Advertisement

அத்தியாயம்- 17

“என்னடா நம்ம இத்தனை பேர் கண் கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருந்தும் எப்படி அந்த யசோதராவ கடத்திட்டு போனாங்க??” என்று முகம் எல்லாம் ரௌத்திர கோலம் பூண்டிருக்க, அனல் தெறிக்கும் விழிகளோடு கர்ஜித்து கொண்டிருந்தார் பூபதி பாண்டியன்..

“அதான் ஒன்னும் புரியலைங்கய்யா… ” என்று கைகளை பிசைந்தான் மாரி..

“ச்சே எது கேட்டாலும்  தெரியல, புரியலன்னு. யாரு இத பண்ணதுன்னு முதல்ல கண்டு பிடி.. அந்த மோகனுக்கு போனை போட்டு வர சொல்லு ” என்று கூற மாரியும் அவர் சொன்னதை செய்தான்..

ஒரு மணி நேரம் கழித்து மோகனும் வந்தான்.

“என்ன டா எதுவும் தகவல் தெரிஞ்சதா?? என்ன பண்றான் அந்த வக்கீலு.. யாரு கடத்தினா அவன் பொண்டாட்டிய..”

“அய்யா…அப்போ அது உங்க வேலை இல்லையா ??? ” என்று பதில் கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்தான் மோகன்.

“ஏய் என்ன டா அறிவுகெட்ட தனமா கேக்குற??”

“இல்லைங்கய்யா, நீங்க தானே அந்த யசோதராகிட்ட பேசி பார்க்கணும் இல்லைனா தூக்கிட வேண்டியது தான்னு சொன்னிங்க. அதான் இது உங்க வேலைன்னு நினைச்சேன்..”

இதை கேட்டு, சில நேரம் கண்கள் மூடி யோசித்தபடி இருந்தவர்,

“டேய் அந்த வக்கீலு வேலையா தான் இருக்கணும்.. எப்படியோ அவனுக்கு நம்ம விஷயம் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. அவன் அசால்ட்டா இருக்க மாதிரி இருந்து காரியம் சாதிக்கிறான்.. இல்லைனா அவன் பொண்டாட்டிய நம்ம மீட்டிங்கு அனுப்பியே இருக்க மாட்டான்..”

“எனக்கென்னவோ அப்படி தெரியலை ” என்றான் மோகன்..

“எத வச்சு அப்படி சொல்ற?? ”

“பொண்டாட்டியை காணோம்னு கேள்வி பட்டதுல இருந்து ஆளே ஒரு மாதிரி ஆகிட்டான்.. நேத்து இருந்து கோர்ட்டுக்கு போகல. என்னையும் ஸ்டீபனையும் தான் அனுப்பினான்.. அவனே இது எதிர் பார்க்கல போலங்கய்யா..”

“நம்ப முடியலையே….. ”

“இல்ல நான் கூட இருந்து பாத்ததுனால சொல்றேன்.. என்கிட்டே கூட நிறைய புலம்புனார்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் ”

“என்னடா ??”

“நம்ம கேசோட சில முக்கியமான ஆதாரத்தை எல்லாம் என்கிட்டே தான் பத்திரமா வைக்க சொல்லி  கொடுத்திருக்கான்.. “என்று அவன் கூறி முடிக்க வில்லை

“எங்க???” என்று வேகமாய் எழுந்து வந்தார் பூபதி பாண்டியன்..

அவனும் தன் கையில் இருந்த சில ஆதாரங்களை காட்ட அதை எல்லாம் கண்டவரின் முகமோ திருப்தியாய் இருந்தது..

“நல்லது.. இதெல்லாம் என்ன செய்யனும்னு நான் சொல்ல வேண்டியது இல்ல.”

“தெரியுங்கய்யா… அப்புறம் இன்னும் அவனை கொஞ்சம் பெர்சனலா டென்சன் பண்ணிட்டா இந்த கேசுக்கே கூட வரமாட்டான் போல.. பொண்டாட்டி மேல அவ்வளோ பைத்தியாமா இருக்கான்.”

“என்ன டா சொல்ற ??”

“கடத்தினது நம்ம இல்லைன்னு நமக்கு மட்டும் தான் தெரியும்.. ஆனா இதை வச்சே நம்ம அவனை மிரட்டலாமே..”

