Advertisement

அத்தியாயம் – 12

கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும் அவன் மனதில் எண்ணியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், நம்மை நம்பி வருகிறாள் இந்த உறவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்..

நடந்திருப்பதை பார்த்தால் அவள் மனதில் வேறு எதுவும் இருந்ததோ என்னவோ…??

ஆனால் இதெல்லாம் யோசிக்க நேரமில்லை.. தன்னையே உலுக்கிகொண்டவன் வேகமாய் விரைந்து அவள் கழுத்திளிட்ட சுருக்கை அவிழ்க்க முயன்றான், அவனது முயற்சிக்கு உதவிய சிலர் பிரியாவை கீழே இறக்கினர்.. கடைசி நம்பிக்கையாய் மருத்துவரை அழைக்க, அவரோ உயிர் பிரிந்தது என்ற பதிலை கொடுத்தார்..   

“ஐயோ!!!! ப்ரியா.. இப்படி பண்ணிட்டியே…” என்று ராகினி கதற, முரளியோ இடிந்து போய் நின்றிருந்தார்.. அம்பிகாவிற்கு மகன் அருகில் நிற்பதா, இல்லை பிரியாவின் அன்னை தந்தைக்கு ஆறுதல் சொல்வதா என்றே விளங்கவில்லை..

யசோதராவோ நடப்பது எல்லாம் நிஜம்தானா என்றே கூற முடியாத உணர்வுகளில் இருந்தாள்.. அவளது பார்வை சிறிதுநேரம் மற்றவர்கள் மேல் இருந்தாலும் பிறகு கௌதமனை விட்டு நகரவே இல்லை.. என்ன செய்வது என்பதே தெரியாமல் நின்றிருந்தவனின் முகபாவம் அவள் நெஞ்சின் அடி ஆழத்தில் பதிந்தது.

யார் காவல்நிலையத்திற்கு தகவல் கூறினார்களோ தெரியவில்லை சிறிது நேரத்தில் போலிஸ் வர, அங்கிருந்த சூழ்நிலையை கேட்கவா வேண்டும். அடுத்து செய்யவேண்டிய முறைகளை எல்லாம் காவல்துறை கவனிக்க நடப்பது எதுவும் உணரமால் அமர்ந்திருந்தான் கெளதமன்..

ஏன் இப்படி? என்ற கேள்வி மட்டுமே அவன் மனதில் தொக்கி நின்றது.. யசோவிற்கு அவன் அருகில் சென்று பேச நினைத்தாள் ஆனால் அடுத்த நொடியே கெளதமனது இந்நிலைக்கு தான் தான் காரணமோ என்ற கேள்வி எழ அப்படியே அமர்ந்துவிட்டாள்..

பிரியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு போலிஸ் தன் விசாரணையை தொடங்கியது.. யார் முதலில் பார்த்தார்கள்?? என்ன நடந்தது?? வரதட்சினை கேட்டார்களா?? கட்டாய திருமணமா?? என்று கேள்வி மேல் கேள்வியாய் அடுக்க ஏற்கனவே கலங்கியிருந்தவர்கள் எல்லாம் நொந்து போய்விட்டனர்..

மணப்பெண் அறையை பரிசோதிக்க சென்ற காவலர் ஒருவர், அங்கே கிடைத்தாய் ஒரு கடிதத்தை கொண்டு வர, பரிதாபப்பட்டோ என்னவோ இன்ஸ்பெக்டர் அதை ராகினியின் கையில் கொடுத்தார்.

மகள் என்ன எழுதி வைத்திருக்கிறாளோ என்று பிரித்தவருக்கு கண்ணில் நீர் முட்டி படிக்கமுடியவில்லை.. அம்பிகா அக்கடிதத்தை வாங்கி கௌதமனிடம் கொடுத்தார்..

