Advertisement
அத்தியாயம் – 15
பாவைக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. அருகில் கண்ட அவன் முகம் விழிக்குள் வந்து இம்சை செய்தது அவளை.
இதுவரை சிவாவின் மீது இருந்த கோபம் தான் காணாமல் போயிருந்தது என்று நினைத்திருந்தாள். ஆனால் வெகு நாட்களாய் தானே காணாமல் போயிருக்கிறோம் என்பதை அக்கணம் தான் உணர்ந்தாள்.
தன்னையே அவனிடம் தொலைத்திருக்கிறோம் என்பதை மனம் உணர இதயம் தாறுமாறாய் துடித்தது.
அவனை பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்த நொடி கண்கள் மூடியிருந்தாலும் உணர்வுகள் அருகில் படுத்திருப்பவனை வெகு நெருக்கமாய் உணர்ந்து செம்மை பூசியது அவள் வதனத்தில்.
அதற்கு மேல் உறக்கம் அவளை தழுவும் என்று அவள் எண்ணவில்லை. மெதுவாய் கண்விழித்து எழுந்து அமர “என்னாச்சு தூங்கலையா??” என்று மெலிதாய் கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டு அவன் புறம் திரும்பினாள்.
அவனும் இப்போது எழுந்து அமர்ந்திருந்தான் போலும்(?!).
“இல்லை தூக்கம் வரலை அதான்…”
“புது இடம்ல அதான் தூக்கம் வரலைன்னு நினைக்கிறேன்” என்றான்.
“ஹ்ம்ம் இருக்கலாம்…” என்றாள்.
“ஆமா நீங்க தூங்கலையா??”
“என்னமோ எனக்கும் இன்னைக்கு தூக்கம் வரலை”
“எனக்கு தான் புது இடம் உறக்கம் வரலை… உங்களுக்கு அப்படியில்லையே??” என்றவளுக்கு அவனும் தன்னைப் போலவே இருக்கிறானோ என்ற எண்ணம்.
அவன் நினைவில் தனக்கு வாராத உறக்கம் போல் தன் நினைவில் அவனும் உறங்காதிருந்திருப்பானோ என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவள் கண்களில்.
“ஹ்ம்ம் இல்லை இன்னைக்கு நெறைய வேலைல… அலுப்பு அதிகம்… ஒரு கட்டிங் போட்டிருந்தா தூக்கம் வந்திருக்குமோ என்னவோ” என்று அவளை சீண்டினான்.
“என்ன நீங்க தண்ணி அடிப்பீங்களா??”
“ஹ்ம்ம் தண்ணி அடிப்பேன், தம் அடிப்பேன்… அதை தடுத்தா உன்னையும் அடிப்பேன்…” என்று அவன் அடுக்கிக் கொண்டு போக கோபம் வராமல் அவனை முறைத்தாள்.
“ஏன்னு கேட்டா பதில் சொல்றது விட்டு கிண்டல் பண்றீங்களா???”
“நான் பேசுறது உனக்கு கிண்டலா இருக்கா…”
“அப்போ சீரியஸா சொன்னீங்களா… அத்தை மேல பிராமிஸ் பண்ணி சொல்லுங்க… நீங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு…” என்று அவனை தெரிந்து அடித்தாள்.
“ஹ்ம்ம் பிளாக் பண்ணற… ஆனா அன்னைக்கு…” என்றவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.
அவன் சொல்லாவிட்டாலும் அவன் சொல்ல வந்தது அவளுக்கு புரிந்தது. அவன் தொடர்வான் என்று அவள் பார்த்திருக்க அவள் பதில் சொல்வாள் என்று அவனிருந்தான்.
இருவருக்கிடையில் மெல்லிய மௌனம். யாரிடமும் எதையும் நேரடியாய் பேசிவிடும் சிவாவிற்கு ஏனோ பாவையிடம் அப்படி பேச முடியவில்லை.
சில நொடிகளாய் மௌனமே அங்கு ஆட்சி செய்ய மின்விசிறியின் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது.
“எனக்கு தூக்கம் வருது…” என்றுவிட்டு சிவா அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
படுத்திருந்தவனையே அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.
