Advertisement

6
 
தான் அழைத்து வராதவள் மகன் அழைத்து வரவும் செல்விக்கு வெண்மதி தன் மகனை இப்போதே தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் என்றே தோன்றியது.
அவர் கொஞ்சம் யோசித்தால் அதெல்லாம் தன் பிரமை என்று தோன்றும் என்றறிந்தவர் அதை யோசிக்க கூட நினைக்கவில்லை அக்கணம்.
 
ஆகாத மாமியார் கைப்பட்டாலும் கால்ப்பட்டாலும் குற்றமே என்பது தான் ஆகிப்போனது. மகன் முன்னிலையில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை அவர்.
 
அனைவரும் சாப்பிட்டு எழுந்திருந்தனர், வெண்மதி எப்போதும் கொஞ்சம் மெதுவாகவே சாப்பிடும் ரகம். அவளும் செல்வியுமே மட்டுமே அங்கிருந்தனர்.
 
செல்வியால் தாங்க முடியவில்லை கேட்டே விட்டார். “சாப்பிட கூப்பிட்டா வர முடியாதா?? என் புள்ள வந்து கூப்பிட்டா தான் வருவீங்களோ??” என்றார் சடசடப்பாய்.
 
தன்னைத் தான் சொல்கிறார் என்று புரிந்தவள் சளைக்காமல் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
 
‘என்னவொரு திமிர் பார்வை??’ என்று தானிருந்தது செல்விக்கு.
 
சற்றே நெற்றியை சுருக்கி யோசிப்பது போல் செய்துவிட்டு பின் “என்னையவா கூப்பிட்டீங்க… அப்படி ஒண்ணும் என்கிட்ட நீங்க சொன்ன மாதிரி ஞாபகம் இல்லையே…”
 
“சாப்பிட்டு போங்கன்னு சொன்னேன் தானே…”
 
“என்கிட்டயா??”
 
“பின்ன வேற யாருக்கிட்ட சொன்னேன்…” என்றார் அவரும் நக்கல் குரலில்.
 
“நீங்க ரஞ்சனா அக்கா பத்தி கேட்டீங்க, அப்புறம் சாப்பிட வாங்கன்னு சொன்னீங்க… அப்போ நீங்க யார்கிட்ட சொன்னதா நான் எடுத்துக்கறதாம்…” என்றாள் அவளும் விடாகண்டியாய்.
 
“ஓ!! வேற எப்படி சொல்றதாம்… உன்னைய தனியா வேற வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சிருக்கணுமோ, இல்லை மேள தாளம் முழங்க வந்து உன்னைய அழைச்சுட்டு போயிருக்கணுமோ…”
 
“நான் அப்படி சொல்லலையே!!”
 
“வேற எப்படியாம்” என்று முகவாயில் இடித்துக் கொண்டார் அவர்.
 
“நான் இந்த வீட்டுக்கு புதுசு தானே, நீங்க யாராச்சும் என்னை அழைச்சிருக்கணும் தானே… நானே எப்படி வருவேன்னு யோசிக்க வேணாமா…” என்று சொல்லும் போது குரல் சற்றே இறங்கியே இருந்தது அவளுக்கு.
 
செல்விக்கு அவள் சொல்ல வருவது புரிந்தாலும் எதுவோ ஒரு அடம் அவருக்கு அதை ஒத்துக்கொள்ளாமல் செய்தது. சட்டென்று வாயைவிட்டு விட்டார்.
 
“ஏன் இது என்ன உனக்கு முத கல்யாணமா எல்லாம் பார்த்து பார்த்து செய்ய…” என்றுவிட அவரின் சொல் அவளை நேராய் நெஞ்சில் சென்று தைத்தது.
 
