Advertisement

பந்தம்  – 9

“உம்ஸ்….. என்ன தான் டி பண்ற….” என்று கண்களை திறக்காமல் கட்டிலில் இருந்தபடி கத்தியவனுக்கு, அவளிடம் இருந்து பதிலே இல்லை.

“உம்ஸ்….” என்று மீண்டும் கத்தினான். இப்பொழுது அமைதி மட்டும் தான் பதிலாய் வந்தது.

கண்களை மெல்ல கசக்கி விட்டு, திறந்து பார்த்தவனின் விழிகள் தங்களின்  அறையை அலச, உமா அங்கிருப்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லை.

“அதுக்குள்ள கீழ போயிட்டாளா.. எத்தனை டைம் சொல்லிருக்கேன். நான் முழிக்கும் போது என் கண்ணு முன்னாடி இரு பேபின்னு.. கொஞ்சம் கூட என் பேச்சு கேக்குறதில்லை..” என்று முனங்கியபடி மீண்டும் கண்களை மூடிக்கொண்டு,

“உம்ஸ்….” என்று கத்தினான்.    

அவளோ கீழே தன் மாமியாரோடு சேர்ந்து வேலையாய் இருக்க,

“உமா.. அவன் கத்த ஆரம்பிச்சுட்டான்.. போ மா..” என்று அவர் சொல்ல,

“இருக்கட்டும் அத்தை…” என்றவளுக்கு மனமோ காதல் வானில் சிறகடித்து பறந்தது.

நேற்று தான் தேன் நிலவு முடிந்து திரும்பியிருந்தனர். வந்த மறுநாளே ஆரம்பித்துவிட்டான். 

அதற்கு முன்னேயும் இது அடிக்கடி நடக்கும் ஒன்று  தான். இரவு தூங்கும் போதும் சரி, காலை விழிக்கும் போதும் சரி அவன் கண் முன்னே அவள் இருந்திட வேண்டும்.

வேண்டாம் வேண்டாம் என்று அவள் சிணுங்க சிணுங்க அவனிடும் காலை முத்தம் அவளுக்கும் பிடிக்கும்,  அவனுக்கோ கொடுத்தே ஆகவேண்டும்.

எப்படியும் இப்படிதான் கத்துவான் என்று தெரியும். ஆனாலும் இவளும் அவ்வபோது விளையாடி பார்ப்பாள். சிறிது நேரம் கண்ணாமூச்சி ஆடி விட்டு மேலே செல்வாள். அவனோ இவளை கண்டுகொள்ளாது படுத்திருக்க,

“ஏன் தான் என்னை ஏலம் போடுறீங்க.. அத்தை தினமும் கிண்டல் பண்றாங்க…” என்று வேண்டுமென்றே சலித்தபடி அவனருகே அமர,

அவனும் இது தான் சமயம் என்று அவளை இறுக்கி அணைத்துக் கொள்வான்.  அவனிடம் இருந்து விலகுவதே உமாவிற்கு காலை நேரத்தில் அத்தனை சிரமமாய் இருக்கும்.

அதுவும் விடுமுறை நாளென்றால் கேட்கவே வேண்டாம்.

“ரொம்ப பண்றீங்க…” என்று சலித்தாலும், மனதிற்குள் இவளுக்கும் சந்தோசமாய் இருக்கும்.   

அது போலதான் இன்றும், கண் விழித்தும் அவள் இல்லையென்றதும் ‘உம்ஸ்…’ என்று கூப்பாடு போட, இவளோ கீழே இருந்தாள்.

மீண்டும் மீண்டும் ஏலம் போட, “இதோ வர்றேன்…” என்று சிரித்தபடி சென்ற மருமகளை பார்த்து தானும் சிரித்துக்கொண்டார் கோடீஸ்வரனின் அம்மா.        

