கடைசி நேரத்துல நம்ம எதிர்பார்க்காதது நடந்து போச்சு.. ஆனாலும் நம்பிக்கையா இருங்க.. உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. சோ எதுக்கும் நீங்க இப்படி கலங்க கூடாது சரியா..    ” என்று கேட்க

“ம்ம் ” என்று அரை மனதை தலையசைத்தான்..

“ஊப்ஸ்… என்ன இது.. என் புருஷன் என்ன சொன்னாலும் பீலிங் மோட்லயே இருக்கார்..” என்று வாய்விட்டே கூறியவள் அவன் முகத்தை ஒரு நொடி ஆழ நோக்கிவிட்டு அவனை இறுக அணைத்துக்கொண்டாள்..

அவனுக்குமே அவ்வணைப்பு தேவை பட்டதோ என்னவோ கண்கள் மூடி தன் மனைவியை இறுக தழுவி நின்றிருந்தான்..

“நடக்குறது எதுவுமே நம்ம கையில இல்ல கெளதம்.. ஆனா கடைசி வரைக்கும் நம்ம முயற்சியை மட்டும் விட்டுட கூடாது.. எது நடந்தாலும் நம்பிக்கையோட அதை பேஸ் பண்ணனும்னு எனக்கு சொல்லி கொடுத்ததே நீங்க தான்.. எனக்கு என் கெளதம் ரொம்ப முக்கியம். அதுக்கு அப்புறம் தான் எல்லாம்.. ம்ம் சரியா ” என்று அவனது காதில் மெல்ல ரகசியம் பேசுபவள் போல் கேட்க அவள் கேட்டதற்கு பதில் கூறாமல் தன்னில் இருந்து விலக்கி அவள் முகம் பார்த்தவன்

அவள் என்னவென்று கேட்பதற்கு முன்னமே அவளது இதழ்களுக்கு விலங்கிட்டான் தன் இதழ்களால்.. யசோதராவோ திமிரவில்லை, விலகிட எண்ணமில்லாதவளை போல அவனோடு இழைந்து நின்றிருந்தாள்..

இறுதியில் அவனே விடுவித்தான்.. அவனது முகம் தெளிந்திருக்க

“திஸ் வாட் ஐ வான்ட் ” என்றான் அவளது இதழ்களை வருடி..

அவளோ அவனது தெளிந்த முகத்தை கண்டு

“மீ டூ ” என்றாள்..

இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு மெல்ல புன்னகை எட்டி பார்த்தது கௌதமனுக்கு.. ஆனாலும் இது சிரிக்கும் நேரம் அல்லவே.. சிந்திக்கும் நேரமாகிற்றே.. யசோதரா கூறியது போல கடைசி நிமிடம் வரைக்கும் நம்பிக்கையாய் தன் முயற்சியை செவ்வனே செய்ய வேண்டியது தான்..

கண்களை மூடி இறைவனை வேண்டி, தன்னுடைய கருப்பு கோட்டை மாட்டியவனை, நிரஞ்சனின் அழைப்பு சற்றே தொல்லை செய்தது..

“ஹலோ நிரஞ்சன் என்னாச்சு டா ” என்று அவசரமாய் கேட்டவனுக்கு அவனது நண்பன் என்ன பதில் கூறினானோ, யோசனையாய் அவனது நெற்றி சற்றே சுருக்கங்களை காட்ட

“ஹ்ம்ம் சரி டா… பார்க்கலாம்” என்று கூறி வைத்துவிட்டு கோர்ட் நோக்கி சென்றவனை, ஸ்டீபன் புன்னகையோடு ஆல் தி பெஸ்ட் கூறி அனுப்பி வைத்தான்..

அங்கே வீட்டில் இருந்த யசோதராவிற்கோ இருப்புக் கொள்ளவில்லை..

எதையோ எண்ணியபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தவளை அம்பிகா அழைத்து உணவருந்த சொல்ல

“இல்லத்தை வேணாம்… கொஞ்ச நேரம் போகட்டும்” என்று பதில் கூற அவரோ விடாமல் பிடித்து இழுத்து சென்றார் யசோவை..

