Advertisement

அத்தியாயம் – 1

நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்.. 

பயணிகள் ஒவ்வொருவராய் வர தொடங்கவும், அவரது பார்வை வேகமாய் சுழன்றோடியது… சிறு நொடிகளில் முகத்தில் ஒரு பிரகாஷம், மகிழ்ச்சி சட்டென்று தன் கையில் இருந்த பெயர் பலகையை உயர்த்தி பிடித்துஆட்டினார்..

யசோதரா நவீன யுக யுவதியாய் இருந்தாலும், தொழிலில் பொருப்பேற்று கொண்டபின் முதலில் கவனம் செலுத்தியது தன் உடைகளில் தான்… இளம் ரோஜா நிற புடவையில், கழுத்தில் மெல்லிய சங்கிலி இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் மின்ன, அதை விட அவளது கண்கள் பளீச்சிட்டன முருகனை பார்த்து…

அவரை நெருங்கியவள் “என்ன முருகண்ணா, எத்தனை தரம் சொல்றது இப்படி வந்து போர்டு பிடிக்காதிங்கன்னு.. நான் போறது வரது எல்லாம் வெளிய தெரியவரும்” என்று லேசாய் கடிந்தபடி நடந்தவளை இன்னும் வியந்து தான் பார்த்தபடி நடந்தார் அம்மனிதர்..

“பாப்பா சாப்டிங்களா??? ”

காரில் ஏறியபடி அவள் இல்லையென்று தலையாட்ட, மேலும் அவள் வார்த்தைக்காய் காத்திருந்தார்..

“வீட்டுக்கே போங்கண்ணா, இன்னிக்கு சித்து பர்த்டே வேற. எனக்காக காத்திருப்பா ” என்று புன்னகையோடு கூறியவளை பாவமாய் பார்த்தார் முருகன். சன பொழுதில் அவர் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கண்டுகொண்டாள் யசோதரா..

“என்ன பிரச்சனை…??? ”

“ஹா !! அதெல்லாம் ஒண்ணுமில்ல பாப்பா.. நேரமாச்சே இன்னும் சாப்பிடாம போகனுமான்னு தான்”

“நான் வீட்டுக்கு வராம என்னிக்கு சித்தி சித்தப்பா எல்லாம் சாப்பிட்டு இருக்காங்க..”

அவளை பொருத்தமட்டில் அவளது சித்தப்பா – வேத மூர்த்தி, சித்தி – தேன்மொழி தான் உலகமே.. அன்னை தந்தையை இழந்தவளை பாராட்டி சீராட்டி வளர்த்து இத்தனை பெரிய ஆளாய் ஆக்கியதன் பெருமை அனைத்தும் அவர்களையே சேரும்.. ஆகையால் யசோதரா பெற்றவர்கள் இருந்தால் கூட இத்தனை மகிழ்வாய் இருந்திருப்பாளா என்று தெரியாது..

முருகனுக்கு பதில் உரைதவள் எதோ நியாபகம் வர வேகமாய் தன் உடன் பிறந்த தங்கை, வசுந்தராவிற்கு அழைத்தாள்..

“ஹேய் வசு, ரீச்ட் மா.. நீ நாளைக்கு கிளம்பி வர தானே??”

“ஹாஸ்டல் போர்மாலிட்டிஸ் எல்லாம் சித்தப்பா பாத்துப்பார்”

மேலும் சில நொடிகள் தங்கையோடு பேசி வைத்தவளுக்கு, விசாகனின் நினைவு வந்தது…

“இன்னிக்கு தானே பேசுறதா சொன்னாங்க.. பேசியிருப்பாங்களோ?? சித்தப்பா கேட்டா நான் என்ன சொல்லட்டும் ” என்று யோசித்தவள் பின் தன்னையே உலுக்கிக்கொண்டாள்..

“எனக்கும் இதுக்கும் என்ன இருக்கு, விசாகன் என்கிட்டே பேசினதை வீட்டில் பேச சொன்னேன் அவ்வளோதான்.. இதுக்கு ஏன் இவ்வளோ டென்சன் ஆகணும்??” என்று எண்ணியவளுக்கு தன்னையும் அறியாமல் ஒருவாரம் முன்னே நடந்தது நினைவு வந்தது..   

