Advertisement

அத்தியாயம் – 7

 

“அம்மா நிஜம் தானா இது!! நீங்க அண்ணாகிட்ட பேசிட்டீங்களா!!” என்றாள் சங்கவிஇன்னமும் ஆச்சரியம் குறையாமல்.

 

அவரோ மகளை சட்டை செய்யாமல் மகனையே பார்த்தார். “சிவா நீ என்ன நினைக்கிற??” என்றார்.

 

சிவாவிற்கு இப்போதும் ஆச்சரியமே தனக்கு எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போது பேசுகிறேன் என்று தானே சொன்னார்.

 

இத்தனை வருடத்தில் இப்போது தான், தான் சரி என்று இவருக்கு தோன்றியிருக்கிறதா!! எது அப்படி தோன்ற வைத்தது என்ற கேள்வி அவனுக்குள்…

 

சங்கவியை திரும்பி பார்த்தான் இப்போது. “நீ உள்ளே போ… எனக்கு அம்மாகிட்ட பேசணும்” என்றான்.

 

“ஏன் அப்படி என்ன ரகசியம் பேசப் போறீங்க என்னைவிட்டு??” என்று கேட்டாலும் அவன் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் உள்ளே எழுந்து சென்றாள்.

 

“நிஜமாவே நீங்க என்கிட்ட பேசிட்டீங்களாம்மா…” என்றான் மாலினியின் முகத்தை ஏறிட்டு.

 

உள்ளே அளவுகடந்த சந்தோசம் இருந்தாலும் நிச்சலனமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டானவன்.

மாலினி இப்போது மகனருகில் வந்து அமர்ந்திருந்தார். “என்மேல நம்பிக்கை இல்லையா சிவா உனக்கு??”

 

“ஆனா என் மேல நீங்க நம்பிக்கை வைக்கலையேம்மா…”

 

“எதை வைச்சு அப்படி சொல்றே சிவா??”

 

“நான் சரின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கு இத்தனை வருஷம் ஆகியிருக்காம்மா” என்றவனின் குரலில் இருந்த வலியை அவரால் உணர முடிந்தது.

 

“உன் மேல நம்பிக்கை இல்லாம தான் நான் அப்படி சொல்லியிருப்பேன்னு நினைக்கறியா??”

 

“எனக்கு புரியலைம்மா… வேற என்ன காரணம் சொல்லுங்க… நான் எப்படி எடுத்திட்டு இருந்திருக்கணும்ன்னு நீங்களே சொல்லுங்க”

 

“நீ ரொம்ப சரியானவன்னு எனக்கு எப்பவோ தெரியும் சிவா. உன்கிட்ட பேசாம இருந்தது உன் மேல நம்பிக்கை இல்லாததால இல்லை…”

 

“உன்னோட பொறுப்பின்மை தான் காரணம். எங்க நீ படிக்காம போய்டுவியோன்னு ஒரு தாயா எனக்குள்ள இருந்த கவலை”

 

“உன்னை சரியாக்க அந்த சந்தர்ப்பம் சரின்னு தோணுச்சுப்பா… அதனால தான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்…”

“என்கிட்ட நீங்க சொல்லியிருந்தாலே கேட்டிருப்பேனேம்மா நானு…” என்றவனின் குரலில் இன்னமும் வேதனையின் சாயல்.

 

“உன்னை படி படின்னு தான் நான் தினமும் சொல்லிட்டு இருந்தேனே… நீ முத வருஷம் வைச்ச அத்தனை அரியருக்கும் என்னை உங்க காலேஜ்ல கூப்பிட்டு விட்டப்போ கூட நான் உனக்கு சொன்னேன் தானே”

 

“உனக்கு அப்போ எல்லாமே விளையாட்டு சிவா. அதுல இருந்த உன்னோட கவனம் படிப்புல இல்லை. அந்த விளையாட்டுத்தனத்தால தானே ஒரு பொண்ணு உன்னை தப்பா பேசினா”

 

“உன்னைப்பத்தி கம்பிளைன்ட் பண்ணினா… நான் பெரிசா ரியாக்ட் பண்ணலைன்னா நீ என்ன தெரியுமா செஞ்சிருப்பே… அந்த பொண்ணுகிட்ட சண்டைக்கு போயிருப்ப”

 

“உன்னைதெரிஞ்ச எனக்கு உன் கோபமும் தெரியாதா என்ன… உன்கிட்ட பேசாம இருந்து நான் மட்டும் சந்தோசமா இருந்தேன்னு நினைக்கறியா சிவா” என்றார் அவன் தலைமுடி கோதி.

