Advertisement

பந்தம் – 1௦ 

நான்கு வருடங்கள் கழித்து…

அதிகாலை நேரம். பொழுது புலர்வதை உணர்த்துவது போல் கீழ் வானம், வர்ண ஜாலங்கள் காட்ட, புல்லினங்கள் இசை பாட, மெல்ல மெல்ல சூரியன் தன் கரங்களை விரித்து உலகை அணைத்துக்கொள்ள தொடங்க,

“உம்மி…. உம்மி…” என்று உறக்கத்தில் விழித்த மகனை சமாதானம் செய்துகொண்டு இருந்தாள் உமா.

அப்படியே தந்தை போலதான். கண் முழித்ததும் அவன் அம்மா அவனிடம் இருக்க வேண்டும். அவனை கொஞ்சிட வேண்டும்..

கோடீஸ்வரன் “உம்ஸ்…” என்று மனைவியின் பெயரை ஏலம் விட்டால், அவர்களின் அருமை மகனோ,

“உம்மி….” என்று தன் சின்ன குரலில் தந்தைக்கு போட்டியாக அன்னையை அழைப்பான்.

“குட்டூஸ்… ஏன் டா எல்லாத்திலையும் அப்பாக்கு போட்டியா வந்து நிக்கிற…” என்று அந்நேரத்திலேயே அப்பாவிற்கும் மகனுக்கும் செல்ல சண்டை நடக்க, உமா முதலில் இருவரையும் சமாதனப் படுத்தியவள்,

அடுத்து வந்த நாட்களில் என்னவோ செய்யுங்கள் என்று விட்டு விட்டாள்.

ஆனாலும் சில நேரம் அப்பாவும் மகனும் கூட்டு களவாணிகள். என்ன செய்தால் அம்மா வருவாள் என்று அந்த குட்டிக்கும், எப்படி அழைத்தால் மனைவி வருவாள் என்று கோடீஸ்வரனுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

ஆனால் இன்றோ தந்தைக்கு முன்னே மகன் முழித்துக்கொண்டான்.

உமாவும் உறக்கத்தில் இருக்க, அந்த சின்ன குட்டியோ

“உம்மி… உம்மி…” என்று தன் அம்மாவை எழுப்ப,

“அபி… குட்டி மா… என்ன டா தங்கம்.. இப்போவே முழிச்சிட்ட… இன்னும் நேரமிருக்கே.. தூங்கு குட்டிமா…” என்று மகனுக்கு தட்டி கொடுத்தப்படி கண்கள் திறக்காமல் உமா சொல்ல,

“உம்மி… நா.. நா.. டா பஸ்ட்..” என்று மழலையில் அவள் காதருகே அபிநவ் கிசுகிசுக்க,

மகனின் இளந்தளிர் ஸ்பரிசமும், அவன் ரகசிய பேச்சும், உமாவிற்கு, உறக்கத்தை போக்கி,  உற்சாகத்தை வரவழைக்க,

“ஆமா.. ஆமா.. எப்பவுமே.. என் அபிக்குட்டி தான் பர்ஸ்ட்…” என்று அவனை தூக்கி தன் மீது படுக்க வைத்து முத்தமிட்டு கொஞ்ச, 

“உம்ஸ்….” என்று கணவனின் குரலும் அவள் காதருகே ரகசியம் பேச,

“ஆகா…!!! ரெண்டு பேரும் முழிச்சிட்டீங்களா… இனி என் பாடு திண்டாட்டம் தான்…” என்று உமாவும் சொல்லிக்கொள்ள,

“ஹா…!!! உம்மி… நா டா பஸ்ட்…” என்று அபிநவ் தான் தான் முதலில் உன்னை அழைத்தேன் என்பதை உறுதி செய்ய,

“குட்டூஸ்… அப்பாவும் முழிச்சுட்டேன் டா…” என்று மகனிடம் பேச்சை தொடங்க,

“சரி சரி.. அப்பாவும் பையனும் விளையாடுங்க.. தென் பிரெஷ் ஆகி கீழ வாங்க..” என்று அபியை தூக்கி கணவனிடம் கொடுத்து விட்டு கட்டிலை விட்டு கீழிறங்க முயற்சிக்க,

“உம்ஸ்… பேபி… இன்னும் கொஞ்ச நேரம் இரு…” என்று கோடீஸ்வரன் கை பிடித்து நிறுத்த,

“உம்மி… இரு…” என்று மகனும் சொல்ல,

“அது சரி… இதோ கொஞ்ச நேரத்தில உங்க குட்டூஸ்க்கு பசிக்க ஆரம்பிச்சிடும்.. அதான் ரெண்டு பேரும் என்னை பார்த்தாச்சுல.. அப்புறம் என்ன? அபி அப்பா கூட இரு குட்டி…” என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி சென்றுவிட்டாள்.

