Advertisement

அத்தியாயம் – 13

நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது..  யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்..

அவளோடு சேர்ந்து தேன்மொழியும், வசுந்தராவும் வந்துவிட, சித்தாரா வேறு வழியே இல்லாமல் தன் தந்தையோடு அவர்கள் வீட்டில் இருக்க வேண்டியாதாகி போனது..

அதற்கு காரணம் கலைவாணி தான்.. ஆசையாசையாய் கிளம்பியவளை, யசோவை போனால் போகிறது என்று காண வந்திருந்த கலைவாணி

“இங்க பாரு சித்து, யார்வேணா அங்க போயி தங்கட்டும். ஆனா நீ அங்க போய் தங்குறது எல்லாம் எனக்கு பிடிக்கல..  முதல்ல என் மகனை வழிக்கு கொண்டு வர வழியை பாரு ” என்று கட்டளையாய் கூறிவிட மனதிற்குள் தன் ஆசையை அடக்கிக்கொண்டு

“அத்தை அதான் எனக்கு அத்தானுக்கும் கல்யாணம் இல்லைன்னு முடிவு ஆகிடுச்சே.. பிறகும் ஏன் அதையே பேசுறிங்க?” என்றாள் கண்ணீரை அடக்கி..

சரியாய் அதே நேரம் அவ்விடம் விசாகன் வர, சித்தாராவின் கண்ணீர் நிறைந்த முகமே அவன் கண்ணில் பட்டது..

சித்தாரவிற்கு எதோ பதில் சொல்ல வந்த கலைவாணியோ மகன் வரவும் வாயை மூடிகொண்டார்..

“என்ன சித்து எதுக்கு அழற ?? யாரும் எதுவும் சொன்னாங்களா ??” என்றான் தன் அன்னையை ஒரு பார்வை பார்த்தபடி..

“ஒண்ணுமில்லை அத்தான்.. சும்மாதான்..”

“இங்க பாரு சித்து, அடுத்தவங்க சொல்றதுக்காக எல்லாம் நீ எதும் பண்ணாத.. உனக்கு என்ன விருப்பமோ அதை மட்டும் செய்…”

“என் விருப்பம் எல்லாம் என்னிக்கோ செத்துடுச்சு அத்தான்…. ” என்றாள் பட்டென்று அவளும் அறியாமல்..

அவளது அந்த ஒற்றை வரிகளில் விசாகனுக்கு தான் செய்த முட்டாள் தனமெல்லாம் கண் வந்து போனது. ஒரு துளி கண்ணீரில் கூட காதல் வருமாமே?? சித்து கண்களில் தெரிந்த ஏக்கமும் அதை மறைக்க அவள் படும் பாடும் அவனை எதோ செய்தது..

ஆனாலும் சட்டென்று எதுவும் முடிவு செய்ய முடியாமல்

“இப்போ என்ன நான் தினமும் சாயங்காலம் வந்து உன்னை அங்க கூட்டிட்டு போறேன்.. அவ்வளோதானே” என்று கூறிவிட்டு தன் அன்னையிடம்

“சும்மா உங்க விருப்பத்தை அடுத்தவங்க மேல திணிக்காதிங்கம்மா.. ” என்றவன் யசோதராவை காண சென்றான்..

கூறியதை போலவே அன்று அவளை அழைத்தும் வந்திருந்தான்..

வசுந்தராவோ “என்ன சித்து.. விசுத்தான் உன்னையே சுத்தி சுத்தி வாராரு..??  ” என்று கிண்டல் அடிக்க

“நீ வேற சும்மா இரு வசு.. அன்னிக்கு அத்தை எதுவோ சொல்லவும் இவர் தினமும் இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டார். அதான்   ”

“ஓ!!! அப்போ அம்மாவை எதிர்த்து பேசிருக்கார்.. ம்ம்   ” என்றாள் தன் புருவத்தை உயர்த்தி..

