Advertisement

பந்தம் – 3

“மகி… மகி.. கம் ஹியர்….” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க,

உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில் மெய் மறந்து தான் கோடீஸ்வரன் அவளை நோக்கி எழுந்துச் சென்றான்.

அவனோடு இருந்த அவனது நண்பர்களோ ‘எங்கே டா திடீரென்று இவன் எழுந்து செல்கிறான்’ என்பது போல் காண,

இவன் வருவது அறியாமல் அவளும் வந்துகொண்டு இருக்க, காதலோ இவர்களுக்கு நடுவில் ஆசையாய் சிக்கிக்கொள்ள தயாராய் இருந்தது.

சரியாய் அதேநேரம் ஒரு சிறுவனும் ஓடிவர, தன்னை சுற்றி யார் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்றெல்லாம் அறியாமல், உமாவை மட்டுமே கண்ணிலும் கருத்திலும் கொண்டு நடந்தவனை தாண்டி அச்சிறுவன் ஓட, சரியாய் உமாவை முட்டி நின்றான்.

“ஹேய் குட்டி பார்த்து வா…” என்று அவனை பிடித்து நிறுத்தியவளிடம்,

“ஸாரி ஆன்ட்டி…” என்றுவிட்டு அவன் ஓடவும், இவள் திரும்பவும், உமாவையே பார்த்துகொண்டு வந்த கோடீஸ்வரன் அவள் மீது மோதவும் சரியாய் இருந்தது.

ஒருநொடி தான்.. ஒரே ஒரு நொடி தான். 

கோடீஸ்வரனது ஒரு கரம் அவளது இடையை பற்ற, மற்றொரு கரமோ அவளது தோளை பற்ற, உமாவோ காளி தேவி அவதாரத்தில் இருந்தாள். காரணம், அவனை மோதி நின்றாளே தவிர, கீழே விழவில்லை.

ஆனால் அவனோ அவள் விழுந்த பாவனையில், இல்லை விழப்போகும் பாவனையில் அவளை இறுக பற்றி நிற்க,     

அத்தனை பேரின் முன்னிலும் உமாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நல்லவேளை இவர்கள் இருந்த பக்கம் அத்தனை கூட்டமில்லை. ஆனாலும் இருந்த கொஞ்சம் பேரும் இவர்களை தான் பார்த்திருந்தனர். அவளுக்கோ அவமானமாய் போயிருந்தது.

விழுந்து பிடித்தால் வேறு. அப்படியில்லாமல் இப்படி வேண்டுமென்றே பிடித்தால். அதுவும் இவள் விழுந்துவிட்ட பாவனையுடன்.      

“ஹலோ Mr…” என்று தன்னை விடுவித்து அவனை முறைக்க,

அவனோ, “அடி ஏதும் பட்டிருச்சா??” என்றான் கண அக்கறையாக.

“நான் விழவே இல்லை..” என்று அடிக்குரலில் சீர, அதற்குமேல் அங்கே நிற்க பிடிக்காமல் நகர்ந்து சென்றுவிட்டாள்.

ஆனால் கோடீஸ்வரனோ ஆடாமல் அசையாமல் நிற்க,

“டேய் கொஞ்ச நேரத்துல நீ அடி வாங்கியிருப்ப… என்னடா ஆச்சு உனக்கு…” என்று வந்து அவன் நண்பன் இழுத்துச் சென்றான்.

ஆனால் கோடீஸ்வரனோ, அவள் அடித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான் போல, அவன் பார்வை முழுவதும் அவளையே சூழ்ந்திருந்தது.

உமாவிற்கு கோபத்தை அடக்கவே முடியவில்லை.

‘கிறுக்கன்.. இத்தனை பேர் முன்னாடி இப்படிதான் நடப்பானா?? அறிவில்ல?? ஆள் இவ்வளோ பெருசா வளர்ந்தா மட்டும் போதுமா?? ச்சே…’ என்று எண்ணியவள் முறைத்தபடி அவனை காண, அவனோ சிரித்தப்படி இருந்தான்.

‘பைத்தியம்.. செய்றதை செஞ்சிட்டு சிரிக்கிறான்…’ என்று மனதிற்குள்ளே திட்டினாலும் அவள் பார்வை அவனிடமே ஓட,

“ஹேய் என்ன டி.. ஒரு தனி ட்ராக் ஓடுது போல…” என்று உமாவின் தோழி சொல்ல, அது எரியும் நெருப்பில் இன்னும் பெட்ரோல் ஊற்றிய கதையாய் போனது.

“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா…” என்று தன்னருகே இருந்தவளை அடக்கியவளின் கண்களும் மீண்டும் அவனையே காண, அவனோ இன்னும் பார்வையை திருப்பியிருக்கவில்லை.

