Advertisement

அத்தியாயம் – 2

 

பாவை அப்புறம் நகர சிவா தன் சகாக்களுடன் மூன்றாம் வருட மெக்கானிக்கல் எஞ்சினீரிங் வகுப்புக்குள் நுழைந்தான்.

 

காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவு இடைவேளைக்கு சிவா, ஜெகதிஷ் மற்றும் அவன் நண்பர்கள் குழாம் ஒன்றாய் கான்டீன் சென்றது.

 

அவர்கள் எடுத்து வந்திருந்த உணவை அங்கேயே அமர்ந்து உண்டனர். அந்நேரம் அங்கு பாவையும் தன் தோழிகளுடன் வந்தாள்.

 

அவள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்ட சிவா அவள் அவனை பார்ப்பதை கண்டதும் ‘என்னா லுக்கு??’ என்று வடிவேல் பாணியில் தன் பார்வையை கொடுத்தான்.

 

அவள்‘ஆளும்மூஞ்சியும் ப்பே…’ என்று வாய்க்குள் முணுமுணுத்து நகர்ந்து சென்றிருந்தாள்.

 

‘அடிங்க…’ என்று அவன் நாக்கை மடித்து எழுந்திருக்க “என்னடா எதுக்கு இப்போ உறுமறே??” என்றான் ஜெகதீஷ்.

 

“காலையில ட்ரைன்ல பார்த்த திமிர் பிடிச்சவ மச்சி. என்னைய பார்த்து முணுமுணுத்துட்டு போறாடா… நாம யாருன்னு காட்டலைன்னா எப்படி??” என்று பல்லைக் கடித்தான் சிவரூபன்.

“இன்னைக்கு தான் முத நாள் விட்டுப் பிடிப்போம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம் சிவா விடு. இப்போ உட்காரு…” என்று சொல்லி அவனைப் பிடித்து தன்னருகில் அமர்த்தினான்.

 

“நம்மட்ரைன்ல தானே வருவாளுக, அப்போ வைச்சுக்கறேன்…” என்று கருவியவாறே தான் அமைதியாய் அமர்ந்தான் அவன்.

 

கல்லூரி முடிந்து அவரவர்கள் கிளம்பி ஸ்டேஷன் வந்து சேரவும் ரயில் வருவதற்கு சரியாக இருந்தது. அடித்து பிடித்து அதில் ஏறினர்.

 

காலையில் வந்த அப்பெண்களை இப்போது அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறி இருந்தனர்.

 

வேப்பம்பட்டில் இறங்கி அவன் அங்கு நிறுத்தியிருந்த அவன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்தான்.

 

அவன் கெட்ட நேரம் அவன் தந்தை அன்று நேரமாக வீட்டிற்கு வந்திருந்தார். உள்ளே நுழையும் போதே அவர் செருப்பை கண்டுவிட்டானவன்.

 

‘ச்சே இவரு இருப்பாருன்னு தெரிஞ்சிருந்தா இரண்டு ட்ரைன் விட்டுட்டு கூட வந்திருக்கலாம் போல… இவ்வளவு தூரம் வந்திட்டு எங்க திரும்பி போக…’ என்று அவன் வாசலிலேயே யோசனையில் நிற்க “சிவா அங்க என்ன யோசனை உள்ளவா…” என்றிருந்தார் அவன் அன்னை.

 

‘எனக்கு நீ தான்மா வில்லியே!!’ என்று எண்ணிக்கொண்டே குனிந்த தலை நிமிராமல் உள்ளே நுழைந்தவன் நேராய் அறைக்குள் நுழைய போக “எருமைமாடு” என்ற குரல் தடுத்து நிறுத்தியது அவனை.

 

வேறு யார் அவனை இவ்வளவு செல்லமாக அழைப்பார்கள் எல்லாம் அவனைப் பெற்ற அருமை தந்தையே தான்.

 

“எருமைஷு கழட்டினியே ஷாக்ஸ் கழட்டிட்டு உள்ள வரணும் தெரியாது. இதெல்லாமா சொல்லித் தருவாங்க… படிக்கிறதுக்கு தான் சிரமம் இதுக்கு கூடவா உனக்கு நோகுது”

 

“நேரா உள்ள போறியே!! கொட்டிக்க கொண்டு போனியே டிபன் பாக்ஸ் அதை எவன் கொண்டு போய் விளக்கப் போடுவா. அதுக்கு கூடவா ஒருத்தர் சொல்லணும் உனக்கு!!”

