Advertisement

அத்தியாயம் – 24

 

“இது என்ன இடம்?? உனக்கு தெரிஞ்ச இடமா??” என்று கேள்வி கேட்டாள் வதனா.

 

“ஆமா தெரிஞ்ச இடம் தான்… இனிமே நீ இங்க தான் இருக்க போறே?? இங்கவிட உனக்கு வேற எங்கயும் பாதுகாப்பு வந்திட முடியாது…” என்று சொன்னது ராமே தான்.

 

“டேய் அப்போ இங்க நாம வந்தது அதுக்கு தானா… எனக்கு தனியா என்ன பாதுக்காப்பு வேண்டி கிடக்கு… என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்…”

 

“நான் ஒண்ணும் அதே பழைய வதனா இல்லை…” என்று முறைத்தாள் அவனை.

 

“தெரியும், அதனால தான் இந்த ஏற்பாடு…” என்றவன் திறந்திருந்த கதவின் வழியே உள்ளே சென்றான்.

 

“டேய் நிஜமா சொல்லு இது யார் வீடு. கதவு வேற திறந்திருக்கு நீ பாட்டுக்கு உள்ள நுழையற… வீட்டை பார்த்தா புதுசா வேற தெரியுது… இந்த வீட்டை வாங்கிட்டியாடா…”

 

“தெரிஞ்ச வீடு அவ்வளவு தான்… நான் ஒண்ணும் வீட்டை வாங்கலை… ஓனர் தான் வாங்கியிருக்கார்…” என்றான்.

 

“ஹ்ம்ம்…”

“போ… போய் கிச்சன்ல பால் காய்ச்சு… சுகு ஹெல்ப் பண்ணு…” என்று வெளியில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான் ராம்.

 

“ஹேய் என்ன விளையாடுறியா நீ??” என்றாள் வதனா.

 

“விளையாட நான் என்ன ஸ்கூல் படிக்கிற பையனா… என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு… வீணா வம்பை கட்டி இழுக்கறது… இப்போ உன்னை பாதுகாக்கறது ஒரு வேலையாகிட்டு”

 

“நான் தான் வேணாம் சொல்றேன்ல…”

 

“முதல்ல நான் சொன்னதை நீ செய்…” என்றவன் அதன் பின் அவள் புறம் திரும்பவேயில்லை.

 

குழந்தைகளிடம் தன் கவனம் செலுத்தினான். சுகுணா மற்றவளின் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

“இவன் ஏன் இப்படி பண்ணுறான் சுகுணா??” என்று சலித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

 

“அவரைப் பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல… உங்க நல்லதுக்கு தான் செய்வார்…” என்றாள்.

 

வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.

 

எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை… கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்… அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.

 

மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள். “இதை கிளாஸ்ல ஊத்தி எடுத்திட்டு போவோம்…” என்ற சுகுணா அதை அங்கிருந்த கோப்பைகளில் நிரப்பினாள்.

 

“எதுக்கு இத்தனை கிளாஸ்ல ஊத்தறீங்க சுகுணா… நாம தானே, பசங்க குடிக்க மாட்டாங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “எடுத்திட்டு போங்க…” என்று டிரேயை அவளிடம் நீட்டினாள்.

 

வெளியில் வந்த பின்னே தான் தெரிந்தது அது யார் வீடு என்று. ராமின் அருகில் பிரியன் அமர்ந்திருந்தான். முகம் கடுக்க அவர்களை நோக்கி அவள் வரவும் “அப்பா நீங்க எப்போ வந்தீங்க??” என்று இசை ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டாள்.

 

‘அப்பாவா… இது எப்போ நடந்துச்சு??’ என்று ரீதியில் பார்த்த வதனா இப்போது ராமை முறைத்திருந்தாள்.

 

“உன் பொண்டாட்டி எதுக்குடா என்னை முறைக்கிறா??” என்று அவனருகில் அமர்ந்திருந்தவனை இடித்தான்.

 

“அதை நீ அவகிட்ட தான் கேட்கணும்…” என்று பதில் கொடுத்தான் பிரியன்.

வேகமாய் வந்து கையில் இருந்ததை லொட்டென்ற சத்தத்துடன் அங்கிருந்த டிபாயின் மீது வைத்தவள் “இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தே??”

 

“வேற எங்க போயிருக்கணும்??” பேசியது பிரியன்.

