Advertisement

அத்தியாயம் – 20

 

சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.

 

“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.

 

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்… நிச்சயமா நான் அதைப்பத்தி பேசவே வரலை… நோ மோர் பார்மாலிட்டி டாக்…”

 

சுகுணா அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே இமைக்காது பார்த்தாள். இது வழக்கமான பெண் பார்க்கும் நிகழ்வல்ல என்று தோன்றியது அவளுக்கு.

 

“எனக்கு உன்கிட்ட ரெண்டே விஷயம் சொல்லணும்… உனக்கு வதனா, இசை பத்தி தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இசை என்னோட பொண்ணு, இனிமே நம்மோட பொண்ணா இருப்பா…”

 

“ரெண்டாவது நீ சீக்கிரம் தமிழ் பேச கத்துக்கணும்…” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.

 

“இப்படி பதில் பேசாம இருந்தா நான் என்ன நினைக்கட்டும்” என்றான் அவன் அவள் பதில் பெற்றுவிடும் நோக்குடன்.

 

“நீங்க ரெண்டு விஷயம் சொல்லணும்ன்னு சொன்னீங்க, சொல்லிட்டீங்க… நானும் அதை கேட்டுக்கிட்டேன், நான் பதில் சொல்லணும்ன்னு நீங்க சொல்லவேயில்லை” என்றாள் ராமிற்கு ஏத்த ஜோடியாய் அழுத்தமாய்.

 

அவள் பேச்சில் கவரப்பட்டவன் அவளைப் பார்த்து அளவாய் புன்னகைத்தான். “சரி பதில் சொல்ல வேணாம் கருத்து சொல்லலாமே…” என்றான் அவன் விடாக்கண்டனாய்.

 

“நட்பை பத்தி நான் என்ன கருத்து சொல்லணும்” என்று ஒரே வார்த்தையில் முடித்தவளை மெச்சுதலாய் பார்த்தான்.

 

“வந்தேன், பார்த்தேன், பேசணும்ன்னு என் கருத்தை உன் மேல திணிச்சதா உனக்கு தோணலையா??” என்றவனுக்கு இல்லையென்று தலையசைத்தாள் அவள்.

 

“ஹ்ம்ம்…” என்று தன் வலக்கையால் மோவாயை தடவிக்கொண்டே “இதையெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொன்னேன்னு உனக்கு தெரிய வேணாமா??”

 

அவனின் இக்கேள்விக்கு அவளுக்கு பதில் தெரிய வேண்டி தானிருந்தது. “சொல்லுங்க…” என்றாள்.

 

“எனக்கு உன்னை பிடிச்சதுனால இதையெல்லாம் நான் உன்கிட்ட சொல்லலை. உனக்கு என்னை பிடிச்சதுனாலயும் என் மேல நீ வைச்ச நம்பிக்கையும் தான் உன்கிட்ட சொல்ல வைச்சுது”

 

“நீங்க உங்க விருப்பத்தையும் சொல்லலை என் விருப்பத்தையும் கேட்கலை… அப்புறம் எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க… எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னு…” என்று கேட்டாள் அவள்.

 

“உங்கப்பாவை பத்தி தான் எனக்கு தெரியுமே… என்னைப்பத்தி அக்கு வேறு ஆணி வேறாய் விசாரிச்சு சொல்லியிருப்பாரே… வதனா, இசை இவங்களுக்கும் அதில அடக்கம்”

 

“நான் அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறேன். நான் உனக்கு சரியானவனா இல்லையான்னு ஒரு அலசு அலசி முடிச்சு இறுதியா நான் வேணாம்ன்னு சொல்லியிருப்பார்”

 

“நீ மட்டும் தான் நான் வேணும்ன்னு சொல்லி இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்கணும். அது ஏன்னு இப்போ நான் விளக்கி சொல்லணுமா…” என்றதும் அவன் உண்மையை பிட்டு பிட்டு வைத்ததில் அவள் வாயடைத்து நின்றிருந்தாள்.

 

அவளையே ஆழப் பார்த்தவன் அவள் கண்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து “எனக்கு உன்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு உனக்கு தெரிஞ்சுக்கணும் அதானே…” என்றான்.

அவன் கேட்டதும் அவள் கண்களில் ஒரு மின்னல் தோன்றியதை உணர்ந்தவன் “உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… பிடிக்கலைன்னா இவ்வளவு தூரம் வந்திருக்கவும் மாட்டேன்…”

 

“நேரடியா நான் நினைக்கறது பேசியிருக்கவும் மாட்டேன்… உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்… நம்ம கல்யாணத்துல பார்க்கலாம்…”

 

“மத்த விஷயங்கள் பத்தி எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு சொல்றேன்” என்று சொல்லி அவள் கன்னம் தட்டி அங்கிருந்து கிளம்பினான் அவன்.