 

அவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.“இது உனக்கு அதிகப்படியான தண்டனைன்னு நினைக்கறியா… எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு சிவா…”.அவர் பதில் அவனுக்கு திருப்தி இல்லை என்பதை புரிந்தவராய் சொன்னார் அவர்.

 

“என்னைக்காச்சும் நீ என்னை புரிஞ்சுப்பன்னு நான் நம்புறேன்…” என்றவர் இப்போது அமைதியானார். மகன் எதுவும் சொல்வானா என்ற எதிர்பார்ப்பு அவர் முகத்தில்.

 

“சரிம்மா போனதை விட்டிருவோம். நடந்தது எல்லாமே நல்லதுக்குன்னே எடுத்துக்குவோம். பேசாம இருந்ததுனால தான் உங்களை என்னால நெறைய புரிஞ்சுக்க முடியுதுன்னு நான் நினைக்கிறேன்…”

 

“வாய் தான் பேசிக்கலையே தவிர நம்ம மனசு தினமும் பேசிக்கிட்டு இருந்ததா தான் உணர்றேன்ம்மா…” என்றவன்“எனக்கு இன்னொன்னு தெரியணும்மா” என்று நிறுத்தினான்.

 

மகனின் பேச்சிலேயே உள்ளம் சற்று குளிர்ந்து விட என்ன கேட்கப் போகிறானோ என்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தார் மாலினி.

 

“திடிர்னு உங்களுக்கு என்கிட்ட பேசணும்ன்னு எப்படிம்மா தோணுச்சு??”

 

“உன்னை எனக்கு நல்லவன் வல்லவன்னு தெரிஞ்சாலும் மத்தவங்க உன்னை பெருமையா பேசும் போதோ நினைக்கும் போதோ தானே எனக்கு சந்தோசம்”

 

“புரியலைம்மா இப்போ யாரு என்னைப்பத்தி உங்ககிட்ட சொன்னாங்க…”

 

“சங்கவியை பொண்ணு பார்த்திட்டு போன வீட்டுல இருந்து உன்னை அவங்க வீட்டுக்கு மருமகனா கேட்டாங்கல்ல அப்போவே மனசு நிறைஞ்சு போச்சு சிவா எனக்கு”

 

“நான் உன்னை நல்லா வளர்த்திருக்கேன்னு எனக்கு தோணுச்சு. உனக்கு இப்போ கல்யாணம் பண்ணணும்ன்னு நான் நினைக்கவே இல்லை சிவா”

 

“ஆனா அவங்களா தேடி வந்து உன்னை கேட்குறாங்கன்னா உன்னை அவங்களுக்கு பிடிச்சி போய் தானே…”

 

“ஒரு பொண்ணோட வாழ்க்கையை உன்னை நம்பி கொடுக்கணும்ன்னு நினைக்கறாங்கன்னா அது உன் மேல இருக்க நல்ல எண்ணத்துலயும் நம்பிக்கையிலும் தானே” என்றார் அவர்.

 

சிவாவிற்கு அவர் சொல்ல வந்தது புரியவும் உள்ளே லேசாய் ஒரு மகிழ்ச்சி. ‘என்னை பொறுக்கின்னு இல்லையில்ல பொம்பிளை பொறுக்கின்னு தானே அவ கம்பிளைன்ட் பண்ணா’

 

‘இப்போ என்ன நடந்துச்சு அவ வீட்டு ஆளுங்களே நான் சரியானவன் நல்லவன்னு அவங்க பொண்ணுக்கு நான் தகுதியானவன்னு தானே கேக்குறாங்க’

 

“சிவா அவங்ககிட்ட நான் என்ன சொல்லட்டும்” என்றார் மாலினி இப்போது அவன் முகம் பார்த்து.“நீங்க என்ன நினைக்கறீங்கம்மா??” என்றானவன்.

