அத்தியாயம் –26

 

“நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”

 

“அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க… நீங்க எல்லாம் சரியான அரைவேக்காடுங்கடா…”

 

“இதுவே இந்தரா இருந்தா எள்ளுன்னுசொன்னா எண்ணெய்யா இருந்திருப்பான்…”என்று குதித்துக் கொண்டிருந்தார் விகேபி.

 

“அப்பா அவனை மூணு வருஷமா இந்தியாவுக்கே வரவிடலை… நம்ம பார்வையில தானே வைச்சிருந்தோம்…”

 

“வதனா அவன் மேல வெறுப்பாகிட்டான்னு தெரிஞ்ச பின்னாடி தானே, அவன் நமக்கு தேவையில்லைன்னு விட்டுட்டோம்…”

 

“அதுவும் அவனை அந்த ஊர்ல தானே எப்படியோ போகட்டும்ன்னு விட்டோம்… எல்லாமே நீங்க சொன்ன மாதிரி தானே செஞ்சோம்…” என்று கொஞ்சம் கடுப்பாகவும் ஆதங்கமாகவும் மொழிந்தார் குலசேகரன்.

 

“நான் சொல்றதே தான் செய்வீங்களா?? உங்களுக்குன்னு சுயமா ஒரு புத்தியும் இல்லையா… யோசிக்கவே மாட்டீங்களா… ஒவ்வொண்ணும் நான் தான் சொல்லித் தரணுமா…”

 

“நேத்து பிறந்தவன் நான் எட்டடி பாய்ஞ்சா அவன் அறுப்பத்தி நாலு அடி பாயறான்… நீங்கலாம் எனக்கு தான் பிறந்தீங்களா… ஒருத்தனுக்கு கூட மண்டையில ஒண்ணுமேயில்லை…” என்று மீண்டும் கரிந்தார் அவர்.

 

இப்போது குலசேகரனுக்கு கோபம் சுருசுருவென்று வந்திருந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவர்.

 

ஏனோ சிறு வயதில் இருந்தே அவர் அப்படியே வளர்க்கப்பட்டிருந்ததால் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

 

அப்பா சொன்னா கேட்கணும்… அப்பா சரியா தான் சொல்வாங்க… என்ற அவர்களின் அன்னையின் மொழியை கேட்டு வளர்ந்ததாலேயே அவ்வீட்டில் பிறந்த அம்மூவருமே அவர் சொல்லை மீறாதவர்களாகவே இருந்தனர்.

 

இதில் சந்திரசேகர் தான் கொஞ்சம் பேச்சை மீறியவர். அதையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது, கொஞ்சம் அவருக்கு அவர் தந்தையின் புத்தி தான்.

 

அதனால் அவரைக் கொண்டு தான் பிறந்திருந்தார். அவரை எதிர்த்து பேசவும் அவரால் மட்டுமே அப்போது முடிந்தது. எப்போது தன் வாரிசுகளை மொத்தமாய் இழந்து அவராலும் நடக்க முடியாமல் போனதோ அப்போதிருந்தே அவரும் ராஜசேகர் குலசேகரை போன்றே ஆனார்.

 

நிகழ்விற்கு வந்த குலசேகரனுக்கு மேற்கொண்டு என்ன செய்ய என்று புரியவில்லை. எப்போதும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றே இருப்பவர் அவர்.

 

அவர் அவ்வளவு பேசியும் அடுத்து அவர் என்ன சொல்லுவார் என்று அவர் முகத்தையே பார்த்திருந்தார் இப்போது.

 

விகேபிக்கோ தலையில் அடித்து கொள்ளாத குறை தான். அங்கிருந்த சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

 

“அப்பா” என்றழைத்துக்கொண்டே சரியாக அந்நேரம் ராஜசேகர் உள்ளே வந்தார். அவரோ என்னவென்றெல்லாம் கேட்காமல் புருவத்தை உயர்த்தி மகனை பார்த்தார்.

 

“நாளைக்கு ஆல் இந்தியா லெவல்ல மீட்டிங் இருக்கு… கட்சியோட மூத்த உறுப்பினரா நீங்களும் கலந்துக்கணும்ன்னு இன்னைக்கு மந்திரிங்க மீட்டிங்ல பேசிக்கிட்டோம்…”

 

“அதான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு வந்தேன்…” என்றார் அவர்.

