Advertisement

அத்தியாயம் – 9

 

பிரியன் கிளம்பிச் சென்றதும் சுகுணா தன் அறையை தஞ்சம் புகுந்தாள். ராமிற்கு அவளின் இந்த மாற்றம் புதிதாய் பயத்தை விதைப்பதாய் இருந்தது.

 

தான் எங்கோ தவறிவிட்டோம் என்று புரிந்தது. அலுவலத்திற்கு போன் செய்து வேலையை அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டான்.

 

மனைவியை தேடி அவர்கள் அறைக்கு சென்றான். சோர்வாய் கட்டிலில் சாய்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்தாள்.

 

“நீங்க ஆபீஸ் போகலையா??”

 

“இல்லை லீவ் போட்டேன்”

 

“ஏன்??”

 

“உனக்காக தான்…” என்ற அவனின் பதில் குளிர்வித்தாலும் மனம் முழுதாய் குளிரவில்லை அவளுக்கு.

 

“என்னாச்சு சுகும்மா பீல் பண்ணுறியா?? பிரியா அவளோட குழந்தை தானே நாம எப்படிடா உரிமை கொண்டாட முடியும்” என்று மனைவிக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தான்.

 

அவளோ நிமிர்ந்து அவனை பார்த்த பார்வையில் அவன் சற்று மிரண்டான். அந்த பார்வை நான் அப்படியா நினைச்சேன் என்பதாய் இருந்தது.

 

“சுகும்மா…”

 

“ப்ளீஸ் என்னை தனியா விடுங்க”

 

“எதுவானாலும் என்கிட்ட சொல்லுடா… நீ இப்படி இருக்கறது மனசுக்கு என்னமோ பண்ணுது. உண்மையை சொல்லட்டுமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு உன்னோட இந்த தோற்றம்”

 

கணவனின் அக்கறை கலந்த பேச்சு நெகிழ்ச்சியை கொடுத்தாலும் அவனுக்கு ஏன் தன்னை புரியவில்லை என்ற வருத்தம் தான் மேலோங்கியது.

 

அவள் கவலையை அவனிடத்தில் சொல்ல அவளுக்கு தயக்கமெல்லாம் இல்லை. அவளே மெதுவாய் ஆரம்பித்தாள்.

 

“பிரியா அவங்களோட குழந்தைங்கறது எனக்கு நல்லாவே தெரியும். நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷமா நமக்கு குழந்தையில்லை”

 

“நமக்கு கல்யாணம் ஆனா முத நாளே அந்த குழந்தையை என் கையில கொடுத்து இவ நம்ம குழந்தைன்னு என்கிட்டே சொன்னீங்க. அது உங்களுக்கு ஞாபகமிருக்கா!! இல்லையா!!”

 

அதெப்படி அவனால் மறக்க முடியும் அவனுக்கு சர்வநிச்சயமாய் நினைவிருக்கிறது. அப்போது தான் வதனா அவளின் பயிற்சிக்காய் சென்றிருந்த சமயம்.

 

ராமின் அன்னை அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்றுவிட அவன் அதுநாள் வரையிலும் குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் ஒரு பெண்மணியை வைத்திருந்தான்.

 

அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆனதுமே சுகுணாவை அவனுக்கு பிடித்துப் போனதுமே தன்னைப் பற்றி அனைத்தும் அவளிடம் பகிர்ந்திருந்தான். அதில் பிரியாவும் அடக்கம். மனைவிக்கு மெதுவாய் தலையசைத்தான்.

 

“அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அவளை என்னோட பொண்ணா தான் நினைச்சு நான் வளர்த்திட்டு வர்றேன்” என்று அவள் சொல்லும் போது கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.

 

“சரண் பிறந்த பிறகும் நீங்க என் அன்புல எதுவும் வித்தியாசம் பார்த்திருக்கீங்களா” என்றாள் உடைந்த குரலில்.

 

‘அப்படி சொன்னால் அது மிகப்பெரிய குற்றமாகிப் போகும் என்று அவனுக்கு தெரியும். சுகுணாவிற்கு பிரியாவின் மேல் அவ்வளவு பிரியம் என்பதை அவனறிவான்.