“எப்படி அந்த பிரியா பொண்ணு விசயத்துல பண்ணது போலவா ???”

“அதே தான்.. அவன் ப்ரியா சாவ கொலைன்னு தான் நம்பிட்டு இருக்கான்.. கமிஷ்னர் நிரஞ்சன் கிட்ட இதை பத்தி பேசும் போது நானே கேட்டேன்.. எங்க அதே போல அந்த யசோதராவையும் கொலை பண்ணிடுவான்களோன்னு  பயந்தே சாகுறான்..”

“ஹா ஹா… நல்லது டா.. சும்மாவா.. நாலு மாசமா நம்ம கண்ணுல விரல விட்டு ஆடிட்டு இருந்தான்ல.. இவனால லேண்ட் வாங்குறேன்னு சொன்னவன் கூட வாங்காம போனானுங்க.. எவ்வளோ லாஸ்..”

“அய்யா… அதெல்லாம் விடுங்க… நம்ம வக்கீல் மட்டும் அவனோட எவிடென்ஸ் எல்லாம் பொய்ன்னு ப்ரூப் பண்ணிட்டா போதும்..”

“சரி சரி.. நான் சொன்ன இடத்துல தான் தங்குறதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிருகிங்க?? எதுவும் மிஸ் ஆகாதே..”

“இல்லங்கய்யா.. எல்லாமே பக்காவா ரெடி.. அன்னிக்கு மாரிக்கிட்ட போலிஸ்க்கு வந்த பேக்ஸ் ஓட ஜெராக்ஸ் கொடுத்துவிட்டேன்….”

“பாத்தேன்.. அவன் இங்க இருந்து கிளம்பி போறது வரைக்கும் எக்காரணம் கொண்டும் போலிஸ் கண்ணுல மட்டும் மாட்டவே கூடாது.. அப்புறம் எல்லாமே வீணா போயிடும்..”

“எல்லாம் நாங்க பாத்துக்கிறோங்கய்யா.”

“நீ போய் என்ன பண்ற, எப்போவும் அந்த கெளதமுக்கு போன் போட்டு மிரட்டுவல அத போல பேசு..  நல்லா குழப்பி விடு.. நைட்டு பாப்போம் அங்க ” என்று அவர் கூறவும் மோகனும் கிளம்பி சென்றான்..

 

 

“சர்….. ஏன் அந்த எவிடென்ஸ் எல்லாம் மோகன் கிட்ட குடுத்திங்க…?? அதை எல்லாம் கலக்ட் பண்ண நம்ம எவ்வளோ கஷ்டப்பட்டோம்…” என்றான் கவலையான முகத்தோடு கேட்டான் ஸ்டீபன்..

“ஹா ஹா.. ஸ்டீபன்…. அந்த எவிடென்ஸ் எல்லாம் நமக்கு எவ்வளோ முக்கியமோ அதை விட அவனுங்களுக்கு முக்கியம்.. சோ அதை நம்மல விட அவன் ரொம்பவே பத்திரமா வச்சிருப்பான்..”

“ஆனா சர்… அதெல்லாம்…”

“அதெல்லாம் எப்போவோ என்கைக்கு மறுபடியும் வந்திடுச்சு ஸ்டீபன்..  அவன்கிட்ட கொடுத்தது ஒரு காப்பி தான்… யு டோன்ட் வொ.ரி மோகன் வந்தா நீ அவன்கிட்ட பேச்சு குடுத்து இங்கயே அவனை இருக்க வச்சிடு.. போதும்… ”

“ஓகே சர்.. பட் நெக்ஸ்ட் பிளான் என்ன ??”

“ஹா ஹா என்ன மென் நீ.. ஓகே சொல்றேன் கேட்டுக்கோ இது என்னோட பிளான் இல்லை. நிரஞ்சன் சொன்னது.. கேசவ், பூபதி பாண்டியன், மோகன் இவங்க மூணு பேருமே அரெஸ்ட் ஆவாங்க ஒரே நேரத்தில ஆனா தனி தனியா… அதுக்கு தான் மோகன் இங்க வரவும் பேச்சு குடுத்து இங்க இருக்க வைன்னு சொல்றேன்..” என்றவன் மேற்கொண்டு சில விசயங்களை கூறிவிட்டு யசோதராவை காண கிளம்பினான்..

