Advertisement

அத்தியாயம் – 8

 

அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றாமலே உள்ளே வந்து அமர்ந்தான் சிவா அவன் அன்னையுடன்.

 

இந்த முறை மாருதி அவனை ஏற இறங்க பார்த்தான்.‘நமக்கு தான் சூழ்நிலை சரியில்லை,இருவர் மட்டுமே பெண் பார்க்கச் சென்றோம், இவர்கள் ஏன்??’ என்ற கேள்வி ஓடியது அவனுக்கு.

 

அவன் பார்வையை புரிந்த சிவாவே அதற்கு பதில் சொல்லிவிட்டான். “அப்பாவுக்கு துணையா கவியை வீட்டுல விட்டு வந்திருக்கோம்”

 

“அண்ணனும் அண்ணியும் சென்னையில இருக்காங்க. மத்தப்படி உங்களை போல தான் என் எண்ணமும் அதான் வேற யாரையும் கூட்டிட்டு வரலை. தப்பா எடுத்துக்காதீங்க” என்று விளக்கம் கொடுத்தான்.

 

“ஹ்ம்ம் புரியுது சிவா…”

 

அந்நேரம் சரியாக வனஜா உள்ளே நுழைந்தாள் “பாவை” என்றவாறே.

 

“உள்ள இருக்காம்மா” என்று உள்ளே கைக்காட்டினான் மாருதி.

 

‘அச்சோ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டாங்க போல’ என்ற எண்ணத்தோடே அங்கிருந்தவர்களைஓரப்பார்வை பார்த்த வனஜா‘இது அவருல’ என்றுஅதிர்ச்சியாய் பார்த்தவாறே உள்ளே சென்றாள்.

 

“ஹேய் என்னடி நடக்குது இங்க??” என்றாள் பாவையை நோக்கி.

 

“என்ன நடக்குது??”

 

“உனக்கு தெரியாமலா நடக்குது… வந்திருக்க மாப்பிள்ளை யாருன்னு தெரியும்ல…” என்றாள் வனஜா இப்போது.

 

“ஹ்ம்ம் தெரியும்…”

 

“நீ எப்படி?? எனக்கு ஒண்ணுமே புரியலை, அவரை லவ் பண்றியாடி??” என்றவளை முறைத்தாள் மற்றவள்.

 

“எதுக்குடி முறைக்கிற?? பண்ணுற அலும்பு எல்லாம் நீ பண்ணிட்டு கேள்வி கேக்குற என்னைய முறைக்குற??”

 

“இங்க பாரு எனக்கும் கூட தான் இவனை புடிக்கலை. என்ன செய்ய சொல்றே இப்போ?? அம்மா இப்படி இருக்க நிலையில என்னை பார்த்திட்டா இருக்க முடியும். நடக்கறது நடக்கட்டும்” என்றாள் பாவை.

 

வனஜாவிற்கு கொஞ்சம் ஆச்சரியம் தான் பாவையின் பதிலில். அவள் சொன்னதும் சரி தானே. இந்த ஓராண்டுக்கு மேலாய் அவள் அன்னையை முழுதாய் கவனித்துக் கொள்பவள் அவள் தானே.

 

அவரின் உடல்நிலை அவளறியாததா!! அதனால் தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாள் போல என்று எண்ணிக் கொண்டாள் வனஜா.

 

“நான் உன்னை காலையில வரச்சொன்னேன் இப்போ தான் வந்திருக்கே. உன் வீட்டுக்காரர் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரா…” என்றாள் பாவை இப்போது தோழியை பார்த்து.

 

ஆம் வனஜாவிற்கு ஆறு மாதத்திற்கு முன் தான் திருமணம் முடிந்திருந்தது.

 

“அவர் என்ன சொல்லப் போறாரு. நான் தான் ஆபீஸ்ல பெர்மிஷன் சொல்லிட்டு வர லேட் ஆகிருச்சுடி, சாரி” என்றாள் தோழிக்கு பதிலாய்.

 

வெளியில் சிவா மாருதியிடம் “பொண்ணை பார்க்கலாங்களா??” என்றான்.

 

‘என்ன இவன் இப்படி கேட்குறான்’ என்று மகனை ஒரு பார்வை பார்த்தார் மாலினி. அவன் அதெல்லாம் கண்டு கொள்பவனா என்ன!!

 

மாருதி அவனை ஆச்சரியமாய் பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல் உள்ளே திரும்பி “வனஜா பாவையை கூட்டிட்டு வாம்மா” என்றான்.

