Advertisement

அத்தியாயம் – 22

 

வதனாவும் சுகுணாவும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று ராம் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

ராம் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளின் சத்தம் கேட்கவில்லை, வதனாவும் வீட்டிலிருப்பது போல் தோன்றவில்லை.

 

“சுகு…” என்று அழைத்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் செல்ல அவள் அங்கில்லை.

 

“சுகும்மா…” என்றவாறே அவர்களின் பெட்ரூமிற்குள் செல்ல அங்கு அவள் கட்டிலின் விரிப்பை மாற்றிக் கொண்டிருந்தாள்.

 

பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா… பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.

 

“பார்க் போயிருக்காங்க…” என்றாள்.

 

“என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.

 

“ஒண்ணுமில்லை…”

 

“வதனா என்ன சொன்னா??” என்று அவள் முகம் வாட்டம் கண்டு சரியாய் கண்டுப்பிடித்து கேட்டான்.

 

“என்ன சொல்லணும்??”

 

“உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னாளே?? பேசினாளா??”

 

“ஹ்ம்ம் பேசினாங்க… பாவம் அவங்க…” என்றாள் குரலில் ஒருவித பாவத்துடன்.

 

“என்ன சொன்னா சுகு??”

 

“ஏங்க நீங்க ஆம்பிளைங்க எல்லாம் இப்படி இருக்கீங்க??” என்று பொத்தாம்பொதுவாய் ஆரம்பித்த மனைவியை புதிதாய் பார்த்தான் ராம்.

 

“அதெப்படி ஒரு பொண்ணோட உணர்வோட விளையாடுறாங்க இந்த ஆம்பிளைங்க… பெண்களோட உணர்வுகளை தூண்டிவிட்டா உடனே காலடியில விழுந்திடுவாங்களா” என்றவளின் கண்கள் குனிந்து பார்த்தது.

 

அவள் இடையை சுற்றியிருந்த அவன் கரம் இப்போது தானாய் விலகியது. மடியில் இருந்தவளை மெல்ல இறக்கி அருகில் உட்கார வைத்தான்.

 

“இன்னும் என்னாச்சுன்னு நீ சொல்லவேயில்லை…” என்றிருந்தான் இப்போது.

 

“இல்லை அன்னைக்கு அண்ணாய்யாவோட அம்மா அப்பா வந்திருந்தாங்கன்னு சொன்னாங்களே ஞாபகமிருக்கா…”

 

“ஹ்ம்ம் இருக்கு… வதனா அதைப்பத்தி தான் உன்கிட்ட சொன்னாளா…” என்றான் சீரியசான குரலில்.

 

“ஆமாங்க… அண்ணாய்யா மேல தப்பு இருக்கட்டும், இல்லாம போகட்டும்… எதுவா இருந்தாலும் அதைப்பத்தி வதனாகிட்ட எந்த விளக்கமும் சொல்லாம இப்படி நடந்துக்கறது தப்பு தானே…” என்றாள் இப்போதும் மொட்டையாய்.

 

அவள் என்னவென்று தெளிவாய் சொல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் புரிவது போல் தோன்றியது ராம்க்கு.

 

“ஒரு பெண்ணோட உணர்வுகளோ விளையாடுறது தப்பில்லையா… இத்தனை வருஷமா அவளை தவிக்கவிட்டு போனவரு, திடிர்னு வந்து கூப்பிட்டா உடனே அவங்க எப்படி போவாங்க…”

 

“அதைவிட அவங்க உணர்வை தூண்டிவிட்டு…” என்றவள் “எனக்கு இதெல்லாம் சரியாப்படலை… நீங்க அவரை பார்த்தா ப்ளீஸ் கொஞ்சம் அவர்கிட்ட இதைப்பத்தி பேசுங்க…” என்றவள் அன்று பிரியன் வதனாவிடம் நடந்து கொண்ட முறையை பற்றி வதனா தன்னிடம் வருந்தி கூறியிருந்ததை அப்படியே சொன்னாள்.

 

“நான் என்ன சொல்ல வந்தேன்னு உங்களுக்கு புரியுது தானே…” என்றுவிட்டு எழுந்து வெளியில் சென்றுவிட்டாள்.

 

ஆக வதனாவின் மனம் இன்னமும் பிரியனை சுற்றித்தான் வந்துக் கொண்டிருக்கிறது. அவன் மீது கோபமாயிருப்பவள் அவன் தீண்டலில் ஏன் தன்னை இழக்க வேண்டும்.