 

அவன் வாயிலை அடையும் முன் “ஒரு நிமிஷம்” என்றிருந்தவளை நின்று திரும்பி பார்த்தான்.

 

“அவங்க வதனா, இசையை நான் எப்போ பார்க்கலாம்??” என்று அவள் கேட்டதும் மீண்டும் திரும்பி வந்தவன் அவளை அப்படியே இறுக்கி தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

 

“சீக்கிரமே பார்க்கலாம்… வதனா பைனல் இயர் படிச்சிட்டு இருக்கா, சிவில் சர்வீஸ்க்கு வேற அவளை தயார் பண்ணச் சொல்லியிருக்கேன்…”

 

“இசை இப்போ வீட்டில தான் இருக்கா, என்னோட சித்தி பொண்ணு வருணிகிட்ட விட்டு வந்திருக்கேன்…” என்றவன் “உன்கிட்ட எந்த பார்மாலிட்டி வார்த்தையும் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்”

“ஆனா…” என்று சொல்லிவிட்டு அவன் நிறுத்த அவன் அணைப்பில் இதயத்துடிப்பு எகிற நின்றிருந்தவள் என்னவென்பது போல் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“ஐ லவ் யூ…” என்றான் அவள் கண்களை பார்த்து.

 

“நான் கிளம்பறேன்… சீக்கிரமே பார்ப்போம்…” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

அடுத்து வந்த நல்ல முகூர்த்த நாளிலேயே அவர்கள் மணநாளும் குறிக்கப்பட விடிந்த அந்த நல்ல பொழுதில் உற்றார் உறவினர் புடைசூழ இசையை தன் மடியில் அமர்த்தியவாறே சுகுணாவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் அவன்.

 

வதனா தான் குழந்தையை வைத்துக்கொள்கிறேன் என்று கூறியும் யாரிடமும் குழந்தையை கொடுக்காது தானே வைத்துக் கொண்டான் அவன்.

 

சுகுணாவின் பெற்றோர்கள் முகம் சுளித்தாலும் வந்திருந்த உறவினர்கள் என்னவென்று தங்களுக்குள் பேசினாலும் எதையும் கண்டுக்கொள்ளவில்லை அவன்.

 

திருமணம் முடிந்த அடுத்த நொடி தன் மடியில் இருந்த குழந்தையை சுகுணாவிடம் தான் கொடுத்தான். அவன் எப்போது கொடுப்பான் என்பது போல் தான் அவளும் காத்திருந்தாள்.

 

சில உறவுகள் தாமாய் உருவாகும், சில உறவுகள் காதலினால் உருவாகும், சில உறவுகள் நட்பினால் கூட உருவாகும், இன்னும் சில உறவுகள் தாய்மையால் உருவாகும்…

 

அந்த பந்தம் ராம் இனி இசை நம் குழந்தை என்று சொன்னது முதல் உருவானதா இல்லை தன் கைகளில் அவளை கொடுத்த போது உருவானதா என்பதை அவள் அறிய முற்படவில்லை.

 

சுகுணாவிற்கும் இசைக்குமான அந்த உறவு அவளின் தாய்மை உணர்வினால் உருவானது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

 

அதற்கேற்றார் போல் திருமணமாகி வருடங்கள் சில கடந்தும் சுகுணா கருத்தரிக்கவில்லை. இசை இருந்ததால் அவர்களுக்கு அந்த குறை என்பதே தோன்றவில்லை.

 

வதனாவும் கல்லூரி படிப்பு முடிந்ததும் தீவிரமாய் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுத ஆரம்பித்தாள். அவளை கோச்சிங்கிற்காய் டெல்லி அனுப்பி படிக்க வைத்தான் ராம்.

 

வதனாவிற்கும் அவனுக்குமான உறவு அழகான நட்பினால் பலப்பட, இசைக்கும் அவனுக்குமான உறவு அன்பினால் பலப்பட்டது.

 

இடையில் கடந்த இத்தனை நாட்களில் ராம் எத்தனையோ முறை பிரியனிடம் பேச முயற்சித்திருக்கிறான். ஆனால் அது மட்டும் முடிந்ததேயில்லை.

பிரியனை பற்றி இனி பேச வேண்டாம் என்று வதனா தான் சொல்லியிருந்தாள். ஆனாலும் அவளாலும் அவனை மறக்க முடிந்ததில்லை.

 

வாய் மட்டுமே வேண்டாம் என்றிருந்தது, மனம் இன்னமும் அவன் விட்டுச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் அவள்.