 

“ஹ்ம்ம்… சரி… ஆனாஇதை நீ சொல்லி தான் நான் வரணுமா??” என்றார்அவர் தன்னை யாரும் கட்சி சார்பாக அழைக்கவில்லையே என்று எண்ணி.

 

“அப்பா அதெல்லாம் அவங்க முறையா அழைப்பாங்க… நாங்க அங்க பேசிக்கிட்டோம் இல்லையா அதான் உங்ககிட்ட சொன்னேன்… வேற ஒண்ணுமில்லை…” என்றார் ராஜசேகரன்.

 

அவர் பேசி முடிக்கவும் வரகுணபாண்டியனின் கைப்பேசி அழைப்பு விடுக்க அதில் வந்த எண்ணை பார்த்துவிட்டு“ஹ்ம்ம் சொல்லு” என்றவாறே காதில் வைத்தார்.

 

எதிர்முனையில் பேசியது இந்தர். “இசைப்பிரியா தான் அடுத்த பெண்வாரிசு…”என்றதும் இங்கு விகேபி குதிக்க ஆரம்பித்தார்.

 

“அன்னைக்கு அது அந்த ராமோட குழந்தைன்னு சொன்னீங்க… எப்படி நடந்துச்சு இதெல்லாம்?? இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை…”என்றுஅவர் கத்த இந்தர் போனை ஓரடி தள்ளி வைத்தான்.

 

“நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்??”

 

“என்ன பேசணும்??” என்றான் அவன் நிதானமாய்.

 

“இது எப்படி நடந்துச்சு??”

 

“நான் வேணும்னா ஒரு பத்து வருஷம் பின்னாடி போய் அவங்க வீட்டுல பெட் ரூம்ல ஒருகேமரா வைச்சு பார்த்து கண்டுப்பிடிச்சு வந்து சொல்லட்டுமா…” என்றான் அவன் நக்கலாய்.

 

“டேய் உனக்கு என் மேல மரியாதைன்னு கொஞ்சமாச்சும் இருக்காடா… என்கிட்ட எப்படி பேசணும்ன்னு கூட உனக்கு தெரியலை… உங்க அம்மா உன்னை என்ன வளர்த்து வைச்சிருக்கா…”

 

“ஹலோ என்ன பேசிட்டே போறீங்க… உங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கணும்ன்னு எதிர்பார்க்கறீங்க… இப்போ வரைக்கும் நீங்க சொல்றதை கேட்கறது கூட உங்களுக்காகவோ இல்லை உங்க வயசுக்காகவோ கிடையாது”

 

“எங்க அம்மா… அம்மா மட்டும் தான்… அவங்களுக்காக மட்டும் தான் இதெல்லாம் செய்யறேன்… அவங்களையே நீங்க தப்பா பேசினா, நான் மனுஷனாவும் இருக்க மாட்டேன்…”

 

“உங்களுக்கு…” என்று ஆரம்பித்தவன் “எனக்கு அதை சொல்லக்கூட பிடிக்கலை… ச்சே… நீயெல்லாம் ஒரு ஜென்மம்…” என்றுவிட்டு போனை கத்தரித்துவிட்டானவன்.

 

“எவ்வளவு திமிர் இவனுக்கு… நான் பார்க்க பிறந்து வளர்ந்தவன் என்னையவே என்ன பேச்செல்லாம் பேசறான்…” என்று கர்ஜித்தவர் யாருக்கோ போன் செய்து கத்திவிட்டு வைத்தார்.

சென்னையில்இந்தர் அவன் வீட்டில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

 

“ச்சே… இதெல்லாம் என்ன பொழப்பு… அசிங்கமா இருக்கு… இந்தாளு சொல்ற வேலையெல்லாம் செஞ்சிட்டு, அதுக்கு இவன் பேசுற பேச்சை எல்லாம் வேற கேட்கணுமா… எல்லாம் இந்த அம்மாவால…” என்று அவன் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்த வேளை அவன் மொபைல் அழைத்து தன் இருப்பை தெரிவித்தது.

 

அதில்அழைத்தவரை கண்டதும் முகம் மலர்ந்து பின் சுருங்கியது. அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “சொல்லுங்கம்மா…” என்றான்.