“பாரு குட்டூஸ்… உன் மம்மிக்கு வர வர அப்பா மேல பாசமே இல்லை.. டாடிய கண்டுக்கிறதே இல்லை…” என்று மகனிடம் சொல்ல,

அபியோ தன் தந்தை எதுவோ கதை சொல்கிறான் என்பது போல் கேட்டுக்கொண்டு இருந்தான்.

அதற்குள் கோடீஸ்வரனின் அம்மாவும் எழுந்து குளித்து தயாராகி வந்துவிட முதலில் அவருக்கு குடிக்க காப்பி கலந்து கொடுத்துவிட்டு மகனுக்கு சத்து மாவு காஞ்சி காய்ச்ச சென்றாள்.

அடுத்த சில நேரத்திலேயே முகம் கழுவி, பிரெஷ் ஆகி கோடீஸ்வரன் மகனை தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.

“பாத்தி….” என்று தன் பாட்டியை பார்த்ததும் தாவ, அபிநவிற்கு முதலில் சத்து மாவு கலக்கி எடுத்து வந்தவள், அவன் தன் அத்தையிடம் இருப்பதை பார்த்துவிட்டு, அவரிடம் தந்தவள், அடுத்து கோடீஸ்வரனுக்கு காப்பி கலக்க செல்ல,

அவனோ இது தான் சமயம் என்று மனைவியின் பின்னோடே சென்றான்.

“என்ன கிச்சன் பக்கம் எல்லாம் காத்து வீசுது…” என்று அவன் வருகையை அறிந்து கேட்டவளை பின்னோடு அணைத்தவன்,

“இப்போலாம் என்னை கண்டுக்கவே மாட்ற பேபி.. முதல்ல உன்னையும் கொஞ்சம் கேர் பண்ணு…” என்று குறைபட்டான்.

“ஹா…ஹா… இந்த பஞ்சாயத்துக்கு நான் வர மாட்டேன்.. நீங்களும் உங்க மகனும் பேசி முடிவு பண்ணிக்கோங்க.. அண்ட் தென்.. என்னை பார்த்துக்க தான் நீங்க இருக்கீங்களே…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“உம்மி….” என்று அழைத்துவிட்டான் அபிநவ்.

“இதோ.. அப்படியே உங்களை மாதிரி.. ஒருவேலை செய்ய விடுறது இல்லை..” என்று கணவன் தலை முடியை ஆசையாய் கலைத்தபடி அவன் கையில் காப்பி கோப்பையை திணித்து விட்டு மீண்டும் மேலே அறைக்கு சென்றாள்.

எப்பொழுதும் இப்படிதான். எழுந்ததும் மகனையும் கணவனையும்  வீட்டினரையும் கவனித்து விட்டு தான் அவள் தன்னை கவனித்துகொள்வதே. அதுவும் அபிநவ் பிறந்த பிறகோ, கேட்கவே வேண்டாம்.

கணவனுக்கும், மகனுக்கும் இடையில் சரியாய் மாட்டிக்கொண்டாள்.

“ஏன் டா குட்டூஸ்.. எப்போ பாரு உம்மி உம்மின்னு சொல்லிட்டு இருக்க..  மம்மி இன்னும் ப்ரெஷ் ஆகலை அதான் மாடிக்கு போயிருக்கா…” என்று சொல்லிக்கொண்டே அவன் அம்மா அருகில் அமர,

அபி குட்டியோ வாகாய் தன் பாட்டி மீது சாய்ந்துகொண்டு சிரித்தான்.

“ஹ்ம்ம் நல்லா சிரி குட்டூஸ்… உன் மம்மியையும் கொஞ்ச விட மாட்ற.. என் மம்மியையும் கொஞ்ச விடமாட்ற.. டாடி பாவம் டா…” என்று மேலும் சிறிது நேரம் கொஞ்சி விளையாடிகொண்டு இருக்க,

அதன் பின் கோடீஸ்வரனின் தந்தையும் எழுந்து வந்துவிட, அவரோடு விளையாட தொடங்கிவிட்டான் அபிநவ்.

இது தான் சமயம் என்று கோடீஸ்வரனும் மாடியேறி சென்றான்.

அபிநவிற்கு எப்பொழுதும் அதிகாலை பொழுது தன் அப்பா அம்மவோடு என்றால், அதன் பின் வரும் நேரம் தன் தாத்தா பாட்டியோடு கழியும்.

ஆகையால் அந்நேரத்தில் அவன் அம்மாவை தேட மாட்டான்.

அப்படியான நேரத்தில் தான் உமா குளித்து முடித்து தன்னை தயார் செய்துகொள்வாள்.