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்பது போல இவர்களது காதலும் கூட சொர்க்கத்தில் தான் நிச்சயிக்க பட்டதோ என்னவோ என்று தோன்றும் உமாவிற்கு.

காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது சுகம் தானே. கோடீஸ்வரன் காதலில் உமா திக்குமுக்கடித்தான் போனாள். அதுபோல தான் அவனும். உமாவின் காதலில் தன்னை தானே மூழ்கடித்துக்கொண்டான் 

ஓரளவு இருவருமே இது தான் இன்னது தான் என்று பேசி சமாதான நிலைக்கு வந்தபிறகு, கோடீஸ்வரன் சிறிது கூட தாமதிக்காது, இரு வீட்டினரிடமும் அடுத்து பேச, அவர்களோ அடுத்து கல்யாணம் என்று பேசினர்.  

உமா கூட சொன்னாள் தான், ‘இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணலாமே..’ என்று,

ஆனால் அவனோ அதெல்லாம் கேட்கவில்லை.

“நோ பேபி… இனியும் லேட் பண்ணா நம்ம பேரன்ட்ஸ் நம்மளை போட்டு படுத்திடுவாங்க… சோ கல்யாணம் பண்ணிட்டு காதலிப்போம்…” என்று சொல்லிவிட,

அவளுக்கும் அதை தவிர வேறு வழியில்லை.

ஏற்கனவே சுசி விசயத்தில் அவளின் அம்மா இன்னமும் அவ்வபோது திட்டிக்கொண்டிருக்க, தானும் காதலிக்கிறேன் என்று சுற்றினால், அதுவும் அவர்களுக்கு தெரிந்த பின்னே இப்படியெல்லாம் இருந்தால் அவ்வளவு தான் என்று தோன்ற, கோடீஸ்வரன் திருமணத்திற்கு பின் காதலிப்போம் என்று சொன்னதற்கும் மனதார சரி சொன்னாள்.

ஏற்கனவே பேசி வைத்திருந்தது போல் சுசி – கிஷோர் திருமணத்திற்கு வரும் அடுத்த முஹூர்த்ததில் திருமணம் என்று இவர்களுக்கும் முடிவு செய்ய,

கோடீஸ்வரன் தன் வீட்டில் வந்து சண்டை வேறு போட்டான்.

“ஏன் ஒரே முகஹூர்தத்துல கல்யாணம் வச்சா என்னவாம்.. எப்படியும் ரெண்டு பக்கமும் ஒரே ஆளுங்க தானே வருவாங்க… அதென்ன அடுத்த முஹூர்த்தம்…” என்று முகத்தை தூக்க,

“டேய் ரெண்டு கல்யாணம் ஒரே நேரத்துல செய்றது நம்ம பழக்கம் இல்லைடா…” என்று அவன் அப்பா சொல்ல,

“சரி அதே நாள்ல அடுத்து ஒரு நல்ல நேரம் வருதுல அதுல வைங்க…” என்று கோடீஸ்வரன் பிடிவாதம் செய்ய,

அவனிடம் பேசி பேசி பார்த்த அவன் பெற்றோருக்கு முழி பிதுங்கியது தான் மிச்சம். பொறுத்து பொறுத்து பார்த்த அவனின் அம்மா, உமாவிற்கு அழைத்து இவனை சொல்லிவிட,

அவளுக்கோ, “இப்படி மானத்தை வாங்குகிறானே…” என்று தோன்றினாலும், சிரிப்பாகவும் இருந்தது.

அடுத்து சில நேரத்திலேயே அவள் கோடீஸ்வரனுக்கு அழைக்க, “என்ன பேபி…” என்றான் ஹாயாக.

“வீட்ல என்ன சண்டை…??” என்று அவள் விசாரிக்க,

“அதுக்குள்ள இங்க இருந்து கம்ப்ளைன்ட் வந்திடுச்சா. நான் பாரு நம்ம கல்யாணத்துக்காக எவ்வளோ போராடுறேன்.. நீ ஏன் உம்ஸ் இப்படி இருக்க. டேட் பிக்ஸ் பண்ணப்போ நீயேன் இதெல்லாம் சொல்லலை…” என்று அவளிடமும் குறை பட்டுக்கொண்டான்.