 

அவர்“என்னாச்சுப்பா??” என்றதும் தான் தாமதம் இந்தர் எண்ணெய்யில் இட்ட அப்பளமாய் பொரிந்தான்.

 

“என்னம்மா நினைச்சுட்டு இருக்காரு அவரு… நான் என்ன எடுபிடி வேலை செய்யறவனா?? இல்லை இவரோட அல்லக்கையா?? என்னைய என்ன தான்ம்மா நினைச்சுட்டு இருக்காரு??”

 

“நான் இதுவரைக்கும் செஞ்சது செய்யறது எல்லாமே உங்களுக்காக மட்டும் தான்ம்மா… அவருக்காக இல்லைன்னு உங்களுக்கும் நல்லாவேதெரியும்…”

 

“தயவுசெய்து நீங்க இப்போ அவருக்காக மட்டும் என்கிட்ட பேசிடாதீங்க… அப்புறம் செஞ்சது எல்லாம் போதும்ன்னு நான் பாட்டுக்கு ஊருக்கு கிளம்பி வந்திடுவேன்…”

 

“பேசிட்டியாப்பா…” என்றவர் சொன்னதும் இந்தர் சற்று ஆசுவாசமானான்.

 

“சாரிம்மாநீங்க சொல்லுங்க”

 

“நான் உன்கிட்ட என்ன சொன்னேன்…”

 

“எதைப்பத்திம்மா கேட்கறீங்க??”

 

“இந்த குடும்பத்துக்கு உதவி பண்ணுன்னு தானே சொன்னேன்…”

 

“ஆமாம்மா…”

 

“அந்த பொண்ணு யாரு??” என்று அவர் நிறுத்தவும் அவனுக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.

 

“சரிப்பா நீ அடுத்த வாரம் ஊருக்கு வந்திட்டு போ… நான் போனை வைக்கட்டும்மா” என்றாரவர்.

 

“அம்மா… நான் எல்லாம் சரியானதும் ஊருக்கு வர்றேம்மா… இனிமே தான் எனக்கு இங்க வேலையே இருக்கும்மா…” என்றவனின் குரலில் இப்போது புது உற்சாகம் தொற்றிக் கொண்டிருந்தது.

 

இது நாள் வரை சலிப்போடு செய்துக் கொண்டிருந்த ஒரு வேலையை இன்று முதல் மனநிம்மதியுடன் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

 

இந்த வேலை முடிந்ததும் தனக்கென்று ஓர் அடையாளம் ஏற்படுத்திக்கொண்டு தன் தாயை அழைத்துக்கொண்டு எங்காவது சென்று விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

____________________

 

“மேடம்… உங்களுக்கு கொரியர் வந்திருக்கு… நேத்து உங்க வீட்டுக்கு வந்து பார்த்தேன்… வீடு பூட்டியிருந்துச்சு… இன்னைக்கு நீங்க இருப்பீங்களா மேடம்…” என்றுபோனில் கேட்ட கொரியர் சர்வீஸ் ஆளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வதனா.

 

“கொரியரா எங்க இருந்து வருது??”

 

“மேடம் அதெல்லாம் பார்சல் பார்த்திட்டு நீங்களே தெரிஞ்சுக்கோங்க மேடம்… இது ஆன்லைன்ல பர்சேஸ் பண்ணியிருக்காங்க, டெலிவரி அட்ரஸ் உங்களோடது தான் கொடுத்திருக்கு…”

 

“இப்போ வீட்டுல தான் இருக்கேன், நீங்க கொண்டு வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்… நான் இரண்டு மணி வரை தான் இங்க இருப்பேன்…”

 

“இன்னும் அரைமணி நேரத்துல இருப்பேன் மேடம்…” என்றுவிட்டு போனை வைத்தவன் சொன்னது போல வந்து சேர்ந்திருந்தான். அவன் கொடுத்த பார்சலை கையொப்பமிட்டு வாங்கியவள் உள்ளே சென்றாள்.

 

“என்னவா இருக்கும்… யார் அனுப்பியிருப்பா?? இந்த ராம் தான் போன வாரம் எனக்கு ஒரு கொரியர் அனுப்பறதா சொல்லியிருந்தான், அவன் தான் அனுப்பியிருக்கணும்…” என்று தனக்குள் பேசிக்கொண்டே அதை பிரித்தாள்.

