Advertisement

அத்தியாயம் – 10
சிவாவும் மாருதியும் வீட்டிற்கு வந்து சேர பாவை முதலில் தன் அன்னைக்கு உணவைக் கொடுத்தாள். உடன் சங்கவியும் உதவி செய்ய மகேஸ்வரிக்கு மனம் சற்று நெகிழ்ந்திருந்தது.
 
மற்றவர்களும் உணவருந்தி முடிக்க மகேஸ்வரியுடன் படுத்துக்கொள்ள பாவை தயாராய் இருக்க மாருதி அவளை அழைத்தான்.
 
“நீ சிவாக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிக்கொடுத்திட்டு அங்கவே படுத்துக்கோ. நானும் சங்கவியும் அம்மாக்கு துணையா படுத்துக்குவோம்” என்று சொல்லி அவள் நினைப்பில் மண் அள்ளிப்போட்டான் அவன்.
 
மாருதியிடம் மறுத்து ஒன்றும் சொல்ல முடியாமல் போனது அவளுக்கு. உடன் சங்கவி வேறு நின்றுக் கொண்டிருந்ததால் பல்லைக் கடித்துக்கொண்டு தன்னறைக்கு சென்றாள்.
 
சிவா முன்னமே அங்கு தானிருந்தான். சாப்பிட்டதும் உள்ளே சென்றுவிட்டிருந்தான் அவன். அறைக்குள் வந்தவளை ஒரு புருவச்சுளிப்புடன் ஏற இறங்க பார்த்தான் அவன்.
 
உள்ளே வந்தவளோ அவனை முறைத்தவாறே அங்குமிங்கும் நடக்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இவள் எதற்கு இந்நேரம் இங்கே வந்திருக்கிறாள்’ என்ற யோசனையே அவனுக்கு.
“எதுக்கு இப்படி ரூம்குள்ள டான்ஸ் ஆடுறே??” என்று அவளை வம்பிழுத்தான்.
 
“ஹ்ம்ம் ஆசை” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
 
“கேள்வி கேட்டா பதில் சொல்லு”
 
“பதில் சொல்லாம நான் என்ன கேள்வியா கேட்டேன்??” என்று பதிலுக்கு எகிறினாள் அவள்.
 
“இப்போ ஏன் இங்க வந்தே?? அத்தை கூட படுக்கலையா நீ??” என்றான் இப்போது நேரிடையாக.
 
அவன் சொன்னதை உள்வாங்கியவளுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. ‘செய்யறதும் செஞ்சுட்டு கேள்வியை பாரு’ என்று கோபம் வந்தது.“அதான் எங்கண்ணன் இங்க அனுப்பிட்டானே…” என்றாள் சிடுசிடுப்பாய்.
 
“நீ அவங்களோட போய் படுத்துக்கோ… மாம்ஸ்கிட்ட நான் பேசிக்கறேன்” என்றான் அவன்.
 
அவளுக்கு இப்போது அவன் மீதிருந்த கோபம் வெறுப்பு சிடுசிடுப்பு எல்லாம் ஒரு நொடியில் மறைந்து போனது போலிருந்தது.
 
“இல்லைவந்து அண்ணா….” என்று தயங்கி அங்கேயே நின்றவளின் கைப்பிடித்து வெளியில் அழைத்து வந்திருந்தான் இப்போது.“மாம்ஸ்…” என்ற அவன் அழைப்பில் “சொல்லுங்க சிவா” என்றிருந்தான் மற்றவன்.
“பாவை எப்பவும் போல அத்தைக் கூடவே படுத்துக்கட்டும் மாம்ஸ்…”
 
“இல்லை சிவா அது வேணாமே…”
 
“மாம்ஸ் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… பார்மாலிட்டிஸ் எல்லாம் வேணாம்ன்னு. எப்பவும் போல பாவையே அத்தை கூட இருக்கட்டும். கவி நீயும் கூட துணையா இரு…” என்றான் சிவா.
 
மாருதி அதற்கு மேல் மறுத்து ஒன்றும் சொல்லவில்லை. அதுவே பாவைக்கு சற்று ஆச்சரியம் தான். ‘பரவாயில்லை இவனும் கொஞ்சம் நல்லவன் தான் போல’ என்று மனதிற்குள் அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கினாள்.
 
