அத்தியாயம் –27
 
டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.
 
“ஹலோ சொல்லுங்க…”
 
“என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல… இப்போ நீ எங்க இருக்க, தனியா ஏன் போனே… நானும் கூட வந்திருப்பேன்ல இந்த நேரத்துல நீயா போயிருக்கியே…”
 
“எனக்கொண்ணும் பயமில்லை… தவிர நான் தனியாவும் போகலை என் கூட இன்னும் சில ஆபீசர்ஸ் அப்புறம் போலீஸ் எல்லாரும் இருக்காங்க…”
 
“இருந்தாலும் அந்த பிரவீனை தேடி நீ தனியா போயே ஆகணுமா என்ன??”
 
“அப்புறம் என்ன செய்யறதாம், இன்னமும் யாராச்சும் உதவி செய்வாங்க… நம்மை காப்பாத்த வருவாங்கன்னு காத்திட்டு இருக்கணுமா என்ன… இது என்னோட கடமை அதை நான் செய்யறதுல தான் எனக்கு திருப்தி” என்றாள்.
 
அவள் அப்படி சொல்லவும் மீண்டுமொருமுறை அவன் முகம் வாடியது. அவளுமே சொல்லிய பின்னே தான் யோசித்தாள்.
 
“இங்க பாருங்க நான் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் வருத்தப்பட்டுட்டே இருந்தா ஒண்ணுமே பண்ண முடியாது… நான் சொன்ன மாதிரி அது என்னையறியாம வந்திடுது…”
 
“நான் எதுவும் யோசிக்கலை, சரி நீ இப்போ எங்க இருக்க சொல்லு…”
 
“காஞ்சீபுரம்கிட்ட இருக்கேன்…”
 
“நான் உடனே அங்க வர்றேன்…”
 
“வேணாம் இங்க எல்லாம் முடிஞ்சது… கொஞ்சம் பார்மாலிட்டிஸ் மட்டும் தான் இருக்கு, அதை முடிச்சுட்டு நான் கிளம்பிடுவேன்…”
 
“தனியாவா வருவே…”
 
“தனியாவே இத்தனை வருஷமா இருந்திருக்கேன், தனியா வர்றதுக்கு எனக்கென்ன கஷ்டம்… நீங்க படுத்து தூங்குங்க, நான் இன்னும் இரண்டு மூணு மணி நேரத்துல அங்க இருப்பேன்…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.
 
பிரியனுக்கு இப்போது யோசனையாய், “இவளுக்கு இருக்காது நாக்கா இல்லை தேள் கொடுக்கா… டக்கு டக்குன்னு பதில் கொடுக்கறா அப்புறம் அதெல்லாம் ஒண்ணுமேயில்லைங்கறமாதிரிபேசுறா…”

“கடவுளே பொறுமையை எனக்கு கொடு, நான்கோவப்படாம இருக்கணும்…” என்று வேண்டிக்கொண்டவன் தன் பொறுமையை விடப்போகும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே சொல்லலாம்.
____________________
 
“இவளுக்கு என்ன பெரிய ஜான்சிராணின்னு நினைப்பா… எதுக்கு இந்த அனாவசிய வேலை எல்லாம்… அந்தபிரவீன் தான் இவகிட்ட ஏற்கனவே வம்பு பண்ணியிருக்கானே அப்புறமும் அவன்கிட்டவே போய் வம்பு வளர்க்குறா…”
 
“ஏன் சந்திரா உன் பொண்ணு இந்த மாதிரி இருக்கா… அவளுக்கு நம்ம யார் குணமும் இல்லையே… இவ இந்த குடும்ப வாரிசு தானா… நம்ம ரத்தம் கொஞ்சமாச்சும் ஓடினா இப்படி எல்லாம் செய்ய மாட்டா…” என்று எப்போதும் போல் குதித்தவர் விகேபியே!!
 
தந்தையின் பேச்சை கேட்டு முகத்தை சுளித்த சந்திரசேகரோ “அப்பா…” என்றார் சற்றே உரத்திருந்த குரலில்.
 