மூர்த்தி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ், அன்றைய நாளின் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. இணை இயக்குனர் என்ற பலகையை தாங்கி இருந்த யசோதராவின் அறையில் அவளுக்கு நேர் எதிரே கறுப்பு கூலர் அணிந்து, வெள்ளை சட்டையை கருப்பு பேண்டில் டக்கின் செய்து பார்த்ததுமே வக்கீல் என்று சொல்ல தோன்றும் படி அமர்ந்திருந்தான் கௌதமன்..  

“எத்தனை தரம் சொல்லட்டும் கெளதம், இப்படி என் முன்னாடி கூலர் போடாதிங்கன்னு, ஐ கான்ட் ரீட் யூ” என்றால் மெல்ல சிரித்தும் சலித்தும் யசோதரா..

“கிளைன்ட் வக்கீலை ரீட் பண்ண தேவையில்லை” என்று தோளை குலுக்கினான் அவன்..

அவனை ஒரு பார்வை பார்த்தவள் பிறகு கையில் இருந்த கோப்புகளை பார்க்க தொடங்கிவிட்டாள்.. அவள் அனைத்தையும் படித்து முடிக்கும் வரை காத்திருந்தவன்

“இஸ் எவரிதிங் கிளியர் ??” என்று வினவ அவளும் ஆமோதிப்பாய் தலையசைத்து கையெழுத்து போட்டாள்..

சரியாய் அவள் கையெழுத்து போட்டு முடிக்கும் நேரம் விசாகன் அறைக்குள் நுழைந்தான்.. விசாகன், யசோதராவின் தந்தை சத்திய மூர்த்தியின் தங்கை மகன்.. அதாவது அத்தையின் மகன்..

வந்தவன் கெளதமனை எதிர்பார்க்கவில்லை போலும், தயங்கி நிற்க, கெளதமனும் கிளம்ப எழுந்தான்..

“ப்ளீஸ் பீ சீடட் கௌதம்” என்று அவனுக்கு உரைத்துவிட்டு விசாகனையும் அமர கூறினாள்..

“என்ன விஷயம் விசுத்தான்.. ??”

“கொஞ்சம் உன்கிட்ட தனியா பேசணும் யசோ.” என்று தயங்கியபடி கௌதமன் முகம் பார்க்க அவனும் புரிந்துக்கொண்டு கிளம்பினான். ஏனோ யசோதராவிற்கு கௌதமன் முகத்தில் ஏளனமாய் ஒரு புன்னகை வந்ததோ என்று தோன்றியது..

“யசோ…” 

“ஹா !!! சொல்லுங்க விசுத்தான்..”

“நான் கிட்டத்தட்ட உன்கிட்ட ரெண்டு வருசமா ஒரு விஷயம் கேட்டிட்டு இருக்கேன்.. நீ பதிலே சொல்லாம இருந்தா எப்படி யசோ.???”

“நான் தான் பதில் சொன்னேனே.. ”

“என்ன சொன்ன , சித்தப்பா கிட்ட பேசுங்க… இந்த பதில் எனக்கு வேண்டாம்.. உன் மனசில என்ன இருக்குன்னு சொல்லு யசோ”

“ஊப்ஸ்…!!!!எத்தனை தரம் சொல்லட்டும் விசுத்தான்… என் மனசில எதுவுமே இல்லை.. இட்ஸ் கிரிஸ்டல் கிளியர்… உங்களுக்கு விருப்பம்னா வீட்டில் பேசுங்க அவ்வளோதான்.. சித்தப்பாவோட முடிவு தான் எதுவா இருந்தாலும். கே எனக்கு ரௌண்ட்ஸ் நேரம் ஆச்சு.. கிளம்புங்க” என்று அவளும் எழ

“ஹ்ம்ம் இது தான் உன் முடிவுன்னா, சரி கேட்டுக்கோ சித்தாரா பர்த்டேக்கு அம்மா அப்பா எல்லாம் வருவாங்க, அப்போ எல்லார் முன்னாடியும் வச்சு பேசுறேன். சரியா” என்றபடி அவளோடு நடந்தான்

அவனை ஒரு பார்வை பார்த்தவள் “குட் லக் ” என்றுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்..

