Advertisement

 
“ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது…”
 
பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே… ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.
 
பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது  என்பது அப்போது அவளுக்கு புரிவதாய்!!
 
அவன்ஏதேதோ பேசிக் கொண்டிருக்க மற்ற இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தழுவி நின்றது. “சார்… சார்…” என்று இருமுறை பார்த்திபன் அழைத்தப்பின்னே தான் சுய உணர்வுக்கு வந்தான் பிரியன்.
 
“சொல்லுங்க பார்த்திபன்…:
 
“சார்இன்ஜினியரிங்ல நான் படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் உங்க ஜாப் எதைப்பத்தின்னு எனக்கு தெரியாது…” என்று இழுத்தான்அவன்.
 
“ரொம்ப நல்லதா போச்சு பார்த்திபன், என் தொழிலும் அது சம்மந்தப்பட்டது தான்… நீ நாளைக்கே ஆபீஸ்க்கு வந்திடு…” என்றவன் தன் அலுவலக முகவரி அட்டையை அவனிடம் கொடுத்தான்.
 
“கண்டிப்பா வர்றேன் சார்… நான் கிளம்பறேன் மேடம்…” என்றுகிளம்பியவனை விருந்தோம்பி வழியனுப்பி வைத்தனர் இருவரும்.
 
இன்னமும் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை அதிகம் வந்திருக்கவில்லை. அவர்களின் திருமண நாள் அன்றும் அதன் பின்னான நிகழ்வுகளும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கியிருந்தது.
 
இருவர் உள்ளமும் சிலைக்கடத்தலின் அன்று நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டது. சிலைக்கடத்தலில் ஈடுப்பட்டிருந்த பிரவீனைபோலீஸ் வசம் ஒப்படைத்திருந்தவள் அன்று இரவு வீடு வர வெகு தாமதமாகிப் போனது.
அதற்குள் பிரியன் ஒரு நூறு முறையாவது அழைத்திருப்பான் அவளுக்கு. அவனையும் வரவேண்டாம் என்று சொல்லியிருந்தாள். அவனுக்கு தான் இருப்பே கொள்ளவில்லை.
 
இதில் அவனுக்கு ராமின் அழைப்பு வேறு, அவனுக்கு பதில் சொல்லி அவனிடம் பேசி வைத்தான். வெளியில் கேட்ட ஜீப்பின் ஒளியில் வேகமாய் வெளியில் வந்து கேட்டை திறக்கவும் அவள் வாசலில் இறங்கவும் சரியாக இருந்தது.
 
ஒரு நிமிடம் கூட தாமதிக்காதவன் அவளை கண்களால் ஆராய்ந்து சட்டென்று தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டான்.
 
அவனின் படபடப்பை அவளின் இதயம் உணர்ந்துக்கொண்டது. ஏனிப்படி செய்கிறான் என்று என்னும் முன்னேயே அணைத்திருந்தவன் அவள் எண்ணம் முழுதாய் பயணிக்கும் முன்னேயே அவளை விடுவித்தான் சுற்றி இருப்போரைக் கண்டு.
 
“ஒண்ணும் பிரச்சனையில்லையே…”
 
அவள் வாய் திறவாமல் தலையை மட்டும் இப்படியும் அப்படியும் இல்லையென்பதாய் அசைத்தாள். “நீ தனியா போனியா அதான் கொஞ்சம் பயந்துட்டேன்…” என்றான் மெதுவான குரலில் அவளிடம்.
 
பரவாயில்லை என்பதாய் தலையசைத்தாள். “பிரவீனால எதுவும் பிரச்சனையில்லைல…” என்று கேட்டான் மீண்டும்.
 
“எப்படி வராம இருக்கும்…” என்றவள்“நான் இவங்களை அனுப்பிட்டு வர்றேன். உள்ள போய் பேசுவோம்…” என்றுகூற பிரியன் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை.
 
அவள் திரும்பி “சரிங்க நாளைக்கு பார்க்கலாம்…” என்று விடைபெற்று உள்ளே வந்தாள்.
 
“போகும்போது என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல??”
 
“என்கிட்ட யாரும் சொல்லிட்டு போகாதப்போ நான் மட்டும் அதே செய்யணுமா என்ன??” என்ற அவளின் பதில் அவனை பல்லைக் கடிக்க வைத்தது.
 
பேசி முடித்த பின்னே தான் அவள் பேசியது புரிந்து வருந்தினாள். “சாரி ஒரு வேகத்துல பதில் சொல்லிட்டேன். வேணும்ன்னு எல்லாம் சொல்லாம போகலை…”
 
“நீங்க ஏதோ யோசனையா இருந்தீங்க அதான். அப்படியே கிளம்பி போயிட்டேன்… அது முக்கியமான ஆபரேஷன் அதான் நானே நேரடியா களத்துல இறங்கிட்டேன்…”

“போதும் நீ ரொம்ப ரிஸ்க் எடுக்கறே வது… பிரவீன் பத்தி உனக்கே நல்லா தெரியும்…”
 
“எவ்வளோ நாளைக்கு தான் அதையே சொல்லி என்னை பயம் காட்டுவீங்க… நான் ஒண்ணும் கோழையில்லை, எதையும் எதிர்த்து நிக்கற துணிவு எனக்கிருக்கு…”
 
“உனக்கு பயம் காட்டலை, எச்சரிக்கிறேன்… பிரவீன் உனக்கு ஒரு விஷயமில்லாம இருக்கலாம்… உனக்கு தெரியாமலே நிறைய எதிரிங்க இருக்காங்க… எப்பவும் எதுவும் நடக்கலாம்…”
 
“எனக்கு தெரியாத எதிரிங்களா அப்படி யாரு இருக்காங்க?? எனக்கு உறவுன்னு சொல்லிக்கவே அதிகம் ஆளில்லை நீங்க, நம்ம இசை, ராமோட குடும்பம், கபிலன் குடும்பம் தவிர… இதுல எதிரிங்க எங்க இருந்து வருவாங்க…”
 
“பிரவீன் கூட தான் பிரச்சனை இருந்துச்சு அதுவும் இன்னையோட இருக்காது… வேற யாரையும் நான் எப்பவும் பகைச்சுக்கிட்டதே இல்லை…”
 
“நீ தான் பகைச்சுக்கணும்ன்னு இல்லை… உன்னைஅவங்க எதிரியா நினைக்கலாம்…”
 
“எதுக்கு இப்படி பொடி வைச்சு பேசறீங்க… யாரைப்பத்தி சொல்ல வர்றீங்களோ அதை நேரடியாவே சொல்லுங்க…”
 
“யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லலை வது… ஜஸ்ட் உனக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு…”
 
வதனாவிற்குள் சிறு பொறி ஒன்று கிளம்பியது. பிரியன் எதையும் சும்மாவெல்லாம் சொல்லும் ரகமில்லை என்று. எதையோ தனக்கு உணர்த்த விரும்புகிறான், ஆனால் அதை நேரிடையாய் சொல்லாமல் ஏன் இப்படி புதிர் போடுகிறான் என்று தான் அவளுக்கு விளங்கவில்லை.
 
அவளறைக்கு செல்லும் முன் நின்று திரும்பி அவனை பார்த்தாள். இன்னமும் யோசனையிலேயே நின்றிருந்தான் அவன்.
 
மெதுவாய் திரும்பி வந்தவள் என்ன நினைத்தாளோ அவனை அணைத்துக் கொண்டாள். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவன் எதிர்பாரா அந்த அணைப்பில் திக்குமுக்காடித் தான் போனான்.
 
“போதும்உங்க யோசனை எல்லாம் தள்ளி வைங்க… எனக்கு ஒண்ணும் ஆகாது…” என்று அவன் காதோரம் சொல்லிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
 
அவளின் பேச்சில் இதழோரம் குறுநகை தோன்றியது. பின் ஒரு பெருமூச்சை வெளியேற்றி “உனக்கு எதுவும் ஆகாது, வேற யாருக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது” என்று மெதுவாய் வாய்விட்டு சொல்லிக் கொண்டான்.
____________________
 
சுகுணா காலிங் என்று இடைவிடாது ஒலித்த கைபேசியை அணைத்து வைக்க எண்ணி கையிலெடுத்தான் ராம்.
 
இன்று முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று முன்னரே அவன் சொல்லியிருந்தது தான். தெரிந்தும் இப்படி விடாது அடிக்கிறாள் என்றால் அவன் என்ன செய்வான். அப்படி என்ன தலை போகும் அவசரம் நான்கு மணிக்கு தான் மீட்டிங் முடிந்துவிடும் என்று சொல்லித்தானே வந்திருந்தேன்.
 
அவன்அணைப்பதற்குள் கைபேசி மீண்டும் அடித்து ஓய்ந்திருந்தது. அவன் மீட்டிங்கை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தான், மீண்டும் அவளிடம் இருந்து அழைப்பு வருவதற்கு அறிகுறியாய் பீப் சவுண்டு வந்தது கைபேசியில்.
 
காலை கட் செய்ய எண்ணி அட்டென்ட் செய்திருந்தான் அவன். “ஹலோ என்னங்க…” என்றுபிசிறான குரல் கேட்கவும் தன்னையுமறியாமல் இருக்கையில் இருந்து எழுந்திருந்தவன் “எக்ஸ்க்யூஸ் மீ…” என்றுவிட்டு வெளியில் வந்தான்.
 
