Advertisement

அத்தியாயம் – 5

 

ஆறு வருடங்களுக்கு பின்

—————————————————

 

“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்ம்மா…” எப்போதும் போல் சொல்லிக்கொண்டு தான் கிளம்பினான் சிவரூபன்.

 

அன்னையிடமிருந்து மறுமொழி வராது என்றறிந்திருந்தும் அதை செய்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் அவன் முன் டிபனை கொண்டு வந்து வைத்தார்.

 

அவன் அன்னை அவனிடத்தில் பேசாமல் போனதில் முதல் சில நாட்கள் அவரை பேச வைக்கவென சாப்பிடாமலே கிளம்பி செல்லுவான்.

 

அவரும் அவனை சாப்பிடு என்றெல்லாம் சொல்லவே மாட்டார். பிறகு தான் தெரிந்தது அவர் தன்னையும் வருத்திக் கொள்வது. அன்று மாலை வீடு திரும்பியவனை சங்கவி தான் காய்த்து எடுத்தாள்.

 

“நீ சாப்பிடலைன்னா எப்படியோ போக வேண்டியது தானே. நீ சாப்பிடலைன்னு இந்த அம்மாவும் சாப்பிடாம மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பிட்டல் போய் ஏன்டா இப்படி பண்ணுறே” என்று ஆதங்கமாய் கத்தியே விட்டாள் அவள்.

 

அன்று முதல் அவன் உணவருந்தாமல் வீட்டிலிருந்து கிளம்பியதில்லை. சந்திரனுக்கு திருமணமாகி தனியே வீடு பார்த்து சென்னையில் குடிபெயர்ந்து விட்டானவன்.

 

பெற்றவர்கள் பற்றி எல்லாம் எண்ணவில்லை, மனைவிக்கு வசதிப்படாது என்று சொல்லிச் சென்றுவிட்டான்.இப்போதுமுழுக்க வீட்டை நிர்வாகம் செய்வது சிவரூபனே.

 

சாப்பிட அமர்ந்தவனுக்கு சில வருடங்களின் முன் நடந்த நிகழ்வுகள் கண் முன்…

 

சிவாஅன்னையின் பேச்சை கேட்டானோ இல்லை அவனுக்கே தோன்றியதோ பாலிடெக்னிக் படிப்பை அந்த வருடத்திலேயே வெற்றிகரமாக முடித்துவிட்டான் எந்தவித அரியரும் இல்லாமல்.

 

அவன் நன்றாக படித்துக் கொண்டிருந்தவன் தான் இடையில் விளையாட்டின் மேல் ஆர்வம் சென்றதில் படிப்பை கோட்டை விட்டிருந்தான்.

 

கூடைப்பந்தும் கால்பந்தும் அவனுக்கு மிகப்பிடித்த விளையாட்டு. அதில் சென்றிருந்த ஆர்வம் படிப்பின் மேல் குறைந்ததில் தான் படிப்பின் மீதான ஆர்வம் விட்டு போயிருந்தது.

 

அவன் படிப்பு முடியவும் சந்திரனின் திருமணம் நெருக்கி வரவும் சரியாக இருந்தது. சந்திரனுக்கு பெண் பார்த்து மணமுடித்திருக்க அவன் அடுத்த ஆறு மாதத்தில் சென்னைக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டான்.

சிவாபாலிடெக்னிக் படிப்பை முடித்ததும் தன் முயற்சி செய்து சென்னையில் தனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டு அண்ணா யுனிவர்சிட்டியில் பகுதி நேரமாக இன்ஜினியரிங்கில் சேர்ந்திருந்தான்.

 

தன் படிப்பை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் படிப்பிற்கென்று ஒன்றையும் அவன் எதிர்பார்க்கவில்லை. தன் செலவுகளையும் தானே பார்த்துக் கொண்டான்.

 

நேரடியாக இரண்டாம் வருடத்தில் இருந்தே படிப்பை தொடங்கியிருக்க அதற்கு முடிவுரையாக மூன்றாம் வருட இறுதியில் ஒரு நாள் வீட்டிலிருந்து அவனுக்கு அழைப்பு.

 

பைக்கில் சென்ற போது அவன் தந்தைக்கு ஆக்ஸிடென்ட் என்று. பலத்த அடிப்பட்டிருக்க இவன் சென்று சேரும் நேரம் மருத்துவர் அவன்அன்னையிடமும் தங்கையிடமும் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

 

நேரே அருகில் சென்றவன் “என்னாச்சு டாக்டர் அப்பாக்கு இப்போ எப்படி இருக்கு??” என்று தான் யார் என்பதை பேச்சின் மூலமே சொன்னான்.

