பந்தம் – 1

“சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் உமா.. உமா மகேஸ்வரி.

குடும்பத்திற்கும், நட்பு வட்டத்திற்கும் மகி.

“ஆமா மகி…” என்ற சுசியின் குரலில் உயிர்ப்பே இல்லை.

“ம்ம்ச் இப்போ எதுக்கு சுசி சோக கீதம் வாசிக்கற??. ப்ரீயா விடு..”

“இல்ல மகி பயமா இருக்கு…” என்று மீண்டும் கண்ணீர் உதிர்க்க,

“ஷ்…. முதல்ல இப்படி அழறதை நிறுத்து சுசி.. லவ் பண்றப்போ தெரியலையா இப்படியெல்லாம் சூழ்நிலை வரும்னு. எங்க போனான் உன் லவ்வர் அந்த கிஷோர்..” என்று கேட்ட உமாவிற்கு நிஜமாகவே இப்பொழுது கோவமாய் தான் இருந்தது.

இப்படி ஒரு சூழல் வரும் என்று முன்பே சிந்தித்திருக்க வேண்டாமா?? என்று  இருந்தாலும் சுசி வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று இவளுக்கும் தெரியாதா?? இல்லை அந்த கிஷோருக்கு தான் புரியாதா??

அதற்கு ஏற்றார் போல் தானே நடந்திருக்க வேண்டும். காதலிக்கும் பொழுது எதுவுமே யோசிக்காமல் டார்லிங் டியர் என்று திரிவது, பிரச்சனை என்று வரும் பொழுது முழி பிதுங்குவது.

அவன் வேலையில் சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே இரு வீட்டிலும் பேசியிருந்தால் எப்பிரச்சனையும் வந்திருக்காதே. அதைவிட்டு காலம் தாழ்த்திவிட்டு இப்போது கண்ணீர் வடித்து என்ன பயன். 

“ஊருக்கு போயிருக்கான்…”

“வாட் ஊருக்கு போயிருக்கானா?? உன்னை பொண்ணு பார்த்து வரப்போறாங்கன்னு தெரியுமா தெரியாதா டி..??” என்ற உமாவின் குரலில் இதற்குமேல் பொறுமையை இழுத்து பிடிக்க என்னால் முடியாது என்று நன்றாகவே தெரிந்தது.

“ஷ்.. கத்தாத மகி.. வெளிய அம்மா எல்லாம் இருக்காங்க…” என்று அவளை அமைதி படுத்திய சுசி,

“ம்ம் தெரியும் டி. சொல்லிட்டேன்..” என்றாள் இன்னும் பாவமாய்.

“என்ன சொன்னான்??”

“எப்படியும் வேலை முடிச்சு வர இன்னும் ஒரு வாரம் ஆகுமாம், அதுவரைக்கும் எப்படியாவது சமாளிக்க சொன்னான்..”

“அதுக்கப்புறம்…???”

“இது… இதை ஸ்டாப் பண்ணிட்டா.. அடுத்து வந்து…” என்று சுசி இழுக்கும் போதே,

“அப்புறம் சார் வந்து அப்படியே உன்னை தூக்கிட்டு போயிடுவானா?? போ டி நீயும் உன் லவ்வும்… நல்ல ஆள் பார்த்த… இதுக்குமேல உன்கிட்ட பேசினா எனக்கு தான் டென்சன் ஆகும்..” என்று வேகமாய் உமா எழ,

அவள் மனதில் சட்டென்று மின்னல் வெட்டுவது போல் வேறொரு நியாபகம் வந்து சென்றது. வேறொரு நியாபகம் என்பதனை விட வேறொருவன் நியாபகம். அவன் ஏன் அடுத்து வரவேயில்லை என்ற நியாபகம்.. தன்னை மறந்து அப்படியே நின்றுவிட,

“மகி.. என்ன டி ஆச்சு….” என்று சுசி உலுக்க, அந்த நொடியில் தன்னை சமாளித்துக்கொண்டாள்.  

