Advertisement

அத்தியாயம் – 14

கருகும் நெடி என்பதை விட சடசடவென்று தீ பிடித்து, காற்றில் வேகமாய் பரவும் புகையின் நெடி என்றுதான் சொல்ல வேண்டும்..

“எதோ தீ பிடிக்கிது போலவே ” என்று வேகமாய் அம்பிகா எழ

“அடுப்பில கூட எதுவும் இல்லையே ” என்றபடி தேன்மொழியும் பதற்றமாய் நகர கௌதமன், யசோதரா என அனைவரின் முகமும் யோசனையை பூசிக்கொண்டு புகை வந்த இடம் நோக்கி சென்றனர்..

பின் பக்க தோட்டத்தில் இருந்து தான் புகை வருகிறது என்றது வேகமாய் அங்கே விறைந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். தோட்டத்தில் தான் திகு திகு என்று நெருப்பு ஜொலித்து எரிந்து கொண்டிருந்தது.. தோட்டக்காரரோ ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றிருந்தார்..

“என்ன வேலண்ணா என்ன பண்றீங்க??”

“சருகு நெறைய இருக்குனு கூட்டி குமிச்சு வச்சிருந்தேன் தம்பி.. கூடைய எடுதுட்டுட வர குள்ள எப்படி நெருப்பு பிடிச்சதுன்னு தெரியலை” என்று பாவமாய் கூற, தோட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் சிறி வாசல் கதவு திறந்திருப்பதை கண்டான் கௌதமன்.. 

புகையின் நெடி தாங்காமல் அனைவரும் இரும, சற்றே தேறி வந்த யசோவிற்கோ கண்கள் கரித்து எப்படியோ வந்தது.. அவளை ஒருகையில் தாங்கியவன்

“வசு, அக்காவை கூட்டிட்டு உள்ள போ.. அம்மா,. அத்தை நீங்களும் போங்க” என்று சற்றே அழுத்தமாய் கூறவும் பெண்கள் கூட்டம் அரை மனதாய் உள்ளே சென்றது.. யசோ போகமாட்டேன் என்பது போல தான் நின்றிருந்தாள், கௌதமனின் ஒரு முறைப்பே அவளை உள்ளே செல்ல வைத்தது..

கௌதமன் மேலும் எதுவோ அவரிடம் கேட்டுக்கொண்டே கோகுலுக்கு ஜாடை காட்ட, அவனும் அதை புரிந்துகொண்ட வேகமாய் அக்கதவு பக்கம் வெளியே பார்த்தான்..  அவன் பார்த்த அதே நேரத்தில் அவனை தாண்டி ஒரு பல்சர் பறந்தது..

“ஹ்ம்ம் சரி, தண்ணி விட்டா ரொம்ப புகை வரும்.. மேல மேல இன்னும் கொஞ்சம் சருகை போடுங்க.. கொஞ்ச நேரத்தில சரியாகிடும்”  என்றுவிட்டு கோகுலை பார்க்க

“யாருமில்லண்ணா, ஆனா ஒரு பல்சர் போச்சு..”

“வேற ஏதாவது வித்தியாசமா ???”

“அந்த பல்சர் கொஞ்சம் வித்தியாசமா இருந்ததுண்ணா… ”

“எப்படி டா சொல்ற ??”

“இல்லைண்ணா நார்மலா இருக்கிறதை விட இது கொஞ்சம் வேற மாதிரி.. ஒருவேள பல்சர் வாங்கி பாடி மட்டும் பில்ட் பண்ணிருப்பாங்க போல”

“ஓ” என்று நெற்றியை சுருக்கியவனுக்கு புத்தியில் மின்னல் தட்ட கண்கள் பளிச்சிட்டது…

அதே நேரம் அவனது அலைபேசி அலற அதனை புன்னகையோடே எடுத்து பேசினான்..

“என்னவே ஒரு மூணு நாளா போனே செய்யல ?? ரொம்ப பிசியாவே ” என்று போனில் மிரட்டுபவனை போலவே கௌதமன் கிண்டலாய் பேச கோகுலுக்கே ஆச்சரியமாய் போனது..