அவன் பேசுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவள், இறுதியில்,

“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை.. எல்லாமே சுமுகமா போகுதேன்னு சந்தோசமா இருக்கிறதை விட்டு.. இப்போ ஏன் அங்க சத்தம் போட்டுட்டு இருக்கீங்க.. ” என்று குரலை உயர்த்த,

“அதான் உம்ஸ் என் பிரச்சனையே. எல்லாமே சுமுகமா போகுதே.. எல்லார் லவ்வும் இப்படியா டியர் போகுது.. எத்தனை பிரச்சனைகளை தாண்டி கல்யாணம் பண்றாங்க..

நமக்கு எங்க அந்த கொடுப்பினை.. உன்னை கஷ்டப்பட்டு சரி சொல்ல   வைக்கணுமோன்னு பார்த்தா நீ ஆல்ரெடி என் மேல லவ்ல இருந்த, சரி எங்க வீட்ல இல்லை உங்க வீட்ல யார் வீட்லையாவது நோ சொல்வாங்க பார்த்தா அவங்களும் சொல்லாம இப்படி எல்லாத்தையுமே ஈஸியா பண்ணா என்ன செய்றது.. அதான்…” என்று அவன் பேசுவதை கேட்க அவளுக்கு சிரிப்பாய் தான் வந்தது.

எப்பொழுதுமே இப்படித்தான். எத்தனை கடினமான சூழ்நிலை என்றாலும் நொடியில் சிரித்து பேசி சமாளித்துவிடுவான். ஆனால் அவனது இந்த சேட்டை பேச்சுகள் எல்லாம் அவன் அம்மாவிடமும்,அவளிடமும் தான்.

அதை அவளும் உணர்ந்தே இருந்தாள்.

ஆகையால் அவளும் அவ்வபோது அவனுடன் விளையாடி பார்ப்பாள். இப்பொழுதும் அதுவே தோன்ற,

“இப்போ என்ன உங்களுக்கு ஏதாவது பிரச்சனை நடக்கணும்.. நீங்க போராடி என்னை கல்யாணம் செய்யணும்.. அதானே…” என்று நக்கலாய் கேட்க,

“எஸ் டியர்…” என்றான் வெகு வேகமாய்.

“ஹா.. ஹா.. சரி.. என்னை மறுபடி முதல்ல இருந்து ப்ரொபோஸ் பண்ணி லவ் பண்ண ஆரம்பிங்க, சுசி மேரேஜ்ல இருந்து. எப்படியும் இப்போ நடந்த எல்லாம் அடுத்து இன்னும் பெருசா நடக்கும். வருசமும் அடுத்து ஒன்னு  ஓடிரும் தானே.. சோ நீங்க எதிர்பார்த்த எல்லாம் நடக்கும் சரியா.. ” என்று சீரியசாய் சொல்ல,

“டி உம்ஸ்.. உன்னை என்னவோன்னு நினைச்சேன்.. ஆனா லாஸ்ட்ல இப்படி மெயின் மேட்டர்லையே கை வைக்கிறியேம்மா… வேணாம் தாயே.. குறிச்ச டேட்ல கல்யாணம் நடக்கட்டும்… ” என்று வெற்றிகரமாய் பின் வாங்கினான்.  

“ஹா ஹா.. வெரி குட்… அப்படி வாங்க வழிக்கு..” என்று மேலும் சில நேரம் பேசிவிட்டு போனை வைத்தவளை, சுசி அழைத்தாள்.

அடிக்கடி சுசி அவளை திட்டுவது ஒன்றே ஒன்றிற்கு தான்..                                    