 

“மேஜர் இஞ்சுரி தான். கைகால்ல நல்ல அடி. அவருக்கு நெறைய ப்ளட் லாஸ் இருக்கு, உடனே ப்ளட் ஏத்தணும். அதுக்கு அரேன்ஜ் பண்ண சொல்லி தான் சொல்லிட்டு இருக்கேன்” என்றார் அவர்.

 

“சரி டாக்டர் நான் அரேன்ஜ் பண்றேன். வேற ஒண்ணும்…” என்று முடிக்காமல் நிறுத்தினான்.

 

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை… நீங்க முதல்ல ப்ளட் அரேன்ஜ் பண்ணுங்க. மிச்சத்தை அப்புறம் பேசலாம்” என்று தன் வேலை முடிந்ததென அவர் நகர்ந்துவிட்டார்.

 

“அண்ணன் எங்கே?? அவனுக்கு சொல்லியாச்சா இல்லையா??” என்று இருவரையும் பொதுவாக பார்த்து கேட்டான் சிவரூபன்.

 

“உனக்கு முன்னவே அண்ணனுக்கு தான் போன்போட்டேன்…” என்றாள் தங்கை அழுகையினூடே

 

“அவனுக்கும் அப்பாக்கும் ஒரே ரத்தம் தானே…” என்று முணுமுணுத்துக்கொண்டே சந்திரனுக்கு அழைத்தான்.

 

“அண்ணா… எங்க இருக்கே?? எப்போ வருவே?? ஓ!! வந்துட்டியா சீக்கிரம் வா!!” என்றுவிட்டு போனை வைத்தவன் “கீழே தான் இருக்கானாம்” என்றான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில்சந்திரன் அவன் மனைவியுடன் உள்ளே நுழைந்திருந்தான்.தந்தையை பற்றிய அவனின் விசாரிப்பிற்கு சங்கவி தான் பதில் கொடுத்து கொண்டிருந்தாள்.

 

“என்ன பேசணுமோ அப்புறம் பேசிக்கோங்க. அண்ணா நீ முதல்ல வா டாக்டரை போய் பார்ப்போம். அப்பாக்கு ப்ளட் ஏத்தணும்ன்னு டாக்டர் சொன்னார்”

“உனக்கும் அப்பாக்கும் ஒரே குரூப் தானே, லேட் பண்ண வேண்டாம்” என்று அண்ணனின் கையைப் பிடிக்க சந்திரனின் மனைவி சங்கீதா ஒரு மாதிரியாய் பார்த்தாள்.

 

“அவரை ஏன் கூப்பிடுறீங்க?? அவரேஒல்லியா இருக்காரு. அவரு ரத்தம் கொடுத்தா அலண்டு போக மாட்டாரா… என்னத்தை நீங்க சொல்லக் கூடாதா உங்க பிள்ளைக்கு”

 

“ரத்தம் தானே அதை நாம வெளிய ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்றவளை எரிக்கும் பார்வை பார்த்தான் சிவா.

 

“சங்கீதா சொல்றதும் சரி தான். அப்படியே பண்ணிடலாம்” என்று ஒத்து ஊதிய அன்னையை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்தான்.

 

“ஹேய் கவி உனக்கும் அப்பாக்கும் ஒரே குரூப் தானே. நீ போய் ரத்தம் கொடு”

 

“என்ன பேசறே?? அவ பொம்பிளை பிள்ளை அவளைப் போய்…” என்று கொஞ்சம் குரலுயர்த்தினார் மாலினி.

 

“அப்போ உங்க அருமை மூத்த மகனை கொடுக்கச் சொல்ல வேண்டியது தானே. எப்பவும் ஒருத்தர் சொல்லி பெருமைபட்டுக்கறாரே என் ரத்தம் என் ரத்தம்ன்னுஅந்த ரத்தம் அவருக்கே ரத்தம் கொடுக்க மாட்டேங்குதே” என்று குத்தி பேசினான் அவன்.

 

“சங்கவி அவனை பேச வேணாம்ன்னு சொல்லு”

 

“பேசத் தான் செய்வேன், என்னை மட்டும் தானே உங்களுக்கு எல்லாம் சொல்ல முடியும். நான் தானே உங்களுக்கு எல்லாம் இளிச்சவாய் உள்ள படுத்துகிடக்குறவருக்கு நான்னா இளக்காரம் தானே”

 

“டேய் சிவா எதுக்கு இப்போ தேவையில்லாம பேசறே??” என்று வாயை திறந்தான் சந்திரன்.