“என்னவே வக்கீலு.. பேச்செல்லாம் தோரனையா இருக்கே… குளிர் விட்டுப் போச்சாலே.. தோட்டத்தில வச்ச நெருப்ப உம்ம வீட்டுல வைக்க நேரமாகாதுவே..” என்று அப்பக்கம் மிரட்ட

“ஹா ஹா… நல்ல ஜோக் தான்.. தைரியம் இருந்தா நீ அதை தானே முன்ன செஞ்சிருக்கணும்.. எதுக்கு குப்பைக்கு நெருப்பு வச்ச ?? இங்க பாரு இப்போவும் சொல்றேன் ஒன்னு முன்ன வந்து நில்லு நேருக்கு நேர் மோதலாம். அதை விட்டு இப்படி காசு செலவு பண்ணி தினம் தினம் ஒரு சிம் போட்டு ஏன் என் நேரத்தையும் வெஸ்ட் பண்ற…    ”  

“டே வக்கீலு.. வேணாம்டே.. என்னை பத்தி தெரியாம பேசுத.. என்ன உம் பொஞ்சாதி நல்லாகிட்டான்னு திமிராவே.. அந்த கமிஷ்னர பாத்து பேசுறது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியளோ ??     ”

“அடடா இதுகூட எனக்கு தெரியாம தான் நான் இத்தனை வருஷம் வக்கீலா இருக்கேனா ??? சரி சொல்ல வந்ததை சொல்லு நெறைய வேலை இருக்கு ” வேண்டும் என்றே அவனை தூண்டும் விதமாய் கௌதம் பேச கோகுல் தலையில் அடித்துக்கொண்டான்..

பதிலுக்கு அந்தபக்கதில் இருந்து என்ன பதில் வந்ததோ கௌதம் சிரித்தபடியே போனை வைத்துவிட்டு கோகுல் தோள் மீது கை போட்டு அவனையும் உள்ளே தள்ளிக்கொண்டு போனான்..

பெண்கள் அனைவரும் கேள்வியாய் நோக்க நடந்ததை ஆளுக்கு முன்னே கோகுல் கூறிவிட இவ்விசயம் புதிதாய் கேள்விப்படும் வசுவோ அதிர்ச்சியாய்  அனைவரையும் நோக்கினாள்..

“மாமா.. என்.. என்ன இதெல்லாம் உண்மையா ?? இல்லை உங்க தம்பி எதுவம் கதை விடுறாங்களா ??   ” 

“ஆமாமா கதை சொல்ல தான் நான் பிளைட் பிடிச்சு வந்தேன் பாரு ” என்று சலித்தான் கோகுல்..

“வசு ” என்று அழைத்து யசோ அனைத்தையும் கூற நிதானமாய் கேட்ட வசுவோ ஏன் என்னிடம் சொல்லவில்லை, எதற்காக என்றெல்லாம் கேள்வி கேட்டு படுத்தாமல்

“ஹ்ம்ம்.. ஓகே.. அப்போ மாமா அடுத்து உங்க ஸ்டேப் என்ன??  ” என்று நேரடியாய் விசயத்திற்கு வந்தாள்..

அதே நேரம் விசாகனும், சித்தாராவும் வர, அவர்களிடமும் விஷயம் தெரிவிக்க பட்டது.. அனைவருமே கேட்ட கேள்வி ஒன்று தான்.. இதில் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தான்…

கௌதமனோ “நோ நோ… யாருமே எதுவுமே தெரியாத மாதிரி இருங்க. இதுமட்டும் தான் நீங்க எல்லாம் எனக்கு செய்யுற மிக பெரிய உதவி..  ” என்று கூற..

அவன் பேசுவதை சிறிதும் சட்டை செய்யாமல் யசோதரா அமைதியாய் தன் போனில் எதையோ நொண்டிக்கொண்டு இருந்தாள்.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலும் பேச தொடங்கினான்..

