Advertisement

அத்தியாயம் – 6

 

சிவாவின்பார்வை கேள்வியுடன் மாருதியை பார்த்தது. “நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்று கேட்டே விட்டான்.

 

‘இவன் யாரு எங்கண்ணனை கேள்வி கேட்குறதுக்கு’ என்று நினைத்தது சாட்சாத்நம் பாவையே தான்.

 

மாருதிக்கு சிவாவின் நேரடி பேச்சு பிடித்திருந்தது.“உங்களுக்குமுதல்லயே தெரிஞ்சிருக்கும் எங்கப்பா தவறி சில வருஷங்கள் ஆகுது. அம்மாக்கு உடம்புக்கு முடியலை”

 

“சொந்தங்கள் எல்லாம் வந்தா ஏதாச்சும் குழப்பம் பண்ணிட்டு இருப்பாங்க. கல்யாணத்துக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் பார்த்தா போதாதா… இதோஎன்னோடதங்கை பாவையும் வந்திருக்கா… போதாதுங்களா” என்றான் மாருதி.

 

அவன் பதிலிலேயே சிவாவிற்கு அவன் சொல்ல வந்தது புரிய மாருதியை மெச்சிக்கொண்டான் மனதிற்குள். ஆனாலும் அவனுக்கு இந்த சம்மந்தம் சரி வருமா என்ற யோசனையே இப்போதும்.

 

“ஒரு நிமிஷம்” என்றவன் எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வரும் போது சதாசிவத்தை வீல் சேரில் அமர்த்தி தள்ளிக்கொண்டு வந்தான்.

 

“அப்பா…” என்று அறிமுகப்படுத்த மாருதி எழுந்து நின்று வணங்கவும் சதாசிவம் இவர் தான் மாப்பிள்ளை என்றே முடிவு செய்துவிட்டார். மரியாதை தெரிந்தவர் என்ற எண்ணம் அவருக்குள்.

 

அதற்குள் மாலினி இருவருக்கும் குடிக்க காபியும் பலகாரமும் கொண்டு வந்து கொடுத்தார்.காபியை மட்டும் அருந்தியவன் ஒரு எதிர்பார்ப்புடன் அமர்ந்திருப்பது சிவாவின் கண்களுக்கு தப்பாமல் விழுக திரும்பி அன்னையை பார்த்தான்.

 

மகனின் பார்வை புரிந்தவராக அவர் உள்ளே சென்று மகளை அழைத்து வந்தார். தங்கையின் முகம் பார்த்ததுமே புரிந்து போனது சிவாவிற்கு பயங்கர டென்ஷனாக இருக்கிறாள் என்று.

 

“கவி இப்படி உட்காரு” என்று தன்னருகேஅமர வைத்தவன் அவள் கையை மென்மையாக அழுத்திக்கொடுக்க அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

 

“சங்கவி என்னோட தங்கை… B.Sc., மேத்ஸ் படிச்சிருக்கா, பக்கத்துல இருக்க ஸ்கூல்ல வாத்தியாரம்மாவா இருக்காங்க” என்று பொதுவாய் சொன்னான்.

 

வாத்தியாரம்மா என்று சொன்னால் எப்போதும் சிலிர்க்கும் தங்கையை ஓரப்பார்வை பார்க்க அவள் இவனை முறைப்பது தெரிந்தது.

 

“எங்கம்மா கூட டீச்சரா தான் வேலை பார்த்தாங்க” என்றவன்“நான்உங்க தங்கைகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் தனியாபேசலாமா??” என்ற கோரிக்கையை வைத்தான் மாருதி.

 

பாவை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள். ‘அய்யோ இந்த அண்ணா இந்த சம்மந்தத்தை ஓகே பண்ணிருவான் போலவே. அப்புறம் இந்த ஓணான் மூஞ்சியை நான் பார்த்தாகணுமே’ என்ற கவலை அவளுக்கு.

 

சங்கவியோ கைகள் சில்லிட அமர்ந்திருந்தாள் தன் வீட்டினர் என்ன சொல்வார்களோ என்று.