 

அவள் கோபம் என்பது வெறும் வெளிப்பூச்சு உள்ளே அவள் இன்னமும் அவனுக்காய் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது இப்போது அப்பட்டமாய்!!

 

அன்றிலிருந்து ராமும் ஒன்றும் கண்டுக்கொள்ளவில்லை. சுகுணாவிடம் கணவனாய் அவன் செய்யும் குறும்புகள் மொத்தமும் நிறுத்தியிருந்தான்.

 

உரிமையாய் கோபம் கொண்டு பேசும் தோழியிடமும் விட்டேத்தியாக நடந்துக் கொண்டான் அவன்.

 

அவனின் அந்த வித்தியாசப் போக்கை கண்டு மனம் வருந்திப் போனாள் வதனா. மறுநாள் காலை தன் போக்கில் அவன் சொல்லிக்கொண்டு வேலைக்கும் கிளம்பி சென்றுவிட்டிருந்தான்.

 

“என்னாச்சு சுகுணா?? அவன் என்கிட்டே சரியாவே பேசலை…” என்று கேட்க “நீங்க வந்ததும் அவர்கிட்ட சரியா பேசலைல அதான் கொஞ்சம் கோபமா இருப்பார் போல…”

 

“நீங்க பேசுங்க சரியாகிடுவார்…” என்று வதனாவிற்கு சமாதானம் சொன்னாள் சுகுணா.

 

“ஹ்ம்ம்…” என்று விட்டு நகர்ந்தாள் வதனா.

 

மாலை வீட்டிற்கு வந்த ராம் சாதாரண பேச்சுகளை எல்லோரிடமும் பேசினாலும் ஒருவித விலகல் தெரிந்தது அதில்.

 

அதை பெண்கள் இருவருமே உணர்ந்தனர். காலையில் வேலைக்கு செல்லும் கணவன் தன்னை வேண்டுமென்றே உள்ளே அழைத்து செய்யும் சேட்டைகளை சுகுணா அறிவாள்.

 

இன்று அதெல்லாம் இல்லை, சரி காலையில் தான் ஏதோ வேலை சென்றிருப்பான். மாலை வீட்டிற்கு வருபவன் அதை சரி செய்வான் என்று எண்ணியிருக்க அப்போதும் ஏமாற்றமே அவளுக்கு.

 

முகம் லேசாய் வாடியது சுகுணாவிற்கு. வதனா அவனிடத்தில் பேச முயற்சிக்க குழந்தைகளிடம் விளையாடுவது போல் அவளிடம் பேச்சை தவிர்த்தான் ராம்.

 

மறுநாளும் அதே போல் சென்றிட அன்று மாலை வீட்டிற்கு வந்தவனின் முன் சென்று நின்றாள் வதனா.

 

“என்ன வதனா??”

 

“உன்கிட்ட பேசணும்…”

 

“கொஞ்சம் வெயிட் பண்ணு… டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்…” என்று அறைக்கதவை தாளிட்டான்  அவன்.

 

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்திருந்தான். சுகுணா அவனுக்கு காபியை நீட்ட அதை வாங்கி அருந்திக் கொண்டிருந்தான்.

 

அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாயிருந்தாள் வதனா. “நான் ஏன் இங்க வந்தேன்னு கேட்க மாட்டியா??” என்று ஆரம்பித்தாள்.

 

“எப்போமே கேட்க மாட்டேன்னு உனக்கு தெரிஞ்சும் ஏன் அந்த கேள்வியை கேட்குறே??” என்றான் பதில் கேள்வியாய்.

 

“அப்போ என் மேல உன் அக்கறை அவ்வளவு தானா…” என்றாள் உடைந்து அழும் குரலில்.

 

“இந்த கேள்வியே அர்த்தமில்லாததுன்னு உனக்கு புரியலையா… உன் மேல இருக்க அக்கறையை நான் எப்படி காட்டணும்ன்னு நினைக்கிறே??”

 

“என்னை கேள்வி கேட்கணும்??”

 

“கேட்குற கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லிடுவியா??” என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.

 

“உன்கிட்ட நான் எதை மறைச்சிருக்கேன்??” என்றாள் பதிலுக்கு.

 

“அதை நான் கேள்வி கேட்ட பிறகு சொல்லு…”

 

“நீ கேளு…”

 

“உன் மனசுல என்ன இருக்கு??”

 

“புரியலை…”

 

“உன் மனசுல வல்லவன் பத்தி என்ன எண்ணம் இருக்கு…”

 

“முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு இப்போ நீ பேசறே??”