“ம்ம்ச் என்ன டி வசு சொல்ற.. அங்க நான் மட்டும் இருக்கவே பிடிக்கல, நீங்க எல்லாம் இங்க இருக்கீங்க.. ”

“அட. முதல்ல எங்க மேல இருக்க போக்கசிங் பாயிண்ட்டை கொஞ்சம் விசுத்தான் மேல திருப்புமா.. இத்தனை நாள் அம்மா பேச்சை மீறாதவர், சாரி மீற முடியாம தவிச்சவர் முதல் முறையா உனக்காக அத்தை பேச்சை மீறி உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கார். சோ கொஞ்சம் கொஞ்சமா அத்தான் மனசில உன் மேல ஒரு கண்ணுன்னு பாட்டு ஓடுது”

“என்ன வசு சொல்ற ??எனக்கு ஒண்ணுமே புரியல” என்றவளை கையை பிடித்து இழுத்து சென்றாள் யசோவிடம் 

“அக்கா இவளுக்கு எல்லாம் ஏன் கா உன் வேலைய விட்டு கொடுத்த. சின்ன விஷயம் கூட புரியல இவளுக்கு இதுல எப்படி தான் கம்பனிக்கு JMD அ இருக்க போறாளோ..” என்று புகாரிட

“அக்கா, ஆமாக்க எனக்கு இந்த கம்பனி, மீட்டிங் எல்லாம் கொஞ்சம் கூட ஒத்தே வரலை.. ப்ளீஸ் கா அப்பாகிட்ட நீ சொன்னா அவர் ஒன்னும் சொல்லமாட்டார் ” என்று இதையே சாக்காய் வைத்து அவள் கெஞ்ச

“ஹ்ம்ம் சித்தப்பா உன்கிட்ட எதோ பைல் கொடுத்து விடுறேன் சொன்னாரே சித்து ” என்றாள் யசோ தன் வேலையில் குறியாய்..

“ஹ்ம்ம் உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு ” என்று இரு தங்கைகளும் ஒரு சேர சொல்ல மெல்ல புன்னகைதுக்கொண்டாள் யசோ..

“சித்து இந்த பைலை நீ கார்ல விட்டு வந்துட்ட”   என்று விசாகன் வந்து கொடுக்க அவனை மெச்சுதலாய் பார்த்தாள் சித்தாரா..

யசோவிற்கு விசாகனின் மனமாற்றம் நன்றாய் புரிந்தது.. ஒருவேளை யாராவது அவனிடம் எடுத்து கூறினால் தன் மனதில் இருப்பதை இன்னும் தெளிவாய் புரிந்துகொள்வானோ என்று எண்ணினாள்.

தான் பேசினால் சரியாய் இருக்குமா என்ற யோசனையோடு , சித்தாரா கையில் வைத்திருந்த பைலை வாங்கியவள்,அதில் எழுதியிருந்த பூபதி பாண்டியன் என்ற பெயரை பார்த்து சற்றே குழப்பம் அடைந்தாள்…

“சரிக்கா நீ உன் வேலையை பாரு” என்ற வசு தன் சித்தியை நோக்கி செல்ல, சித்தாராவும் விசாகனும் வசுவை தொடர்ந்து செல்ல யசோவின் மனமோ அந்த பெயரிலேயே நின்றது..

“இந்த பேரு… எங்கோ கேட்டது போல இருக்கே..” என்றவள் தன் நெற்றியை தடவியபடி அமர்ந்திருந்தாள்..              

தேன்மொழியோ யசோவை கவனிப்பது தான் தன் தலையாய கடமை என்பது போல பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்தார்..

“சிந்து இந்தா பாதாம் பால் கொண்டு போய் யசோக்கு குடு.. ” என்று விரட்டினார்..

விசாகனோ “அத்தை அப்படியே சித்துக்கும் குடுங்கத்தை, ரொம்ப மெலிவா இருக்கா ” என்று கூற ஒரு நொடி வியந்து நோக்கினாலும் விசாகன் கூறியதை புன்னகையோடு செய்தார் தேன்மொழி..