 

பல முறை அவனுக்காய் அவள் அழுதிருக்கிறாள். ராமிடம் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவன் வருவானாவென்று பல முறை கேட்டிருக்கிறாள்.

 

பிரியன் பேச்சை எடுத்தாலே அவள் உணர்ச்சி வசப்படுகிறாள் என்று தான் ராம் அவனை பற்றிய பேச்சே எடுப்பத்தில்லை.

 

பிரியன் என்றும் அவனை அழைப்பதில்லை. அந்த அழைப்பு வதனாவின் முகம் இறுகச் செய்வதை உணர்ந்திருந்தவன் வதனாவின் மூலம் அறிந்த அவனின் சர்டிபிகேட் பெயரான வல்லவரையன் என்ற பெயரிலேயே அழைப்பான்.

 

முழுப்பெயர் அவன் வாய்க்குள் அதிகம் நுழைந்ததில்லை என்பதால் வல்லவா என்று விளிப்பான் அவனைப் பற்றிய பேச்சின் போது.

 

வதனா சிவில் சர்வீஸ் தேர்வாகி வந்த போது சுகுணாவும் ராமும் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை.

 

ராமின் மூலம் தான் சுகுணா வதனாவை பற்றி அறிவாள். ராம் அனைத்தும் ஒன்றுவிடாமல் அவளிடம் பகிர்ந்திருந்தான், பிரியன் அவனிடம் வதனாவை பார்த்துக்கொள்ள சொல்லி கேட்டது வரை.

 

அவள் கூட கேட்டிருக்கிறாள் நீங்கள் ஏன் அவரை பற்றி வதனாவிடம் சொல்லவில்லை என்று. “அன்னைக்கு அதைப்பத்தி சொல்லாததுக்கு ஒரே காரணம் தான்…”

 

“பிரியனுக்கு என்னை பிடிக்காது அப்படிங்கறதுக்காகவே வதனா என்கிட்ட பேசினதில்லை. ரெண்டாவது அந்த விஷயத்தை நான் சொல்லியிருந்தாலும் அவ நம்பியிருப்பாளான்னு எனக்கு தெரியலை”

 

“அப்படியே நம்பியிருந்தாலும் எனக்கு தகவல் சொல்லணும்ன்னு நினைச்சவன் ஏன் அவளுக்கு தகவல் சொல்லலைன்னு தான் அவ நினைச்சிருப்பா…”

 

“இன்னைக்கு வரைக்கும் எனக்குமே புரியாத புதிரா இருக்கறது வல்லவன் என்கிட்ட பேசினதும்… இப்போ அவன் எங்க இருக்கான்னு என்னால் கண்டுப்பிடிக்க முடியாம இருக்கறதும் தான்”

 

“என்னால எல்லாமே முடியும் அப்படிங்கற இறுமாப்பு எனக்கில்லை சுகு. ஆனா முயன்றா முடியாம இருந்ததில்லை….”

 

“நான் இவ்வளவு முயற்சி எடுத்தும் முடியாம இருக்கறது வல்லவன் எங்க போனான் என்ன ஆனான்னு இந்த நிமிஷம் வரைக்கும் என்னால கண்டே பிடிக்க முடியலை. அவனை மட்டும் கண்டுப்பிடிக்க முடிஞ்சிருந்தா இந்நேரம் அவகிட்ட எல்லாமே சொல்லியிருப்பேன்”

 

“ஏங்க கனடாவில இருந்தப்போ ஒரு முறை கூட அவர்கிட்ட நீங்க பேசவில்லையா??” என்றாள் சுகுணா.

 

“பல முறை முயற்சி செஞ்சேன், முடியலை… உனக்கொண்ணு தெரியுமா நானே அங்க நேரா கிளம்பி போயிட்டேன், ஆனா அவன் அங்கில்லை”

 

“அங்க கேட்டதுக்கு அவன் சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு போயிட்டான்னு சொன்னாங்க…”

 

“அவன் பாஸ்போர்ட் நம்பர் எடுத்து கூட செக் பண்ணி பார்த்திட்டேன். அவன் எந்த ஊர்ல இருக்கான், ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல அவன் இருந்ததா காட்டுச்சு…”

 

“அவர் எதுவும் தப்பா…”

 

“இல்லவேயில்லை சுகுணா… அவன் அப்படி இருக்க மாட்டான்… அவன் என்கிட்ட பேசாம இருந்திருந்தா கூட நானும் ஒரு வேளை அவன் தான் தப்பு பண்ணியிருப்பான்னு நம்பியிருப்பேனோ என்னவோ”

 