 

“ஆனா சுகும்மா அது அவளோட குழந்தைடா நமக்கு அது முன்னமே தெரியும் தானே!! நமக்கு சொந்தமில்லைன்னு”

 

“நான் ஒண்ணும் நானே அந்த குழந்தையை வைச்சுக்கணும்ன்னு நினைக்கவே இல்லையேங்க!!”

 

“அவங்க ஒண்ணா ஒரே பேமிலியா அண்ணையா, அவங்க, பிரியான்னு இருந்தா என் மனசை நானே தேத்திக்குவேங்க இவ்வளவு தூரம் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்”

 

“அப்புறம் உன்னை என்னடா வருத்துது” அவளை கேட்டுவிட்டான் தெரிந்துமே!!

 

“அவங்க அண்ணையா மேல இருக்க கோபத்துல தானே குழந்தையை கூட்டிட்டு போறாங்க. பாவங்க குழந்தை… அவங்க போராட்டத்துக்கு நடுவுல அது சிக்கி சின்னாபின்னமாகணுமா!!”

 

“அதை தான் விரும்பறாங்களா அவங்க. எல்லாம் போகட்டும் குழந்தையை கூட்டிட்டு போகும் போது ஒரு வார்த்தை ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு கூட்டிட்டு போயிருக்கலாம்ல”

 

“நானென்ன வேண்டாம்ன்னா சொல்லிடப் போறேன். முடியலைங்க என்னால முடியலை. அவங்க குழந்தை அவங்க கூட்டிட்டு போய்ட்டாங்க புரியுது எனக்கு” என்றாள் சுகுணா.

அவளை சமாதானப்படுத்த ராம் பேச ஆரம்பித்தான். “சுகுணா ப்ளீஸ்ம்மா பீல் பண்ணாதே!! அவளையும் கொஞ்சம் யோசிச்சு பாரு!! இந்த பத்து வருஷமா நான் அவளை பார்த்திட்டு இருக்கேன்”

 

“ஆரம்பத்துல வல்லவன் வருவான் வருவான்னு அவ காத்திட்டு இருந்தது, அப்புறம் மனசு வெறுத்து போனது. ஏன் தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணியிருக்கா!!”

 

“பிரியா அவ வயித்துல உருவானதால தான் அவளை என்னால பிடிச்சு வைக்க முடிஞ்சுது. அதுல இருந்து எப்படியோ வெளிய கொண்டு வந்தோம்”

 

“அவளோட வேதனையை நான் கூடவே இருந்து பார்த்தவன். நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு நினைக்காதே சுகும்மா”

 

“அவளுக்கு வல்லவன் மேல கோபம் ஆத்திரம் அதுல புத்திகெட்ட தனமா நடந்திட்டா!! நீ வேணா பாரேன். செஞ்சது தப்புன்னு அவளே வருவா!!” என்று நீளமாய் பேசினான்.

 

“எனக்கு எல்லாம் புரியுதுங்க. அவங்க செஞ்சது சரியோ தப்போ என்னால தாங்கிக்க முடியலைங்க”

 

“பிரியா இல்லாம என்னால இருக்க முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு. குழந்தையோட பிரச்சனை என்னன்னு உங்களுக்கு தெரியும் தானே!! நீங்க தடுத்திருக்கலாம்ல”

 

“உங்களுக்கு பிரண்டு முக்கியம் தான் நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நாம வளர்த்த குழந்தை முக்கியமா உங்களுக்கு தோணலையா!!” என்ற சுகுணா இப்போது குமுறி குமுறி அழவாராம்பித்தாள்.

 

யசோதையாய் இருந்து பிரியாவை வளர்த்தவள் அவள் தானே!! பெற்றவளுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல தானே வளர்த்தவளுக்கும் இருக்கும். ராம் இப்போது யோசித்தான், பிரியாவை வதனாவுடன் அனுப்பியிருக்கக் கூடாதோ என்று.

 

தோழி தான் சொன்னால் கேட்டிருப்பாள் தான். வல்லவனின் வருகையால் தான் அவள் பிடிவாதம் பிடித்து அவளை கூட்டிச் சென்றிருந்தாள்.

 

தான் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருந்தால் அவளால் மறுத்திருக்க முடியாது என்றே தோன்றியது அவனுக்கு.