அன்றும் தனக்கு கிடைத்த நேரத்தில் தலைக்கு குளித்து, ஈர கூந்தலை துவட்டியபடி கண்ணாடி முன் நின்றவளை ஆசையாய் பார்த்தபடி அருகே வந்து நின்றான் கோடீஸ்வரன்.

“ஹ்ம்ம்..!!! வந்தாச்சா.. என்ன டா இன்னும் ஆளை காணமேன்னு பார்த்தேன்…” என்றபடி அவனை பார்த்து புன்னகை புரிய,

அவள் ஈராக்கூந்ததில் முகத்தை புதைத்து வாசம் பிடித்தவன், “ஹ்ம்ம் இப்போ தான் அப்பா எழுந்து வந்தார். சோ அபி அவர் கூட விளையாடுறான்.. அதான் மேல வந்தேன்…” என்று தன் மனைவியை இறுக்கமாய் அணைக்க,

“இது தான் நீங்க டெய்லி சொல்ற ரீசன் ஆச்சே…” என்று அவனும் கணவனோடு ஒன்றினாள்.

இருவருக்கும், தினமும் இந்த நேரம் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆவலாய் இருவரும் எதிர்பார்க்கும் நேரமும் கூட.

அவன் மேலே வருவான் என்று தெரிந்தே இவள் செல்வதும், தனக்காய் காத்திருப்பாள் என்று அவனும் போவதும், அவர்களுக்குள் அந்த சில தனிமை நிமிடங்கள் மிக ரம்யமாய் இருக்கும்.

கணவனின் அணைப்பில் நின்றவளுக்கு நேரங்கள் போவது புரிந்தாலும், அவசரமாய் எல்லாம் விலகவில்லை. ஆனால் மனமோ இன்னும் சிறிது நேரத்தில் தங்களின் செல்ல மகன் படியேறி மேலே வருவான் என்று தெரியும்.

“சரி சரி போதும்.. இன்னிக்கு கோட்டா ஓவர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல குட்டி மேல வருவான்.. நீங்களும் அவனும் குளிச்சு ரெடியாகி கீழ வாங்க.. இதோ டிரஸ் எடுத்து வச்சிருக்கேன்…” என்று கட்டில் மீதிருக்கும் உடைகளை காட்டிவிட்டு,

கணவனை லேசாய் தள்ளி நிறுத்திவிட்டு தலைவார தொடங்கினாள்.

“ஹ்ம்ம்.. டெய்லி நீயும் இதான் பண்ற உம்ஸ்…” என்றவன் மீண்டும் அவளை ஒட்டி நிற்க,

“அப்பாவும் பிள்ளையும் ஒருவேலை என்னை உருப்படியா செய்ய விடுறீங்களா.. இதேது எங்கேயாவது போகணும்னா மட்டும் ரெண்டு பேரும் கண்ணாடிய அப்படியே குத்தகைக்கு எடுத்த போல நிக்கிறது. நான் நின்னா மட்டும் வந்து ஒட்டிக்கிறது…” என்று சொல்லிக்கொண்டே,

“உன்கூட நிக்கும் போது நாங்க இன்னும் அழகா தெரியுறோம் பேபி…” என்றபடி மேலும் அவளை போட்டு உரச..

“அடடா…!!” என்றபடி வகிட்டில் குங்குமம் வைக்க போக,

கோடீஸ்வரனோ வேண்டுமென்றே தொண்டையை கனைத்து கொண்டான்.

இதுவும் தினமும் நடக்கும் ஒன்று தான்.

திருமணம் முடிந்து உமாவின் ஊருக்கு சென்றிருந்த புதிதில், அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

அப்போது கோவிலில் குங்குமம் தர பட, உமாவின் அம்மா வேகமாய் திரும்பி தன் கணவரிடம் கை நீட்ட, அவரும் சிரித்த படி தன் மனைவியின் கரங்களில் இருக்கும் குங்குமத்தை எடுத்து அவர் நெற்றியில் வைத்துவிட்டார்.

இது உமா பிறந்ததில் இருந்து பார்க்கும் காட்சி தான்.

ஆனால் திருமணமாகி, கோடீஸ்வரனின் சரி பாதி ஆனா பின்பு உமாவிற்கும் தன் அம்மா போல் தன் கணவன் கையால் குங்குமம் இட்டுக்கொள்ள ஆசை வந்தது.

அன்றிலிருந்து தினமும் அவன் தான் இட்டுவிடுவான்.

சில நேரம் வேண்டுமென்றே இவள் மறந்தது போல் நடிப்பால், அப்பொழுதெல்லாம் இப்படிதான் கனைத்துகொள்வான்.

அதுபோலவே இன்றும் செய்யவும், இதழில் ஒட்டிய குறும்பு சிரிப்போடு திரும்பினாள்.