“என்னால இந்த நிமிஷம் வரை அவனை தப்பா நினைக்க முடியலை… ஏதோவொரு இல்லுஷன் அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனைன்னு சொல்லிட்டே இருக்கு”

 

“வதனாவை காப்பாத்தி அவன் எங்கயோ மாட்டியிருக்கான்னு மனசு சொல்லுது”

 

“ஏங்க உங்களுக்கு தோணின இந்த விஷயம் ஏன் வதனாக்கு தோணலை. உங்களுக்கு அந்த அண்ணையாவை பிடிக்காம இருக்கும் போதே இவ்வளவு உறுதியா சொல்றீங்க”

 

“இந்த நம்பிக்கை ஏன் வதனாக்கு இல்லை??” என்று அவள் மனதில் தோன்றியதை ராமிடம் கேட்டே விட்டாள்…

 

“நீயும் நானும் பிரச்சனைக்கு வெளிய இருக்கோம். நமக்கு அவளோட கவலை, வருத்தம், ஆற்றாமை எதுவும் தெரியாது…”

 

“அவ பிரச்சனைக்குள்ள இருக்கா, அவளால வேற எதுவுமே சிந்திக்க முடியாது. கொஞ்சம் யோசிச்சு பாரு அவளுக்குன்னு உறவு யாருமேயில்லை…”

 

“சின்ன வயசுல அம்மா இறந்திட்டாங்க, அவளோட பெர்த் சர்டிபிகேட்ல மட்டும் இருக்கற அப்பாப்பற்றி சுத்தமா தெரியாது… வளர்ந்தது ஒரு இல்லத்துல”

 

“அப்படி இருந்தவளுக்கு வல்லவனோட அன்பு எவ்வளவு அற்புதமான விஷயம்ன்னு யோசிச்சு பாரு. திடிர்னு ஒரு நாள் ஏதோவொரு கோபம் அவன் இவளைவிட்டு போய்ட்டான்…”

 

“அந்த நிலையில இருக்கவளுக்கு என்ன தோணும்… பசிச்சவனை பாதி சாப்பிட்டுல எழுப்பிவிட்டவன் நிலை தான் அது… அவளோட முதல் உறவு அவன் மட்டும் தான்… அவளோட மொத்த காதலும் அவன் மேல தான்…”

 

“அப்பட்டப்பட்டவன் அவளோட இல்லை… அவளோட எதிர்பார்ப்பு எல்லாமே அவன் தான்… நீ நினைக்கறியா அவ அவனை தேடலைன்னு, கோபமா பேசறான்னு…”

 

“ஒவ்வொரு நாளும் அவனை தேடுறா… அவன் வரலைங்கற ஏமாற்றம், எதிர்பார்ப்பு இதெல்லாம் தான் அவளை கோபமா காட்டுது… இந்த உணர்வை கூட வெளிப்படுத்தலைன்னா எப்படி சுகும்மா…” என்றான் நீண்ட விளக்கமாய்.

 

“புரியுதுங்க…” என்றாள் அவள் ஒற்றைச்சொல்லாய்.

 

பத்து நீண்ட நெடிய வருடங்கள் கடந்து பிரியனை பார்த்ததாக கபிலன் சொன்ன அன்று தான் என்ன உணர்கிறோம் என்று அளவிட முடியாத உணர்வு ராமிற்கு.

 

கபிலன் பிரியனை நேரில் பார்த்தில்லை தான். வதனாவின் மூலம் நட்பாகி இருந்தா ராமின் மூலமாய் பிரியனை நன்றாகவே அறிவான்.

 

அவனை புகைப்படத்தில் பார்த்தது தான். அவன் பிடிப்பட்ட அன்று கூட இவன் தான் பிரியன் என்று உடனே அவன் கண்டிருக்கவில்லை.

அதே இரவில் பின்னர் நடந்த நிகழ்வின் போது தான் அவன் முழுப்பெயர் அறிந்தான். அப்போது தான் வதனாவின் அதிர்ந்த தோற்றம் எல்லாம் கண்டு ஒன்றை ஒன்று இணைத்து பார்த்து ராமிற்கு தகவல் சொல்லியிருந்தான்.

 

இரவோடு இரவாக வதனா வல்லவரையனின் திருமண புகைப்படத்தை கபிலனுக்கு அனுப்பி வைத்து அதை மறுநாள் செய்தித்தாளில் வருமாறு செய்தவன் ராமே… இதை வதனா அறிந்தால்??

 

ராம் பழைய நினைவுகள் கலைந்து நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தான். இன்னும் இரண்டு நாளைக்குள் அவன் வேலை முடித்து ஹைதராபாத் கிளம்பிச் செல்ல வேண்டும்.