விழிகள் சடுதியில் நிரம்பிவிட அதை உள்ளிழுக்க சிரமப்பட்டாள். சட்டென்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து “நானா உங்க மகனுக்கு தாலி கட்டினேன்…”
 
“கல்யாணத்துக்கு வந்தவ கழுத்துல தாலி கட்டினது உங்க மகன், எது கேட்கிறதா இருந்தாலும் சொல்றதா இருந்தாலும் அவரை சொல்லுங்க…”
 
“உங்க குத்தல் பேச்சுக்கு எல்லாம் நான் ஆளில்லை… அப்புறம் என்ன சொன்னீங்க… எனக்கு இது முத கல்யாணம் இல்லைன்னு தானே… ஆமா இல்லை தான், ஆனா அது தெரிஞ்சு தானே உங்க மகன் என்னை கட்டினாரு…”
 
“அவரு உங்க சம்மதம் கேட்டாரா, இல்லை என்ட சம்மதம் கேட்டாரா, யாரையும் கேட்காம தானே செஞ்சாரு… அவரை குறை சொல்றதை விட்டு என்ட வந்து பேசிட்டு இருக்கீங்க…”
 
“எங்க அம்மா அப்பாகிட்ட நல்லவிதமா தானே பேசுனீங்க… என்னை பிடிக்கலைன்னா வேணாம்ன்னா அன்னைக்கு விட்டிருக்க வேண்டியது தானே…”
 
“நானும் ஒண்ணும் ரொம்ப சந்தோசமா ஒண்ணும் இந்த வீட்டுக்கு வந்திடலை… இனி எது பேசுறதா இருந்தாலும் பார்த்து பேசுங்க…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாளவள்.
 
செல்விக்கு தான் புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது அவள் பேச்சு. அன்றிலிருந்து அப்படி தான் மாமியாரும் மருமகளும் தினம் ஒரு முறை வாய் சண்டை போட்டுக் கொண்டிருப்பர்.
 
ரஞ்சனா மாமியார் மெச்சிய மருமகள் என்றால் வெண்மதி மாமியாரை மிஞ்சிய மருமகளாகவே இருந்தாள்.
 
ஒரு புறம் பகலில் செல்வியுடன் மறு புறம் இரவில் சிபியுடன் பேச்சு என்று அவளுக்கு இறுக்கமாகவே இருந்தது அவ்வீடு. வானதி இல்லையென்றால் பேசாமல் கிளம்பியிருப்பாளோ!! என்னவோ!!
 
வெண்மதி இன்று வேலையில் சேர வேண்டும். திடீரென்று நடந்த குழப்பத்தினால் ஒரு வாரம் விடுப்பெடுத்திருந்தவள் இன்று முதல் வேலைக்கு செல்ல வேண்டும்.
 
அங்கிருந்த அத்தனை நாளும் வானதியை சிபியுடன் ஒண்டவிடாமலே பார்த்துக் கொண்டாள். தனக்கு பிடித்த பொம்மையை அடுத்த குழந்தை பறித்துவிடுமோ என்ற பயத்தில் தன் பொம்மையை அடைக்காக்கும் குழந்தையின் நிலையில் இருந்தாள் அவளும்.
 
முதல் நாளே அவளின் வண்டியை கொண்டு வந்து விட்டிருந்தார் அவளின் தந்தை.
அவள் இந்த சில மாதங்களாக தான் வண்டியில் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறாள். இரவு நேர பணிக்காக செல்லும் போது தவிர மற்ற நேரத்திற்கு வண்டியில் தான் செல்வாள்.
 
ஓரளவிற்கு வீடு பழகியிருந்தது அவளுக்கு இப்போது, மாமியாரின் பேச்சும் தான். ரஞ்சனா அதிகம் பேசாத ஒரு ஜீவன் அந்த வீட்டில், பசுங்கிளி தேவைக்கு மட்டுமே பேசுவார்.
 
ஜெயவர்மன் வாரத்திற்கு இரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வான் போல, பேச்சுவாக்கில் அவள் காதில் விழுந்த விஷயம் அது. இரண்டு நாட்களுக்கு முன்பே அவன் திண்டுக்கல்லிற்கு கிளம்பிச் சென்றிருந்தான்.
 
கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கூந்தலை பின்னி அதை தூக்கி வாகாய் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள். உறங்கிக் கொண்டிருந்த வானதி எழும் அரவம் கேட்க பின்னே திரும்பி பார்த்தாள்.
 