விசாகன் நல்லவன் தான், அழகன் தான் ஆனால் கொஞ்சம் சாது.. ஏனோ காதல் வந்ததும் சற்றே வீரனாய் மாறியது போல் தோன்றியது யசோதராவிற்கு..

“பார்ப்போம் என்னதான் செய்கிறான்” என்று எண்ணியவளுக்கு செய்திருப்பானோ என்று எண்ணம் எழ, ஒருவழியாய் வீடும் வந்து சேர்ந்தது..

பெரும் விருந்து நடந்து முடிந்ததற்கான அனைத்து சாராம்சங்களையும் சூடியிருந்தது அவ்வீடு.. கார் சத்தம் கேட்டதுமே தேன்மொழி வாசலுக்கு வந்துவிட்டார்.. பெறாத மகள் மீது அத்தனை பாசம்.. அவளுக்குமே அப்படி தானே..

 “சித்தி ” என்று கட்டிக்கொண்டாள்..

அடுத்தநொடி “யசோம்மா” என்று வேத மூர்த்தி வர, “அக்கா” என்றபடி சித்தாராவும் வந்தாள்..

“ஹேய் பர்த்டே பேபி.. மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ்” என்றவள் தமக்கையை கட்டிக்கொண்டாள்..

“அடடா போதும் கொஞ்சல் எல்லாம் வந்தவளை முதல்ல உள்ள விடுங்க” எனவும் தாங்கி வந்த பரிசை எடுத்து கொடுத்தபடி உள்ளே சென்றாள் யசோதரா..

யசோதராவின் நிமிர்வு, ஆளுமையும் பிறரை கவரும் என்றால், சித்தாராவின் குழைவும் மென்மையும் பிறரை வசீகரிக்கும்..

“என்ன சித்து உன் முகமே டால் அடிக்குதே.. என்ன விஷயம் ?? ” என்று கேட்ட யசோவின் பார்வை வீட்டை ஒருமுறை சுற்றி வந்தது..

மூத்தவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்முன்னே தடுமாறித்தான் போனாள் சித்தாரா..

“என்னாச்சு இவளுக்கு??” என்ற யோசனையோடு பார்வையை வீசியவளுக்கு, சித்தியும் சித்தப்பாவுமே அத்தனை நேரம் இருந்த இலகு மாறி ஏதோ போல் இருந்தனர்..

“சித்தப்பா.. எதுவும் பிரச்னையா ???”

எதோ பதில் கூற வந்தவர், நொடியில் நிதானித்து “அட, அதெல்லாம் இல்லை மா.. நீ போன வேலை என்னாச்சு, இந்த டீலிங் நமக்கு முடியும் தானே ??”

“கண்டிப்பா இந்த டீலிங் நமக்கு தான் சித்தப்பா.. அதுக்கா இவ்வளோ டென்சனா இருந்திங்க?”

“சரி சரி அவ சாப்பிடட்டும்..” என்று தேன்மொழி தட்டு வைக்க, மனதிற்குள் ஏனோ ஒரு நெருடல் தோன்றியது யசோவிற்கு..

“நீங்க எல்லாம் சாப்பிடலையா சித்தி… ”

“நாங்க எல்லாம் விருந்தப்போவே சாப்பிட்டோம் கா.. எல்லாரும் இருக்கும் போது நாங்க மட்டும் எப்படி சாப்பிடாம இருக்கிறது ” என்ற சித்தாராவின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு ஜொலிப்பு..

இது பிறந்தநாள் என்பதனால் மட்டும் அல்ல என்று நன்றாகவே புரிந்துபோனது எதிரில் இருந்தவளுக்கு.. சரி எதுவாக இருந்தாலும் தானாய் வெளியே வரட்டும் என நினைத்தவளுக்கு விசாகனின் நினைவு வர “இவன் என்ன கிளறி வைத்திருக்கிறானோ ” என்றே தோன்றியது..

“சித்தி எங்க அத்தை மாமா எல்லாம் காணோம்…. ”

“இவ்வளோ நேரம் இங்கதான் இருந்தாங்க டா, இப்போதான் அவங்க வீட்டுக்கு போனாங்க.. நாளைக்கு விடிய எல்லாம் வருவாங்க. நீ முதல்ல சாப்பிட்டு தூங்கு.. காலை கொஞ்சம் வேகமா எழனும்..”