 

வல்லவன் வேறு எதற்காய் அவனை அழைத்திருப்பான் என்ற யோசனை மறுபுறம் ஓடியது அவனுக்குள்.

 

வதனாவிற்கு எதுவும் பிரச்சனையோ என்று அவர்களை சுற்றியே எண்ணம் சென்றுக் கொண்டிருந்தது. தன்னை மீறி கண்ணயர்ந்தான் அவன்.

____________________

 

மறுநாள் விடிந்து வெகு நேரம் கழித்து எழுந்த பிரியனுக்கு லேசாய் தலை வலிப்பது போலிருந்தது. காலைக்கடன் முடித்து முகம் கழுவி சமையலறைக்கு சென்றவன் தனக்கு சூடாய் காபி கலந்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.

 

செய்தித்தாளில் கவனம் பதித்தவாறே காபியை அருந்தி முடிக்கவும் தலைவலி சற்று மட்டுப்பட்டிருந்தது அவனுக்கு.

 

வாசல் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க எழுந்து சென்றான். கதவை ஒரு பக்கமாய் திறக்க வீட்டு ஓனர் தான் நின்றிருந்தார் “வாங்க சார்…” என்றான்.

 

“நானில்லைப்பா இவங்க தான் உன்னை பார்க்கணும்ன்னு வந்திருக்காங்க…” என்றவர் வழிவிட பின்னால் நின்றிருந்தவர்களை பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

“உள்ள வரலாமாப்பா…” என்று உடைந்த குரலில் கேட்டவரை நோக்கியவன் கண்கள் “இதென்ன கேள்வி யார் வீட்டுக்கு வர்றதுக்கு நீங்க பர்மிஷன் கேட்கறீங்க, உள்ள வாங்க” என்றான் அவர்களை பார்த்து.

 

ஹவுஸ் ஓனர் அங்கேயே நின்றிருந்தார். “உனக்கு தெரிஞ்சவங்களாப்பா…”

 

“ஹ்ம்ம் ஆமாம் அங்கிள்… எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்றதை விட என்னை இந்த உலகத்துக்கு தெரிய வைச்சவங்க…” என்று சொல்லி நிறுத்தினான்.

 

“என்னோட அம்மாவும் அப்பாவும்…” என்று முடிக்கவும் அங்கு கனத்த அமைதி.

 

வீட்டு ஓனர் ஒன்றும் பேசவில்லை. இதுவரை அவர்களை இங்கு கண்டதில்லை அவர்.

“ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறீங்க பேசிட்டு இருங்க…” என்று சொல்லி நாசூக்காய் நகர்ந்துவிட்டார் அவர்.

 

அவன் தந்தை ஆளவந்தான் வந்ததில் இருந்து ஒன்றுமே பேசவில்லை. அவரை ஒரு பார்வை பார்த்தான் பிரியன், திரும்பி அவன் அன்னை உமையாளை பார்த்தான்.

 

“அப்பாக்கு டீ தானே, உங்களுக்கு காபி கொண்டு வர்றேன்” என்று உள்ளே நகர்ந்தவனை நிறுத்தினார் அவன் அன்னை.

 

“நாங்க ஏன் வந்தோம்ன்னு கேட்க மாட்டியா??” என்றது அவன் அன்னை.

 

“உங்க பையனை பார்க்கத் தானே வந்தீங்க…” என்றான் அவனும்.

 

“என்னாச்சுடா உனக்கு?? இவ்வளவு வருஷமா நாங்க இருக்கோமா இல்லையான்னு கூட நீ பார்க்கலையே??” என்று ஆதங்கமாய் கேட்டார் அவர்.

 

“நீங்க கூட தானே என்னை தேடலை??” என்றான் அவனும் தன் மனக்குறை தீராமல்.

 

“நாங்க தேடாம இருந்தோம்ன்னு உனக்கு தெரியுமா… பெத்தவங்களுக்கு கோபம் வரக்கூடாதா… அதுல பேசாம இருந்தா நீ அப்படியே இருந்துக்குவியா…”

 

“ஹைதராபாத்க்கு வந்து உன்னை நாங்க விசாரிச்சோம்… ஆனா நீ தான் வெளிநாட்டுக்கு போயிட்டேன்னு சொன்னாங்க… உன் பொண்டாட்டி பத்தி எங்களுக்கு எந்த விபரமும் தெரியலை”

 

“நீ அவளையும் கூட்டிட்டு போயிட்டியா, இல்லை அந்த ஊர்ல தான் இருக்காளான்னும் எங்களுக்கு தெரியலை… உன் போன் நம்பர் கேட்டா அதையும்அங்க இருக்கவங்க கொடுக்கலை”

 

அன்னையின் பேச்சு மனதிற்கு புண்ணுக்கு தடவிய புனுகாய் இருந்தது அவனுக்கு. தன்னை அவர்கள் தேடவில்லையோ என்ற வருத்தம் மனதின் ஓரத்தில் அவனுக்கு இருந்தது உண்மையே!!