 

“நான் உன்கிட்ட கேட்கலை…”

 

“நான் உன்கிட்ட தான் சொன்னேன்…”

 

“ராம்…”

 

“எனக்கு காது கேட்குது… எதுக்கு இப்படி கத்துறே??” என்றானவன்.

 

“நான் கேட்டதுக்கு பதில் வரலை உன்கிட்ட இருந்து…”

 

“என்ன பதில் சொல்லணும்… நீ செஞ்சு வைச்சிருக்க வேலைக்கு இந்த இடம் தான் உனக்கு பாதுகாப்பு… வேற எங்கயும் உன்னைவிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது…”

 

“நான் கேட்டனா உன்னை…”

 

“நீ கேட்டு தான் நான் இதுவரைக்கும் உனக்கு எதுவும் செஞ்சிருக்கேனா…”

 

“டேய்…” என்று பல்லைக்கடித்தாள் அவள்.

 

‘இவன் அடங்க மாட்டான்…’ என்று எண்ணியவள் இசையையும் பிரியனையும் கண்களால் சுட்டிக்காட்டி “இது எப்போ நடந்துச்சு?? நீ யாருக்கு பிரண்டு??” என்றாள்.

 

“இவ்வளவு வருஷம் கழிச்சு உனக்கு என்ன சந்தேகம்??”

 

“கேட்டதுக்கு பதில் சொல்லாம அதுக்கு ஒரு கேள்வி கேட்டு வைப்பியா நீ??”

 

“உனக்கு நல்லது மட்டும் தான் செய்வேன்னு நம்பு… என்னால உனக்கு கெட்டது எதுவும் இதுவரை நடந்ததில்லை…”

 

“இனிமே நடந்திடும் நான் இங்க இருந்தா…” என்று கோபமாய் கத்தினாள்.

 

“உன் வாழ்க்கையில எவ்வளவோ நடந்து முடிஞ்சு போச்சு… இனி நடக்க என்ன இருக்கு, எல்லாத்தையும் சுலபமா கடந்து வந்திட்ட தானே…”

 

“இவனோட இருக்கறது என்ன அவ்வளவு கஷ்டமா உனக்கு… இல்லை நீ பயப்படுறியா தோத்து போயிடுவோமோன்னு…” என்று அவளை சீண்டி விட்டான்.

 

“நான் ஏன் தோக்கணும்?? அதுவும் இவர்கிட்ட!!”

 

“அப்போ இங்கவே இரு… பிரவீன் இங்க வரமாட்டான், வந்தா என்ன நடக்கும்ன்னு அவனுக்கு தெரியும்…”

“போயும் போயும் அந்த பிள்ளைப்பூச்சி பிரவீன்க்காக தான் என்னை இங்க இருக்க வைச்சியா…”

 

“அவன் பிள்ளைப்பூச்சியா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்… அவனால தான் உன் வாழ்க்கையில நடந்த எல்லா மாற்றமும்… அதை மறந்திடாதே…”

 

“அதுக்காகவே நான் அவனை கொல்லணும்ன்னு இருக்கேன்…” என்று ஆங்காரமாய் சொன்னாள்.

 

“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… நாங்க வந்த வேலை முடிஞ்சுது கிளம்பறோம்… இசை இந்த வருஷம் மட்டும் எங்களோட இருப்பா, அடுத்த வருஷம் அவ உங்ககூட தான்…” என்றான் ராம்.

 

இவன் என்ன எல்லாமே முடிவெடுத்திட்டு வந்து என்கிட்ட சொல்றான்… பேசுறது ராம் தானா இல்லை இவன் தான் பேச வைக்கிறானா என்று அவனருகே ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருந்த பிரியனை பார்த்தாள்.

 

பிரியன் எனக்கும் இதற்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் தான் அமர்ந்திருந்தான்.

 

வதனா சோர்ந்து போய் அருகிருந்த இருக்கையில் விழுந்தாள். சுகுணாவை திரும்பி நீ சொல்ல மாட்டியா என்பது போல் பார்த்தாள்.

 

மற்றவளோ எல்லாம் நன்மைக்கே என்ற ரீதியில் கண்களை மூடி திறந்தாள். ‘இவனுடன் தனியாக நான் எப்படியிருப்பேன்’ என்ற பெருங்கவலை வதனாவிற்குள். ‘இதற்கு முன் இருந்ததில்லையா’ என்ற மனசாட்சியின் குத்தலுடன்.

