Advertisement

அத்தியாயம் – 23

 

அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.

 

கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.

 

ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”

 

“என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”

 

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை…”

 

“ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க மாட்டீங்க…”

 

“இந்த வல்லவனை பத்தி தான் யோசனை…”

 

“என்னாச்சுங்க அண்ணாய்யாக்கு, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த மாதிரி இருக்கு… என்னாச்சுன்னு சொன்னாங்களா??”

 

“ஆமா சுகு… அதை கேட்டு கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… நானெல்லாம் கஷ்டமே படலை தெரியுமா, எல்லாமே எனக்கு சுலபமா தான் கிடைச்சுது…”

 

“பட் வல்லா அப்படியில்லை தெரியுமா…”

“என்னா தான் ஆச்சுங்க??”

 

“வேணாம் சுகு இப்போ எதுவும் தெரிய வேணாம்…”

 

“ஏன் நான் வதனாகிட்ட சொல்லிடுவேன்னு நினைக்கறீங்களா??”

 

“ச்சே!! ச்சே!! உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா சுகு… ஒரு விஷயத்தை சொல்ல வேணாம்ன்னு சொன்னா நீ சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும்… ஆனா இது வேற…” என்றவன் அவளை பார்த்தான்.

 

“இதுனால யாருக்கும் எதுவும் பிரச்சனை ஆகிடும்ன்னு நினைக்கறீங்களா… அப்போனா எனக்கும் தெரிய வேணாம், எப்போ எல்லாம் என்கிட்டே சொல்லணும்ன்னு உங்களுக்கு தோணுதோ அப்போ சொல்லுங்க” என்றாள் அவனை புரிந்த மனைவியாய்.

 

மனைவியை பெருமிதமாய் பார்த்தவன் “லவ் யூ சுகு…” என்று அணைத்துக் கொண்டான்.

 

“வதனா வல்லவனை புரிஞ்சு அவன் கூட சேர இன்னும் கொஞ்ச நாள் ஆகும்… ஆனா அதுக்கு முன்னாடி அவங்களை ஒண்ணா ஒரே வீட்டுல தங்க வைக்க எதாச்சும் செய்யணும்” என்றான் வெகு தீவிர குரலில்.

 

அவன் மீது சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை நோக்கி “எப்படி??” என்றாள்.

 

“யோசிக்கணும்… பார்ப்போம்…” என்றான்.

வி.கே.பி இல்லம்

——————————–

 

“என்னாச்சு அவர் எத்தனை மணிக்கு வர்றதா சொன்னார்??” என்று அங்கிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்த அந்த தும்பைப்பூ தலைக்காரருக்கு என்பது வயதிருக்கும்.

 

இந்த வயதிலும் திடகாத்திரமாய் இருந்தார் அவர். அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அவரின் சொல்லுக்கு அடிப்பணிபவர்களாய் இருந்தனர்.

 

இந்த வயதிலும் தடி ஊன்றாதவர், பார்வையில் அப்படியொரு கூர்மை. அவர் மக்களைவிட அவர் கம்பீரமாய் நடப்பார்.

 

அனைவராலும் வி.கே.பி என்றழைக்கப்படும் அவரின் பெயர் வரகுணபாண்டியன்.

 

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை… இன்னும் என்ன தான் செஞ்சுட்டு இருக்கீங்க எல்லாரும், கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா…” என்று அவர் கொஞ்சம் அதட்டலாய் பேசவும் அவர் முன் வந்து நின்றார் அவரின் மூன்றாம் மருமகள்.

 

“இல்லை மாமா அவர் அதை தான் போன் பண்ணி கன்பார்ம் பண்ணிக்கிட்டு இருக்கார்…” என்று அவர் முடிக்கும் முன்பே வி.கே.பியின் மூன்றாம் மகன் குலசேகரன் வந்து நின்றிருந்தார்.