பூட்டியே வீட்டுக்குள்ளே இருந்தாலும், யசோதராவுக்கு பொழுது சாரளாவோடு சிறப்பாய் தான் போனது.. ஆனால் ஒரு எண்ணம் மட்டும் அவளை சோர்வடைய வைத்தது.. வீட்டில் இருப்பவர்களை எண்ணி..

“ஊப்ஸ்…. இந்த கௌதம் வீட்ல இருக்கவங்ககிட்ட மட்டும் சொல்லிட்டா கூட பரவாயில்ல.. வெளிய என்ன நடக்குதுன்னும் தெரியலை… ” என்று சரளாவிடம் வாய்விட்டே புலம்பினாள்.

“ம்மா.. நீங்க இப்படி புலம்புறதை பார்த்தா, முன்ன பின்ன இப்படி புலம்பி பழக்கமே இல்லன்னு தெரியுது ” என்று சிரித்தார் சரளா..

அவரை பார்த்து மௌனமாய் சிரித்தவள் கௌதமனின் வரவிற்காக காத்திருந்தாள். கடிகாரத்தில் ஒரு கண்ணும் பூட்டிய கதவின் மேல் ஒரு கண்ணுமாய்..

“அய்யா எவ்வளோ நேரமானாலும் வந்திருவாங்கம்மா.. நீங்க போய் படுங்க”

“இல்ல.. பரவாயில்ல.. வரட்டும்.. நீங்க போங்க” என்று கூறிவிட்டு மீண்டும் அதே இடத்தில அழுத்தமாய் அமர்ந்துகொண்டாள் யசோதரா..

மேலும் சில நொடிகள் நின்றுவிட்டு சரளா தன் வேலையை பார்க்க செல்ல, யசோதராவோ நேரத்தை நெட்டி தள்ளினாள்…

சரளா வந்து இருமுறை பார்த்துவிட்டு கூட சென்றார், அவளோ அசைந்த பாடில்லை.. கண்களை மூடி சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளுக்கு அவள் கணவனின் வாசம் நாசியை நிறைத்தோ என்னவோ படக்கென்று “கௌதம்” என்றபடி விழிகள் திறந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

கண்களை உருட்டி, லேசாயாய் உதடுகளை சுளித்து இப்படி அப்படி முகத்தை திருப்பி பார்த்தவளை பின்னோடு வந்து இருகரம் அணைத்தது..

“கௌதம்….” என்று முகமெல்லாம் புன்னகையோடு துள்ளி திரும்பியவளை மேலும் இறுக்கிக்கொண்டான்…

“எப்படி யசோ நான் தான்னு கண்டுபிடிச்ச…??”

“ஹ்ம்ம் அதெல்லாம் சொல்ல முடியாது.. சரி ஏன் இவ்வளோ நேரம்??” என்று மனைவியாய் விசாரிக்க

“ஹ்ம்ம் அத ஏன் மா கேக்குற, எனக்கு பாதுகாப்புக்கு ஒரு ஆள் போட்டு வச்சிருக்கியே, அவன் கண்ணுல மண்ணை தூவிட்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகுது..”

“ஹா ஹா ஹா…” மலர்ந்து சிரித்தவளை புன்னகையோடு நெருங்கினான் கௌதமன்..

“ச்சு என்ன கௌதம் இது.. சரளாக்கா இருக்காங்க..” என்று அவன் மார்பில் கை வைத்து  பின்னே தள்ளியவள் அவனுக்கு உண்ண எடுத்துவைக்க போனாள்..

கௌதமன் வந்துவிட்டான் என்பதை உறுதி செய்துகொண்ட சரளா அடுத்து அப்பக்கம் வரவே இல்லை..

“யசோ, உனக்கு இங்க இருக்க கஸ்டமா இல்லையா ?? பார்த்தா ரிலாக்ஸா இருக்க மாதிரி இருக்கு..”

“இருந்து தான் ஆகணும்னு கட்டாயப்படுதிட்டு இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு வரவே கூடாது..”