 

“ஹ்ம்ம்…” என்றான் அவர் பேச்சுக்கு பதிலாய்.

 

“ஏன்டா உனக்கு எங்களை வந்து பார்க்கணும்ன்னு தோணவேயில்லையா?? உங்களை பத்தி பேப்பர் பார்த்து தான் நாங்க தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு… அப்படி தானே, உன் பொண்டாட்டி கலெக்டரா??” என்றார் உமையாள்.

 

“இங்க இருந்தா தானேம்மா பார்க்க?? நான் எங்க இருந்தேன்னு தெரியாம இருந்தப்போ நான் எப்படி வந்து பார்த்திருக்க முடியும்” என்றான் மெதுவாய்.

 

“என்ன சொல்றே பவளா??”

 

“அம்மா இப்படி பொண்ணு பேர் மாதிரி கூப்பிடாதீங்கன்னு உங்களை எத்தனை முறை சொல்றது” என்று மகன் சொன்ன போது பழைய பிரியனை பார்க்க முடிந்தது அவரால்.

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு… நீ எங்க தான் போனே அப்போ… உன் பொண்டாட்டி எங்க?? ஆபீஸ் போயிட்டாளா??”

 

“அம்மா…” என்று இடைவெளி விட்டவன் “ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க… இந்த இடைப்பட்ட நாள்ல இங்க நிறைய பிரச்சனைகள் நடந்து போச்சு…”

 

“நாங்க இப்போ ஒண்ணா இல்லை… என்ன பிரச்சனை என்ன நடந்துச்சுன்னு இப்போ நான் யார்கிட்டயும் விளக்குற சூழ்நிலையில இல்லை”

 

“என்னடா சொல்றே??”

 

“அம்மா நான் இப்போ சொன்னது தான்… என்கிட்ட எந்த விளக்கமும் எதிர்பார்க்காதீங்க… உங்களை நான் பார்க்காம இருந்ததுக்கும் காரணமிருக்கு…”

 

“ஆனா ஒரேடியா நீங்க என்ன பண்றீங்கன்னு கூட தெரியாம எல்லாம் நானில்லை… தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி அவ இப்போ எங்க இருக்கா அப்படிங்கறது வரை எனக்கு தெரியும்”

 

“பவளா நீங்க பிரிஞ்சு இருக்க தான் அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணியாடா…”

இதற்கு அவனிடம் எந்த பதிலுமில்லை… பேசாமல் மௌனம் காத்தான்… “ஒரே ஊர்ல இருக்கீங்க… அவகிட்ட போய் நீ பேசக்கூடாதா… அப்படி என்னடா வீம்பு உனக்கு…”

 

“அம்மா உங்களுக்கு எப்படி நாங்க இந்த ஊர்ல இருக்கோம்ன்னு பேப்பர் பார்த்து தெரிஞ்சுதோ… அதுக்கு முதல் நாள் தான் எனக்கும் தெரியும் அவ இந்த ஊர்ல இருக்கறது”

 

மகன் பேசுவது சத்தியமாய் அவருக்கு புரியவேயில்லை. ஆளவந்தான் அதுவரையிலும் கூட மகனுக்கும் தாய்க்குமான பேச்சில் குறுக்கே வந்திருக்கவில்லை.

 

“நான் உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றேன்” என்று உள்ளே சென்றவனை தடுத்தார் உமையாள்.

 

“நான் செய்யறேன்…”

 

“இருக்கட்டும்மா… எங்களுக்காக நீங்க தானே எப்பவும் செய்வீங்க… உங்களுக்காக நான் செய்யறதை தடுக்காதீங்க” என்றுவிட்டு உள்ளே சென்றவனை கண்டு மனம் வலித்தது அந்த அன்னைக்கு.

 

கடைக்கு சென்று வா என்று சொன்னால் கூட ஓரடி எடுத்து வைக்க யோசனை செய்வான், குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கூட யாராவது கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க வேண்டும்.

 

அப்படிப்பட்ட மகன் தங்களுக்காய் காபி கலக்க சென்றது கொஞ்சம் ஆச்சரியம் என்றால் இவன் வாழ்க்கையில் என்ன நடந்ததோ என்ற வேதனையையும் அவருக்கு கொடுக்கவே செய்தது.