“ஏன் சித்தி ???”

“சொன்னா கேட்கணும் காரணம் எல்லாம் சொல்ல முடியாது.”

“சரி சரி, வா சித்து உன்கிட்ட நிறைய பேசணும், பேசிட்டே தூங்கலாம்.”

“ஹா !! இல்லைக்கா நீ நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு.. நான் நான் அம்மாக்கூட இதை எல்லாம் எடுத்து வைக்கிறேன்”

என்னவாகிற்று இவளுக்கு என்று பார்த்துக்கொண்டே தன் அறைக்கு படி ஏறினாள் யசோதரா.. முகம் கழுவி உடை மாற்றி கட்டிலில் விழுந்தவளுக்கு அப்பாடி என்றிருந்தது..

ஆனாலும் மனதில் ஏதோ ஒரு குழப்பம் சூழ்வதை தவிர்க்க முடியவில்லை.. அனைவரும் சேர்ந்து எதுவோ மறைப்பது போலவே தோன்றியது.. அடுத்த நொடி தன்னையே கொட்டிக்கொண்டாள் யசோதரா.. பெற்ற மகளை விட சீராட்டும் தாய் தந்தை, உடன் பிறந்தவளை விட அதிக நெருக்கம் காட்டும் சித்தாரா.. இப்படியான தன் நினைவுகளில் மூழ்கியவளை அலைபேசியின் வாட்ஸப் ஒலி அழைத்தது.

எடுத்து பார்த்தால் கௌதமன் தான்.. இந்நேரத்திலா??? என்ற எண்ணத்தை தள்ளிவைத்து படித்தாள்..

“எவரிதிங் ஓகே??? ” என்ற கேள்வியை படிக்கவும் யசோதரா குழம்பித்தான் போனாள்..

“வாட் ஹேப்பன் ??” என்று பதில் அனுப்பியவள் அவன் பதிலுக்காய் காத்திருந்த சில நொடிகளில் முகம் வேர்த்து தான் போனது..

“நத்திங்.. ஐம் அஸ்கிங் அபௌட் யுவர் ட்ரிப் ” என்று பதில் வர..

“ஊப்ஸ்…. இவ்வளோ தானா” என ஆழ மூச்செடுத்து விட்டு “எஸ்..” என்றுமட்டும் அனுப்ப.. பதிலுக்கு அங்கிருந்து எதுவும் வரவில்லை…

“ஹ்ம்ம் இதுக்கு இவன் ஏன்னு கேட்காமலே இருந்திருக்கலாம்..கொஞ்ச நேரத்தில் என்னவோ ஏதோன்னு நினைக்க வச்சிட்டான்.. தொழில்ல பிரச்சனைன்னா பார்த்துடலாம் ஆனா குடும்பத்தில் பிரச்சனைன்னா… கடவுளே என் குடும்பம் எப்பொழுதும் போல இதே ஒற்றுமையோட நிம்மதியா சந்தோசமா இருக்கணும்    ”  என்று கெளதமனில் ஆரம்பித்து கடவுளிடம் வந்து முடித்தாள்.

விடியல் தான் எத்தனை அழகு… ஆதவனின் அத்தனை கரங்களும் செம்மையை  பூசிக்கொள்ள மேகங்கள் எல்லாம் பொன்னொளி வீசியது.. இக்காட்சி எப்பொழுதுமே யசோதராவிற்கு பிடிக்கும்.. கையில் காப்பி கோப்பையோடு பால்கனியில் நின்றாள் இந்த காலை பொழுதில் மட்டும் நேரம் போவது தெரியாது..

இவள் இப்படி ரசித்துகொண்டிருக்க, இதே சென்னை மாநகரின் மற்றொரு புறம், கௌதமன் தன் இல்லத்தில் மிக மும்முரமாய் செய்தி தாள் வாசித்துகொண்டிருந்தான்.. விடியல் ஆறு மணிக்கு ஆரம்பித்தால் சுமார் ஒரு மணி நேரம் செய்தி தாள்களில் மூழ்கிவிடுவான்.. 