“டி… மகி.. இவ்வளோ நடந்திருக்கு.. ஆனா எதுவுமே என்கிட்டே சொல்லவேயில்லை பார்த்தியா.. ” என்று அடிக்கடி கேட்பாள். 

ஆனால் அதற்கு ஒரு சிரிப்பை மட்டுமே உமா பதிலாய் தருவாளே தவிர, வேறெதுவும் சொல்லவில்லை. கோடீஸ்வரனை விட்டுக்கொடுக்க மனமில்லை.

இப்படி நாட்கள் செல்ல, சுசி – கிஷோர் திருமணம் மிக விமரிசையாக நடந்து முடிந்தது.

அடுத்த ஜோடி இவர்கள் தான் என்று எல்லாருக்கும் சொல்லாமலே புரிந்தது, அந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு. கோடீஸ்வரன் இவளை விட்டு ஒரு அடி கூட நகரவே இல்லை.

“எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க…” என்று உமா பல்லை கடிக்க,

“பார்த்தா பார்க்கட்டும்…” என்று இவனும் அவளும் ஜோடியாகத்தான் சுற்றிக்கொண்டிருந்தனர்.  

ஒருவழியாய் அனைத்தும் முடிந்து, கோடீஸ்வரன் குடும்பம் சென்னை கிளம்ப, தன்னோடே கிளம்பி வருமாறு உமாவை அழைத்தான்.

“ஷ்… இங்க நிறைய வேலை இருக்கு. அப்படியெல்லாம் கிளம்பி வர முடியாது…” என்று அவள் சொல்ல,  

“ம்ம்ம்… இப்படி என்னை மட்டும் அனுப்புறியே…” என்று அவன் சிணுங்க.

“அடடா… என்ன இது சின்ன புள்ள போல… நான் நெக்ஸ்ட் வீக் வந்திடுவேன்… அப்புறம் என்ன…??” என்று அவளும் சமாதானம் செய்ய,

“ஹ்ம்ம் சரி ஒரு கிஸ் மட்டும் குடுத்து…” என்று பிடிவாதமாய் நின்றான்.

“ஓய்.. என்ன இது.. வெளிய அத்தனை ஆளுங்க இருக்காங்க.. இப்போ வந்திட்டு இப்படி பண்றீங்க…” என்று நகர போனவளை,

பிடித்து இழுத்து நிறுத்தியவன், “ப்ளீஸ் உம்ஸ்…” என்றான்.

“ஹே..!!! என்னப்பா… யாராவது பார்த்தா அவ்வளோ தான்.. எதோ இப்போதான் அம்மா என்னை திட்டுறதை நிறுத்தி இருக்காங்க..”

“ப்ளீஸ்.. ப்ளீஸ்… ஒரே ஒரு கிஸ் பேபி…” என்றவன் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அவளிடம் ஒன்றல்ல பல முத்தங்களை கொடுத்ததும் வாங்கியும் தான் கிளம்பினான்.  

 

 

அடுத்த ஒரு வாரத்தில் உமா மீண்டும் சென்னை பயணமாக, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அவர்களுக்கு காதல்… காதல்.. காதல் மட்டும் தான்.

இன்னும் இவர்களது திருமணத்திற்கு ஒரு மாதமிருக்க, உமாவின் அம்மா அவளை ஊருக்கு வரச் சொல்லிவிட, கோடீஸ்வரனுக்கு தான் எப்படியோ போனது.

“என்ன உம்ஸ்… இப்படி டக்குனு கிளம்புற.. இப்போ தானே வந்த.. அதுக்குள்ள ஏன் கிளம்புற…??” என்று முகம் தொங்கப் போட்டவனை,

“நான் என்ன பண்ணட்டும்…?? நீங்க செஞ்ச வேலை தான்.. அன்னிக்கு அம்மா கால் பண்ணப்போ, நீங்களும் நானும் பீச்ல இருக்கோம்னு ஏன் சொன்னீங்க.. அதான்  நான் ரொம்ப செட்டை செய்றேன்னு என்னை வர சொல்லிட்டாங்க…” என்று குற்ற பத்திரிக்கை வாசிக்க,

“பீச்ல இருக்கோம் சொன்னது ஒரு குத்தமா பேபி…” என்றான்.