“என்னடா உன் பொண்ணை சொன்னதும் பொத்துக்குதா உனக்கு…”
 
“இவளுக்கு இந்த வேலை தேவை தானா… அந்தபிரவீன் ஹைதராபாத்ல அவளுக்கு தொல்லை கொடுத்தது தெரிஞ்சு தானே அவனை அவன் சித்தப்பன் அந்த எக்ஸ் மினிஸ்டர் வைச்சு அடக்கி வைச்சோம்…”
 
“இவ என்னடான்னா மறுபடியும் அவன்கிட்டவே போய் வம்பு வளர்க்குறா… இந்த முறை அவன் சித்தப்பன் தானே பதவியில இருக்கான்… நாம பேசினா அவன் அடங்குவானா…”
 
“அதுக்காக அப்படியே விட்டுடப் போறீங்களா…” என்றார் சந்திரசேகர்.
 
“அப்படியே விட்டுத் தொலைக்கிற உறவா ஏற்படுத்தி வைச்சிருக்கே நீ… அவளால தான் இந்த குடும்பம் மீண்டு வரப்போகுதுன்னு நம்ம ஜோசியர்ல இருந்து நம்பூதிரி வரை எல்லாரும் சொன்னது மறந்து போச்சா உனக்கு…”
 
“அப்போ உண்மையான பாசம் எல்லாம் இல்லைன்னு சொல்ல வர்றீங்க…”
 
“இல்லவே இல்லை… அவ அம்மா என்ன ஜாதி, நமக்கு கொஞ்சமும் சரிசமமில்லாத இடத்துல கையை வைச்சு இன்னைக்கு அவ பொண்ணையே தூக்கி வைச்சு கொண்டாடுற மாதிரி செஞ்சிட்டியே…”
 
“அவளால தான் நம்ம குடும்பம் இனி பிழைக்குங்கறதை மறந்திடாதீங்க…”
 
“அந்த மாதிரி ஒரு நிலைக்கு இந்த குடும்பத்தை கொண்டு வந்ததே நீ தானே… இப்படி ஒரு தப்பு நடக்கலைன்னா இந்த பிரச்சனையே வந்திருக்காது…” என்றார் அவர்.
 
இவரை பேச்சில் வெல்லவே முடியாது என்றுணர்ந்து சந்திரசேகர் தான் தன் வாயை மூடிக்கொண்டார்.
 
விகேபி இந்தருக்கு அழைத்திருந்தார். “இந்தர்…”
 
“சொல்லுங்க…”
 
“அந்த வதனாவை இனியும் அங்கவே விட்டு வைச்சிருக்க முடியாது… அவளை நம்ம இடத்துக்கு கொண்டு வரணும்…”
 
“அதுக்கு…”
 
“கடத்தணும்…”
 
“யாரை?? வதனாவை?? அவங்க என்ன சின்ன குழந்தையா மிரட்டி கூட்டிட்டு வர்றதுக்கு… நடந்த விஷயத்தை பக்குவமா அவங்ககிட்ட பேசி நீங்களே வந்து அழைச்சிட்டு போங்க…”
 
“என்னது?? என்னை இறங்கி வரச்சொல்றியா நீ!! அப்படி எல்லாம் என்னால வர முடியாது… என் கால் தூசிக்கு பெற மாட்டா அவ எல்லாம்…” என்று அவர் தன் புராணம் பேச இந்தரோ காது குடைந்து கொண்டிருந்தான் மறுமுனையில்.
 
“சரி இப்போ என்ன பண்ணனும் இசையை கடத்தணுமா??”
 
“நீ நல்லா தான் யோசிச்சுட்டு இருந்தே, திடிர்னு உனக்கும் இவனுங்க மாதிரி மூளை குழம்பிருச்சா… தப்பு தப்பா யோசிக்கறே…”
 
“அவ பொண்ணை கடத்தினா, நம்மளை புடிச்சு அவ ஜெயில்ல தான் போடுவா…”
 
“போட்டுட்டாலும் அப்படியே நீங்க சும்மா விட்டுட்டாலும்…” என்று சத்தமாகவே முணுமுணுத்தான் இந்தர்.
 