 

“உன் தங்கச்சி சங்கவி உன்னைவிட சின்னப்பிள்ளை. வந்ததும் அவ வேலையை எப்படி செய்யற, நீயும் இருக்கியே தறுதலை…”

 

“டென்த்ல அடிச்சு பிடிச்சு பார்டர் மார்க் வாங்கினே!! ப்ளஸ் ஒன்ல கிடைச்ச குரூப் எடுத்த, அதையாச்சும் ஒழுங்கா படிச்சிருக்கலாம்ல… பிளஸ் டூல பெயிலு. உன்னையலாம் படிக்க வைக்குறது காசுக்கு பிடிச்ச கேடு”

 

“என்னமோ மாய்மாலம் பண்ணி உங்கம்மாவை சோப்பு போட்டு இந்த பாலிடெக்னிக் சேர்ந்திட்ட!! அதையாச்சும் ஒழுங்கா படிக்கலாம்ல”

 

“இன்னைக்கு தான் உன்னோட பழைய மார்க் ஷீட் என் கையில கிடைச்சுது… என்னத்த மார்க் வாங்கியிருக்க எல்லாத்துலயும் பெயிலு…”

 

“இதுக்கு தான் இப்போலாம் என்கிட்ட அதைக்காட்டாம உங்கம்மாவை ஏமாத்திட்டு நீயே போய் பீஸ் கட்டிக்கிறியா” என்று வரிசையாக அவன் வண்டவாளத்தை மொத்தமாய் தண்டவாளம் ஏற்றினார்.

 

வந்ததும் வராததுமாக அவர் இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்டதில் ஏக கடுப்பு அவனுக்கும். அவன் அன்னைக்காய் பேசாமல் இருந்தான்.

 

அவ்வப்போது அன்னையை ஏறிடுவதும் அவர் அமைதியாய் இரு என்று பாவம் காட்டவும் பல்லைக் கடித்து பொறுத்தான்.

 

“ஏன்டா எருமை இவ்வளவு பேசுறேன். சரிங்கப்பா இனி ஒழுங்கா இருக்கேன்னு சொல்றியாடா நீ” என்று அதற்கும் பாய்ந்துக் கொண்டு வந்தார் அவர்.

 

“எல்லாம்நீ கொடுக்கற இடம் தான்…” என்று மனைவியை அவர் சாடவும் அவனால் அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை.

 

“இப்போ என்ன இடம் கொடுத்திட்டாங்களாம்??”

 

“திமிரு திமிரு எதிர்த்தா பேசுற??” என்று எழுந்து நின்றிருந்தார் அவர்.

 

“என்னை என்ன வேணா சொல்லுங்க கேட்டுக்கறேன். அம்மாவை எதுக்கு நடுவுல இழுக்கறீங்க… அவங்க எனக்கு என்ன பெரிசா இடம் கொடுத்திட்டாங்கன்னு அவங்களை பேசுறீங்க”

 

“பெத்த பிள்ளைங்க மேல எல்லா அம்மாவும் காட்டுற அதே பாசம் தான் அம்மா எனக்கு காட்டுறாங்க. என் மேல மட்டுமில்லை சந்திரன் அண்ணா மேலயும் சரி சங்கவி மேலயும் சரி அதே பாசம் தான் அவங்களுக்கு”

 

“அவங்க ரெண்டும் நல்லா படிக்கறாங்க நல்ல மாதிரி இருக்காங்க. அதுனால அவங்க உங்க பிள்ளைங்கன்னு பெருமை காட்டுறீங்க”

 

“அவங்களும் அம்மாவோட வளர்ப்பு தானே… அதை பத்தி ஒருநாளாச்சும் நல்ல விதமா சொல்லி இருக்கீங்களா…”

 

“நான் சரியா படிக்காம போனா அதுக்கு காரணம் அம்மா இல்லை, நான் தான். நான் மட்டும் தான் அதுக்கு காரணம்”

“அம்மாபடிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு அவங்களால என்ன முடியுமோ அதை சொல்லி தான் கொடுத்தாங்க. நான் உங்களை மாதிரி போல அதான் எனக்கு படிப்பு சட்டுன்னு ஏறலை” என்று தன் பேச்சில் தந்தைக்கு கொட்டு வைத்தான்.