“அம்மு எழுந்துட்டீங்களா செல்லம்… வாங்க வாங்க அம்மா உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன்… நாம வெளிய போவோமா…” என்று பேசிக்கொண்டே குழந்தையை தயார் செய்தாள்.
 
அடுத்த பத்து நிமிடத்தில் குழந்தையுடன் தயாராய் வெளியில் வந்தாள். சிபி அதிகாலையிலேயே எழுந்து தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றிருந்தவன் மாடுகளுக்கு தண்ணீர் எல்லாம் காட்டிவிட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.
யோசனையாய் மனைவியை ஏறிட்டாலும் என்னவென்று கேட்கவில்லை. அவளும் சொல்லியிருக்கவில்லை. குழந்தையை ரஞ்சனாவின் அறைக்கு சென்று விட்டு வந்தவள், சமையலறை புகுந்திருந்தாள்.
 
மளமளவென்று என்னவோ செய்தவள் இரு கோப்பைகளில் கஞ்சியை நிரப்பிக்கொண்டு வந்தாள். சிபிக்கு அவள் என்ன செய்கிறாள் என்று புரியவில்லை.
 
“என்ன பண்றே??” என்று கேட்டே விட்டான்.
 
“கஞ்சி வைச்சேன்…”
 
“ஏன்?? அம்மா இந்நேரம் காலை டிபன் செஞ்சிருப்பாங்களே, அதை சாப்பிட வேண்டியது தானே…”
 
“பாப்பாக்கு வைச்சேன், அப்படியே எனக்கும் செஞ்சிட்டேன்…”
 
எல்லாவற்றிற்கும் பதில் சொன்னாள் ஆனால் அவன் முகம் பார்த்து சொல்லவில்லை.
 
அவள் மேலும் ஏதாவது சொல்வாள் என்று அவன் அவள் முகம் பார்த்திருக்க அவள் நீ கேட்டதிற்கு பதில் சொல்லியாயிற்று என்ற ரீதியில் தன் போக்கில் சென்றாள்.
 
ஒரு கையில் பையுடனும் மறு கையில் வானதியை தூக்கிக்கொண்டும் அவள் வெளியில் வர கேட்க வேண்டாம் என்று நினைத்தும் “எங்க கிளம்பிட்டீங்க??” என்றான்.
 
“வேலைக்கு…”
 
“ஓ!!” என்றவன் யோசனையானான்.
 
செல்வியும் பசுங்கிளியும் சொந்தத்தில் ஒரு திருமணம் என்று பக்கத்து ஊர் வரை சென்றிருந்தனர். வீட்டில் ரஞ்சனாவிற்கு துணையாய் இவள் இருக்கும் தைரியத்தில் தான் செல்வியும் கிளம்பிச் சென்றிருந்தார்.
 
ஆனால் அதை சின்ன மருமகளிடம் சொல்லவெல்லாம் இல்லை. முதல் நாள் சாப்பிடும் போது பொதுவாய் நாளைக்கு விசேஷ வீட்டிற்கு செல்வதாய் பேசினர் அவ்வளவே.
 
“பாப்பா எங்க கூட்டிட்டு போறே??”
 
“அம்மா வீட்டில விடுறதுக்கு…”
 
“அங்க ஏன்?? நான் பார்த்துக்கறேன்…” என்றவனை மேலிருந்து கீழாக முறைத்தாள்.
 
“முறைச்சா??”
 
“உங்ககிட்ட விட்டுட்டு போக விரும்பலைன்னு அர்த்தம்…”
அதற்கு மேல் அந்த பேச்சை அவன் வளர்க்க விரும்பவில்லை. அவள் விஷயத்தில் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி வர தயாராகத்தானிருந்தான்.
 
ஆனால் குழந்தையை அவள் இப்படி அலைக்கழிப்பதை அவன் விரும்பவுமில்லை, சும்மாவிட்டுவிடவும் எண்ணவில்லை. விரைவில் அதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று உறுதியானான்.
 
