Advertisement

 

Tamil Novel

 

அத்தியாயம் – 3

 

ஏனோ இன்று எழவே பிடிக்கவில்லை சிவரூபனுக்கு. பேசாமல் லீவு போட்டுவிடுவோமா என்று கூட தோன்றியது அவனுக்கு.

 

கடைசி வருடம் தொடங்கி முழுதாய் ஒரு நாள் தான் முடிந்திருக்கிறது அதற்குள்ளாக விடுப்பு எடுப்பதை பற்றி யோசிக்கிறோமே என்று எண்ணியவன் சிகைக்குள் தன் வலக்கரம் நுழைத்து மெதுவாய் கோதிக் கொண்டவாறே குளியலறை புகுந்திருந்தான்.

 

முதல் நாள் போல் இன்று வெளியில் ஒரு குரலும் கேட்கவில்லை. முதல் நாள் அவன் திருப்பிக் கொடுத்ததின் வீரியம் போலும்.

 

‘இது கூட நல்லா தான்டா இருக்கு சிவா’ என்று எண்ணிக்கொண்டே காலை வேலை முடித்து குளித்து வெளியில் வந்திருந்தான் அவன்.

 

அவன் அருமை தங்கை கூட அடக்கி வாசித்தாளோ!! சத்தமே இல்லையே!! என்று நினைத்துக்கொண்டே அவன் சீருடை அணிந்து வெளியில் வந்திருந்தான்.

 

“அம்மா…” என்றழைத்தவாறே சமையலறை நுழைய எப்போதும் போல் அவன் அன்னை சமைத்துக் கொண்டிருப்பது கண்ணில் விழுந்தது.

 

“என்னடா சிவா இன்னைக்கு நான் குரல் கொடுக்காமலே நீயே கிளம்பி வந்திட்டே!!” என்று ஆச்சரியமாய் சின்ன மகனை ஏறிட்டார் அவர்.

 

“ஏன்மா நானே கிளம்பினது ஒரு குத்தமா??” என்றவன்“என்ன இன்னைக்கு வீடு ரொம்ப அமைதியா இருக்கு??” என்று நோட்டம் விட்டானவன்.

 

“அப்பாக்கு இன்னைக்கு ஏதோ வண்டி சர்வீஸ் முடிச்சு கொடுக்கணுமாம் சீக்கிரமே கடைக்கு கிளம்பிட்டாரு. பத்து மணி போல தான் வருவாரு”

 

“ஹ்ம்ம்…” என்று கேட்டுக்கொண்டவன் அவரையே பார்க்க திரும்பி பார்த்தவர் “என்னடா??” என்றிருந்தார்.

 

“அண்ணன்??”

 

“அவன் தான் ஏழுக்கே கிளம்பிடுறானே…”

 

“சங்கவி”

 

“அவ டியுஷன் போயிருக்காடா”

 

“அதானே பார்த்தேன் என்னடா வீடு இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்கேன்னு பார்த்தேன். சரிம்மா எனக்கு டிபன் வைம்மா” என்றான்.

 

அவர் அவனுக்கு டிபன் வைக்கவும் அதை சாப்பிட்டுவிட்டு மதிய உணவை வாங்கி தன் பையில் வைத்துக்கொண்டு ஷூவை மாட்டிக்கொண்டு அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

 

சைக்கிளை எப்போதும் விடும் இடத்தில் விட்டுவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைய உடன் ஜெகதிஷும் அப்போது தான் நுழைந்தான் போலும், இருவரும் பேசிக்கொண்டே நடைமேடை வந்து சேர்ந்தனர்.

 

என்றும் இல்லாமல் அன்று அவர்களின் ரயில் நேரமாகவே வந்திருக்க நண்பர்கள் இருவரும் வேகமாய் அதில் ஏறினர். ரயிலில்கூட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டே காணப்பட்டது.

 

ஆவடி ஸ்டேஷன் வரவும் பாவை அவள் தோழிகளுடன் கொஞ்சம் காலியாய் இருந்த அதே பெட்டியில் ஏறி இருந்தாள்.

 

பெண்கள் பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்ததாலேயே அடுத்திருந்த அந்த பகுதியில் அவர்கள் ஏறி இருந்தனர்.