“அவங்களா கேட்குறாங்க… சங்கவியை அங்க கொடுக்க போறோம். அங்கன்னா நாளைப்பின்னநீங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருப்பீங்க…”

 

“நேரடியா சொல்லுங்கம்மா??”

 

“நீ சரின்னு சொன்னா அம்மாக்கு சந்தோசம் தான்” என்று அவர் விருப்பத்தை சொல்லியே விட்டார் அவர்.சிவா மேவாயை தடவி யோசித்தவன் ஒன்றும் சொல்லவில்லை. “நாளைக்கு சொல்றேன்ம்மா…” என்றுவிட்டு எழுந்து அவனறைக்கு சென்றுவிட்டான்.

 

அவன் அறைக்கு வந்ததும் அவனுக்கு ஒரே யோசனை. இந்த விஷயம் ராட்சசிக்கு தெரியுமாவென்று தான்.மனம் வேண்டாம் என்றும் வேண்டும் என்றும் குழப்பியடித்தது. இதில் இன்னொரு விஷயத்தை அவன் மறந்து போனான்.

 

அவன் அன்னை அவனிடம் பேசாமல் போனதிற்கு அவள் தானே காரணம் என்று அவளை மறுக்கத் தான் தோன்றியது அவனுக்கு.

 

அவள் தான் அவன் மேல் வீண் பழி போட்டவள் என்று அவன் அன்னையிடம் கூட சொல்லவேயில்லை.ஏன் என்று அவனே அறியான்…

 

‘கடவுளே இது நீ எனக்கு கொடுக்கற ஆப்பர்சுனிட்டியா?? இல்ல அட்வர்சிட்டியா??’ என்ற கேள்வி அவனுக்குள் இப்போது ஓடவாராம்பித்தது.

 

இரவு வெகு நேரம் உறங்காமல் நள்ளிரவை தாண்டிய பொழுதில் ஒரு முடிவிற்கு வந்த பின்னே தான் உறங்கவே ஆரம்பித்தான் அவன்.

____________________

 

“யாரை கேட்டு எனக்கு மாப்பிள்ளை பார்த்தீங்க??” என்று ஆங்காரமாய் கத்திக் கொண்டிருந்தாள் பாவை அவள் வீட்டில்.

 

“ஏன் உனக்கு மாப்பிள்ளை பார்க்கறோம்ன்னு உனக்கு தெரியவே தெரியாதா??” என்றான் மாருதி.

 

“அது எனக்கு தெரியும்… ஆனா யாரை கேட்டு அந்த வீட்டுல நீங்க கேட்டீங்க…”

 

“உனக்கே அங்க பொண்ணு எடுக்க வேணாம்ன்னு சொல்றேன். இதுல நீ என்னையும் அங்க கொண்டு போய் தள்ள பார்க்குறே??”

 

“அன்னைக்கு சொன்னியே உனக்கு பிடிச்சிருக்கணும்ன்னு அவசியமில்லை. எனக்கு பொண்ணை பிடிச்சிருந்தா போதும்ன்னு…”

 

“உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா… அவனை எனக்கு பிடிக்கலைன்னு அன்னைக்கே சொன்னேன். அப்புறமும் நீங்க இப்படி செஞ்சிருக்கீங்கன்னா அப்போ என்னை பத்தி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை தானே”

 

“யாராச்சும் வந்தா அப்படியே தள்ளி விட்டுறணும்ன்னு நினைக்கறீங்க அதானே” என்றுகோபமாய்பேசியவளின் குரல் லேசாய் உடைய ஆரம்பித்திருந்தது.

 

மாருதி எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காது அமைதியாய் அவளை பார்த்தான்.

 

“பேசி முடிச்சிட்டியா…”

 

“நான் என்ன கதையா சொல்றேன்…”

 

“நீ பேசி முடிச்சிட்டா நான் பேசுவேன் அதுக்கு தான் கேட்டேன்”

 

“என்ன பேசப்போறே?? ஏதாச்சும் சப்பைக்கட்டு கட்டுவே??”

 

“எந்த சப்பைக்கட்டும் இல்லை… இது முழுக்க முழுக்க நம்ம அம்மாவோட விருப்பம் தான்… இன்னைக்கு காலையில தான் அவங்க வீட்டுல இருந்து பேசினாங்க”

 

“அவங்களுக்கும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதுல பரிபூரண சம்மதம்ன்னு சொல்லிட்டாங்க. சிவாவோட போட்டோ கேட்டிருந்தேன்”

 

“அதை அனுப்பி இருந்தாங்க… அதை பார்த்திட்டு அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா”

 

‘என்ன சொன்னாங்க’ என்பது போல் உடன்பிறந்தோனை பார்த்திருந்தாள் அவள்.

“அவங்களுக்கு சிவாவை போட்டோல பாத்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு… இது அவங்க ஆசை பாவை. இனி முடிவு உன் கையில தான்…” என்றுவிட்டான் அவன்.

 

“என்னை இக்கட்டுல நிறுத்த பார்க்கறீங்களா??”

 

“உன் விருப்பம்ன்னு சொல்லிட்டேன் பாவை. நீ என்ன முடிவு செய்தாலும் சரி அம்மாவை நான் கன்வின்ஸ் பண்ணிக்கறேன்…” என்றான்.

 

அவள் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி பின்னால் அவள் எப்போதும் சென்று அமரும் அந்த துணி துவைக்கும் கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

“மாருதி என்னப்பா சொல்றா அவ??” என்றிருந்தார் மகேஸ்வரி.

 

“சரின்னு தான் சொல்வாம்மா… விட்டுப்பிடிப்போம்… நீங்க கவலைப்படாதீங்க…”

 

“இல்லைப்பா அவளுக்கு பிடிக்கலைன்னா வேற பார்ப்போமா…” என்றார் அவர் முடியாமல்.

 

“அம்மா உங்க உடம்பு கண்டிஷன் ரொம்பவும் மோசமா இருக்கும்மா… திரும்பவும் முதல்ல இருந்து நாம எல்லாமே தொடங்கணும். ஏற்கனவே நாலு பேரு வந்து பார்த்திட்டு போனாங்க. எந்த பதிலும் இதுவரை இல்லை… எனக்கு சிவா பத்தி முதல்ல எந்த எண்ணமும் இல்லை தான்”

“நீங்க சொன்ன பிறகு தானே யோசிச்சேன்ம்மா… சிவா உண்மையிலேயே ரொம்ப நல்ல பையன் தான்மா… நம்ம பாவைக்கு சரியாவும் இருப்பாரு…”

 

“அவளோட துடுக்கு பேச்சுக்கு மட்டுமில்லை அவளுக்கும் ஈடு கொடுக்க கூடிய ஆளு தான்மா… நீங்க அவ சொல்றான்னு யோசிக்காதீங்க… அவளோட வாழ்க்கை பத்தி யோசிங்க…”

 

“அவ நிச்சயம் நல்லா இருப்பான்னு நான் நம்புறேன்ம்மா…” என்று நீளமாய் சொல்லி முடித்தான் மாருதி.

 

“எனக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருப்பீங்கன்னு தான் நானா இதை சொன்னேன்ப்பா… இருந்தாலும் அவளுக்கு பிடிக்கணுமே”

 

“அம்மா எல்லாருமே பார்த்துபேசி பிடிச்சு ஒண்ணும் கல்யாணம் செஞ்சுக்கறதில்லை. உங்க காலத்துல எல்லாம் வீட்டில பார்க்கிற மாப்பிள்ளை தானே கட்டிக்கிட்டீங்க…”

 

“என்ன குறையா போச்சும்மா… நீங்க வேணா பாருங்கம்மா. கல்யாணத்துக்கு பிறகு நிச்சயம் அவங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நல்ல வாழ்க்கை தான் வாழுவாங்கம்மா”

 

பாவை வெகு நேர யோசனைக்கு பிறகு வீட்டிற்குள் நுழைந்தாள். ஆறு மணிவாக்கில்நடந்த பேச்சு வார்த்தையின் போது வெளியே சென்றவள் பத்து மணி வாக்கில் தான் உள்ளே வந்திருந்தாள்.

 

முகமோ இன்னமும் தெளிவில்லாமல் தெரிந்தது. மாருதி என்னவென்று கேட்டுக்கொள்ளவில்லை.

 

மகேஸ்வரிக்கு தான் மகளின் முகம் வேதனை கொடுத்தது. சமையலறைக்கு சென்றவள் எதையோ உருட்ட “என்ன பண்ணுறே??” என்றவாறே வந்தான் மாருதி.

 

“அம்மாக்கு சாப்பாடு கொடுக்கணுமே, அதான்…”

 

“அம்மா மலை உனக்கு அவ்வளவு அக்கறையா… ரொம்ப சீக்கிரம் வந்துட்டே சாப்பாடு கொடுக்க… நானே ஊட்டிவிட்டுட்டேன் அம்மாக்கு…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் மாருதி.

 

“உனக்கு மட்டும் தான் அம்மா மேல அக்கறைன்னு காமிச்சுக்க வேணாம். நீ ஆபீஸ் போய்டுவா, தினமும் நான் தானே பார்த்துக்கறேன் அம்மாவை…”

 

“என்னமோ தினமும் நீ தான் ஊட்டிவிடுற மாதிரி பேசுற… உன் பொண்டாட்டி வந்தா மட்டும் தினமும் ஊட்டியா விடப் போறா” என்று கேள்வி கேட்டாள்.

 

“அதைப்பத்தி நீ பேச வேணாம். அதை நாங்க முடிவு பண்ணிக்குவோம்…”

 

“நீ இன்னைக்கு வித்தியாசமா தான் பேசுறேண்ணே…”

“நான் எப்பவும் போல தான் இருக்கேன் பாவை. நீ கண்ணை மூடிட்டு இருக்காம கண்ணை திறந்து பாரு…”

 

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு” என்றாள் சிடுசிடுப்பாய்.

 

“ஒண்ணுமில்லையே!!”

 

“நீங்க பார்க்குற மாப்பிள்ளையை நான் கட்டிக்கறேன் போதுமா” என்றுவிட்டு அவள் அன்னை படுத்திருந்த அறைக்குள் சென்றுவிட்டாள் அவள். நிம்மதி பெருமூச்சொன்று மாருதியினிடத்தில்.

 

சம்பிரதாய பெண் பார்க்கும் நிகழ்ச்சி மறுநாளேஅரங்கேறியது.கண்ணில் கூலிங்கிளாஸ் ஒன்றை போட்டுக்கொண்டுகெத்தாய் உள்ளே வந்த சிவாவை பார்த்து பல்லைக் கடித்தாள் பாவை……..

 

மாப்புள்ளன்னாமாப்புள்ளவாசல்கருவேப்பிள்ள

ஹோய்ஹோய்ஹோய்ஹோய்

மாப்புள்ளன்னாமாப்புள்ளவாசல்கருவேப்பிள்ள

ஹேய்ஹேய்ஹேய்ஹேய்

 

தீப்பிடிச்சப்பேய்களஓட்டிவிடும்வேப்பிள்ள

ஹோய்ஹோய்ஹோய்ஹோய்

தீப்பிடிச்சப்பேய்களஓட்டிவிடும்வேப்பிள்ள

ஹேய்ஹேய்ஹேய்ஹேய்

 

அவர்சிரிப்புலஒருவெறுப்பில்ல

அவருகுறும்பத்தான்யாருரசிக்கல

Advertisement