“இன்னும் கொஞ்ச நாள் தான்.. எல்லாமே சால்வ் ஆகிடும்.. சோ ப்ளீஸ் ஹெல்ப் பண்றேன்னு யாரும் மேல பிரச்சனையை பெரிசு பண்ண வேண்டாம்”

“அதெப்படி கௌதம், எல்லாம் தெரிஞ்சும் எப்படி எல்லாரும் சும்மா இருக்க முடியும் ?? ” என்று விசாகன் கேட்க

“நோ விசா, அப்படி எனக்கு ஹெல்ப் தேவை பட்டா உங்க கிட்ட கேட்காம நான் யார்கிட்ட கேட்க போறேன்… கொஞ்சம் அசால்ட்டா இருக்க மாதிரி இருக்கிறது தான் கொஞ்சம் நல்லது.. அண்ட் இன்னொரு விஷயம் என்ன முக்கியமான காரணாம இருந்தாலும் என்னை யாரும் ஆபிஸ்ல வந்து பார்க்கக் வேண்டாம்.. யசோ அது நீயாவே இருந்தாலும் சரி ” என்று கூற அதை எல்லாம் அவள் கவனிக்கும் நிலையில் இல்லை..

மேற்கொண்டு கௌதமன் என்ன பேசினானோ யசோதரா தன் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.. கெளதம் ஒரு வழியில் போனால் நான் இன்னொரு வழியில் போகிறேன் என்று எண்ணியவள் சஞ்சனாவிற்கு ஒரு குறுந்தகவலை தட்டினாள்..

“அத்தை நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம், நீங்க இப்போ அங்க சித்து கூட இருக்கிறது தான் நல்லது.. இங்க இத்தனை பேர் இருக்கோம், யசோக்கும் உடம்பு நல்லாகிட்டு வருது..சோ நீங்க அங்க சித்துக்கு துணையா இருக்கிறது தான் நல்லது” என்று கௌதமன் கூறிவிட வேண்டா வெறுப்பாய் கிளம்பி சென்றார்..

அடுத்து வசு…

“நீ எப்போ ஹாஸ்டல் போற வசு?? ”

“மாமா நான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சு தான் கிளம்புவேன்.”  என்றுவிட்டாள்.. பிறகு என்ன நினைத்தாளோ “நானும் சித்தி கூட அங்க போறேன்.. ஆனா அடிக்கடி வருவேன்” என்றுவிட்டு நகர்ந்தாள்..

அம்பிகாவோ இன்னுமே தெளியாத முகத்துடன் தான் இருந்தார்..

“ம்மா… எல்லாமே சரியாகிடும்..என் மேல நம்பிக்கை இல்லையா ???” என்றான் அவரது கைகளை பிடித்து..

“உன் மேல நம்பிக்க இல்லாம என்ன கௌதமா ?? ஆனாலும் மனசு கேட்கல. நீ வேற எல்லாரையும் இதில இருந்து தள்ளி நிக்க சொல்லிட்ட.”

“ம்மா இதுனால அவங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாதுன்னு தான் அப்படி சொன்னேன்.. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் மா… நீங்க ரிலாக்ஸ்டா இருங்க போதும்” என்று கூறும் மகனின் வாழ்வில் நிம்மதியை கொடு ஆண்டவா என்று வேண்ட மட்டுமே முடிந்தது அந்த அன்னையால்..

கெளதமும் கோகுலும் வெளியே சென்றிருக்க, யசோதரா அவள் அறையில் தன் அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.. திரையில் சஞ்சனாவின்  எண் மிளிரவும் படக்கென்று எடுத்தவள்

“ஹலோ சஞ்சனா, நான் கேட்டது கிடைச்சதா ?? ” என்றாள்..

“ஆமா யசோ….” என்று அவள் பதில் கூற.. அப்பதிலை உள்வாங்கிய யசோவிற்கு சற்றே அதிர்ச்சி.. 

“நிஜமாதான் சொல்றியா சஞ்சு… ”

“ஆமா யசோ.. நானே எனக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு சோர்ஸ் கிட்ட விசாரிச்சுட்டேன்.. உனக்கு எப்போ அந்த பைல்சை கொடுத்துவிட?? ”

“ஹ்ம்ம் நாளைக்கு ஆபிஸ்க்கு குடுத்துவிடு சஞ்சு.. தேங்க்ஸ் போர் யுவர் இமிடியட் ஹெல்ப்…”

“ஹே யசோ…. என்ன மா நீ இதுகூட பண்ணமாட்டேனா நான்.. நானும் நிரஞ்சனும் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கோம்”

“ஓ !! தாராளமா.. பட் ஒன் திங் நமக்குள்ள இப்போ நடந்த எதுவமே நிரஞ்சனுக்கோ இல்லை கெளதமுக்கோ தெரியவே கூடாது சஞ்சு.”