 

“ஹேய் உன்னை கூப்பிடுறாங்க வாடி போவோம்” என்ற வனஜா தோழியுடன் வெளியில் வந்தாள்.

 

சிவாவோ அவளை மேலிருந்து கீழாய் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இந்த ராட்சசிக்கு புடவை எல்லாம் கூட கட்ட தெரியுமா!!’

 

‘அன்னைக்கு பிரின்சிபல் ரூம்ல என்னை கூனிக்குறுகி நிக்க வைச்சேல!! இப்போ என்னை பார்த்து நீ எப்படி நிக்கறியாம்!!’ என்ற உள்ளே லேசாய் ஒரு கொக்கரிப்பு எழுந்தது அவனுக்கு.

 

பாவையோ பல்லைக் கடித்தாள். ‘வீட்டுக்குள்ள எதுக்கு இப்படி கண்ணாடி போட்டு வந்திருக்கு இந்த பயபுள்ளை. என்னை பார்க்குறது தெரியக் கூடாதுன்னே போட்டு வந்திருப்பான் போல’ (சரியா கண்டுப்பிடிச்சிட்டாளே!!)

 

அவன் பார்வை தன் மீது என்பதை உணர்ந்தவளுக்கு அங்கே நிற்பதே முள் மேல் நிற்பதாய் இருந்தது.

 

“பாவை இங்க வந்து உட்காரு” என்று தன்னருகே இருந்த இருக்கையை காட்டினான் மாருதி.

 

“வாம்மா…” என்றிருந்தார் இப்போது மாலினியும்.

 

அதற்கு மேல் அங்கு நில்லாமல் மாருதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் அவள்.

 

“உங்க தங்கைகிட்ட பேசணும்…” என்றான் சிவா மாருதியை போலவே.

 

ஒரு நொடி தயங்கியவன் “பாவை…” என்று சொல்ல ஆரம்பிக்கும் முன்னேயே “எனக்கு உள்ள தனியா போய் பேசணும்ன்னுலாம் இல்லைங்க…”

 

“இங்கவே பேசிக்கறேன்…” என்றான் சிவா.(அவ்வளவு நல்லவனாடா நீ!!)

 

“ஹ்ம்ம் பேசுங்க…” என்றவாறே தலையசைத்தான் மாருதி.

 

“என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?? இந்த கல்யாணத்துல உங்க விருப்பத்தை தெரிஞ்சுக்கலாமா??” என்று நேரிடையாகவே அங்கிருந்தோர் முன்பு கேட்டுவிட்டான் அவன்.

 

அவன் பார்வை மட்டும்மல்ல மற்றவர்களின் பார்வையும் தன் மீது தான் என்று நினைக்கும் போதே அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

 

திரும்பி அருகிருந்த தன் அண்ணனை பார்த்தாள். “உன் விருப்பம் என்னவோ அதை சொல்லு பாவை…” என்றான் அவன்.

 

‘எல்லாம் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க… இங்கவே சொல்ல சொல்றீங்க… எங்க அண்ணன் எவ்வளோ டீசெண்டா தனியா கூப்பிட்டு பேசினான்’

 

‘இவனும் அப்படி செஞ்சிருக்கலாம்ல… அப்படி தனியா வந்து பேசியிருக்கணும். அப்போ தெரிஞ்சிருக்கும் நான் யாருன்னு…’ என்ற எண்ணம் வேறு.

அவள் தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருக்க “என்னாச்சு?? உங்களுக்கு யோசிக்க அவகாசம் எதுவும் வேணுமா??” என்றுகண்ணாடியை கழற்றிவிட்டு ஊடுருவும் பார்வையோடு அவளை கேட்டான் சிவா.

 

“பாவை ஒண்ணும் சொல்லாம இருந்தா எப்படி?? எதாச்சும் சொல்லு??” என்று மெதுவாய் தன் தங்கையிடம் சொன்னான் மாருதி.

 

“அவங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.அவங்க யோசிக்கறதுன்னா யோசிக்கட்டும்…”

 

“சிவா சொல்றதும் சரி தான், நீ யோசிச்சு முடிவெடும்மா அதுல தப்பில்லை” என்றார் மாலினி.

 

எல்லோரும் இவ்வளவு தூரம் பேசிய பின்பும் தான் அமைதியாய் இருந்தால் நன்றாயிராது என்று தோன்ற “இ… இல்லை அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. எ… எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான்….” என்று திக்கி திணறி சொல்லி முடித்துவிட்டாள் அவள்.

 

மாருதிக்கு நிம்மதி பெருமூச்சு இப்போது.