 

சிவரூபனும் ஜெகதீஷும் இவர்களை கவனிக்கவில்லை உள்ளே அந்த வாயிலின் புறம் நின்றுக்கொண்டு வெகு சீரியசாய் வெளியில் கடந்து சென்ற பெண்களை சைட் அடித்துக்கொண்டும் அதைப் பற்றி பேசிக்கொண்டும் இருந்தனர்.

 

வண்டிசென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் நுழைய அவசரமாய் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே வெளியில் வர பின்னால் வந்த சிவாவை எதுவோ தடுக்க அவன் தடுமாறினான்.

அந்த தடுமாற்றத்தில் முன்னில் இருந்தவனை அவன் பற்ற இப்போது ஜெகதீஷ் தடுமாறி நடைமேடையில்விழுந்திருந்தான்.

 

விழுந்தவனை“சாரிடா” என்று கைக்கொடுத்து எழுப்பப் போனவன் அப்போது தான் கவனித்தான். அங்கு ஜெகதீஷ் மட்டும் விழுந்திருக்கவில்லை அவன் அருகே சற்றுத் தள்ளி பாவையும் விழுந்திருந்தாள்.

 

லேசாய் கண்களில் நீர் அரும்பியிருக்க சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்க்க நின்றிருப்பதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது.

 

ஒரு கையை கீழேஊன்றி எழுந்திருந்தவள் சற்றும் யோசிக்கவில்லை சிவாவின் கன்னத்தை பதம் பார்த்திருந்தாள்.

 

சில நொடியில் நடந்து விட்ட நிகழ்வில் அவன் ஒரு கணம் சிலையாய் நின்று போனான். அவள் அடித்த அடியின் வலி லேசாய் உறைக்க நகர்ந்து செல்லும் அவள் கரம் பற்றி முறுக்கினான் அவன்.

 

பத்தொன்பது வயதுஆண் மகன் தான் என்றாலும் நன்றாய் வளர்ந்து இருப்பத்தி ஐந்து வாலிபன் போலிருப்பான் அவன்.

 

சந்திரனையும் இவனையும் ஒன்றாய் காண்பவர்கள் இவன் தான் அண்ணனென்று ஏமாந்து போவார்கள். அவ்வளவு வாட்டசாட்டாமாய் இருப்பவனை தளிராய் ஒடிந்து விழும் தேகத்துடன் இருந்தவள் அறைந்ததை பார்த்து அங்கிருந்தோர் வாயில் விரல் வைக்காத குறை தான்.

 

அவள் ஒரு கரத்தை இறுக்கமாய் பற்றியிருந்தவன்“எதுக்குடி இப்போ என்னை அடிச்சே??” என்று கோபமாய் பற்களுக்கிடையில் வார்த்தைகளை துப்பினான்.

 

“கையை விடுடா பொறுக்கி. உனக்கெல்லாம் இதானே வேலையே…” என்றவள் அப்போதும் அவனை சாடினாள்.

 

“நான் உன்னை என்னடி பண்ணேன். நீ விழுந்ததுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம். அப்படியே நீ விழுந்திருந்தா அது ஜெகதீஷ் இடிச்சு தான் விழுந்திருக்கணும். என்னை எதுக்கு நீ அடிச்சே??”

 

அவளோ மிகச்சுலபமாய் “நீ தானேடா அவனை என் மேல தள்ளிவிட்டே!! எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, அடுத்தவனை மாட்டிவிட்டு நீ எஸ்கேப் ஆகுறது தானே உன்னோட வேலை” என்றாள்.

 

அவளை பிடித்திருந்த கையை தளர்த்தி அவளை தன்னை நோக்கி திருப்பினான்.

 

“என்ன சொன்னே?? நான் மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகுறனா… அப்படி என்னடி பார்த்தே நீ?? என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் பிடித்திருந்த தன் கையை அவனிடமிருந்து உருவினாள் அவள்.

 

“உனக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை” என்றவள் தன் தோழிகளை நோக்கி திரும்ப “ஏய்” என்று கர்ஜித்தவன் அவள் முன் வந்து நின்றிருந்தான்.