“மதினி வீட்டில ஒத்தையில இருக்காங்க… அம்மாவும் அப்பாவும் வரவும் வேணா கிளம்பேன்…” தன்மையாகத் தான் சொன்னான்.
 
“என்ன?? என்ன சொன்னீங்க??”
 
“உன் காது செவிடில்லையே??”
 
“அக்காவை என்னை நம்பி தான் விட்டு போயிருக்காங்களா என்ன?? யாருமே என்கிட்ட அப்படி சொல்லவேயில்லையே…”
 
“எல்லாமே சொல்லிட்டு தான் போகணும்ன்னு நினைக்கிறது ரொம்ப தப்பு மதி… சூழ்நிலையை பார்த்து நாம தான் சில விஷயங்களை புரிஞ்சு நடந்துக்கணும்…”
 
“நான் இந்த வீட்டுக்கு புதுசு…”
 
“அதனால…”
“எனக்கு சொல்ல வேணாமா… என் பொறுப்பு என்னன்னு…”
 
“பொறுப்புகள் எல்லாம் சொல்லி புரியறதில்லை, தானாய் உணர்ந்து நடக்கறது…”
 
“இங்க பாருங்க, இங்க உங்ககூட நின்னு வழக்காட எனக்கு நேரமில்லை. பத்து மணிக்கு எனக்கு டியூட்டி நான் கிளம்பி ஆகணும்…” என்றுவிட்டு அவள் தன் போக்கில் நடந்தாள்.
 
“உன்கிட்ட எல்லாரும் சொல்லிட்டு போகணும்ன்னு நீ நினைக்கிற மாதிரி தானே நாங்களும் நினைப்போம்…” என்று அவன் பேசியது காதில் விழ நின்ற இடத்தில் இருந்து திரும்பினாள்.
 
“நான் ஏன் சொல்லணும்?? என்கிட்ட யாரும் எந்த அனுமதியும் கேட்காதப்போ நான் மட்டும் அனுமதி கேட்டோ இல்லை சொல்லிட்டோ தான் போகணும்ன்னு என்ன அவசியம் இருக்கு… நீங்களா தேடிக்கிட்டது தானே அனுபவிங்க…”
 
சிபியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது. “அடுத்தவங்களை சொல்றதுக்கு முன்னாடி நாம முன்னோடியா இருக்கணும்… எங்கம்மா உன்கிட்ட சொல்லிட்டு போகலைன்னு நீ அவங்ககிட்ட சொல்லாம போவியா??”
 
“ஒரு முறை நீ செஞ்சா அவங்களும் சரியா செய்வாங்க தானே…” என்றான்.
“புதுசா இருக்கே?? பெரியவங்களுக்கு சின்னவங்க பாடம் எடுக்கணும்ன்னு சொல்றீங்க… ஹ்ம்ம் சரி தான் இனிமே எடுத்திட வேண்டியது தான்…” என்றாள் ஒரு மாதிரி குரலில்.
 
‘ச்சே இவகிட்ட போய் சொன்னேன் பாரு… நான் என்ன அர்த்தத்தில சொன்னா இவ என்ன அர்த்தத்தில எடுத்துக்கறா…’
 
‘அப்போலாம் மங்குனி மாதிரி இருந்தா இப்போ இந்த போடு போடறா…’ என்று நினைத்த சிபி அதற்கு மேல் அவளிடத்தில் வாயை கொடுக்கவில்லை.
 
‘என்னவோ செய்’ என்பது போல வீட்டிற்குள் சென்றுவிட்டான். வெள்ளையம்மாளை அழைத்து ரஞ்சனாவிற்கு துணைக்கு வைத்துவிட்டு சாப்பிட்டு கிளம்பியிருந்தான் மீண்டும்.
 
விசேஷம் முடிந்து மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்த செல்வி ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்தார் வெண்மதி வீட்டில் இல்லாதது கண்டு.
 
மாலை ஐந்து மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள் வெண்மதி. நேராய் அவளின் தாய் வீட்டிற்கு சென்றாள். அவர் போட்டு கொடுத்த காபியை குடித்துக்கொண்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
 
அவள் வீட்டிற்கு வந்தே ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது. அவள் தானாய் கிளம்புவதாய் காணோம்.
“என்ன மதி வீட்டுக்கு கிளம்பலையா??” என்றார் சங்கரி.
 