‘நான் இப்போ அவர்கிட்ட பேசியிருக்கலாம்ல… எனக்கு என்ன வந்துச்சு, வாய்ல இருந்து வார்த்தையே வர மாட்டேங்குது’ என்று தன்னையே நொந்துக் கொண்டாள் அவள்.
சீக்கிரமே அவனிடம் பேசிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளும் படுத்தாள். வெகு நேர யோசனைக்கு பின்னே நள்ளிரவிற்கு மேல் உறக்கம் அவளை தழுவ கண்ணயர்ந்தாள் அவள்.
நேரம் தாண்டி உறங்கிய போதும் எப்போதும் அவள் வீட்டில் எழும் வழமையாய் காலையிலேயே விழித்திருந்தாள்.
அருகில் உறங்கிக் கொண்டிருந்தவனை நோக்கி விழிகள் செல்ல அவள் இடக்கரம் மெல்ல உயர்ந்து அவன் தலை கோதியது.
தன் செயல் மெதுவாய் உரைக்க சட்டென்று கரத்தை இழுத்துக்கொண்டவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்துச் சென்றாள்.
குளித்து முடித்து வெளியில் வந்து பார்க்க அவன் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் விழ ‘தூங்கிட்டு தானே இருக்காரு’ என்று எண்ணிக்கொண்டு அவனுக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு புடவையை சரியாய் கட்டி முடித்தாள்.
தலை சீவி பின்னலிட்டு அறையை விட்டு வெளியில் வர மாலினி வாயிலை திறந்து வெளியில் சென்று கொண்டிருந்தார். “குட் மார்னிங் அத்தை…” என்றவளை பார்த்து அவர் புன்னகைத்தார்.
“எங்க அத்தே போறீங்க??”
“கோலம் போட போறேன்…”
“நான் செய்யவா அத்தை…”
“உனக்கு கோலமெல்லாம் போடத் தெரியுமா…”
“அத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே… அதெல்லாம் நான் நல்லாவே போடுவேன் அத்தை…”
“எங்கம்மா இப்போலாம் யாரும் கோலம் போடக் கூட தெரியாம இருக்காங்களே அதான் கேட்டேன். ஏன் சங்கவிக்கு கூட கோலம் போடத் தெரியாது…”
“கத்துக்கோன்னு சொன்னா அதுக்கு ஆளு வைச்சுக்கறேன்ம்மா சொல்லுவா…”
“நானும் ரொம்ப சோம்பேறி தான் அத்தை… அம்மா திட்டிட்டே தான் இருப்பாங்க… அம்மாக்கு உடம்பு சரியில்லாம போன பிறகு தான் நான் நெறைய கத்துக்கிட்டேன்”
“கோலம் போடுறதுல இருந்து சமைக்கிற வரை எல்லாமே அப்போ கத்துக்கிட்டது தான்…”
“இந்தா நீயே கோலம் போடு…” என்று கையில் இருந்ததை அவளிடம் கொடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்திருந்தாள் அவள்.
“உனக்கு காபியா?? டீயா??”
“முன்ன காபி, இப்போ டீ…” என்றாள்.
“காபி பிடிக்கும்ன்னா அதே போடுறேன்ம்மா…”
“பரவாயில்லை அத்தை டீயே கொடுங்க…”
“ஆமா நீயேன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்தே??”
“எப்பவும் இந்த நேரத்துக்கு எழுந்திடுவேன் அத்தை… நைட் சரியா தூக்கம் வரலை அதான் இன்னைக்கு கொஞ்சம் லேட்”
“இன்னைக்கு லீவு நாள் தானே. சிவாவும் இன்னைக்கு கடைக்கு போக மாட்டானே, நீயும் படுத்து இருந்திருக்கலாமேன்னு கேட்டேன்”
“ஆமால இன்னைக்கு லீவு நாள்ல மறந்தே போச்சு அத்தை. லீவு இருந்தா என்ன எப்பவும் போல எழுந்திருக்க வேண்டியது தானே…”
“நல்ல பொண்ணு போ… லீவு நாள்ன்னா எல்லாரும் இழுத்து போர்த்திட்டு உறங்குவாங்க… நீ என்னடான்னா இப்படி சொல்றே”
“இந்த இரண்டு மூணு வருஷமா எனக்கு லீவு நாள் நல்ல நாள்ன்னு எதுவுமே தெரியலை அத்தை… அம்மா… அம்மா… அம்மா… மட்டும் தான். அதை தவிர வேற எதுவும் ஞாபகத்துல இல்லை”
“விடும்மா அதான் அம்மாக்கு சரியாகிட்டுதுல… அதையே நினைச்சுட்டு இருக்காதே… இந்தா டீ” என்று அவளிடம் நீட்டினார்.
