Advertisement

அத்தியாயம் – 11
“பொண்டாட்டி கட்டியிருக்கானாம் பொண்டாட்டி ஊர்ல இல்லாத அதிசய பொண்டாட்டி” சொன்னது வேறுயாருமல்ல சிவாவின் தந்தையே.
“கல்யாணம் முடிச்சு நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு தானே போய் வாழுது. அம்மா வீடுன்னு இங்கவேவா இருக்குது…” என்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
சிவா கடைக்கு கிளம்பத் தயாராகி அப்போது தான் வெளியில் வந்திருந்தான். தந்தையின் புலம்பல் அவன் காதிலும் விழத்தான் செய்தது.
நிதானமாய் தன்னறையில் இருந்து வெளியில் வந்தவன் “என்ன வேணும் உங்களுக்கு இப்போ??”
“நான் ஏன் உன்கிட்ட கேட்கப் போறேன். நான் சொல்றது எல்லாம் நீ செய்யவா போறே?? எல்லாமே உன்னிஷ்டம் தானே…”
“அப்போ நீங்க ஏதோ பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு”
“ஆமா பேசிட்டு தானே என்னால இருக்க முடியும்”
“அதான் என்னன்னு கேட்டேன்??”
“நீயெல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணே??”
“நீங்க எதுக்கு பண்ணீங்களோ அதுக்காக தான்” என்றான் அவனும் இடக்காய்.
“நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணோம். இங்க என்ன அப்படியா நடக்குது…” என்றார் அவரும் விடாக்கண்டனாய்.
“ஆமாமா கல்யாணம் பண்ணா எல்லாரும் குடித்தனம் மட்டும் தான் பண்ணுவாங்க… உங்க பெரிய புள்ளை மாதிரி தனியா போய் தான் குடித்தனம் பண்ணுவாங்க…” என்று அவனும் பேசினான் பதிலுக்கு.
“நான் என்ன சொல்றேன் இவன் என்ன பேசுறான். எங்க போனாலும் சந்திரன் பேச்சுலயே வந்து நிக்கறான். அவனை பார்த்து இவனுக்கு எதுக்கு பொறாமை” என்று அவர் தன் மனைவியினிடத்தில் பொரிந்தார் இப்போது.
மாலினி எப்போதும் போல் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை. நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று அமைதியாய் நின்றிருந்தார்.
“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு… என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டில இருக்கறதா…”
அவன் தந்தையோ ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்.
“அவங்கம்மாக்கு உடம்பு சரியில்லை அவ தானே பார்த்துக்க முடியும். படுத்த படுக்கையா இருக்கவங்களை கவனிக்கறது ஒண்ணும் ஈசியான வேலை இல்லை…”
“அம்மாவையே இப்படி கவனிக்கிறவ நாளைக்கு இந்த வீட்டுக்கு வந்தாலும் இதே போல தான் எல்லாரையும் கவனிப்பா… சும்மா உங்க வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டு இருக்காதீங்க…”
“அத்தைக்கு ஆபரேஷன் முடிஞ்சு ஒரு ரெண்டு மாசம் வரை அவ அங்க தான் இருப்பா… அப்பப்போ ஏதாச்சும் பேசிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்று முடிவாய் அவரை பார்த்து சொன்னான் அவன்.
தன்னையறியாமலே தன் மனைவிக்கு பரிந்து பேசியதை அவனே அந்நேரம் உணர்ந்திருக்கவில்லை.
“அப்படி தான்டா பேசுவேன்…” என்று மீண்டும் ஆரம்பித்தார் அவன் தந்தை.
“அப்போ நானும் உங்க மூத்த பிள்ளையை பத்தி பேசத்தான் செய்வேன்” என்றான் அவனும் விடாமல்.
“அவரைபத்தி பேச என்ன இருக்கு??” என்ற குரலில் இப்போது மூவரும் வாயிலை திரும்பி பார்க்க சந்திரனும் சங்கீதாவும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
சங்கீதா தான் என்னவென்று கேட்டிருந்தாள். “ஒண்ணுமில்லை நாங்க வீட்டு விஷயம் பேசிட்டு இருந்தோம்” என்று முடித்தான் சிவா.