“கெளதம், இன்னிக்கு கூட ஏன் டா இப்படி அலம்பல் பண்ற.. கிளம்பு வந்து கூட படிக்கலாம்” என்று பத்தாவது முறையாய் பல்லவி பாடிவிட்டார் அவனின் அன்னை அம்பிகா..

“ஹூப்!!!! மா உங்களுக்கு போகணும்னா நீங்க போங்க.. அந்த பேமிலி டிராமா எல்லாம் என்னால பார்க்க முடியாது..”

“அந்த பேமிலிக்கு தான் டா நீ உங்க அப்பா எல்லாம் லாயரா இருக்கீங்க.”

“அட அம்மா… ஏதோ அப்பா அவர் பிரன்டுன்னு பண்ணிட்டு இருந்தார், அவர் விட்டு போனதை அப்பாகாக நான் பண்றேன் தட்ஸ் ஆல்… மத்தபடி என் ஒன் ஹவர் சாலரி என்ன தெரியும் தானே உங்களுக்கு..”

“டேய் நீ கோடி கோடியா சம்பாரிச்சாலும், சொல் பேச்சு கேட்டா தான் எனக்கு பெருமை” என்று வக்கீலுக்கே வாய்ப்பூட்டு போட்ட அன்னையை பார்த்து சிரித்தபடி குளிக்க சென்றான் கௌதமன்..

சித்தாரா எப்பொழுதுமே கண்ணனுக்கு உறுத்தாத ஒப்பனையில் தான் இருப்பாள், ஆனால் இன்றோ சற்றே கூடுதலாய் தெரிந்தது யசோதராவிற்கு.. தங்கையின் மீது பார்வை பதித்தபடி சித்தியிடம்

“என்ன சித்தி நம்ம சித்துவோட அழகு கூடிட்டே போகுது.. என்ன விசேசம்.” என்று வினவினாள்..

“அது டா… நேத்தே சொல்லனும்னு தான் இருந்தோம். ஆனா நீ அலுப்பா இருந்த.. இன்னிக்கு நம்ம சித்துக்கு பரிசம் போடா வராங்க.” என்று சிரித்தபடி கூறியவரை விழிகள் விரித்து பார்த்தாள் யசோ..

முற்றிலும் புது செய்தி.. மகிழ்ச்சியான செய்தி தான் ஆனால் இதை தன்னிடம் கடைசி நேரத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ??? மனதில் எழுந்த கேள்வியை ஒதுக்கி

“அட அப்படியா சித்தி.. என்கிட்டே சொல்லவே இல்லை.. யார் மாப்பிள்ளை??? சித்துக்கு பிடிச்சிருக்கா” என்று இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து வினவ

“மாப்பிள்ளை சித்துவோட சாய்ஸ் தான் யசோ… அவளுக்கு ரொம்ப பிடிச்சதுனால தான் இந்த வேகம் கல்யாணத்துல.”

“அட… சித்து சரியான கள்ளி டி நீ… ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லவே இல்லை பார்த்தியா.. யார் அந்த லக்கி பெர்சன்??” என்ற கேட்ட நொடி வரிசையாய் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க தேன்மொழி வந்தவர்களை வரவேற்க சென்றார்..

யசோதராவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது… சித்தாரா அவளை விட இரண்டு வயது இளையவள், ஆனாலும் அவளுக்கு காதல் வந்து அதை வீட்டில் சொல்லி இதோ திருமணம் வரைக்கும் வந்துவிட்டது யப்பா எத்தனை தைரியம் இவளிடம் என்று எண்ணியவள் அப்படியே விசாகனையும் எண்ணினாள்.

இரண்டு வருடமாய் காதலிக்கிறேன் என்று அழைகிறான், அத்தை மகன் தான் பிரச்சனை எதுவும் இருக்காது தான் ஆனால் எதோ அவளுக்கு இந்த நொடி வரை சரி என்று கூற முடியவில்லை.. மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றி இருந்தால் இந்நேரம் அவர்களது திருமணமும் முடிந்து இருக்கும்..