அன்று இரவு வனஜா வந்து அவளுடன் துணைக்கிருப்பதாய் தான் பேசியிருந்தனர். ஆனால் வனஜாவிற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுவிட மாருதி தன் உறவினர்களிடம் கேட்டுப் பார்த்தான்.
 
அவர்களும் மறுக்க வேறு தானும் சங்கவியும் படுத்துக் கொள்வோம் என்று எண்ணித்தான் தங்கையிடம் அப்படி பேசியிருந்தான்.
 
சிவா ஏற்கனவே சொல்லியிருந்தான் இரண்டு நாட்கள் மறுவீட்டு விருந்து முடிந்ததும் அவன் தன் வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும் பாவை எப்போதும் போல் அவள் அன்னைக்கு துணையாக இருக்கட்டும் என்று.
 
இங்கு இருக்கும் வரையாவது இருவரும் சேர்ந்திருக்கட்டும் என்பது அவன் எண்ணம். ஆனால் இப்போது சிவாவே சொல்லும் போது அவனால் ஒன்றும் பதில் பேச முடியவில்லை, சரியென்றுவிட்டான்.
 
மறுநாளையபொழுதும் விடிந்தது. சிவா மெல்ல தன் திருவிளையாடல்களை ஆரம்பித்தான்.
 
காலையில் எழுந்ததும் தன் வேலைகள் முடித்து வந்தவன் “பாவை… பாவை” என்று ஏலம் விட்டுக்கொண்டிருக்க அதை கவனித்தும் கவனிக்காதவள் போன்று மெல்லவே அறையை எட்டிபபார்த்தாள் அவன் மனைவி.
 
“காபி…” என்று அதிகாரமாய் அவன் உரைக்க “இதோ எடுத்திட்டு வர்றேன்…” என்று சமையலறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்.
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் காபியுடன் அவன் முன் நின்றாள். அவளிடமிருந்து அதை வாங்கிக்கொள்ள அவள் அடுத்த நிமிடம் அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்.
 
‘என்னடா இவ ஓவரா பண்ணுறா?? இவளை…’ என்று எண்ணிக் கொண்டவன் அறையில் இருந்து வெளியில் வந்திருந்தான்.காபியை ஒரு மிடறு அருந்தியவன் “சுமாரா தான் இருக்கு…” என்று நக்கல் செய்யவும் சமையலறை வாயிலில் நின்று அவனை முறைப்பாய் எட்டிப் பார்த்தாள்.
சங்கவி அப்போது தான் குளித்து முடித்து வெளியில் வந்தவள்“அண்ணா டீ போடட்டும்மா??”
 
“வேணாம் கவி காபி ககுடிச்சேன் இப்போ தான்”
 
“காபியா நீ குடிக்க மாட்டியே??” என்று சொல்லவும் மீண்டும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள் பாவை.
 
“என்ன செய்ய அது அவளுக்கு தெரியலையே?? அவ கொடுத்தா சரின்னு குடிக்கறேன்” என்று பாவம் போல் அவன் சொன்ன விதம் சங்கவிக்கு புரிந்து போனது இவன் ஏதோ கலாட்டா செய்கிறான் என்று.
 
“அதெல்லாம் பொண்டாட்டி கொடுத்தா குடிப்பீங்க… எங்ககிட்ட தானே உங்க வீராப்பு எல்லாம். நானும் அம்மாவும் தானே அண்ணா உனக்கு இளிச்சவாய்” என்று அவளும் பதிலுக்கு கிண்டல் செய்தாள்.
 
மாருதியும் எழுந்து வந்துவிட சிவாவும் அவனுமாக பேசிக்கொண்டே செய்தித்தாளை புரட்டி முடித்தனர்.சிவா சும்மாயில்லாமல் அவ்வப்போது ‘பாவை… பாவை…’ என்றழைத்து அவளை ஒவ்வொன்றுக்கும் ஏதாவது வேலை ஏவ கடுப்பாகிப் போனாள் அவள்.
 
“பாவைஅவருக்கு என்ன வேணும்ன்னு முதல்ல பார்த்து கவனி” என்று மாருதியே அவர்களை கவனித்து சொன்னான்.
 
“என்ன வேணும் அதான் எல்லாமே உள்ள இருக்குல. நான் என்ன பண்ணணும் இப்போ” என்று சிடுசிடுத்தாள் அண்ணனிடம்.
 
