Advertisement

அத்தியாயம் – 4

கல்லூரிமுடிந்ததும்பாவை தன் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ரயில் நிலையம் செல்லும் வரையிலும் தோழிகள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

ரயிலுக்காய் காத்திருந்த நொடிகளில் இறுகிய முகத்துடன் சிவா அவன் நண்பனுடன் அவளை கடந்து சென்றான்.

அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்று மருந்துக்கும் கூட அவளை திரும்பி பார்த்திருக்கவில்லை அவன்.

வனஜாவும் செல்வியும் அவனையே பார்த்திருந்தனர், ஏன் பாவையும் கூட அவனைத் தான் பார்த்திருந்தாள் ஒரு வித வெற்றிக் களிப்புடன்.

“நேத்தே உன்கிட்ட இதை பத்தி பேசணும்ன்னு நினைச்சேன் பாவை. ஏன் அப்படி செஞ்சே?? அவன் என்ன பண்ணான்??”

“அப்படியே இடிச்சு கீழ விழுந்திருந்தா கூட இங்க கூட்டத்துல இப்படி நடக்கறது சகஜம் தானே. நீ எதுக்கு இதை இவ்வளவு பெரிய விஷயமாக்குனே”

“பிரின்சிபால்கிட்ட சொல்லி அவனோட அம்மா வந்து, இதெல்லாம் தேவையா பாவை” என்று கேட்டுவிட்டிருந்தாள் வனஜா.

“அவனுக்கு இது தேவை தான்…” என்றது பாவையே.

“உனக்கு அவனை முன்னாடியே தெரியுமா??” என்றாள் செல்வி யோசனையாய்.

“பார்த்திருக்கேன்” என்ற பதில் மட்டுமே அவளிடத்தில்.

“உன்கிட்ட எதுவும் வம்பு பண்ணிட்டாரா??” இது வனஜா.

இப்போது இவள் முகம் இறுகியது, பதிலொன்றும் சொல்லவில்லை. சற்று தள்ளி நின்றிருந்த அவனையே வெறித்து பார்த்தாள்.

வனஜாவும் செல்வியும் மேற்கொண்டு அவளை தூண்டி துருவவில்லை. ஏதோ விட்ட பகை தொட்ட குறை என்று எண்ணிக்கொண்டு பேசாமல் விட்டனர்.

வனஜாவும் பாவை வீட்டருகில் தான் இருக்கிறாள். இருவருக்குமே சிறு வயதில் இருந்தே பழக்கமுண்டு. அவளுக்கு சிவாவை எங்கும் பார்த்ததாக ஞாபகமிருக்கவில்லை.

ஆனால் பாவையின் முக மாறுதல்கள் அவளுக்கு திருப்தியாய் இல்லாததாலே செல்வியையும் மேற்கொண்டு பேசவிடாமல் பார்வையால் அடக்கி தானும் அடங்கினாள்.

அவனை நோக்கி எட்டி நடையை போடவும் செய்தாள் பாவை. அவனருகே சமீபித்து விட்டிருந்தவளை அவன் இப்போதும் கூட நிமிர்ந்து பார்ப்பதாயில்லை. எங்கே ஆத்திரத்தில் அவளை அடித்துவிடுவோமோ என்று அமைதி காத்தான்.

அவள் தான் அவனை அப்படியே விடுவதாயில்லையே வம்பிழுக்கத்தானே வந்தாள். வந்த வேலையை குறையாமல் செய்தாள்.

ஜெகதீஷுக்கே அவள் செய்யும் செயல் அதீதமாய் தோன்றியது. எதற்கு வந்து இங்கு நிற்கிறாள் என்று கடுப்பாய் தான் பார்த்திருந்தான் அவனும்.

“என்ன சார் பயந்துட்டீங்க போல?? அந்த பயம் உனக்கு எப்பவும் இருக்கணும்டா, அப்போ தான் உனக்கெல்லாம் தப்பு பண்ண தோணாது…” என்று அவனை பார்த்து தெனாவட்டாய் மொழிந்தாள்.

அவன் கை கட்டுப்படாமல் உயரவே பார்க்க ஜெகதீஷை இழுத்துக்கொண்டு அந்த நடைமேடையின் மறுகோடிக்கு சென்றான் அவன்.