“ப்ளீஸ் மகி.. உட்கார் டி.. என்னால யார்கிட்டயும் இப்போ பேச முடியலை டி.. ப்ளீஸ்… கிஷோர் இல்லாத நேரம் நான் ஏதாவது பேசி, அம்மா இதுக்கு எப்படியாது ஒத்துக்க வச்சிட்டா என்ன டி செய்ய…” என்று சுசி கெஞ்ச,

“நீ ஒத்துக்காத… ஏன் ஒத்துக்கிற…” என்று வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாய் மீண்டும் அமர்ந்தாள் உமா.

உமாவின் சொந்த பெரியப்பா மகள் தன் சுசி. இருவருக்கும் மாதக்கணக்கே வயது வித்தியாசம். ஆகையால் தோழிகள் போலத்தான். ஒரே வகுப்பு, பள்ளி, கல்லூரி என்று சந்தோசமாய் போய்க்கொண்டிருக்க,

உமா கல்லூரி முடித்து வேலைக்கு சென்றுவிட்டாள், ஆனால் சுசியை அவள் அம்மா வேலைக்கு அனுப்பவில்லை. திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க, ஆடுத்தபடியாக வரன் பார்க்கும் படலம் தொடங்கியது.

இதற்கு நடுவில் சுசிக்கும் அவள் சீனியர் கிஷோருக்கும் ஏற்கனவே கல்லூரியில் இருந்து காதல் வேறு.

ஆரம்பத்திலேயே உமா இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னாள் தான்.

“இங்க பாரு டி இப்போ லவ்வு கிவ்வுனு சொல்லிட்டு, அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்ததுமே வீட்டை விட்டு போறது இல்லை லவ்வே வேணாம்னு நல்ல பிள்ளைகளாட்டம் இருக்கிறது எல்லாம் கூடாது. ஒழுங்கா லவ் பண்ணவனை கல்யாணம் பண்ற தில்லிருந்தா லவ் பண்ணு இல்லையா இப்போவே அய்யா சாமி ஆளை விடுன்னு சொல்லிடு…” என்று மிரட்டாமல் மிரட்டியிருந்தாள்.

ஆனால் உமா இப்படி சொல்லும் போது தேவதைகள் ‘ததாஸ்து’ சொல்லிவிட்டனவோ என்னவோ, சூழலும் அப்படியே அமைந்துவிட்டது.

கிஷோர் வேலை விசயமாய் வெளியூர் சென்றிருக்க, சுசியை பெண் பார்க்க வர சொல்லி மாப்பிளை வீட்டினரிடம் கூறிவிட்டனர்.

கிஷோர் எப்போது வந்து அவன் வீட்டில் பேசி பின் அவள் வீட்டிற்கு வந்து பேசி, நினைக்கவே மலைப்பாய் இருந்தது. இப்போது செய்வது அறியாது முழிக்கிறாள் சுசி.

“ப்ளீஸ் மகி… நீ தான் எனக்கு இப்போ ஹெல்ப் பண்ணனும். வேற யார்கிட்ட கேட்க முடியும்???” என்று கண்ணை கசக்கியவளை காண அவளுக்கும் பாவமாய் தான் இருந்தது.

உமா கட புடா டைப் என்றால் சுசி கப் சிப் டைப்.

அதுவும் இப்போதிருக்கும் நிலையில் வீட்டிலும் ஒன்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னாலோ நிச்சயம் சுசியை அடக்கி அதட்டி இந்த வரனை முடித்துவிடுவர்.

கிஷோர் வேறு ஊரில் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தான் சுசி உமாவை அழைத்தது. வேறென்ன செய்ய முடியும் சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைக்காரன் காலில் தான் விழ வேண்டும்.

சுசியோ கிஷோரோ விழுந்தால் பரவாயில்லை, ஆனால் உமாவை அல்லவா விழ சொல்கிறாள் இந்த சுசி.

“நீ சொல்றது எல்லாம் சரி தான். அந்த மாப்பிள்ளை கிட்ட உன் காதல் கதையை சொல்லி, பொண்ணு பார்த்து வரும் போது உன்னை பிடிக்கலைன்னு சொல்ல சொல்லணும்.. ஆனா அதையேன்டி என்னை பேச சொல்ற.. போன் நம்பர் இருந்தா நீயே பேசேன்…” என்று கடுகாய் வெடிக்கும்  உமாவை, இப்பொழுதும் பாவமாய் தான் பார்த்திட முடிந்தது சுசியால்.