 

“முடிஞ்சு போனதா உன் வாய் மட்டும் தான் சொல்லுது… உன் மனசை கேளு அது வேற சொல்லும்… உனக்கும் அவனுக்குமான உறவுக்கு இசை தான் சாட்சி…”

 

“இன்னமும் அவனைப்பற்றி எந்தவிதமான சலனமும் உனக்கில்லைன்னு என்கிட்ட எப்பவும் சொல்ற மாதிரி சொல்லப் போறியா… உன் மனசை மறைச்சு என்ன சாதிக்கப் போறே நீ…”

 

“நான் எதையும் மறக்கலை…” என்றவளின் பார்வை இப்போது சுகுணாவை தொட்டு நின்றது. நீ எல்லாமும் இவனிடம் சொல்லிவிட்டாயா என்று.

 

சுகுணா கண் மூடி திறந்து ஆம் என்பதாய் சொல்ல ஒரு பெருமூச்சை வெளியேற்றிவள் “உனக்கு இப்போ என்ன தெரியணும்??”

 

“எதுவுமில்லை…” என்றுவிட்டு எழுந்துவிட்டான் அவன்.

 

“ராம் ஏன்டா இப்படி பண்ணுறே?? எனக்கு உன்னைவிட்டா இப்போ யாருமில்லை, சரி தப்புன்னு நீ தானேடா எடுத்து சொல்லணும்… ப்ளீஸ் ராம் இப்படி யாரோ மாதிரி என்கிட்டே பிஹேவ் பண்ணாத…”

 

“நான் எப்பவும் போல தான் இருக்கேன் வதனா. உனக்கு தான் புதுசா குழப்பம் வந்திருக்கு, அதனால நான் உனக்கு வித்தியாசமா தெரியறேன்…”

 

“உன்னோட இந்த பதட்டம், பயம் எல்லாம் அனாவசியமானது. வல்லவன் வந்ததுல இருந்து உன்கிட்ட நிறைய விஷயம் மாறிப் போயிருக்கு….”

 

“உன்கிட்ட எனக்கு பிடிச்ச அந்த தைரியம், துணிச்சல் எல்லாம் இப்போ மிஸ்ஸிங்… வல்லவன் போனப்போ இருந்த வதனாவை இப்போ பார்க்கறேன்…”

 

“உன் கண்ணுல குழப்பம் தெரியுது… பேச்சுல நடுக்கம் தெரியுது… உன் முடிவுல அவசரம் தெரியுது… இதெல்லாம் அவசியமில்லாதது…”

“நிதானமா இரு, பொறுமையா யோசி… உனக்கு நான் சொல்லி எதுவும் தெரியணுங்கறது இல்லை…”

 

“ஆனா உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒண்ணே ஒண்ணு இருக்கு…” என்றுவிட்டு இடைவெளி விட்டான்.

 

என்னவென்பது போல் அவனை பார்த்தாள் வதனா.

 

“வல்லவன் விஷயத்துல அவசரப்படாதே!! அவன் பக்கம் எதுவும் நியாயமான காரணம் இருக்கலாம்… உன் கோபம் தப்புன்னு நான் சொல்ல வரலை…”

 

“ஆனா பேச்சுல பொறுமையை காட்டு, வார்த்தையை கொட்டிடாத… இத்தனை வருஷம் கழிச்சு வந்தவன் இப்பவும் தனியாளா தான் இருக்கான்…”

 

“விட்டுட்டு போறவன், போனவன் தனக்குன்னு வேற குடும்பத்தை அமைச்சிருக்கலாம்… அப்படி எதுவும் நடக்கலை… நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்…”

 

“நான் சொன்னதை மட்டும் மனசுல வைச்சுக்கோ… மத்தப்படி நீ எப்பவும் போல இந்த வீட்டுக்கு வரலாம், போகலாம்…”

 

“என்கிட்ட சொல்லிட்டு தான் வரணும்ன்னோ போகணும்ன்னோ இல்லை… இது உன் வீடு, உனக்குன்னு நாங்க எல்லாரும் இருக்கோம்… அதை நினைவில வைச்சுக்கோ எப்பவும்…” என்று நீளமாய் பேசி முடித்து எழுந்து சென்றிருந்தான் இப்போது.

இரவு அறைக்கு வந்த சுகுணா முகத்தை தூக்கி வைத்திருந்தாள். அதை கண்டும் காணாது பார்த்தவன் என்னவென்று அவளிடம் கேட்கவில்லை.