 

“தேவைக்காக தான் பேசிக்கிட்டு இருக்கோம். தேவையில்லாம பேசலை”

 

“இப்போ என்னாங்குற??” சந்திரன்

 

“உன்னால ரத்தம் கொடுக்க முடியுமா?? முடியாதா??”

 

“அதான் அவர் கொடுக்க வேணாம்ன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு அவரை கேக்கறீங்க” என்று சந்திரனுக்கு முந்தி பதில் சொன்னாள் அவன் மனைவி சங்கீதா.

 

சந்திரன் மனைவியின் சொல்லுக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. சிவாஎல்லோரையும் ஒரு தீப்பார்வை பார்த்தவன் சங்கவியை இழுத்துக்கொண்டு மருத்துவரை பார்க்கச் சென்றான்.

 

அவருக்கு மேலும் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட தன் நண்பன் ஜெகதீஷுக்கு அழைத்தான். அவனிடம்விபரம் சொல்ல அவனும் கையோடு அவன் இரு நண்பர்களை அழைத்து வந்திருந்தான்.

 

அதோ இதொவென்று சதாசிவம் வீட்டிற்கும் வந்துவிட்டார். அவருக்கு ஒரு பக்கம் முழுவதும் பலத்த அடி என்பதால் அவரின் கை கால் ஒரு பக்கம் முழுவதும் செயல்படவில்லை.

 

இனி அவரால் வேலைக்கு போக முடியாது என்ற நிலை ஆனது. சந்திரனோ மாதம் இவ்வளவு வீட்டிற்கு தருவதாக கூறி ஒதுங்கிக் கொள்ள அந்த பணம் போதாது என்றுணர்ந்த சிவா தந்தையின் கடைக்கு செல்ல ஆரம்பித்தான்.

 

மூன்றாம் வருட தேர்வை மட்டும் எப்படியோ சென்னைக்கு சென்று எழுதி முடித்து வந்திருந்தான். கடைசி வருடப்படிப்பு அப்படியே நின்று போனது.

 

அன்றிலிருந்து இன்று வரை அந்த வீட்டிற்கு அவன் மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கிறான்.

 

முதல் சில மாதங்கள் மட்டுமே சந்திரனின் பணத்தை வாங்கிக்கொண்டவன் அது வரத் தாமதமான நிலையில் அதை வேண்டாமென மறுத்து தானே முழுமூச்சாய் உழைக்க ஆரம்பித்தான்.

 

சங்கவி கல்லூரிப் படிப்பை முடித்து இதோ இந்த ஒரு வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள்சம்பளம் அவளின் வங்கிக் கணக்கில் சேமிப்பாய் தான் உருமாறிக் கொண்டிருந்தது.

சிவா அதை எப்போதும் எடுத்ததில்லை.தன் எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு நிகழ்வுக்கு வந்தவன் டிபனை சாப்பிட்டு எழுந்தான்.

 

“சங்கவி” என்றழைத்தார் மாலினி.

 

“என்னம்மா??”

 

“அவன்கிட்ட சொல்லிட்டியா??”

 

“என்ன சொல்லணும்மா??” என்றாள் அவள்தெரிந்து கொண்டே

 

“இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. அவனை நேரத்துக்கு வரச்சொல்லு”

 

“ஆனாலும் நீ பண்றது ரொம்ப அநியாயம்மா எவ்வளவு வருஷத்துக்கு தான் நீ இப்படி பேசாம இருப்பே??”

 

“அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது….” என்று மகளை முறைத்தார் அவர்.

 

“சொன்னாமட்டும் உனக்கு வந்திருமே மூக்குக்கு மேல” என்றவள் சிவாவின் முன் வந்து நின்றாள்.

 

“எல்லாம் கேட்டுச்சு, நான் மூணு மணிக்கே வீட்டுக்கு வந்திடுவேன். நீ இன்னைக்கு லீவ் தானே போட்டிருக்கே” என்று தங்கையை விசாரித்துக் கொண்டான்.