 

“அப்பா அவர் கிளம்பிட்டாராம், இங்க தான் வந்திட்டு இருக்காரு… இன்னும் பத்து நிமிஷத்துல நம்ம வீட்டில இருப்பாரு…”

 

“இதெல்லாம் முன்னாடியே பார்த்து வைக்க மாட்டீங்களா… ஒவ்வொண்ணுக்கும் நான் கேட்டா தான் பதில் வருமா…” என்று மகனை முறைத்து அங்கிருந்து நகர்ந்தார்.

 

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீடே பரபரப்பானது வாயிலில் வந்து நின்ற காரின் சத்தத்தில்.

 

தன் வயதையும் பொருட்படுத்தாது வாசலுக்கே ஓடிய வி.கே.பியின் பின்னேயே ஓடினர் அவர் மக்கள். மூத்தவர் மட்டும் ஓடவில்லை, ஏனெனில் அவரால் அது முடியாது.

 

அவர் அமர்ந்திருப்பதே அடுத்தவரின் தயவால் தான்… அவருக்காய் வீல் சேரை தள்ளிக்கொண்டு சென்றான் அவருக்கென பிரத்தேயகமாய் போடப்பட்டிருந்த அவரின் உதவியாளர்.

 

“வாங்க சாஸ்திரி உங்களை தான் பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா காத்திட்டு இருக்கோம்… நீங்க வெளிநாட்டுக்கு போயிட்டீங்கன்னு சொன்னாங்க…” என்று வந்தவரிடம் பவ்வியமாய் பேசியவாறே உள்ளே வந்தார் வி.கே.பி.

 

அந்த சாஸ்திரி என்பவர் வி.கே.பியை விட வயதில் இளையவர் தான். அறுபத்திரண்டு வயது அவருக்கு, சாஸ்த்திரம் சம்பிரதாயங்களை கற்றதுடன், ஜாதகம், ஜோசியம், மாந்திரீகம் என்று பலதுறை கற்றவர்.

 

“ஆமா வி.கே.பி பையன் வெளிநாட்டில இருக்கான்… என்னை வரச்சொல்லி ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தான்… அதனால தான் ஊருக்கு போயிருந்தேன்…”

 

“என்ன நாம பார்த்து ஒரு அஞ்சு வருஷம் இருக்குமோ…”

 

“இருக்கும் சாஸ்திரி”

 

“உட்காருங்க…” என்று அவர் அமர்வதற்கு இருக்கையை காட்டினார் அப்பெரியவர்.

 

“என்ன ஜோலியாய் இப்போ என்னை வரச்சொல்லி அனுப்புனீங்க… நீங்க மெயில் மேல மெயில், போன் மேல போன் போடவே உங்களுக்காக வேண்டி தான் நான் ஊர்ல இருந்து கிளம்பி வந்தேன்…” என்றார் அந்த சாஸ்திரி எனப்படும் வேதநாயக சாஸ்திரி.

 

“உங்களுக்கு விஷயம் தெரியுமோ இல்லையோ இங்க வீட்டில தொடர்ந்து துர்சம்பவங்கள் நடந்து போச்சு…”

 

“ஹ்ம்ம் கேள்விப்பட்டேன்… ஆனா நான் உங்ககிட்ட சொன்னது நீங்க செஞ்சீங்களா??”

 

“அது வந்து அதை தவிர வேற வழியில்லையா…”

 

“அப்போ இன்னும் நீங்க அதை செய்யலை… அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டீங்க??”

“உங்க நல்லதுக்கு வேண்டி தானே அதை செய்ய சொன்னேன்… நீங்க உங்க இஷ்டப்படி செய்ங்க, நான் கிளம்பறேன்…” என்று அந்த சாஸ்திரி எழுந்திருந்தார் இப்போது.