 

“ஏன்டா நான் என்ன உன்னை மாதிரி தற்குறியாவா திரியறேன். படிப்பு வரலைன்னதும் அனுபவ பாடத்தை படிக்க ஆரம்பிச்சேன்டா… வாழ்க்கை பாடத்தை கத்துக்கிட்டேன்”

 

“உனக்கு படிப்பு வராதுன்னு சொல்லித் தொலைய வேண்டியது தானே. எதுக்கு காசு கட்டி என் காசை வேஸ்ட் ஆக்குற” என்று பதிலுக்கு காய்ந்தார் அவர்.

 

“இது தான் கடைசி வருஷம், நாங்க படிச்சு முடிச்சிருவோம். நாங்களும் பாடம் படிப்போம், அப்போ என்கிட்ட நீங்களும் படிப்பீங்க. அப்போ பேசிக்கறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

 

“எருமை எப்படி பேசுது பாரு… அப்பன்னு மரியாதை இருக்கா அவனுக்கு… உன்னைச் சொல்லணும்” என்று ஆரம்பித்தவர் சற்றுமுன் மகன் அதற்கு தனக்கு கொடுத்த பதில் ஞாபகம் வர அப்படியே அடங்கினார்.

____________________

 

“பாவைவந்ததும் வராததுமா அப்படி என்ன தான் வைச்சிருக்கே அந்த பின்கட்டுல… எப்போ பார்த்தாலும் அங்கனவே நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க” என்று கடிந்தது பாவையின் அன்னை.

அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தான் பாவைக்குமூத்தவன்மாருதி.

 

“இங்க என்ன தான் இருக்கோ தெரியலை… எப்போ பார்த்தாலும் இங்க தான் இருக்கே??” என்ற மாருதி அவள் அமர்ந்திருந்த துணி துவைக்கும் கல்லின் அருகே வந்து நின்றிருந்தான்.

 

அவனை மெதுவாய் திரும்பி பார்த்தவள் “என்னமோ புதுசா நடக்கறதை போல கேட்குற??”

 

“இங்க என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் கேட்குறேன்??” என்றான் அவன்.

 

“ஊருக்கு ஒதுக்குபுறமா இப்படி இருக்கறதே ஒரு அழகு தானே… சுத்தி மரங்கள், இந்த பறவைகளோட ஒலி, சுகமான காத்து இதெல்லாம் நீ வேலை பார்க்குற சென்னையில பார்க்க முடியுமா” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“ஹலோ மேடம் ஆவடியும்சென்னை தான்”

 

“இருக்கலாம் ஆனா அங்க போல இங்க தூசு தும்பு இல்லையே. தவிர இது இன்னமும் சென்னையின் புறநகர் பகுதியா தானே பார்க்கப்படுது”

 

“ஹ்ம்ம் அது சரி…” என்றான் அவன்.

 

“ஆமா நீ எதுக்குண்ணா இப்போ இந்த ஸ்லீவ்லெஸ் பனியன் போட்டே” என்றாள் சம்மந்தமேயில்லாமல்.

“ஹேய் நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீ என்ன வேற டாபிக் போறே”

 

“ஹ்ம்ம் அங்க பாரு இந்த வனஜாவை உன்னை சைட் அடிக்கவே இங்க வந்து நிக்கறா… இதுல இந்தம்மா அவளுக்கு சப்போர்ட் வேற…”

 

“அவ அவங்க அம்மாக்கு வேலை பார்க்கறாளாம், நான் பார்க்கறதில்லையாம். இவ இங்க வந்து ஏன் நிக்கான்னு இப்போ தானே தெரியுது… அவளை” என்றவள் உட்கார்ந்திருந்த துணிதுவைக்கும் கல்லில் இருந்து இறங்கி கீழே எதையோ தேடினாள்.

 

அதைக் கண்டதும் “ஹேய் என்ன பண்ணப் போறே பாவை??” என்று மாருதி சத்தமாய் கேட்கவும் அச்சத்தத்தில் சுதாரித்த வனஜா உள்ளே ஓடி மறைந்திருந்தாள் இப்போது.