அவன் ஒன்றும் வேண்டுமென்றே எல்லாம் அப்படி சொல்லவில்லை. பீச்சில் காலை நீட்டி அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்க, அந்நேரம் பார்த்து சோன் பப்படி வண்டி வர,

“இருங்க வர்றேன்…” என்று தன் அலைபேசியை இவனிடம் திணித்துவிட்டு உமா சோன் பப்படி வாங்க சென்றிருந்தாள்.

அந்நேரம் பார்த்து சரியாய் உமாவின் அம்மா அழைக்க, இவனும் பட்டென்று எடுத்து பேசிவிட்டான். அதன் பிறகு உமாவிடம் சொல்ல,

“ஐயோ நீங்க ஏன் எடுத்தீங்க.. உங்க கூட வெளிய வர்றது எல்லாம் வீட்ல தெரியாது..” என்று பதற. பின்னே தான் யோசித்தான், எடுக்காமல் விட்டிருக்க வேண்டுமோ என்று.

“ஹி.. ஹி… கால் வரவும் டக்குனு எடுத்திட்டேன் உம்ஸ்… ” என்க..

“ம்ம் இனி அதுக்கும் எதுவா சொல்லுவாங்க..” என்று குறைபட்டாலும் அவளும் அதை ஒன்றும் பெரிதாய் எல்லாம் நினைக்கவில்லை. 

இப்படிதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வெளிய சுற்றுவது. சினிமா, பீச், ஷாப்பிங் என்று மகிழ்வாகவே இருக்க, என்னதான் திருமணம் நிச்சயம் ஆனாலும் இதெல்லாம் வீட்டில் அத்தனை ஒன்று சம்மதிக்க மாட்டார்கள் தானே.

அதுதான் பேசாமல் கிளம்பி ஊர் வந்து சேர், திருமணத்திற்கு பிறகு நீ என்னவும் செய் என்று உமாவின் அம்மா அழைக்க, ஊருக்கு போவதற்கு முன் அவனை சந்திக்க மனம் ஆவல் கொள்ள,

அவனோ ‘வீட்டிற்கு வா…’ என்றழைக்க,

“நோ நோ  ஆங்கிள் ஆன்ட்டி எதா சொன்னா..” என்று இவள் தயங்க,

“அதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்…” என்றவன் தானே வந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்தும் சென்றான்.

உமாவிற்குமே மனதிற்குள் ஒரு பயம் தான். இப்படி செல்கிறோமே அவன் வீட்டில் எதுவும் சொல்வார்களா என்று. ஆனால் அவனது பெற்றோர்களோ அவனை விட பிரன்ட்லியாக பழக, இவளுக்குமே சற்று நிம்மதியாய் இருந்தது.

“சரிம்மா நீங்க பேசுங்க… நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்…” என்று அவன் அம்மா அவர் அறைக்கு சென்றுவிட, இருவருக்கும் தனிமை கிடைக்கவும் தான் கோடீஸ்வரன் அவள் ஊருக்கு போவது பிடிக்கவேயில்லை என்று முகத்தை சுருக்கியது.

 “ஆமா… நான் உங்க கூட சேர்ந்து ஊர் சுத்துறேன்னு நினைக்கிறாங்க… நேத்து நைட் புல்லா அட்வைஸ்…” என்று முகத்தை அவளும் சுருக்க,

“ஹ்ம்ம் நிம்மதியா லவ் பண்ணவே விடமாட்டாங்க போல.. ச்சே.. நானே இப்போ தான் ஓரளவுக்கு கரக்ட் பண்ணி வந்திருக்கேன்…” என்றவளை நன்றாக அடி வைத்தாள்.