“மாமாக்கு கொடுக்கலையா அத்தை…”
“அவர் இன்னும் எழவேயில்லை”
இருவருமாக ஏதோ தங்களுக்குள் வளவளத்துக் கொண்டே காலை டிபனை செய்து முடிக்க சதாசிவத்தின் குரல் கேட்டு மாலினி உள்ளே சென்றார்.
சிவாவும் அறையைவிட்டு எழுந்து வந்திருந்தான். அங்கிருந்த ஒற்றை சோபாவில் ஒரு காலை மடித்துக்கொண்டு மறுகாலை தொங்கவிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.
அரவம் கேட்டு சமையலறையில் இருந்து வெளியில் வந்தவள் “டீ போடட்டும்மா??” என்றாள் அவனிடம்.
அவனோ இன்னமும் தூக்கம் தெளியாதவனாய் “நீ எங்க இங்க??” என்றிருக்க அவனை என்ன செய்ய என்று பார்த்திருந்தாள்.
“நேத்து நீங்க தான் என்னை கூட்டிட்டு வந்தீங்க நம்ம வீட்டுக்கு மறந்து போச்சா உங்களுக்கு…”
சிவாவிற்கு உறங்கி எழுந்ததில் மூளை சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்திருந்ததில் அனைத்தும் மறந்து போயிருந்தது. அவள் முறைக்கவுமே அனைத்தும் ஞாபகம் வந்திருந்தது. இருந்தாலும் அவளை சீண்டினான்.
“இங்கவே இருந்தா ஞாபகம் இருக்கும்…”
சாதாரணமாய் சீண்ட சொன்னது அவள் முகம் சுருங்கவும் வாயை மூடிக்கொண்டான்.
‘இதென்ன நேத்துல இருந்து என் வாய் என் கண்ட்ரோல்ல இல்லாம பேசி வைக்குது. இவ வேற பொசுக்கு பொசுக்குன்னு மூஞ்சியை தூக்கி வைச்சுக்கறா’ என்று எண்ணிக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
காலை டிபன் வேளையின் போது “இன்னைக்கு நானும் அப்பாவும் சங்கவியை பார்க்க போகலாம்ன்னு இருக்கோம்” என்றார் மாலினி.
“சரிம்மா போகலாம்…” என்ற சிவாவை முறைத்தார் அவர்.
“என்னம்மா??”
“நானும் அப்பாவும் போறோம்ன்னு சொன்னேன்….”
“இன்னைக்கு எனக்கும் லீவ் தான்ம்மா. வீட்டில இருந்து என்ன செய்ய நாங்களும் வர்றோம்…”
“நாங்க மட்டும் போயிட்டு வர்றோம்… நீ பாவையை கூட்டிட்டு கோவில்க்கு போயிட்டு வா… ரெண்டு பேரும் சேர்ந்து எங்கயும் வெளிய போகலைல… போயிட்டு வாங்க…”
“நாங்க இன்னைக்கு சாயங்காலம் தான் வருவோம் சிவா… சாப்பிட்டு முடிக்கவும் வண்டி சொல்லிரு…”
‘அய்யோ அம்மா இவளோட நான் தனியாவா…’ என்று முழித்தான் அவன். உள்ளே கொஞ்சம் இதமாகவும் மனம் உணர்ந்தது தான்.
பாவைக்கு நன்றாய் புரிந்து போனது, மாமியாரும் மாமனாரும் வேண்டுமென்றே அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே கிளம்புகின்றனர் என்று.
காரணமேயில்லாமல் இரவு பொழுது ஞாபகம் வர இருவரும் தனியாக என்ன செய்யப் போகிறோம் என்றிருந்தது அவளுக்கு.