அன்புள்ள அம்மா, அப்பா மற்றும் கெளதம் குடும்பத்திற்கு,

 என்னைய மன்னிச்சிடுங்கன்னு நான் சொல்லி எந்த பிரயோஜனமும்    இல்லை.. ஆனாலும் என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.. என்னோட இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமே தான் காரணம். இது நான் சுயநினைவோட  எடுத்த முடிவு தான், வேற யாரும் காரணம் இல்லை.

என் சாவுக்கான காரணம் என்னோடவே போகட்டும் அதை தெரிஞ்சு நீங்க இன்னும் வேதனை படுறதை நான் விரும்பலை.. அம்மா தயவு செஞ்சு நீங்க இதை எல்லாம் நினைச்சு அழ வேண்டாம்.. ப்ளீஸ் அப்பா நீங்களும் தான்.

பிறகு கெளதம்.. உங்களுக்கு நான் சொல்ல.. மன்னிப்பு கூட உங்க கிட்ட நான் கேட்க முடியாது.. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நீங்க வாழ்கையில முன்னேறி போகணும்.. இந்த கல்யாணம், என்னோட மரணம் எல்லாமே கனவா நினைச்சு மறந்திடுக்க..

சீக்கிரமே உங்களுக்குன்னு ஒரு வாழ்கையை அமைச்சுக்கோங்க..

                                                இப்படிக்கு,

                              உங்களிடம் மன்னிப்பை மட்டுமே வேண்டும்   

                                                பிரியா…

எத்தனை முறை படித்தாலும் கௌதமனுக்கு இக்கடிதம் ஒன்றுமே புரியவில்லை.. காரணமே கூறாத ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள்.. ஏற்கனவே நிறைய குழப்பம். அதிலும் இதை படித்த பிறகு இன்னும் குழப்பங்களே மிஞ்சின..

ஒரு வெற்று உணர்வோடு அதை போலிசிடமே கொடுத்துவிட்டான்.. ராகினியும் முரளியும் தான் இன்னும் அழுது புலம்பினர்..

“கடைசி வரைக்கும் ஏன் செத்தான்னு கூட நாங்க தெரிஞ்சுக்காம புலம்புறமாதிரி பண்ணிட்டாளே.. ஒருவார்த்தை கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருந்தா நாங்க கேட்காமலா போயிருப்போம்” என்று ராகினி கதற காண்பவருக்கும் கண்ணில் நீர் சுரந்தது…

அதற்குமேல் கெளதமனால் ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியவில்லை.. ஆனால் அங்கிருந்து விலகிசெல்லவும் முடியாதே… ஏன் இப்படி நேர்ந்தது ?? ப்ரியாவிற்கு ஒருவேளை இத்திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் அனைத்தும் சரி செய்து இருப்பேனே என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற நாற்காலி ஒன்றில் தோய்ந்து போய் பொத்தென்று அமர்ந்தான்..

ஆனால் நேரமும் காலமும் யாருக்கும் காத்திராதே.. நடக்க வேண்டிய அனைத்தும் முடிந்து இறுதியாக ப்ரியாவின் மரணம், கண நேர குழப்பத்தில் நிகழ்ந்த  தற்கொலை என்று பிரேத பரிசோதனை முடிவுகள் கூற, காவல்துறையும் அதனை உறுதி செய்து வழக்கை முடியது.நடந்த சம்பவத்தில் பாதிக்க பட்டது ப்ரியா மற்றும் கெளதமனின் குடும்பமே..

ராகினியும் முரளியும் மகளை பறிகொடுத்தனர் என்றால், அங்கே கௌதமன் வீட்டிலோ அவனது தந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது.. தன்னுடைய ஆசையே மகனது வாழ்வை கேள்விக்குறியாக்கி விட்டது என்றெண்ணி அவரின் உயிர் சிறிது சிறிதாய் கரைய தொடங்கியது..  