“நீங்க கரக்ட் பண்ண லச்சணம் தான் தெரியுமே.. நான் அழுத அப்புறம் சொல்றீங்க எல்லாமே… இதேது என் மனசுல லவ் வந்திருக்காட்டி நீங்க பண்ணிருப்பீங்க??” என்று கேட்க,

“வெரி சிம்பிள் பேபி,  உங்கப்பா அம்மா கிட்ட பேசி உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன்.. அப்புறம் லவ் பண்ணிருப்பேன்.. உன்னையும் லவ் பண்ண வச்சிருப்பேன்…” என்று சொன்னவனை இன்னும் அடித்தாள்.

“அப்போ.. அப்போகூட என்னை கன்வின்ஸ் பண்ணிருக்க மாட்டீங்க தானே…” என்று.

ஓரளவுக்கு மேல் அடி வாங்க முடியாமல்,

“ஹே ஹே ப்ளீஸ் பேபி… எப்படி இருந்தாலும் உனக்கு நான் தான்.. எனக்கு நீ தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை..” என்று அவளது கைகளை பற்றிக்கொண்டு அணைக்க,

அப்படி இப்படி என்று பிகு செய்தவளும் அவன் அனைப்பிற்குள் அடங்க,

“தேங்க்ஸ் உம்ஸ்….” என்றான் அவன் உச்சியில் முத்தமிட்டு..

“தேங்க்ஸா… எதுக்கு..??” என்றவள் அப்படியே முகத்தை மட்டும் நிமிர்த்த,

“என் எல்லா கிறுக்குத்தனத்தையும் பொறுத்திட்டு போறதுக்கு..” என்று சொன்னவனின் பார்வை அவள் முகத்தையே அளவிட,

“ம்ம்ஹு.. இது சரியே இல்லை.. உங்க பார்வை சரியில்லை..” என்று விலக எத்தனிக்க,

“ஹேய்… என்ன பேபி ப்ளீஸ் ப்ளீஸ்… இதுவரைக்கும் பை டைம்ஸ் தான் கிஸ் குடுத்திருக்க….” என்று அவன் கெஞ்ச..

“அது நானா குடுத்தது.. நீங்களா குடுத்தது கவுன்ட்லெஸ்…”

“சரி சரி அந்த லிஸ்ட்ல இதையும் சேர்த்துக்கோ.. ஊருக்கு வேற போக போற…” என்று இறுக்கி அணைக்க, அவளுமே அவனோடு ஒன்றித்தான் போனாள்.

ஊருக்கு கிளம்ப அவளுக்கும் மனமில்லை தான். அவனும் அவளும் நெருங்கி பழகியது என்பது இந்த சில நாட்கள் தான். அதுவும் இப்படி பாதியில் விட்டு கிளம்புவதும் சங்கடமாய் இருக்க, வேறு வழியே இல்லாமல் தான் கிளம்பினாள்.

ஆனால் அடுத்து வந்த ஒரு மாதம் என்பது காற்றில் கரைந்து போய், இவர்களின் திருமணமும் அழகாய் நடந்தேறிவிட்டது..

ஹப்பா அந்த திருமணத்தில் தான் எத்தனை கலாட்டா செய்தான் இந்த கோடீஸ்வரன். இவனை எல்லாம் எப்படித்தான் இத்தனை ஆண்டுகள் சமாளித்தாரோ அவன் அம்மா என்று தோன்றியது உமாவிற்கு. 

அவனை விட இன்னும் அதிகமாய் கலாட்டா செய்தது, இருவரின் நண்பர்களும் தான். ஆரம்பத்தில் இருந்தே அனைத்தையும் நேரில் கண்டவர்கள் அல்லவா. 