“அவர் இந்த வீட்டுக்கு புதுசு, இந்த வீட்டில எது எது எங்க இருக்குன்னு உனக்கு தெரியும் அவர்க்கு எப்படி தெரியும். போ போய் அவரை கவனி…” என்று அவன் அழுத்தமாய் சொன்னவிதத்தில் உள்ளே சென்றாள்.
 
“என்ன வேணும் இப்போ??” என்று முன் வந்து நின்றவளை ஏறிட்டான்.
 
“எனக்கு இப்போ குளிக்கணும்” என்றான்.
 
“நானா குளிப்பாட்டி விடணும் இப்போ. இங்க தானே பாத்ரூம் இருக்கு, உள்ள போய் குளிக்க வேண்டியது தானே” என்றாள் முகக்கடுப்புடன்.
 
“ஓ!! குளிப்பாட்டி விடேன் யாரு வேண்டாம்ன்னு சொன்னா… உனக்கு அவ்வளவு ஆசை என் மேல…” என்று அவன் நக்கலாய் மொழிந்ததில் சிலிர்த்து நிமிர்ந்தவள் அவனை முறைத்தாள்.
 
“அப்புறமா முறைச்சுக்கோ… இப்போ எனக்கு சோப் யாரு எடுத்து கொடுப்பாங்க… ஹாட் வாட்டர் வேணும் எனக்கு அதுக்கு என்ன வழின்னு முதல்ல சொல்லு” என்றான்.
 
“ஓ சோப்பா!!” என்றவள்“ஒரு நிமிஷம்” என்று வெளியில் சென்று திரும்பி வரும் போது கையில் புது சோப் ஷாம்பு பாட்டில் சகிதம் வந்திருந்தாள்.
“ஹீட்டர் ஆன் பண்ணி தான் வைச்சிருக்கேன். தண்ணி பார்த்து விளாவிக்கோங்க…” என்றவள் கையில் வைத்திருந்ததை அவனிடம் நீட்டினாள்.
 
அதை வாங்கிக் கொண்டவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. காலை உணவுக்கு பின் அவனறையில் இருந்துக் கொண்டு மீண்டும் பாவை என்றழைத்தான் அவன்.
 
‘இவன் என்ன காலையிலிருந்து டவாலி மாதிரி என் பேரை ஏலம் விட்டுக்கிட்டே இருக்கான்’ என்று எண்ணிக்கொண்டு வேக வேகமாய் அறைக்குள் நுழைந்தவள் கதவை சாத்திவிட்டு “என்ன வேணும் உங்களுக்கு??”
 
“மொத்தமா சொல்லிடுங்க, சும்மா சும்மா பத்து தரம் என்னை கூப்பிட்டே இருக்கீங்க. ரொம்பவும் ஆசையா கூப்பிடுற மாதிரி எங்கம்மா வேற என்னை திட்டிட்டே இருக்காங்க” என்றாள் சலிப்பு குரலில்.
 
“ஆமா இவங்க பெரிய இவங்க… இவங்களை அப்படியே ஆசையா கூப்பிடுறாங்க… என்னைப் பொறுத்த வரை நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை எனக்கு…”
 
அந்த வார்த்தை அவளை உசுப்ப “ஏன் என்னை பார்த்தா உங்களுக்கு ஆளா தெரியலையா??” என்று கேட்டாள்.
 
“முன்ன கேட்டிருந்தா ஆளா தெரியலைன்னு தான்சொல்லியிருப்பேன். இப்போ அப்படி சொல்ல முடியாதே…”
“ஏன்??” என்றாள் அவள் புரியாமல்.
 
“இப்போ நீ தான் என்னோட ஆளாச்சே!!” என்றுஓரப்பார்வையுடன்கிண்டல் குரலில் அவன் சொல்லவும் அங்கு செல்பில் இருந்த பவுடர் டின் கண்ணில்ப்பட அதை எடுத்து கீழே தள்ளிவிட்டாள்.
 
உள்ளே ஏதோ சத்தம் கேட்கவும் வெளியில் இருந்த மாருதி “என்னம்மா அங்க சத்தம்??” என்றுகேட்டு வைக்க உள்ளிருந்த பாவையோ “அ… அது… அது வந்து தண்ணி கொட்டிருச்சு அண்ணா…” என்றாள் பதிலுக்கு.
 