“இங்க பாரு யசோ.. இதை விட பெரிய கேசெல்லாம் உன் மாமா பார்த்திருக்கார்.. எத்தனையோ கொலை மிரட்டல், வெடி குண்டு மிரட்டல் அது இதுன்னு எல்லாம் நானும் பார்த்தாச்சு.. முதல்ல கொஞ்சம் பயந்தேன் பின்னே பயம் விட்டு போச்சு.. எல்லாமே நல்லதே தான் நடக்கும்.. நீ வயித்த காய போடுறதுனால அந்த கேசவ் கிடைச்சுட போறானா சொல்லு.. இல்லையே” என்று அறிவுரை கூறி உண்ண வைத்தார்..

“ஹ்ம்ம் இதுக்கு தான் வீட்டுல ஒரு பெரிய மனுசங்க இருக்கணும் ” என்று எண்ணியபடி அவளும் உண்டாள்.. ஆனாலும் மனதில்அனைத்தும் சரியாய்  நடக்க வேண்டுமே என்ற எண்ணம்..

“ம்மா உங்களை பாக்க ஒருத்தர் வந்திருக்கார்.. முடியாதுன்னு சொன்னாலும் கேட்காம பிடிவாதமா நின்னுருக்கார்” என்று காவலாளி வந்து கூற யாரென்று பார்க்க  வாசலை நோக்கி மாமியார் மருமகள் இருவருமே விரைந்தனர்..

அங்கே மாரி தலையில் ரத்த காயத்தோடும், கை காலில் அடிபட்ட நிலையிலும் நின்றிருந்தான்..

“மா… மாரி என்னாச்சு… ஏன் இப்படி வந்திருக்கிங்க?”என்று சற்றே பதற்றமாய் வினவியவள் காவலாளிக்கு கண் காட்டவும் அவர் சென்று மாரி அமர ஒரு இருக்கையும் குடிக்க குடிநீரும் கொண்டு வந்தார்..

“முதல்ல உட்காருப்பா.. இந்த இதை குடி” என்று அம்பிகா மாரியை அமரவைக்க அவனோ

“ம்மா எனக்கு இப்போ உட்கார எல்லாம் நேரம் இல்லை.. அவன் முழிக்கிறதுக் குள்ள நம்ம வேலையை முடிக்கணும்..” என்றதும் யசோவிற்கு அனைத்தும் புரிந்துவிட்டது..

அவள் பார்வை சற்றே வெளியே தள்ளி நின்றிருந்த ஒரு காரில் படவும், மாரியும் அதையே பார்த்து

“ம்மா, காருக்குள்ள தான் அந்த கேசவ் மயங்கி கிடக்கான்.. அந்த பிளாட் வீட்டுல இருந்து அவன் தப்பிச்சதும் நீங்க சொன்ன மாதிரி நானும் அவன்கூடவே ஒட்டிகிட்டேன்.

எனக்கு தெரிஞ்ச இடம்ன்னு சொல்லி ஒரு வீட்டுல அவனை இருக்க வச்சிருந்தேன், உங்களுக்கு தகவல் சொல்லலாம்னா என் போன் நடந்த களேபரத்துல காணோம்.. அவனோ தப்பிக்க துடியா துடிச்சிட்டு இருந்தான்..  நானோ இப்போ சூழ்நிலை சரியில்ல அது இதுன்னு சொல்லி அவனை தாக்கு பிடிச்சேன்.

முதல்ல அவனுக்கு என் மேல சந்தேகம் வரல, இன்னிக்கு எப்படியாவது அவனை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு பார்த்தேன்.. என்ன நினைச்சானோ என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டான்.. நானும் என்ன ஆனாலும் பரவாயில்லன்னு அவனை பதிலுக்கு அடிச்சுட்டேன்.. ரெண்டு அடி அடிக்கும் போதே கீழ விழுந்தவன் மயங்கிட்டான்..

சீக்கிரம் இவன் எந்திரிக்க கூடாதேன்னு இன்னும் கொஞ்ச மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு அங்கன இருந்த கார்ல தூக்கி போட்டு கூட்டிட்டு வந்துட்டேன் ம்மா.. இதுக்குமேல நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க..” என்றவன் அதற்குமேல் மூச்சு விட முடியாமல் திணறினான்..

வேகமாய் வீட்டில் வேலை செய்யும் நபரை அழைத்த அம்பிகா மாரிக்கு முதல் உதவி செய்யும்படி கூறினார். ஒரு சில நொடிகளுக்கு பின்

யசோதரா “அத்தை நான் அந்த காரை ” என்று ஆரம்பிப்பதற்குள்

“நீ எங்கயும் போக கூடாது யசோ..” என்று மாமியாரின் தோரணையோடு கூறி முடித்திருந்தார் அம்பிகா..