 

சுகுணா தொடர்ந்தாள். “உங்ககிட்ட ஒரே ஒரு ரிக்வஸ்ட்” என்று நிறுத்தினாள். ‘என்ன’ என்பது போல் அவள் முகம் நோக்கியிருந்தான் அவன்.

 

“இனிமே வதனாகிட்ட பேசுறதா இருந்தா நீங்க மட்டும் பேசுங்க. அவங்களை பத்தி என்கிட்டே எதுவும் ஷேர் பண்ணாதீங்க!!”

 

“உங்களுக்கு இடையில நான் எப்பவும் வரமாட்டேன். அதை நான் உறுதியா உங்ககிட்ட சொல்லிக்கறேன். உங்க பேச்சுக்கு இடையில என்னை நீங்க கொண்டு வராதீங்க எப்பவும்” என்று அழுத்தமாய் சொன்னாள் அவள்.

 

அவள் பேச்சு அவனுக்கு வாளாய் அறுத்தது. இவ்வளவு நாள் அவனுக்கு இருந்த இறுமாப்பு அந்த நிமிடம் தவிடு பொடியானது.

 

திருமணத்திற்கு பின்னான தோழமையை தக்கவைத்துக் கொள்வதென்பது ஆண்களால் முடியும் தான்.

 

ஆனால் தன் பெண் தோழிக்கும் மனைவிக்கும் இடையிலான சிக்கலில்லாத உறவை இதுநாள் வரை அழகாய் காப்பாற்றி வந்த பெருமையில் இருந்தவனுக்கு அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதாய் ஒரு அடி.

 

சுகுணாவை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதே போல் அவன் வதனாவையும் புரிந்து கொண்டவனாயிற்றே.

 

ஒரு பக்கம் மனைவி இன்னொரு பக்கம் தோழி. இருவருமே அவனுக்கு மிக முக்கியமானவர்கள்.

 

இது அவன் தோழிக்கும் மனைவிக்குமான போராட்டமல்ல இரு தாய்களுக்கு இடையிலான உணர்ச்சி போராட்டம். அது லேசில் தீராது என்பதை உணர்ந்து கொண்டான்.

 

போராட்டம் வல்லவனுக்கு மட்டும்மல்ல தனக்கும் இனி போராட்டம் தான் எனப் புரிந்தது அவனுக்கு. இரு பெண்களுக்கு இடையிலான உணர்வு போராட்டத்தில் தான் சிக்கிக்கொண்டோம் என்று மிகத்தெளிவாய் புரிந்தது அவனுக்கு.

 

அதிலிருந்து அவ்வளவு எளிதில் தன்னால் விடுபட முடியாது என்பதும் அறிந்தவனே!!

 

மனைவியை ஒருவாறு சமாதானப்படுத்தி உறங்க வைத்தவன் தன் உறக்கம் தொலைத்தான்.

 

இரண்டு நாட்கள் தன்னைப் போல வேகமாக கடந்திருந்தது ராமிற்கு. சுகுணாவிற்கு அது மெதுவாகவே நகர்ந்திருந்தது.

 

காலையில் எழுவதில் இருந்து ஒவ்வொரு விஷயத்திற்கும் அவள் பிரியாவை தேடினாள்.

 

சுகுணா தன் கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தை அவள். அதனாலேயே குழந்தையின் பிரிவை அவளால் தாங்க முடியாமல் போனது.

 

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அத்துப்படி. பிரியாவின் இடது கால் லேசாய் வளைந்திருக்கும்.

 

அவள் நேராக நின்றாலும் சாய்ந்து நின்றது போன்ற தோற்றமே அது கொடுக்கும். முதலில் அந்த வித்தியாசம் தெரியாதவர்கள் குழந்தை நடக்க ஆரம்பித்த பின்னே தான் அதை கண்டிருந்தனர்.

 

ராம் அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு நடையாய் நடந்திருந்தான். அது மரபணு பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

 

அன்றிலிருந்து பிரியாவை தரையிலேயே விடவில்லை அவன் சுகுணா அவன் வாழ்வில் வரும் வரை. அவன் வீட்டில் இருந்தால் பிரியா பெரும்பாலும் அவன் கைகளில் தான்.

 

சுகுணாவை திருமணம் செய்து வந்த பின்னே அவள் எதையெதையோ முயற்சி செய்து குழந்தை நடப்பதற்கு தோதாய் அவள் காலணிகளை தயார்ப்படுத்தினாள்.