“ரைட்டு விடு… அப்போ அடிக்கடி இப்படி ஒரு கடத்தலை போட்டுட வேண்டியது தான்”

“ஆபீஸ் டென்சன் இல்லை, வீட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லாம ரொம்பவே ப்ரீயா டே புல்லா உங்களை பத்திமட்டுமே நினைச்சுக்கிட்டு, இதுவும் கொஞ்சம் புதுசா நல்லாத்தான் இருக்கு..”என்று கூறும் யசோதரா அவனுக்கு புதிதாய் தெரிந்தாள்.

“அப்போ இதுக்கு முன்ன என்னை நினைக்கவே இல்லையோ ???!!!!” சீண்டும் குரலில் கேட்டான்..

“ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான். இப்போ அதை கொஞ்சம் தள்ளி வச்சிட்டு, வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க அதை சொல்லுங்க ”

“ஹ்ம்ம் வசுக்கு நாங்க தான் உன்னை மறைச்சு வச்சிருக்கோம்ன்னு தெரியும்..”

“அவளுக்கு தெரியும்ன்னு உங்களுக்கும் தெரியுமா ??”

“ம்ம் நான் கோகுல்கிட்ட இதை சொல்லும் போதே அவ கேட்டதை நான் பாத்தேன்.. பட் தேவையில்லாம வசு இதை யார்கிட்டயும் சொல்லி பிரச்சனை பண்ணமாட்டான்னு தெரியும். சோ அவகிட்ட மேற்கொண்டு எதையும் பேசல.. ஆனா பாவம் கோகுல் தான் மாட்டிகிட்டான் அவகிட்ட..”

“ஓ !!! இதுக்காக தான் தினமும் சர் இங்க வந்திடுறிங்களா, வீட்ல இருந்தா தேவை இல்லாம கேள்வி கேப்பாங்கன்னு..”

“ஆமா பின்ன, எல்லாரயும் கேள்வி கேட்கிறவன் நான்.. சும்மா என்னையவே பிடிச்சு கேள்வியா கேட்டா, அதுலையும் உன் சித்தியும் என் அம்மாவும் இருக்காங்களே.. யப்பா…. முடியல..”

“சித்… சித்தப்பா… எதுவும் கேட்கலையா…”

“அவருக்கு மெல்ல விசயத்த காதுல போட்டு வந்தேன்.. முதல்ல அதிர்ச்சிதான் பிறகு எதுனாலும் பாத்து பண்ணுங்கன்னு சொல்லிட்டார். சோ வீட்ல அவரே சமாளிச்சுப்பார்…”

“ஹ்ம்ம் ” என்றவள் முகத்தில் பலமான யோசனை படர்ந்தது..

“என்ன யசோ ??”

“இல்ல, வீட்ல அத்தனை பேர் இருந்தும் என்னை மட்டும் இப்படி சேப்டியா கொண்டு வந்து வச்சிருக்கிங்களே.. உங்களுக்கு நான்னா அவ்வளோ முக்கியமான்னு எல்லாம் சென்டியா கேள்வி கேக்க மாட்டேன், முகத்தை இஞ்சி திண்ண எது போலவோ மாத்தாதிங்க ” என்று அவள் சொல்ல வந்ததை தவிர்த்து கேலி பேசினாள்..

அவனும் அவளோடு இணைந்து நகைத்தாளும், “ நீ சொல்ல வந்தது இது இல்லையே யசோ ???” என்று தன் கேள்வியை எடுத்து போட்டான் கௌதமன்..

“ஹ்ம்ம் அது…. ஒண்ணுமில்ல.. இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும் கௌதம்.. சொல்றேன்.. ”

“சீக்கிரம் சொல்லிடு மா.. இல்லாட்டி உன்னை விட ஏழு வயசு பெரியவன் நெஞ்சு தாங்காது…” என்று வேண்டுமென்றே நெஞ்சை பிடித்தான்.

“ச்சு.. என்ன எப்போ பார் இதே சொல்லிட்டு.. குத்தி காட்றிங்களா கௌதம் ??”

அவள் முகத்தில் என்ன உணர்வென்றே யாரும் கூறிட முடியாது.. ஆனால் ஒன்று கெளதமனோடு ஒரு சண்டைக்கு தயாராகிவிட்டாள் என்பது மட்டும் உறுதி..