“இந்தர்ர்ர்…” என்று பல்லைக் கடித்தார் அவர்.
 
“முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க…”
 
“அந்த ராம் இருக்கான்ல அவனோட பையன் ஒருத்தன் இருக்கான்ல அவனை தூக்கிடலாம்…”
 
“என்ன?? என்ன சொன்னீங்க??”
 
“தெளிவா தானே சொன்னேன், காது கேட்கலையா உனக்கு??”
 
“உங்க முட்டாள்த்தனத்துக்கு அளவேயில்லாம போய்க்கிட்டு இருக்கு… வதனாகிட்ட நல்லவிதமா பேசி கூட்டிட்டு வர்றது தான் உசிதம்… அதைவிட்டு இந்த மாதிரி குறுக்கு வழியெல்லாம் செஞ்சு அந்த உறவை ஓட்டவைக்கணும்ன்னு நினைச்சா அது நடக்கவே நடக்காது…”
 
“எது நடக்கும் நடக்காதுன்னு எனக்கு தெரியும்… ராமோட பையனை கடத்துங்க… அவனை வைச்சு தான் இவளை இங்க வரவைக்க முடியும்… அதே போல அந்த வெறும் பயலையும் விட்டுட்டு வரவைக்க இது தான் வழி…”
 
“இங்க வந்த பிறகு அவங்களை எப்படி பிடிச்சு வைக்கணும்ன்னு எனக்கு தெரியும்… நீ எனக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை… நான் சொன்னதை மட்டும் செய்…”
 
“இப்போ முதல்ல அவங்களை பக்கத்துல இருந்து கண்காணி… அப்புறம் ஹைதராபாத்ல இருக்கற ராம் பையனை கடத்த இங்க இருந்து நான் ஆளனுப்பறேன்… உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது… வரவரநீ பேசுற விதமே சரியில்லை…”
 
வரகுணபாண்டியன் இதை சொல்லாமலே இருந்திருக்கலாம். அவர் பேச்சே அவனை உசுப்பிவிட்டது.
 
‘என்னை நம்ப முடியாததுக்கு எதுக்கு எனக்கு இந்த வேலையை கொடுக்கறீங்க… இனி என் வேலையை நான் காட்டுறேன்’ என்பதாய் மனதுக்குள் கருவிக்கொண்டு போனை வைத்தான் இந்தர்.
____________________
 
“ஹாய் பார்த்திபன்!! என்ன இந்த பக்கம்??”
 
“இங்க பிரண்ட் வீடு இருக்கு சார் அடுத்த தெருவில அவனை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்… ஆமா நீங்க இங்க என்ன பண்றீங்க சார்…”
 
“நானும் உங்க மேடமும் அதோ தெரியுதுல பச்சை பெயின்ட் அடிச்ச வீடு, அங்க தான் குடியிருக்கோம்… அப்புறம் பார்த்தி வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு??”
 
“அந்த வேலை எனக்கு பிடிக்கலை சார், அதான் விட்டுட்டேன்…”
 
“என்ன பார்த்திபன் இப்படி சொல்றீங்க… அது உங்கப்பாவோட வேலைன்னு உங்களுக்கு வந்ததுன்னு கேள்விப்பட்டேன்…”
 
“அப்பாவோட வேலை தான் சார், ஆனா எனக்கு ஒப்பலை… அப்பாநேர்மையானவரா இருந்து அதை வைச்சு எனக்கு இந்த வேலை கிடைச்சிருந்தா ஒருவேளை இந்த வேலை எனக்கு பிடிச்சிருக்கலாம்…”
 
“அவரை வைச்சு கிடைச்ச அந்த வேலையில என்னால இருக்க முடியலை… நான் நானா இருக்க முடியலையோன்னு தோணிச்சு சார், அதுனால தான் விட்டுட்டேன்…”
 
“அப்போ உங்க பேமிலி??”
 
“நான் படிச்சிருக்கேன்…இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன் சார், ஜாப் சர்ச் பண்ணிட்டு இருக்கேன். பிரண்டுபார்க்கப்போறது கூட வேலை விஷயமா தான்… அப்புறம் சார்வதனா மேடம் எப்படியிருக்காங்க??”
 