 

ராம் மற்றும் சுகுணா குழந்தைகளுடன் உடனேயே கிளம்பிவிட்டிருந்தனர். அவர்களுக்கு அடுத்த பிளைட்டில் டிக்கெட் பதிந்திருந்ததாலும் ராமிற்கு முக்கிய வேலை இருப்பதாலும் தான் அவ்வளவு அவசரம்.

 

கிளம்புமுன் பிரியனிடம் வந்தவன் “என்னடா உன் பொண்டாட்டி என்னை இந்த முறை முறைக்கிறா… நியாயமா உன்னை தானே முறைக்கணும்…”

 

“நான் என்ன அவளை முறைக்க வேணாம்ன்னா சொன்னேன்… எங்க நமக்கு அந்த கொடுப்பினை எல்லாம்…” என்று சலிப்பாய் சொன்னான் பிரியன்.

 

“நான் கிளம்பினதும் உன்னை தான் முறைப்பா, அப்போ என்ன பண்ணணும்ன்னு நீயே முடிவு பண்ணு ராசா…”

 

“நீ என்கிட்டே இப்படி நின்னு பேசிட்டு இருக்கறதுக்கே உனக்கு பூசை பண்ணுவா நீ கிளம்பு ராம்…”

 

“அதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்…” என்று அவன் சொல்லும் போதே அவர்களை நோக்கி வந்தாள் வதனா.

 

“உனக்கு இங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு…” என்று மீண்டும் தன் முறைப்பை ஆரம்பித்தாள்.

 

“உனக்கு எதுக்கு எங்களை பார்த்து பொறாமை” என்று கேட்டு வைத்தான் ராம்.

 

“லூசு மாதிரி ஏன் உளர்ற?? எனக்கு என்ன பொறாமை உங்களை பார்த்து…”

 

“நானும் வல்லாவும் பிரண்டாகிட்டோம் அதான் உனக்கு பொறுக்கலை…”

 

“மண்ணாங்கட்டி…”

 

“அப்படின்னா…”

 

“உன் மண்டையில களிமண்ணு…”

 

“இல்லைன்னா உன் கூட பிரண்டா இருக்க முடியுமா…” என்று ராம் பதிலுக்கு அவளை வார பிரியன் வாய்விட்டு சிரித்தான்.

 

“எதுக்கு இந்த சிரிப்பு??” என்று சிடுசிடுத்தாள்.

 

பிரியனோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு “என்கிட்டயா பேசினே??” என்று சொன்ன பின்னே தான் அவனிடம் பேசினோம் என்பது புரிய அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள் வதனா.

 

“சரி வல்லா பார்த்துக்கோ அவளை… எப்படியோ உங்களை ஒண்ணா ஒரே இடத்துல இருக்க வைக்க என்னால முடிஞ்சதை செஞ்சிட்டேன்… இனி நீங்க பேசி சரியாகணும்… நான் கிளம்பறேன்” என்று நண்பனிடம் சொல்லி கிளம்பியிருந்தான் ராம்.

 

____________________

 

“என்ன தான் நடக்குது??” என்று அந்த வீடே அதிர கத்திக்கொண்டிருந்தார் வி.கே.பி.

 

“என்னப்பா என்னாச்சு??” என்று வந்து நின்றிருந்தார் அவரின் இளைய மகன் குலசேகரன்.

 

“அதை தானே நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்… அவ யாரோட ஒண்ணா இருக்கக் கூடாதுன்னு நினைச்சு பிரிச்சமோ அவ திரும்பவும் அவனோட”

 

“நீங்கலாம் என்னத்தை கிழிக்கறீங்க… சாஸ்திரி சொன்னது எல்லாம் மறந்து போச்சா உங்களுக்கு… அவ இங்க வரலை… இனி இந்த குடும்பத்துல ஒரு புல் பூண்டு கூட முளைக்காது…”

 

“என்ன பேரு சம்பாதிச்சு என்ன இருக்கு… இவ்வளவு சொத்து இருக்கு அதை ஆள யாருமில்லை…” என்று கர்ஜித்தார்.

 

“இந்தர்…” என்று ஆரம்பித்த குலசேகரன் பாதியில் நிறுத்திவிட்டார்.

 

“என்ன சொன்னான் அவன்??”

 

“அவன்கிட்ட கேட்கலாமே??”