பார்போம் எப்படியும் இன்று வருவான் தானே என்னதான் செய்கிறான் என்று பார்போம் என்று நினைத்தபடியே அமர்ந்திருந்தாள்..

கீழே பேச்சு குரல் கேட்க, தனியாய் சற்றே ஆளுமையாய் ஒரு குரல் கேட்கவும், கெளதமன வீட்டிற்கும் அழைப்பு விடுதாகியுள்ளதா என்று எண்ணியவளுக்கு தனக்கு மட்டும் ஏன் கடைசி நேரத்தில் கூறவேண்டும் அதுவும் இந்த வீட்டில் இருப்பவளுக்கே, அப்படி என்ன ரகசியம் என்ற கேள்வி எழ மீண்டும் மனதில் ஒரு பாரம்..

“அக்கா என் மேல எதுவும் கோவமா ??? உன்கிட்ட சொல்லகூடாதுன்னு எல்லாம் இல்லைகா” என்று கைகளை பற்றினால் சித்தாரா..

“ஹேய் சித்து… இதுல கோவ பட என்ன இருக்கு ?? அதெல்லாம் எதுவும் இல்லை.”

“அது நேத்து பார்ட்டிக்கு எல்லாம் வந்தபோது, அத்தை, அதான் அவர் அம்மா தான் நாளைக்கே பரிசம் போட வரோம்னு சொல்லிட்டாங்க க்கா.. அதான்… சாரிக்கா ”

“அடடா கல்யாண பொண்ணே, இதில் சாரி கேட்க என்ன இருக்கு.. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கு.. பி ஹேப்பி மா”

“தேங்க்ஸ் கா… எங்க நீயும் என்மேல கோவப்படுவியோன்னு பயந்துட்டேன்..”

“நீயும்னா.. வேற யார் சித்து உன்மேல கோவபட்டது???”

“அது………… ”

சரியாய் அதே நேரம் வேத மூர்த்தி “யசோம்மா” என்றபடி அறைக்குள் நுழைந்தார்..

“என்ன சித்தப்பா… ”

“இப்போதான் போன் வந்தது டா, நம்ம புனே கிளைன்ட்ஸ் வந்துட்டாங்களாம். அவளை ரிசீவ் பண்ணி நம்ம ரிசார்ட்ல தங்க வைக்கணும்.”

“ஓ !!சரி சித்தப்பா நான் மேனேஜற்கு சொல்லிடுறேன்.”

“இல்ல யசோம்மா, ஒண்ணு நான் போகணும் இல்லை நீ போகணும், இப்போ இருக்க சூழ்நிலை நான் போக முடியாதே மா.. அதான்”

“அவ்வளோ தானே சித்தப்பா, கவலையே படாதிங்க.. இப்போ என்ன நான் போயிட்டு வரேன்”

“அதுக்கில்லடா, வீட்டுல விசேசம் நடக்குது இந்நேரம் உன்னை அனுப்பவும் சங்கடமா இருக்கு.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தப்பா, சீக்கிரம் வந்துட்டா ஆச்சு.. நீங்க இங்க இருக்கிறது தான் முக்கியம்.. நான் பார்த்துக்கிறேன்” என்று கிளம்பி கீழே வந்தவளை கௌதமனின் பார்வை எடை போட்டது..

அவனை கண்டுகொள்ளாது அவன் அன்னையிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு கிளம்பினாள்..

கௌதமனை இன்று நேற்று அல்ல சிறு வயதில் இருந்தே தெரியும்.. எப்பொழுதும் கண்ணில் ஒரு ஆராய்ச்சி பார்வை, போதாத குறைக்கு இதை அப்படி செய் இப்படி செய் என்ற அறிவுரை வேறு வரும் என்பதால் முடிந்த அளவு அவனிடம் இருந்து தள்ளியே நிற்பாள்..

ஆனாலும் தொழிலில் நுழைந்த பிறகு அவனிடம் இருந்து அத்தனை விலக முடியவில்லை.. வேதமூர்த்தியே அவனை அத்தனை நம்பும் பொழுது இவள் என்ன சொல்ல முடியும்..