 

“நீ எதுக்குண்ணா இப்போ கத்தினே, பாரு அவ உள்ள ஓடிட்டா… என்கிட்ட சிக்காமலா போயிருவா, எப்படியும் நாளைக்கு அவளை பார்ப்பேன்ல அப்போ வைச்சுக்கறேன் அவளுக்கு கச்சேரியை” என்று கருவியவாறே மீண்டும் அந்த கல்லில் ஏறி அமர்ந்தாள்.

 

“ஆமா உனக்கு அவ மேல எதுவும்…”

 

“சீய்… சீய்… என் தங்கையோட பிரண்டு எனக்கும் தங்கை போல தான். எனக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்று தலையாட்டி மறுத்தான் அவன்.

 

“ஹ்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்” என்று அண்ணனை ஓட்டினாள் அவள்.

 

“அவ பின்கட்டுக்கு வர்றது சைட் அடிக்கன்னா, நீ இங்க வர்றதுக்கு எதுக்கோ??” என்ற மாருதியை முறைத்தாள் தங்கை.

 

“ஆமா இங்க உட்கார்ந்து நான் சைட் அடிச்சிட்டாலும், போற வர்ற வழியில அடிக்கிறதை விட்டு வீட்டுக்குள்ள வைச்சு யாராச்சும் இதெல்லாம் செய்வாங்களா…” என்று பதில் கொடுத்தாள் அவள்.

 

“நல்லா வாய் பேச கத்துக்கிட்ட, நீ அதுக்கெல்லாம் சரியா வரமாட்டேன்னு எனக்கு தெரியும். அதைவிடு இன்னைக்கு முதல் நாள் எப்படி இருந்துச்சு. படிக்க ஒண்ணுமில்லையா உனக்கு இங்க வந்து விச்ராந்தியா உட்கார்ந்து இருக்கே”

 

“இன்னைக்கு பெரிசா எதுவும் சொல்றதுக்கு இல்லை. முதல் நாள் தானே ஒண்ணும் பெரிசா படிக்கிறதுக்கு இல்லை. அப்படியே இருந்தா மட்டும் நான் படிச்சிருவேனா என்ன…”

 

“அதானே…” என்றவன்“சொல்றேன்னு நினைக்காதே பாவை. டென்த்ல நீ பெயில் ஆனது பெரிய விஷயமில்லை தான்” என்று அவன் ஆரம்பிக்கவுமே அவள் முகம் இறுக ஆரம்பித்தது.

 

“இங்க பாரு உன்னை ஹர்ட் பண்ண சொல்லலை. என்ன சொல்ல வர்றேன்னு மட்டும் கேளு, முகத்தைஇப்படி வைச்சுக்காதே” என்று சொல்லி அவனே தொடர்ந்தான்.

 

“அப்போ தான் உன்னால படிப்புல கவனமா இருக்க முடியலை. இனிமே இப்படி இருக்காதேம்மா, நீ நல்லா படிக்கணும்…” என்று தந்தையாய் மாறி அவளுக்கு அறிவுரை செய்தான் தமையன்.

 

அவள் சீரியஸ் முகத்தை மாற்றி இப்போது “அண்ணாஇந்த அம்மா தான் ரொம்ப தொல்லை பண்றாங்கன்னா நீயுமா… அட போண்ணா”

 

“ஹ்ம்ம் இந்த வருஷம் படிக்க போறதில்லையா நீ…”

 

“படிக்கலாம் படிக்கலாம்… வீட்டுக்கு ஒருத்தர் நல்லா படிச்சா போதாதா… நீ தான் நல்லா படிச்சுட்டியே நல்ல வேலையும் பார்க்குற… அப்புறமென்ன”

 

“அப்போ சரி உனக்கு கல்யாணம் பண்ணிருவோமா??”

 

“பாருடா அண்ணனுக்கு அவசரத்தை தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணா தான் தன்னோட ரூட் கிளியர்ன்னு தான் இப்போ என்கிட்ட வந்து ரூட் போட்டு கொடுக்கறியா” என்று அதற்கும் அவனையே ஓட்டினாள் அவன் தங்கை.

 

“உன்னை…” என்றவன் அவள் காதை திருகினான்.

 

“நானெல்லாம் திருந்தாத கேசு அண்ணா… எனக்கு அட்வைஸ் பண்ணுறது விட்டு நீ உன் பொழப்பை பாரு” என்றாள் பாவை.