 

பிரியா அதை வீட்டுக்குள் போட்டு நடைபழகவும் அவள் தான் தயார் செய்தாள். இப்படி பிரியாவின் ஒவ்வொரு தேவையும் பார்த்து பார்த்து அவளே செய்திருந்தாள்.

 

சரண் பிறக்கும் போது மட்டுமே பிரியாவை தன்னுடன் வைத்து பார்த்து கொண்டிருந்தான் ராம். சரண் கொஞ்சம் கொழு கொழு குழந்தை பிரியா மெலிந்த தேகம் அவள் வளர்ச்சியும் ஒன்பது வயது குழந்தையை ஒத்ததாய் இருக்காது.

 

அதனாலேயே சரணை அவள் தூக்க ஆசைப்படும் போது ராமும் சுகுணாவும் தடுத்துவிடுவர். சுகுணாவிற்கு எங்கும் பிரியாவின் நினைவே!! அவளருகே வந்து “அம்மா பப்பு புவ்வா…” என்று சரண் வந்து கேட்கவும் பதறிக் கொண்டு எழுந்திருந்தாள்.

 

ஒரு பிள்ளைக்காய் அடுத்த பிள்ளையை கவனிக்காது விட்ட முட்டாள்த்தனதிற்காய் வெட்கியவளாய் சரணை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சமையலறை நுழைந்திருந்தாள்.

____________________

 

பிரியன் சென்னை வந்து சேர்ந்திருந்தான். அவன் வீட்டின் கதவை திறக்கும் வேளை வீட்டின் உரிமையாளர் வீட்டின் காம்பவுன்ட்டிற்குள் நுழைந்தார்.

 

அவரை கண்டதும் இவன் புன்னகை புரிய “என்னப்பா இவ்வளவு நாளா எங்கே போயிட்டே??”

 

“ஊருக்கு போயிருந்தேன் அங்கிள்”

 

“இப்படியெல்லாம் எங்கயும் போக மாட்டியேப்பா!! பதினைந்து நாள் கிட்டக்க ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன்”

 

“ஆமா அங்கிள் சரியா தான் சொல்றீங்க… ஆன்ட்டி எப்படி இருக்காங்க??”

 

“அவளுக்கென்னப்பா நல்லாயிருக்கா?? அப்புறம் பிரியன் வீட்டில வெப் கேமரா வொர்க் ஆகலைப்பா. கிழவிக்கு பேரன் கூட பேச முடியலையாம்… நீ எப்போ வருவேன்னு டெய்லி கேட்டு தொல்லை”

 

“ஹா ஹா நான் ஆபீஸ் போக முன்ன வந்து பார்க்கறேன் அங்கிள்… ஆன்ட்டியை கிழவின்னு சொன்னீங்கன்னு அவங்ககிட்ட சொல்றேன்”

“ஏம்பா என்னை மாட்டிவிடுறே??” என்றவர் “அப்புறம் பிரியன் சொல்ல மறந்திட்டேன்பா உன்னை தேடி ரெண்டு பேர் வந்தாங்க”

 

“என்னை தேடியா!!” என்றவனின் கண்களில் ஆச்சரியம். யாராய் இருக்கும் என்ற யோசனை அவனுக்குள்.

 

“பேர் சொன்னாங்களா அங்கிள்??”

 

“இல்லைப்பா… நான் கேட்டேன் ஆனா அவங்க சொல்லலை. உன்னை நல்லா தெரியும்ன்னு சொன்னாங்க…”

 

“அப்படியா” என்று யோசித்தவன் “திரும்ப வர்றேன்னு சொன்னாங்களா??”

 

“அதைப்பத்தி சொல்லலை ஆனா இந்த பதினைஞ்சு நாள்ல ரெண்டு முறை வந்திட்டு போய்ட்டாங்க” என்றார்.

 

“போன் நம்பர் எதுவும் கொடுத்தாங்களா அங்கிள்”

 

“கேட்டேன்பா ஆனா அவங்க கொடுக்கலை” என்றார்.

 

‘இதென்ன இவர் எதை கேட்டாலும் தெரியவில்லை என்கிறார். யார் வந்திருப்பார்கள் என்னை தேடி’ என்ற எண்ணமும் சலிப்பும் அவனிடத்தில்.