“ஓ!! சரிம்மா சரிம்மா!!” என்று வெளியே கேட்ட மாருதியின் குரல் தேய்ந்திருந்தது கண்டு பாவையின் அருகிருந்த சிவா சிரித்துவிட்டான். அதைப் பார்த்து இன்னமும் கடுப்பானவள் “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க?? எல்லாம் உங்களால தான்…” என்று முகத்தை திருப்பினாள்.
 
“இல்லை நீ இப்போ என்ன பண்ணே??”
 
“என்ன பண்ணேன்??” என்று கேள்வியை திருப்பினாள்.
 
“உங்கண்ணன்கிட்ட ஏதோ சொன்னியே??”
 
“எல்லாம் உங்களால தான்…”
 
“உங்கண்ணன் என்ன தெரியுமா நினைச்சிருப்பார்??”
 
“என்ன நினைச்சிருப்பார்??”
“என்னமோ நீயும் நானும் ரொமான்ஸ் பண்ணுற மாதிரியும், ஏதோ நான் பண்ண குறும்புல தண்ணி கீழ கொட்டிருச்சுன்னும் நினைச்சிருப்பாரு…” என்றுசொல்லி அவளை சீண்ட பாவையின் முகம் போன போக்கை சொல்லவும் வேண்டுமா!! தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.
 
வெளியில் இருந்த மாருதியோ இப்போது சமையலறையில் தஞ்சம் புகுந்திருந்த தன் மனைவியை நோக்கிச் சென்றான்.அறைவாயிலில் நிழலாடவும் “என்னங்க??” என்று நிமிர்ந்தாள் அவள்.
 
“நீ தான் வேணும்” என்று கிசுகிசுப்பாய் சொன்னவன் அவள் இடைவளைத்து தன் புறம் திருப்ப “அச்சோ என்ன பண்றீங்க??” என்று பதிலுக்கு அவளும் சிணுங்கலாய் பதில் சொன்னாள்.
 
“அண்ணி வந்திட போறாங்க…” என்று அவனிடமிருந்து விடுபட அவள் எத்தனிக்க“அவ்வளவு சீக்கிரம் வர மாட்டா!! உங்கண்ணன்அவளைபிசியா வைச்சிருக்கார்” என்றவனின் உதடுகள் அவள் நெற்றியில் பதிந்து அவள் முகம் முழுவதும் ஊர்வலம் செய்தது.
 
பின் மெதுவாய் தன் இணையுடன் வந்து சேர அங்கு மௌனம் மட்டுமே மொழியாகியிருந்தது.
 
உள்ளிருந்து வெளியில் வந்த பாவையோ கடுப்புடன் சமையலறைக்குள் நுழையப் போக அங்கு உலகம் மறந்து மாருதியும் சங்கவியும் இருந்த நிலைக்கண்டு முகம் சிவந்து மீண்டும் அறைக்குள் வந்திருந்தாள்.
‘என்னாச்சு… இப்போ தானே கோழி கோவமா போச்சு… இப்போ பம்மிட்டு வந்து நிக்குது’ என்ற எண்ணிய சிவாவின் பார்வை அவளை அலச முகம் சிவந்து அவள் நின்ற தோற்றம் எதுவோ புரிவது போல்…
 
மதிய உணவு எல்லாம் சங்கவியும் பாவையும் சேர்ந்து தயார் செய்து முடிக்கவும் சங்கவி சிவாவைத் தேடி வந்தாள்.
 
“அண்ணா உன் டிரஸ் கொடு, நான் துணி துவைக்க போறேன், அப்படியே அலசிடுறேன்” என்று வந்து நின்றாள்.
 
“வேண்டாம் கவி, நான் வீட்டுல போய் வாஷ் பண்ணிக்கறேன்…”
 
“அடடா என்ன சார் புதுசா பிகு பண்ணிக்கறீங்க… கொடுண்ணா அவர் டிரெஸ்க்கும் சோப் போட போறேன் சேர்த்து வாஷ் பண்ணிடறேன்”
 
“இந்த துணி எல்லாம் பர்ஸ்ட் டைம் மெஷின்ல போட வேண்டாமே. அதான் கையில லைட்டா சோப் போட்டு வாஷ் பண்ணிடலாம் பாக்குறேன்” என்றவள் அறையைகண்களால் அலசினாள் அவன்உடைமைகளை தேடி.
 