 

‘அப்படி வாடி வழிக்கு’ என்ற ரீதியில் பார்த்திருந்தான் சிவா.

 

“உங்க தங்கை பாட்டெல்லாம் எதுவும் பாட மாட்டாங்களா… நெறைய படத்துல பார்த்திருக்கேன்… பாட்டு பாட சொல்லுவாங்க, டான்ஸ் ஆட சொல்வாங்களே” என்று சிவா வம்பிழுக்க பாவை முறைத்திருந்தாள். மாருதியோ சிரித்துக் கொண்டிருந்தான்.

 

சிவா வேண்டுமென்றே விளையாடுகிறான் என்று புரிந்தது. பாவை‘ஆமா இங்க என்ன சூப்பர் சிங்கர்க்கும் ஜோடி சீசன்க்கும் ஆளு எடுக்கறாங்களா!! டான்ஸ் பாட்டு ஆளும் மூஞ்சியும் பாரு ஓணான்!!’ என்று வைதாள்.

 

“டேய் சிவா என்னடா இதெல்லாம்” என்று மாலினி கண்டிப்பாய் பார்க்க அவன் அன்னையை பார்த்து கண்சிமிட்டி வைத்தான்.

 

அவர்களை பார்த்துக் கொண்டிருந்த மாருதியோ சிரித்துக்கொண்டே “நான் இதெல்லாம் கேட்கவே இல்லையே உங்க வீட்டுல” என்றான்.

 

“அது உங்க தப்பு… நீங்க கேட்டிருந்தா நாங்க அப்போவே சொல்லியிருப்போம், சங்கவிக்கு நல்லா பாட வரும்ன்னு”

 

“ஓ!! நிஜமாவே அவங்க பாடுவாங்களா!!” என்றான் மாருதி ஆச்சரியமாய் (கொஞ்சம் ஜொள்ளும் வழியுது)

 

“ஒரு அஞ்சாறு வருஷமா தான் கத்துக்கறா, அவங்க ஸ்கூல் பசங்களுக்கும் பாட்டு கிளாஸ் எடுக்கறா…” என்றிருந்தான் சிவா.

 

அப்போது தான் தங்கையை திரும்பி பார்த்த மாருதி அவளின் சங்கடம் புரிந்து “பாவை அவங்களுக்கு குடிக்க எதுவும் கொண்டு வா…” என்று சொல்லி உள்ளே அனுப்பினான். வனஜாவும் அவளுடனே சமையலறைக்குள் சென்றாள்.

 

“சரி அப்போ நாம இப்போ மத்த விஷயம் எல்லாம் பேசிடலாமே!!” என்று மாலினி ஆரம்பித்திருந்தார்.

 

“சொல்லுங்கம்மா…” என்றான் மாருதி.

 

“அத்தைன்னு சொல்லுங்க…” என்று திருத்தினான் சிவா.

 

லேசாய் அசடு வழிந்த மாருதி “சாரி அத்தை சொல்லுங்க…” என்றான்.

 

அவன் அன்னை மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும் முன்னே சிவா அவரை சைகையால் தடுத்தான்.

 

“உங்கம்மாஎங்க இருக்காங்க பார்க்கலாமா??” என்றான் சிவா.

 

“அவங்களுக்கு உடம்பு சரியில்லை…” என்று இழுத்தான் மாருதி.

 

“பார்க்கலாம் தானே…”

 

“தாராளமா…” என்றவன்“ஒரு நிமிஷம்” என்று ஹாலை ஒட்டியிருந்த சிறு அறைக்குள் நுழைந்தான்.

 

சில நொடிகளில் வெளியில் வந்தவன் “வாங்க…” என்று அழைக்க மாலினியும் சிவாவும் உள்ளே சென்றனர்.

ஹாலில் மாட்டியிருந்த புகைப்படத்தில் இருந்தவருக்கும் கட்டிலில் இருப்பவருக்கு நிறைய வித்தியாசம் தெரிந்தது.

 

பாதியாய் இளைத்து என்பார்கள், ஆனால் அவரோ வெறும் கூடாய் மட்டுமேயிருந்தார். அவரை கண்டதும் இரு கரம் கூப்பினான் அவன்.

 

அவருக்கு அவனை கண்டதும் கண்ணில் ஓர் ஆவலும் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிந்தது.

 

“என்ன உடம்புக்கு அவங்களுக்கு??”

 

“கேன்சர்…” என்றுமாருதி பதில் கொடுக்கவும் திரும்பி அவன் அன்னையை பார்த்தான். அவரும் ஆம் என்பது போல் தலையசைத்தார்.