“அது எனக்கு தெரியும்… இதுக்கு யார் காரணம்ன்னு சொன்னானா அவன்…”

 

“இல்லையே…” என்று குலசேகரன் சொல்லவும் வி.கே.பியின் முகம் கோபத்தில் சிவந்தது.

 

அதைக்கண்டதும் சட்டென்று தன் கைபேசி எடுத்து இந்தருக்கு அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டார் அவர்.

 

“ஹலோ குலசேகரன் பேசறேன் இந்தர்…”

 

“தெரியுது சொல்லுங்க…” என்றான் அவன் மறுமுனையில் விட்டேத்தியான குரலில்.

 

“அவங்க எப்படி ஒண்ணா ஒரே வீட்டுல…”

 

“ராம்…”

 

“என்ன ராமா?? அவன் எப்படி??”

 

“எப்படின்னு என்னை கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும்… காரணம் யாருன்னு சொல்லியாச்சுல… சும்மா ஒண்ணொண்ணா கேட்டுட்டே இருப்பீங்களா”

 

இப்போது வி.கே.பி கத்தினார். “ஆமாடா நீ அதுக்கு தானே இருக்கே?? அதைவிட வேற என்ன வேலை உனக்கிருக்கு… நீங்க அங்க போனதே இதுக்கு தான்…” என்றார்.

“யார் சொன்னாங்க அப்படின்னு??”

 

“யார் வந்து சொல்லணும் உனக்கு… நான் தானே உன்னை அனுப்பி வைச்சேன், அப்புறம் என்ன சந்தேகம் உனக்கு…”

 

“நீங்க அனுப்பினா நான் போய்டுவனா… உங்க பேச்சை கேட்டு நான் இங்க வந்தேன்னு நினைச்சீங்களா… எங்கம்மா பேச்சை கேட்டு தான் இங்க வந்தேன்…”

 

“உங்கம்மாகிட்ட உன்னை அனுப்பச் சொல்லி சொன்னதே நான் தான்டா…” என்றார் அப்பெரியவர்.

 

“அதுக்கே உன்னை ஒரு வழியாக்கணும்ன்னு தான் இருக்கேன்… அவங்க உன் பேச்சை கேட்காம என்னைக்கு என் பேச்சை கேட்கறாங்களோ அன்னைக்கு இருக்கு உங்க எல்லாருக்கும் கச்சேரி…”

 

“அதுவரைக்கும் எவ்வளவு ஆடணுமோ ஆடித்தீர்த்துக்கோங்க…” என்று பதிலுக்கு அலட்சியமாய் பேசி போனை வைத்திருந்தான் இந்தர்.

 

“இவனுக்கு எங்க இருந்து இவ்வளவு திமிரும் அலட்சியமும் வந்துச்சு… முதல்ல இவனை கொல்லணும்” என்று பல்லைக்கடித்தார் பெரியவர்.

 

குலசேகரன் மனதிலோ ‘உங்க குணத்தை கொண்டு பிறந்தவன் அலட்சியமா பேசாம வேற எப்படி பேசுவான்… என்ன அவன் நல்லவிதமா யோசிச்சு பேசறவன்’

‘நீங்க தப்பிதமா யோசிச்சு அதையே நல்லதுன்னு யோசிச்சு பேசறவர்’ என்று எண்ணிக்கொண்டார்.

 

“அந்த ராம் ஒழுங்கா தானே இருந்தான்… திடிர்னு என்னாச்சு அவனுக்கு… எதுக்கு இப்படி மாமா வேலை பார்த்திட்டு திரியறான்…”

 

“அவளுக்கு உதவி பண்ணதுனால தான் அவன் நல்லாவே இருந்தான்… இனிமே அப்படி நடக்காது…” என்றார் அவர்.

 

“அப்பா அவன் இல்லைன்னா இன்னைக்கு அந்த பொண்ணு இல்லைப்பா… நெறைய ஹெல்ப் பண்ணியிருக்கான் அவளுக்கு”

 

“அதுக்காக தான் அவன் இவ்வளவு நாள் நல்லா இருந்ததே… எப்போ இப்படி ஒரு வேலை செஞ்சானோ இனிமே அவன் நல்லாவே இருக்கக் கூடாது…” என்றார் அவர்.

 

“என்னப்பா சொல்றீங்க??”