“சொன்னா கேளு கவி… அதெல்லாம் வேணாம் வீட்டுக்கு போனதும் நானே வாஷ் பண்ணிக்கறேன்… நீ இனிமே இந்த வீட்டு பொண்ணு இங்க இருக்கறதை மட்டும் நீ பாரும்மா” என்றான்.
சங்கவிக்கு உடனே கண் கலங்கிவிட்டது. “கல்யாணம் ஆகிப் போய்ட்டா நான் வேணாம்ன்னு சொல்லிருவியா??” என்றாள்.
 
“லூசு மாதிரி பேசாத, இங்க உனக்கு நெறைய வேலை இருக்கு. இத்தோட என் வேலையும் உனக்கு வேணாம். மூணு நாள் தானே அந்த டிரஸ் எல்லாம் மொத்தாம என்னால துவைச்சுக்க முடியாதா என்ன??”
 
“சும்மா கண்ணை கசக்கிட்டு பேசாம போய் வேற வேலை இருந்தா பாரு…” என்று அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.
 
வெளியில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மாருதியின் காதில் அவர்கள் சம்பாஷணை தெளிவாய் விழுந்திருந்தது.
 
‘இந்த பாவை தானே இனிமே இதெல்லாம் செய்யணும்…’ என்றுஎண்ணியவன்தங்கையிடம் சென்று என்ன சொன்னானோ அடுத்த சில நொடிகளில் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்திருந்தாள் பாவை.
 
அண்ணனும் தங்கையும் ஓவரா அன்பை பொழிந்ததை அவளும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.
 
‘நானும் எங்கண்ணனும் இப்படியா ஓவரா பண்ணிக்கறோம். இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஓவரு’ என்று எண்ணிக் கொண்டாள்.
 
“துவைக்க போறேன் உங்க துணியை கொடுக்கறீங்களா??” என்று வந்து நின்றவளை சுவாரசியமாய் பார்த்த சிவா மறுப்பே சொல்லாமல் துவைக்க வேண்டிய துணிமணிகளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
 
பாவை இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கையிடம் சொன்னது போல் ஏதாவது மறுத்து சொல்லுவான், இல்லை சீன் போடுவான்னு என்று எண்ணியிருந்ததிற்கு மாறாய் அவன் செய்யவும் ஒன்றும் சொல்ல முடியாமல் வெளியேறினாள்.
 
‘கல்யாணம் பண்ணா இவன் துணியை நான் தான் துவைக்கணுமா?? இவன் கூட தான் என்னை கல்யாணம் பண்ணான் என் துணியை இவனா துவைச்சு போடுவான்’
 
‘நம்ம நாட்டுல இதெல்லாம் எழுதப்படாத அநியாய சட்டமாயிருக்கே!! கூட பிறந்த அண்ணனே எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குறானே’ என்ற பொருமலுடனே துணியை துவைத்து போட்டிருந்தாள்.
 
இதைக்கண்ட சங்கவி வேறு அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருக்கும் போது சிவாவையும் அவளையும் கிண்டல் செய்து ஓட்டிவிட்டாள்.
 
தங்கை கேட்டபோது கொடுக்காதவன் பொண்டாட்டிக்கு மட்டும் தலையாட்டுக்கிறான் என்று சொல்லி சொல்லி ஒருவழியாக்கி விட்டாள்.
 
அதன் பின் சிவா தினசரி வாடிக்கையாய் அவளை சீண்டுவதும் அவள் முறைப்பதுமாய் இருக்க இரண்டு நாட்கள் தன்னைப் போல சென்றிருந்தது.
 
மூன்றாம் நாள் காலையிலேயே வீட்டிற்கு கிளம்பிச் செல்ல ஆயத்தமானான் சிவா. காலை உணவிற்கு பின் அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.
 
அவன் சென்ற பின்னே வீடே ஏதோ களையிழந்ததாய் தோன்றியது பாவைக்கு. நொடிக்கொரு தரம் எதற்காகவாவது தன்னை அழைத்து சீண்டும் அவன் குரலை அவளை துரத்தாததுஅவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
 
எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்தநீ
எனைப்பாடு படுத்த

எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்கநான்
எனைத்தேடி எடுக்க

இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க…. 

Advertisement