“வீட்டு விஷயம்ன்னா எங்களுக்கும் தெரிஞ்சிருக்கணும்ல” என்றாள் சங்கீதாவும் விடாமல்.
“வீட்டுல இருந்திருந்தா தன்னால தெரிஞ்சுட்டு போகுது…” என்று திருப்பி கொடுத்தான் அவன்.
“சிவா…” என்று அவன் அன்னையும் அண்ணனும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தனர்.
மாலினி அவர்களை வாங்க என்று வரவேற்க இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
அதற்கு மேல் அவனும் எதையும் பேச விரும்பவில்லை. “அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்.
“எங்க போறே சிவா?? நாங்க வந்திருக்கோம்ல” சொன்னது சந்திரன்.
“அதுக்காக நான் என் வேலையை பார்க்கக் கூடாதுன்னு இருக்கா என்ன… நீங்க வீட்டில இருங்க அம்மா அப்பா இங்க தானே இருக்காங்க பேசுங்க…”
“நான் ஏற்கனவே ஒரு வாரமா கடைக்கு போகலை. இன்னைக்கு ரெண்டு மூணு வண்டியாச்சும் டெலிவரி கொடுத்தாகணும்” என்றான்.
“உன்கிட்ட பேசணும்ன்னு தான் வந்தேன்…” என்றான் சந்திரன் இப்போது.
“ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல”
“ஏன்டா உன்கிட்ட பேசணும்ன்னா கூட போன் பண்ணி தான் பேசணுமா” என்றான் அவன் கொஞ்சம் கோபமாய்.
“நான் அப்படி சொல்லலை. நீ இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்னு முதல்லயே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ன்னு தான் சொல்ல வந்தேன்”
“நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு கூட அனுமதி கேட்கணுமா??”
“அப்பா சாமி ஆளை விடு, உனக்கென்ன என்கிட்டே பேசணும் அவ்வளவு தானே. ஹ்ம்ம் சொல்லு என்ன விஷயம்” என்றவன் இப்போது சந்திரன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
“கடை எப்படி போயிட்டிருக்கு??” என்றான் சந்திரன் சம்மந்தமேயில்லாமல்.
‘இதை கேட்க தான் இவ்வளவு தூரம் வந்தானா’ என்று யோசித்தவன் “ஹ்ம்ம் நல்லா போயிட்டிருக்கு”
“அம்மா அது வந்து நாங்க இப்போ சென்னையில ஒரு சொந்தமா ஒரு வீடு வாங்கலாம்ன்னு இருக்கோம்” என்று அவன் அன்னையிடம் ஆரம்பித்தான் அவன்.
‘இவன் என்ன தான் சொல்லப் போறான்’ என்று அவனையே பார்த்திருந்த சிவாவிற்கு அவன் எதற்காக அடி போடுகிறான் என்று புரிந்து போனது.
எதுவாயிருந்தாலும் பூனை வெளியில் வரட்டும் என்று அமைதியாய் பார்த்திருந்தான் இப்போது. “ரொம்ப சந்தோசம்ப்பா…” என்று உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் மாலினி.
அவன் தந்தை சதாசிவமோ சிவாவை ஒரு பார்வை பார்த்தார். ‘பாரு அவன் என் புள்ளை வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகிட்டு இருக்கான் பாரு’ என்ற சொல்லாமல் சொன்னார்.
‘பாருங்க பாருங்க… இன்னைக்கு தெரியும் உங்க புள்ளை லட்சணம் என்னன்னு’ என்று அலட்சியமாய் பதில் பார்வை வீசினான் அவரை நோக்கி.
“இன்னும் வாங்கலைம்மா இனிமே தான் வாங்க போறோம். கட்டின வீடு தான் வில்லா டைப்ல இவ்வளவு சீப்பா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்”
“இடமெல்லாம் பார்த்திட்டு வந்திட்டோம் நானும் சங்கீதாவும். நல்ல மெயின்லவே இருக்கு, பக்கத்துலவே எல்லாமே கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவன் தொடர்ந்து.
‘தம்பி இன்னும் நீ விஷயம் என்னன்னே சொல்லவேயில்லை’ என்று தான் பார்த்திருந்தான் சிவா.