“நல்லாயிருக்காங்க…”
 
“ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறது ரொம்ப சந்தோசம் சார்… எப்பவும் இப்படியே இருக்கணும் நீங்க…”
 
“வீட்டுக்குவாங்க பார்த்திபன், மேடம் கூட வீட்டுல தான் இருக்காங்க இப்போ…”
 
“இருக்கட்டும் சார் இன்னொரு நாள் வர்றேன்…”
 
“இந்த சாக்கெல்லாம் வேண்டாம்… நீ வா…” என்று சொல்லி அவனை கையோடு கூட்டிச் சென்றான் பிரியன்.
 
வீட்டிற்குள் நுழையும் போதே தற்செயலாய் எதிரில் வந்த வதனா அவனை உற்சாகமாய் வரவேற்றாள். “எப்படியிருக்கீங்க பார்த்தி?? ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து…”
 
“நல்லாயிருக்கேன் மேடம்… நீங்க எப்படி இருக்கீங்க?? புது வேலை ஜோரா போகுது போல… டிவி, பேப்பர்ல எல்லாம் இப்போ டாக் நீங்க தான்… சந்தோசமாயிருக்கு மேடம்…”
 
“தேங்க்ஸ் பார்த்திபன்…”
 
அவனை உபசரித்து பிரியன் கேட்டது போல அவளும் வேலை பற்றி கேட்க அவன் பிரியனிடம் என்ன சொன்னானோ அதையே அவளிடமும் சொன்னான்.
 
“தப்பு பண்ணிடே பார்த்திபன்… உங்கப்பா தான் நேர்மையா இல்லைன்னா… நீ அந்த வேலையில நேர்மையா இருந்து உன்னை நிரூப்பிச்சு இருக்கணும்… வேலையைவிட்டுட்டா எல்லாம் ஆச்சா…”
 
“நேர்மையை அந்த வேலையில இருந்து தான் நான் காட்டணும்ன்னு இல்லை மேடம்…” என்றானவன்.
 
அவன் ஏதோ பிடிவாதத்துடன் சொல்வது போல தோன்ற “சரி உங்க இஷ்டம்…” என்றுவிட்டுவிட்டாள் அவள்.
 
“ஹ்ம்ம் பார்த்தி நீங்க என்னோட ஆபீஸ்க்கே வரலாமே… உங்களுக்கு விருப்பம் இருந்தா…” என்றிருந்தான் பிரியன்.
 
“சார் அது என் பாக்கியம் சார்… நீங்க வான்னு சொன்னா நான் வந்திடுவேன்…”
 
“உனக்கு நான் எதுவுமே செஞ்சதில்லையே நீ பாக்கியம்ன்னு சொல்ற அளவுக்கு…”
 
“என்னமோ தெரியலை சார்… எனக்கு உங்களையும் சரி மேடமும் சரி ரொம்பவே பிடிக்கும்… மேடமை முதல் நாள் பார்த்ததும் இவங்க ரொம்ப திமிரானவங்கன்னு நினைச்சேன்…”
 
“அப்புறம் அவங்க பேச்சுல இருந்து அவங்க ரொம்ப தைரியமானவங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்… அதே மாதிரி தான் உங்களை பார்க்கும் போதும் தோணுச்சு எனக்கு…”
 
“என்னடா இந்த மனுஷன் அடிவாங்கிட்டு நிக்கறாரேன்னு தோணுச்சு, அப்புறம் நீங்க மேடம்க்கு யாருன்னு தெரிஞ்சதும் அசந்துட்டேன்… என் போனை பிடுங்கி என் நம்பர் சேவ் பண்ணின்னு கலாட்டா தெரிஞ்சாலும் மேடம் மேல உங்க பிரியம் தான் அதுல தெரிஞ்சது…”
 
“அவங்களை பத்தி அப்பப்போ என்கிட்டவே விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டீங்க… இதெல்லாம் உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயத்தை தான் உருவாக்குச்சு… உங்களுக்குள்ள என்னவோ எனக்கு தெரியாது…”