 

உள்ளே அழகிய டிசைனர் புடவை ஒன்று நாவல் பழ நிறத்தில் ஆங்காங்கே தங்க இழையில் பூக்கள் புடவை முழுவதும் ஓட பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.

 

“இந்த ராம்க்கு வேலையே இல்லை… சுகுணாக்கு புடவை எடுக்கும் போது எனக்கும் ஒண்ணு எடுத்துஅனுப்பிடறான்…” என்று நண்பனை செல்லமாக திட்டிக்கொண்டு அதை எடுத்து பீரோவில் வைத்தாள்.

 

அந்த வார ஞாயிறு அன்று விடுப்பு தினம் கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணியிருந்தாள் வதனா. அன்று ஒரு முக்கியமான தினம் என்பதும் ஒரு காரணம்.

 

எந்த நாளை மறந்தாலும் வருடந்தோறும் வரும் அந்நாள் மட்டும் அவளுக்கு மறக்கவே மறக்காது. ‘அவனுக்கு நினைவிருக்குமா??’ என்று எண்ணியவளுக்கு ‘எப்படி இருக்கும் அது தானே என்னைவிட்டு சென்றுவிட்டாரே…’ என்று உள்ளே ஒரு வலியும் எழுந்தது அவளுக்கு.

 

எவ்வளவு தான் சில விஷயங்களை மறக்க முயன்றாலும் பிரியனின் தரப்பில் ஒரு நியாயமாவது இருக்கும் என்று மனம் அவனுக்காய் வாதிட்டாலும் அவன் அவளை விட்டுச் சென்றுவிட்டான் என்று எண்ணும் போதும் அதன்பின்னான நிகழ்வினை அவள் மனக்கண்ணில் கொண்டுவந்து அவன் மேல் இருக்கும் நல்லெண்ணத்தை சீண்டி பார்த்து அவள் காயங்களை கீறிவிட்டு சென்றதில் லேசாய் ஒரு கனப்பு தோன்றத்தான் செய்தது.

 

காலையில் எழுந்து குளித்தவள் ராம் எடுத்துக் கொடுத்திருந்த சேலையை அணிந்துக் கொண்டாள். முதல் நாளே அதற்கு ரவிக்கை எல்லாம் தைத்து வந்திருந்ததால் அதையே உடுத்திக் கொண்டாள்.

 

பிரியனுக்கு அவர்களின் திருமண நாளான இன்றைய நாள் நினைவிலிருக்குமா இருக்காதா என்று உள்ளம் அவ்வப்போது படபடத்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் தயாராகி அறையைவிட்டு வெளியில் வந்தாள்.

 

பிரியனின் அறைக்கதவு இன்னமும் திறக்கப்படாமலே இருக்கவும் மனதில் ஒரு ஏமாற்றம் தோன்றி மறைந்தது.

 

‘நீ ஏன் இதையெல்லாம் எதிர்பார்க்கிறாய்’ என்று அது அவளையே குற்றம் சாட்ட கதவை பூட்டிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டாள். இருவரிடமும் ஒரு சாவி உண்டென்பதால் எங்கு வெளியில் சென்றாலும் பூட்டியே செல்வர்.

 

காலை ஆறரை மணிக்கே அவள் கோவிலுக்கு வந்திருந்தாள். அர்ச்சனைக்கு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு ஓர் இனிய அதிர்ச்சி அங்கே காந்திருந்தது.

 

கோவிலில் கூட்டம் அதிகமில்லை, நேராய் முருகன் சன்னதியை நோக்கி சென்றவள் அர்ச்சனையை அய்யரிடம் கொடுத்துவிட்டு பெயர் சொல்லும் தருவாயில் மூச்சிரைக்க ஓடி வந்து அவளருகில் நின்றிருந்தான் பிரியன்.

 

“நீங்கஎதிர்த்தாப்புல நில்லுங்கோளேன்…” என்ற அய்யரை பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தவன் “ஒரே பேமிலி…” என்றுவிரல் நீட்டில் வதனாவையும் தன்னையும் சேர்த்து காண்பித்தான்.