“பரவாயில்லைப்பா நல்ல இடம்ன்னா சந்தோசம் தான்… வீடு வாங்குற நேரம் சீக்கிரமே உங்களுக்கு புள்ளையும் பிறந்திடணும்” என்றார் மாலினி.
“ஏன் அத்தை எங்க சுத்தினாலும் உங்களுக்கு கடைசில அந்த பேச்சு தான் வந்து நிக்குது” என்றாள் சங்கீதா இப்போது.
“அப்படியில்லைம்மா உங்களுக்கும் கல்யாணம் ஆகி வருஷம் ஓடிட்டே!! அதான் சொன்னேன்”
“நாங்க ரெண்டு பேரும் ஒண்ணும் கிழவன் கிழவி ஆகிடலை… எப்போ பெத்துக்கணும்ன்னு தோணுதோ அப்போ பெத்துக்குவோம்” என்றாள் அவள். மாலினி அதற்கு மேல் வாயை திறக்கவில்லை.
“அம்மா அண்ணன் வந்திருக்கான்ல மதியத்துக்கு கறி எடுத்திட்டு வரட்டுமா” என்று ஆரம்பித்தான் சிவா.
அப்போதாவது அவன் ஏதாவது சொல்லுவான் என்று தான். “இருக்கட்டும் சிவா கடைக்கு அப்புறம் போய்க்கலாம். நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன் முதல்ல”
‘அதுக்கு தானே இவ்வளவு நேரமும் என் வேலையை விட்டு காத்திருக்கேன்’ என்றது சிவாவின் மனம்.
“எனக்கு வீடு வாங்க பணம் தேவைப்படுது. நம்ம வீட்டை வித்து என்னோட ஷேர் வந்துச்சுன்னா நான் சென்னையில அந்த வில்லா வாங்கிடுவேன்” என்று ஒருவழியாய் சொல்லி முடித்தான் அவன்.
சதாசிவத்தின் முகம் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. சிவா அவரை தான் திரும்பி பார்த்தான்.
“வீட்டை இப்போவே விக்க வேண்டிய அவசியம் என்ன??”
“அதான் சொன்னேன்லடா நான் வீடு வாங்க போறேன்னு…”
“சரி நீ வீடு வாங்க இந்த வீட்டை எதுக்கு விக்கணும்??”
“அப்புறம் நான் எப்படி வீடு வாங்குறதாம்??”
“அது உன் பிரச்சனை…”
“நான் ஒண்ணும் பணத்தை உன்கிட்ட கேட்கலை. இந்த வீட்டில என்னோட ஷேரை தான் கேக்குறேன். எதுவா இருந்தாலும் அப்பா சொல்லட்டும். நீ எதுவும் சொல்லத் தேவையில்லை” என்றான் எடுத்தெறிந்து.
“சரி அப்போ நீ இப்போ இருக்கா பிளாட் என்ன செய்யப் போறே??”
“அதை வாடகைக்கு விடுவேன்…”
“ஹ்ம்ம் அதை வாங்குறதுக்கு கூட அப்பா தானே காசு கொடுத்தார்…” என்ற சிவாவிற்கு என்ன பதில் சொல்ல என்று பார்த்திருந்தான் சந்திரன்.
“ஏன் உங்கண்ணன் இந்த வீட்டுக்கு மாடா உழைச்சு கொட்டினார் தானே. அவர் சம்பாதிச்ச காசை தானே உங்கப்பா கொடுத்தாரு…” என்று பதில் சொன்னாள் சங்கீதா.
“யாரு அண்ணன் இந்த வீட்டுக்கு மாடா உழைச்சுது… யார் அப்படி சொன்னாங்க உங்ககிட்ட??”
“ஏன்டா நான் உழைக்காமலா இருந்தேன்??”