 

அப்பெரியவரும் உடன் எழுந்து நின்றார், “மன்னிக்கணும்… நீங்க சொன்னதை செய்யக் கூடாதுன்னு இல்லை… ஆரம்பத்துல அதுக்கு மனசு ஒப்பலை…”

 

“அப்புறம் நாங்க அதை செய்யணும்ன்னு நினைக்கறப்போ உங்களுக்கே தெரியுமே வீட்டில தொடர்ந்து கெட்ட விஷயங்களா நடந்துச்சு…”

 

“அதனால நீங்க சொன்னதை நாங்க செய்யலை… நீங்க கோவிக்காம மேற்கொண்டு செய்ய வேண்டியதை சொல்லுங்க… இனியும் இந்த குடும்பம் ஒரு இழப்பை தாங்காது…”

 

“இப்போவே அடுத்த தலைமுறைக்குன்னு ஒருத்தரும் மிச்சமில்லை… இந்த குடும்பம் மேல மேல தழைக்கணும் அதுக்கு நீங்க என்ன சொன்னாலும் செய்யறோம்…” என்றார் அவர் பவ்வியாமாய்.

 

வி.கே.பி எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகளையும் சமாளிக்கும் வல்லமையுடையவர் தான் அவரின் பலமும் பலவீனமும் அவரின் குடும்பமே.

 

அவருக்கு ஜாதகத்தின் மீதும், ஜோசியத்தின் மீதும் அபாரமானதொரு நம்பிக்கை உண்டு… அதன்படி இத்தனை ஆண்டுகளை அவர் கழித்திருக்கிறார்… அவர் மக்களும் தந்தைக்கேற்ற மகன்களாய் தானிருக்கின்றனர்.

 

“அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வர்றது தான் இந்த குடும்பத்துக்கு நல்லது… இனி இந்த வீட்டுக்கு வாரிசு அந்த பொண்ணு தான், இதை நான் அப்போவே சொன்னேன் நீங்க மறந்தாச்சு…” என்றார் சாஸ்திரி குற்றம் சாட்டும் விதமாய்.

 

“இனி தாமதிக்காம அவளை இங்க கூட்டிட்டு வர்றோம்… இந்த குடும்பத்துல இனி எந்த இழப்பும் ஆகாம இருக்க வேற எதுவும் பரிகாரம் இருக்கா…” என்றார் பெரியவர்.

 

சாஸ்திரி ஒன்றும் சொல்லாமல் அருகில் வைத்திருந்த தன் துணிப்பையில் இருந்து சோழிகளை எடுத்தார். தரையில் அதை உருட்டி எதையோ கணித்தார். பின் கண் மூடி நிதானித்தார்.

 

மெதுவாய் கண்ணை திறந்தவர் “உங்க வம்சம் தழைச்சிருக்கே!!”

 

“என்ன சொல்றீங்க??” என்று அருகில் இருந்த அனைவருமே கோரசாய் கேட்டனர்.

 

“பெண் வாரிசு இல்லாத உங்க குடும்பத்துல அடுத்த பெண் வாரிசும் உண்டாகியிருக்கே!! அது இப்போ வளர்ந்து நிக்குதே!! அழைச்சுட்டு வரும் போது ரெண்டு பேரையும் ஒண்ணாவே கூட்டிட்டு வாங்க”

 

“கடைசியா ஒரு விஷயம்… எக்காரணம் கொண்டு அந்த ஆளு கூட இவங்க சேரவே கூடாது… அப்படி சேர்ந்தா அவங்க இங்க வரமாட்டாங்க… உங்களோட பிரச்சனைகளும் எப்பவும் முடியாது…” என்று சொல்லி முடித்தார் சாஸ்திரி.

 

வந்தவருக்கு மரியாதை செய்து நல்லபடியாக அனுப்பி வைத்த பின்னே அங்கிருந்தோரை பார்த்து முறைத்தார் வி.கே.பி.

 

“அவன் அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்… இது கூட தெரியாம, எல்லாம் சரியா தானே நடந்துச்சு… அப்புறம் எப்படி இது??”