 

“ஓ!! என்றவர்“சொல்லுங்கோ யார் பேருக்கு அர்ச்சனை??”

 

“நானே சொல்றேன்” என்றவன்“இசைப்பிரியா அவிட்ட நட்சத்திரம், வதனாபூர நட்சத்திரம்…” என்றுவிட்டு திரும்பி அவளைப்பார்க்க அவள் ‘என்ன’ என்பதான ஒரு பார்வை கொடுத்தாள்.

 

“அவ்வளவு தானே…” என்றுஅவர் உள்ளேப்போக“ஒரு நிமிஷம்” என்று நிறுத்தியவள் “பவளப்பிரியன் விசாக நட்சத்திரம்” என்று அவள் சொல்லவும் அவன்அகம் மகிழ்ச்சியில் துள்ளி முகத்தில் பளிரென்ற ஒளியை கொடுத்தது உண்மையே!!

 

சுற்றி வந்து கடவுளை தொழுது முடித்து ஓரிடத்தில் இருவருமாய் அமர்ந்தனர். ஏனோ இருவருக்குள்ளும் என்ன பேச எப்படி பேச என்ற தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

 

அமைதியை உடைத்து பிரியனே பேசினான் “தேங்க்ஸ்” என்று.

 

“எதுக்கு??”

 

“மறந்திருப்பியோன்னு நினைச்சேன்…” என்று அவன் முடிப்பதற்குள் “மறக்கறதும் விட்டுட்டு போறதும் என் வழக்கமில்லை…” என்று பட்டென்று பதில் கொடுத்தாள் அவள்.

 

வேண்டுமென்று அதை சொல்லியிருக்கவில்லை ஆனால் அவன் கேட்டதும் பதில் சொல்ல வேண்டி வேகமாய் அதை சொல்லி முடித்திருந்தாள்.

 

பிரியனின் முகம் இறுக ஒன்றும் சொல்லாமல் எழுந்திருந்தான். இரண்டு அடி எடுத்து நடந்து செல்ல ஆரம்பித்தவன் மீண்டும் அவள் இருப்பிடம் வந்து “வீட்டுக்கு தான் போறேன்…”

 

“அன்னைக்கு எங்க போக போறேன்னு முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருந்தா சொல்ல முடிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்லிட்டு தான் போயிருப்பேன்…”

 

“இத்தனை வருஷம் கழிச்சு அதை நீ சொல்லிக்காட்டுற மாதிரி நடந்திருக்காது… இப்படி நீ வலிக்க வலிக்க பேசி ரணப்படுத்திட்டே இருந்தா மனசு மரத்து போய்டும்… ஒரு நாள் மரணிச்சும் போய்டுவேன்… உனக்கும் ஒரு நாள் உண்மை தெரிய வரும் அன்னைக்கு நீ பேசினது எல்லாம் நினைச்சு நீ வருத்தப்படுவ…”

 

“அதுக்குள்ளே காலம் கடந்திருக்கும் வது… கொஞ்சம் கொஞ்சமா என்னை சாகடிச்சுடாத, இசைக்காகவாச்சும் வாழணும்ன்னு நினைக்கிறேன்…” என்று வலியோடு பேசிவிட்டு சென்றானவன்.

 

வதனாவிற்குள் அவன் பேசியது வருத்தத்தை கொடுத்தாலும் கடைசியில் அவன் இசைக்காக என்று சொன்ன போது ‘அப்போ எனக்காக வாழணும்ன்னு தோணலையா’ என்று தான் எண்ணினாள்.

 

மீண்டும் இருவருக்குள்ளும் ஓர் இடைவெளி அன்று முதல். ஒரே வீட்டில் இருந்தாலும் சேர்ந்தே பயணிக்கும் தண்டவாளம் போல் தானிருந்தனர் இருவரும்.