 

எதுவாயிருந்தாலும் அவளே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தான். குழந்தைகள் வதனாவிடம் படுத்துக்கொண்டதால் இருவர் மட்டுமே அந்த அறையில்.

 

சுகுணா படுப்பது போல் தெரியாததால் “கொஞ்சம் உள்ளே தள்ளி போ, நான் தூங்கணும்…”

 

“அதுக்குள்ள என்ன அவசரம்…”

 

“மணி பத்தாகப் போகுது…”

 

“நீங்க ரெண்டு நாளா என்கிட்டே சரியாவே பேசலை…”

 

“நான் எப்பவும் போல உன்கிட்ட பேசிட்டே தான் இருக்கேன்…”

 

“இல்லை நீங்க தள்ளி தள்ளி போறீங்க… வழக்கமான உங்க குறும்பு எல்லாம் மிஸ்ஸிங்… என்னாச்சு உங்களுக்கு…”

 

‘அப்படி வா வழிக்கு…’ என்று மனதிற்குள்ளாக எண்ணிக்கொண்டவன் “என்ன குறும்பு?? அதெல்லாம் பண்ணா தான் உங்க உணர்வுகளோட விளையாடுறோம்ன்னு சொல்றீங்க”

 

“நான் அது வதனாக்கு தானே சொன்னேன்…”

“பொதுவா சொன்னே…”

 

“இல்லை அது வந்து…”

 

“இப்போ என்ன வேணும் உனக்கு…”

 

“நான் அன்னைக்கு சொன்னதை மனசுல வைச்சுட்டு தான் ஒதுங்கி போறீங்களா நீங்க…” என்றாள்.

 

“இல்லை…”


“அப்போ ஏன்??”

 

“சாரி…”

 

‘சாரி சொல்லிட்டா எல்லாமே சரியா போய்டுமா… ரெண்டு நாளா என் மனசுப்பட்ட பாடு எனக்கு தானே தெரியும்…’ என்ற எண்ணம் ஓடியது அவளுக்கு.

 

அவள் முகத்தை படித்தவன் போல் அவள் கரம் பற்றி தன்னுள் வைத்துக்கொண்டவன் மெதுவாய் தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் காதில் “சாரி சுகும்மா… இனிமே இப்படி நடக்காது…” என்று சொல்லி இறுக்கமான ஓர் அணைப்பை கொடுத்தான்.

 

“ச்சே!! நீங்க எதுக்கு என்கிட்டே சாரி கேட்கறீங்க… அதெல்லாம் வேணாம்…” என்றவளின் கரமும் அவனை இறுக்கியது.

மெதுவாய் அவளிடமிருந்து விலகியவன் “ஏன் சுகு, நான் முதல்ல சாதாரணமா ஒரு சாரி சொன்னேன்ல… அப்போ நீ என்ன நினைச்சே…”

 

“செய்யறதும் செஞ்சுட்டு ஒண்ணுமேயில்லைன்னு சொல்ற மாதிரி சாரி சொல்றாரேன்னு தானே நினைச்ச!!” என்றுவிட்டு அவள் முகத்தை பார்க்கவும் அதில் ஓடிய எண்ணத்தை படித்தவனுக்கு அவன் எண்ணம் சரியே என்று தோன்றியது.

 

“உண்மையை சொல்லு, நான் உன்னை கட்டிப்பிடிச்சே அதே சாரி சொன்னப்போ உன் மனசு என்ன நினைச்சது… ஒரு நிம்மதியை உணர்ந்துச்சா இல்லையா…” என்றான்.

 

ஆம் அவன் சொன்னது உண்மை தான் அவள் மனம் அப்படி தான் உணர்ந்தது அக்கணம். ஒன்றும் சொல்லாமல் அவர் பார்த்ததிலேயே அவனுக்கு புரிந்தது.