“பார்த்தான் பார் ஒரு பார்வை எப்போவும் இதே தான்.. இவனெல்லாம் வக்கீலுக்கு படிக்கலைன்னு யார் அழுதா..” என்று எண்ணியபடியே விமான நிலையம் சென்று வந்திருந்தவர்களை உரிய முறையில் வரவேற்று, ரிசார்ட்டிலும் தங்க வைத்தவளுக்கு உள்ளே எதுவோ உறுத்திக்கொண்டே இருந்தது..

ஆனாலும் முகத்தில் அதை காட்டாது அவர்களோடு பேசியபடி அமர்ந்திருந்தாள், அந்த புனே கிளைன்டின் அன்னை தமிழர்… மகன் தமிழகம் செல்ல கிளம்பவும் அவரும் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டார்.. ஆனால் அந்த அம்மையார் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..

“ஏம்மா யசோதரா, உன் சித்தப்பா சித்தி எல்லாம் நல்லா இருக்காங்களா?? அவங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.”

“எல்லாருமே நல்லாருக்காங்க மா… வீட்டில் விசேசம், இல்லைனா சித்தப்பா வந்திருப்பார்.”

“அப்படியா என்ன விசேசம்?? விசேசம் வச்சுகிட்டா நீ வரணும்.. என்ன பொண்ணு நீ.”

“இல்ல தங்கசிக்கு இன்னிக்கு பரிசம் போட வராங்க அதான் சித்தப்பா வர முடியலை. சாயந்திரம் வந்து உங்களை பார்ப்பார்.”

“தங்கச்சின்னா??”

“சித்தப்பா பொண்ணு சித்தாரா”

“அட இதென்ன வயசுல மூத்தவ நீ இருக்கும் போது, இப்போ என்ன அவளுக்கு அவசரம்.. முதல்ல உனக்கு தானே செய்யணும்..”

நியாயமான கேள்வி தான்… ஆனால் இதற்கு யசோதரா என்ன பதில் கூற முடியும்.. அவர் கேட்ட பிறகு தான் அவளுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே மண்டையில் உரைத்தது..

“என்ன பொண்ணு, அமைதியா இருக்க?? வரட்டும் வேதா, நான் பேசுறேன்.”

“ஐயோ அதெல்லாம் வேண்டாம் மா.. அது மாப்பிள்ள வீட்டுல பிடிச்சு போய் அதான்.. இதுல என்ன இருக்குமா…”

“ஓ !! அப்படியா… அதுவும் சரி தான் எல்லாமே சரியான நேரத்துல நடக்கணும். ஆமா மாப்பிள்ள எந்த பக்கம்?? சொந்தமா ?? இல்லை அந்நியமா  ??”

முதல் கேள்விக்கு கூட பதில் கூறிவிட்டாள், கடைசியாய் கேட்டதற்கு என்ன கூற முடியும் அதுவும் அவளுக்கே ஒன்றும் தெரியாத பொழுது… திணறித்தான் போனாள்.. அலுவலகத்தில் கண் பார்வையில் அனைவரையும் கட்டி ஆள்பவளுக்கு இப்பொழுது மூச்சு முட்டுவது போல இருந்தது..

“என்னம்மா இப்படி முழிக்கிற ?? சரிதான் போ.. நீ முழிக்கிறதை பார்த்தா உனக்கு ஒண்ணுமே தெரியாது போலவே.” என்று நொடிக்கவும் இதற்குமேல் தான் இங்கு இருக்க கூடாது என்று முடிவு செய்து கிளம்பிவிட்டாள் யசோதரா..

சரியாய் தேன்மொழியிடம் இருந்து அழைப்பு வந்தது…

“யசோம்மா…. ”

“இதோ கிளம்பிட்டேன் சித்தி…  ”

“ஒன்னும் அவசரமில்ல டா, வர வழியில” என்று ஆரம்பித்து அவளுக்கு மற்றுமொரு வேலை கொடுத்து வைத்துவிட்டார்..

நடப்பது எல்லாமே சரியாய் நடப்பது போல தோன்றினாலும், எதுவோ ஒன்று முரணாய் பட்டது அவளுக்கு.. வேண்டிக்கொண்டாள், நான் நினைப்பது தவறாய் போனாலும் சரி, நடப்பது அத்தனையும் நல்லதாய் நடக்கவேண்டும் என்று…      

 

Advertisement