 

“அவ தொழிலை முடக்குங்க முதல்ல… அடிப்பட்டா தான் தப்பு செய்ய மாட்டான்…” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

 

அவர் பேச்சை உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த வி.கே.பியின் மூத்த மருமகள் சந்திரசேகரனின் மனைவி லலிதாவோ ‘என்ன தான் கீழ விழுந்தாலும் இவங்க மட்டும் தப்பு தானே பண்ணிட்டு இருக்காங்க’ என்று ஆற்றாமையுடன் நினைத்தார்.

 

கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்த தன் கணவரை நோக்கி “மாமா ஏன் இப்படி தப்பு மேல தப்பு செஞ்சுட்டு இருக்காங்க…”

 

“இன்னும் என்ன மிச்சம் மீதி இருக்கு இந்த குடும்பத்துல இழக்கறதுக்கு… ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளையை வாரிக் கொடுத்திட்டேன்…”

 

“உங்க தம்பிகளோட பிள்ளைங்களையும் சேர்த்தா மொத்தம் ஏழு பேரை வாரிக் கொடுத்தது தான் மிச்சம்…”

 

“யாருக்கும் ஒத்த வாரிசு இல்லாம நிக்கறோம். ஏதோ முன் ஜென்ம புண்ணியம் போல உங்களுக்குன்னு ஒரு மக இருக்கா…”

 

“அவளை வேணாம்ன்னு சொல்றதா இருந்தா நான் தான் சொல்லணும். இவர் இன்னைக்கு வரைக்கும் அந்த புள்ளையை கூட்டிட்டு வர்றத்துக்கு வழியை காணோம்”

 

“அந்த புள்ளை என்ன ஜாதியா இருந்தா என்ன… தப்பு பண்ண உங்களை மட்டும் உங்கப்பா ஒதுக்கி வைக்கலை… ஆனா அந்த பொண்ணோட அம்மாவை ஒதுக்கி ஏன் அந்த பொண்ணையும் இன்னைக்கு வரைக்கும் ஒதுக்கி தான் வைச்சிருக்கார்”

 

“அவருக்கு இன்னும் ஜாதி வெறி பிடிச்சு ஏன் தான் ஆட்டுதோ தெரியலையே”

“இந்த குடும்பத்துக்குன்னு இப்போ இருக்கற ஒரே வாரிசையும் கூட்டிட்டு வராம வெட்டி நியாயம் பேசிட்டு இருக்காரே” என்று அவர் அழுது புலம்ப சந்திரசேகரன் ஒரு இயலாமையுடன் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.

____________________

 

ஒரு வாரமாய் ராமிடமிருந்து போனோ வேறு தகவலோ எதுவுமில்லை. தினமும் பேசும் சுகுணாவும் கூட பேசியிருக்கவில்லை.

 

வதனாவிற்கு மனம் கிடந்து அடித்துக்கொண்டது. அவள் போன் செய்த போதும் அவன் எடுத்திருக்கவில்லை. பிரியனும் அவனுக்கு போன் செய்து களைத்து தான் போயிருந்தான்.

 

வதனா ஒரு வழியாய் சுகுணாவிடம் பேச முயற்சிக்க அவளும் சாதாரணம் பேசி விரைவாகவே போனை வைத்துவிட்டாள்.

 

“என்னாச்சு சுகுணா போன் எடுத்தாங்களா??” என்ற கேட்ட பிரியனிடம் ஒன்றும் சொல்லாது அமர்ந்திருந்தாள் வதனா.

 

“உன்கிட்ட தான் கேட்கறேன், ராம்க்கு போன் பண்ணா பிசின்னு வருது, இல்லைன்னா ஸ்விட்ச் ஆப்ன்னு வருது… சுகுணாகிட்ட தானே இப்போ பேசிட்டு இருந்தே… என்ன சொன்னாங்க??” என்றான் மீண்டும்.

 

“ஒண்ணும் சொல்லலை… ரெண்டு வார்த்தை கூட தொடர்ந்து பேசலை வைச்சுட்டாங்க…”

“என்னன்னு கேட்டியா இல்லையா??”

 

“என்னைவிட உனக்கு தான் அக்கறையா அவங்க மேல…”

 

“நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற??”

 

“பின்ன நான் எதுவும் விசாரிக்காத மாதிரி என்னைய குற்றம் சொல்ற மாதிரி கேட்கறே…” என்றாள் அவள்.

 

“உன்கிட்ட பேசறது வேஸ்ட்” என்றவன் தன் மடிகணினியுடன் அமர்ந்திருந்தான் இப்போது. அவசரமாய் அவன் விரல்கள் அதில் எதையோ தட்டிக் கொண்டிருந்தது.