“கண்டிப்பா…”என்றுவிட்டு சஞ்சனா போனை வைக்க யசோவின் முகம் மகிழ்ச்சியை பூசிக்கொண்டது..

ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா என்ன ??

கெளதமும் கோகுலும் சென்ற இடம் நிரஞ்சனை சந்திக்க.

“என்ன டா என்னை ஆபீஸ்க்கு கூட வரவேண்டாம்னு சொல்லிட்ட” என்று நிரஞ்சன் கேட்க

முதலில் கோகுலை அறிமுகப்படுத்தியவன், பின் அவன் கேள்விக்கான பதிலை கூறினான்.

கௌதமன் கூறியதை கேட்ட நிரஞ்சனோ “அதெப்படி அவ்வளோ உறுதியா சொல்ற. ” என்று பதில் கேள்வி கேட்க ஒரு புன்னகையை தவிர வேறு பதில் சொல்ல வில்லை நம் வக்கீல்..

“ஏன் டா இப்படி உன் சிரிப்பை பார்க்கவா வந்தேன்.. இதுக்கு நீயே தனியா இதை டீல் பண்ணிருக்கலாமே டா”

“இல்லை நிரு, எனக்கு ஒரு அபிசியல் சப்போர்ட் வேணும் அதான்.. நான் சொல்ற ஆளை மட்டும் பாலோ பண்ண ஒரு ஏற்பாடு செய் ” என்று ஒருவனின் புகைப்படத்தை காட்ட, அதை கண்ட நிரஞ்சனின் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்தது..

மறுநாள் யசோதரா என்றும் கிளம்பும் நேரத்தை விட சற்றே முன்னமாய் கிளம்பிக்கொண்டு இருந்தாள்..

“அண்ணி நானும் உங்ககூட வரேன் ” என்று வந்து அவள் முன்னே நின்றான் கோகுல்..

“நேத்து தானே கோகுல் வந்த. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடு.. அப்புறம் வா நான் உனக்கு ட்ரைன் பண்றேன்” என்று எவ்வித முக பாவனையும் காட்டாமல் யசோதரா கூற கோகுலோ கௌதமனை நோக்கினான்..

“ அவனையும் தான் கூட்டிட்டு போயேன் ” என்று கணவன் கூற,

“நான் போய் கார் ஸ்டார்ட் பண்றேன் ” என்று கோகுல் நகரவும், யசோ அவனை முறைத்தபடி நின்றாள்..

“என்ன முறைப்பு ???”

“நீங்க எனக்கு வச்ச பாடிகார்ட் பயங்கர ஸ்மார்ட்” என்றாள் நக்கலாய் சிரித்து..

“கண்டுபிடிச்சுட்டியா ??”

“பின்ன கம்பனிக்கு வரவனுக்கு எதுக்கு பக்கெட்ல கன் ???” என்று புருவம் உயர்தியவளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து

“என் பொண்டாட்டி இவ்வளோ ஷார்ப்னு தெரிஞ்சிருந்தா நான் வேற ஏற்பாடு பண்ணிருப்பேனே” என்றான் கௌதமன்..

“கௌதம் எனக்கு நெஜமாவே இது பிடிக்கல.. ”

“எது நான் ஹக் பண்றதா ?? உனக்கு இது ரொம்ப பிடிக்குமே யசோ ” என்றான் புரியாத ஒரு பாவனையில்..

“டோன்ட் சேஞ் தி டாபிக் கெளதம்.. எனக்கு எந்த செக்யுரிட்டியும் வேண்டாம்.. என்னால என்னை பார்த்துக்க முடியும் கெளதம் ”

“இது உனக்காக இல்லை யசோ.. எனக்காக  ”என்றவனின் பிடியும் குரலும் இறுகி இருந்தது..

“ கௌதம்……!!!!”

“லுக் யசோ.. இந்த பிரச்சனைய நான் அன்னிக்கே முடிச்சிருப்பேன்.. முதல் தடவ போன் வந்தபோதே என்னால இத க்ளோஸ் பண்ணிருக்க முடியும். ஆனா நான் இவ்வளோ பொறுமையா போறதுக்கு காரணமே நீ தான்.. உனக்கு எதும் ஆக கூடாதுன்னு தான் புரியுதா ???” என்று அவளது தோள்களை இறுக பற்றி உலுக்கினான்..