 

ராம் அழைத்திருந்தான் அவளுக்கு. “சொல்லுடா”

 

“நான்கொரியர் ஒண்ணு அனுப்பறேன்னு சொன்னேன்ல அது இன்னைக்கு தான் அனுப்பியிருக்கேன்… நாளைக்கு வந்திடும் உனக்கு, வந்ததும் சொல்லு…”

 

“கொரியரா அதான் போன வாரமே வந்திடுச்சே”

 

“போன வாரமா?? நான் எதுவும் அனுப்பலையே உனக்கு…”

 

“பொய் சொல்லாத ராம், ஒரு புடவை ஆன்லைன் பர்சேஸ் பண்ணி அனுப்பி இருந்தியே…”

 

“நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும் வதனா… நான் எதுவும் அனுப்பலை… அதை அனுப்பியவர் உனக்கு வேண்டியவரா இருக்கும், அவர்கிட்டே கேளு…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் அவன்.

 

‘பிரியனா… அவரா எனக்கு புடவை எடுத்து அனுப்பியிருப்பார்… ஆனா ஏன்?? எதுக்காக?? அப்படி கொடுக்கணும்ன்னா என்கிட்ட நேராவே கொடுத்திருக்கலாமே…’ என்று எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

எப்படி யோசித்தும் முடிவில் அது பிரியனின் செயல் என்றே எண்ண வைத்தது. தங்களின் திருமண நாளறிந்துஅவன் தான் வாங்கியிருக்கக் கூடும் என்றுணர்ந்ததும் கோவிலில்பேசியது அவனை எந்தளவிற்கு காயப்படுத்தியிருக்கும் என்று புரிந்தது.

 

‘எதற்காய் என்னைவிட்டுச் சென்றிருப்பார்… என்ன காரணமாய் இருக்கும்…’ என்று அடுக்கடுக்காய் எண்ணக் குமிழ்கள் உற்பத்தியானது அவளுள்.

 

தன் யோசனையிலே இருந்தவள் பிரியன் வீட்டிற்கு வந்ததையோ அவளை ஒரு பார்வை பார்த்து கடந்து சென்றதையோ உணரவேயில்லை.

 

எங்கிருந்து விசில் சத்தம் கேட்டு அவள் இயல்புக்கு வந்திருக்க சுற்றுமுற்றும் பார்த்தாள். சமையல்அறையில் இருந்து தான் மீண்டும் விசில் சத்தம் எழவும் வேகமாய் எழுந்து உள்ளே சென்றாள்.

 

“வந்துட்டீங்களா?? எப்போ வந்தீங்க?? ஏன் என்னை கூப்பிடலை??” என்று தன்னை மீறி அவனிடம் இயல்பாய் உரையாட அவன் அவளை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்ததோடு சரி ஒன்றும் சொல்லவில்லை.

 

“கேட்டுட்டே இருக்கேன்ல…” என்று அவனருகில் வந்து நின்றாள்.

 

“என்ன சொல்லணும்??” என்றான் நிதானமாய்.

 

“நான் உங்ககிட்ட தானே பேசிட்டு இருந்தேன்…”

 

“அப்படியா…”

 

“எதுக்கு இப்படி பேசறீங்க… இந்த வீட்டுல நாம ரெண்டு பேர் தானே இருக்கோம்… நாங்க உங்ககிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவேன்…”

 

“ஓ அப்படியா!!”

 

“என்னங்க கிண்டல் பண்றீங்களா…”

 

“நானா…”

 

“எதுக்கு இப்படி ஒரு மாதிரியா பேசறீங்க…”

 

“உண்மையாவே நீ என்னை தான் சொல்றியா… கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு… நீ தான் ஒரு மாதிரியா இருக்கியோன்னு எனக்கு சந்தேகம்… இந்த ஒரு வாரமாவும் ரெண்டு பேரும் ஒரே வீட்டில தான் இருக்கோம்…”

 

“அப்போ எல்லாம் எதுவும் பேசவேயில்லையே…”

 

“பேசலைன்னா பேசாமலே இருக்கணுமா… இல்லை நான் அப்படி தான் இருக்கணும்ன்னு நீங்க விரும்பறீங்களா…”

 

“நான் விரும்பினது எல்லாம் நடக்கப் போகுதா என்ன…”

 

“நீங்க விரும்பி தானே எனக்கு புடவை எடுத்து இருக்கீங்க… அதை உங்க கையால கொடுத்திருந்தா நான் வாங்கி இருக்க மாட்டேனா… இல்லைஎங்கநான் சந்தோசப்பட்டிருவேன்னுநினைச்சுதான் அப்படி அனுப்புனீங்களோ…”