 

“அன்னைக்கு சொன்னியே உணர்வுகளை தூண்டுறோம்ன்னு… கொஞ்சம் யோசி, என்ன தான் காலம் மாறியிருந்தாலும் இன்னமும் ஒரு ஆணை ஓடி வந்து கட்டிக்கற அளவுக்கு பெண்கள் மாறியிருக்காங்களா”

 

“இருக்காங்க… இல்லைன்னு சொல்லலை… ஆனா எண்ணிக்கை குறைவு தான்… நீயோ இல்லை வதனாவோ பார்க்க மாடர்னா இருந்தாலும் உங்களுக்குள்ள அந்த பழமை இன்னும் இருக்கு”

 

“உணர்ச்சிகளை மறைக்கற வழக்கம் உங்களுக்கு உண்டு… ஆனா இப்படி எந்த கட்டுப்பாடுகளும் எங்களுக்கில்லை…”

 

“அதை நீங்களும் வெளிப்படுத்த மாட்டீங்க… நாங்களும் அதை வெளிப்படுத்த கூடாதுன்னா கணவன் மனைவி அன்னியோன்யம் எப்படி வளரும்…”

 

ராம் சொல்ல சொல்ல சுகுணாவிற்கு ஏதோ புரிவதாய்… “சில விஷயங்களை வாய் வார்த்தைகளால புரிய வைக்க முடியாது… ஒரு சின்ன அணைப்பு புரிய வைக்கும் மனநிலையை. அதில என்ன தப்பிற்கு சுகும்மா…”

 

“புரியுதுங்க…”

 

“வதனாக்கும் இது புரியணும்… உடனே புரியாது ஆனா முடிஞ்சா புரியவை… நீ சொன்னதை தப்புன்னு நான் சொல்லலை…”

 

“எனக்கு புரியது… பத்து வருஷம் கழிச்சு ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் போது அதுவும் கணவன் மனைவி என்ன மாதிரி மனநிலை இருக்கும்ன்னு எனக்கு புரியுது…”

 

“என்னால வல்லவனோட உணர்வையும் புரிஞ்சுக்க முடியுது… வதனாவோட சங்கடமும் புரியது… வல்லவன் வெளிப்படுத்தினது மகிழ்ச்சி, சந்தோசம், ஏக்கம், தவம் இதெல்லாம் தான்…”

 

“வதனாவால சட்டுன்னு அதை ஏத்துக்க முடியாம போயிருக்கலாம் அதில தப்பில்லை… தொலைந்த நாட்கள்ல அவ பட்ட கஷ்டங்கள், வருத்தங்கள், வேதனைகள் அப்படி…”

 

ராம் விளக்கி சொன்னதை அத்தனையும் சரி தானே என்று தோன்றியது சுகுணாவிற்கு. இப்படி ஒரு கணவன் கிடைக்க எந்த ஜென்மத்தில் தான் புண்ணியம் செய்தோமோ என்றும் அவளுக்கு தோன்றாமலில்லை.

 

மறுநாள் காலை வதனா அவர்களிடம் விடைபெற்று சென்னைக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள். அன்று மாலையே வல்லவரையன் தன் பெற்றோருடன் ராமின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 

வல்லவரையன் கிளம்பும் முன் போன் ராமிற்கு போன் செய்திருந்தான். அவர்களை அழைக்க ராம் நேராகவே வந்திருந்தான் விமான நிலையத்திற்கு.

 

அவன் அதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, தானே வந்துவிடுவதாக தான் சொல்லியிருந்தான். “என்ன ராம் இது சர்ப்ரைஸ், நான் வந்திருக்க மாட்டேனா??”

 

“நீ தனியா வந்திருந்தா வேற வல்லா… அம்மா, அப்பா வேற வந்திருக்காங்க, அதான் நானே நேர்ல வந்திட்டேன்… இதுல என்ன இருக்கு…” என்றான்.

 

“அம்மா… அப்பா…” என்று அருகில் இருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தான் அவன். இருவருக்கும் புன்னகையை பரிசாக கொடுத்தான் ராம்.

 

“இவன் ராம், நம்ம இசை இவங்க வீட்டில தான் இருக்கா…”

 

அவர்களிருவரும் அவனை நன்றியாய் பார்த்து புன்னகைத்தனர். வண்டியில் ஏறிய பின் ராம் மற்றும் வல்லவன் இருவரும் தணிந்த குரலில் ஏதோ வளவளத்தனர்.

 

ஒரு வழியாய் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர சுகுணா அவர்களை இன்முகத்துடன் வரவேற்றாள். குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு புதிதாய் வந்தவர்களை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தனர்.

 

வல்லவரையனுக்கு இசை தன் மகள் என தெரிந்த பின் நேரில் இப்போது தான் பார்க்கிறான் என்பதால் உணர்ச்சி கொந்தளிப்பில் நின்றிருந்தான்.