 

அவர் கண்கள் வீட்டை அலசி ஆராய்ந்தது. அவ்வளவு சுத்தமாய் வைத்திருந்தான் வீட்டை. அவன் ஹைதராபாத்தில் தனியாய் இருந்த போது கூட இவ்வளவு சுத்தம் இருந்ததில்லை என்றே அவருக்கு தோன்றியது.

 

சற்று நேரத்தில் வெளியே வந்தவன் டீயை தந்தையிடம் நீட்டினான். அவர் ஒரு முறை அவனை ஏறிட்டு எதுவும் சொல்லாமல் அதை எடுத்துக்கொண்டார்.

 

அன்னையிடம் காபியை கொடுத்துவிட்டு அருகிருந்த இருக்கையில் அமர்ந்தான் அவன்.

 

காபியை குடித்து முடிக்கும் வரை அங்கு எந்த பேச்சும் எழவில்லை. “நாங்க இங்க இருக்கலாம்ல” என்றார் உமையாள் மெதுவாய்.

 

“இதென்ன கேள்வி உங்க மகன் வீட்டில இருக்க பெர்மிஷன் கேட்பீங்களா நீங்க…” என்றவன் அதை கோபமாய் சொல்கிறான் என்று புரிந்தது அவருக்கு.

 

“உன்னோடவே தான் இருக்க போறோம்… அப்பா ரிட்டையர்மென்ட் ஆகிட்டார்…”

 

“அப்போ நம்ம வீடு??”

“அது பூட்டி இருக்கட்டும், கொஞ்ச நாள் கழிச்சு வேணா வாடகைக்கு விட்டிறலாம்…”

 

“அம்மா நீங்க இங்க ஒரு வாரம், பத்து நாள் ஏன் ஒரு மாசம் கூட இருங்க… ஆனா அப்புறம் நீங்க ஊருக்கு போய்டுங்க…” என்று சொன்னதும் ஆளவந்தான் முகம் கோபமாய் மாறியிக்க உமையாள் முகம் வாடியது.

 

“என்னை சுற்றி கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கு… இப்போ நீங்க என்னோட இருக்கறதுனால அந்த பிரச்சனைகள் உங்களையும் துரத்தும் அது வேணாம்மா… எல்லாமே என்னோட போகட்டும்…”

 

“நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க… நாம எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்…”

 

“என்னைக்கு நான், என் மனைவி, குழந்தையோட இந்த வீட்டில ஒண்ணா இருக்கேனோ அன்னைக்கு நீங்களும் என்னோட இருக்கணும்ன்னு விரும்பறேன்”

 

அதுவரையில் பிடித்து வைத்த பிள்ளையார் போன்று இருந்த ஆளவந்தான் முதல் முறையாய் வாயை திறந்தார்.

 

“உனக்கு குழந்தை இருக்கா…” என்று அவர் கேட்டப்போது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது புரிந்தது அக்கணம். மெதுவாய் தந்தையை அவன் திரும்பி பார்க்க உமையாளும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.

“ஏன் பவளா உன் குழந்தையை பத்தி கூட எங்ககிட்ட சொல்லவேயில்லை அப்படி என்னடா நாங்க பாவம் செஞ்சோம்…”

 

“அம்மா எனக்கே என் குழந்தை பத்தி கொஞ்ச நாளா தான் தெரியும்மா…” என்று சொல்லும் போது அந்த குரலில் அவ்வளவு வேதனை.

 

“வல்லா…” என்றழைத்தார் தந்தை.

 

“அப்பா…”

 

“உனக்கு என்ன தான் பிரச்சனை?? நாங்க உன் கஷ்டத்துல பங்கெடுத்துக்க கூடாதா…”

 

“தாராளமா பங்கெடுத்துக்கலாம்ப்பா… ஆனா அது உங்களை பாதிக்கறதை நான் விரும்பலை… வாசவிக்கும் (தங்கை) அவ குடும்பத்துக்கும் கூட என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுப்பா”

 

“வல்லா…”

 

“இவ்வளவு நாள் பொறுத்தாச்சு… இன்னும் கொஞ்ச நாள் தான், எனக்காக பொறுத்துக்கோங்க… இதுக்கு மேலயும் உங்க எல்லாரையும் பிரிஞ்சிருக்க என்னாலையும் முடியாது”

 

“எனக்கு எல்லாருமே வேணும்… நாம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்… என் பொண்ணு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டின்னு எல்லா சொந்தத்தோடவும் வளரணும்”

 

“இழந்தெல்லாம் முதல்ல இருந்து என்னால கொடுக்க முடியலைன்னாலும் நிரந்தரமான அன்பை அவளுக்கு கொடுக்கணும்ன்னு நான் விரும்பறேன்…”

 

“பேத்தியா??” என்றார் ஒற்றைச்சொல்லாய்.