“நீ உழைச்சேன்னு சொல்லு… இந்த வீட்டுக்காக உழைச்சேன்னு சொல்லாத… அப்பாக்கு மட்டும் தான் அதுக்கு முழு உரிமையும் இருக்கு…”
“இந்த வீட்டுக்கு மாடா உழைச்சது அவர் மட்டும் தான். நீ சம்பாதிச்சியே ஒத்தை பைசா இந்த வீட்டுக்காக செலவு பண்ணியிருப்பியா…”
“உன் காசுல ஒரு சேலை வாங்கி கொடுத்திருப்பியா அம்மாக்கு. எப்பவும் உன் புராணம் பாடுறாரே இந்த மனுஷன் இவருக்காச்சும் ஒரு வேட்டி துண்டு எடுத்துக் கொடுத்தியா நீ”
“நான் மூணு வருஷம் உழைச்சு தான் போட்டேன் இந்த வீட்டுக்கு” என்று வீம்பாய் பதில் வந்தது அவனிடம்.
“அதுல ஒரு பைசா அப்பா அவருக்காகவோ இந்த வீட்டுக்காகவோ எடுத்தார்ன்னு சொல்லு பார்ப்போம். நீயெல்லாம் எப்படி இவ்வளவு சுயநலமா ஆனே??”
“சிவா நீ அதிகம் பேசுறே??”
“என்னை நீ தான் பேச வைக்குறே??”
“நான் உன்கிட்ட பேசலை…”
“நான் உன்கிட்ட தான் பேசறேன்… இந்த வீட்டை விக்கணும்ன்னா அதுக்கு நானும் கவியும் கூட சம்மதிக்கணும் அதை மனசுல வை…”
“இந்த வீடு இந்த இடம் எல்லாம் முழுக்க முழுக்க அப்பா சம்பாத்தியம் தான்… அவர்க்கு தெரியும் எப்போ இதை யார்க்கு கொடுக்கணும்ன்னு”
“நீ பிளாட் வாங்க சங்கவி கல்யாணத்துக்காக போட்டு வைச்சிருந்த பிக்சட் டெபாசிட் பணத்தை உடைச்சு உனக்கு பணம் கொடுத்தாரு”
“அதையே நீ இன்னமும் திருப்பி கொடுக்கலை. இதுல அடுத்த வீடு வாங்குறதுக்கு மறுபடியும் வந்து பணம் கேட்குறே…”
“நல்லா தானே சம்பாதிக்கற, கல்யாணத்துக்கு முன்னாடி மூணு வருஷமா நீ சம்பாதிச்ச சம்பாத்தியமும் உன் அக்கவுன்ட்ல தானே இருந்திருக்கணும் அதெல்லாம் எங்க போச்சு”
“சிவா…”
“இங்க பாரு முதல்ல அந்த பதினைஞ்சு லட்சத்தை நீ எடுத்து வை… அப்புறம் இந்த வீட்டை விக்கறதை பார்க்கலாம்”
“சிவா…”
“எதுக்கு சும்மா என் பேரை ஏலம் விடுறே??”
“அப்பா அவன் இவ்வளவு பேசறான் நீங்க அவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா??”
“எனக்கென்ன காசு பணம் கொட்டியா கல்யாணம் பண்ணி வைச்சீங்க… வசதியே இல்லாத ஒரு சின்ன மண்டபத்தை புடிச்சு கஞ்சத்தனமா தானே எல்லாம் செஞ்சு வைச்சீங்க”
“நான் அப்போலாம் ஏன்?? எதுக்குன்னு கேட்டனா?? இல்லை தானே… அதுக்காக தானே எனக்கு அந்த பதினைஞ்சு லட்சம் கொடுத்தீங்க… சொல்லுங்க அவன்கிட்ட”
“என்ன சொன்னே உனக்கு சின்ன மண்டபத்துல கல்யாணம் நடந்துச்சு அப்புறம்…”
“அந்த மண்டபத்தை பேசினது அப்பா இல்லை உன் மாமனார். ஏன் அண்ணி உங்க புருஷன் உங்கப்பா கஞ்சம்ன்னு சொல்றார் பார்த்திட்டு பேசாம இருக்கீங்க…” என்று அவளை ஏத்திவிட்டான்.
“டேய் நான் அப்படி சொல்ல வரலை. நான் நல்ல வேலையில இருந்தேன், கொஞ்சம் நல்லா பார்த்திருக்கலாம்ன்னு தானே சொல்ல வந்தேன்”
“நீ சுயநலவாதின்னு தெரியும் ஆனா இந்தளவுக்கு இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை அண்ணா…”
“கவி கல்யாணத்துக்கு நீ என்ன செஞ்சே ஒரு அண்ணனா”
“அவளை அண்ணன் முறையில தாரை வார்த்து கொடுத்தேன்ல”
“நான் சொன்னது அவ கல்யாண செலவுல உன் பங்கு என்னன்னு…”
“நான் வேற அப்பா வேற தனியா செய்யணுமா என்ன??”