 

“இப்போ எனக்கு பதில் சொல்லாம போனே நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

 

“நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது தான். நீ வழிவிடலைன்னா நான் என்ன செய்வேன் தெரியுமா, இங்க இருக்கற ரயில்வே போலீஸ்கிட்ட நீ என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணுறதா கம்பிளைன்ட் பண்ணிடுவேன்” என்றாள்.

 

அதுஅவன் கோபத்தை இன்னமும் அதிகமாய் கிளர்ந்தெழச் செய்தது. என்ன ஆனாலும் சரி என்று அவளை அடித்துவிடும் நோக்குடன் இவன் அவள் அருகே நெருங்க ஜெகதீஷ் இவனை பற்றி இழுத்திருந்தான்.

 

“சிவா விட்டுடு, வீணா இங்க எந்த பிரச்சனையும் வேண்டாம். வா நாம போவோம்” என்று சொல்ல “டேய் இவ யாருடா என்னை அடிக்க”

 

“நான் என்ன செஞ்சேன் இவளை… அப்படியே நான் தான் அவ விழறதுக்கு காரணமா இருந்திருந்தாலும் வேணும்ன்னு ஒண்ணும் நாம செய்யலையே”

 

“எனக்கு ஸ்லிப் ஆச்சு நான் உன் மேல பேலன்ஸ் பண்ணப்போய் நீ கீழே விழுந்திட்ட”

“டேய் சிவா உனக்கு ஒண்ணு தெரியுமா?? நான் ஒண்ணும் அந்தபொண்ணை தள்ளிவிடலை” என்றான் ஜெகதீஷ் இப்போது.

 

“என்ன நீ இடிக்கலையா??” என்றவனுக்கு அதற்கு மேல் அடக்கவே முடியவில்லை அவளை பார்வையால் தேட அதற்குள் அவள் தன் தோழிகளுடன் சென்றிருந்தாள் போலும்.

 

“ஆமாடா நான் இடிக்கலை, நீ பேலன்ஸ் பண்ணவும் நான் கம்பியை பிடிச்சுட்டேன். நீ இறங்கின பிறகு தான் நானே இறங்கினேன்”

 

“நான் இறங்கும் போது கம்பியில இடிச்சு தான் நான் கீழவே விழுந்தேன்டா” என்று சொல்லி முடித்திருந்தான் ஜெகதீஷ்.

 

“இப்போ வந்து இவ்வளவு விளக்கமா சொல்லு. அவ என்னை அடிக்கும் போது வேடிக்கை பார்த்திட்டு இருந்தே” என்று கோபமாய் எரிந்து விழுந்தான் நண்பனிடம்.

 

“டேய் எனக்கே ஒண்ணும் புரியலைடா அப்போ. அந்த பொண்ணு எதுக்கு உன்னை அடிச்சுதுன்னே எனக்கு தெரியலை. அவ பேசுறதை பார்த்தா அவளுக்கு உன்னை ஏற்கனவே தெரியும் போல இருக்கு” என்ற ஜெகதீஷை எரிக்கும் பார்வை பார்த்தான் அவன்.

 

“உண்மையை சொல்லுடா எனக்கு தெரியாம எதாச்சும்…” என்று இழுத்தவனின் முதுகில் ஒன்று வைத்தான் சிவா.

“அந்த குரங்கு யாருன்னே எனக்கு தெரியாது. அவளை நான் முன்னபின்ன கூட பார்த்ததில்லை. நேத்து தான் முதல் முறையா நம்ம ட்ரைன்ல பார்த்தேன்”

 

“கொஞ்சம் அழகா இருக்காளேன்னு நினைச்சேன், இன்னைக்கு அவ திமிரை காட்டிட்டு போறா” என்று பொருமினான் அவன்.

 

“எங்க போய்டுவா நம்ம காலேஜ் தானே. அங்க போய் வைச்சுக்கறேன் அவளை” என்று கருவியவாறே நண்பனை இழுத்துக்கொண்டு ஸ்டேஷனில் இருந்து வெளியில் வந்தான் அவன்.

 

இவன் கல்லூரிக்குள் நுழையவும் அவர்கள் வகுப்புகள் தொடங்குவதற்காக மணி அடிக்கவும் சரியாக இருக்க அவனால் உடனே அவளைத் தேடி செல்ல முடியவில்லை.