ஜெகதீஷுக்கே ஆச்சரியம் தான் சிவா இப்படி இருக்கிறானே என்று!! பின்னேஅவனிடம் ஒருவர் வம்பு செய்தால் அவன் வாய்மொழி பேசாது கைமொழி மட்டுமே பேசும்.

இப்போது கை மொழியல்ல வாய் மொழி கூட இல்லாமல் கடந்து சென்றவனின் பின்னேயே யோசனையுடன் சென்றான் ஜெகதீஷ்.

முதல் நாள் போலவே இப்போதும் அதே கேள்வியே கேட்டான். “டேய் சிவா உனக்கு அந்த பொண்ணை தெரியுமாடா”

நண்பனை திரும்பி பார்த்து முறைத்தவன் “எனக்கு தெரியாது… தெரியாது… தெரியாதுடா… எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு தெரியாது”

“நான் அவளையே இப்போ தான் பார்க்குறேன். அவளுக்கு ஏன் என் மேல இவ்வளவு கோபம்ன்னு எனக்கும் தான் தெரியலை. அதை கேட்கலாம்ன்னாலும் இப்போ அது முடியாது…”

“ஏன் சிவா?? ஏன் முடியாது??”

“அவகிட்ட எந்த பேச்சும் வைச்சுக்க மாட்டேன்னு எழுதி கொடுத்திருக்கேன்டா எங்கம்மா முன்னாடி. அதை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது??”

“அவ எக்கேடோ கெட்டு ஒழியட்டும். நான் அவ இருக்கற திசைப்பக்கம் கூட போகறதா இல்லை” (திசைமாறி உன் வீட்டுப்பக்கமே பயணிக்கப் போகுதே அப்போ என்ன ராசா செய்வ)

அடுத்து வந்த ரயிலில் நண்பனுடன் ஏறியவன் தான் முகம் இன்னமும் இறுகிப் போய் தானிருந்தது.வீட்டிற்கு வந்ததும் நேரே அவன் அன்னை முன் தான் சென்று நின்றான்.

அவரோ இவனை திரும்பியும் பார்க்கவில்லை, அவனிடம் பேசவும் நினைக்கவில்லை. அவன் பேச்சுக்கு மறுமொழியை மகளை ஊடே வைத்து அவர் சொன்னதில் வெகுவாய் நொந்து போனான் சிவா.

அவனின் மொத்த கோபமும் இப்போது பாவையின் மீது திரும்பியது. அவளை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற வெறியே அவனுக்கு வந்தது.

இத்தனை வருடத்தில் அவன் அன்னை அவனிடம் பேசாமல் மட்டும் இருந்ததில்லை எப்போதும். திட்டினால் கூட திட்டிவிட்டு பின் பேசத் தான் செய்வார்.

இதுவே முதல் முறை அவர் இப்படி முகம் திருப்புவது. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருப்பார் பிறகு சரியாகிவிடும் என்ற அவன் எண்ணம் பலிக்கவில்லை.

அன்று காலையில் கிளம்பும் போது அவன் மீண்டும் அவரிடம் பேச முயற்சி செய்ய அவரோ முகம் திருப்பி செல்ல அதீத எரிச்சலுடன் காலை உணவையும் தவிர்த்து மதிய உணவைக் கூட எடுத்துக் கொள்ளாமல் வெளியேறி இருந்தான் அவன்.

ரயிலில் ஏறும் வரை கூட அவன் முகம் இறுகி கோபத்துடனே தானிருந்தது. ஜெகதீஷிடம் கூட ஒன்றும் பேசவில்லை. யாரை பார்த்தாலும் கோபமாகவே வருவது போலிருந்தது.

ஆவடி ரயில் நிலையத்தில் ஏறியிருந்த அவளை காணும் வரையிலும் கூட அவன் அப்படியே தானிருந்தான். தற்செயலாய் திரும்பி பார்க்க அவள் தோழிகளிடம் அரட்டையில் ஈடுபட்டிருந்தாள்.

அவனை பார்த்திருந்தால் வந்து வம்படி செய்திருப்பாளோ என்னவோ இன்றைக்கு அவனின் கெட்ட நேரம் அவனே அவள் முன் சென்று ஆத்திரமாய் அவளை உறுத்து விழித்தான்.

அவளோ“என்னடா??” என்றாள் மிதப்பாய்.

அவன் பார்வையே மற்ற இரு பெண்களுக்கும் குளிரை பரப்ப பாவை இப்படி அசராமல் அவனிடம் பேசியது கண்டு அவர்கள் சற்று ஒதுங்கி நின்று பார்த்தனர்.

“எல்லாம் உன்னால தான்டி, எவ்வளவு திமிர் உனக்கு. நான் என்னடி பண்ணேன் உன்னை அன்னைக்கு?? பெரிய இவளாட்டம் பிரின்சிபால் வரைக்கும் விஷயத்தை கொண்டு போய்ட்ட”

“எங்கம்மாவை ஏன்டி இதுல இழுத்துவிட்டே??” என்றவனின் கண்கள் சிவந்து ஆத்திரமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் உன் மொத்த குடும்பத்தையும் கூப்பிட்டு விட்டிருக்கணுமோ?? அது தான் உனக்கு குறையா இருக்கோ??” என்று அவள் கேட்கவும் “ஏய்??” என்று கத்தியவனை சுற்றியிருந்தோர் ஒரு மாதிரியாய் பார்க்க அடங்கினான் அவன்.

“பொம்பிளை பிள்ளைக்கு அவ்வளவு என்னடி ஆணவம்?? ராட்சசி…” என்று அடித்தொண்டையில் அவளிடம் உறுமினான்.

“ஆம்பிள்ளை பிள்ளைக்கு மட்டும் தான் ஆணவம் சொந்தமா இருக்கணுமா ராட்சஷா” என்று பதிலுக்கு பதில் கொடுத்துக்கொண்டே இருந்தவளை என்ன செய்ய என்று தான் பார்த்தான் சிவரூபன்.

“சீய் நீ எல்லாம் என்ன பொண்ணோ??” என்றுவிட்டு அடுத்த வந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டவன் வேறுகம்பார்ட்மெண்டில் சென்று ஏறிக் கொண்டான்.

அதற்குமேல் அவளிடம் நின்று பேசினால் கை பேசிவிடும் என்று எண்ணியே விலகி சென்றான். ஆனால் அவள் தான் விஷயத்தை அத்துடன் விடுவதாயில்லையே!!

கல்லூரி வந்ததும் முதல் வேலையாய் பிரின்சிபாலிடம் அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறையை சொல்லிவிட்டு தான் மறுவேலையே பார்த்தாள்.

இதில் சிவா அறியாத ஒரு விஷயம் அந்த கல்லூரி முதல்வர் பாவைக்கு நன்கு தெரிந்தவர் என்பதை அவனறியான்.

ஒரு பெண் அதுவும் தனக்கு நன்றாய் தெரிந்த ஒரு பெண் தன்னிடம் ஒரு விஷயம் சொல்லுகிறாள், அது முழுக்க உண்மை என்று எண்ணியே சிவாவிடம் அதிகம் விசாரிக்காமல் அவனிடம் பாராபட்சம் காட்டினார் முதல்வர்.

இப்போதும் அதையே தான் அவர் செய்தார். இந்த முறை அவர் செய்தது அவனும் அவன் அன்னையும் ஒப்புதலாய் கொடுத்த கடிதத்தை இணைத்து அவன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பதினைந்துநாட்களுக்கு அவனை இடைநீக்கம் செய்திருப்பதாய் அறிக்கை ஒன்றை அவன் வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டார்.

கல்லூரிக்கு வந்த அவனிடமும் அதன் நகல் ஒன்று கொடுக்கப்பட்டது. சிவா மிகவும் அவமானமாக உணர்ந்தான் அக்கணம்.

யாரையும் பார்க்க பிடிக்கவில்லை அவனுக்கு. கால் போன போக்கில் அன்று நடந்தவன் பின்னர் வீட்டிற்கும் வந்து சேர்ந்தான்.

மாலினி தான் அவனிடம் ஒன்றும் பேசுவதில்லையே அதனால் என்னவாயிற்று என்று கேட்கவில்லை அவர். மாலை சங்கவி வீட்டிற்கு வரவும் அவளையே விசாரிக்குமாறு மகனிடம் அனுப்பி வைத்தார்.

தன் முன் வந்து நின்ற தங்கையை நிமிர்ந்து நோக்கினான் சிவா.

“என்ன எருமை?? இன்னைக்கு நேரமே வீட்டுக்கு வந்துட்டியாம், என்ன பண்ணிட்டு வந்தே காலேஜ்ல??” என்று அவள் சாதாரணமாய் தான் விசாரித்தாள்.

அதுவரை பெரும் மன அழுத்தத்தில் தனக்குள் புதைந்திருந்தவன் கொட்டித் தீர்த்துவிட்டான்.

“என்ன எல்லாரும் என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?? என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா…”

“காலேஜ்ல ஒரு பொண்ணு என் மேல கம்பிளைன்ட் கொடுக்கறா, பிரின்சிபால் என்னன்னே கேட்காம பனிஷ் பண்றார்”

“அங்க தான் அப்படின்னா நம்ம வீட்டில இருக்கவங்க நான் தான் தப்பு பண்ணேன்னு அங்க ஒப்புதல் கொடுத்திட்டு வர்றாங்க”

“சங்கவி நீயே சொல்லு உன் பிரண்ட்ஸ் எத்தனை பேரு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. ஒரு முறையாச்சும் நான் அவங்களை தப்பா பார்த்திருக்கனா இல்லை உன்கிட்டயாச்சும் பேசியிருப்பனா”

“ஏதோ வயசு கோளாறுல வெளிய பொண்ணுங்களை பார்த்திருக்கேன். மத்தப்படி யாரையும் நான் எதுக்கும் கஷ்டப்படுத்தினது இல்லை”

“டேய் என்னடா ஆச்சு எதுக்கு இப்படி மூச்சை பிடிச்சிட்டு பேசிட்டு இருக்கே?? உன்னை யாரு என்ன சொன்னாங்க…” என்ற சங்கவி உடன்பிறந்தவனை பார்த்து கேட்டாள்.

“அம்மா இவனுக்கு என்னாச்சுன்னு பாருங்க” என்று வேறு உடன் சேர்த்துக் கொண்டாள்.

“என்னை காலேஜ்ல இருந்து பதினஞ்சு நாளைக்கு சஸ்பென்ட் பண்ணியிருக்காங்க…” என்றவன் அதன் நகலை எடுத்து காட்டினான். மாலினி வேகமாய் அவன் முன் வந்து நின்றார்.

“எனக்கு தெரியும்டா நீ இப்படி தான் செய்வேன்னு எனக்கு தெரியும்… கடைசியில என் பேரை கெடுத்திட்டு வந்திட்டேல்ல… இப்போ சந்தோசமா உனக்கு” என்றவர் ஒரு புறம் சென்று ஓவென்று அழ ஆரம்பிக்க சங்கவியின் பாடு தான் திண்டாட்டமாய் போனது.

யாரை சமாதானம் செய்ய என்ற ரீதியில் நின்றவள் அன்னையை நோக்கியே சென்றாள். இரவு வீட்டிற்கு வந்த சதாசிவத்தை வீட்டின் அசாத்திய அமைதி கேள்வி கேட்க வைத்தது.

சந்திரன் அதே வீட்டில் இருந்தாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பவன். வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டு அவன் எப்போதும் போல் அறைக்குள் முடங்கிக் கொண்டான்.

சதாசிவம் மனைவியின் சரியில்லாத முகத்தை கண்டுக்கொண்டவர் மகளிடம் லேசாய் விசாரித்தார். “கவிம்மா என்னாச்சுடா ரொம்ப அமைதியா இருக்கு. அந்த தறுதலையால எதுவும் பிரச்சனையா??”

எப்போதும் உடன்பிறந்தவனை போட்டுக் கொடுப்பதிலேயே குறியாய் இருக்கும் சங்கவி ஏனோ இன்று அமைதி காத்தாள்.

“ஒண்ணுமில்லைப்பா, உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கறேன்ப்பா” என்று பேச்சை மாற்றிப் போனாள் அவள். விஷயம் எப்படியும் தெரியத்தான் போகிறது, அதுதன் மூலமாய் ஏன் தெரிய வேண்டும் என்று அமைதியாய் இருந்தாள் என்றும் இல்லா திருநாளாய்.

அவருக்கு டிபன் வைத்த மனைவியின் முகம் பார்த்தவருக்கு அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியவில்லை.

“என்ன தான் நடந்துச்சு சொல்லித் தொலையுங்களேன்” என்று சத்தமாகவே குரல் கொடுத்தார்.

மாலினி அவரிடம் எதையும் மறைக்க நினைக்கவில்லை. நடந்ததை அப்படியே கூற எழுந்து நின்றுவிட்டார் சதாசிவம்.

“இதுக்கு தான் அப்போவே படிச்சு படிச்சு சொன்னேன். அந்த தறுதலைக்கு படிப்பு தான் வரலையே அப்படியே நிறுத்திட்டு மாடு மேய்க்க அனுப்பலாம்ன்னு”

“இவனை படிக்க வைச்சதுக்கு யாராச்சும் ஏழை பிள்ளைங்களை படிக்க வைச்சா புண்ணியமாச்சும் கிடைச்சிருக்கும்”

“அன்னைக்கு காலேஜ் போனியே ஏதோ படிக்க மாட்டேங்குறான்னு கம்பிளைன்ட் வந்திருக்கும்ன்னு நினைச்சேன். இப்போ தானே தெரியுது இவன் லட்சணம் வெளிய வந்திருக்குன்னு”

“அன்னைக்கு நீயும் எதுவும் என்கிட்ட சொல்லவே இல்லை” என்று மனைவியை நேரடியாக குற்றம் சாட்டினார் இப்போது.

“இவ்வளவு நாளு படிக்காம தான் இருந்தான். இன்னைக்கு தானே தெரியுது இவன் பொறுக்கியாவும்இருக்கான்னு போதும் இத்தோட இவன் படிச்சு கிழிச்சது எல்லாம் போதும்”

“நீ தான் இவனை செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சுட்ட, அன்னைக்கு துரை பெரிசா பேசினாரு. அம்மா எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்க்குறான்னு”

“இதான் நீ புள்ளைங்கள பார்த்துக்கற லட்சணமா” என்று அவர் வாய் நிறுத்தாமல் பேசியது மாலினியின் கண்ணீரை அதிகப்படுத்தியது.

“இனிமே இவனை படிக்க வைக்க என்னால முடியாது” என்று திட்டவட்டமாக சொல்லிய சதாசிவத்திடம் மாலினி தான் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“இது தான் கடைசிங்க இனிமே அவன் எந்த தப்பும் பண்ணமாட்டான். அவன் படிப்பு முடிக்க நானாச்சு” என்று பலவிதமாய் உறுதி கொடுத்த பின்னே தான் சதாசிவம் ஒரு மனதாய் இறங்கினார்.

அவர் படுக்கச் சென்ற பின் சந்திரனின் அறையில் உறங்காமல் அமர்ந்திருந்த சிவாவை மகளைவிட்டு அழைத்து வரச்சொன்னார் மாலினி.

“கவிம்மா அவன்கிட்ட சொல்லிரு, இது தான் அவனுக்கு கடைசி சான்ஸ். இதுக்கு மேல அவன் என்ன பண்ணாலும் அது நான் செத்ததுக்கு சமம்” என்று சொல்லிய மாலியை இடைவெட்டி “அம்மா என்னம்மா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறே??” என்றாள் மகள்.

“நான்சொல்றதை மட்டும் அவன்கிட்ட சொல்லு. இந்த முறை அவன் படிக்கணும், என்ன பண்ணுவானோ ஏது பண்ணுவானோ எனக்கு தெரியாது. இதுக்கு மேல அசிங்கப்படவும் எனக்கு தெம்பில்லை”

இப்போது அன்னையின் பேச்சை இடைமறித்தான் சிவரூபன். “அதை என்கிட்ட நேராவே சொல்லுங்கம்மா. நான் தப்பு பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்கறீங்களா??” என்றான்.

“எது தப்பு எது சரின்னு நான் இப்போ ஆராய விரும்பலை. நடந்த விஷயத்துல அவன் ஏதோ ஒரு விதத்துல சம்மந்தப்பட்டிருக்கான்”

“அதை இல்லைன்னு மறுக்க முடியாதுல அவனால. இனிஅந்த சம்மந்தம் கூட இருக்கக் கூடாது. இவனை பத்தி தப்பா இனி ஒரு பேச்சு வரக்கூடாது”

“என்னைக்குஇவன் சரின்னு எனக்கு தோணுதோ அன்னைக்கு தான் நான் இவனோட பேசுவேன்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் மாலினி. சிவரூபன் ஒன்றும் சொல்லாமல் மரம் போல நின்றிருந்தான் செல்லும் அவரைப் பார்த்து.

உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது

எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்

ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா

மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா

பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா

பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ..ஆஆ

Advertisement