மாலினியும், சதாசிவமும் அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பிவிட அவனும் அவளும் மட்டுமே.
“நா… நான் குளிச்சுட்டு வர்றேன்…” என்றவனிடத்தில் லேசாய் ஒரு தடுமாற்றம்.
அவள் முகம் பார்க்காமல் சொல்லிச் சென்றவன் குளியலறை புகுந்திருந்தான் இப்போது.
அவன் குளித்து வெளியில் வர பாவை எதுவோ எடுக்க உள்ளே வந்திருந்தாள் அப்போது.
அவள் அறைக்குள் நுழையவும் அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் மணம் கும்மென்று வீசி அவன் நாசியை மட்டுமில்லாமல் அவனையும் மொத்தமாய் மயக்கியது.
ஈர உடலுடன் இடுப்பில் கட்டிய துண்டுடன் நின்றுக் கொண்டிருந்தவனை கண்டதும் முகம் சிவந்து போக “சாரி” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவள் சென்ற பின்னும் அறையில் கமழ்ந்துக் கொண்டிருந்த மல்லிகையின் மணத்தில் அவன் ஒரு மோன நிலையுடனே இருந்தான்.
மெதுவாய் கிளம்பி அறையைவிட்டு வெளியில் வந்தான். “கிளம்பலாமா??” என்றான் அங்கிருந்தவளை பார்த்து.
“வேற புடவை மாத்திட்டு வந்திடட்டுமா?? அப்போ அதுக்கு தான் ரூம்க்கு வந்தேன்…” என்றாள் அவள் சேர்த்து.
‘டேய் சிவா நல்ல சான்ஸ் மிஸ் ஆகிட்டு’ என்று அவன் மனசாட்சி எடுத்துக்கொடுக்க ‘அச்சோ சிவா கெட்ட பையன் ஆகிட்டடா நீ, பேசாம உள்ள போ’ என்று அறிவு திட்டிக் கொண்டிருந்தது அதை.
“மாத்திட்டு வந்திடட்டும்மா… பைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்றவளுக்கு தலை மட்டுமே ஆடி பதில் சொல்லியிருந்தது.
சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வெளியில் வந்திருந்தவள் லேசாய் சரிகை கரையிட்ட புடவையை அணிந்திருந்தாள்.
கண்கள் மேலிருந்து கீழாய் அவளை திருப்தியாய் பார்த்துக் கொண்டது.
“போகலாம்…” என்றவளிடம் “ஹ்ம்ம்” என்றவன் அவளுடனே வெளியில் வந்து வீட்டை பூட்டினான்.
“சாவி உன் பேக்ல வைச்சுக்கறியா…” என்றான்.
“கொடுங்க…” என்றவள் அதை வாங்கி பத்திரப்படுத்த சிவா வண்டியை துடைத்தான் கிளம்புவதற்கு முன்.
“உட்காரு…” என்று சொல்ல அவன் தோள் பிடித்து மெதுவாய் அவள் ஏறி அமர மெது மெதுவாய் அவளின் புறம் சாய்ந்துக் கொண்டிருந்த அவன் மனம் மொத்தமாய் அவள் புறம் வீழ்ந்தது.
அவள் சகஜமாய் செய்தாளோ அன்றி பிடிமானதிற்காகவோ அவள் அவனின் வலது தோளை பற்றியிருந்தாள்.
இதற்கு முன்பு இவளை கூட்டி வரும் போதும் இப்படி தான் வந்தாளா என்று யோசனை செய்தது அவன் மனம்.
‘அப்போதெல்லாம் உனக்கு அவள் மேல் எங்கே பார்வை சென்றது. இப்போது தானே அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்’ என்று மனசாட்சி எடுத்துக் கொடுத்தது.
‘இப்போ மட்டுமா சைட் அடிச்சேன். காலேஜ் படிக்கும் போதே அடிச்சனாக்கும்…’ என்றான் அவன் மனசாட்சிக்கு பதிலாய். ‘அதுக்கு தானே அவ உன்னை அடிச்சா…’ என்று ராங் டைமில் சரியாக எடுத்துக் கொடுத்தது மனம்….
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