 

நண்பனுடன் வகுப்பிற்குள் நுழைந்தான், அவர்களின் துறை ஆசிரியரும் உள்ளே வந்திருந்தார். பாடம் ஆரம்பித்து பத்து நிமிடம் கூட சென்றிருக்காது சற்று நேரத்தில் பியூன் வந்தான் அங்கு.

 

“சொல்லு மணி” என்றார் ஆசிரியர்.

 

“சார்பிரின்சி சிவரூபனை அழைச்சுட்டு வரச் சொன்னார்” என்றதும் ஆசிரியரின் பார்வை அவனை நோக்கித் திரும்பியது.

 

“என்ன பண்ணி வைச்சே இந்த வருஷம்?? எல்லா பாடத்திலையும் அரியர் வைச்சா இப்படி தான். போ பிரின்சி எதுக்கு வரச்சொன்னாரோ??” என்றவர்“என்னையும் வரச்சொன்னாரா மணி??” என்று பியூனை கேட்டார்.

 

“இல்லை சார் அந்த பையன் மட்டும் வந்தா போதும்” என்றுவிட்டு மணி நகர்ந்துவிட்டான்.

 

சிவா நண்பனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆசிரியரை பார்த்து லேசாய் தலையசைத்து வெளியில் வந்தான். ‘எதுக்கு என்னை பிரின்சி பார்க்கணும்ன்னு சொல்றாரு?? சார் சொன்ன மாதிரி அரியர் வைச்சதை பத்தி கேட்கவா’

 

‘அதான் அம்மாவே வந்து எப்பவோ பேசிட்டு போயிட்டாங்களே அப்புறம் என்ன’ என்று பலவித யோசனைகளுடன் வந்து சேர்ந்திருந்தான் பிரின்சிபாலின் அறைக்கு.

 

மரியாதை நிமித்தம் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழையவும் விஷயம் புரிவது போலிருந்தது அவனுக்கு. அங்கு அவள் அந்த திமிர் பிடித்தவள் நின்றிருந்தாள்.

 

“உள்ள வா” என்ற குரலில் நுழைந்தவன் முதலில் கண்டது அவளை தான்.

 

“எஸ் சார்” என்றான் வெகு பவ்வியமாய், இப்போது அவளை கண்டுக்கொள்ளாமல். அவரோ அவனை அலட்சியமாக பார்த்தார்.அவள் அவனை அதையும் விட அலட்சியமாய் பார்த்தாள்.

“இந்த பொண்ணை தெரியுமா உனக்கு??”

 

“தெரியாது”

 

“என்னம்மா உன்னைத் தெரியாதுன்னு சொல்றான்”

 

“பொய் சொல்றான் சார், வேணும்னா என்னோட வர்ற வனஜாகிட்ட கேளுங்க சார்”

 

“சிவா உன் பவுசு எனக்கு ஏற்கனவே தெரிஞ்சது தான். பிளஸ்டூல கோட்டடிச்சுட்டு இங்க வந்து சேர்ந்திருக்க. இங்கயும் ஒழுங்கா படிக்கறதில்லை”

 

“உன்கிட்ட எந்த ஒழுக்கத்தையும் இதுவரை நான் பார்க்கலை…” என்று அவர் அடுக்கிக்கொண்டே போகலேசாய் கையை தூக்கி அமர்த்தியவன் “சார் இப்போ என்ன பிரச்சனை” என்று நேராய் விஷயத்திற்கு வந்தான்.

 

“இந்த பொண்ணு உன் மேல கம்பிளைன்ட் பண்ணியிருக்கா…”

 

“என்னன்னுசார்??”

 

“நீ அவளை பாலோ பண்றியாம், ரொம்பவும் தொல்லை பண்றியாம். உன்னால அவளால இங்க படிக்க முடியாம போய்டுமோன்னு அவளுக்கு பயமா இருக்காம்”

 

“நான் என்ன சார் பண்ணணும்??” என்றான் முயன்று வரவழைத்த நிதானக் குரலில்.

“நாளைக்கு உன்னோட பேரன்ட்ஸ் இங்க வரணும்” என்று அவர் சொன்னதும் அவன் முகம் மொத்தமாய் விழுந்து போனது.