 

“விளையாட்டு போதும் பாவை. நான் சொன்னதை மனசுல வை…” என்றுவிட்டு அவன் நகர ஆரம்பித்தான்.

 

“அண்ணா இந்த லுக் உனக்கு செட் ஆகலை. ஆமா நம்ம அம்மா உள்ள உனக்காக என்ன ஸ்பெஷலா செஞ்சுட்டு இருக்காங்க…”

 

“பாவை…” என்றான் அவன் அழுத்தமாய்.

 

“சரி சரி கோவிக்காத…” என்றவள் அக்கல்லில் இருந்து இறங்கி அவனுடனே உள்ளே சென்றாள்.

 

தந்தை இல்லை அவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு திடிரென்று நெஞ்சு வலி வந்து இறந்து போனார் அவர். மாருதி பாவைக்கு ஆறுவயது மூத்தவன், நன்றாக படிப்பவன்.

 

படித்து முடிக்கவும் கேம்பஸில் உடன் வேலையும் கிடைக்க இதோ வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறான்.

 

சென்னையில் தான் அவன் வேலையே, தினமும் காலை கம்பெனி வண்டி வந்து அவனை அழைத்துச் செல்லும்.அவன் தந்தை இறந்த அந்த இடைப்பட்ட காலத்தை சமாளிக்க சற்று அந்த குடும்பம் தடுமாறித்தான் போயிருந்தது அப்போது.

தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் கணவருக்கு பெரிதாய் எதுவும் செட்டில்மெண்ட் கிடைக்கவில்லை.

 

கணவரின் பிராவிடண்ட் பணத்தை மட்டும் அப்படியே வங்கியில் போட்டு வைத்து அதன் வட்டியை மட்டும் தேவைக்கு உபயோகம் செய்துக் கொண்டிருந்தார் அப்போதுஅவர்களின் அன்னை மகேஸ்வரி.

 

அவர்களின் அன்னைஅக்கம் பக்கம் பிள்ளைக்களுக்கு ட்யூஷன் எடுத்தும் அருகில் இருந்த பள்ளிக்கு வேலைக்கு சென்றும் தான் அப்போது அவர்களின் ஜீவனம்நகர்ந்தது.

 

பாவை ஒன்றும் நன்றாக படிக்காத பெண்ணில்லை. தந்தை என்றால் அவளுக்கு உயிர், அவரின் எதிர்பாராத இழப்பு அவளை உலுக்கியிருக்க படிப்பில் அவள் கவனம் சிதைந்தது.

 

உடன் அவளை கவனிக்கும் மனநிலையில் மகேஸ்வரியும் அப்போது இல்லை. மாருதி தன் இறுதி வருட படிப்பில் இருந்தான் அப்போது.

 

எல்லாம் சேர்ந்து பத்தாம் வகுப்பில் அவள் பெயில் ஆனாள். அது கொஞ்சம் அவளுக்கு அவமானமாய் அப்போது தோன்றியிருக்க அடுத்து அவளை சமாதானம் செய்து பரீட்சை எழுத வைக்கும் முயற்சி அனைத்தும் தோல்வியே.

 

ஒரு வருடத்திற்கு பள்ளியும் செல்லவில்லை. வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்த மாருதி செய்த முதல் வேலை தங்கையை சமாதானம் செய்து பாலிடெக்னிக்கில் சேர்த்துவிட்டது தான்.

 

இப்போது அவளிடம் பழைய குறும்பு மீண்டு வந்திருக்கிறது என்பதை அவளிடம் பேசியதில் கண்டுக்கொண்டவனுக்கு சற்று திருப்தி தான். தங்கையுடன் பேசிக்கொண்டே உள்ளே நுழைய அன்னை இருவருக்கும் இரவு உணவு பரிமாறினார்…

 

மறுநாளையஅவள் பொழுது சண்டையோடுதான் என்பதை அறியாதவளாய் நிம்மதியான உறக்கம் பாவைக்கு. அவளுக்கு மட்டுமில்லை அங்கு அண்ணன் சந்திரனுடன் உறங்கும் சிவாவிற்கும் தான்.

 

சேவலும் கோழியும் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கோழியாக மாறப் போக இதில் வெல்வது யாரோ வெல்லப்படுபவர் யாரோ…

 

யாரோ யாரோடி உன்னோட புருஷன்!!!

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்!!!

Advertisement