‘ச்சி இதென்ன இப்படி பாக்குறான்…’ என்று முனுமுனுத்துக்கொண்டே பார்வையை திருப்பிக்கொண்டாள்.

ஆனால் கோடீஸ்வரன் அதோடு நிற்பதாய் இல்லை போல. அவள் போகும் இடம் வருமிடமெல்லாம் பின்னோடு சுற்ற, இது இரண்டு பேரின் நண்பர்கள் குழுவிற்குமே நல்ல வேடிக்கையாய் போனது.

“டேய் கோடி… நீ அடிவாங்கினாலும் சரி.. ஆனா எங்களை அடி வாங்க வைக்காத டா…” என்று அவனை இழுத்துச் சென்றாலும், அவனோ அடங்குவதாய் இல்லை.

உமா தன் நண்பர்களோடு மேடைக்கு சென்றால், இவனும் இவனது நண்பர்களை இழுத்துக்கொண்டு மேடைக்கு சென்றான். அவள் உண்ணச் சென்றால் இவனும் சென்றான். இப்படி பின்னோடு சுற்றிக்கொண்டு இருக்க, அவளுக்கு பொறுமை முற்றிலும் கரைந்து போனது.

“ஹலோ Mr… என்ன?? என்ன வேணும் உங்களுக்கு..??” என்று சற்றே குரலை உயர்த்தி, முறைத்து நின்றவளை கண்டு அவன் புன்னகை விரிந்ததே தவிர, கொஞ்சமும் அவன் கண்களில் இருந்த காதல் குறையவில்லை.

அவன் கண்களின் பாசை உமாவின் மனதிற்கு சரியாய் புரிந்தாலும், தன் மனம் இத்தனை பலவீனமா என்று எண்ணியவள், அவன் செய்வது எல்லாம் கோவத்தையே கிளப்ப, 

அவள் கோவமாய் பேசவும் அவளுடன் வந்தவர்களும் என்னவென்று கேட்டபடி அருகே வர,

கோடீஸ்வரனின் நண்பர்களும் என்னவோ என்று வர, இவன் புன்னகைத்து நிற்க, அவள் முறைத்து நிற்க, அங்கே இங்கே என்று நின்றிருந்த ஆட்களுக்கு நல்ல வேடிக்கையாய் போனது.

“சிஸ்டர் நீங்க போங்க.. நாங்க பார்த்துக்கிறோம்… டேய் வா டா… ஏன் டா இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி நடக்குற.. டீன் ஏஜ் பையன் மாதிரி பீகேவ் பண்ணாத கோடி..” என்று உமாவை சமாதானம் செய்தபடி இவனை இழுக்க, கோடீஸ்வரனோ இஞ்ச் அளவிற்கு கூட நகரவில்லை.

“என்ன மகி.. என்னாச்சு…” என்று கேட்ட தன் நட்புகளிடம்,

“நத்திங்…” என்றவள்,

“சொல்லி வையுங்க..” என்று கோடீஸ்வரன் அருகில் சற்றே பதற்றமாய் நின்றிருந்தவனிடம் சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவனோ அவள் திரும்பி இரண்டு எட்டு வைத்து நடக்கவும்,

சற்றே சத்தமாய், “மகி…” என்றழைக்க, இரண்டு பேரின் நண்பர்களுக்கும் அய்யோடா என்றானது.

நல்லவேளை திருமணத்திற்கு வந்திருந்த ஆட்கள் யாரும் அவ்விடம் அதிகமாய் இல்லை. இல்லையெனில் பிரச்சனை வேறுவிதமாய் மாறியிருக்கும்.

“டேய் போற பொண்ண ஏன் டா கூப்பிடுற…??” என்று கோடீஸ்வரனை அவன் நண்பர்கள் இழுக்க,

“போச்சு… இன்னிக்கு மகி காளி அவதாரம் எடுக்கப் போறா…” என்று அவள் குழு முனுமுனுக்க,

இவனது அழைப்பு கேட்டு, பல்லை கடித்து ஒரு நொடி நின்றவளோ, அவனது அழைப்பில் ‘மகி..’ இன்னும் அழகாய் இருப்பது போல் தோன்ற, முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது திரும்பி அவனை பார்க்க,

அவனோ, மிக நிதானமாக இவளருகே நடந்து வந்து,

“கேள்வி கேட்டிட்டு, பதில் வாங்காம போறீங்களே ??” என்றான்.

“வாட்??!!!”

“என்ன வேணும் உங்களுக்குன்னு கேட்டீங்க தானே…??”

“சோ… ”

“எனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சிட்டு தானே போகணும் அப்போ…” என்று கூறி அவளது கண்களை காண,

ஒருசில வினாடிகளுக்கு மேல் உமாவால் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

என்ன இது புதிதாய் ஒருவனிடம் தான் இத்தனை சுயமிழக்கிறோம் என்று தோன்ற,

முகத்தை வேறுபுறம் திருப்பியவளுக்கு, அவள் இதயம் வேகமாய் துடிப்பது நன்றாகவே உணர முடிந்தது. இத்தனை நேரம் இல்லாத ஒரு படபடப்பு இப்பொழுது வந்து ஒட்டிக்கொண்டது.