“ஷ் கௌதம்.. பீ கூல்..”

“இங்க பார் நல்லா கேட்டுக்கோ கோகுல் உன்கூட தான் இருப்பான்.. அப்புறம் இந்த விசயத்துல நீ ஏதும் பண்ணக்கூடாது ரைட்.. நீ வேற எதா ட்ரை பண்ணி அது இன்னும் பெருசாக கூடாது யசோ.. பிகாஸ் ஐ ப்ளானுடு எவ்ரிதிங்.. சோ கீப் டிஸ்டன்ஸ் ப்ரம் இட் ”

“பட்” என்று அவள் எதுவோ கூற வரும் பொழுது

“நோ மோர் கொஸ்டின்ஸ் அண்ட் க்லாரிபிகேசன்ஸ்.. ” என்றவன் குழப்பத்தில் சுளித்திருந்த அவளது இதழ்களுக்கு தன் முத்தத்தை மட்டுமே விடையாகவும் விளக்கமாகவும் கொடுத்துவிட்டு சென்றான்..

அவன் சென்ற பிறகும் சில நொடிகள் யசோதரா அசையாமல் தான் இருந்தாள்.. “ஒருவேளை நம்ம சஞ்சு கிட்ட கேட்டதை கண்டுபிடிச்சுட்டானோ??” என்ற கேள்வி எழ, பதில் கூற வந்த மனதை அவன் இட்டு சென்ற முத்தத்தின் ஈரமே கட்டி போட்டது..

தன் தலையில் மெல்ல தட்டியவள் “Mrs.யசோதரா கௌதமனுக்கு பின்வாங்குற பழக்கமே இல்லையே கௌதம்” என்று புன்னகையோடு கூறிக்கொண்டு கோகுலோடு தன் அலுவலகம் நோக்கி சென்றாள்..

உள்ளே நுழைந்ததுமே கோகுலுக்கு அடுக்கடுக்காய் வேலைகளை அடுக்கி தள்ளிவிட்டாள் யசோதரா..

“அண்ணி இதெல்லாம் அநியாயம்…”

“ஏன் நீ தானே என்கிட்டே ட்ரைனிங் எடுத்துக்க பிளைட் பிடிச்சு வந்த.. இப்போ என்ன கோகுல் ” என்று கேள்வி கேட்டவளை பார்த்து நொந்துக்கொண்டான்.

“ஹ்ம்ம் என்னை லண்டன்ல கூப்பிட்டாங்க, அமெரிக்கால கூப்பிட்டாங்க.. என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன் ” என்று முனுமுனுக்க

“ஓகே கோகுல் நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்திடுறேன்.. அதுக்குள்ள இந்த பைல் எல்லாம் படி..” என கூற அதே நேரம் அவளை காண யாரோ வந்திருப்பாதாய் செர்வீஸ் மென் வந்து சொல்ல யசோவோடு சேர்ந்து  கோகுலும் எழுந்தான்..

“நீ இரு கோகுல் நான் பார்த்துக்கிறான்.. ”

“இல்லண்ணி.. நானும் வரேன்” என்றவன் பிடிவாதமாய் வெளிவந்து அவள் பின்னே நின்றான்..

வந்தவன் இரண்டு நிமடம் நிற்கவில்லை.. யசோவின் கையில் இரண்டு பைல்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்..

கோகுல் யோசனையாய் யசோவை பார்க்க. அவளும் அவனை என்னவென்பது போல பார்த்தாள்..

“இது எல்லாம் என்ன அண்ணின்னு நான் கேட்க கூடாது தான் ஆனாலும் கேட்கலைனா எனக்கு தலை வெடிச்சிடும்… ” என்று பல்லை காட்ட

அவளும் புன்னகைத்தபடி ஒரு பைலை காட்டி “இது உன்னை பத்தினது….உன்னோட மொத்த டீடைல்சும் இதில இருக்கு” என்று அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டு..

“அப்புறம் இது…. உங்க அண்ணனே கேட்டாலும் இதை பத்தி நான் வாய் திறக்க மாட்டேன்.  சோ இதை பத்தி உனக்கு எந்த பதிலும் கிடைக்காது” என்று கூறியவளை விழிகள் விரித்து பார்த்தான்..