 

அவள் பேச்சில் பிரியன் அப்படியே நின்றிருந்தான் ஒன்றும் புரியாமல்.“நீங்கஉடனே பெரிசா கற்பனை பண்ணிக்க வேண்டாம்… ஒரு புடவைக்காக நான் இறங்கி வந்து பேசறேன்னு… நான் அதுக்காக ஒண்ணும் வந்து பேசலை…”

 

“இனிமே எதுவாயிருந்தாலும் நேராவே சொல்லுங்க, செய்ங்க… அப்புறம்அன்னைக்கு நான் கோவில்ல வைச்சு பேசினது வேணுமின்னு செய்யலை… உங்களைகாயப்படுத்தணும்ன்னு நினைக்கலை…”

“என்னோட காயத்தோட மிச்சம் என்னை அப்படி பேச வைச்சுடுச்சு… இன்னொரு விஷயம்…” என்று நிறுத்தியவள் “இப்போ வரைக்கும் நீங்க என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லவேயில்லை”

 

“நானும் நீங்க சொல்லி தான் ஆகணும்ன்னு கேட்கவுமில்லை… ஏதாச்சும் காரணம் இருக்கலாம் நீங்களே சொல்லுவீங்கன்னு தான் பேசாமலே இருக்கேன்…”

 

“அன்னைக்கு சொன்னீங்க உண்மை தெரிஞ்சா நீ பேசினதுக்கு வருத்தப்படுவேன்னு… தெரிஞ்சா தான்னு இல்லை தெரியலைன்னாலும் நான் வருத்தப்படுவேன், அப்போ பேசினது தப்புன்னு இப்பவும் எனக்கு வருத்தமிருக்கு…”

 

“தெரியலை… நான்ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியலை… எனக்குள்ள எல்லாமே மரிச்சு போச்சுன்னு நினைச்சேன்… அது உள்ள நீறு பூத்த நெருப்பா புதைஞ்சு போயிருக்குன்னு இப்போ தான் புரியுது…”

 

“எதுவுமே மாறலை… எனக்குள்ள உங்க மேல வைச்ச நேசம் எதுவுமே மாறலை அப்படியே தான் இருக்கு… என்ன அதை அப்போ மறைக்காம காட்டினேன்… இப்போ அது முடியலை…”

 

“அதுக்கெல்லாம் காரணம் இந்த பத்து வருஷ இடைவெளி தான்… நான் மாறிடுவேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்… மாத்திக்க முயற்சி பண்றேன்… உங்க பக்க நியாயம்ன்னு ஒண்ணு இருக்கும் போது என்பக்கமும் ஒரு நியாயம் இருக்கு தானே… என்னோட வலியையும் மாத்த முடியாது தானே…”

 

“அப்போஎனக்கே எனக்குன்னு இருந்த ஒரே உறவு நீங்க மட்டும் தான்… அதுவும் இல்லைன்னு ஆனப்போ நான் எப்படி இருந்திருப்பேன்னு நினைச்சு பாருங்க…”

 

“நான் சரின்னு புரிய வைக்க இதெல்லாம் உங்ககிட்ட சொல்லலை… என்னமோ சொல்லணும்ன்னு தோணிச்சு… சொல்லிட்டேன், ரொம்ப வருஷம் கழிச்சு மனசுவிட்டு பேசினது இன்னைக்கு தான்…” என்றவள் கண் மூடி நிதானித்தாள்.

 

பின் விழி திறந்தவள் “எனக்கு கொஞ்சம் அவசர வேலையிருக்கு… நான் போயிட்டு லேட்டா தான் வருவேன்…” என்றுவிட்டு வெளியே கிளம்பிச் சென்றும் விட்டாள்.

 

பிரியனுக்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. பேசியது வதனா தானா என்று!! வந்தாள் அவளாய் பேசினாள் இப்போது சென்றும் விட்டாள்.

 

என்ன தான் சொல்ல வந்தாள், என்னை புரிந்து கொண்டாளா என்றெண்ணியவன் அவள் பேச்சை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தான்.

 

அவள் பேச்சின் சாராம்சம் ஒன்று மட்டுமே அது அவள் அவனை இன்னமும் மறக்கவில்லை என்பதே!!புயல் அடித்து ஓய்ந்தது போல் அவள் பேசி சென்றிருக்க அவன் மனதில் இப்போது தென்றல் அடித்தது.