 

அவள் வழிக்கு செல்லக் கூடாது என்று சொல்லுவார், சரியென்றுவிட்டு அந்த பிசாசின் முகத்தில் விழிக்கவே கூடாது என்பதாய் தான் அவன் எண்ணம்.

 

இப்படி பெற்றோரை அழைத்து வரச்சொல்லுவார் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. “சார் அவங்க எதுக்கு சார்?? நான் இனிமே இவங்க இருக்க பக்கம் கூட போக மாட்டேன். என்னை நம்புங்க சார்” என்றான்.

 

“இல்லைப்பா இது நீ படிக்கிற விஷயம் மாதிரி இல்லை. பொம்பிளை பிள்ளை விவகாரம் அதுவுமில்லாம வீட்டுக்கு தெரிஞ்சா தான் நீயும் கொஞ்சம் ஒழுக்கமா இருப்பே” என்றார் அவர் இப்போது கண்டிப்பான குரலில்.

 

சிவாவிற்கு இப்போது கண்மண் தெரியாத கோபம். போங்கடா என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு நொறுக்கிவிடும் ஆத்திரம் அவனிடத்தில்.

 

அவன் அன்னை ஒருவருக்கே அடங்கும் ரகம் அவன். இவன் சரியாய் படிக்காமல் போனதில் அவர் தான் வெகுவாய் பாதித்தார்.

 

அவருக்காக மட்டுமே இவன் தொழிற்கல்வி கற்க வந்தான். சரியாக படிக்காவிட்டாலும் படித்தாயிற்று என்று கணக்கு செய்துவிடலாம் என்று நினைத்து தான் வந்திருந்தான்.

அவன் ஒழுங்காய் படிக்க மாட்டேனே தவிர ஒழுக்கமில்லாதவனல்ல. தூரத்தில் இருந்து பெண்களை பார்ப்பதும் கேலி செய்வதும் இருந்திருக்கிறான் தான்.

 

ஆனால் அவர்களை அனாவசியமாய் துன்புறுத்தியோ அவர்களின் பின்னே அலைந்தோ அவர்களை தொந்திரவு செய்ததில்லை அவன்.

 

மீண்டும் ஒரு முயற்சியாய் பிரின்சிபாலிடம் பேசிப்பார்க்கஅவரோ அவன் கோரிக்கையை நிர்தாட்சண்யமாய் மறுக்க வேறுவழியில்லாமல் போனது அவனுக்கு.

 

அன்னையிடம் எந்த காரணமும் சொல்லாமல் மறுநாள் அவரை பிரின்சிபால் பார்த்து பேச வேண்டும் என்பதை மட்டும் சொல்லி அவரை அழைத்து வந்திருந்தான்.

 

அவரும் எப்போதும் போல் இவன் படிப்பை பற்றி தான் அவர் பேசப் போகிறார் என்று எண்ணிக்கொண்டு வந்திருந்தார்.

 

இருவரும் மறுநாள் பிரின்சிபால் அறைக்குள் அனுமதி பெற்று நுழைய அவரோ“சிவா நீ கொஞ்சம் வெளிய இரு” என்றுவிட்டு அவன் அன்னையிடம் என்ன பேசினாரோ பதினைந்து நிமிடத்தில் வெளியில் இருந்தவனை பியூன் வந்து அழைத்தான்.

 

“சொல்லுங்க சார்” என்றவனின் கேள்வி மட்டுமே அவரிடம் இருந்தது பார்வையோ அவன் அன்னையிடத்தில்.

 

“உங்கம்மாகிட்ட எல்லாம் பேசிட்டேன். இனிமே இப்படி நடக்காதுன்னு இதுல எழுதி வாங்கிட்டேன் நீ இதுல கையெழுத்து போடு”

 

“சார் நான் என்ன தப்பு செஞ்சேன்னு…” என்று குரலுயுர்த்தி ஆரம்பித்தவனை அவன் அன்னை மாலினி பார்த்த பார்வை கட்டிப்போட ஒன்றும் சொல்லாமல் கையெழுத்திட்டான் அவன்…

 

இருவருமாய் வெளியில் வர அவன் “அம்மா… அம்மா…” என்று அழைத்தும் பதிலில்லை அவரிடத்தில். ஒன்றுமே பேசவில்லை அவர் அவனிடத்தில் அது முதல்….

 

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே!!

 

Advertisement