“உனக்கு உறுத்தினா நான் எதுவும் பண்ண முடியாது யசோ. எனக்கு வேலை இருக்கு.. நிறைய ரெபர் பண்ணனும்.. எந்நேரம்னாலும் போன் வரும் கிளம்பனும்  ” என்று எழுந்தவனை பிடிவாதமாய் அமரவைத்தாள்

“உங்கட்ட கொஞ்சம் பேசணும்…”

“இவ்வளோ நேரம் அதானே பண்ண..”

“ம்ம்ச்.. இது வேற..  ”

“ஹூப்ஸ்……. சொல்லு…  ”

“என்னைய விசுத்தான் கிட்ட சித்து கல்யாண விசயமா பேசகூடாதுன்னு சொல்லிட்டு, நீங்களும் வசுவும் மட்டும் பேசியிருக்கிங்க.. ஏன் அப்படி பண்ணிங்க ??”

இதை கேட்டதும் கௌதமன் சிரித்துவிட்டான்..

“இப்போ இது ரொம்ப முக்கியமா யசோ… ”

“எனக்கு இது முக்கியம் தான்.. இப்போ கூட என்ன இந்த விஷயத்துல ஏன் ஒதுக்கி வைக்கிறிங்க??” என்று கேட்டவளின் குரலில் அப்பட்டமாய் கோவம் துளிர்த்தது..

“அடடா.. உன்னை யாரும் ஒதுக்கி வைக்கலம்மா.. முதல் காரணம் சித்து.. விசா மனசில ஏற்கனவே உன் மேல விருப்பம் இருந்தது அவளுக்கு தெரியும். இப்போவும் நீ சொல்லித்தான் அவன் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா, அது கடைசிவரைக்கும் அவளுக்கு ஒரு உறுத்தலை கொடுக்கும்..

ரெண்டாவது காரணம் உன் கலைவாணி அத்தை.. தேவை இல்லாத பேச்சு எப்போ என்ன பேசுவாங்கன்னு தெரியாது.. இதெல்லாம் குடும்பத்துல வீண் பிரச்சனையை தான் உண்டுபண்ணும்.. அதான் உன்னை அமைதியா இருக்க சொன்னேன் போதுமா ??”

“ம்ம் சரி.. ” என்றவளின் முகமே காட்டியது நான் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்று..

“இங்க பாரு யசோ நீ கன்வின்ஸ் ஆகணும்னு எல்லாம் நான் வேற காரணம் தேட முடியாது.. வேற எதுவும் கேட்கனுமா ??”

சில நொடிகள் அவனது முகத்தையே பார்த்தவள்

“ஏன் இப்படி ஷேவ் கூட பண்ணாம இருக்கீங்க ?? அவ்வளோ பிஸியா?? ” என்றாள்..

“ஹா ஹா என் பொண்டாட்டியை யாரோ கடத்திட்டாங்கம்மா.. அதான் சோகம்” என்று சிரித்தவனின் முதுகில் நான்கு அடி வைத்தாள்

“ஓகே எல்லாமே ரெடி தானே.. மறந்தும் கூட நம்ம போலீஸ்னு வெளிய தெரிய கூடாது.. கால்ல போட்டு இருக்க ஷூ முதற்கொண்டு எல்லாம் மாத்திட்டு வந்திடுங்க.. ரொம்ப கேசுவலா இருக்கணும்.. எப்படியாவது இன்னிக்கே அந்த கேசவை பிடிச்சாகனும்” என்று தன சகாக்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டிருந்தான் நிரஞ்சன்..

அவனிடம் இரண்டு திட்டங்கள் இருந்தது.. ஒன்று கேசவ், மோகன் பூபதிபாண்டியன் மூவரையும் ஒரே இடத்தில வைத்து கைது செய்வது..

மற்றொன்று மூவரையும் சந்திக்க வைத்து பேசவிட்டு பிறகு அவரவர் இடத்தில தனி தனியே கைது செய்வது..

நேரத்திற்கு ஏற்ப இரண்டில் எது சரியாய் வருகிறதோ அதை செயல்படுத்த திட்டம் போட்டிருந்தான்.

இது கௌதமன் நிரஞ்சன் இருவர் மட்டுமே அறிந்த ஒன்று.. ஆதலால் தான் ஸ்டீபென் கேட்டதற்கு கூட ஒரு திட்டத்தை பற்றி மட்டும் கூறினான் கௌதமன்..