“ஹ்ம்ம் போகலாம்…”
 
“கிளம்பு அவங்க தேடுவாங்க, அப்பாவை வரச்சொல்றேன், கூட்டிட்டு போய் விடுவார்…”
 
“எதுக்கு?? அதெல்லாம் வேணாம், நான் வண்டியில தானே வந்தேன் நானே போய்க்குவேன்…”
 
“அப்போ கிளம்பு மணி எட்டாகப் போகுது…”
 
“இப்போ எதுக்கும்மா என்னை விரட்டுறீங்க??”
 
“நீ அந்த வீட்டுக்கு புதுசு மதி… அவங்க உன்னை தேட மாட்டாங்களா… நீ…” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் புல்லட் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்க வெளியில் வந்தார்.
 
சங்கரி யாரையோ வாங்க என்று சொல்லும் குரல் உள்ளிருந்தவளின் செவியில் விழவே செய்தது. யாரோ விருந்தினர் என்று அசுவாரசியமாய் இருந்தவள் உள்ளே வந்தவனை கண்டதும் தன்னையுமறியாமல் எழுந்திருந்தாள்.
 
‘இவன் எதுக்கு இங்க வந்தான்?’ என்பதாய் இருந்தது அவள் யோசனை. வானதி ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள். அவளை இழுத்துப்பிடிக்க வெண்மதி செய்த முயற்சிகள் வீணாகியது.
 
“உட்காருங்க காபித்தண்ணி குடிக்கறீங்களா??” என்ற அவனுக்கான அன்னையின் உபசரிப்பை ஒருவித எரிச்சலுடன் பார்த்திருந்தாள்.
 
“வேணாம்த்தை சாப்பிடுற நேரத்துல இதெல்லாம் வேணாம்…”
 
“அப்போ ஒரு ஐஞ்சு நிமிஷம் இருங்க, தோசையை ஊத்திடறேன் சாப்பிட்டு போங்க…” என்று அவர் திரும்ப “இன்னொரு நாள் வந்து நிதானமா சாப்பிடுறேன் அத்தை… வெண்மதியை காணோம்ன்னு தான் கிளம்புனேன்…”
 
“எதுக்கும் ஒரு எட்டு இங்க பார்த்திட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்…” என்றவனின் பேச்சு சங்கரிக்காய் இருந்தாலும் குற்றம் சாட்டும் பார்வையை அவளை நோக்கி வீசினான்.
 
“ப்பா… ஆது ஆது…” என்ற குழந்தையை வெண்மதி என்னவென்று பார்க்க “ஆடு பார்க்கணும்ன்னு சொல்றா…” என்றான் அவன்.
 
ஒரு வாரம் தானே ஆகியிருக்கும் அதுக்குள்ளே எப்படி பழக்கி வைச்சிருக்கான் குழந்தையை. நான் தான் அவன்கிட்ட குழந்தையை விடவே இல்லையே…’ இப்படி தான் சிந்தனை சென்றுக் கொண்டிருந்தது வெண்மதிக்கு.
 
“உன் யோசனை எல்லாம் அப்புறம் வைச்சுக்கோ… இப்போ கிளம்பு வீட்டுக்கு போகலாம்”
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்…” என்றவளை இப்போது சங்கரி முறைத்தார்.
 
“பரவாயில்லை இருக்கட்டும் அத்தை நாங்க கிளம்புறோம்…” என்றவன் அவரிடம் சொல்லிக்கொண்டு குழந்தையோடு கிளம்பிவிட்டான்.
 
குழந்தையை வாங்க கையை நீட்டியவளை கண்டுக்கொள்ளாதவன் போல் வண்டியில் ஏறி வானதியை முன்னில் அமர வைத்து அவன் கிளம்பியே சென்றுவிட்டான்.
 
மனதில் அவனை திட்டிக்கொண்டு பின்னோடு அவளும் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டு சென்றாள்…

Advertisement