 

அவரிடம் வர்றேன் அங்கிள் என்று ஒரு புன்னகை சிந்தி தலையாட்டிவிட்டு அவன் வீட்டை திறந்தான்.

எடுத்து சென்ற உடைமைகளை கட்டிலில் வைத்துவிட்டு அழுக்கு துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டான். பின் பீரோவில் இருந்து துண்டு என்று எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்திருந்தான்.

 

சட்டையில் கறைப்படாது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன்.

 

வதனாவை திருமணம் செய்த பின்பு அவர்கள் வாழ்ந்த அந்த ஆறு மாதமும் அவளுக்காய் அவன் எந்தவொரு உதவியும் செய்ததேயில்லை.

 

அவனின் உடைகளை துவைப்பது அயர்ன் செய்வது எல்லாமே அவள் வேலையாகத் தானிருக்கும். கொஞ்சம் அழுக்கிருந்தாலும் முகத்தில் வீசி எறிவான்.

 

காலம் அவனுக்கு நிறையவே கத்துக் கொடுத்திருந்தது. அதில் ஒன்று தான் தன் வேலைகளை தானே செய்து பழகியதும்.

 

அடுத்தவர்கள் குற்றம் சொல்வது சுலபமாய் இருப்பதும். தனக்கென்று வரும் போது தான் வலியும் வேதனையும் புரிவதும் என்பதை உணர்ந்து அறிந்துக் கொண்டிருந்தான்.

 

குளித்துவிட்டு வந்தவன் அங்கு சமையலறைக்கு அருகே இருந்த செல்பில் வைத்திருந்தா சாமி படத்தின் முன் நின்று மனமார பிரார்த்தனை செய்தான்.

 

வெகுநாளைக்கு பின்னான பிரார்த்தனை அது. தாங்கள் குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்திட வேண்டும் என்று வேண்டினான்.

 

விதி அவ்வளவு சீக்கிரம் இணைத்திடுமா என்ன?? அது தன் விளையாட்டை ஆடத் துவங்கிவிட்டதே!! விளையாட்டை

 

வேறு உடைமாற்றியவன் வாங்கி வந்திருந்த உணவை சாப்பிட்டு வீட்டை சுத்தம் செய்து முடித்து கட்டிலில் வந்து சாய்ந்திருந்தான்.

 

பையில் இருந்து போட்டோ ஆல்பத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். ரயிலில் வரும் போதே பலமுறை பார்த்துவிட்டிருந்தான் தான். ஆனாலும் இப்போது மீண்டுமொருமுறை அதை எடுத்து வைத்துக்கொண்டு பார்வையை ஓட்டினான்.

 

அவன் ரத்தம் அவன் உயிர் வளர்ந்து நிற்கிறாள் கண்முன்னே. பிரியாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்தவனுக்குள் தாங்க முடியாத வலியொன்று எழுந்தது.

 

அவன் தவறவிட்ட தருணங்களாயிற்றே அதெல்லாம். விரல்கள் தானாய் குழந்தையின் படத்தை வருடியது. கண்ணில் நீர் தளும்பி புகைப்படத்தை மறைத்தது.

 

முதல் முறையாய் அழுகிறான். தன்னவளை பிரிந்த போது தாங்க முடியாத வேதனையை அனுபவித்திருக்கிறான் ஆனால் அழுததில்லை.

உயிரே போயிருக்கலாமோ என்ற நிலை வந்த போதும் அவன் கண்ணீர் சிந்தியிருக்கவில்லை. அவன் உயிராய் ஆளாகி நின்றிருந்த மகளைக் கண்டு அவன் நெஞ்சில் உதிரமும் விழிகள் கண்ணீரும் சுமந்திருந்தான்.

 

அடுத்திருந்த புகைப்படத்தில் வெறும் கூடாய் நின்றிருந்த வதனாவும் பிரியாவும். அதுவரை மகளை பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னால் உருக்குலைந்து நின்றிருந்தவளை கண்டதும் பெரும் துயர் கொண்டான்.

 

அடுத்த கணமே அவன் மனதில் எஃகின் உறுதி யாருக்காகவும் எதற்காகவும் இனி அவளைப் பிரிவதில்லை.