லேசாய் கடல் காற்று கலந்து வீச, வாகன இரைச்சல்கள், நகரத்தின் ஜன சந்தடிகள் இல்லாமல் சற்றே ஒதுக்குபுறமான இடத்தில அழகாய் அமைந்திருந்தது அந்த   அடுக்குமாடி குடியிருப்பு…

கிட்ட தட்ட  இருநூறு குடும்பங்களுக்கும் மேலே வசிக்கும் இடம்.. ஆனால் அதற்கான எவ்வித அடையாளமும் இல்லாமல் அமைதியை ஆடையாய் சூடியிருந்தது…

குடியிருப்புகளில்எறியும் மின் விளக்குகள் மட்டுமே ஆட்கள் அங்கே இருப்பதற்கான அறிகுறி..

அக்குடியிருப்பின் பத்தாவது தளம் முழுவதிலுமே வீட்டின் கதவுகள் பூட்ட பட்டு இருந்தது.. ஒன்றில் மட்டுமே ஆட்கள் இருக்கும் அடையாளமாய் பேச்சு குரல் மிக மிக மெல்லமாய் ஒலித்தது..

அதிலும் கூட நிறைய ஆட்கள் எல்லாம் இல்லை, எண்ணி நான்கே பேர்.. கேசவ், பூபதி பாண்டியன், மாரி, மோகன்..

மாரிக்கு இன்னுமே கூட தான் காண்பதை எல்லாம் நம்ப முடியவில்லை.. தன் முதலாளி கூறுவதை என்ன ஏதென்று எதிர்கேள்வி கேட்காமல் செய்வது மட்டுமே அவன் வேலை. ஆனால் இன்றோ அவன் கண் முன்னே நடப்பது அனைத்தும் சினிமாவில் கூட அவன் பார்த்தது இல்லை..

ஆனால் அவன் எடுபிடி தானே… மௌனமாய் நின்றிருந்தான்..

மற்ற மூவரும் எதோ தீவிரமான முக பாவத்தோடு பேசிக்கொண்டிருக்க அவர்கள் கேட்பதை கொடுப்பதும் சொல்வதை செய்வதுமாய் இருந்தான் மாரி…

மிகவும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தது பூபதி பாண்டியன் தான்.. அவர் சொல்வதற்கு மறுப்பு கூறுவது போல அந்த கேசவ் எதோ தலையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தான்.. இருவருக்கும் சமாதானம் செய்வது மோகனின் வேலையாய் போனது..

மேலும் நேரம் நகர, மூவரும் மேற்கொண்டு என்ன பேசி என்ன முடிவெடுத்தனரோ இறுதியில், பூபதி பாண்டியன்  “நான் சொல்றது தான் சரி.. இப்போதைக்கு மூணு பேரும் தனி தனியா இருக்கிறது தான் நல்லது.. ஒண்ணா இருந்தா மூணு பேருமே அவனுங்கட்ட சிக்கனும்.. மாரி கேசவ்க்கு துணையா இருப்பான்.. மோகன் நீ எப்பவும் போல போய் அந்த ஸ்டீபன் கூட இரு” என்று கூற அதுவே அவனுக்கும் சரியன பட்டது..

ஆனால் இந்த யோசனையில் உடன்பாடில்லை என்பது போல அமர்ந்திருந்தான் கேசவ்..

அவன் முகத்தை பார்த்தே பூபதி பாண்டியன் அதை கண்டுகொண்டாரோ என்னவோ

“தம்பி நான் சொல்றது உனக்கு பிடிக்கலைனாலும் பரவாயில்ல.. நீ இந்த ஊர விட்டு போரத வரைக்கும் தான் இதெல்லாம்.. அந்த வக்கீலும் போலீசும் எப்போ என்ன செய்வாங்கன்னு தெரியாது.. கோர்ட்ல உன்னை ப்ரோடியுஸ் பண்ணிட்டா அப்புறம் வெளியவே வரவே முடியாது. அதான் சொல்றேன்..  நாளைக்கு சாயங்காலம் உனக்கு இங்க இருந்து துபாய்க்கு பிளைட். அதுவர நீ சும்மா இருந்தாலே போதும், மத்தது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் மாரியிடம் எதுவோ சொல்லிவிட்டு சென்றார்..