 

“ஹ்ம்ம்…”

 

“பார்க்கலாமா??” என்று ஏக்கமாய் கேட்டார் உமையாள்.

 

“ஒரு நிமிஷம்” என்றவன் தன் கைபேசியில் மூவருமாய் இருப்பது போன்று அவன் உருவாக்கிய அந்த புகைப்படத்தை அவர்களுக்கு காண்பித்தான்.

 

“இது எப்போ எடுத்தீங்க??”

 

“தனித்தனியா இருக்க போட்டோவை நான் தான் அப்படி சேர்த்தா போல மாத்தி வைச்சிருக்கேன்” என்றான் விளக்கமாய்.

 

“என்னை மாதிரியே இருக்கா…” என்று பூரிப்பாய் சொன்னார் உமையாள், விழியின் ஓரம் லேசாய் ஈரம் கசிந்தது அவருக்கு.

 

“எனக்கு அவளை பார்க்கணும்…” என்றவரின் பேச்சில் அப்பட்டமான ஏக்கம் தெரிந்தது. உமையாள் வாய்விட்டு கேட்டதை ஆளவந்தாரின் பார்வை கேட்டதை கண்டுக்கொண்டான் அவன்.

 

“அவ இங்கில்லை ஹைதராபாத்ல இருக்கா”

 

“சீக்கிரமே எல்லாரும் பார்க்க தானே போறோம்…” என்று அவர்களை சமாதானம் செய்யும் விதமாய் பேசினான்.

 

அவர்கள் வந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. பிரியன் தன் அலுவலகத்தில் கொஞ்சம் பிசியாய் இருந்த வேளை அது.

 

அவனுக்கு பார்த்திபனிடம் இருந்து போன் வந்தது. ‘இவனா நமக்கு போன் செய்யறான்… நாம தானே எப்பவும் போன் பண்ணுவோம்…’

 

‘வதுவுக்கு எதுவும் பிரச்சனையா இருக்குமோ…’ என்று மனம் பதறியது. ராம் வதனாவின் மாற்றல் பற்றி சொன்ன மறுநாள் காலையே அவன் பார்த்திபனுக்கு போன் செய்துவிட்டான்.

 

அவள் அங்கிருக்கும் அந்த ஒரு வாரமும் அவளை பத்திரமாய் பார்த்துக் கொள்ளச் சொல்லி. எதுவாய் இருந்தாலும் தனக்கு போன் செய்யுமாறு.

 

இப்போது அவனாய் அழைக்கவும் பதட்டமே அவனுக்கு. யோசனைவிடுத்து போனை அட்டென்ட் செய்தான். “சார் பார்த்திபன் பேசறேன்…”

 

“சொல்லு பார்த்திபா வதுக்கு எதுவும் பிரச்சனையா??” என்றவனின் குரலில் இருந்த பதட்டம் புரிந்தவன் “அதெல்லாம் இல்லை சார்… இது வேற??”

 

“என்ன??”

 

“உங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருக்காங்க சார்… மேடமை பார்க்க போயிருக்காங்க… நீங்க உங்கப்பா மாதிரி இருக்கீங்க, அதான் என்னால அடையாளம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது”

 

“மேடம் ரூம்ல தான் இருக்காங்க இப்போ… அவங்க உங்களுக்கு தெரிஞ்சு வந்திருக்க மாட்டாங்கன்னு தோணிச்சு. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்ன்னு போன் பண்ணேன்” என்றுவிட்டு போனை வைத்தான் அவன்.

 

‘இவங்களை யாரு அங்க போகச் சொன்னது… அதுக்குள்ளே என்ன அவசரம்…’ என்று நெற்றி சுருக்கி யோசித்தவன் செய்துக் கொண்டிருந்த வேலையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு உடனே கிளம்பினான்…

 

காலனவன்

கூட்டிச்சென்றிருந்தால்

காற்றிலே

கலந்திருப்பானவன்!!

 

கூட்டிச் சென்றது

காலனல்ல

காலமே…

எதிர்காலமே!!

 

நிகழ்காலத்தில்

தொலைத்து

அவனை

இறந்தகாலமாக்கி

எதிர்க்காலத்தில்

மீண்டும் விட்டுச்செல்ல

விதி தன் விளையாட்டை

ஆடியது அவன்

வாழ்க்கையை

பகடியாக்கி

பகடையாக்கி

உருட்டியது…

 

மீண்டு(ம்) வருவானவன்!!

தன் நிலை சரி செய்வானவன்!!

 

Advertisement