 

யாரையும் எதிர்க்கும் துணிவு அவனுக்குள் இப்போது அதிகமாகியிருந்தது. அவன் பட்ட வலியும் வேதனையும் அவனுக்கு வலிமையை கொடுத்திருந்தது.

 

நின்று நிதானமாய் தான் ஒவ்வொன்றாய் செய்ய வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டான். மீண்டும் புகைப்படத்தை பார்க்க சட்டென்று ஓர் எண்ணம் அவனுக்குள்.

 

அவன் வீட்டில் சிறு அலுவலகம் எப்போதும் உண்டு. ஒரு போட்டோவை வெளியில் எடுத்தவன் அதை ஸ்கேன் செய்திருந்தான்.

 

கவர்னர் மாளிகையில் கிளம்பும்முன் அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்தை நிர்மலாவிடம் இருந்து அப்போது வாங்கியிருந்தான். அதில் வதனா நிர்மலாவின் அருகில் நின்றிருக்க அவன் கவர்னரின் அருகில் நின்றிருந்தான்.

 

வேகமாய் அதையும் சிஸ்டத்திற்கு மாற்றவன் அதையும் இதையும் செய்து அவர்கள் மூவரும் இருப்பது போல் செட் செய்து முடித்திருந்தவன் திருப்தியாய் அதை பார்த்துக் கொண்டான்.

 

விரைவில் நாம் மூவரும் ஒன்றாவோம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அதை தன் கைபேசியில் மாற்றிக்கொண்டான்.

 

புகைப்படத்தை பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு நிறைவாயிருந்தது அவனுக்கு.

 

மெல்லிய பாடலொன்று அவன் மனதில் எழுந்தது. தனக்கு கொஞ்சம் பொருத்தமான பாடலும் கூட என்று எண்ணிக்கொண்டான்.

 

நெஞ்சமெல்லாம் வண்ணம் 
பல வண்ணம் ஆகுதே…
கண்களெல்லாம் இன்பம் கூடி 
கண்ணீர் ஆகுதே…

நான் உன்னை காணும் வரையில் 
தாபத நிலையே…
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை 
நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன்
பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று மார்பில் வழியுதே!!
தூய நரையிலும் காதல் மலருதே!!

அவன் வேலை முடிந்ததும் தான் வீட்டின் உரிமையாளர் வேலை சொல்லியிருந்தாரே என்ற எண்ணம் வர ஸ்பேர் வெப் கேமரா ஒன்றும் மற்றும் அவனுக்கு தேவையான வேறு உபகரணங்களும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

 

மீண்டும் அவன் மனம் வீட்டின் உரிமையாளர் சொன்னதிலேயே வந்து நின்றது. தன்னைத் தேடி யார் வந்திருப்பார் என்று.

 

அவனின் அனுமானம் சரியென்றால் வந்தது அவன் பெற்றோராய் தானிருக்க முடியும். இவ்வளவு நாட்களாய் இல்லாமல் இன்று தான் என்னை தேடினார்களா அவர்கள் என்ற வலி வேறு.

 

அப்போது தான் பளிச்சென்று ஒன்று உரைத்தது அவனுக்கு. அவர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்றால் எங்கள் திருமண புகைப்படத்தை பேப்பரில் பார்த்து வந்திருப்பார்களோ!!

 

இதை எப்படி மறந்தேன் வதனா ஏன் இன்னும் ராமின் கண்காணிப்பில் இருக்கிறாள்.

 

அவர்கள் என்னவானார்கள், இந்த புகைப்படம் அவர்கள் கண்ணில் பட்டால் உடனே இங்கு வர சாத்தியம் இருக்கிறதே!!

 

யோசித்து முடியும் முன் மாடிக்கு வந்திருந்தான். அவர்களிடம் லேசாய் புன்னகைத்து ஓரிரு நிமிடம் பேசிவிட்டு அவன் வந்த வேலையை பார்த்தான்.

 

அவர்கள் கேமராவே ஒழுங்காய் வேலை செய்தது. சின்ன பிரச்சனை, தான் அதை சரி செய்து அவர்களிடம் காண்பித்தான்.

 

வேலை முடிந்ததும் கிளம்பியவன் “சரி அங்கிள் கிளம்புறேன், பை ஆன்ட்டி எதுவும் ப்ராப்ளம்ன்னா சொல்லுங்க. ஆபீஸ் கிளம்புறேன்” என்று வெளியில் வந்தவன் மீண்டும் உள்ளே சென்றான்.