 

“இதைப்பத்தி அவனுக்கு எதுவும் தெரியாமலா இருக்கு… எனக்கு ஏன் எந்த தகவலும் வரலை…” என்று கிட்டத்தட்டஉறுமினார் அவர்.

 

“அவனுக்கு போன் போடு…” என்று தன் இரண்டாம் மகன் ராஜசேகரனை பார்த்து சொல்ல கைபேசியில் யாருக்கோ அழைத்து பின் தன் தந்தையிடம் கொடுத்தார் அவர்.

 

“அப்பா அவன் தான் லைன்ல இருக்கான்…”

 

“நீ அங்க என்ன செஞ்சுட்டு இருக்கே இன்னும்… ஒரு வேலையும் உருப்படியா செய்ய மாட்டியா??” என்று இங்கிருந்தே கத்தினார் அவர்.

 

எதிர்முனையோ “என்ன விஷயம்ன்னு சொல்லிட்டு பேசுங்க… உங்க இஷ்டத்துக்கு குதிக்க நான் ஆளில்லை…” என்று அழுத்தமாய் பதில் குரல் கொடுத்தது.

 

“என்னையே எதிர்த்து பேசறியா??”

 

“உங்களை எதிர்க்காம வேற யாரை எதிர்க்கணும் நானு… எனக்கு பிடிக்காம தான் நீங்க சொல்றதை செஞ்சுட்டு இருக்கேன்…”

 

“அதுவும் எங்கம்மாவுக்காக… என்னை கத்துற வேலை எல்லாம் வேணாம்… அதெல்லாம் உங்க பசங்ககிட்ட வைச்சுக்கோங்க…”

 

“இந்தர்…” என்று கர்ஜித்தார் அவர்.

 

“என்ன வேணும்??”

 

“யாரந்த பொண்ணு??”

 

“எந்த பொண்ணு??”

 

“அவளுக்கு ஒரு வாரிசு இருக்காமே??”

 

“அதைப்பத்தி சந்தேகமா எனக்கு தோணினதை எப்போ நான் உங்க புள்ளைக்கிட்ட சொல்லியாச்சு… அவர் உங்ககிட்ட சொல்லலைன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை…” என்று அலட்சியமாய் பதில் சொன்னது எதிர்முனை.

“யார்கிட்ட சொன்னே??”

 

“இப்போ கூப்பிட்டாரே அவர்கிட்ட தான் சொன்னேன்…”

 

“எப்போ??”

 

“எப்போ எனக்கு சந்தேகம் வந்துச்சோ அப்போ?? போதுமா… சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க… நான் போனை வைக்குறேன்…” என்று வைத்தும் விட்டது எதிர்முனை.

 

“அவனுக்கு எவ்வளவு திமிர்… என்னைய கொஞ்சம் கூட மதிக்காம பேசறான், நான் பார்த்து வளர்ந்தவன்…” என்று குதித்தார் வி.கே.பி.

 

“அவன் புதுசா ஒண்ணும் பேசிடலையே… எப்பவும் அப்படி தானே…” என்று பதில் சொன்னது வீல் சேரில் அமர்ந்திருந்த அவரின் மூத்த மகன் சந்திரசேகரன்.

 

வி.கே.பியின் பார்வையில் இன்னமும் கடுகடுப்பே இருந்தது. அதே எண்ணத்தில் ராஜசேகரனை உறுத்து பார்த்தார்.

 

“உனக்கு இந்தர் முன்னாடியே சொன்னானா அந்த குழந்தையை பத்தி??”

 

“ஆமா சொன்னான்ப்பா, ஆனா அவன் உறுதியா எதுவும் சொல்லலையே…”

 

“முட்டாள்… முட்டாள்… அவன் சொன்னப்பவே என்கிட்ட சொல்றதுக்கு என்ன… உனக்கு உறுதியா வேற சொல்லணுமோ…”

 

“என்கிட்டே சொல்லியிருந்தா நான் என்ன ஏதுன்னு பார்த்திருப்பேன்ல… இப்படி கோட்டை விட்டு நிக்கறீங்க… எல்லாத்துலயும் இப்படி தான் சொதப்பி வைக்கறீங்க…”

 

“கல்யாணம் ஆகுற வரை வேடிக்கை பார்த்தீங்க, அதுக்கு பிறகாச்சும் ஒழுங்கா பிரிச்சீங்களா, அதுலயும் தாமதம்… அந்த இடைப்பட்ட காலத்துல அவங்க வாழவே ஆரம்பிச்சிருக்காங்க…”

 

“இப்போ அதுவும் வளர்ந்து நிக்குது… அப்போவாச்சும் இந்த வீட்டுல ஏதோ இழவு அதனால கவனமில்லைன்னு சொல்லலாம்… குழந்தை விஷயம் கூட தெரியாம என்னதான்டா பண்ணுறீங்க நீங்க…” என்று அனைவருயுமே வறுத்துக் கொண்டிருந்தார் அப்பெரியவர்.

 

எப்போதும் அவர் செய்யும் அர்ச்சனை தான் இன்று கொஞ்சம் அதிகமாய் சென்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரை எதிர்த்து பேசும் தைரியம் எவருக்கும் வரவில்லை.

 

அதனாலேயே இந்தர் அவரை பேசும் போது மற்றவர்கள் அவனை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அவனாவது எதிர்க்கட்டுமே என்ற எண்ணம் போலும். ஒரு புறம் வி.கே.பியின் பேச்சு அந்த குடும்ப நலனுக்கு என்பதாலும் அவர்கள் எதிர்த்திருக்கவில்லையோ!! என்னவோ!!

____________________

 

அறநிலையத்துறையில் நாளை பதவியேற்க உள்ளாள் வதனா. அவள் பதவியேற்கும் முன் பிரியன் ஒரு வேலை செய்திருந்தான்.

 

வதனாவின் கட்டுப்பாட்டில் தான் இனி அருங்காட்சியகம் கூட வரும் என்ற தகவல் பிரியனுக்கு நிர்மலாவின் மூலம் தெரிந்தது.

 

நிர்மலாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டராக பணிமாற்றம் ஆகியிருந்தது. அருங்காட்சியகத்தில் பிரியனின் ஒப்பந்தம் இன்னும் மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும்.

 

நிர்மலா இருக்கும் போதே அதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து தருமாறு கேட்டிருந்தான் அவரிடம்.

 

“என்ன பிரியன் நானே இப்போ மாறப் போறேன்… நான் இப்போ இதெல்லாம் செஞ்சா சரி வராதே…” என்றார் அவர்.

 

“மேடம் ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் உதவி பண்ணுங்க… வது நிச்சயமா எனக்கு கொடுக்க மாட்டா… அவ கண்ட்ரோல்க்கு போய் அவ மாத்திட்டா என்னால ஒண்ணுமே செய்ய முடியாது மேடம்…”

 

நிர்மலாவிற்கு அவன் எங்கு வருகிறான் என்று புரிந்தது. என்ன செய்யலாம் என்று சில பல யோசனைகள் அவரிடத்தில்.

 

பார்க்கலாம் என்று அவனிடம் அதிக நம்பிக்கையை விதைக்காதவர் அவர் ஊருக்கு கிளம்பிச் செல்லும் முன் அவன் கேட்டதை செய்திருந்தார் அவனுக்காய்.

 

பிரியன் விஷயம் கேள்விப்பட்டு அவரை நேரிலேயே சந்தித்து நன்றி சொல்லி வந்திருந்தான்.

 

இதோ வதனா அறநிலையத்துறையில் பொறுப்பிற்கு வந்து ஒருமாதமும் ஓடிச் சென்றிருந்தது.

 

அன்று காலையில் இருந்தே மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை அவளுக்கு. எதுவோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகவே பட்டது, இதயம் பலமாய் முரசுக் கொட்டியது.

 

அனைத்தும் ஒதுக்கி நீண்ட நாளைக்கு பின் கடவுளின் முன் நின்று கைகூப்பியிருந்தாள். ‘எதையும் தாங்கும் வல்லமை கொடு’ என்பதை மட்டும் வேண்டுதலாய் வைத்து அலுவலகம் கிளம்பினாள்.

 

அலுவலகம் பரபரப்புற்றிருந்தது அவள் வருவதற்குள். கண்களால் அதை பார்த்தவாறே அவள் அறைக்கு சென்றிருந்தாள்.

 

அடுத்த சில நொடிகளில் அவளின் உதவியாளர் உள்ளே நுழைந்திருந்தார்.

“சொல்லுங்க சிவம்…”

 

“மேடம் ஒரு சின்ன பிரச்சனை…”

 

“என்னாச்சு??”

 

“கேரளாவில பத்மநாபசுவாமி கோவில் நிலவறையை திறந்து பொக்கிஷங்கள் எடுத்தாங்க இல்லையா…”

 

‘அது தான் எப்போதோ நடந்து முடிந்துவிட்டதே…’ என்று எண்ணினாலும் “அதுக்கு??”

 

“தமிழ்நாட்டுல உள்ள கோவில் நிலவறைகள் கூட திறக்கப்படணும்ன்னும் ஏற்கனவே பல கோரிக்கைகள் வந்திருந்திருந்துச்சு இல்லையா…”

 

“எதுவா இருந்தாலும் நேரா சொல்லுங்க சிவம் சார்… இப்படி சுத்தி சுத்தி சொன்னா நான் என்னன்னு புரிஞ்சுக்கறது… நீங்க சொன்ன எல்லாமே நடந்து முடிஞ்சு போன விஷயங்கள்…”

 

“இப்போ பிரச்சனை என்ன அதை மட்டும் சொல்லுங்க…” என்று நேரடியாக.

 

“கும்பக்கோணம் பக்கத்துல உள்ள ஒரு பழமை வாய்ந்த கோவில் நிலவறையை மர்ம கும்பல் ஒண்ணு திறந்திருக்காங்க மேடம்…”

 

“பிரச்சனை அங்க மட்டும் எழலை, இன்னும் சில ஊர்கள்ல இது போல சம்பவங்கள் தொடர்ச்சியா ஒரே நாள்ல நடந்திருக்கு மேடம்… விஷயம் கொஞ்சம் பெரிசு…”

 

“இது எப்போ நடந்துச்சு??”

 

“நேத்து நைட் மேடம்…”

 

“எப்போ உங்களுக்கு தகவல் தெரிஞ்சது??”

 

“இன்னைக்கு காலையில தான் மேடம்…”

 

“எத்தனை மணிக்கு??”

 

“அஞ்சு மணிக்கு மேடம்…”

 

“இப்போ மணி என்ன??”

 

“அது வந்து மேடம்…. பத்து மணியாகப் போகுது… நீங்க… வந்து… அவ்வளவு காலையில உங்களுக்கு எப்படி போன் பண்ணன்னு…” என்று இழுத்தார் அவர்.

 

“அதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை… நம்ம வேலையை நாம ஒழுங்கா பார்க்க வேணாமா… எனக்கு உடனே எந்த கோவில்ல எல்லாம் இது போல நடந்துச்சுன்னு கம்ப்ளீட் லிஸ்ட் உடனே வேணும்…”

 

“அந்த கோவில் மட்டுமில்லாம முக்கியமான எல்லா கோவில்லயும் விசாரிங்க… இதுவரைக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கலைன்னா ஒரு எச்சரிக்கை கொடுத்து வைங்க…”

“அடுத்து என்ன பண்ணணும்ன்னு நான் அப்புறம் சொல்றேன், இப்போ நீங்க கிளம்புங்க…” என்றாள் அவரைப் பார்த்து.

 

யாருக்கோ அழைத்து அவள் பேசிக் கொண்டிருக்க அவள் அறைக்கதவு தட்டப்பட்டது.

 

“எஸ் கமின்…” என்றுவிட்டு அவள் இன்னமும் அவள் மேஜையில் இருந்த தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க எதேச்சையாய் நிமிர்ந்து உள்ளே நுழைந்தவரை பார்த்தவள் அதிர்ச்சிக்கு தாவினாள்.

 

சட்டென்று அதை எதிரில் உள்ளவர் பார்க்கும் முன்பே மறைத்தவள் போனில் சிரித்து பேசி பின் வைத்திருந்தாள்.

 

“நீயா??”

 

“என்னை எதிர்ப்பார்க்கலையா??” என்றது எதிரில் நின்றிருந்தவர்.

 

“எதுக்கு எதிர்பார்க்கணும்?? உனக்கு இங்க என்ன வேலை??” என்றவள் அவள் மேஜை மீதிருந்த இன்டர்காமை அழுத்தினாள்.

 

“யாரை என் ரூம்க்கு அனுப்பி இருக்கீங்க… முன்னாடியே சொல்ல மாட்டீங்களா… என்னைக் கேட்காம யாரை வேணா அனுப்புவீங்களா??” என்று சத்தம் போட்டு போனை வைத்தாள்.

 

“கூல் பேபி… கூல்…” என்று சொன்னவனை எரித்துவிடும் பார்வை பார்த்தாள்.

 

“மைன்ட் யுவர் டங்…”

 

“எனக்கு எல்லாமே மைன்ட்ல தான் இருக்கு… அதான் உன்னைத் தேடி வந்திருக்கேன்… ரொம்ப வருஷமா வெளிநாட்டுல தான் இருந்தேன்…”

 

“அதான் இங்க என்ன நடந்திச்சுன்னே தெரியாம போச்சு… பார்த்தேன் பேப்பர்ல உங்க கல்யாண போட்டோவும் கூடவே நீ உன் புருஷனை கைது பண்ணதும்…”

 

“ப்பா புரட்சி பெண்ணாகிட்ட போல… அதே திமிரு அழகு தான் கூடிப்போச்சு முன்னைவிட…” என்று அவன் சொல்லவும் முகம் கோபத்தில் சிவக்க “வெளிய போடா…” என்றிருந்தாள்.

 

“முடியாதுடி தனியா தானே இருக்கே இப்போ… உன்னால இன்னைக்கு வரை எனக்கு கல்யாணம் ஆகாமலே போய்டுச்சு…”

 

“இனி உனக்கு நான்!! எனக்கு நீ!! தயாரா இரு…” என்று பல்லைக் காட்டினான் அவன்.

 

“இப்போ நீ வெளிய போகலை, நீ என்கிட்டே மிஸ்பிகேவ் பண்ணுறேன்னு உன்னை பிடிச்சு உள்ள வைச்சிடுவேன்…”

 

“எனக்கு அதெல்லாம் பழகிருச்சு… முதல் முறை போனா கஷ்டமாயிருக்கும், அதான் உன்னால நான் ரெண்டு முறை போயிட்டு வந்திட்டனே!!”

 

“என்ன வேணும் உனக்கு இப்போ??” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில். அது அலுவலகம் என்பதால் கை நீட்ட முடியாமல் அமைதியாயிருக்க வேண்டியதாய் போனது அவளுக்கு.

 

“நீ தான்னு சொன்னேன்ல…”

 

“ஷட்அப்…” என்றவள் இண்டர்காமை எடுக்க “நம்ம கதையை அப்புறம் பேசலாம்… இப்போ நான் வந்த வேலையை பார்க்கறேன்… உட்காரலாமா…”

 

“என்ன வேலை??” என்றவள் இன்னமும் இண்டர்காமை தாங்கியில் பொருத்தவில்லை.

 

“ஏதோ கோவில்ல நிலவறையை திறந்தது பத்தி ஆராய்ச்சி பண்ணச் சொன்னியாமே!!” என்றவனை கூர்ந்து பார்த்தாள் அவள்.

 

கொஞ்சம் நிமிர்வானவள் ‘என்ன சொல்லு’ என்பதாய் பார்த்திருந்தாள்.

 

“அந்த வேலையை எல்லாம் கொஞ்சம் விட்டுவை… எனக்கு நீ வேணும்…”

 

“நீ யாரு??” என்றாள் அவள்.

 

“ஹேய் அதுக்குள்ள என்னை மறந்திட்டியா டியர்… நான் தான் பிரவீன்…”

 

“உன் பேரை கேட்கலை… இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும், உனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்??”

 

“நீ படிச்சிருக்க கொஞ்சம் அறிவாளியா இருப்பேன்னு நினைச்சேன்… இப்படி முட்டாள்தனமா கேள்வி கேட்கறே??”

 

“ஆஹான்… சரி நானே கண்டுப்பிடிச்சுக்கறேன்… நீ கிளம்பு…” என்று அவனைப் பார்த்து நக்கலாய் பதில் சொன்னாள் வதனா.

 

“நெறைய சேஞ்சஸ் தெரியுது உன்கிட்ட!! இது கூட நல்லா தான் இருக்கு…” என்று சொன்னவனை நோக்கி கையை நீட்டி விட்டாள் அடிப்பதற்கு. பின் சுதாரித்து கையை பின்னுக்கிழுத்தாள்.

 

“எப்போமே இப்படி அமைதியா கையை கட்டிட்டு இருப்பேன்னு நினைக்காதே!! அப்போ மாதிரி பயந்தவ இல்லை நான்…”

 

“தெரியுது…”

 

“தெரியாது… தெரிஞ்சுக்காதா ரொம்பவும் கஷ்டப்படுவே!!” என்று எச்சரித்தாள்.

 

“தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு…”

 

“அப்போ நீ நரகத்தை பார்க்கற நாள் வெகு தூரத்திலே இல்லை…” என்றாள் ஒரு மாதிரி குரலில்.

 

“ஆல் தி பெஸ்ட்” என்று நகர்ந்தான் பிரவீன்.

 

பல வருடங்களுக்கு பின் மீண்டும் பிரவீனை பார்க்கிறாள் வதனா. அவனைக் கண்டதும் முதலில் எழுந்த பதட்டம் இப்போது இல்லை அவளிடத்தில்.

 

இவன் என்னை தெரிந்தே வந்திருக்கிறான் என்று புரிந்ததும் தான் யார் என்று அவனுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள்.

 

அடங்கிவிட்டான் என்று நினைத்தால் மீண்டும் எழுந்து வந்திருக்கிறானே என்ற போதும் அவனை இப்போது சும்மாவிடும் நோக்கமில்லை அவளுக்கு.

 

ஏனோ இக்கணம் தன்னையுமறியாமல் பிரியனின் நினைவு அவளுக்குள். இவனிடத்தில் இருந்து காப்பாற்றத் தானே அவர்களின் திருமணம் அவசரகதியில் நடந்தது என்பதை மனம் எடுத்துக் கொடுத்தது அவளுக்கு.

 

பெருமூச்சொன்று எழுந்தது அவளுக்கு. சில நொடிகளில் தன்னை சமன்ப்படுத்தியவள் இயல்புக்கு திரும்பினாள்.

 

கிழக்கும் மேற்கும்

எதிரெதிர் என்றாலும்

இணைக்கும் வானம்

ஒன்றல்லவா!!

தண்டவாளம் இரண்டும்

எதிரெதிர் என்றாலும்

செல்லும் வழி

ஒன்றல்லவா!!

நீயும் நானும்

எதிரெதிர் என்றாலும்

இணைக்கும் வழி

அன்பல்லவா!!

 

Advertisement