 

அவருக்கு உடல் நலமில்லை என்று அவனுக்கு தெரியும்,ஆனால் இப்படி என்று தெரியாது அவனுக்கு.

 

“எவ்வளோ நாளா இப்படி இருக்காங்க. ட்ரீட்மெண்ட் எல்லாம்…”

 

“ஒரு வருஷம் மேலேயே அவங்களுக்கு உடம்புக்கு பிரச்சனை இருக்கு. வயித்து வலின்னு ஆஸ்பிட்டல் போனோம். ஸ்கேன் எல்லாம் பார்த்திட்டு கர்ப்பப்பையில கட்டி இருக்குன்னு சொல்லி அதை எடுக்க சொன்னாங்க…”

 

“அப்புறமும் அவங்களுக்கு வலி குறையவே இல்லை… திரும்பவும் ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ தான் அவங்களுக்கு கணையத்துல ஒரு கட்டி இருந்தது தெரிஞ்சுது”

 

“அதை பயாப்சி பண்ணப்போ தான் அது கேன்சர்கட்டின்னு தெரிஞ்சுது… ட்ரீட்மெண்ட் போயிட்டு தான் இருக்கு. அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணணும்ன்னு சொல்லி இருக்காங்க”

 

“அவங்க உடம்பு கொஞ்சம் அதுக்கு தேறணும். ஒரு ரெண்டு மாசத்துல எப்படியும் ஆபரேஷன் பண்ணியாகணும்”

 

“யார் பார்த்துக்கறாங்க அத்தையை??”

 

“பாவை தான்…”

 

“கல்யாணத்துக்கு அப்புறம்??”

 

‘என் மனைவி தான்… உங்க தங்கை தான் பார்த்துக்கணும்’ என்று மனம் சொன்ன போதும் அதை பதிலாக்காமல் “ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்றதா இருக்கேன்…”

 

“ஹ்ம்ம்…” என்று கேட்டுக்கொண்டவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

 

அப்போது மகேஸ்வரி ஏதோ பேச வந்தார். “சொல்லுங்க” என்று அவரை பார்த்தான் சிவா.

“கல்யாணம் சீக்கிரம்…” என்று திக்கிக் கொண்டிருந்தார் அவர்.

 

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைச்சுடலாம். நீங்க உங்க உடம்பை தேத்த பாருங்க… எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம், எல்லாமே நல்லபடியா நடக்கும்” என்று அவன் சொன்னது அவர் முகம் பிரகாசமாகியது.

 

அவருக்கு தலையசைத்து வெளியில் வந்து அமர்ந்தார்கள். பாவை அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். சிவாவிற்கு கொஞ்சம் யோசனையே குடிப்பதா வேண்டாமா என்று.

 

‘இந்த ராங்கி இதில் எதையாவது கலந்திருந்தால்’ என்ற எண்ணம் அவனுக்கு.

 

“கல்யாணம் பெரிசா வைக்கணும்ன்னு உங்களுக்கு எண்ணமிருக்கா??” என்றான் சிவா மாருதியை பார்த்து.

 

“புரியலை…”

 

“இல்லை மண்டபத்துல…”

 

“முதல்ல நாம் தேதி முடிவு பண்ணணும், அப்போ தானே மண்டபம் கிடைக்குமான்னு யோசிக்க முடியும்…” என்றான்மாருதி பதிலாய்.

 

“அத்தை இப்போ இருக்கற கண்டிஷன்ல கல்யாணம் பெரிசா கிராண்டா பண்ணணுமான்னு யோசிங்க.அவங்க ஆபரேஷன்க்கு கண்டிப்பா பெரிசா செலவிருக்கும்”

 

மாருதிக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. அவனுக்குமே பெரிதாய் செய்ய விருப்பமில்லை தான் ஆனால் பெண் வீட்டினர் என்ன நினைப்பார்களோ என்று தான் எதுவும் பேசாமலிருந்தான் அவன்.

 

சிவா அது புரிந்தது போல் பேசியது அவனுக்கு நிம்மதியே. தன் மனதில் இருந்ததை உடனே சிவாவிடம் சொல்லியும் விட்டான்.

 

“இனிமே நீங்க எதையும் சொல்லவோ கேட்கவோ தயங்கவோ கூச்சப்படவோ வேண்டாம். எதையும் நேராவே சொல்லுங்க…”

 

“ரெண்டுகல்யாணத்தையும் திருவாலங்காடு கோவில்ல வைச்சுக்கலாம். வேணும்னா ஈவினிங் ஒரு ரிசப்ஷன் ஒருமண்டபத்துலையோ இல்லை ஹோட்டலயோ கொடுத்திடலாம்”

 

மாருதிக்கும் அதுவே நல்ல ஐடியாவாக தோன்ற உடனே சரியென்று விட்டான். காரியம் தன் கைமீறி நடந்து கொண்டிருப்பதை ஒரு இயலாமையுடன் பாவை பார்த்துக் கொண்டிருந்தாள் பாய்.