 

“அங்கிள் என்னை தேடி அவங்களை தவிர வேற யாரும் வந்தாங்களா??” என்ற யோசனையான பார்வையுடன்.

 

“அட ஆமாப்பா பாரு மறந்தே போயிட்டேன். இன்னொருத்தரும் வந்தாரு”

 

“ஏங்க ஒழுங்கா ஞாபகமா சொல்லுங்க பிரியன்கிட்டன்னு உங்ககிட்ட சொன்னேன்ல. என்ன தான் ஞாபக மறதியோ உங்களுக்கு” என்று அவரின் மனைவி கணவரை குற்றம் சொன்னார்.

 

“பாவம் ஆன்ட்டி அங்கிள் என்ன பண்ணுவாரு விடுங்க” என்றவன் “அங்கிள் அவங்க பேரு எதுவும்  சொன்னாங்களா, நம்பர் எதுவும் கொடுத்தாங்களா??”

 

“நம்பர் எதுவும் கொடுக்கலை ஆனா எங்க வீட்டு நம்பர் வாங்கிட்டு போனாரு. நீ வந்துட்டியான்னு கேட்டு ஒரு அஞ்சாறு தரம் போன் பண்ணிட்டாரு. நேத்து கூட பண்ணாரு” என்று பதில் கொடுத்தவர் அவரின் மனைவி.

 

“உங்க போன்ல காலர் ஐடி இருக்கு தானே!!” என்றவன் “நான் பார்க்கலாமா??”. அவர் அங்கிருந்த போனை கைக்காட்டினார்.

 

வேகமாய் அருகில் சென்றவன் அவர்களிடம் நேற்று அவர்கள் எந்த நேரத்தில் போன் செய்தார்கள் என்று கேட்டு அந்த நேரத்தில் வந்த இரண்டு அழைப்புகளின் எண்ணை குறித்துக் கொண்டான்.

 

“ஆனா அங்கிள் உங்க வீட்டு போன் நம்பர் எதை நம்பி அவங்ககிட்ட கொடுத்தீங்க??”

 

“அவங்க பார்க்க பெரிய ஆளுகளா இருந்தாங்க. பார்த்ததுமே பகட்டா தெரிஞ்சுது. அதான்பா கொடுத்தேன்” என்றார்.

 

“இனிமே அப்படி எல்லாம் கொடுக்காதீங்க அங்கிள். நீங்க ரெண்டு பேரு தனியா இருக்கீங்க இந்த வீட்டுல”

 

“வந்தவங்க எப்படின்னு நமக்கு தெரியாது இல்லையா!! எனக்கு தெரிஞ்சவங்களாவே இருந்தாலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் அங்கிள் அதுக்காக தான் சொன்னேன்”

 

“ஹ்ம்ம் புரியுதுப்பா” என்று இப்போது கணவன் மனைவி இருவருமே சொன்னார்கள்.

“தேங்க்ஸ் அங்கிள்… ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றுவிட்டு வெளியில் வந்தான்.

 

கைபேசியில் அந்த இரு எண்களையும் அடித்து ட்ரூ காலரில் பார்க்க ஒன்று வீட்டு உரிமையாளருக்கு தெரிந்தவர் எண்ணாக இருக்கும் என்று தோன்றியது.

 

மற்றொன்று அவன் சந்தேகப்படும் நபராக இருக்க தொண்ணூறு சதம் வாய்ப்பிருந்தது.

 

பிரச்சனைகள் இனி தன் மனைவியால் வருவதை விட இவர்களால் தான் வரப்போகிறதென்று!! உள்மனம் அடித்துக் கூறியது!!

 

சாண் ஏணியில்

ஏறினால்

கொடிய விஷம்

கொண்ட

சர்வம் தீண்டி

அதல பாதாளம்

வீழ்கிறானவன்!!

 

நீலகண்டனவன் பேர்

கொண்டவன்

தன்னுயிரின் உயிர்க்காக்க

ஓர் முறை விழுங்கிய

ஆலக்காலத்தை மீண்டும்

விழுங்குவானா??

விழுங்க வைப்பானா??

 

Advertisement