 

அடுத்த இருபது நிமிடத்தில் “நான் ஹைதராபாத் கிளம்பறேன்… நைட் பிளைட் எனக்கு… நீ பார்த்து கவனமா இருந்துக்கோ…” என்று சொல்லிவிட்டு எழுந்து அவனறைக்கு சென்றுவிட்டான்.

 

அவன் பெட்டி எடுத்து உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைவாயிலில் நிழலாடியது.

 

“என்ன புதுசா அவன் மேல உனக்கு அக்கறை??”

 

அவன் பதில் சொல்லவில்லை தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

 

“உங்ககிட்ட தானே கேட்கறேன்??”

 

“ஆமா கேட்டே?? ஆனா நான் உனக்கு பதில் சொல்லணும்ன்னு என்ன அவசியம்… உன்னை கேள்வி கேட்டா நீ எனக்கு பதில் சொன்னியா…”

 

“பழிக்கு பழியா…”

 

“அப்படி ஒரு விஷயம் செய்யணும்ன்னு நான் எப்பவும் நினைச்சதில்லை. என்னோட வலியை உனக்கு புரிய வைக்க முயற்சி பண்ணேன் அவ்வளவு தான்…”

 

“இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை…”

 

“ஆமா அவன் மேல அக்கறை தான்… அதுல உனக்கென்ன கஷ்டம்…”

 

“புதுசா என்னன்னு தான் கேட்கறேன்… அவன் என்னமோ உனக்குன்னா உருகறான் நீ அவனுக்காக பதறுற?? ஓவரா பண்ணுறீங்க…”

 

“சரி இருந்திட்டு போகட்டுமே…” என்றுவிட்டு தன் வேலையில் கவனமானான்.

 

அடுத்த அரைமணியில் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான். “இங்க உனக்கு எந்த பிரச்சனையும் வராது. இந்த இடம் பிரவீன்க்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை…”

 

“வேற யாரும் கூட இங்க வரமாட்டாங்க… உனக்கு பயமாயிருந்தா காலையில வேலைக்கு வர்றவங்களை துணைக்கு கூப்பிட்டுக்கோ…”

“எதுவானாலும் எனக்கு ஒரு போன் பண்ணு… நீ பண்ண மாட்டே தான் இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை… இது தான் என்னோட போன் நம்பர்…” என்று ஒரு கார்டை அவளிடம் நீட்டினான்.

 

“ஆமா கடமை… புதுசா எங்க இருந்து வந்துச்சு இந்த கடமை எல்லாம்… கடமையை மறந்திட்டு போனவரு புதுசு புதுசா பேசிகிட்டு இருக்கார்” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

அவன் காதிலும் விழத்தான் செய்தது. எதையும் கண்டுக்கொள்ளவில்லை அவன் நீட்டியிருந்த கார்டை அவள் இன்னமும் வாங்காமலிருக்க அருகிருந்த மேசையில் வைத்தான்.

 

“இங்க வைக்கறேன்… தேவைப்பட்டா கால் பண்ணு, நான் கிளம்பறேன்…” என்றுவிட்டு வாயில் வரை சென்றவன் ஒரு நிமிடம் நின்று அவள் முகம் பார்த்தான்.

 

“கடமை பற்றிய அக்கறை எனக்கு எப்பவுமிருக்கு… ஒரு நாள் என்னை நீ புரிஞ்சுக்குவ, அன்னைக்கு தெரியும் கடமைன்னா என்னா உரிமைன்னா என்னன்னு…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

 

அவனின் பேச்சு அவளுக்கு புரியாததாக இருந்தாலும் ஏனோ உள்ளே ஒரு இதம் பரவியது அவளுக்குள். அவன் ராமை கிளம்பிப் பார்க்க சென்றதும் அவள் மனதிற்கு நிம்மதி தான்.

 

அவளால் தான் உடனே கிளம்ப முடியாத சூழல் புது வேலை புது இடம் இப்போது புதிதாய் வேறு பிரச்சனைகள் என்று அவள் அதிலிருந்து உடனே வெளியே வரமுடியவில்லை.

 

ராம் எப்போதும் இப்படி இருக்க மாட்டான். அதனாலேயே அவளுக்கு அவனைப்பற்றிய கவலை அரித்தது. பிரியன் கிளம்பிச் சென்றதும் நல்லதே என்று தோன்றியது.