“அது நீ இந்த வீட்டில இருந்திருந்தா உனக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா…”
“ஏன்பா நான் வேற தனியா செய்யணுமா?? நீங்களும் அப்படி தான் நினைக்கறீங்களாம்மா” என்றான் அவனும் விடாமல்.
“அதை கூட விடுண்ணா… இந்த வீட்டுக்கு வர்றியே அப்பா அம்மாவை பார்க்க வர்றோம், அப்பா வேற உடம்பு சரியில்லாத மனுஷன், ஒரு பழம் ஸ்வீட்ன்னு வாங்கிட்டு வர்றதுக்கு கூடவா சொல்லணும் உனக்கு”
“டேய் நீ என்னடா நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு இதெல்லாம் பண்ணச் சொல்றே??”
“நீ இந்த வீட்டுல இருந்தா யாரும் எதுவும் சொல்லப் போறதில்லை. நீ தனியா தானே இருக்கே… அப்போ நீ இதை கூட செய்ய மாட்டியா…”
“அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தா வெறும் கையோட தான் வர்றாங்களா??” என்று பதிலுக்கு பதில் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.
“இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றே??”
“ஒரே முடிவு தான் பதினைஞ்சு லட்சத்தை திருப்பி கொடு”
“முடியாது… அது என் காசு என் சம்பாத்தியத்தை தான் அப்பா திருப்பி கொடுத்தார்…”
“அது உன் காசு இல்லைன்னு என்னால ப்ருவ் பண்ண முடியும்… அப்பா தெரிஞ்சு செஞ்சாரோ இல்லை தெரியாம செஞ்சாரோ அந்த பணத்தை உனக்கு ட்ரான்ஸ்பர் பண்ற பொறுப்பை என்கிட்ட தான் கொடுத்தார்:
“எப்போ எப்போ எந்த நாள்ல உனக்கு அந்த பணத்தை கொடுத்தேன்னு முழு விவரமும் என்கிட்டே பக்காவா இருக்கு”
“அதுக்காக…”
“காசை முதல்ல திருப்பி கொடு”
“நான் உன் அண்ணன்டா, கூட பிறந்தவன் கிட்டேயே இப்படி கணக்கு பார்க்கறியே”
“நீ கூட பிறந்தவன் மாதிரி பேசலையே. ஏதோ வட்டிக்காரன் மாதிரி வசூல் பண்றதுலையே இருக்கியே… உன்கிட்டலாம் வேற எப்படி பேச முடியும்…”
“இந்த வீட்டை வித்து பணம் கொடுக்க முடியுமா முடியாதா…”
“முடியாது…”
“அப்பா எனக்கு இப்போ பதில் சொல்லுங்க. அவன்கிட்டல்லாம் எனக்கென்ன பேச்சு…”
சதாசிவம் இரு மகன்களின் ருத்ர தாண்டவத்தை அதுவரையிலும் வேடிக்கை பார்த்திருந்தார். தான் பழுது என்று நினைத்தது பாலாகவும் பால் என்று நினைத்தது பழுதாகவும் போனதை அக்கணம் உணர்ந்தார்.
“சிவா என்ன முடிவெடுக்குறானோ அது தான் என் முடிவும்” என்று முதன் முறையாக சின்ன மகனுக்கு ஆதரவாய் பேசினார் அவர்….
அன்பில் நிழல் போல
எனை பின் தொடர்ந்தாய்
பண்பில் முயல் போல
எனை முந்தி சென்றாய்
என் நிலை உயர நீ உழைத்திட
உன் துயர் போக்க நான் உழைப்பேன்
கண்ணின் இமை போல
தினமும் எனை காத்தாய்
மண்ணுள் விதை போல
நல்லவை என்னுள் விதைத்தாய்
என் தலை சாய உன் தோளுண்டு
உன் தலை நிமிர என் வாழ்வுண்டு

Advertisement