“என்.. என்னை பத்தி என்ன அண்ணி ?? ”

“பின்ன திடீர்னு அண்ணன் தம்பின்னு பாச மலை பொழிஞ்சு வந்து குதிச்சா..  சந்தேகம் வராதா?? அதான் Mr. க்ரைம் பிரான்ஞ் இன்ஸ்பெக்டர்  ”  என்று புன்னகை புரிய..

“அண்ணி பேசமா நீங்க எங்க டீம்ல சேர்ந்துடுங்க” என்று கை தூக்கினான் மைத்துனன்..

இவர்கள் இப்படி பேசி கொண்டிருந்த அதே நேரம் வேதமூர்த்தி சற்றே பதற்றமாய் வந்தார் “யசோம்மா ” என்று அழைத்தபடி..

யசோதரா கோகுலை பார்க்கவும் அவன் அதே அறையின் ஒரு பக்கம் போட்டிருந்த சாய்விருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான்..

“என்ன சித்தப்பா ஏன் இவ்வளோ டென்சனா இருக்கீங்க ??”

“யசோம்மா, இந்த  MM க்ரூப்ஸ் கூட இன்னிக்கு மீட்டிங் இருந்தது இல்லையா அதுல ஒரு சின்ன பிரச்சனை டா”

“சரி சித்தப்பா அதுக்கும் நீங்க இவ்வளோ பதட்ட படுறதுக்கும் என்ன இருக்கு.”

“இருக்கு டா.. ஒன்னு மீட்டிங் நம்ம இடத்தில நடக்கணும், இல்லை அவங்க இடத்தில நடக்கணும். ரெண்டுமே இல்லாம அந்த பூபதி பாண்டியன் ஆபிஸ்ல மீட்டிங் அரேஞ் பண்ணிருக்காங்க மா.”

“இவ்வளோ தானே சித்தப்பா அதுக்கு ஏன் டென்சன் ஆகணும் நீங்க.. விடுங்க பார்த்துக்கலாம்..”

“அதுக்கில்லமா மீட்டிங்குக்கு கண்டிப்பா நீயும் வரணும்னு சொல்றாங்க”

“யார் சொல்றா ???”

“பூபதி பாண்டியன்…. ”

வேத மூர்த்தி கூறிய பதிலை கேட்டதும் யசோதராவுமே சற்றே குழப்பம் கொண்டாள்..

“அவர் ஏன் சித்தப்பா என்னை பார்க்கணும் ??”

“என்னவோம்மா.. கண்டிப்பா உன்னையும் மீடிங்குக்கு கூட்டிட்டு வரணும்னு சொல்லிருக்காங்க”

“ம்ம்ம் ” என்று யோசித்தவள் “சரி சித்தப்பா இன்னும் நேரம் இருக்கே.. நானும் வரேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்றாள்..

“இல்லடா இப்போதான் உனக்கு உடம்பு சரி ஆகியிருக்கு.. அதுவும் இல்லாம ஏற்கனவே நிறைய பிரச்சனை..” என்று அவர் இழுக்க

“சித்தப்பா… அதெல்லாம் இல்லை. எப்போவும் எல்லா மீட்டிங்கும் நானும் வருவேன் தானே.. சமிபமா நான் ரெண்டு மூணு மீட்டிங் அட்டென்ட் செய்யலை இல்லையா, அதுனால கூட சொல்லிருக்கலாம்.. நீங்க போய் கொஞ்சம் ரீலாக்ஸ் பண்ணுங்க ” என்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவளுக்கு அவள் மனம் சமாதானம் ஆகாமல் இருந்தது..

“என்ன இது ?? ஒருவேளை இதெல்லாம் அந்த பூபதி பாண்டியனோட ஏற்பாடா?? அப்படி என்ன விஷயம் இருக்கும்…?? ” என்று யோசித்தவளுக்கு மேஜையின் மீது சஞ்சனா கொடுத்துவிட்ட இன்னொரு பைல் இருக்க வேகமாய் அதனை எடுத்து பத்திர படுத்தினாள்..