 

உள்ளே வந்து அவன் வைத்துச்சென்ற கார்டை எடுத்து அவன் எண்ணை அவள் கைபேசியில் பதிவு செய்தாள், கார்டையும் தன் பையில் பத்திரப்படுத்தினாள்.

 

பிரியன் விமானம் ஏறி அமர்ந்திருந்தான் இப்போது. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஹைதராபாத்தில் இறங்கியிருந்தவன் அரைமணி நேரத்தில் ராமின் வீட்டை அடைந்திருந்தான்.

 

அவன் அடிக்கடி வருகிறான் என்பதால் செக்யூரிட்டியூம் எந்த கேள்வியும் கேட்காமல் அவனை உள்ளே அனுப்பினார்.

 

உள்ளே அழைத்து சுகுணாவிடம் அவன் வரவைப்பற்றி சொன்னார். சுகுணா வாசலுக்கே ஓடிவந்துவிட்டாள். அவனை அந்நேரம் அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பது அவள் முகத்தில் தோன்ற உணர்வுகளில் இருந்தே புரிந்தது அவனுக்கு.

 

“வாங்க அண்ணய்யா”

“ராம் இல்லையா??” என்றதும் அவள் முகத்தில் கண நேரத்தில் வந்து போன கவலையின் சாயலை கண்டுக்கொண்டான்.

 

“ஆபீஸ்ல இருந்து இன்னும் வரலை…”

 

“ஆபீஸ் எங்க இருக்கு??”

 

“எதுக்கு அண்ணய்யா?? நீங்க ரெஸ்ட் எடுங்க அவர்க்கு போன் பண்ணுறேன், வந்திடுவாரு…”

 

“எத்தனை நாளா அவன் வீட்டுக்கு வரலை??” என்றான் பிரியன் பார்வையில் கூர்மையை தேக்கி.

 

சட்டென்று அவள் கண்களில் நீர் நிறைந்து போனது கண்டுக்கொண்டான் என்று. இரண்டு விரலை நீட்டிக் காட்டினாள்.

 

“என்ன பிரச்சனை??”

 

“ஆபீஸ் ஏதோ பெரிய பிரச்சனை?? நெறைய லாஸ்… எதனால என்னன்னு எனக்கு தெரியலை… அது வேலையா தான் அலைஞ்சுட்டு இருக்கார்… வீட்டுக்கே வரலை, ஆபீஸ்லவே இருக்கார்…” என்றாள் உடைந்த குரலில்.

 

“அட்ரஸ் கொடும்மா நான் ஆபீஸ் போய் பார்க்கறேன்…”

 

“நீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு போய் பார்க்கலாம்…”

 

“இல்லைம்மா நான் அவனைப் பார்க்க தான் வந்தேன்… உடனே கிளம்பறேன்…” என்று நின்றான்.

 

அவள் அங்கிருந்த டிரைவரை அழைத்து பிரியனை ராமின் அலுவலகத்தில் விட்டு வரச்சொன்னாள்.

 

“அண்ணய்யா சாப்பிட்டு போகலாமே??”

 

“ராம் சாப்பிட்டானா இல்லையா தெரியலை… நான் அவனை பார்த்துக்கறேன், நீங்க கவலைப்படாம சாப்பிட்டுங்க… சரியா எல்லாரும் சாப்பிட்டு இருக்கணும், முக்கியமா உனக்கு தான்மா சொல்றேன்” என்றுவிட்டு அவன் காரில் ஏறி அமர்ந்தான்.

 

அரைமணி நேர பயணத்தில் ராமின் அலுவலகம் வந்திருந்தது. “ராவ் கிரானைட்ஸ்”க்குள் கார் சென்று நின்றது.

 

வீட்டில் இருந்து சுகுணா போன் செய்திருப்பாள் போலும் ராம் வெளியே வந்திருந்தான். பிரியனை கண்டதும் அவன் பார்வையில் தெரிந்தது நிம்மதியா இல்லை ஆறுதலா தெரியவில்லை.

 

நிச்சயம் அவன் வரவு மற்றவனை திருப்திப்படுத்தியது. “வா வல்லா…”

 

பிரியனும் ஒன்றும் சொல்லாமல் அவனுடனே சென்றான். அவன் அறைக்குள் சென்று அங்கிருந்த சோபாவில் அவனை அமரச் சொன்னவன் தானும் அருகே அமர்ந்திருந்தான்.

முகத்தில் ஒரு சோர்வு, அயர்ச்சி எல்லாம் தெரிந்தது. பிரியன் அவனையே அளவெடுத்துக் கொண்டிருந்தான்.

 

“சொல்லு ராம் என்னாச்சு?? என்ன பிரச்சனை இங்க??”

 

ராம் பெரிதாய் பிகு எல்லாம் செய்யவில்லை. இரண்டு நாளாய் அழுந்திய பாரம் கொட்ட ஆரம்பித்தான். “ஹெவி லாஸ் வல்லா… அன்எக்ஸ்பெக்ட்டட் இப்படி நடக்கும்ன்னு நினைக்கவே முடியாத அடி”

 

“இரண்டு நாள் முன்னாடி குடவுன்ல இருந்த கிரானைட்ஸ் எல்லாம் விரிசல் விட்டிருக்கு. ஒண்ணு கூட தேறலை, சப்ளையர்ஸ்க்கு டெலிவெரி பண்ண வேண்டிய ஐஞ்சு கோடி சரக்கு அது மட்டுமில்லாம ஸ்டாக் வைச்சிருந்த இரண்டு கோடி சரக்கு எல்லாமே போச்சு”

 

“என்ன… என்ன சொல்ற ராம்… எப்படி நடந்துச்சு… ஒரு சத்தம் கூட கேட்கலை… செக்யூரிட்டி இல்லையா யாருமே பார்க்கலையா??”

 

“சத்தமே வரலை வல்லா… வைச்சுட்டு போன கிரானைட் கல்லு எல்லாம் அப்படியே தான் இருக்கு. கிட்ட போய் பார்க்கும் போது தான் அதோட விரிசல் எல்லாம் தெரியும்…”

 

“நான் சிசிடிவி கூட செக் பண்ணிட்டேன்… ஒண்ணுமே கண்டுப்பிடிக்க முடியலை… நிச்சயம் ஏதோ சதி வேலைன்னு தெரியுது… ஆனா ஒரு க்ளு இல்லை…”

 

“இன்சூரன்ஸ் கூட கிளைம் பண்ண முடியாது… என்ன பண்றதுன்னு புரியலை… நானும் தெரிஞ்சும் தெரியாமலும் நெறைய விசாரிச்சுட்டேன்… நோ ஐடியா…” என்று வருத்தமாய் உரைத்தான் அவன்.

 

“ராம் அந்த சிசிடிவி வீடியோஸ் எல்லாம் நான் பார்க்கலாமா…”

 

“ஹ்ம்ம் பாரு வல்லா…” என்றவன் அங்கிருந்த மேஜையின் மீதிருந்த அவன் மடிகணினியை எடுத்து வந்து எதையோ தட்டி அவனிடம் கொடுத்திருந்தான்.

 

“எனக்கு இது வேணாம்… மெயின் சர்வர் எங்க இருக்கு, இந்த வீடியோஸ் எல்லாம் எங்க ஸ்டோர் ஆகும். நான் அதை பார்க்கணும், என் வேலை அங்க தான்…” எனவும் ராம் அவனை அழைத்துக் கொண்டு சர்வர் ரூமிற்கு சென்றான்.

 

அவன் அலுவலகம், குடவுன் வீடியோ பதிவுகள் மற்றும் கம்பெனி முக்கிய விபரங்கள் அடங்கிய அறைக்குள் நுழைந்திருந்தான் ராம்.

 

“இங்க தான் இருக்கு அந்த சர்வர்…” என்று அவன் சுட்டிக்காட்ட “இங்க யாருமில்லையா இப்போ…”

 

“நான் தான் வெளிய அனுப்பிட்டேன்… யாரும் எதையும் மாத்திட கூடாதுன்னு…”

 

“குட் நல்லது தான் செஞ்சே!!” என்றவன் அதில் அமர்ந்துக்கொண்டு ஒரு மணி நேரமாய் அல்லாடிக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய் தன் வேலை முடித்து “ராம் இங்க பாரு… யாருன்னு கண்டுப்பிடிச்சாச்சு…” என்று கூவினான்…

 

நன்றி என்று

வார்த்தைகளால்

கூறாவிடினும் நன்றான

காரியம் செய்து

தன் நன்றி

செலுத்திவிட்டானவன்!!

 

Advertisement