வசு “அப்புறம் விசுத்தான் நீங்க எப்போ லைப்ல நெக்ஸ்ட் ஸ்டேஜ் போக போறிங்க??” என்று கேட்க முதலில் என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை..

“இப்போ ஏன் வசு இந்த திடீர் கேள்வி ??”

“திடீர்னு கேட்டா தான் அது கேள்வி அத்தான் பதில் சொல்லுங்க.. ”

ஒருமுறை சித்தாராவை பார்த்தவன் “அப்பா அடுத்த மாசம் சென்னைக்கு வராரு வசு.. வந்தபிறகு முடிவு சொல்றேன்…” என்றான்..

“ஏன் விசுத்தான் அத்தைக்கு பதிலா மாமா தான் முடிவெடுக்க போறாரா இந்த தடவை ??” என்று வசு கேட்ட கேள்விக்கு ஒருநொடி முகம் கருத்தாலும் விசாகன் பிறகு தெளிந்துவிட்டான்..

சித்தாரா “அட என்ன டி நீ கேள்வியா கேட்டிட்டு இருக்க ?? விடு அவர் வாழ்க்கை அவர் என்னவோ செய்றார்.. உனக்கெதுக்கு இது  ?? ” என்று கேட்க

“நீ என்ன அவருக்கு சப்போர்ட்டா?? உனக்கு அத்தை மகன்னா எனக்கும் அத்தை மகன் தான்.. நானும் கேள்வி கேட்பேன் ” என்று வசு பதில் அளிக்க,

பதிலுக்கு பதில் என்று ஒரு சிறிய பட்டிமன்றமே நடந்து தேன்மொழி அனைவரையும் சரி செய்வதுக்குள் மூச்சு வாங்கிவிட்டார்..

ஆனாலும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது… இப்படி பேச்சும் சிரிப்புமாய் இருந்த குடும்பம் தானே நடுவில் ஏதேதோ நடந்து என்னென்னவோ ஆகிவிட்டது.. ஆனாலும் சீக்கிரமே அனைத்தும் சரியாகவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்..

நடப்பதை எல்லாம் தன் அறையில் இருந்தபடி கவனித்துகொண்டு தான் இருந்தாள் யசோதரா.. அவளுக்கு இரண்டு விஷயங்கள் மனதில் ஓடின, ஒன்று விசாகனிடம் எடுத்து கூறலாமா ?? மற்றொன்று அந்த பூபதி பாண்டியன் என்கின்ற பெயர்…

“யார் இவர் ?? ஏன் திடீர்னு நம்ம போட்ட டீலிங்ல தேர்ட் பார்டியா வரணும்?? இவருக்கும் அந்த MM க்ரூப்ஸ்க்கும் என்ன சம்பந்தம்.?? சித்தப்பா எப்படி இதுக்கு சரின்னு சொன்னார் ??” என்று யோசனையில் கண் மூடி படுத்திருந்தவளை

“என்ன யசோ மேடம் யோசனை எல்லாம் பலமா இருக்கே?? ” என்றார் கெளதமனது குரல் கலைத்தது..

“கௌதம்…. என்ன சீக்கிரம் வந்தாச்சு ” என்றவள் அசையாமல் தான் படுத்திருந்தாள்..

அவளுக்கு பதிலாய் ஒரு பார்வையை மட்டும் செலுத்திவிட்டு பிரெஷ் ஆகி வந்தவன் தன் தோள் மீது அவளை சாய்த்தபடி அவனும் கட்டிலில் சாய்ந்துகொண்டான்..

“ஹ்ம்ம் சொல்லு யசோ என்ன குழப்பம் உனக்கு ??”

“வீடு முழுக்க இப்படி கேமெரா செட் பண்ணிருக்கிறது எப்படியோ இருக்கு கௌதம்… ”

“எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான் யசோ.. உனக்கே தெரியும் எதுக்குன்னு.. ஆனா இது நான் கேட்டதுக்கான பதில் இல்லையே??”

“உங்க வக்கீல் திறமை எல்லாம் என்கிட்டே தான் காட்டணுமா ??”