“என்ன டி.. சொல்லித் தொலை.. இப்படி பாவமா பார்க்காத.. நீயெல்லாம் எப்படி தான் லவ் பண்ணியோ??”

“இல்ல மகி.. அவர் போன் நம்பர் இல்லை. அவங்கப்பா நம்பர் தான் இருக்கு..” என்று மென்று மிழுங்க,

“ஹே!!! வெரி குட்யா.. ஸ்ட்ரைட்டா மாப்பிள்ளையோட அப்பாக்கே போன் அடிக்கிறோம்.. இப்படி இப்படின்னு சொல்றோம்.. பொண்ணு பாக்குறதையே நிறுத்துறோம்…” என்று உமா சொல்லிக்கொண்டே போக, சுசியோ நெஞ்சில் கை வைத்தாள்.

“என்ன டி… எதுக்கு இப்படி ஒரு ரியாக்சன் தர..”

“அவர்கிட்ட சொன்னா அடுத்து நம்ம வீட்ல சொல்லிடுவாங்க டி..” என்று இன்னும் பயந்தாள்..

“சுத்தம்… எப்படி இருந்தாலும் தெரியதான டி போகுது.. பின்ன என்ன..??” என்று உமா குதிக்க,

“இல்லை இல்லை.. நீ மாப்பிள்ளை கிட்ட பேசு. அவர் பார்த்து பிடிக்கலைன்னு சொல்லிட்டா.. இது அப்படியே நின்னுடும்.. அதுக்குள்ள கிஷோர் வந்திட்டா அவன்  வீட்ல வந்து பேசுறேன்னு சொல்லிருக்கான்…” என்று சுசி முடிவாய் சொல்ல,

“சோ… நீ முடிவு பண்ணிட்டு தான் என்னை வரச் சொன்னியா??” என்று உமா முறைக்க,

“ப்ளீஸ் டி மகி..” என்றாள் கெஞ்சலாய்.

“ஹ்ம்ம் இந்த ஐடியா எல்லாம் யார் சொன்னது…??”

“கிஷோர்…”

“அதானே பார்த்தேன்.. எங்கேயோ உட்கார்ந்துட்டு வக்கனையா ஐடியா சொல்ல மட்டும் தெரியுது.. ஏன் அவனே பேசி தொலைக்க வேண்டியது தானே. ம்ம் சரி சொல்லித் தொலை நான் என்ன செய்யணும்…”

“அது வந்து டி மகி…” என்று இழுத்தவளை பார்க்கும் பொழுதே தெரிந்துவிட்டது அடுத்து எதுவோ பெரிதாய் சொல்ல போகிறாள் என்று.

“நம்ம நாளைக்கு தானடி சென்னை போறோம்…. புஷ்பாத்தை வீட்ல வச்சு தானே பொண்ணு காட்ட போறாங்க…” என்று சுசி இழுக்க,

“ஷ்… இதெல்லாம் தெரிஞ்சது தானே டி.. விசயத்தை சொல்லு..” என்று உமா மீண்டும் முறைத்தாள்.

“புஷ்பாத்தை வீட்ல இருந்து கொஞ்ச தூரம் தான், அந்த மாப்பிள்ளையோட பிளாட் இருக்காம். அட்ரஸ் பாத்தேன். சோ அவரை அங்கேயே போய் பார்த்து பேசிடேன் ப்ளீஸ்..” என்று சுசி சொன்னதும் உமாவிற்கு பக்கென்றானது.

“என்னாது அந்தாள் பிளாட்டுக்கா?? என்ன டி விளையாடுறியா?? நோ நோ என்னால முடியாது.. எதோ அவர் வேலை பாக்குற இடத்துல இல்லை வெளிய எங்கேயாவதுன்னா கூட சரி. வீட்டுக்கெல்லாம்.. நோ நோ.. என்னை ஆளை விடும்மா… இங்க தெரிஞ்சா அவ்வளோ தான்… உன் அம்மாவும் என் அம்மாவும் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க…” என்று கிளம்பத் தயாராக,

சரியாய் அதே நேரம் கிஷோரும் அழைத்து உமாவிடம் பேசி அவள் உதவியை நாட, அவனிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தவளோ சுசியை முறைக்க, 

“ப்ளீஸ் டி மகி.. ப்ளீஸ்..” என்று கெஞ்சி கொஞ்சி கண்ணை கசக்கி என்று ஒருவழியாய் சம்மதிக்க வைத்தாள் சுசி.