“நான் ஒன்னும் மறக்கலை…” என்று குங்குமத்தை நீட்ட, அவனும் சிரிப்போடு அவள் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்துவிட, உமாவின் முகமும் மலர்ந்தது.

ஆனால் கோடீஸ்வரனின் வாய் சும்மா இருக்குமா??

“டெய்லி இப்படி செந்தூரம் வைக்கிற.. ஆனா அப்பபோ என் ஷர்ட்ட ரெட்டிஸ் ஆக்கிடுற… ” என்று வேண்டுமென்றே குறைபட,

“அடடா ரொம்பத்தான்… என்னவோ சார் நாலடி தள்ளியே நிக்கிற மாதிரி…” என்றவளுக்கு, இப்பொழுதும் கூட அவன் காதல் சொன்ன தருணம் மனதினில் வந்து போனது.

அதுமட்டுமில்லாமல், அதன் பிறகான நிகழ்வுகளும் வந்து போக, மனதிற்குள் ஏதேதோ சிந்தனைகள் எல்லாம் தோன்ற,

“என்னங்க, ஒருவேளை, சுசிக்கு உங்களை பார்க்காம  இருந்திருந்தா.. நான் உங்களை பார்க்க வராம இருந்திருந்தா.. இந்நேரம் என்னவாகியிருக்கும்… ” என்று கேட்கும் போதே, நான் உன்னை இழந்திருப்பேனோ என்ற அச்சம் அவள்  தொனியில் தெரிய,

அவள் நெற்றியில் முட்டியவன், இடையை அணைத்தப்படி “லூசு.. அதெல்லாம் இல்லை.. நான் தான் உன்னை பார்த்துட்டு தானே இருந்தேன்.. நீ வந்திருக்காட்டி நானே வந்திருப்பேன்.. அவ்வளோ தான்… இப்போ ஏன் திடீர்னு இதெல்லாம் கேட்கிற…” என்று ஆறுதல் படுத்த,

“இல்லை டக்குனு தோணிச்சு…” என்றாள் சாந்தமாய்.

ஆம் உண்மை தான். ஒருவேளை  இவனை நாம் அடுத்து பார்க்காமலே போயிருந்தால், எப்படிப்பட்ட ஒருவனை நான் இழந்திருப்பேன். இந்த வாழ்வு என் கனவாகவே போயிருக்குமே என்றெல்லாம் தோன்ற, எங்கே இவனை இழந்திருப்போமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நொடி அவள் இதயம் வலித்தது அவளுக்கு தானே தெரியும்.  

அது தான் அப்படி கேட்டுவிட்டாள். அவள் அம்மா கூட போன முறை ஊருக்கு சென்றிருக்கும் போது சொன்னாரே..

“மகி.. மாப்பிளை உன்னை கவனிச்சுக்கிறதை பார்த்தா எங்களுக்கு அவ்வளோ சந்தோசம் டி.. நாங்க தேடி பிடிச்சு மாப்பிள்ளை பார்த்திருந்தா கூட இப்படி இருந்திருப்பாங்களான்னு சொல்ல முடியாது..” என்று தன் மருமகனை எண்ணி  பெருமைகொள்ள, உமாவிற்கு சொல்லவும் வேண்டுமா.

கணவனை எண்ணி பூரித்து தான் போனாள். இவனுக்காக இன்னும் கூட எத்தனை நாட்களும் காத்திருந்திருக்கலாம் என்றே இப்போதெல்லாம் தோன்றிட ஆரம்பித்தது.    

அதை தன் கணவனிடமும் கூட சொல்லிக்கொண்டாள். 

அதற்கு அவனோ, “ஹ்ம்ம்… நீ யாரு என்னனே தெரியாம தானே உம்ஸ் உன்கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணேன்.. அதே போல நான் யாருன்னே தெரியாம தானே நீ லவ் பண்ண.. அப்போவே நமக்குள்ள ஒரு பந்தம் உருவாகிடுச்சு பேபி.

அது தான். அந்த பந்தம் தான் இதோ இப்படி நான் உன் நெத்தியில செந்தூரம் வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திருக்கு.. சோ வேறெதுவும் நினைக்காம.. என்னை மட்டும் நினை..” என்றவன் மீண்டும் தன் மனைவியை நெருங்க,

“உம்மி…..” என்றபடி அபிநவ் இவர்களை நோக்கி ஓடி வர,

“ஹா ஹா.. உங்க போட்டிக்கு ஆள் வந்தாச்சு…” என்று சிரித்தபடி, தன் மகனை தூக்கியவளை,

“யார் வந்தாலும் நான் செய்ய நினைச்சதை செய்வேன் உம்ஸ்..” என்று சொல்லிக்கொண்டே, தன் மகனோடு, மனைவியையும் சேர்த்தே அணைத்தான் கோடீஸ்வரன்..            

 

                           நன்றி..!!!!

 

Advertisement