“பதில் சொன்னா உனக்கு எதுவும் பிரச்னையா ???”

“ஹ்ம்ம் பூபதி பாண்டியன்… புதுசா நம்ம போட்டு இருக்க டீலிங்ல தேர்ட் பார்டியா ஆட் பண்ணிருக்காங்க MM க்ருப்ஸ்.. பட் இந்த நேம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு அதான் யோசிக்கிறேன்” என்று அந்த பைலை அவனிடம் காட்ட அவனோ படக்கென்று அதை வாங்கி பார்த்தான்

“பூபதி பாண்டியனா?????!!!!” அவன் முகத்தில் அத்தனை ஆச்சரியம் குழப்பம் எல்லாம்…

“என்ன கெளதம் உங்களுக்கு இவரை முன்னமே தெரியுமா ??”

“நேரடியா தெரியாது யசோ… ஆனா இப்போ நான் ஹேண்டில் பண்ற கேஸ் இப்படி ஒரு பேரும் அடிபடுது..  ஒரு நிமிஷம் ” என்றவன் தன் செல்பில் இருந்த இன்னொரு பைலை எஎடுத்து வந்து இரு பைலையும் ஒப்பிட்டு பார்த்தான்..

“எஸ். ஐம் கரக்ட். ரெண்டுமே ஒரே ஆள் தான். யசோ இந்த டீலிங்ல கொஞ்சம் யோசிச்சு தான் சைன் பண்ணனும். ஏன்னா ஆள் கொஞ்சம் பிரச்னையான ஆள்.  ”

“ஊப்ஸ்…. கெளதம்… அல்ரெடி MM க்ரூப்ஸ்க்கு நீங்க தானே லீகல் பேப்பர் ரெடி பண்ணி கொடுத்திங்க.. ஆனா இப்போ அவங்க சைட்ல இவர் ஜாயின் பண்ணிருக்கார்.. நம்ம ஒன்னும் பண்ண முடியாது. பட் டீலிங்க சக்சஸ் புல்லா முடிச்சிட்ட நெக்ஸ்ட் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. பிறகு என்ன??”

அவளுக்கு பதில் கூறாமல் சற்று நேரம் யோசித்தவன்

“இல்லை யசோ.. இதுல வேற எதோ இருக்கு.. நீங்க நார்மலா டீல் பண்ணுங்க MM க்ரூப்ஸ. நான் என் வழியில பாக்குறேன்.” என்றவன் தன் அலைபேசியை எடுத்து யார் யாருக்கோ அழைத்து பேசினான்..

பேசி முடித்தவனின் முகத்தில் அப்பொழுது தான் ஒரு தெளிவு பிறந்தது..

“ஹ்ம்ம் ஒரு விஷயம் ஓவர்.. சரி சொல்லு உன் மனசுல ஓடுற இன்னொரு விஷயம் என்ன ??” என்று தன் மனைவியை பார்த்து கேட்க

“அட… நீங்க என்ன கெளதம் எப்போ பார் என்னையே கேள்வி கேட்டிட்டு.. ஐ டின்ட் லைக் திஸ்…”

“கேள்வி கேட்கிறது தான் உன் புருசனோட பொழப்பு…”

“ஹ்ம்ம் நல்ல பொழப்பு”

“நீ சொல்லலைனாலும் பரவாயில்ல யசோ.. ஆனா ஒன்னு இதுக்குமேல நீ விசாகன் சித்தாரா விசயத்துல தலையிட கூடாது.. எதுவா இருந்தாலும் அவங்க பார்த்துப்பாங்க..” என்றவனை விழிகள் விரித்து பார்த்தாள்..

“அப்படி எல்லாம் பார்க்காத.. பைல் பார்த்தது எல்லாம் போதும்.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா வெளிய எழுந்து வா” என்றவன் அவளையும் எழுப்பி மெல்ல நடத்தி அழைத்துவந்தான்…

 

“டேய் மாரி அந்த கேட்டை மூடிட்டு நம்ம செல்லங்கள திறந்து விடு டா ”என்று அதிகாரமாய் ஒலித்தது பூபதி பாண்டியனின் குரல்.. ஆறடியை தொட்டு அறுபது வயதிலும் ஆஜானுபாகுவாய் இருப்பவரை காணும் போதே யாருக்குமே உள்ளே ஒரு நடுக்கம் பரவும்..

தோட்டத்தில் வந்து நின்று இடுப்பில் கைவைத்து சுற்றி முற்றி பார்த்தவரை வேகமாய் ஆசையோடும் பாசத்தோடும் நாக்கை தொங்கபோட்டு ஓடி வந்து மேலே முட்டி ஏறின அவரது செல்லங்கலான வேட்டை நாய்கள் நான்கு..

“டேய் டேய் மெல்ல டா குட்டிகளா.. என்ன அவசரம்.” என்றவர் ஒவ்வொன்றையும் மெல்ல மென்மையாய் தடவி கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தார்..

அடுத்த சில நொடிகளில் “அய்யா” என்றபடி வந்து நின்றான் மாரி.. கையில் பச்சை கறிதுண்டுகளும், எலும்பு துண்டுகளும் நிரம்பிய தட்டை வைத்து…

மாமிசத்தின் வாசத்தை கண்டதுமே நாய்கள் நான்கும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க பூபதிபாண்டியனோ மாரி தட்டில் வைத்திருந்ததில் இருந்து ஒவ்வொரு துண்டாய் எடுத்து எடுத்து வீசினார்..  ஒன்றை ஒன்று மிஞ்சி விடும் வேகத்தில் அத்தனை வேகமாய் தின்று தீர்த்து அவரின் செல்ல வளர்ப்புகள்…

“மாரி, நம்மூர் கோவில் திருப்பணிக்கு டொனேசன் கேட்டாங்கள்ள, என் பெட்டில பத்து லட்சம் வச்சிருக்கேன் நாளைக்கு கொண்டு போய் குடுத்துடு…”

“சரிங்கய்யா…. ”

“உன் பொண்டாட்டியோட தங்கச்சி கல்யாணம் சொன்னாங்க.. ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது..??”

“அதுங்கய்யா எதோ நிலம் இருக்கு போல… அதை வித்து செய்யனும்னு பேசிகிட்டாங்க…  ”

“அட என்ன டா இது ?? நிலத்தை வித்தா செய்யணும்… ஏன் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டா குடுத்துட்டு போறேன்.. நிலம் எல்லாம் லட்சுமி டா.. அதை போய் அடுத்தவனுக்கு கொடுக்கலாமா ?? ஊருக்கு போன் போட்டு சொல்லிடு நான் குடுக்குறேன்…”

“ரொம்ப நன்றிங்கய்யா… ”

“உன் நன்றியை வேலையில காட்டுடா… அப்புறம் அடுத்த மாசம் நம்ம ராஜேஷ் நினைவு நாள் வருது, பத்தாயிரம் பேர் சாப்பிடுற மாதிரி அன்னதானம் செய்யணும் அதுக்கு ஏற்பாடு பண்ணு…” என்றவரின் குரல் பிசிறு தட்டியது..

“ஹ்ம்ம் சரிங்கய்யா… ”

“ம்ம் நல்லது ” என்றார் தன் அறைக்கு சென்றார்.. மனம் எதையோ நினைத்து கலங்க, அவர் அறையின் சுவரில் ஆள் உயரத்திற்கு மாட்டியிருந்த தன் மகன் ராஜேஸின் படத்தை மெல்ல வருடி கொடுத்தார்..

“சாகுற வயசா டா உனக்கு ???” என்று கண்கள் மூடி திறந்வரின் முகம் அத்தனை நேரம் இருந்த மென்மையை துளைத்து வன்மத்தை சூடிக்கொண்டது…

பின்னே கைகளை கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தவரின் மனதில் பல திட்டங்கள் பல யோசனைகள். மீண்டும் ஒரு முறை, மகன் முகத்தை உற்று பார்த்தார்.. புகைபடத்தில் இருந்தவனின் புன்னகை அவருக்கு என்ன கூறியதோ முகம் தெளிவுபெற வெளியே சென்றுவிட்டார்..

“சித்தப்பா, என்கிட்டே இந்த பைலை பாருன்னு கொடுத்துட்டு நீங்க புனே போயிட்டிங்க.” என்றபடி தன் முன்னே அமர்ந்தவளை அன்பாய் பார்வையில் வருடினார் வேதமூர்த்தி

“முன்ன நீ தான் போவ யசோ.. இப்போவும் அப்படி அனுப்ப முடியுமா என்ன ??”

“ம்ம் யாரு சித்தப்பா இந்த பூபதி பாண்டியன், திடீர்னு எப்படி நம்ம டீலிங்குள்ள வர முடிஞ்சது அவர்னால??”

“ரியல் எஸ்டேட்ல பெரிய ஆள் மா.. அந்த MM க்ரூப்ஸ் எப்படி இவருகிட்ட மாட்டுனாங்கன்னு தெரியலை.. இவரையும் தேர்ட் பார்டியா சேர்த்தே ஆகணும்னு சொல்லி பிடிவாதம் பண்றாங்க.”

“அப்போ நமக்கு இந்த டீலிங் வேண்டாம் சித்தப்பா… எனக்கென்னவோ இது சரியாபடல.. கௌதமும் இதை யோசிச்சு பண்ணுங்கன்னு சொல்றார்.”

“ஹ்ம்ம் அதெப்படி மா சைன் பண்ணிட்டு நம்ம பின்வாங்க முடியாதே.. இந்த டீலிங்காக நம்ம குட்ஸ் எல்லாம் ஆர்டர் வேற பண்ணியாச்சு, எக்ஸ்ட்ரா ஷிப்டுக்கு லேபர்ஸ் வேற வர சொல்லியாச்சு.. இத்தனை இருக்கே டா..”     

“ஆனா சித்தப்பா…”

“நமக்கு எந்த தயக்கமும் வேண்டாம் யசோம்மா.. அது அவங்ககுள்ள இருக்க டை அப். நம்ம நமக்கு கொடுத்த ஆர்டரை முடிச்சு கொடுத்தா அவ்வளோதான் முடிஞ்சது வேலை..”

“ஹ்ம்ம் இந்த டைம் நீங்க சொல்றனால மட்டும் தான் சித்தப்பா இதுக்கு சரின்னு சொல்றேன்… ”

“அதெல்லாம் விடு டா உடம்பு எப்படி இருக்கு??? இன்னும் கொஞ்சம் நடை சரியாகலையே.”

“ஹ்ம்ம் பெய்ன் எதுவும் இல்லை சித்தப்பா.. எங்க சித்தி என்னை பெட் விட்டே எழ விடல. போதாத குறைக்கு அம்பிகாத்தையும் வந்துட்டாங்க.. ரெண்டு பேர்கிட்ட இருந்தும் கெளதம் தான் என்னை தப்பி கூட்டிட்டு வந்தார்..”

“உன்னால முடியும் போது வா யசோ போதும்.. முதல்ல உடம்பு சரியாகட்டும்..”

“இல்லை சித்தப்பா இனிமே தினமும் கொஞ்ச நேரம் வரேன்.. வீட்டிலே இருக்கிறது எனக்கும் ஒருமாதிரி இருக்கு..”

“ஹ்ம்ம் உன் சித்தி என்னென்னவோ சொன்னாலே மா.. நான் கெளதம் கிட்ட இதை பத்தி பேசணும்னு இருந்தேன் டா..”

“ஆமா சித்தப்பா.. பட் எனக்கென்னவோ இது கெளதமை திசை திருப்ப செய்யறது போல இருக்கு.. ஏன்னா இப்போ அவர் ஹேண்டில் பண்ற கேஸ் லேன்ட் மாபியா பத்தி.. அதனால கூட இப்படி எல்லாம் நடக்கலாம்..”