ஏனோ உமாவிற்கு இந்த திட்டம் அத்தனை ஒன்றும் மனதிற்கு ஏதுவாய் தோன்றவில்லை. தேவையில்லாத வேறு பிரச்சனைகள் எதுவும் வருமா என்று யோசித்தாள்.

ஆனால் இனி யோசித்து என்ன செய்ய?? அதான் சுசியிடம் சரியென்று சொல்லிவிட்டாளே.

சரி அவளும் தான் பாவம் என்ன செய்வாள்?? நான் இதை செய்வேன் என்று நம்பித்தானே என்னை அழைத்தாள். சரி சென்னை போய் பார்த்துகொள்வோம் என்று தன் மனதை தானே சமாதானம் செய்துகொண்டு ஊருக்கு கிளம்ப மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.

உமா மற்றும் சுசியின் வீடு அருகருகே தான். இருவரின் தந்தைமார்களும் அண்ணன் தம்பிகள். அருகருகே வீடு கட்டி வசிக்கின்றனர். தனி தனி வீடு என்றாலும் உறங்குவது மட்டும் தான் அவரவர் வீட்டில்.

ஆனால் உமா வேலைக்கு என்று சென்ற பிறகு தன் வீட்டிற்கு அவள் வருவதே அரிதாகி விட்டது. அப்படி வந்த நேரத்திலோ இப்படி ஒரு கதை சொல்கிறாள் சுசி.

உமாவிற்கு மனதில் ஒரு யோசனை தான், தன் அப்பா அம்மாவிடம் இதை சொல்வோமா என்று, ஆனால் அவர்களும் எப்படி எடுப்பர் என்று யோசிக்க  முடியவில்லை. பெரியப்பாவிடம் சொல்வோமா என்றால் அவரோ சுசியை ஒருவழி செய்துவிடுவார்.     

சுசியின் அம்மாவோ கொஞ்சம் முறுக்கு பேர்வழி. எப்பொழுது என்ன சொல்வார், என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. பட்டென்று மனதில் தோன்றுவதை பேசிவிட்டு பிறகு ஒன்றுமே நடவாதது போல இருந்துவிடுவார்.

இப்பொழுது அவரது அவசரத்தினால் தான் இந்த பெண் பார்க்கும் படலமே. இல்லையென்றால் சுசியும் உமாவோடு வேலைக்கு சென்றிருப்பாள்.

அன்று இரவெல்லாம் உமாவிற்கு உறக்கமே வரவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எல்லாம் தெளிவாய் முடிவு செய்தாகிவிட்டது. உமா மற்றும் சுசியின் அத்தை மகள் திருமணத்திற்கு தான் இரு குடும்பமும் சென்னை செல்வது. திருமணம் முடிந்ததும் மறுநாள் அப்படியே அவர்களின் அத்தை வீட்டில் வைத்தே பெண் மாப்பிள்ளையை பார்த்து பேசி முடிப்பதாக இருந்தனர்.

பெண் பார்ப்பது என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக தான். ஏறக்குறைய முடிவானது போல தான். மாப்பிள்ளை வீட்டில் முழு சம்மதம் என்று சொல்லியிருந்தனர். இங்கேயும் அனைவர்க்கும் சம்மதம் தான். ஆகையால் தான் சட்டென்று ஒன்றும் செய்யமுடியவில்லை.   

சுசி சொன்னதெல்லாம் இது தான், வீட்டில் பெரியவர்கள் அனைவரும் கல்யாண மண்டபத்தில் இருக்கும் பொழுது உமா மட்டும் நைசாக கிளம்பி அந்த மாப்பிளையை பார்த்து பேசவேண்டும். இதற்கு அந்த மாப்பிள்ளையின் குடும்பமும் தான் திருமணத்திற்கு வருகிறது ஆனால் அவன் வரவில்லை என்று சொல்லிவிட்டானாம்.