இரண்டொரு நாள் மூச்சு விடவே மிகவும் சிரமபட்ட அவரை காண முடியாமல் கௌதமன் அவர் முன்னே வரவே தயங்கினான். ஆனாலும் என்ன செய்ய?? அன்னையின் அழுகையும் வேதனையையும் தாங்க முடியாமல் சிவநேசனிடம்

“அப்பா ப்ளீஸ் ப்பா.. நீங்க எதுவும் நினைக்கவேண்டாம் ப்ளீஸ்.. எங்களுக்கு நீங்க ரொம்ப முக்கியம்.. என்னை நினைச்சு எல்லாம் நீங்க வருத்தப்பட வேண்டாம் ப்பா.. போக போக எல்லாமே சரியாகிடும்.. உங்களுக்குள்ள எந்த கில்டி பீலும் வேண்டாம்.. ”என்று அவர் கரங்களை பிடித்து மென்மையாய் தடவியபடி பேசிக்கொண்டிருந்தவனுக்கு அவரது உயிர் பிரிந்து சில பல நொடிகள் ஆனது என்பதை உணரவே சிறிது நேரம் பிடித்தது..

அதை உணர்ந்த பிறகோ உறைந்துவிட்டான்..

“அப்.. அப்பா…” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் கண்ணீர் வடிந்த அவரது விழிகளை தன் கரங்களால் மூடினான்..

தந்தையிடம் மகன் மனம் விட்டு பேசட்டும் என்றெண்ணி வெளியில் அமர்ந்திருந்த அம்பிகா உள்ளே நிசப்தமே நிலவவும் அறையுனுள் எட்டி பார்க்க அவர் பார்த்த காட்சியோ மீண்டும் அவரது உள்ளத்தில் சூறாவளியை அடிக்க செய்தது..

“கெளதம்… அப்.. அப்பா…   ” என்று கணவரையும் மகனையும் மாறி மாறி பார்த்தவர் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தரையில் பொத்தென்று விழுந்தார்..

இப்படி ஒரு சூழலில் கௌதமனின் நிலையை கூறவும் வேண்டுமா?? விஷயம் அறிந்து வேத மூர்த்தி அடித்து பிடித்து ஓடி வர, உடன் யசோவும் தேன்மொழியும் வந்தனர்..

யசோவிற்கோ யாரை சமாதனம் செய்வது என்று தெரியவில்லை. அம்பிகா ஒருபக்கம் மயங்கி கிடந்திருக்க, கௌதமன் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தான்..

அவளது மனதில் ஆயிரம் எண்ணங்கள்… கெளதமனை காணும் போதே அவளது உள்ளம் துடித்தது.. எப்படி இருந்தவன், இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறானே என்று நினைக்கும் பொழுதே கண்களில் கண்ணீர் சுரந்தது.. கெளதம் என்று மெல்ல அவன் தோள் மீது கை வைக்க அவனோ சில நொடிகள் அவளது கரங்களை இறுக பற்றினான்.. சில நொடிகள் தான் அதற்கு மேல் அவள் இருந்த பக்கம் கூட அவன் வரவில்லை..

அடுத்தடுத்து ஆட்கள் வந்தனர், யார் யாரோ வந்து மாலை போட்டனர்.. கௌதமனுக்கும், அம்பிகாவிற்கும் ஆறுதல் கூறினார்.. அனால் இதல்லாம் அவர்கள் மனதில் பதியவில்லை.. ப்ரியாவின் அன்னையும் தந்தையும் வந்துவிட்டு தங்கள் பங்குக்கு ஆறுதல் கூறி அழுதுவிட்டு சென்றனர்..  

இறுதி சடங்கு முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர வீடே அமைதியை ஆடையாய் சூடியிருந்தது.. அம்பிகாவும் கௌதமனும் மற்றும் சில உறவுகளும் இருக்க அந்த சூழலில் யசோவால் பொருந்தி இருக்க முடியவில்லை. மனம் முழுக்க பாரத்திலும், குற்ற உணர்விலும் அழுத்த கத்தி அழவேண்டும் போல இருந்தது அவளுக்கு..