பிறகு கண்களை மூடி சில நொடி அமர்ந்திருந்தவள் என்ன நினைத்துக்கொண்டாளோ முகம் தெளிவுபெற பூபதி பாண்டியனை சந்திக்க கிளம்பினாள்.. அவள் பின்னே கோகுலும் வர

“கோகுல் அங்க என்ன நடந்தாலும் நீ யாருன்னு எப்போவுமே வெளிய தெரிய கூடாது” என்று எச்சரிக்க

“கண்டிப்பா அண்ணி” என்று அவனும் புன்னகையோடு பதில் கூறினான்..

வேதமூர்த்தி, யசோதரா, கோகுல் மூவரும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸில் கால் பதித்த அதே நொடி MM க்ரூப்ஸ் நிர்வாகஸ்தர்களான மாணிக்கம் மற்றும் மணிவாசகம்  வந்தனர்..

பரஸ்பர விசாரிப்புகள், பேச்சுகளுக்கு பிறகு அனைவரும் உள்ளே செல்ல வந்தவர்களை எதிர்கொண்டு வரவேற்க வந்தார் பூபதி பாண்டியன்..

“வாங்க.. வாங்க வேத மூர்த்தி… வாங்கம்மா  திருமதி., யசோதராகௌதமன் ” என்று அவர் உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று தமிழர் பண்பாடாய் இருகரம் குவிக்க,

வேதமூர்த்தியும், “இவரை  எங்கோ பார்த்தது போல் இருக்கே” இருக்கே என்று எண்ணியபடி யசோவும் கரம் குவித்தனர்..

“தம்பி யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ??” என்று கோகுலை எடை போடும் பார்வையில் வினவ

“என்னோட PA.. புதுசா சேர்ந்திருக்கார்” என்று வேகமாய் சமாளித்தாள் யசோதரா..

“சரி சரி.. நான் பாருங்க வந்தவங்களை நிக்க வச்சே பேசுறேன்.. எனக்கு அவ்வளோ படிப்பறிவு இல்லையம்மா” என்று பேசியபடி அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்..      

வேத மூர்த்தி பதற்றத்திற்கானகாரணமே தேவையற்றதாக போனது.. ஏனெனில் இவர்கள எதிர்பார்த்ததை விட அந்த டீலிங் வெற்றிகரமாய் அமைய யசோதராவிற்குமே மனம் நிம்மதியடைந்தது..

“ஊப்ஸ்…. இதுக்கா இவ்வளோ டென்சன் ஆனோம்.. கொஞ்ச நேரத்தில சித்தப்பா என்னையும் டென்சன் பண்ணிட்டாரே” என்று நினைத்திருக்க

“மாணிக்கமும் மணிவாசகமும் எனக்கு ரொம்ப நெருங்கின சொந்தம்.. அதான் என்னையும் இதுல கூட்டா சேர்த்துகிட்டாங்க.. கடைசி நேரத்துல இப்படி ஒருத்தன் உள்ள நுழைறது உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சங்கட்டமா இருந்திருக்கும். அந்த சங்கடத்தை போக்க தான் இங்கயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொன்னேன்      ” என்று புன்னகை பூத்தவரிடம் சிறிதும் தவறை காண முடியவில்லை யசோவிற்கு..

“மாணிக்கம், மணி.. போங்கப்பா வேதா சார்க்கு நம்ம கம்பனிய சுத்தி காட்டுங்க” என்று என்று கூற வேதமூர்த்தி யசோவை பார்க்க அவளும் எழுந்தாள்..

“ம்மா… சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம், அவங்க போகட்டும்.. நீங்க இப்போதான் உடம்பு சரியாகி வந்திருக்கிங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க அங்க கெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்று பூபதி பாண்டியன் அழுத்தமாய் கூற  வேதமூர்த்தியும் தன் மகளை இருக்குமாறு கூறிவிட்டு சென்றார்..

கோகுலை தன் சித்தப்பாவோடு செல்ல சொல்ல அவனும் வேறு வழியில்லாமல் யசோவை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான்..

கெஸ்ட் ரூம் செல்ல திரும்பியவள் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.. பின் பக்க சுவரில் ஆள் உயரத்திற்கு ராஜேசின் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது  அன்று மலர்ந்த ரோஜா மலர் மாலையோடு..

“ரா… ரா.. ராஜேஷ்..” என்றவளுக்கு மேலே வார்த்தைகள் வரவில்லை.. முகமெல்லாம் வியர்க்க பொத்தென்று இருக்கையில் விழுந்தாள்..      

 

 

 

Advertisement