திருமணம் முடிந்து பத்து நாட்களுக்கு பிறகு தேன் நிலவிற்கு என்று அவர்கள் சென்ற இடம் கேரளா.

உமாவிற்கு மனதினுள்ளே, கேரளா தான் செல்லவேண்டும் என்று ஆசை இருந்தாலும் ஏனோ அவளுக்கு வெளிக்காட்ட மனமில்லை. ஒருவேளை கோடீஸ்வரனுக்கு வேறெதுவும் ஆசையிருந்தால் என்ன செய்ய என்று அமைதியாய் இருக்க.

அவனோ இவளறியாமல் ஒரு தனி படகு வீட்டையே வாடைக்கு எடுத்திருந்தான்.

முதலில் எங்கே செல்கிறோம் என்றெல்லாம் அவன் சொல்லவே இல்லை.

“என்னங்க… இப்போ கூட சொல்ல கூடாதா எங்க போறோம்னு…” என்று சிணுங்கியவளை,  லேசாய் அணைத்தபடி,

“அதெல்லாம் சொல்ல முடியாது.. நேத்து என்னை தலைகாணி வச்சு தள்ளும் போதே முடிவு பண்ணிட்டேன் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு…” என்று லேசாய் முகத்தை கோவமாய் வைப்பது போல் வைத்து சொல்ல,

“ஐயோ டா.. சாருக்கு அதான் கோவமா…” என்று அவள் கொஞ்சத் தொடங்க, அவனும் அதை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டான்.

ஆனாலும் கூட ஏர் போர்ட் வரும் வரைக்கும் சொல்லவே இல்லை எங்கே செல்கிறோம் என்று.

அவளோ முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வர. அதன் பின் தான் சொன்னான் கேரளா என்று. கேட்டதும் ஒரு நொடி, அவளுக்கு நம்பவே முடியவில்லை.

“நிஜமாவா??? ” என்று நம்பமாட்டாமல் உமா கேட்க,

“எஸ் பேபி.. ஏன்..??” என்று அவனும் கேட்க,

“நான் அங்க தான் போகணும் நினைச்சேன்…” என்று ஆனந்தமாய் சொல்ல,

“பின்ன ஏன் என்கிட்டே சொல்லலை…” என்று கோடீஸ்வரனும் பதிலுக்கு கேட்க,

“ம்ம்.. ஒருவேளை நீங்க வேற நினைச்சிருந்தா என்ன பண்றது.. அதான்…” என்று உமா சொன்னாள்.

“ஸி… உம்ஸ்… கண்டிப்பா நம்ம ரெண்டு பேருக்கும் தாட்ஸ் வேற வேறயா தான் இருக்கும். ஆனா உன் மனசுல என்ன நினைக்கிறன்னு சொன்னா தானே எனக்கு தெரியும்.

இது சின்ன விஷயம். நான் சொல்றது பொதுவா மத்த விசயங்களுக்கு. அதே போல நானும் சொல்வேன்… சரியா டியர்…” என்று எதோ சிறு பெண்ணுக்கு எடுத்து சொல்வது போல் சொல்ல, அங்கே  பிளைட்டிற்கான அழைப்பும் வர, சரியாய் இருந்தது.      

கேரளா பயணம், வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் அள்ளி வழங்க, பத்து நாட்களும் எப்படி போனது என்றே தெரியவில்லை இருவருக்கும்.       

“உம்ஸ்…. பேபி…” என்று அவன் கொஞ்சிட தொடங்கினால், இவளும் உருகிவிடுவாள். அதன் பின் நேரம் போவது என்பது இருவருக்குமே தெரியாது.

கிளம்பி வரவே மனமில்லாமல் தான் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தனர். வந்த மறுநாளே விடிந்ததும் கோடீஸ்வரன் தன் மனைவியின் பெயரை ஏலம் போட, அவளும் புன்னகைத்துகொண்டே அவனை காண சென்றாள்.

 

 

Advertisement