அதற்கு பிறகான நாட்கள் எல்லாம் கௌதமன் யசோவிற்கு சுமுகமாய் இல்லை. ஏன் ஒருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தாலும் பேசிக்கொள்ள நேர்ந்தாலும் தாமரை இலை நீர் போல் தான்..

எங்கே தான் பேசினால் தன்னையும் மீறி எதுவும் கூறிவிடுவோமோ என்று அவனும், தான் எப்படி அவனிடம் பேசுவது என்று அவளும் மனதில் தயக்கத்தை வைத்து பேசாமல் இருக்க.. நாட்கள் செல்ல செல்ல அதுவே ஒருவரை ஒருவர் இடித்து பேசும் வழக்கமும் ஆனது. தங்களது உணர்வுகளை மறைத்து தள்ளி நிற்க  கோவம் என்னும் முகமுடி போட்டுகொண்டனர்..

அம்பிகாவிற்கு வருடங்கள் ஓட கணவரது மறைவு ஒருவழியாய் ஏற்றுகொள்ள முடிந்தது ஆனால் மகனது வாழ்வை எண்ணி வருந்த தொடங்கினார்..

இப்படியாக தன்னுடைய கடந்த காலத்தை எண்ணி காரை செலுத்தியவனுக்கு நிரஞ்சன் பலமுறை அலைபேசியில் அழைத்தது கவனத்திற்கு வரவில்லை.. மீண்டும் அவனிடம் இருந்து அழைப்பு வர தன்னையே உலுக்கிக்கொண்டு  அழைப்பினை ஏற்று அலைபேசியை காதில் வைத்தான்..

“சாரி நிரஞ்சன் நான் கவனிக்கல… கொஞ்சம் பழைய யோசனை…”

….

“ஓகே டா நான் நீ சொன்ன இடத்துக்கு கிட்ட தான் இருக்கேன்.. இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன் ”

“ஓகே பை ” என்று போனை வைத்தவன் ஐந்து நிமிடத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை இரண்டே நிமிடத்தில் அடைந்தான்..

நிரஞ்சன் “என்ன டா இப்படி பொழுது விடிய முன்னமே வந்து நிக்கிற எதுவும் ப்ராப்ளமா.. போன்லையும் சொல்லல ” என்றபடி கைக்குலுக்க

“உள்ள போய் பேசலாம் டா ” என்றபடி முன்னே நடந்தான் கெளதமன்..  அதன் பின் நண்பனிடம் நடந்த அனைத்தையும் கூறினான்.. போனில் பேசியவன் ப்ரியாவின் மரணம் தற்கொலை அல்ல என்பதையும் அதே போல யசோதராவின் மரணமும் நிகழும் என்பதையும் கூறியதாய் கூறும் பொழுதே கௌதமன் முகத்தை இத்தனை நேரம் அமிழ்ந்து போயிருந்த ஆத்திரம் மீண்டும் தலை தூக்கியது..

அனைத்தையும் நிதானமாய் கேட்ட நிரஞ்சன் சிறிது அமைதி காத்தான்..

“என்ன டா அமைதியா இருக்க.. ”

“இல்லை யசோக்கு இதெல்லாம் தெரியுமா ??”

“ம்ம் சொல்லிட்டேன் டா… மறைச்சு என்ன ஆக போகுது அதான்”

“என்ன சொன்னாங்க.. ”

“அவ பிரியா ஓட டெத் சூசைட் தான்னு உறுதியா நம்புற.. இவன் சொல்றதெல்லாம் பொய் உங்களை யாரோ குழப்ப பாக்குறாங்க, இதுல வேற எதுவோ இருக்குன்னு சொல்ற  நிரஞ்சன்..”

“ம்ம் குட்… நீ என்ன நினைக்கிற கௌதம் இதை பத்தி.. ?? ”

“நான் நினைக்கிறது எல்லாம் அடுத்து இருக்கட்டும் டா.. முதல்ல யசோக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யணும் டா. அது தான் முதல்ல.. ” என்று வேகமாய் பேசியவனை புன்னகையோடு பார்த்தான் நிரஞ்சன்..

“என்ன டா சிரிக்கிற ??”

“இல்ல இவ்வளோ சொல்றவன் யசோவ எப்படி தனியா விட்டு வந்த இப்போ ??”

“கன் கொடுத்துட்டு தான் வந்தேன்.. ஷி நோ ஹவ் டு சூட்.. அண்ட் ஐ நோ ஹவ் டு சால்வ் தட் ”

“ஹ்ம்ம் ஒரு போலிஸ் காரன்கிட்டவே பொண்டாட்டி சுட்டாலும் அதை ஒண்ணுமில்லாம ஆக்க முடியும்னு சொல்ற.. தைரியம் தான் மச்சி..”

“ஹா ஹா என்னை கிண்டல் பண்ணது போதும் டா.. நடக்கறத பாப்போம்.. பிரியா கேஸை மறுபடி தோண்டினா விஷயம் வெளிய தெரியும், அவன் முழிச்சுப்பான்.. சோ அதை வெளிய தெரியாம தான் பண்ணனும்.”

“ஹ்ம்ம் சரி டா.. பார்த்துக்கலாம் சில விசயங்கள் இதுல அபீசியலா பண்ண முடியாது, ஹ்ம்ம் இருந்தாலும் வி வில் ட்ரை டு ஸ்மெல் ஹிம்.. சரி யசோ இப்போ அவங்க வீட்டுக்கு போயிடுவாங்களா எப்படி ??”

“நேத்து வரைக்கும் அந்த முடிவு தான் நிரஞ்சன்.. ஆனா கண்டிப்பா இப்போ யசோ முடிவு மாறியிருக்கும். நிச்சயம் அவ அவங்க சித்தி சித்தப்பா கூட போகமாட்டா என்கூட எங்க வீட்டுக்கு தான் வருவா” என்று நண்பர்களின் பேச்சு மேலும் வளர அங்கே மருத்துவமனையில் உறங்கி எழுந்த யசோதரா இன்னும் கௌதமன் வரவில்லை என்று கலக்கம் கொண்டாளும் மேலும் தான் செய்ய வேண்டியது என்னென்ன என்று நிதானமாய் யோசித்தாள்..

சிறிது நேரத்திலேயே தேன்மொழி வந்துவிட காலை கடன்களை முடித்து முகம் கழுவி என்று அவர் உதவி செய்ய அமைதியாய் அதை ஏற்றுகொண்டவளின் முகம் யோசனையில் இருப்பதை பார்த்து

“என்ன யசோ மா.. என்னாச்சு கௌதம் போன் பண்ணி கொஞ்சம் சீக்கிரமே அங்க போங்கன்னு சொன்னாரு. எதுவும் முக்கியமான வேலையா ?? “என்று விசாரிக்க..

அவரிடம் விஷயத்தை கூறலாமா என்று சில நொடிகள் யோசித்தவள் பிறகு வீட்டில் யாருக்கேனும் பெரியவர்களுக்கு தெரிய வேண்டும் என்று முடிவு செய்து நடந்ததை கூறினாள்..

“என்ன யசோம்மா இவ்வளோ நடந்து இருக்கு.. ஒருவார்த்தை இந்த தம்பி சொல்லவேண்டாமா ?? ” என்று பதறினார் தேன்மொழி..

“இல்லை சித்தி அவரே இதை முதல்ல பெருசா நினைக்கல.. நேத்து ராத்திரி போன் வரவும் தான் என்கிட்டவே சொன்னாங்க..இப்போ அவர் பிரன்ட் நிரஞ்சனை பார்க்க போயிருக்காங்க..”

“ஹ்ம்ம் இப்போ என்ன பண்றது யசோ?? உங்க சித்தப்பா கிட்ட சொல்லி எதா மினிஸ்டர் இப்படி பேச சொல்லுவோமா??”

“அதெல்லாம் வேண்டாம் சித்தி… நான்.. நான் கெளதம் கூட அங்க போறேன் சித்தி.. நம்ம வீட்டுக்கு வரல ப்ளீஸ்.. இந்த நிலைமைல அவர தனியா விடுறது எனக்கு நல்லதா படல.. அத்தையும் இல்லை சித்தி”

“ஹ்ம்ம் நீ சொல்றது எல்லாம் சரிதான் யசோ. ஆனா உன் உடம்பையும் பார்த்துக்கனுமே…  கௌதம் வெளிய போனா எப்போ வரும்னு சொல்ல முடியாது நீ எப்படி மா சமாளிப்ப?? ”

“ஏன் சித்தி நீங்க என்கூட வந்து இருக்க மாட்டிங்களா ??” என்று யசோ கேட்கவும் தேன்மொழி அழுதே விட்டார்..

“யசோ.. யசோம்மா நிஜமா என்னை தான் வர சொல்றியா.. ” என்று அவள் முகம் தடவி முத்தமிட்டார்..

“கல்யாணம் ஆன இத்தனை நாள்ல ஒரு தரம் கூட நீ என்னை அங்க கூப்பிடலன்னு எனக்கு எவ்வளோ வருத்தம் தெரியுமா டா.. நான் உன்னை பெத்த அம்மா இல்லை தான். ஆனாலும் என் மனசிலையும் பாசம் இருக்கு டா.. உங்க பாட்டி இருக்கவரைக்கும் என்னை உங்கிட்டவே வரவிடமாட்டாங்க.. நான் உனக்கு எது பண்ணாலும் அதுல ஒரு குத்தம் குறை சொல்லுவாங்க, அதுனாலயே  நான் கொஞ்சம் தள்ளியிருக்க ஆரம்பிச்சேன்..

அப்புறம் நாள் ஆக ஆக எனக்குமே அதே பழகிடுச்சு, உங்க பாட்டி இறந்த ஆப்புறமும் என்னால அந்த தயக்கத்தை விட முடியல.. கலைவாணி அண்ணி ஏதாவது சொல்லும் போதெல்லாம் உன்னையும் விட்டுகொடுக்கமா அவங்க கூடவும் சண்டை வராம பார்த்துக்கவே எனக்கு போதும் போதும்னு ஆகிடும்..

சித்து விசாகனை விரும்புறேன்னு சொன்னதும் முதல்ல என்ன பண்றதுன்னே தெரியலை யசோ.. அப்புறமும் உன்கிட்ட சொன்ன நீ புரிஞ்சுப்பன்னு தான் முதல்லையே எதுவும் சொல்லாம இருந்தோம் உன்கிட்ட.. அதுலயும் விசாகன் உன்னை விரும்புறது தெரிஞ்சு உன் அத்தை ரொம்ப பேசிட்டாங்க.. நீ வேற அப்போ அங்க இருந்தா ரொம்பவும் உன்னை பேசுவாங்கன்னு  தான் நானும் உன் சித்தப்பாவும் உன்னை வேலை சொல்லி வெளிய அனுப்புனோம் டா..

நீயே சொல்லு யசோம்மா இன்னும் என்மேலையும் உன் சித்தப்பா மேலயும் உனக்கு கோவமா டா.. நாங்க உன்னை ஒரு நிமிஷம் கூட அந்நியமா நினைக்கல டா.. இப்போ நீ என்னை கூப்பிடவும் எனக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா டா ” என்று மடை திறந்த வெள்ளமாய் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டார்..

யசோவிற்கு இப்படி அழுது, ஏக்கமாய் பாசமாய் பேசும் சித்தி புதிதாய் தெரிந்தார்.. அவர் மனதிலும் இப்படியெல்லாம் வருத்தங்களும் வேதனைகளும் இருந்திருக்கும் என்று அவள் யோசிக்கவே இல்லை.. இதை தான் கௌதமன் கூறினானோ உன்பக்கம் நியாயம் இருப்பது போல அவர்கள் பக்கமும் ஏதாவது இருக்கும் என்று..

“ஒருவேளை நான் தான் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுகிட்டேனோ…  ” என்று குழம்பினாள்..

ஆனால் நடந்த அனைத்தையும் அவள் நேரில் பார்த்தாள் தானே.. பிறகும் தேன்மொழி இப்படி அழுதபடி பேசும்போது ஏன் தனக்கு மனம் வலிக்கிறது என்று தோன்றியது..

“என்ன யசோம்மா அமைதியா இருக்க.. நான் சொல்றது எல்லாம் உண்மைதான் டா.. உனக்கு நம்ப கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா இதெல்லாம் கெளதம்க்கு முன்னமே தெரியும்.. அவகிட்ட எடுத்து சொல்லுங்கன்னு சொன்னோம் யசோ, ஆனா கெளதம் தான் வேணாம் ஏதாவது ஒரு சூழ்நிலையில அவளே உங்களை புரிஞ்சுப்பான்னு சொல்லிட்டாரு.. ” என்று பாவமாய் பார்த்தவரை ஒன்றும் கூறாமல் அணைத்துக்கொண்டாள் யசோதரா..

“சாரி சித்தி.. நான் நானும் உங்களை புரிஞ்சுக்காம எவ்வளவோ பண்ணிட்டேன்.. நானுமே ரொம்ப பேசிட்டேன் சித்தி..ஐம் ரியலி சாரி சித்தி.. ”

தன் கண்களை துடைத்துக்கொண்டே தேன்மொழி “பரவாயில்ல யசோ, உன் கோவத்தை வருத்தத்தை எல்லாம் எங்ககிட்ட தானே காட்ட முடியும்.. ஆனா உன் சித்தப்பா தான் மனசுக்குள்ளவே ரொம்ப வருத்தப்பட்டாரு டா.. கம்பனில எதோ கேட்டதுக்கு இனிமே இதெல்லாம் சித்துக்கிட்ட கேளுங்கன்னு சொன்னியாம் அன்னிக்கெல்லாம் அவர் தூங்கவே இல்லை…” என்று அவர்பாட்டில் கூறிய படி அவளுக்கு தட்டில் உணவு வைக்க அவளது தொண்டைக்குள் அது இறங்குவேனா என்று சண்டித்தனம் செய்தது..

உடலில் இருந்த பலவீனமும் சேர்ந்துக்கொள்ள, மனமோ நினைக்க கூடாததை எல்லாம் நினைத்தது..

“நான் தான் அரம்பத்தில இருந்து எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு பண்றேனோ.. முதல்ல கெளதம் விஷயம், அப்போவே சரின்னு சொல்லிருந்தா இவ்வளோ பிரச்சனைகள் வந்தே இருக்காது. பிறகு சித்து விஷயம் நானுமே கொஞ்சம் அவங்க பக்கம் இருந்து யோசிச்சு இருக்கணுமோ..” என்று சிந்திக்க தொடங்கியவளுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்..

தேன்மொழி அவளை அரட்டி உருட்டி உண்ண வைக்க கெளதமனும் வந்து சேர்ந்தான்.. வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வந்திருப்பான் போல, முகம் சற்றே தெளிவாய் காணப்பட்டது..

அவன் வந்ததும் அவனுக்கு தட்டில்உண்ண வைத்துக்கொடுத்தார் தேன்மொழி.. யசோதரா அமைதியாய் இருக்க

“என்ன அத்தை உங்க பொண்ணு அமைதியா இருக்கு?? ”  என்று லேசாய் சீண்டி பார்த்தான்..

“அது தம்பி… அவளுக்கு இங்கவே இருக்க எப்படியோ இருக்கு போல.. அதான்” என்று அவரும் எதுவோ காரணம் சொல்லி சமாளிக்க பார்க்க

“ஓ !! சரி அத்தை அப்போ டாக்டர் கிட்ட பேசி இன்னிக்கே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க ” என்று கூறவும் யசோதராவின் பார்வையில் முறைப்பு பிறந்தது..

அவனுக்கும் தெரியும் தானே அனைத்தையும் கேள்விப்பட்ட பிறகு யசோ அங்கே செல்லமாட்டாள் என்று. அதை தானே நிரஞ்சனிடம் கூறிவிட்டு வந்தான்.. ஆனால் அவளே கூறட்டும் என்று நினைத்தானோ என்னவோ வக்கீல் அல்லவா போட்டு வாங்கினான்..

தேன்மொழி பதில் கூறுவதற்குள் யசோ முந்திக்கொண்டாள்

“நான் அங்க போகல.. ”

“ஏன் ??? ”

“ம்ம்ச்.. போகலன்னா போகல… சித்தி என்கூட வந்து நம்ம வீட்டுல இருப்பாங்க.. வேணும்னா சித்து, சித்தப்பா எல்லாம் வருவாங்க..  ” என்றால் சட்டமாய்..

இது அவனுக்கு புதிது அல்லவா ஆச்சரிய பாவம் காட்டினான்.

தேன்மொழியோ மகிழ்ச்சியாய் “ஆமா கெளதம், யசோ எங்களை புரிஞ்சுகிட்டா.. அதான் நானும் அங்க வந்து இருக்கேன்னு சொன்னேன்.. அவ புரிஞ்சுக்கலைனாலும் நான் அங்க வந்திருப்பேன்..”என்றார்..

“அப்போ எல்லாம் ஒன்னு கூட போறிங்கன்னு சொல்லுங்க அத்தை ” என்றவனுக்கு மனதில் சில எண்ணங்கள் தோன்ற

“அத்தை உங்களுக்கு விஷயம் தெரியும்னு நினைக்கிறேன்.. சோ நான் வீட்டுல கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பண்ணனும், அதுவரைக்கும் யசோ உங்க வீட்டுல இருக்கட்டும். ஒரு மூணு நாள் தான் ” என்றவன் சம்மதமா என்றெல்லாம் அவளை கேட்கவில்லை.

அவளோ நீ என்னவேண்டுமானால் செய் ஆனால் நான் மனதில் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று இருந்தாள் போல..

“ஹ்ம்ம் ரெண்டு நாளைக்கு மேல ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன் ”  என்று யாருக்கோ கூறுவது போல கூறினாள்..

“ஹ்ம்ம் அடிபட்டாலும் இவ திமிர் குறையாது போல ” என்றெண்ணியபடி உண்டான் அவன்..

சிறிது நேரம் செல்ல அக்கா என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தனர் சித்துவும் வசுவும்.. வசுந்தராவுக்கு விடுமுறை கிடைக்காததாலே அவளால் உடனே வரமுடியவில்லை..

“ஹேய் சித்து , வசு ” என்று இருவரையும் கட்டிகொண்டாள் யசோ..

சித்துவுக்கு யசோதராவின் குரலிலேயே புரிந்துவிட்டது அவள் மனம் தங்களை மன்னித்துவிட்டது என்று..

வசுவோ தேவை இல்லாமல் பதறவில்லை, கண்ணீர் விடவில்லை

“என்னக்கா நீ?? பார்த்து வர கூடாதா ?? எப்போவும் மாமா நியாபகமா ” என்று கேலியாய் தன் அக்கறையை காட்டினாள்..

யசோ எதுவோ கூறவர கௌதமனோ சற்றே அழுத்தமாய் பார்க்க வாயை மூடிக்கொண்டு சிரிப்பை மட்டுமே பதிலாய் கொடுத்ததை தேன்மொழி கவனித்து மனதில் மகிழ்ந்து கொண்டார் நல்ல ஜோடிகள் என்று..

 

 

 

 

 

 

 

 

Advertisement