“அத்தை…!!! ”

“அத்தை தான்.. இந்த விசயத்தில நான் சொல்றதை நீ கேட்டு தான் அகனும் யசோ.. முதல்ல கெளதமுக்கோ நிரஞ்சனுக்கோ போன் பண்ணு.. அவங்கள்ள யாராவது வந்து அந்த கேசவை கூட்டிட்டு போகட்டும்.. ஆனா உன்னை போக விடமாட்டேன்   ” என்றுவிட

அவளோ வேறு வழியே இல்லாமல் நிரஞ்சனுக்கும் கெளதமனுக்கும் அழைத்து பார்த்தாள்..

ஆனால் பதிலே இல்லை..

“அத்தை ரெண்டு பேருமே எடுக்கல.. இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள் வேற அத்தை.. ப்ளீஸ் நான் வேணா கூட யாராவது கூட்டிட்டு போறேனே.. கைல கன் வச்சிருக்கேன் அத்தை.. ஒன்னும் ஆகாது “

” போதும் யசோ, உங்க வாழ்கையில் நடந்த எல்லா பிரச்சனையும் போதும்.. இனி ஒரு தடவை அப்படி எதுவும் நடந்திட கூடாது.. கோகுல் கூடத்தான் அன்னிக்கு கைல துப்பாக்கி வச்சிருந்தான் ஆனா அவனுக்கே தானே குண்டடி பட்டுச்சு.. இல்லாட்டி ஏரியா போலிஸ் ஸ்டேசனுக்கு போன் பண்ணு அவங்க வரட்டும் ” என்று கூறிவிட்டு சென்று விட்டார்..

ஐயோ, இன்று பார்த்தா இந்த அத்தை தன் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்று எண்ணியவளுக்கு கௌதமனின் அன்னை அல்லவா பின்னே எப்படி இருப்பார் என்று தோன்றியது..

ஆனால் இவளது அவசரம் அந்த ஆண்டவனுக்கு புரிந்ததோ என்னவோ, வீட்டிற்கு அதே நேரம் விசாகனும், சித்தாரவும் வந்தனர் யசோவை காணவென்று..

வந்தவர்களை வா என்று கூட கேளாது

“விசுத்தான், நல்ல வேலை வந்திங்க, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என்றவள் நடந்த விசயத்தை கூற அவனோ அடுத்த நொடி அந்த கேசவ் இருந்த காரை நோக்கி விரைந்தான்..

பேச்சு குரல் கேட்கவும் அம்பிகா மீண்டும் வெளியே வர யசோவோ

“அத்தை என்கூட துணைக்கு விசுத்தான், சித்து எல்லாம் வருவாங்க.. இது கெளதமுக்கு ரொம்ப முக்கியாமான கேஸ் அத்தை ப்ளீஸ்..” என்றவளை அவரோ வேறு வழியில்லாத காரணத்தால்  “சரி பாத்து போய்ட்டு வாங்க ” என்று கூறி அனுப்பிவைத்தார்..

அந்த காரினுள் கிடந்தவனோ இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் இருக்க அவனது கை கால்களை இன்னும் இறுக கட்டி போட்டான் விசாகன்.. யசோதரா தான் காரை ஓட்டினாள்..

“ கடவுளே சரியான நேரத்துக்கு போயிடனும்” என்று வேண்டிக்கொண்டே கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தபடி வண்டி ஒட்டியவளுக்கு மனமெல்லாம் அவள் கணவனிடம் இருந்தது..

எத்தனை வேகமாய் ஓட்டினாளோ அவளுக்கே தெரியாது.. சரியாய் கோர்ட் வளாகத்தினுள் சென்று வண்டியை நிறுத்தி இறங்கியவர்களை, கௌதமன் மற்றும் நிரஞ்சன் சிரித்த முகத்தோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் காட்சியே வரவேற்றது..

யசோதராவிற்கோ ஒன்றுமே புரியவில்லை.. திரும்பி விசாகன் மற்றும் சித்தாராவின் முகத்தை குழப்பமாய் பார்த்தவள் மீண்டும் கௌதமனை நோக்கினாள்..

இவர்களை பார்த்ததும் கௌதமன் சன்னமாய் புன்னகைத்துவிட்டு தன்னுடைய பேட்டியை  முடித்துக்கொண்டு வந்தான்..

“க,… கெளதம் என்ன நடக்குது இங்க.. கா.. கார்ல அந்த கேசவ்” என்று சவால் சொல்லி முடிப்பதற்குள் வேறு ஒரு லாயர் வந்து  அவனுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு சென்றார்…

“என்ன கெளதம். அந்த கேசவ்” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.. அவனோ அவளை வலப்பக்கம் திருப்பி அங்கே பார்க்குமாறு காட்டினான்..

நிரஞ்சனோடு சேர்ந்து மற்ற காவலர்களும் இருக்க, நடுவில் கையில் விலங்கிட்டு, ஒருவன் நின்றிருந்தான்.. விசாகன் சித்தாரா யசோ என அனைவர்க்கும் குழப்பமே.. யாரிவன் ?? என்ற கேள்வி அவர்கள் மனதை போட்டு தாக்கி கொண்டு இருந்தது..

யசோதராவோ “எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ” என்று எண்ணியபடி தன் கணவன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அவன் காட்டிய பக்கம் நோக்கினாள்..

போலீஸ்காரர்கள் அவனை இழுக்காத குறையாய் அழைத்து வர, இவர்களை தாண்டி செல்லும் போது அவனது பார்வை அத்தனை குரோதமாய் கௌதமனையும், யசோதராவையும் தழுவி சென்றது..

“ரா…. ராஜேஷ்….” என்று கூறிய யசோ அதிர்ந்து போய் நின்றிருந்தாள்..

ஒருகாலத்தில் தன்னுடைய உண்மையான நட்பு என்று நம்பியிருந்தவள், பின் பல வருடங்கள் கழித்து அவன் இறந்தான் என்று அழுதவள், இன்று கண் முன்னே காவலர்கள் அவனை இழுத்து செல்வதை காணும் போது எதுவும் புரியாமல் நின்றிருந்தாள்..

“ம்ம்… ராஜேஷ் தான்… கேசவ்….” என்று கெளதமன் கூற அடுத்த அதிர்ச்சி அவளுக்கு..

“என்ன சொல்றிங்க ??”

“எஸ்… ராஜேஷ் சாகலை.. அவன் செத்து போயிட்டான்னு ஊரு உலகத்தை நம்ப வச்சு தான் இப்படி ஒரு தொழில் பண்ணிட்டு இருந்தாங்க.. கடைசியில மாட்டிக்கிட்டா கூட இறந்துட்டான்னு ஈஸியா தப்பிக்கலாமே அதான்.. ”

அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்து காரினுள் இருந்தவனை காட்டினாள் தன் கணவனுக்கு..

“ஹ்ம்ம் ஏறக்குறைய அந்த ராஜேஷ் போலவே இருக்குற இன்னொருத்தன்.. நம்மை திசை திருப்ப தான், முதல்ல இவனை அனுப்பிட்டு பிறகு யாருக்கும் தெரியாம ராஜேஷ் @ கேசவ் இங்க வந்தது…”

அப்பொழுது தான் யசோதரா காரினுள் கிடந்தவனை நன்றாய் பார்த்தாள்..

“ஆனா.. கெளதம்….  ” என்று மேலும் கேட்பதற்குள் ,யசோதராவை பார்த்ததும், பத்திரிக்கையாளர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்..

“மேடம் உங்களை கடத்திட்டாங்கன்னு சொன்னது எல்லாம் உண்மையா ??”

“யார் கடத்தினாங்க ??”

“இத்தனை நாள் எங்க கொண்டு போய் வச்சிருந்தாங்க?? ”  

“எப்படி தப்பிச்சு வந்திங்க ??”

“அவங்க பாக்குறதுக்கு எப்படி இருந்தாங்க ??”

என்று தங்கள் கடமையாய் கேள்விகளை அள்ளி தெளித்துவிட, கணவனை பார்த்து மெல்ல புன்னகைதத்வள் சொல்லிவிடவா என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்..

அவனோ எதற்கும் அசராமல் இருந்தான்..

“கடத்திட்டதுன்னு சொன்னது முழுக்க உண்மைன்னு சொல்ல முடியாது.. கடத்த முயற்சி பண்ணாங்க, அதான் நான் கொஞ்சம் சேப்டிக்காக மறைவா இருக்க வேண்டியதா போச்சு.. அது வெளிய என்னை யாரோ கடத்திட்டாங்கன்னு செய்தி பரவிடுச்சு.. அவ்வளோ தான்” என்றவள் மேலும் அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு போதும் என்று பேட்டியை முடித்துக்கொண்டாள்..

அனைத்து வேலைகளும் முடிந்து அங்கே நிரஞ்சனும் வந்துவிட, யசோவோ  என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளதுடியாய் துடித்துக்கொண்டு இருந்தாள்..

ஆனால் கௌதமனோ நண்பனும் வந்த பிறகே வாய் திறப்பேன் என்று இடுத்தமாய் நிற்க வேறு வழியில்லாமல் நிரஞ்சனுக்காய் காத்திருக்க வேண்டியதாய் போனது..

ஆனால் வந்தவனோ “கோகுலை சூட் பண்ணவன் கண் முளிச்சுட்டானாம்.. ஏரியா இன்ஸ்பெக்டர் போன் பண்ணார்.. அங்க கொஞ்சம் அங்க பார்மாலிடீஸ் முடிக்க வேண்டியது இருக்கு.. சோ அங்க போயிடலாமா ??” என்று கேட்டபடி காரில் கேசவை போல் இருந்த மற்றொருவனையும் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான்..

“ஓகே டா, கோகுலும் என்ன நடந்ததுன்னு கேட்க வெய்ட் பண்ணிட்டு இருப்பான்” என்ற கெளதம் மனைவியை தன்னோடு அழைத்துக் கொண்டான்..

சித்தாரா, விசாகன் அவர்கள் வந்த காரில் ஏறிக்கொள்ள,

“யப்பா இப்போவாது நம்ம கல்யாணதுக்கு நாள் குறிக்க சொல்லலாம் தானே” என்று   ஆரம்பித்தாள் சித்தாரா..

சம்மதமாய் சிரித்தான் விசாகன்..

அங்கே கெளதமன் யசோவின் காரிலோ அனல் அடித்தது.. வேறு யார் எல்லாம் நம் நாயகி தான்.. உஷ்ண தேவதையாய் அமர்ந்திருந்தாள்..

“ஹே !!! யசோ நான் தான் ஹாஸ்பிட்டல்ல போய் சொல்றேன்னு சொல்றேன்ல.. அதுக்குள்ள எனன் கோவம்..”

“ம்ம்ச்.. நீங்க ஒன்னும் சொல்லி நான் கேட்க வேண்டாம். ”

“அதானே சஞ்சனா கிட்ட கேட்டா அடுத்த அரைமணி நேரத்துல உனக்கு எல்லாம் தெரிஞ்சிட போகுது ” என்றான் நக்கலாய்..

“நீங்களே சொல்லிட்டா நான் ஏன் சஞ்சனாவ கேட்க போறேன்… ”

“ஹ்ம்ம் சரி சரி கோவமெல்லாம் வேணாம்… ” என்று இடையோடு அணைத்தான் கௌதமன்..

“இதானே வேணாங்குறது…”

“இதானே வேணுங்கிறது…. ”  என்று மேலும் இருக்கியவன்… நடந்ததை கூற தொடங்கினான்..

“எங்களுக்கு முன்ன இருந்தே சந்தேகம் தான் யசோ, ஏன்னா பூபதி பாண்டியனும், மோகனும் அவ்வளோ ஈஸியா அந்த கேசவை விட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டாங்க. ஆனா அன்னிக்கு அந்த மாரியை நம்பி விட்டு போரனுங்கனா எதுவோ இருக்கேன்னு தோணிச்சு.. நீ வேற மாரி வந்து சொல்லுவான்னு சொன்னியா, நிச்சயம் ஒரு வேலைக்காரனை நம்பி பூபதி பாண்டியன் அவனை விட்டு போகமாட்டன்னு உறுதியாச்சு..     

மும்பைல கேசவை பாலோ பண்ண நம்ம போட்டு இருந்த ஆளுங்களை திசை திருப்ப தான் அவனை போலவே இருக்குற ஒருத்தனை முன்னவே இங்க அனுப்பினது.. இங்க நம்மளும் அதையே உண்மைன்னு நம்பி இருந்த அதே நேரம் அங்க இருந்தே அந்த கேசவ் தப்பிக்க பார்த்திருக்கான்..