 

“அப்புறம் கடைசியா இன்னொண்ணு…” என்று நிறுத்தினான் சிவா.

 

“சொல்லுங்க சிவா…”

“நீங்க தனியா நர்ஸ் எல்லாம் வைக்க வேணாம். கல்யாணத்துக்கு பிறகு அத்தையை உங்க தங்கையே எப்பவும் போல பார்த்துக்கட்டும்

 

கவி பார்த்துக்குவா தான் ஆனா அத்தைக்கு கவிக்கிட்ட கேட்க கூச்சமா இருக்கலாம். அவங்க பொண்ணுன்னா அந்த தயக்கம் இருக்காது…”

 

“ரெண்டு பேரா இருந்தா அத்தையும் சீக்கிரம் தேறி வருவாங்க தானே… அதுக்குள்ள அத்தைக்கும் கவிக்கும் புரிதல் வந்திடும்” என்று சிவா சொன்னதும் பேச்சே வரவில்லை மாருதிக்கு.

 

சட்டென்று எழுந்து அவனை அணைத்துக் கொண்டான். “நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப பெரிய விஷயம் சிவா. ரொம்ப ஈசியா சொல்றீங்க, எனக்கு இதை கேட்கும் போது என்ன சொல்லன்னே தெரியலை”

 

“என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பாவை அங்க இருக்கறது தானே சரி…”

 

“எங்க வாழ்க்கையை பத்தி நீங்க யோசிக்கறீங்கன்னு தெரியுது. அதுக்கு காலம் முழுக்க டைம் இருக்கு. அத்தை சரியாகி வரணும் அது தான் முதல்ல… அம்மா தான் முக்கியம்…”

 

“அவங்க இப்படி இருக்கும் போது கல்யாணம் அப்படிங்கற ஒண்ணை உங்க ரெண்டு பேருக்குமே நினைச்சு கூட பார்க்க முடியாதுன்னு தெரியுது…”

 

“அதையும் மீறி ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டு இருக்கீங்கன்னா உங்கம்மாவுக்காக தானே… நாங்களும் மிடில் கிளாஸ் தான்… வீட்டில ஒருத்தர்க்கு இப்படி இருக்கும்போது அந்தகுடும்பம் எப்படி உடைஞ்சு போகும்ன்னு தெரியும்”

 

“எல்லாமே கடந்து தான் வந்திருக்கோம்… இதையெல்லாம் நினைச்சு உங்களுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் வேணாம்… சீக்கிரமே நல்ல நாள் பார்த்திட்டு அம்மா சொல்லுவாங்க…”

 

“சரிஅப்போ நாங்க கிளம்புறோம்” என்று எழுந்து நின்றிருந்தான். அங்கு சமையலறையின் வாயிலில் நின்றிருந்த பாவையோ இப்போது அவனை ஆவென்று ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவனையே இமைக்காமல் பார்க்கிறோம் என்ற உணர்வெல்லாம் இப்போது அவளுக்கில்லை. அவள் அண்ணனும் அவனும் உள்ளறையில் பேசியது கேட்ட போது ‘கல்யாணம் ஆகி போய்ட்டா எங்கம்மாவை நான் பார்க்கக் கூடாதா’ என்ற ஆதங்கம் அவளுக்கு இருந்தது உண்மையே.

 

அதை உணர்ந்தவன் போல் சிவா பேசியது அவள் மனதை தொட்டிருந்தது.மீண்டும் கண்ணாடியை அணிந்து கொண்ட சிவா அங்கு நின்றிருந்தவள் தன்னையே நோக்கிக் கொண்டிருப்பதை ஒரு புன்னகையுடன் பார்த்து கடந்து சென்றிருந்தான்…

 

அடுத்த இருபத்தியைந்து நாட்களில் திருமண நாள் குறிக்கப்பட்டிருக்க மாருதி சங்கவி திருமணம் முதலில் முடிந்தது.

 

அடுத்த முகூர்த்தத்திலேயே மாருதியும் சங்கவியும் பாவையை தாரை வார்த்து கொடுக்க சிவரூபன் ஓவியப்பாவையின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்…

 

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா?

இன்று காணும் நானும் நானா?

உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

 

Advertisement