“ஹலோ என்ன சுகுணா எதுக்கு கால் பண்ணிட்டே இருக்கே??” என்றவனுக்கு எதிர்முனை கூறிய பதிலில் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் அவசர அவசரமாய் வெளியில் ஓடிவந்து காரை எடுத்திருந்தான் அவன்.
 
காரில் ஏறியதும் மீண்டுமொரு அழைப்பு அவனுக்கு. “வல்லா இவன் எதுக்கு கால் பண்றான்??” என்று வாய்விட்டு சொன்னவன் “சொல்லு வல்லா” என்றவாறே போனை அட்டென்ட் செய்திருந்தான்.
 
“ராம் நீ எங்க இருக்கே?? சரண் எங்க இருக்கான்??”
 
“வல்லா நீ சொன்னது நடந்திருச்சு…”
“சரணை காணோமா…”
 
“ஆமா வல்லா எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு. எதுவும் யோசிக்க முடியலை, சின்ன குழந்தை நானோ சுகுணாவோ இல்லைன்னா அழுவான்டா…”
 
“எங்களை தவிர அவன் இருக்கறது வதனாகிட்ட மட்டும் தான்… அதிகம் யார்க்கூடவும் ஓட்டமாட்டான்… சின்ன குழந்தை வல்லா” என்றவனின் குரலில் லேசாய் கலக்கம் எட்டிப் பார்த்ததை பிரியன் உணர்ந்தான்.
 
“ஒண்ணும் கவலைப்படாதே ராம்… அவனுக்கு ஒண்ணும் ஆகாது, அவங்க நோக்கம் வது தான்… எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சனோ அது நடந்திருச்சு… இனி என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும் ராம்…”
 
“வல்லா…”
 
“எனக்கொண்ணும் வருத்தமில்லை ராம்… இசை எனக்கு எவ்வளவு முக்கியமோ அது போல தான் சரணும், என்னைவிட அதிகமா வதுவும் அதை தான் நினைப்பா…”
 
“குழந்தை எங்க இருக்கான்னு நான் டிராக் பண்ணிட்டு தான் இருக்கேன்… அவங்க போனுக்காக தான் வைடிங்…”
 
“வல்லா நீ என்ன சொல்றே??”
 
“நான் லாஸ்ட் டைம் வந்தப்போ சரண் கழுத்துல ஒரு செயின் போட்டுவிட்டேன் உனக்கு ஞாபகமிருக்கா… அதுல டிராக்கிங் டிவைஸ் வைச்சிருக்கேன், இசைகழுத்துலயும் அது போல ஒண்ணு போட்டுவிட்டேன்” என்றான்.
 
ராமிற்கும் இப்போது தான் ஞாபகம் வந்தது. சென்ற முறை கிரானைட்ஸ் விஷயமாய் ஹைதராபாத்திற்கு அவன் வந்திருந்த போது நடந்த விஷயம் அது. ஊருக்கு கிளம்பிச் செல்லும் அன்று இரு குழந்தைகளுக்கும் ஒன்று போல டாலர்வைத்த அந்த செயினை போட்டு விட்டிருந்தான் அவன்.
 
“ராம் நீ வொரி பண்ணாத எதுவும் ஆகாது… குழந்தைநல்லபடியா நம்மகிட்ட வந்திடுவான். வதுஅப்படியே விட்டிற மாட்டா… நீ தான் உன் மனைவிக்கு ஆதரவா இருக்கணும்…”
 
“புரியுது வல்லா… என்னோட கவலை குழந்தை எங்களை தேடுவான் அப்படிங்கறது தான்… அவன் கண்டிப்பா கிடைப்பான்னு எனக்கு தெரியும்… உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு…”
 
“ராம் போலீஸ்க்கு…”
 
“போகலை…”
 
“தேங்க்ஸ் ராம்… நான் வது கூட இருக்கேன்… சீக்கிரமே நல்ல சேதியோட உனக்கு கூப்பிடுறேன்…”
 
“வல்லா ஒரு நிமிஷம்… சரண் எனக்கு எவ்வளவு முக்கியமோ அது போல நீயும் வதனாவும் இசையோட சேர்ந்து இருக்கறது எனக்கு முக்கியம்…”
“ராம் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறது அதுவும் நன்றாகவே நடக்கிறது… எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்…” என்றபிரியன் ராமிற்கு கீதோபதேசம் செய்து போனை வைத்தான்…
 
சிறுபிள்ளை
பகடையாக்கி
சகுனியவன்
ஆடும் ஆட்டத்தில்
சாமானியனவன்
வெல்வானா??
வெட்டுபடுவானா??
 
 

Advertisement