 

“ஹ்ம்ம் ஆமா லீவ் போடலைன்னாஉங்கம்மா காளி அவதாரம் எடுப்பாங்களே”

 

“ஹேய் அதென்ன உங்கம்மா?? ரொம்ப கொழுப்பு கூடிப்போச்சு உனக்கு”

 

இப்போதெல்லாம் சங்கவியும் அவனும் சகஜமாக பேசி பழகிக் கொண்டனர். சிறுவயது போல் சண்டை போட்டுக் கொள்வதில்லை.

 

சங்கவிக்கு சந்திரனைவிடவும் சிவாவின் மேல் அதிக பிரியம் என்று கூட சொல்லலாம். சந்திரன் எப்போதும் ஒட்டாத ரகம், சிவாவை எப்போது அவள் தந்தை மட்டம் தட்டுவதில் உடன் அவளும் சேர்ந்து கொண்டாள் அப்போது.

 

இப்போது காலம் எல்லாம் மாற்றிவிட்டது.சதாசிவம் மாறவில்லை எப்போதும் போல் சிவாவை குறை சொல்லிக் கொண்டு தானிருந்தார்.

 

இத்தனைக்கும் அவன் தான் அவரை குளிக்க வைப்பது உடை மாற்றுவது அவருக்கு எண்ணை போட்டு கை கால் நீவி விடுவது அனைத்தும்.

 

எல்லாவற்றையும் குறையோடு தான் அந்த மனிதர் பார்த்தார். அதையெல்லாம் அவனும் கண்டுக்கொள்ளவில்லை, அவருக்கு பதில் கொடுக்காமல் இருந்ததுமில்லை.

 

“என்ன சட்டை இது இப்படியா போட்டுவிடுவே??” என்று அவர் சொன்னால் “உங்க ரத்தத்தை வந்து போட்டு விடச் சொல்லுங்க. நான் தான் உங்க ரத்தமில்லையே” என்று பட்டென்று பதில் சொல்லிவிடுவான்.

 

ஆனாலும் அவருக்கான கடமையை அவன் செய்யாமல் இருந்ததில்லை.பிற்பகல்மூன்று மணிக்கு சரியாக கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான் சிவா.

 

“பார்றா கரெக்ட்டா வந்திட்டாரு சாரு” என்று சொல்லிக்கொண்டே தங்கை அவன் அருகில் வந்து அமர்ந்தாள். அவளின் முகத்தில் லேசாய் ஒரு பதட்டம் தெரிந்தது.

 

இதற்கு முன்பு வந்த வரன் எல்லாம் போட்டோ பார்த்துவிட்டு பின்னர் அவர்கள் வீட்டினர் மட்டுமே வந்து சென்றனர்.

 

இவர்கள் அதிகம் செய்ய மாட்டார்கள் என்று எண்ணி வந்த வரன் எல்லாம் ஏதோவொரு விதத்தில் தட்டிப் போய் கொண்டிருந்தது.

 

இது தான் முதல் முறை மாப்பிள்ளையே நேரில் வருவது. அதில் கொஞ்சம் பயம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அதை கண்டும் காணாதவனாய் பார்த்துக் கொண்டான் சிவா.

 

“நாங்க எல்லாம் யாரு… சொன்னா சொன்ன மாதிரி வந்திடுவோம்ல… அதில்லென்ன உனக்கு நக்கலு விக்கலு…” என்றவன்“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றதா சொன்னாங்க” என்றான்.

 

“நாலு மணிக்கு வருவாங்க…”

 

“உனக்கு ஏதாச்சும் வேணுமா??”

 

“என்ன வேணுமான்னு கேக்குற??”

 

“தலையில வைக்க பூ, இல்லை மேக்கப் போட” என்று அவன் இழுக்க “சீய்… நான் என்னைக்கு மேக்கப் போட்டு நீ பார்த்தே” என்று அவன் தோளில் இரண்டு அடி போட்டாள்.

 

“அதை தான் நானும் சொல்ல வர்றேன். மேக்கப் போடாம நாங்க தான் பார்த்து பழகிட்டோம். ஏதோ உன்னை எப்படியாச்சும் தள்ளிவிடணுமா இல்லையா”

 

“அதுக்கு தான் கேக்குறேன் கவுண்டமணி ஒரு படத்துல அவர் தங்கைக்கு சிகப்பு பெயிண்ட் அடிச்சு செந்தில்க்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பாருல”

 

“அது போல உனக்கும் செஞ்சா தானே… நாளைபின்ன எனக்கும் காலாகாலத்துல கல்யாணம் நடக்கும். சொல்லு எந்த கலர் பெயின்ட் வாங்கிட்டு வரட்டும், ஏசியன் பெயின்ட்டா இல்லை வேற எதுவுமா” என்று அவன் சிரிக்காமல் கிண்டலடித்தான்.