கோடீஸ்வரனின் பார்வையும், அருகாமையும் அவளுக்கு அவளது இயல்பை தொலைக்க வைக்க, வேகமாய் அவ்விடம் விட்டு நகலவே துடித்தாள். அவனது பார்வையில் செயலிழக்க ஆரம்பித்த மனதை மிகவும் சிரமப்பட்டே கட்டுக்குள் கொண்டு வந்து,

அவன் முகத்தை நேராகவே நோக்கி,

“எனக்கு எதுவும் தெரியவேண்டாம்…” என்றவளை அவன் திரும்பவோ, நகரவோ விடவேயில்லை.

அவளது கரங்களை பற்றியிருந்தான்.

முதல் முறை பார்க்கும் ஒருத்தியிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்வது மகா தவறு தான். அது அவனுக்கும் தெரியும் தான். ஆனால் அவன் மனதை தான் காதல் ஆட்டிப்படைக்கிறதே. அதுவும் கண்டதும் காதல் வேறு.

உமாவை எப்படியாவது அவனோடு பேசவைக்க வேண்டும் என்ற எண்ணம், தானும் அவளோடு பேசிட வேண்டும் என்ற ஆசை, அவனை போட்டு பாடாய் படுத்த, கோடீஸ்வரன் வேறெதுவும் சிந்திப்பதாய் இல்லை.

அவனது சிந்தை முழுவதையும் அவளிடம் தொலைத்துவிட்டான்.

ஆகையால் தான் அவள் ஒவ்வொரு முறை இவனிடம் இருந்து தள்ளி செல்லும் போதெல்லாம். இவன் மனம் அடங்க மறுத்து, அவள் பின்னோடு சுற்றிக்கொண்டு இவனையும் போட்டு இழுத்துக்கொண்டு சென்றது.

ஆனால் உமாவிற்கோ அப்படியில்லை. என்னதான் தன் மனம் அவனிடம் தடுமாறுவதை உணர்ந்தாலும் அதை உடனே ஏற்றுகொள்ள தயாராய் இல்லை.

என்னடா இது புதிதாய் ஒருவன் வந்து இப்படியெல்லாம் செய்கிறான் என்று எரிச்சலாய் இருந்தது. கோவம் கோவமாய் வந்தது. வேலை பளுவிற்கு நடுவே சந்தோசமாய் தோழியின் திருமணத்தை கொண்டாடலாம் என்று வந்த இடத்தில் இப்படி ஒருவன் வந்து பின்னே முன்னே சுற்றுவது அவளுக்கு சங்கடமாய் இருந்தது.

அது அவளது கண்ணிலும் முகத்திலும், பேச்சிலும் அப்பட்டமாய் தெரிய, கோடீஸ்வரனோ நீ என்ன செய்தாலும் சரி, நான் சொல்ல வந்ததை சொல்லியே தீறுவேன் என்று அவள் கைகளை பிடித்திருந்தான்.

அவ்வளவு தான். இத்தனை நேரம் அமைதியாய் பொறுமையை இழுத்து பிடித்து நின்றிருந்த இருவரின் நண்பர்களும் “டேய்…” என்றும் “ஹலோ…” என்று முறைத்துக்கொண்டு இவர்களருகே வர,

உமாவோ அவஸ்தையாய் உணர்ந்தாள்.

“இங்க பாருங்க, மரியாதையா கையை விடுங்க…” என்று தன் கையை உறுவிட பார்த்தவளுக்கு அது அத்தனை சுலபமாய் இல்லை.

“டேய் கோடி.. என்னடா பண்ற…??? டேய் விடு டா.. வந்த இடத்துல என்னடா இது…” என்றும்,

“ஹலோ Mr.. என்ன பண்றீங்க… மகி, இப்படி வா…” என்றும் இவர்களை சுற்றி குரல்கள் கேட்டாலும்,

கோடீஸ்வரன் உமாவின் கரங்களை விடுவதாய் இல்லை.

“உன்னோட கேள்வி இப்போ என்கிட்ட இருக்கு. அதை வச்சு நான் என்ன செய்ய, சோ, பதிலை நீ வாங்கிட்டு தானே போகணும். டியர்..” என்க, உமாவின் பொறுமை முற்றிலும் பறந்தது.