யசோதரா தன் சித்தப்பாவிடம் இதை கூறிகொண்டிருந்த அதே நொடி கௌதமன் தன் முன்னே புன்னகையோடு அமர்ந்திருந்தவனை பார்த்து தானும் புன்னகைத்து கொண்டிருந்தான்..

“என்ன கோகுல் இப்போதான் வர நேரம் கிடைச்சதா ??”

“என்ன ப்ரோ வான்னு கூப்பிட்டிட்டு இப்படி ஒரு கேள்வி..??”

“சரி இதெல்லாம் விடு நான் போன்ல உன்கிட்ட எல்லாம் சொன்னேன்ல. மனசில வைச்சிக்கோ.. யசோ ரொம்ப ஷார்ப்ப கண்டுபிடிச்சிடுவா.”

“அண்ணி வீட்டில இருக்க போறதாதானே சொன்னிங்க ப்ரோ.. ”

“அது நேத்து வரைக்கும்.. இன்னிக்கு பேக்டரிக்கு போயிருக்காள்ள, இனிமே தினமும் கொஞ்ச நேரம் போய்ட்டு வரணும்னு வந்து நிற்பா.” என்று புன்னகைத்தான்.

“ஓகே ப்ரோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. எதா தூண்டி துருவி கேட்டா நான் உங்களை கை காட்டிருவேன். ”

“சமாளிக்கவேண்டியது உன் பொறுப்பு. சரி நீ கிளம்பி வீட்டுக்கு போ.. நான் வந்ததுமே திடீர்னு பார்க்கிறது போல தான் இருக்கணும்.. அம்மாகிட்ட அத்தைகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்..”

“ஹ்ம்ம் ஆனாலும் டெல்லில வேலை பார்த்தவனை மெடிகல் லீவ் போட சொல்லி உங்க பொண்டாட்டிக்கு பாடிகார்ட் வேலை பார்க்கவிட்டிங்களே ப்ரோ..” என்று புலம்பியபடி கிளம்பி சென்றான்..

கோகுல் வேறு யாரும் இல்லை கௌதமனின் தந்தை சிவநேசனின் தூரத்து உறவு. அவரது மறைவுக்கு பிறகு இரண்டு குடும்பங்களுக்கும் சற்று நெருங்கிய பழக்கம் உண்டானது..

அடுத்தடுத்து கெளதமனிற்க்கு வேலை வரிசை கட்டி நின்றது.. அன்று மட்டுமே அவனுக்கு இரண்டு முக்கியமான ஹியரிங் இருந்தது.. அதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தான்..

“சர் உங்களை பார்க்க பிரபுன்னு ஒருத்தர் வந்திருக்கார்” என்று ஸ்டீபன் கூற

“அப்படி யாரும் அப்பாயின்மென்ட் வாங்கலையே ஸ்டீபென்.. என்னன்னு பேசி அனுப்பிடுங்க, எனக்கு இப்போ ஹியரிங் டைம் ஆச்சு.. ”

“நான் சொல்லிட்டேன் சர் ஆனா கேட்கிற மாதிரி தெரியலை. ஒரு ரெண்டு நிமிஷம் உங்களை பார்த்துட்டு போயிடுறேன்னு சொல்லி பிடிவாதமா இருக்கார்..”

“ஹ்ம்ம் வர சொல்லுங்க.” என்றவன் தன் கோட்டை மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாய் நின்றான்..

“சார் எனக்கு உங்கட்ட பேசிக்க நேரமில்லை, நான் சொல்ல வேண்டியதை எல்லாம் இந்த லெட்டர்ல எழுதியிருக்கேன்.. கண்டிப்பா படிக்கணும் சர் நீங்க ப்ளீஸ் ” என்றவன் கௌதமனின் கையில் ஒரு காகிதத்தை திணித்துவிட்டு வேகமாய் சென்றுவிட்டான்..

கௌதமனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

“என்னடா இது அவனாய் வந்தான் பேப்பரை திணித்தான் ” என்று நினைக்கும் பொழுதே முன்னொரு தரம் இப்படியான சம்பவம் நிகழ்ந்தது நினைவு வந்தது..

சில ஆண்டுகளுக்கு முன்பு அன்றும் அப்படித்தான் கௌதமன் ஒரு கொலை வழக்கை எடுத்திருந்தான்.. ஹியரிங் கிளம்பும் அதே நேரத்தில் ஒருவன் வந்து இப்படி ஒரு கடிதம் கொடுக்க என்னவென்று படித்தவனுக்கு கொலை மிரட்டல் விட பட்டிருந்தது..

அந்த நியாபகம் வர “யூஸ்லெஸ் பெல்லோஸ்…” என்று பற்களை கடித்தபடி அக்கடிதத்தை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்..

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே ஸ்டீபன் அறைக்குள் வர அவன் கண்ணில் அக்கடிதம் பட்டது..

“சர் மிஸ் பண்ணிட்டார் போல ” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன் அக்கடிதத்தை எடுத்து கௌதமனின் அபீஸ் பையில் வைத்தான்…

ஒருவேளை கௌதமன் மேலும் சில நொடிகள் ஒதுக்கி அக்கடிதத்தை படித்திருந்தால் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் விபரீதங்களை தடுத்திருக்கலாமோ என்னவோ ??..

அன்றைய வழக்குகளை முடித்துவிட்டு யசோதராவையும் அழைத்துக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றவனுக்கு அவனது வீட்டில் எதிரொலிக்கும் அனைவரின் சிரிப்பு சத்தமுமே வரவேற்றது..

“என்ன கௌதம் ஒரே சத்தமா இருக்கு…?? ”

“தெரியல யசோ” என்றபடி உள்ளே நுழைந்தவனை “ப்ரோ ” என்றபடி வந்து கட்டிக்கொண்டான் கோகுல்…

“ஹேய் கோகுல் எப்படி மென் இருக்க?? ஹப்பா பார்த்தே எவ்வளோ நாள் ஆச்சு ?? எங்க கல்யாணத்துக்கு கூட வர முடியலையோ ?? ” என்று அவன் முதுகில் குத்தினான்..

“ஐயோ ப்ரோ உங்க அடியை கூட தாங்கிடுவேன் ஆனா உங்க நடிப்பை ?? முடியல ” என்று கௌதமன் காதுகளில் முனுமுனுத்தான்..

“ஹா ஹா.. யசோ.. ஹி இஸ் கோகுல்.. எனக்கு தம்பி போல…” என்று யசோவிற்கு அறிமுகம் செய்ய

“எனக்கு தெரியும் கௌதம் ஒரு ரெண்டு மூணு தரம் பார்த்திருக்கேன்.. ” என்று அவளும் சிரித்தாள்.. நல்ல வேளை அதற்குமேல் அவளுக்கு கோகுலை பற்றி எதுவும் தெரியாது..

“அண்ணி நான் உங்ககிட்ட பிசினஸ் கத்துக்க தான் வந்தேன் ”

“வாட் ?? என்கிட்டயா ??”

“ஆமாண்ணி.. லாஸ்ட் இயர் சிறந்த யங் பிசினஸ் உமன் அவார்ட் வாங்கி இருக்கிங்களே இது ஒன்னு போதாதா ??”

“ஹ்ம்ம் யு ஆல்வேஸ் வெல்கம் கோகுல்… ”

“அப்போ நீ தினமும் யசோ கூட ஆபீஸ் போக போறியா கோகுல் ” என்று கௌதமன் இடைபுக, அதுக்கு தானே வர சொன்னிங்க என்பது போல பார்த்தான் கோகுல். 

மேலும் பேச்சு வளர்ந்து, அவ்விடமே சிரிப்பும் கும்மாளமாய் இருக்க திடீரென்று அனைவரின் நாசியையும் எதோ கருகும் நெடி வந்து துளைத்தது… 

 

 

 

 

 

Advertisement