 

“அம்மா பாரும்மா இவனை, நான் என்ன அவ்வளவு கறுப்பாவா இருக்கேன். அசிங்கமாவா இருக்கேன்… இவன் என்னை எப்படி சொல்றான் பாரும்மா” என்று சிணுங்கினாள் அவள்.

 

“என் பொண்ணுக்கென்ன ராணி மாதிரி இருக்கா… உன்னை மாதிரி அவ என்ன கறுப்பா” என்ற குரல் உள்ளிருந்து வந்தது.

 

இருவருக்கும் சொல்லாமலே புரிந்தது அது அவர்களின் தந்தை என்று. சிவா அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

 

“ஹ்ம்ம் நீங்க சொல்றதும் சரி தான். உங்க ரத்தத்தை தான் பெரிய புள்ளைக்கு கொடுத்திட்டீங்க, உங்க நிறத்தை எனக்கு தானே கொடுத்திருக்கீங்க… உங்களை மாதிரி தானே நானும் கறுப்பா இருக்கேன்” என்று பதில் சொல்ல உள்ளே கப்சிப் தான்.

 

இனி பேச்சு வராது, வராமலும் இருக்காது ஆனாலும் இன்றைக்கு இத்தோடு முடித்துக் கொள்வார் என்பது அவன் எண்ணம்.

 

சரியாக நாலு மணிக்கு வாசலில் பைக் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்க யோசனையுடன்நெற்றி சுருக்கி எழுந்து வெளியில் வந்த சிவரூபன் அப்படியே நின்றுவிட்டான்.

 

‘ராட்சசி இவ எங்க இங்க’ யோசித்தவன்அவர்கள் இறங்குவதை கண்டு வேகமாய் உள்பக்கம் திரும்பி வந்தான். வந்தது மாருதியும் அவன் தங்கை ஓவியப்பாவையும்.

பாவையின் அன்னை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்க மக்களின் திருமணத்தை காண ஆசை அவருக்கு.

 

விளைவு பெண் தேடும் படலமும் மாப்பிள்ளை தேடும் படலமும் ஒன்றாய் நடந்தது. மாருதிக்கு இதோ சங்கவியை பற்றி தெரியவர அண்ணன் தங்கை இருவர் மட்டுமே பெண் பார்க்க வந்திருந்தனர்.

 

இதற்கு முன் சென்ற இடங்களுக்கு சொந்தங்களும் உடன் வந்திருக்க அவர்கள் ஏதாவது குறை சொல்லி அந்த இடம் தட்டிப் போனது.

 

மாருதி இந்த முறை உறுதியாய் இருந்தான், வேறு யாரையும் அழைத்து செல்வதில்லை என. இருவர் மட்டுமே உள்ளே நுழைய மாலினி முன்னே வந்து அவர்களை வரவேற்றார்.

 

அவருமே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. “உட்காருங்க” என்று அவர் இருக்கையை காட்டி மகனை திரும்பி பார்க்க அவர் கண்கள் சொன்ன சேதியில் “வாங்கஉட்காருங்க” என்றிருந்தான் அவனும்.

 

பாவைக்கு அவன் முகத்தை பார்த்ததுமே எரிந்தது. இத்தனை வருடத்தில் தோற்றத்தில் இருவருக்கும் மாற்றம் இருந்தாலும் முகம் மாறவில்லையே.

 

‘இவனா… மறுபடியும் இவன் முகமா…’ என்றுமுகம் சுளித்தவாறே அமர்ந்திருந்தாள் பாவை.

 

‘திமிர் பிடிச்சவ இவளே தைரியமா என் முன்னாடி உட்கார்ந்திருக்கா, எனக்கென்ன…’ என்ற எண்ணம் வர அவர்களுக்கு எதிரில் இருந்த இருக்கையில் சிவா அமர்ந்தான்.

 

என்னஆச்சுஎங்குபோச்சுசின்னராணிஉன்சாகசம் 
ஆட்டம்பாட்டம்நோட்டம்எல்லாம்காட்டலாமாநீஎன்வசம் 
ஒட்டும்போதுஒட்டுவேனே 
முட்டும்போதுமுட்டுவேனே 
ஒட்டும்போதுஒட்டுவேனேஎதுக்குவம்புதும்பு 
என்னிடத்தில்மண்டிபோடடி 

 

Advertisement