மோகனும் இது தான் சரி என்பது போல கேசவிடம் மொழிந்துவிட்டு நகர்ந்தான்..

இவர்கள் தங்கள் இடம் நோக்கி கிளம்பி செல்லவும், நிரஞ்சனுக்கு தகவல்  வரவும் சரியாய் இருந்தது..  

இவ்விசயம் தெரியவுமே நிரஞ்சன் மின்னல் வேகத்தில் செயல் பட்டான்.. அடுத்தடுத்த உத்தரவுகளை கூறியபடி அந்த கேசவை கைது செய்ய தானே கிளம்பினான்.

மூன்று பிரிவுகளாய் பிரிந்த போலிஸ் படை ஒவ்வொரு பக்கம் சென்றது.. மோகனை பிடிப்பது அத்தனை கடினமானதாய் இல்லை.. அவன் ஸ்டீபனின் இருப்பிடம் செல்லும் முன்னமே ஒரு பிரிவால் கைது செய்யபட்டான்..

மற்றொரு பிரிவோ பூபதி பாண்டியனை நேருங்கிக்கொண்டு இருந்தது.. போலீஸ் தன்னை துரத்துகிறது என்பதை எப்படி உணர்ந்தாரோ காரை மின்னல் வேகத்தில் செலுத்தினார்..

ஆனால் காவல் படையும் சளைத்தது அல்லவே. அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன பூபதி பாண்டியனின் கார் மீது.. தேவைபட்டால் சுட்டு பிடிக்கவும் தான் உத்தரவிட்டு இருந்தான் நிரஞ்சன்.. காரின் பக்கவாட்டு ஜென்னல் வழியே பாய்ந்த தோட்டா அவரது தோளை பதம் பார்க்க, போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைக்க நட்ட நாடு ரோட்டில் கைது ஆனார் பூபதி பாண்டியன்..

கடைசியாய் மூன்றாவது பிரிவு  நிரஞ்சன் தலைமையில்  கேசவை பிடிக்கக் சென்றது…..

“இன்னும் சிறிது நேரம் தான் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும ” என்றவனுக்கு மோகனும் பூபதிபாண்டியனும் பிடிபட்டனர் என்ற செய்தி எட்ட முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது..

கெளதமனுக்கும் கோகுலுக்கும் இச்செய்தியை குறுந்தகவளிட்டான்..

 

 

அமைதியான இரவு நேரம் கரிய வானில் மேகக்கூட்டங்களும் உறங்க சென்றதோ என்னவோ, எம்மேக மறைத்தலும் இன்றி முழு நிலவு அழகாய் ஜொலித்து கொண்டிருந்தது….

கௌதமனின் வீடு நிசப்தமாய் இருந்தாலும் இரண்டு உள்ளங்கள் மட்டும் என்னாகுமோ ?? என்ற ஆவலில் உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தது..

ஒன்று கோகுல், மற்றொன்று வசுந்தரா….

கோகுலுக்கு இன்னுமா அந்த கேசவ் பிடிபடவில்லை என்ற கேள்வி உறங்கவிடவில்லை.. உறக்கம் வராமல் மொட்டை மாடியில் நடந்துகொண்டிருந்தான்..

வசுந்தராவோ அனைத்தும் தெரிந்தும் எதையும் வெளியில் கூறமுடியா தவிப்பில் இருந்தாள்.. ஒரு பக்கம் யசோ நன்றாய் இருக்கிறாள் என்ற எண்ணம் மகிழ்வை கொடுத்தாலும் அனைத்தும் விரைவில் சரியாகவேண்டுமே என்ற எண்ணத்தில் உறக்கம் வருவேனா என்று இருந்தது..

உறக்கம் வராமல் புரண்டவள், சற்று நேரம் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் அவளும் மாடிக்கு சென்றாள்..

அங்கே கோகுல் இருப்பதை கண்டு, திரும்ப எண்ணியவள் பிறகு என்ன நினைத்தாளோ,

“என்னாச்சு.. எல்லாம் ஓகே” என்ற கேள்வியோடு அவனிடம்  சென்றாள்..

நள்ளிரவில் திடிரென்று ஒரு  பெண் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பியவன் அடுத்த நொடி திகைத்து நின்றுவிட்டான்….         

 

 

 

 

 

 

 

Advertisement