“பெரிய இவன், வந்தால் என்னவாம்.. சுசியையும் வைத்தே நேராக விசயத்தை சொல்லிவிடலாம்…” என்று நினைத்தவளுக்கு ஏனோ அவனை காண போகிறோம் என்று எண்ணினாலே மனம் ஒருநிலையில் இல்லை.

என்னதான் நாம் மெதுவாக செயல்பட்டாலும், காலம் அதன் வேலையை சரியாய் தானே செய்யும். இதோ இவர்கள் அனைவரும் சென்னைக்கும் வந்துவிட்டனர். மறுநாள் திருமண விசேசம். உமாவும் அந்த அவனை சந்திக்க வேண்டும்.

அனைவரும் வெகு நாள் கழித்து ஒன்றாய் இருக்கும் சந்தர்ப்பம் என்பதால் சிரிப்பிற்கும் பேச்சிற்கும் பஞ்சமில்லை. சுசி கூட கொஞ்சம் தைரியமாய் இருந்தாள். ஆனால் உமா தான், அவள் மனம் அவளை போட்டு பாடாய் படுத்தியது.

இது சரியாய் வருமா வருமா?? என்று அவள் மனம் யோசித்துக்கொண்டே இருந்தது.

என்ன யோசித்து என்ன செய்ய மறுநாளும் வந்துவிட்டது. இதோ கிளம்பு கிளம்பு என்று சுசி வேறு படுத்துகிறாள்.

“போறேன் டி.. இரு…” இரண்டொரு முறை சொன்னாலும் உமாவின் கால்களோ மண்டபத்தை விட்டு நகரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

“ப்ளீஸ் டி மகி.. போயேன்.. அந்த மாப்பிள்ளையோட அப்பா அம்மா இங்கிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நீ அங்க போயிட்டு வா.. ப்ளீஸ்…” என்று சுசி கெஞ்ச, கடவுள் மேல் பாரத்தை போட்டு உமா கிளம்பினாள்.

ஆண்டவா நல்லது நினைத்து தான் நான் இதை செய்கிறேன். நடப்பது அனைத்தும் நல்லதற்கே ஆகட்டும் என்று வேண்டிக்கொண்டே சரியான விலாசம் கண்டுபிடித்து, இதோ அந்த பிளாட்டின் முன்னும் வந்து நின்றுவிட்டாள்.

அப்படியே திரும்பி சென்றுவிடுவோமா என்று தோன்றிய மனதை சுசிக்காக கட்டுபடுத்தி, இரண்டொரு முறை ஆழ்ந்த மூச்செடுத்து காலிங் பெல்லை அழுத்த,

உள்ளிருந்து ஒரு குரல், “டோர் ஒப்பன்ல தான் இருக்கு…” என்று.

“நம்ம வருவோம்னு முன்னமே தெரியுமோ??!!!” என்று யோசித்தபடி உள்ளே சென்றவளின் பார்வை எங்கேடா அந்த குரலுக்கு சொந்தக்காரன் என்று அலச,

“அம்மா ஒரு பங்கசன் போயிருக்காங்க, சின்க்ல இருக்கிறதை மட்டும் வாஸ் பண்ணிட்டு கிளம்புங்க…” என்று ஒரு இளைஞன் தனது மடிக்கணினியில் கண்ணை புதைத்துகொண்டு யார் வந்திருக்கிறார்கள் என்று கூட பாராது அவன் சொன்னான்.

தன்னை செர்வன்ட் என்று நினைத்துகொண்டு சொல்கிறான் என்று எண்ணியவள், வந்திருப்பவர்கள் யாராய் இருந்தாலும் இப்படிதான் முகம் கூட பார்க்காமல் பேசுவானா என்று தோன்ற, “எக்ஸ்கியூஸ் மீ…” என்று பல்லை கடித்து அவள் சொன்னதில் அவன் திரும்ப,   

இருவருமே “நீயா!!!!” என்று ஒருசேர விளிக்க.

அதன் பின் அங்கே இருவரின் அதிர்ச்சி தான் பேசிக்கொண்டது.