ஆனா வேற ஒரு கேஸ்ல மும்பை போலிஸ் அவனை பிடிச்சிருக்கு. அந்த தகவல் இங்க வர, அவனை இங்க கொண்டு வர சொல்லி நிரஞ்சன் சொல்லிருக்கான்.. ஆனா இதுவே கடைசி நேரம் நடந்தது தான்.. இது மட்டும் நடக்கலைனா இத்தனை நாள் நம்ம எல்லாரும் கஷ்டப்பட்டது எல்லாம் ஒண்ணுமே இல்லாம போயிருக்கும் ”

“ம்ம்ச் கெளதம்.. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே.. பின்ன என்ன ??” என்றவள் அவனது தோளில் வாகாய் சாய்ந்துக்கொண்டாள்..

அவள் மனதில் ராஜேஷ் மேலிருத்த சிறிதளவு நல்லெண்ணம் கூட காணமல் போயிருந்தது..

அங்கே மருத்துவமனையிலோ டாக்டர்களை விட கோகுலை நன்றாய் கவனித்துக்கொண்டது வசுந்தரா தான்..

“இந்த டேப்லெட் நீங்க போட்டு தான் அகனும் கோகுல் ” என்று விடபிடியாய் அவனை மாத்திரையை விழுங்க வைத்துக்கொண்டு இருந்தாள்..

“உன் தொல்லைக்கு அவன் சுட்டதே நல்லதா இருக்கும் போலவே..” என்று புலம்பியபடி சாய்ந்து அமர்ந்திருந்தான்..

“உங்களை வாய்ல சுட்டிருக்கணும்.. ”

“உனக்கு தான் அதை பண்ணிருக்கணும்… ”

“ஆமாமா… மாமாக்கு ஹெல்ப் பண்ண வந்திங்கன்னு நினைச்சா அங்க எதுவோ பிரச்சனை பண்ணிட்டு தான் வந்திங்க போல…”

“ஹ்ம்ம் தப்பு பண்ணவனை பிடிச்சு உள்ள போட்டேன் இது தப்பா.. அவன் அண்ணன்காரன் வந்து சுடுவான்னு கனவா கண்டேன்… எல்லாம் நீ பண்ணது தான்.. உன்னை யாரு அவனை கடிச்சிட்டு ஓடி வர சொன்னா.. ”

“அது சரி ரெண்டு பேரும் துப்பாக்கியை வச்சிட்டு நிக்கிறிங்க நான் நடுவில.. என் நிலைமை எனக்கு தானே தெரியும்… அதான் சரி நான் ஓடி வரும்போது சுதாரிச்சு அவனை நீங்க சுடுவிங்கன்னு பார்த்தா… அந்த அளவுக்கு எல்லாம் உங்க மூளை வேலை செய்யாது போலவே…”

“ஹ்ம்ம் நேரம்… உன்னை காப்பாத்த நான் குண்டடி பட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..”

“சொல்லிக்கோங்க ” என்றபடியே அவனிடம் ஜூஸ் டம்ப்ளரை நீட்டினாள்..

எத்தனை சண்டை போட்டாலும் கவனிப்பு மட்டும் குறையல டா கோகுல் உனக்கு என்று மனதில் மெச்சிய படியே அதை குடித்து முடித்தான்..

அதே நேரம் அங்கே அனைவருமே வர, மீண்டும் நடந்தவை அனைத்தும் ஒருமுறை படம் ஓட்ட பட்டது..

கோகுலை சுட்டவனை விசாரித்து, அவனை அழைத்து கொண்டு கிளம்பினான் நிரஞ்சன்..

“அண்ணி, தயவு பண்ணி உங்க தங்கச்சியை மட்டும் இங்க விடாதிங்க..” என்று மீண்டும் தொடங்கினான் கோகுல்..

“ஏன் கோகுல்… ”

“அவன் சுட்டது கூட வலிக்கல.. ஆனா இவ பேசியே கொல்ற…” என்றதும் வசுவிற்கு முகம் விழுந்துவிட்டது..

அதை யார் கவனித்தார்களோ இல்லையோ சித்து கவனித்துவிட்டாள்..

“ஓய் !! என்ன டி.. ரியாக்சன் மாறுது…??” என்று வசுவின் காதில் ரகசியம் பேச

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே ” என்று சிலுப்பிக்கொண்டாள் அவள்..

அதன் பிறகு அங்கே சிரிப்பும் கும்மாளமுமாய் நேரம் கழிய இரவு கோகுலுக்கு துணையாய் விசாகன் இருப்பதாய் கூறவும் அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்..

இத்தனை நேரம் தன்னோடு சரிக்கு சரியாய் வாயாடியவள் படக்கென்று கிளம்பவும் கோகுலின் முகமுமே லேசாய் வாடித்தான் போனது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement