Advertisement

அத்தியாயம் – 11

கௌதமன் முகம் பாறையென இறுகியிருந்தது.. அவன் கண்களில் இருந்த ரௌத்திரம் எதிரில் யார் வந்தாலும் பொசுக்கிவிடும்.. அவனது யோசனை எல்லாம் சில நொடிகள் தான்..

யசோதரா வெளியில் வந்த அடுத்த நொடி அவள் கையில் தன் துப்பாக்கியை திணித்தான் “உன்னோட சேப்டிக்கு…” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்ப எத்தனிக்க அவளோ இன்னதென்று புரிய நொடிகள் ஆனாலும் என்னவென்று தெரியாமல் அவனை விட மனமில்லை.

அடிபடாத கையினால் அவனை இருக்கமாய் பிடித்து நிறுத்தினாள்.. திரும்பிய அவன் முகமோ கோபக்கனலை கக்கியது… கோபம் என்று சொல்வதைவிடகொன்று தீர்த்துவிடும் வெறி என்றே சொல்ல வேண்டும்..

“சொல்லிட்டு போங்க கெளதம் ” என்றவளின் பிடியை விட அவளது குரலில் தெரிந்த உறுதி சில வினாடிகள் அவனை நிறுத்தி வைத்தது..

“ப்ரியாவை கொலை பண்ணவனை ஒருவழி செய்ய போறேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் கௌதமன்..

அவன் கூறியதை கேட்ட யசோவோ திகைத்து விழித்தாள்.. கொலையா ??? அவளது உடலில் நடுக்கம் ஓடியது… ஏற்கனவே அடிபட்டு தளர்ந்து இருந்த உடம்பு இதைக்கேட்டதும் தோய்ந்தே விட்டது

“கௌதம் ???!!!! ”

இறுக கண்களை மூடி தன் உணர்வுகளை அடக்கியவன் அவளை அமர செய்தவன். அவளிடம்

“யசோ.. யசோ.. இத்தனை வருசமா நான் முட்டாளா இருந்திருக்கேன் யசோ.. பிரியா சூசைட் பண்ணிக்கல. அவ.. அவளை கொன்னு தொங்க விட்டு இருக்காங்க.. டேம் இட்… என்னை பலிவாங்க.. ஒரு பொண்ணை.. ச்சே..” என்று கட்டிலில் குத்தியவன் வேகமாய் எழுந்தான்..

அவளுக்கு தெரியும் விஷயம் எத்தனை தீவிரமாய் இருந்தாலும் கௌதமன் இப்படி ஒரு மனநிலையில் வெளியில் செல்வது சரியில்லை என்று.. அவனை சற்று நேரம் தடுத்தே ஆகவேண்டும்.. அவனது உணர்வுகள் சிறிது சமன்பட்டே ஆகவேண்டும்… என்று யோசனையோடு அவன் முகம் பார்த்தவள் அவன் எழுந்த வேகத்தை விட அவனை இழுத்து அணைத்தாள்..

“வலிச்சாலும் பரவாயில்ல.. பொருத்துக்கிறேன்…”சற்று நேரத்திற்கு முன் அவன் கூறிய வார்த்தைகள் தான் இப்பொழுது அவள் திருப்பி படித்தாள்…        

“விடு யசோ… அவனை ஒருவழி பண்ணனும்”

“முடியாது கெளதம்…  ”

“லீவ் மீ யசோ ” என்று திமிறினான்..

“நோ வே கெளதம்… ”

“நான் இப்போ போகாட்டி அவன் உன்னையும் கொன்னுடுவான் யசோ” இவ்வார்த்தைகளை கூறும் பொழுது அவன் குரலே கூறியது அவனது எண்ணத்தை..

அவன் முகத்தை நிமிர்தியவள் அவனது கண்களை ஊடுருவினாள்..

“அப்படி நடக்க நீங்க விட்றுவிங்களா கெளதம்” என்றவள் இன்னும் இன்னும் அவனை இறுக அணைத்தாள்..

அவளது அணைப்பில் அவன் உணர்வுகள் அடங்கியதோ இல்லை அவனாய் அடக்கினானோ தெரியவில்லை

“உனக்கு வலிக்க போகுது..” என்றவன் மெல்ல விலகினான்…

“இப்போ சொல்லுங்க என்ன நடந்தது கெளதம்??”

சிறிது நாட்களாகவே அவன் தனக்கு வரும் அலைபேசி மிரட்டலை கூறினான்..

“என்ன கெளதம் உங்ககூடவே தான் நான் இருக்கேன்.. என்கிட்டே சொல்லியிருக்கலாமே.” என்று அவள் கேட்கவும் இல்லை அதற்கான விளக்கத்தை அவன் கொடுக்கவும் இல்லை.

“இதை முதல்ல இவ்வளோ சீரியஸா எடுக்கல மா.. ஆனா.. அவனை நான் சும்மாவே விட போறது இல்லை யசோ…” என்று மீண்டும் முறுக்கிக்கொண்டு எழுந்தான்..

“யாருன்னே தெரியாம யாரை போய் என்ன பண்ண போறீங்க கெளதம்.. முதல்ல நம்ம இதை நிதானமா தான் பேசணும்.”

“இனி நான் நிதானமா இருக்கவே தேவை இல்லை… போதும் பொறுமையா இருந்தது எல்லாம்.. இந்த கெளதமை என்னன்னு நினைச்சான் அவன்..”

இன்னும் கூட அவன் பேசியது கௌதமனின் காதுகளில் ஒலித்தது..

“என்னவே வக்கீலே… பொண்டாட்டிக்கு சேவகம் செய்தியளோ.. செய்வே செய்… எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தேன்.. பொறவு உன் மொத பொண்டாட்டிய தொங்கவிட்டது போல இவளையும்… இல்லவே இல்ல.. நாலு வருஷம் காலம் மாறிடுச்சுவே.. இவளை வேற மாதிரி தான் செய்யணும்… ஹா ஹா எப்படிவே.. உனக்கு நல்லா இருக்குமே இப்போ குளு  குளுன்னு..”

“டேய்… என்ன விளையாட்டு காட்றியா??? ”

“அய்யே…. இந்நேரம் உம்ம கூட விளையாட நீ என்ன அய்த  மவனா இல்ல மாமன் மவனாவே… கொஞ்சம் யோசிச்சு பாருவே.. பிரியா செத்தத… அவ தானா சாகலவே… வேற வழியே இல்லாம செத்தா..”

“ஏய்… யாருடா நீ… என் முன்ன வந்து பேசுடா” என்று கூறும் பொழுதே கௌதமன் கண்களில் ப்ரியா தூக்கில் தொங்கிய காட்சிகள் வந்து போனது.. எதிர்புறம் பேசுபவன் மட்டும் அவன் கண் முன்னே இருந்தால் கொன்றே தீர்த்துவிடுவான்.. ஆனால் அந்த எதிராளி அதற்கு மேல் பேசினால் தானே..

கல்யாண கோலத்தில், கழுத்தில் ஏறிய மஞ்சள் தாலியின் ஈரம் கூட காய்ந்திருக்காது, அதே கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக்கொண்டு இருந்தாள்.. அக்காட்சி இப்பொழுது நினைவு வர ஏனோ அவன் கண்களில் நீர் சுரந்தது…

“கெளதம்…….!!!!! ”

“என்னை பலிவாங்க ஒரு பொண்ண ச்சே… அவ சாகும் போது என்னென்ன வேதனை பட்டாளோ யசோ.. எல்லாமே என்னால தானே.. அந்த ஈன நாய் தைரியமானவனா இருந்தா என்னைத்தானே எதுவும் பண்ணிருக்கணும்..”

“கெளதம் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் பீலிங்க்ஸ்… இது இதெல்லாமே உங்கள குழப்ப சொன்னதா கூட இருக்கலாமே… ப்ளீஸ் கெளதம்… ”

“நோ யசோ.. உனக்கு ஆக்சிடென்ட் பண்ணதும் அவன் தான்.. இது சும்மா மிரட்டலுக்குன்னு அவனே சொன்னான்..”

“அவன் சொன்னா அதை அப்படியே நம்பனுமா ???ப்ரியா எழுதின லெட்டரை தான் படிச்சோமே.. பார்த்தோமே…”

“நானும் அப்படிதான் நினைச்சேன் யசோ… ஆனா உன் ஆக்சிடென்ட் எல்லாத்தையும் மாத்திடுச்சு.. நான் போய் நிரஞ்சனை பார்க்கணும் யசோ.. லேட் பண்ற ஒவ்வொரு நிமிசமும் நமக்கு தான் பிரச்சனை..” என்று அவன் எழ அவளோ கலங்கிய உள்ளத்தோடு அனுப்பி வைத்தாள்..

நிரஞ்சனை காண கிளம்பிய கௌதமனோ முதலில் நர்சிடம் சொல்லி அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டே கிளம்பினான்.. அந்த நிலையில் கூட அவன் தன்னலம் பேணுவதை எண்ணி யசோவின் உள்ளம் பெருமிதம் அடைந்தது..

ஆனாலும் அவளது மனதின் மறு பாதியோ இதை இப்படியே விடக்கூடாது, தானும் இதில் கௌதமனுக்கு உதவ வேண்டும், இவ்விசயம் எந்த அளவிற்கு உண்மை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணியது..

கட்டிலில் சாய்ந்தவளுக்கு கண்கள் மூட மறுத்தது.. ஒருவேளை பிரியாவின் மரணம் கொலையாக இருக்கும் பட்சத்தில் அதுவும் கௌதமனை பலிவாங்க செய்ததாக இருந்தால், அவன் கடைசி வரைக்கும் குற்றவுணர்வில் துவண்டுவிடுவான்.

அதற்காகவாவது தான் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.. ஆனால் இப்படி ஒரு உடல்நிலையில் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவளுக்கு மனதில் சில யோசனைகள் உதிக்க முகம் சற்றே தெளிவுபெற கண்கள் மூடினாள்..

காரை கிளம்பிக்கொண்டு நிரஞ்சனை காண கிளம்பியவனுக்கோ மனதில் பலவிதமான எண்ணங்கள் அலைமோத மனமோ கட்டுகடங்காமல் ஆர்பரித்தது.. இத்தனை வருடமாய் மனதில் இருந்து ஒதுக்கி வைத்த நினைவுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் பொங்கும் அலையாய் கிளம்பியது..

அர்த்தஜாம நேரத்தில் சாலையில் வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு நிசப்தம் நிலவும்.. ஒரு அமைதியை உணர முடியும்.. ஆனால் கௌதமனின் மனமோ அமைதியை இழந்து தவித்தது..

அவனது கார் முன்னோக்கி செல்ல அவனது எண்ணங்களோ பின்னோக்கி பயணித்தது..

சாந்தோம் கடற்கரை, மாலை நேர காற்று தேகம் வருட, ஓடி விளையாடிய அலைகளோ காலை நனைத்தது… ஆனால் இதற்கு நேர்மாறாய் கௌதமனது உள்ளம் அனலாய் கொதித்து கொண்டு இருந்தது.. அவன் அருகில் நின்று கடலை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த இருபது வயது யசோதராவிற்கோ இவன் ஏன் நம்மை வரச்சொன்னான்?? என்ற கேள்வி மட்டுமே கருத்தில் இருந்தது..

“ஊப்ஸ்… கெளதம் இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே அமைதியா இருப்பிங்க ??” என்று அவனது மௌனத்திற்கு முற்று புள்ளி வைத்தாள்..

“யசோ, வாட் டு யு திங் அபௌட் மீ ??”

“ஹா.. என்ன கேள்வி இது…??”

“ஆன்சர் மீ யசோ.. ”

“நீங்க கெளதம்… யங் பேமஸ் லாயர்.. எங்களோட குடும்ப நண்பர்.. தட்ஸ் ஆள்.”

“ம்ம்ச்.. நான் கேட்டது உன்னோட பெர்சனல் தாட்..”

“அதை தான் சொன்னேன்… ”

“ஓ.. யசோ எங்க வீட்ல மேரேஜ்க்கு பேசுறாங்க..”

“யாரு கூட பேசுறாங்க??” என்று புரியாத பாவனை காட்டியவளை முறைத்துவைதான்…

“ஓகே ஓகே.. உங்க வீட்டுல கல்யாணம் பேசுறதுக்கும், இப்போ நாம் பேசிட்டு இருக்கிறதுக்கும் என்ன இருக்கு கெளதம் ??”

“நான் உன்னை விரும்புறேன் யசோ..”

“வாட்….???!! ”

“எஸ்…. நான் உன்னை லவ் பண்றேன்… சோ என் கல்யாணத்தை பத்தி  உன்கிட்ட தானே பேச முடியும்”

“டோன்ட் ஜோக்கிங் கெளதம்… இதெல்லாம் சூட்டே ஆகாது..” அத்தனை அலட்சியமாய் பதில் வந்தது அவளிடம்..

“ஏன் ???”

“ஏன்னு கேட்டா என்ன அர்த்தம் கெளதம் ?? இது.. இதெல்லாம் ஒத்தே வராது.. அங்க உங்கப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கார், இப்போ நீங்க வந்து பேசுற பேச்சா இது..”

“அப்பாக்கு என்னோட கல்யாணத்தை பார்க்கணும்னு ரொம்ப ஆசை யசோ.. அதான் இந்த விஷயம் என்கிட்டே சொல்லவும் நேரா உன்னை பார்க்க வந்தேன்.. நைட்டுக்குள்ள அப்பாகிட்ட என் முடிவை சொல்றேன்னு சொல்லிறேன்..” என்றவனுக்கு அவன் தந்தையை எண்ணி கலக்கம் அதிகரித்தது..

யசோதராவிற்குமே சிவநேசனை எண்ணி கவலை தான்.. எப்படி துள்ளலாய் இருக்கும் மனிதர், சட்டென்று இப்படி படுத்துவிட்டாரே என்று எண்ணும் பொழுதே கெளதமன் கூறிய விசயமும் நினைவு வந்தது..

“அது.. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்றிங்க கௌதம்?? எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இல்லை..”

“ஒருவேளை கல்யாணம் பண்ண பிறகு உன் எண்ணம் மாறலாம் இல்லையா ??”

“நோ வே கெளதம்.. ”

“அதான் ஏன்?? எனக்கு காரணம் சொல்லு யசோ.” என்றவன் முகத்தில் கவலை ரேகைகளே அதிகம் தெரிந்தது..

“முதல் காரணம் எனக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணமே இல்லை.. ரெண்டாவது உங்களுக்கும் எனக்குமான வயசு வித்தியாசம், ஏழு வருஷம்… மத்தவங்க சொல்லலாம் இதெல்லாம் பெரியவிசயமான்னு, ஆனா எனக்கு இது பெரிய விஷயம் தான்..”

“ஓ.. இவ்வளோதானா ??” அவன் குரலில் இருந்தது என்னவென்று புரியவில்லை நக்கலா இல்லை வருத்தமா எதுவுமே தெரியவில்லை..

“லுக் கெளதம், எனக்கு படிக்கணும்.. அப்புறம் கம்பனி பொருப்பெடுத்துக்கணும்.. இதுக்கெல்லாம் அப்புறம் தான் கல்யாணம் பத்தி யோசிக்கவே செய்யணும்.. அப்படியே நான் இப்போ யோசிச்சாலும் உங்களை எனக்கு பிடிக்கணுமே.இதெல்லாம் நடக்கவே நடக்காது கெளதம்..”

“ஏழு வருஷ வித்யாசம்னால தான் என்னை கெளதம் கெளதம்ன்னு பேர் சொல்லி கூப்பிடுறியா ??” என்று அவன் நக்கலாய் வினவ…

“ம்ம்ச் எதுக்கு எத பேசுறிங்க ?? சின்ன வயசுல இருந்து அப்படிதான் கூப்பிட்டேன்.. அப்போவே நீங்க மாத்தி சொல்லி இருக்கணும்..”

“என் தப்பு தான்.. சோ இது தான் உன் முடிவா ?? ”

ஒருநொடி அவளுக்கு சிவநேசனின் உடல் நிலையும், கௌதமனின் மனநிலையும் மனதில் வந்து போனது.. ஆனால் திருமணம் என்பது இதற்காக எல்லாம் நடக்கும் ஒன்றா ?? மனம் அல்லவா முழுதாய் சம்மதம் சொல்ல வேண்டும்.. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சரி என்றுவிட்டு பின்னே இருவருமே வாழ்வு முழுவதும்  வருந்துபடி ஆக கூடாதே,

“ நான் இல்லைனா வேற பொண்ணே கிடைக்காதா என்ன ?? அதுவும் கெளதம்க்கு, போட்டி போட்டு வருவாங்களே” என்று யோசித்தவள்   

“இது மட்டும் தான் என் முடிவு கெளதம்.. போங்க முதல்ல போய் அங்கிள் ஹெல்த்த பாருங்க.. ”

“முடியாதுன்னு சொல்லிட்டல, அதோட இரு.” என்றவன் எதுவும் கூறாமல் கிளம்பிவிட்டான்…

யசொவிற்கு இன்னுமே கூட அவன் ஏன் கோவமாய் போகிறான் என்று புரியவில்லை.. மேலும் சில நொடிகள் அப்படியே நின்றவள் பிறகு சென்றுவிட்டாள்..

மருத்துவமனைக்கு சென்ற கெளதமனுக்கோ இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது.. அறையினுள்ளே நுழைந்தவனை கண்ணீரோடு எதிர்கொண்டார் அம்பிகா

“கெளதம் அப்பாக்கு மருபடியும் ரொம்ப மூச்சு திணறல் ஆகிடுச்சு டா. செக் பண்ண கூட்டிட்டு போயிருக்காங்க” என்று வேதனையோடு கூறிய அன்னையை ஒருவித இயலாமையோடு பார்த்தான்..

“நான் கிளம்பும் போது நல்லாத்தானே பேசினார் அப்பா.. மறுபடியும் என்னமா ??”

“என்னவோ தெரியலை கெளதம். உன் கல்யாண விஷயமா பேசினார்.. உனக்குன்னு கூட பிறந்தவங்களும் இல்லை.. அவருக்கு மனசில நிறைய கவலை போல டா .. இத்தனை வருஷம் இதெல்லாம் வெளிய சொல்லிக்காம இருந்திருக்கார் பாரேன்    ”என்றவருக்கு இன்னும் அழுகையே அதிகரித்தது..

“அம்மா ப்ளீஸ் அழாதிங்க.. அப்பாக்கு ஒன்னும் இல்லை.. நீங்க வேணா பாருங்க நல்லா தெம்பா வருவார்” என்றவனுக்குமே மனதில் ஏனோ நம்பிக்கை இல்லை.. அவனது மனதில் எண்ணிலடங்கா கவலைகள்..

ஆனால் இப்பொழுதோ அனைத்தையும் மீறி தன் தந்தையின் உடல்நிலை முன் வந்து நிற்க, அம்பிகாவின் தோளில் கை போட்டு ஆதரவாய் நின்றிருந்தான் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு.

சிறிது நேரத்திற்கு பிறகு சிவநேசனை ஸ்ட்ரச்சரில் வைத்து அறைக்கு அழைத்து வந்தனர் செயற்கை சுவாசம் பொருத்தி.. அம்பிகா திடுக்கிட்டு போய் மகனை பார்க்க அவனோ ஆதரவாய் பார்வையில் ஒருஅழுத்தம் கொடுத்து மருத்துவரை நோக்கினான்.

“கெளதம் உங்க அப்பாக்கு பிரசர் லெவல் ஜாஸ்தியா இருக்கு.. அவருக்கு உடம்பை விட மனசில தான் நிறைய பிரச்னைகள் போல.. சோ அவருக்கு கொஞ்சம் சந்தோசம் தர மாதிரி ஏதாவது பண்ணுங்க. அவருக்கு பிடிச்ச விஷயங்கள் எதுவா இருந்தாலும் செய்யுங்க. இப்போதைக்கு இது தான் அவருக்கு மருந்து. ஆக்சிஜன் சப்பளை இருந்துட்டே இருக்கணும்” என்றுவிட்டு செல்ல அம்பிகாவோ கணவரின் முகத்தை பார்த்து அழ தொடங்கிவிட்டார்..

“ஸ் அம்மா நீங்களும் இப்படி பண்ணா எப்படி மா” என்றவனுக்கு தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாய் தெரிந்தது..

கண்களில் மட்டும் உயிர் தொடுக்கி நிற்க சிவநேசன் மனைவி மற்றும் மகந முகத்தை பார்த்தபடி படுத்திருந்தார். மெல்ல அவர் புறம் சென்றவன் அவரது கரங்களை எடுத்து தன் கரத்தில் வைத்து

“அப்பா ஏன் பா ?? நல்லாதானே இருந்திங்க.. அப்படி என்னபா கவலை உங்களுக்கு..??” என்றான் கண்களில் திரையிட்ட நீரோடு..

பதில் பேசமுடியாத அவரோ தன் பார்வையில் பதிலை தந்தார்.. அவரு ஒற்றை பிள்ளை தான். உடற் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. சிறுவயதில் அது பெரிதாய் தெரியவில்லை என்றாலும் நாட்கள் ஆகா வயது கூட கூட ஒன்றேன்றால் உடன் வந்து நிற்க சொந்தம் இல்லையே என்ற கவலை அவரை அறிக்கை தொடங்கியது..

அம்பிகா வீட்டு உறவினர்கள் எல்லாம் வந்தாலும் அத்தனை நெருக்கமாய் யாரும் இல்லை. தன் மகனும் ஒற்றை பிள்ளையாய் நின்றுவிட தான் பட்ட கஷ்டமே அவனும் அனுபவிப்பானோ என்ற எண்ணம் அவரை வெகுவாய் தாக்கியது..

என்னதான் பணமிருந்தாலும், சொத்து பத்துஅனைத்தும் இருந்தாலும் நமக்கென்று சொல்ல சில உறவுகள் வேண்டுமே… இதையெல்லாம் சிந்திக்க தொடங்கிய சிவநேசன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார்.. அவர் அப்படி முடிவு செய்த நேரமோ என்னவோ அவரது உடல்நிலை மோசமடைய இப்படி மருத்துவமனை வாசம் ஆனது..

கணவரின் பார்வை புரிந்த அம்பிகா “கெளதம் அப்பா உன் கல்யாணத்தை பத்தி நினைக்கிறார் போல டா ” எனவும் இத்தனை நேரம் இருந்த அவனது உணர்வுகள் சற்றே மாறி மேலும் இறுக்கம் அடைந்தது..

ஒருநொடி தன் மனதில் இருக்கும் ஆசையை சொல்லிவிடலாமா என்று தோன்றியது.. அப்படி மட்டும் கூறிவிட்டால் நிச்சயம் அம்பிகா வேதமூர்த்தியிடம் பேசி யசோ கௌதமன் திருமணத்தை நடத்திவிடுவார். ஆனால் அது அவளது உணர்வுகளை கொன்றது போல ஆகிவிடும்.

இல்லை யசோதரா மனம் மாறும் வரை காத்திருக்கலாம் என்றால் அவனது தந்தையின் உடல்நிலை காத்திருக்காதே.. இதெல்லாம் மனதில் ஓட வேறு எதை பற்றியும் எண்ணாமல் தன் பெற்றோர்களை மட்டுமே கருத்தில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தான்..

மகனது சம்மதத்தை கேட்டதுமே சிவநேசனுக்கு அத்தனை நிம்மதி, மகிழ்ச்சியை முகத்தில் காட்டி அமைதியாய் உறங்க தொடங்கினார்..

கௌதமன் திருமணதிற்கு சம்மதம் என்று கூறியதுமே எங்கிருந்து தான் அம்பிகா பெண்ணை தேடி பிடித்தாரோ ஒரே வாரத்தில் பிரியா வீட்டினரோடு சம்பந்தமும் பேசி திருமண நாளும் குறித்தாகிவிட்டது..

கெளதமன் பிரியா திருமண செய்தியை கேட்டதும் யசோதரா மனதில் எவ்வித பாதிப்பும் இல்லை.. நல்ல முடிவு எடுத்திருக்கிறான் என்றே தோன்றியது..  ஒருமுறை தன் சித்தி சித்தப்பாவோடு கௌதமன் இல்லத்திற்கு கூட சென்றாள் சிவநேசனை காண..

திருமணம் பேசவுமே அவர் பிடிவாதம் பிடித்து வீட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவமனையில் எப்படி இருந்தாரோ அதை விட சற்றே அவரது உடலில் முன்னேற்றம் தெரிய அவ்வப்போது மட்டும் செயற்கை சுவாசம் தேவை பட்டது..

ஆனால் கௌதமனோ அவள் கண்ணில் படவேயில்லை. அம்பிகாவிடம் விசாரித்தாள்..

“அவன்கேஸ் விஷயமா மும்பைக்கு போயிருக்கான்.. கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வருவான் யசோ” என்றவருக்கு

“ஓ ” என்றவள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் வந்த வேலையை பார்த்தாள்..

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல விடிந்தாள் கௌதமன், பிரியாவிற்கு திருமணம்.. யசோதரா, சித்தாரா, வசுந்தரா, விசாகன் எல்லாம் கல்யாண கலாட்டாவில் இருக்க கல்யாண மாப்பிள்ளையோ இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்திருந்தான்..

அதற்குமேல் மணப்பெண் அய்யர் கூறுவதை செய்வது தான் என் வேலை என்பது போல இருக்க தன்னையும் மீறி யசோ மணமக்களை கவனிக்க தொடங்கினாள்..

அவள் கவனிக்க தொடங்கிய நொடி கெட்டிமேளம் கொட்ட, சுற்றி நின்ற உறவுகள் நட்புகள் எல்லாம் அட்சதை தூவ கௌதமன் பிரியா கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.. நடப்பது அனைத்தையும் மணமேடையின் பக்கவாட்டு அறையில் படுத்திருந்தபடி பார்த்து ஆனந்தபட்டார் சிவநேசன்..

அனைத்து முறைகளும் முடிய, ஒவ்வொருத்தராய் வந்து பரிசுகள் கொடுத்து புகைப்படமும் எடுத்து சென்றனர்.. யசோதரா இயல்பாகவே இருந்தாள்.. அவளும் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டாள். ப்ரியாவிற்கு அறிமுகம் செய்வானோ என்று எட்டி பார்த்த எண்ணத்தை அவன் முகம் பார்த்தே துடைத்தெறிந்தாள்..

சிறிது நேரத்தில் மணமக்கள் வேறு உடை மாற்ற செல்ல, போன வேகத்தில் உடை மாற்றி கொண்டு வந்துவிட்டான் கௌதமன்.. நெருங்கிய உறவுகளும் நட்புக்களும் மட்டுமே இருக்க கேலியும் கிண்டலும் சிரிப்பும் கஞ்சத்தனம் இல்லாமல் அரங்கேரிக்கொண்டு இருந்தது..

உடை மாற்ற சென்ற பிரியா நேரம் ஆகியும் வெளியே வராததால், அவளது அன்னை ராகினி மணப்பெண் அறைகதவை தட்டி பார்த்து தோல்வியோடும் முகத்தில் படிந்த யோசனையோடும் நடந்தார்..

“என்ன ராகினி பிரியா டிரஸ் மாத்திட்டாளா??” என்று அம்பிகா கேட்க

“மாத்திட்டு இருக்கா போல அண்ணி, கதவை திறக்கல” என்று யோசனையாய் கூற அம்பிகாவும் தன் பங்கிற்கு கதவை தட்டினார்.. பதிலேதும் இல்லை..  என்ன டா இது உள்ளிருந்து பதில் இல்லை எனவும் தான் இரு அன்னையருக்குமே மனதில் கலக்கம் பிறந்தது..

மெல்ல செய்தி மண்டபத்தில் இருப்பவருக்கு கசிய ஒவ்வொரு ஆளாய்அங்கே குழும ஆரம்பித்தனர்.. கௌதமனுக்கு முதலில் பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும் இத்தனை நேரமா என்ற கேள்வி ஏழ, ஒருவேளை கதவு அடைதுக்கொண்டதோ என்ற எண்ணமும் தோன்ற வேகமாய் கதவை இரண்டு முறை தள்ளி பார்த்தான்..

“அம்மா கதவு ஜாம் ஆகிட்டது போல அதான்.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. முதல்ல டென்சன் ஆகாம இருங்க” என்றவன் மேலும் இருவர் உதவியோடு கதவை தள்ளினான்..

இரண்டு முறை முயற்ச்சி செய்த பிறகு கதவு பக்கென்று திறந்து கொண்டது.. திறந்த வேகத்தில் உள்ளே பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்… சிறிது நேரத்திற்கு முன் அவன் அருகில் மணமகளாய் அமர்ந்திருந்து தாலி வாங்கிகொண்டவள் இப்பொழுது கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி கொண்டு இருந்தாள்..

அதை கண்டவனோ உறைந்து போய் நின்றான்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement