Advertisement
அத்தியாயம் – 21
பார்த்த முதல் நாளே என்ற பாடல் தான் இப்போது அவள் மனதிற்குள். சட்டென்று நினைவு வந்தவளாய் அவள் நிமிரவும் பாட்டும் பாதியிலேயே நின்று போனது.
“என்னாச்சு??” என்றான் அவன்.
“நகையை என்ன பண்ணப் போறீங்க??”
“வீட்டுக்கு போய் பேசலாம் தானே…”
“எனக்கு இப்போவே தெரியணும்… வண்டியை ஓரமா நிறுத்துங்க…”
“நிறுத்தறேன் கொஞ்சம் வெயிட் பண்ணு” என்றவன் கொஞ்ச தூரம் சென்று ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தினான்.
“இங்க எதுக்கு??”
“பசிக்குது எனக்கு… பார்த்த தானே சாப்பிடாம வந்திருக்கேன், ஒழுங்கா வந்து என்னோட சாப்பிடு அப்புறம் பேசுவோம்…” என்று உள்ளே செல்ல அவளும் பின்னோடு சென்றாள்.
“வீட்டுக்கு போய் சாப்பிட்டிருக்கலாமே…”
“உன்னோட விருந்தோம்பல் எல்லாம் நைட்டு பார்த்துக்கலாம்… இப்போ எனக்கு பயங்கரமா பசிக்குது…” என்றுவிட்டு அங்கு வந்து நின்றவரிடம் இருவருக்கும் தேவையானது ஆர்டர் செய்தான்.
அவளோ உம்மென்று அமர்ந்திருந்தாள்… “சகிக்கலை…”
“என்னது??”
“இப்படி உம்முணாமூஞ்சி ஊருக்காய் ஜாடியா இருக்கறது பார்க்க சகிக்கலை…” என்றவனை முறைத்தாள்.
“என்ன பண்ணப்போறீங்க??”
“வீட்டில போய் பேசிக்கலாம் ப்ளீஸ்…” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவர்களுக்கான உணவு வரவும் சரியாக இருந்தது.
சிவா உண்மையிலேயே சரியான பசியில் இருந்தான் போலும். அடுத்த பத்து நிமிடத்தில் உணவை காலி செய்திருந்தான்.
சாப்பிட்டு முடித்து அவனுக்கு பழச்சாறு ஒன்று சொன்னான். அவள் இன்னமும் சாப்பிட்டு முடிக்கவில்லை.
அவனுக்கு பழச்சாறும் வந்து அவன் அதை குடித்து முடிக்கும் தறுவாயில் தான் அவள் உண்டு முடித்திருந்தாள். “போதுமா, ஜூஸ் சொல்லவா”
“வேணாம் இதே போதும்…” என்று எழுந்திருந்தாள்.
சாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றிருந்தான் இப்போது.
“நீ போய் அத்தையை பாரு, நான் அம்மாக்கு போன் பண்ணிட்டு வர்றேன்…” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவன் அன்னைக்கு அழைத்தான்.
“சொல்லுப்பா சிவா அவளை ட்ரைன் ஏத்திவிட்டுட்டியா… அவ முகமே சரியில்லை, நீ எதுவும் சொன்னியா அவளை…” என்று பிடித்துக் கொண்டார் மாலினி.
“அம்மா அவளை ட்ரைன் எல்லாம் ஏத்திவிடலை… அவளையே ஏத்திட்டு வந்து வீட்டுல விட்டுட்டேன்… போதுமா…”
“அப்புறம் ஏன் அவ அழுதா??”
“உங்க மருமகளை நான் எதுவும் சொல்லலை… அப்படியே நான் சொல்லி அவ ஒண்ணும் கரைஞ்சிட போறதில்லை…”
“என்னமோ சிவா நீ பண்ணுறதும் எனக்கு புரியலை. அவ அழறதும் எனக்கு பிடிக்கலை. தப்பு எங்கயும் இல்லைன்னு மட்டும் தெரியுது. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கோங்க அவ்வளவு தான்…” என்று முடித்துவிட்டார் அவர்.
“சரிம்மா நான் பார்த்துக்கறேன்… ஹ்ம்ம் அம்மா…” என்று இழுத்தான்.
“உனக்கு இன்னைக்கு நைட் சாப்பாடு வேண்டாம்… நீ நாளைக்கு வருவே அதானே…”
“இல்லைம்மா ஒரு வாரம் கழிச்சு தான் வருவேன்…” என்று அவன் கூலாக பதில் சொல்ல எதிர்முனையில் மாலினி சிரித்துக்கொண்டே போனை வைத்திருந்தார். அடுத்து மாருதிக்கு அழைத்திருந்தான்.
மாருதியோ காலையில் தங்கை மாமியார் வீட்டிற்கு கிளம்பிப் போகிறேன் என்றதில் இருந்தே அவனுக்கு எதுவோ சரியில்லையோ என்றிருந்தது.
சற்று முன்னர் தான் மனைவிக்கு அழைத்து தங்கை வந்து சென்றதை விசாரித்திருந்தான். முதலில் அன்னையின் சொல்படி ஒன்றும் சொல்லாமல் தானிருந்தாள் சங்கவி.
“என்ன பிரச்சனைன்னு சொல்லு சங்கவி…” என்று அவன் அழுத்தி கேட்டான்.
“தெரியலைங்க எனக்கு… ஆனா அண்ணி கொஞ்சம் அழுத மாதிரி இருந்துச்சு… அவங்க கிளம்பி போகவும் அண்ணாவும் பின்னாடியே கிளம்பிட்டாங்க…”
“சிவா எதுவும் சத்தம் போட்டாரா??”
“அதெல்லாம் இல்லைங்க… நீங்க இதை உங்க தங்கையோட அண்ணனா பார்க்காதீங்க… அவங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதோ சின்ன சண்டை போல அதை அவங்க பேசி தீர்த்துக்குவாங்க…”
“எனக்கு புரியுது சங்கவி… நான் ஒண்ணும் உங்கண்ணனை எதுவும் சொல்லிட மாட்டேன்…” என்று சொன்னவனுக்கு நிச்சயம் லேசாய் கோபமிருந்தது முகத்தில்.
பொதுவாய் பாவை அழுது அதிகம் பார்த்ததில்லை அவன். தந்தையின் இறப்பின் போது கதறியழுதவள் தான், அன்னைக்கு இப்படி உடல் நலம் குன்றிய போதும் தைரியமாக இருந்தவள் அவளே…
அப்படிப்பட்டவள் அழுதாள் என்று சொல்லும் போது ஒரு அண்ணனாய் அவனுக்குள் வருத்தமும் லேசான கோபமும் எட்டி பார்த்திருந்தது.
சிவா அப்படி பேசக் கூடியவன் இல்லை என்று உணர்ந்தாலும் ஏனோ அவனால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சங்கவியிடம் ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான்.
இப்போது சிவாவே அழைக்கவும் யோசனையுடனே போனை எடுத்திருந்தான் அவன். “மாம்ஸ் நான் இங்க தான் இருக்கேன், ஓவியை வீட்டில விட வந்தேன்…”
‘என்னது ஓவியா, இதென்னடா புதுசா இருக்கு…’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட மாருதிக்கு மனம் இப்போது அவனறியாமலே கொஞ்சம் சமாதானம் ஆகியிருந்தது.
“ஹ்ம்ம் இப்போ தான் சங்கவிகிட்ட பேசினேன் சிவா… நீங்க தான் அவளை கூட்டிட்டு வந்தீங்களா…”
“ஆமா மாம்ஸ்… அப்புறம் ஒரு விஷயம்…” என்று இழுத்தான் அவன்.
சண்டையை பத்தி சொல்லுவானோ என்று காதை தீட்டி ஆர்வமாய் கேட்டிருந்தான் மாருதி, “சொல்லுங்க சிவா” என்று.
“நான் ஒரு வாரம் இங்க இருக்கலாம்ன்னு இருக்கேன்… நீங்க கவியோட ஒரு வாரம் போய் இருந்திட்டு வாங்களேன்… அவளும் உங்களை தேடிட்டு இருக்கா…” என்றான் சிவா.
‘அடப்பாவி மாம்ஸ் மாம்ஸ்ன்னு கூப்பிட்டு கடைசில என்னை மாமாவே ஆக்கிட்டியா நீ!!’ என்று சிரிப்பு தான் வந்தது மாருதி.
“மாம்ஸ் சிரிக்கறீங்களா…”
“சிவா என்ன நடக்குது??”
“எதுவுமே நடக்கலை மாம்ஸ்…”
‘அடப்பாவி மாமான்னு மரியாதை இல்லாம அப்படியே பேசி வைக்குறானே… இவன்கிட்ட போய் என்னன்னு கேட்டோமே’ என்று தலையில் அடித்துக்கொண்டான் அவன்.
“நான் என்ன கேட்டேன்…”
“நீங்க கேட்டதுக்கு தான் மாம்ஸ் பதில் சொன்னேன்”
“ஏன் சிவா நான் வீட்டுக்கு வந்து மாத்து உடுப்பு எடுத்திட்டு போகலாமா இல்லை நேரா அங்கவே போய்டணுமா…”
“அய்யோ மாம்ஸ் நான் அப்படிலாம் சொல்லலை… நீங்க வீட்டுக்கு வாங்க, நான் ஓவிகிட்ட சொல்லிடறேன், இப்போ போனை வைக்கவா…”
“சிவா ஒரு நிமிஷம்…”
“சொல்லுங்க மாம்ஸ்…”
“உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையில்லையே??”
“இதுவரைக்கும் எதுவுமில்லை மாம்ஸ்… இனிமே தான் சண்டை போடுவா உங்க தங்கச்சி நான் அதுக்கு என்னை தயார்படுத்திக்கிட்டு இருக்கேன்… அவ அடிக்கிற அடியில ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும்”
“அதுக்காக தான் உங்ககிட்ட ஒரு வாரம் டைம் கேட்டேன்…” என்று சிரிக்காமல் சொன்னான் சிவா.
எதிர்முனையில் சத்தமில்லாது போகவும் “மாம்ஸ் நீங்க பீல் பண்ணற அளவுக்கு எதுவுமில்லை. என் பொண்டாட்டியை நான் கண்டிப்பா சந்தோசமா தான் வைச்சிப்பேன். என்னை நீங்க நம்பலாம்…”
“சிவா நான் அப்படி ஒண்ணும்…” என்று அவன் முடிக்கவில்லை சிவா பேசியிருந்தான்.
“எனக்கு புரியுது மாம்ஸ் ஒரு பிரதரா நீங்க என்ன நினைக்கறீங்கன்னு… எங்களுக்கு இடையில இருக்க பிரச்சனைகள் எல்லாம் பேசி தீர்க்கணும் அதுக்காக தான் இங்க வந்தேன் மாம்ஸ்… உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்”
“சாரி சிவா…”
“அதெல்லாம் வேணாம் மாம்ஸ்… நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க… நான் போனை வைக்குறேன்…” என்று பேசி வைத்திருந்தான்.
சிவா அரைமணி நேரமாகியும் உள்ளே வராததால் அப்படியே வீட்டிற்கு கிளம்பி விட்டானோ என்று அவனைத் தேடி வெளியில் வந்திருந்தாள் பாவை.
“என்ன…”
“இல்லை இன்னும் காணோமேன்னு…”
“உன்னை அப்படியே விட்டுட்டு போற எண்ணமெல்லாம் இல்லை…” என்றவன் அவளுடன் இணைந்து உள்ளே நடந்தான்.
“அத்தையை பார்த்தியா…”
“ஹ்ம்ம்…”
“சரியாவே சாப்பிடலை போல, இப்போ தான் பீட்ருட் ஜூஸ் போட்டு குடிக்க வைச்சுட்டு வர்றேன்…”
“சரி நான் அவங்களை பார்த்திட்டு வர்றேன்…” என்று எழுந்தவனுடன் பின்னாலேயே நடந்தாள்.
அவரை பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டான் அவன்.
“பாவை அவர் சாப்பிட்டாரா, அவர்க்கு சாப்பாடு கொடு…” என்றார் மகேஸ்வரி.
“ரெண்டு பேரும் வர்ற வழியிலேயே சாப்பிட்டு தான் வந்தோம் அத்தை. இப்போ எதுவும் வேணாம்… நைட் பார்த்துக்கலாம்” என்றிருந்தான்.
“அம்மா மாத்திரை போட்டு தூங்குங்க…” என்றவள் அவர் போட வேண்டிய மாத்திரையை எடுத்துக்கொடுத்தாள்.
இருவருமாய் அவர் அறையில் இருந்து வெளியில் வந்தனர். பாவைக்கு இப்போது எங்கு செல்வது என்று அப்படியும் இப்படியுமாய் பார்த்தாள். சிவாவோ அவள் செய்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அத்தையை தூங்க வைச்ச மாதிரி என்னையும் தூங்க வை… எனக்கு மாத்திரை எல்லாம் வேணாம் முத்திரை தான் வேணும்…” என்று மெது குரலில் சொல்லி குறிப்பாய் அவள் இதழை நோக்க முகம் சிவந்தது அவளுக்கு.
“உள்ள வா பேசணும் பேசணும்ன்னு சொன்னியே பேசிருவோம்…” என்று அவள் கைப்பிடித்து அவளறைக்குள் அழைத்துச் சென்றான்.
அவனே கதவை அடைத்து தாழிடும் வரையிலும் கூட பாவை அவன் கைச்சிறையிலேயே நின்றிருந்தாள்.
“ஹ்ம்ம் சொல்லு…”
“நீங்க தான் சொல்லணும்”
“என்ன சொல்லணும்??”
“நகையை என்ன பண்ணுறதா உத்தேசம்??”
“அது தெரியாம உனக்கு தூக்கம் வராதா… உன் பின்னாடியே ஓடி வந்திருக்கேன், இன்னும் என்ன கேள்வி…”
“இது பதில் இல்லை”
“பிடிவாதம்…” என்றவன் “சரி என்னை பாரு… கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்டி… உன்னை ஒண்ணும் இன்னைக்கே கடிச்சு திங்கற ஐடியா எல்லாம் இல்லை எனக்கு…” என்ற அவன் பேச்சில் முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்படி பார்த்தா கடிக்கணும் போல தான் இருக்கு எனக்கு…” என்றதும் அவனைவிட்டு ஓரடி பின்னே நகர்ந்தாள்.
“ஹேய் அப்படி செய்ய மாட்டேன்னு சொன்னேன்ல…” என்றவன் அவள் கைப்பிடித்து தன்னருகே இருத்திக்கொண்டான்.
“சரி விஷயத்துக்கு வருவோம்… நீ சொல்லு கண்டிப்பா நான் அந்த நகை எடுத்துக்கணுமா…” என்றவனை முறைத்தாள்.
“முறைக்காத… பதில் சொல்லு…”
“அய்யாக்கு வேற என்ன செய்யறதா உத்தேசம்”
“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு…”
“உங்க தேவைக்கு அந்த நகை உதவறதுல தான் எனக்கு நிம்மதியே”
“நீ சொல்றதெல்லாம் சரி தான்… என்னமோ ஒரு மாதிரி கில்டியா இருக்கு, வேற வழி தேடுவோமே ப்ளீஸ்…”
“எதுக்கு கில்டி??”
“உங்க வீட்டுல உனக்காக ஆசையாசையா செஞ்சிருப்பாங்க… நீ அதெல்லாம் போட்டு அழகு பார்க்கணும்ன்னு நினைப்பாங்க… அதை என் தேவைக்காக உபயோகப்படுத்திக்கிறது எனக்கு சரியாப்படலை…”
“எங்க வீட்டில இருக்கவங்களுக்கு நான் நகை போட்டிருக்கறது சந்தோசமா இல்லை நான் உங்களோட நல்லா வாழ்றது சந்தோசமா” என்று கேள்வி கேட்டாள்.
“உங்களோட நல்லா வாழறது தான் அவங்களுக்கு முக்கியமா இருக்கும். இந்த நகை இல்லை, இதுவே எங்க அண்ணாக்கு ஒரு கஷ்டம் வந்து அண்ணி அவங்க நகையை கொடுத்தா நீங்க தப்பா நினைப்பீங்களா” என்று கேட்டு அவன் வாயை அடைத்தாள்.
“இது சரியா வருமா ஓவி…”
“என்ன சொன்னீங்க??”
“இது சரியா வருமா, அதெல்லாம் நான் எப்போ திருப்பி கொடுப்பேன்னு…”
“நீங்க யாருக்காக சம்பாதிக்க போறீங்க…”
“இதென்ன கேள்வி நமக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் தானே…”
“நம்ம தொழில் நல்லா போனா நீங்க எனக்காக செய்யாம வேற யாருக்காக செய்யப் போறீங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு, இன்னைக்கு நான் கொடுக்கறதை நீங்க பலமடங்கா எனக்கு திருப்பி கொடுப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
“அப்படியே நீங்க தரலைன்னாலும் நான் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். எனக்கு நீங்களும் உங்க அன்பு மட்டும் போதும்…” என்று சொன்னவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.
அவளும் அவன் மேல் சாய்ந்துக் கொள்ள அந்த நொடி அவளுக்கு அழ வேண்டும் என்று தோன்ற கண்கள் தன் போக்கில் கண்ணீர் சொரிந்தது. அதுவரை இருந்த தனிமையுணர்வு விலகி ஓட அவனை இறுக்கிக் கொண்டாள்.
அவன் தோளில் அவள் கண்ணீரின் ஈரம் உணர்ந்தவன் “ஹேய் எதுக்கு அழறே??” என்று சொல்லி அவளை விலக்க முயல் “ப்ளீஸ் கொஞ்சம் என்னை இப்படியே விடுங்க…” என்றாள் அழுதுக்கொண்டே!!
“நான் எதுவும் தப்பா பேசிட்டனா, அன்னைக்கு கோபமா பேசினது எல்லாம் முட்டாள்த்தனம்ன்னு எனக்கு அப்போவே புரிஞ்சு போச்சு ஓவி… அதுக்காகவா அழறே, சாரிம்மா…”
அவள் தலையோ அவனுக்கு பதில் சொல்லாமல் இடவலமாய் ஆடியது இல்லையென்பது போல்.
“வேறன்ன ஆச்சு…”
“இந்த நிமிஷம் உங்க மேல இப்படி சாய்ஞ்சுட்டு இருக்கறது தான் எனக்கு நிம்மதியா இருக்கு… ப்ளீஸ் கொஞ்சம் நேரம் இப்படியே இருக்கனே…”
“கொஞ்சம் நேரம் என்ன கொஞ்ச நேரம் நீ கொஞ்சுற வரைக்கும் இப்படியே இருக்கேன்… காலம் முழுக்கவும் நீ சாயறதுக்கு தான் இந்த தோளிருக்கு போதுமா. இது உனக்கு மட்டுமே சொந்தமானது” என்றான் அவன் காதில் கிசுகிசுப்பாய்.
“ரொம்பவும் கஞ்சத்தனம் எல்லாம் வேணாம்… நல்லா சாய்ஞ்சுக்கோ”
“அழுதிட்டு இருக்கேன் கண்ணை துடைச்சு விட மாட்டீங்களா…”
“அய்யோ செம ஓவி… இரு இரு நீ துடைச்சிடாதே நானே துடைச்சு விடுறேன்” என்றவனின் உதடுகள் அவள் முகத்தில் தன் ஊர்வலத்தை தொடங்கியது…
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது… ஓ…
என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் பறக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்