 

சங்கவியை திரும்பி பார்த்த சிவா “கவி உள்ள கூட்டிட்டு போ பேசிட்டு வா…” என்று சத்தமாய் சொன்னவன் “பயப்படாதே தைரியமா பேசு” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.

 

அவர்கள் இருவரும் எழுந்து உள்ளே செல்ல எதிரில் அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தான் சிவா.‘ராட்சசி இன்னும் திமிரு குறையாமலே இருக்கா’ என்றவனின் பார்வை அவளை முழுதுமாய் அளவிட்டது.

 

அவன் பார்வை புரிந்த பாவைக்கு நெளிவதை தவிர வேறு வழியில்லை. ‘கடவுளே இவன் வேற இப்படி பார்த்து தொலைக்குறான். பழி வாங்குவானோ!!’ (அவ கவலை அவளுக்கு)

 

சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் பேசி முடித்த மாருதி வெளியே வந்திருந்தான்.

“என்னோட விருப்பத்தை உங்க தங்கைகிட்ட சொல்லிட்டேன். நீங்க கலந்து பேசிட்டு சொல்லுங்க. அப்போ நாங்க கிளம்பறோம்” என்றுமரியாதையாய் எழுந்து நின்று கைக்கூப்பி விடைப்பெற்றான் மாருதி.

 

பாவை பொதுவாய் எல்லோருக்கும் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவர்கள் கிளம்பிச் சென்றதும் சங்கவியை அழைத்தான் சிவா. “சொல்லுண்ணா” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தாள் அவள்.

 

“என்ன சொன்னாரு??”

 

“பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. என்னோட விருப்பத்தை கேட்டாரு, வீட்டில இருக்க எல்லார்க்கும் சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்ன்னு சொன்னேன்”

 

“சரி நான் கேட்குறேன் சொல்லு. உன்னோட விருப்பம் என்ன உனக்கு அவரை பிடிச்சிருக்கா??”

 

அதற்குள் மாலினி இடையிட்டார். “நல்ல பையன் நல்ல குணமா தெரியறாரு… பார்த்து யோசிச்சு சொல்லு” என்றவரை சிவா திரும்பி பார்த்து முறைத்தான்.

 

சதாசிவமும் மனைவியை பின்பற்றி“ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கார். நம்ம கவிக்கு பொருத்தமான பையனா தெரியார்” என்றார்.

 

“உங்க ரெண்டு பேருக்கும் அவர் மாப்பிள்ளையா தான் வரப்போறார். ஆனா அதுக்கு முன்னாடி உங்க பொண்ணுக்கு அவர் கணவரா வரப்போறார். அதுனால உங்க சம்மதத்தை விட இதுல கவியோட சம்மதம் தான் முக்கியம்”

 

“கொஞ்ச நேரம் நீங்க ரெண்டு பேரும் பேசாம இருங்க” என்று பொதுவாய் அழுத்தந்திருந்தமாய் சொன்னான்.

 

“பெத்தவங்களுக்கு தெரியாதா பிள்ளைகளுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு” என்று வழக்கம் போல ஆரம்பித்தது சதாசிவமே.

 

“பெத்தவங்களுக்கு தெரியும் தானே பிள்ளைங்களோட விருப்பமும் முக்கியம்ன்னு. உங்க இஷ்டத்துக்கு தான் கல்யாணம் பண்ணி வைச்சீங்க உங்க மூத்தப்பிள்ளைக்கு”

 

“உங்களை சீராட்டி பாராட்டி அன்புல குளிக்க வைச்சுட்டு இருக்கார்ல தினமும்” என்று நக்கலாய் சிவரூபன் கேட்கவும் வாயை மூடிக்கொண்டார் சதாசிவம்.

 

மனைவியை பார்த்து முறைக்க அவர் கணவரின் வீல் சேரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்.அவர்கள் உள்ளே சென்றதும் “இப்போ சொல்லு உன் விருப்பம் என்ன??”

 

“இதெல்லாம் என்கிட்டே கேட்டா எனக்கெப்படி தெரியும்”

 

“உன்கிட்ட பேசினவரை உனக்கு என்ன தோணுச்சு…”

“நல்லாதான் பேசினார்”

 

“சரின்னு தோணுதா உனக்கு…”

 

“டேய் இதெல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு…”

 

“இங்க பாரு கவி கட்டிக்க போறது நீ. அதுனால தான் கேட்கிறேன்”

 

“சரி அப்போ நீ சொல்லு உனக்கு அவரை பார்த்தா எப்படி தோணுது??” என்று கேள்வியை சிவாவின் புறம் திருப்பிப் போட்டாள் சங்கவி.

 

“என்கிட்டயேவா…” என்றவன்“அவர் பேச்சு ரொம்ப தெளிவா இருக்கு. அவர் வந்ததும் நாங்க பேசினது உனக்கு கேட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்”

 

“நான் இப்படி கேட்டனேன்னு முகம் சுளிக்காம அதுக்கு அவர் பதில் சொன்ன விதம் எனக்கு பிடிச்சுது. அவரைப்பத்தி விசாரிச்ச வரையிலும் நல்ல மாதிரி தான் சொன்னாங்க”

 

“அப்போ உனக்கு அவர் ஓகேன்னு தோணுதா” என்றாள்.

 

மாருதியை ஓகே என்று சொல்ல சிவாவுக்கு விருப்பமே ஆனால் அவனுடன் வந்தவளை பார்த்ததில் இருந்தே அவனுக்கு ஒரே யோசனை தான். இந்த சம்மந்தம் வேண்டுமா என்று…

 

அதனாலேயே சங்கவியின் முடிவை தன் முடிவாக்க எண்ணினான். அவளோ அவன் முடிவை கேட்கிறாளே என்ன சொல்ல?? என்ற ரீதியில் அமைதியாய் அவளை பார்த்தான்.

 

“என்ன உனக்கு பிடிக்கலையா??”

 

“பிடிக்காம எல்லாம் இல்லை. உனக்குபொருத்தமா இருப்பார்ன்னு தான் தோணுது”

 

“அப்போ எனக்கும் சரி தான்”

 

“ஹேய் நான் சொல்றதை வைச்சு எல்லாம் முடிவு பண்ணாத கவி. உன் மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் சொல்லு” என்றான் சிவா.

 

“பிடிச்சிருந்தது, எதுக்கும் நீ என்ன சொல்றன்னு பார்த்திட்டு முடிவு சொல்லலாம்ன்னு நினைச்சேன். நீயும் சரிங்கற மாதிரி தானே சொன்னே. அதான் ஓகே சொல்லிட்டேன்” என்று தன் விருப்பத்தை சொல்லியிருந்தாள் சங்கவி.

 

சிவாவிற்கு தான் என்ன சொல்ல என்றே தெரியவில்லை. மகிழ்ச்சி கொள்வதா அந்த ராட்சசியை எண்ணி எரிச்சல் கொள்வதா என்ற நிலை.

 

அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கறதா தானே சொன்னாங்க. அப்போ சீக்கிரம் எங்காச்சும் போய் தொலைஞ்சுடுவா என்று எண்ணிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

……….. “என்னப்பா உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கா??” என்றார்பாவையின் அன்னை மகேஸ்வரி.

 

“ஹ்ம்ம் பிடிச்சிருக்கும்மா”

 

“உனக்கு பாவை??” என்று மகளை பார்த்து கேட்டார் அவர்.

 

“பிடிக்கலை” என்றாள் ஒற்றை சொல்லாய்.

 

“ஏன்??” கேட்டது மாருதி.

 

“ஹ்ம்ம் அதை இப்போ தான் உனக்கு கேக்கணும்ன்னு தோணிச்சா… எனக்கு இந்த இடம் பிடிக்கலை, உனக்கு வேற பொண்ணு பார்க்கலாம்” என்றாள்.

 

“எதுக்கு??” என்றான் அவன் விடாமல்.

 

“பிடிக்கலைன்னா பிடிக்கலை…”

 

“உனக்கு ஏன் பிடிக்கணும் நான் தானே கட்டிக்கப் போறேன். நீ அந்த இடம் பிடிக்கலைங்கறதுக்கு நியாயமான ஒரு காரணம் சொல்லு”

 

“அந்த பொண்ணோட அண்ணன் சரியில்லை…”

 

“ஏன் உனக்கும் அவங்களுக்கும் எதுவும் பிரச்சனையா??”

 

‘அய்யோ இந்த அண்ணன் என்ன வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குது’ என்றா ஆயாசம் அவளுக்கு.

“பார்க்கும் போதே தெரியலையா உனக்கு. ஆளே சரியில்லை, அவனும் அவன் பார்வையும்” என்றாள்.

 

“என்னப்பா இவ இப்படி சொல்றா” என்றார் மகேஸ்வரி சுவாதீன குரலில்.

 

“அம்மா அவ சொல்றதை எல்லாம் கேட்காதீங்க. சிவாவை பார்த்தா அப்படி எல்லாம் தெரியலை. ரொம்ப நல்ல மாதிரியா இருக்கார்”

 

“இப்போ அந்த பேமிலியே அவர் தான் பார்த்துக்கறார். இவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி ஒரு அண்ணன் இருக்கார். ஆனா அவர் இவங்களை அவ்வளவா கண்டுக்க மாட்டார் போல”

 

“சிவா தான் அந்த குடும்பத்தை தாங்குறார், பொறுப்பானவர். ரொம்ப வெளிப்படையா பேசுறார், அவர்கிட்டஎந்த தப்பும் எனக்கு தெரியலை…” என்று சிவாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினான் மாருதி.

 

பாவையோ வாயோடு முனகிக் கொண்டவள், முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்.  மகேஸ்வரிமகனிடம் தனியே ஏதோ பேசினார். அவனுக்கும் அன்னை சொல்வதே சரியென்றுபட்டது.

 

இரண்டு நாட்கள் கடந்திருந்த வேளை மாலினி மாருதிக்கு அழைத்தார்.

 

“உங்கம்மாகிட்ட பேசணும், பேசலாங்களா… அவங்களுக்கு சிரமமா இருக்காதே” என்றவாறே கேட்க “ஒரு நிமிஷம் இருங்க நான் அம்மாகிட்ட கொடுக்கறேன்” என்றவன் மகேஸ்வரியிடம் விபரம் சொல்லி போனை கொடுத்தான்.

 

பரஸ்பர நல விசாரிப்பின் பின் தங்களின் விருப்பத்தை அவரிடம் நேரடியாக சொல்லி மேற்கொண்டு என்ன செய்ய என்ற பேச்சை ஆரம்பித்தார் மாலினி.

 

“ரொம்ப சந்தோசங்க, சீக்கிரமே நல்ல நாள் பார்த்து கல்யாணம் வைச்சிடலாம். அதுக்கு முதல் நாள் நிச்சயம் வைச்சுக்கலாம்”

 

“அடுத்து வர்ற நல்ல நாள்ல வீட்டோட உப்புத்தாம்பூலம் மாத்திக்கலாம்” என்றார் மகேஸ்வரி.

 

“முதல்ல நிச்சயம் வைச்சிடலாமே” என்ற மாலினியிடம் தன் உடல் நிலைக்குறித்து அவர் சொல்ல மாலினியும் பதில் பேசவில்லை சரியென்றுவிட்டார்.

 

“உங்ககிட்ட இன்னொன்னு கேட்கலாமா??” என்று மெல்ல ஆரம்பித்தார் மகேஸ்வரி. அதற்குள் அவருக்கு மூச்சிரைக்க மகனிடம் போனைக் கொடுத்தவர் மாருதியை பேசச் சொன்னார்.

 

அன்னையை படுக்கையில் சாய்த்து ஆசுவாப்படுத்தியவன் “சாரி அம்மாக்கு ரொம்ப நேரம் தொடர்ந்து பேச முடியாது”

 

“தப்பா எடுத்துக்காதீங்க”

 

“பரவாயில்லைங்க ஏதோ சொல்ல வந்தாங்க… அவங்களுக்கு எப்போ முடியுதோ அப்போ பேசட்டும். நான் வைச்சுட்டுங்களா…”

 

“இல்லை நானே சொல்லிடறேன்…” என்ற மாருதி சிறு இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தான்.

 

“சிவாக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கீங்களா??”

 

‘இதை எதுக்கு கேட்குறாங்க’ என்ற யோசனை உள்ளே ஓடிய போதும் அதை ஒதுக்கி “கவிக்கு முடிச்சுட்டு தான் அவனுக்கு பண்ணணும்”

 

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒண்ணு சொல்றேன். என் தங்கை பாவைக்கு சிவாவை கொடுப்பீங்களா?? இது அம்மாவோட விருப்பம் தான்”

 

“உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லுங்க. இதையும் சங்கவிக்கும் எனக்குமான கல்யாணப் பேச்சையும் சம்மந்தப்படுத்திக்காதீங்க”

 

“எனக்குஎன்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. நான் வீட்டில பேசிட்டு சொல்றேன்” என்று வைத்துவிட்டார் மாலினி.

 

இரவு எட்டு மணி போல வீட்டிற்குள் நுழைந்தான் சிவரூபன். முகம் கை கால் கழுவி வந்தவன் வேறு உடைக்கு மாறி வெளியில் வந்தான்.இரவு உணவை மாலினி அவனுக்கு எடுத்து வைக்க ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.“மாப்பிள்ளை வீட்டுக்கு பேசினேன்…” என்ற குரல் கேட்டதும் வீட்டு ஹாலை ஒரு முறை அவன் கண்கள் வலம் வந்தது.

 

அன்னை பேசியது தன்னிடம் தானா, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்று தான் பார்த்தான். பதில் சொல்ல வேண்டுமா இல்லை என்ன செய்ய என்று புரியாமல் அமைதியாய் அவரை ஏறிட்டான்.

 

சங்கவி அப்போது தான் அவளறையில் இருந்து வெளியில் வந்தாள்.‘ஓ!! இவ இங்க தான் இருக்காளா அதானே பார்த்தேன். அம்மாவாச்சும் பேசுறதாச்சும்’

 

மாப்பிள்ளை வீட்டினரிடம் பேசியதை மாலினி பொதுவாய் சொன்னார். அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டான்அவன்.“அப்புறம் அவங்க… அவங்க இன்னொரு விஷயம் கேட்டாங்க…” என்று நிறுத்தினார் அவர்.

 

“என்னம்மா கேட்டாங்க?? எதுவும்வரதட்சணை கேட்கறாங்களா?? அப்படின்னா கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிருங்க” என்றாள் சங்கவி.

 

சிவா தன் தங்கையை முறைக்க மாலினி தொடர்ந்தார்.“அதில்லை கவிம்மா அன்னைக்கு மாப்பிள்ளையோட அவரோட தங்கை வந்தாளே…”

 

“ஆமா வந்தாங்க, அவங்க பேரு கூட ஏதோ அழகான பேரு… ஹான் ஓவியப்பாவை… அதானேம்மா…”

“ஹ்ம்ம் ஆமா… அந்த பொண்ணுக்கு நம்ம சிவாவை கேக்குறாங்க…” என்று சொல்லி முடித்தார் வேகமாய்.

 

“வாவ் சூப்பர்ம்மா… செமல டேய் அண்ணா இந்த ஐடியா எனக்கு பிடிச்சிருக்குடா…உடனே ஓகே சொல்லிரு, அந்த பொண்ணு கூட அழகா இருந்துச்சு ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக்குன்னு” என்றவளை முறைத்தான் சிவா.

 

‘இதேதுடா வம்பா போச்சு, ராட்சசியை நான் கட்டிக்கிறதா… நடக்கவே நடக்காது…’

 

“சிவா என்னப்பா யோசனை??”

 

“ம்மா… நீங்க அண்ணாகிட்ட பேசிட்டீங்க!!” என்றாள் சங்கவி ஆச்சரியகுரலில் அதே சமயம் சந்தோசமாகவும்.சிவாவும் நிமிர்ந்து அன்னையை பார்த்தான் அதற்காகவே அவரிடம் சரி என்று சொல்லத் தோன்றியது அவனுக்கு….

 

ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சுண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்

Advertisement