“கையை விடுங்க, நானும் வந்த இடத்தில் பிராப்ளம் ஆக கூடாதுன்னு பார்க்கிறேன்…” என்று அவனை எரிக்கும் பார்வையில் திட்ட,

அவளது கரங்களை தன் பிடியில் இருந்து விடுவித்தவன்,

“ஐ லவ் யு…” என்றான் மெல்ல அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

சுற்றி இருந்த இருவரின் நண்பர்களுக்கும் அவன் என்ன சொன்னான் என்று கேட்கவில்லை, ஆனால் உமாவின் அதிர்ந்த முகமும், திகைத்த பார்வையும், என்னவோ சொல்லியிருக்கிறான் என்று உணர்த்த,

“மகி வா போவோம்….” என்று அவளை இழுக்க தொடங்க, அவளோ அப்படியே ஆடாது அசையாது நின்றுவிட்டாள்.

“என்ன சொன்னான்… என்ன சொன்னான் இவன்???” என்று அவள் மனம் மீண்டும் மீண்டும் தான் கேட்டது நிஜம் தானா என்பதை உறுதிபடுத்த விழைய,

அவளது கால்களோ அசையாது நிற்க, கண்களோ இன்னும் கோடீஸ்வரனை விட்டு நகரவே இல்லை.

“டி மகி… கம்…” என்று அவள் தோழி இழுக்க, சுய நினைவிற்கு வந்தவள்,

“என்… என்ன சொன்னீங்க??” என்று முகத்தை சுருக்கி சந்தேகமாய் கேட்க,

“ஐ லவ் யு சொன்னேன் பேபி…” என்றான் மிக கூலாய்.

அவனது தோற்றமும், குரலும், பாவமும் அவளுக்கு என்ன உணர்த்தியதோ, அவனையே சில நொடிகள் வெறித்து பார்த்தவள், ஒன்றுமே சொல்லாது சென்றுவிட்டாள்.

அவள் முகம் திருப்பி சென்றது, “போடா நீயும் உன் லவ்வும்….” என்று சொல்லாமல் சொன்னது போல் தோன்ற,

“பேபி… நீ கேட்ட நான் சொல்லிட்டேன்.. இதுக்கெல்லாம் கோவப்படக் கூடாது. மறுபடியும் மீட் பண்ணுவோம்….” என்று கோடீஸ்வரன் அவளிடம் சத்தமாய் சொல்ல,

“டேய் வந்து தொலைடா.. அவங்க இந்தளவுக்கு அமைதியா போனதே பெருசு…” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றனர் மற்றவர்கள்.

உமாவிற்கு அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை. ஏனோ ஒருமாதிரியாய் இருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு. இறுக்கமாய் உணர்ந்தாள். மூச்சு முட்டுவது போல் இருந்தது.

தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு கிளம்பிவிட்டாள்.

“இரு மகி நாங்களும் வர்றோம்…” என்று அவர்களும் கிளம்ப,

“இல்லை வேணாம். பங்சன் முடிச்சிட்டு வாங்க…” என்றுவிட்டு கிளம்பி சென்றுவிட்டாள்.

அறைக்கு வந்த பின்பும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. அவனுக்கு தக்க பதில் சொல்லியிருக்கவேண்டுமோ என்று தோன்ற, அவள் மனம் கூறிய பதிலோ அவனுக்கு சாதகமாய் தானே இருந்தது.

அப்படியிருக்கையில்  சத்தியமாய் கோடீஸ்வரனிடம் என்ன பதில் சொல்ல, ஏன், அடுத்து எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூட தெரியவில்லை.

எதிர்பாரா இடத்தில் எதிர்பாரா நிகழ்வு.

சில நிகழ்வுகள் மனதில் அழியாது நின்றுவிடும். அப்படிதான் ஆனது உமாவிற்கு. இந்த கேரளா பயணம் அவள் வாழ்வில் மறக்க முடியா ஒன்றாய் ஆனது.

உமா அமைதியாய் சென்றுவிட்டாள் என்பதற்காக கோடீஸ்வரன் ஒன்றும் அப்படியே இருந்திடவில்லை. மணமகனான அவனது நண்பனை பாடாய் படுத்தி எடுத்து, மணப்பெண்ணிடம், அவளது நண்பர்களை பற்றி கேட்டறிந்து, எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றும் அறிந்து, ஒருவழியாய் உமாவை பற்றியும் தெரிந்துகொண்டான்.

“டேய் இவன் அடங்க மாட்டான் போலடா…” என்று முறைத்தவர்களை எல்லாம் சட்டையே செய்யவில்லை அவன்.

“உமா மகேஸ்வரி – கோடீஸ்வரன்… அட அட பேர் பொருத்தமே செமையா இருக்கே. நீ எங்க போனாலும் சரி உம்ஸ்… ஒருநாள் நிச்சயம் நீயா என்னை தேடி வருவ.. என்னோட காதல் கண்டிப்பா உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்… அப்போ உனக்கு புரியும்..” என்று மனதினுள் மகிழ்ந்துகொண்டான்.

                          

 

Advertisement