சில மணி நேரம் கழித்தே அவன் இயல்பிற்கு வந்திருந்தான்.அலுவலகம் விட்டு வந்தபின்எங்கே கிளம்பி செல்கிறாள் என்பதை கூட கேட்காமல் முட்டாள்தனமாய் தன் யோசனையில் உழன்றிருக்கிறோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான் அவன்.

 

நேரம் பார்க்க அது இப்போது பதினொன்றை தொட்டிருந்தது. அவன் வீட்டிற்கு வந்த போதே மணி ஆறு இருக்கும், அதன்பின் தான் இருவருக்கும் அந்த பேச்சு வார்த்தை நடந்தது, பின் அவள் கிளம்பிச் சென்றிருந்தாள்.

 

இப்போதுஅவளுக்கு போன் செய்யலாமா வேண்டாமா என்ற தோன்ற முடிவாய் அவள் எண்ணுக்கு அழைத்துவிட்டிருந்தான்.

 

அழைப்பு சென்றுக் கொண்டிருக்க அப்புறம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் லேசாய் ஒரு பதற்றம் எழுந்தது அவனுக்குள்.

 

சரியாய் ராம் அந்நேரம் அழைத்திருந்தான் அவனுக்கு. “சொல்லு ராம்…”

 

“நீ எங்க இருக்க வல்லா??”

 

“என்னாச்சு ராம்?? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கே?? நான் வீட்டில தான் இருக்கேன்…”

 

“வதனா??”

“அவ… அவ வெளிய போயிருக்கா ராம்… என்னாச்சு எதுவும் பிரச்சனையா??”

 

“நீ முதல்ல டிவியை பாரு… பார்த்திட்டு போன் பண்ணு, இல்லன்னா நான் கொஞ்ச நேரம் கழிச்சு பண்றேன்…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் அவன்.

 

அவசரமாய் ரிமோட்டை தேடி டிவியை ஆன் செய்தான். “டிவி பார்க்க சொன்னான், எந்த சேனல்ன்னு சொல்லவே இல்லையே… நியூஸ் சேனலா தான் இருக்கும்…” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு சேனலை மாற்றினான்.

 

ராம் ஏன் டிவியை பார்க்கச் சொன்னான் என்று அப்போது புரிந்தது அவனுக்கு. வதனா சற்று முன் கிளம்பிச் சென்றது சிலை கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு என்று.

 

பிரவீன் கைது செய்யப்பட்டிருந்தான் அவ்வழக்கில். அக்கும்பல்கடத்தலில் ஈடுப்பட்டிருக்கும் போதே அவர்களை சுற்றி வளைத்து பிடித்திருந்தனர்.

 

வதனா இதில் நேரடியாகவே களத்தில் இறங்கி அவனை பிடித்திருக்கிறாள் என்று செய்தி சேனல்கள் அவளை பாராட்டிக் கொண்டிருந்தன.

 

கைது செய்யப்பட்டு அழைத்துச்சென்ற பிரவீன் வதனாவை வன்மத்துடன் பார்த்துச் செல்வதை கண்டான்பிரியன். அவன் பார்வையே எதுவும் செய்வேன் என்று சொல்லாமல் சொன்னது.

இனி சற்று கவனத்துடனே இருக்க வேண்டும் என்று பிரியன் எண்ணியிருக்க எவ்வளவு தான் முன் எச்சரிக்கையாக இருந்தாலும் நடப்பது நடந்தே தான் தீரும் என்பது போல் மறு வாரத்தில் ஓர் நாள் சரண் காணாமல் போனான்…

 

ஓரு வார்த்தையில்

உயிர்வலி கொடுத்தாய்!!

உள்ளம் உரைத்து

உயிர்வரை இனிக்க செய்தாய்!!

 

அன்பைமறந்திருப்பாய்

என்றெண்ணி நானிருக்க

அன்பே மறப்பேனா

என்றாய்!!

 

தேவையா(இனி) நீ

என்றுரைப்பாய்

என்றேநானிருக்க

என்தேவதை நீ

என்றேதான்

நிருப்பித்தாய்!!

எனதன்பே!!