 

உமையாளும் ஆளவந்தாரும் சுகுணாவின் பின்னேயே வந்து நின்றிருந்த தங்கள் பேத்தியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“உள்ள வாங்க…” என்று அவர்களை அழைக்கவும் தான் மூவருக்கும் சுயவுணர்வே வந்தது.

 

உள்ளே வந்து அங்கிருந்த இருக்கையில் அவர்கள் அமர்ந்து இதோ பத்து நிமிடம் கூட கடந்திருந்தது. ஒருவரும் பேசவேயில்லை.

 

உமையாள் தான் தன்னுணர்வுக்கு வந்து குழந்தைகள் இருவரையும் கைநீட்டி அழைத்தார்.

அவர்கள் இருவருமே சுகுணாவையும் ராமையும் பார்த்தனர். “நம்ம தாத்தா, பாட்டி தான் போங்க…” என்றான் அவன்.

 

உமையாள் இருவரையுமே வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். சரண் ஒரு படி மேலே சென்று அவர் மடியில் வசதியாய் ஏறி அமர்ந்து கொண்டான். ஆளவந்தார் சரணை தன்னருகில் வருமாறு அழைக்க குழந்தை இப்போது அவர் தோளில் தொற்றிக் கொண்டான்.

 

இசையோ “அப்பா இந்த பாட்டியை நான் பார்த்ததேயில்லையே… இவங்க எங்க இருந்தாங்க??” என்றாள்.

 

”ஊர்ல இருந்தாங்கம்மா… உங்களை பார்க்க தான் வந்திருக்காங்க, தாத்தாவும் பாட்டியும்” என்றான் ராம் அவளிடத்தில்.

 

“பவளா இவளை பார்த்தா உன் தங்கை சின்ன வயசுல இருந்த மாதிரியே இல்லை…” என்று கண்களில் நீர் துளிர்த்துவிட உமையாள் சொல்லவும் ஆளவந்தாரும் அவனும் இசையை தான் பார்த்தனர்.

 

“நீ அவளை பார்த்து வருஷம் அதிகம் ஆகிட்டு அதான் உனக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்… அவ சின்ன வயசுல எப்படி இருந்தாளோ அப்படி தான் இருக்கா என் பேத்தி” என்றார் அவர்.

 

சுகுணா அவர்களுக்கு குடிக்க பழச்சாறை கொண்டு வந்து கொடுத்தாள். “அங்கிள் நீங்களும் இவங்களோட வந்திருக்கீங்க… உங்களுக்கு தாத்தா, பாட்டியை முன்னாடியே தெரியுமா??” என்று இசை கேட்கவும் வல்லவரையன் உள்ளே மொத்தமாய் நொறுங்கிப் போனான்.

 

மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் அவன். அப்பா என்றழைக்க வேண்டிய மகள் மாற்றான் போல் அங்கிள் என்று அழைத்ததும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

 

உமையாளும் ஆளவந்தாரும் என்ன இது என்பது போல் மகனை பார்த்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பேத்திக்கு ஏதோ சொல்லி புரிய வைக்க பேச ஆரம்பிக்க மகன் கண்களால் ஜாடை காட்டினான் பேச வேண்டாம் என்று.

 

ராம் இதை பார்த்துக் கொண்டு தானிருந்தான். “இசை…” என்று மகளை மென்மையாய் அழைத்தான் அவன்.

 

“அப்பா…” என்றவாறே அவள் எழுந்துச் சென்று ராமிடம் சென்றாள்.

 

அப்போது தான் மகளின் நடையின் வித்தியாசத்தையே உணர்ந்தான் வல்லவரையன். உள்ளே ஏதோவொரு வலி எழ ராமை நிமிர்ந்து பார்த்தான். கண்கள் நீரில் நிறைந்து பளபளத்து இப்போது.

 

ராமோ ஒன்றுமில்லை பயம் வேண்டாம் பிறகு பேசலாம் என்பதாய் ஒரு பார்வை கொடுக்க பேச நினைத்தவன் அப்படியே விட்டான்.

“இசை செல்லம் இவங்க யாரு உனக்கு??” என்று சுகுணாவை காட்டி கேட்டான் அவன்.

 

“சுகும்மா” என்றாள் அவள்.

 

“அப்போ வதனா??”

 

“வதும்மா…” என்று வேகமாய் பதில் கொடுத்தான் சரண் ஆளவந்தாரிடம் இருந்து இறங்கி ஓடிவந்து. ஏதோ கேள்வி பதில் போல இருந்தது அவன் சொன்ன விதம்.

 

மகனை நோக்கி புன்னகையை கொடுத்து அவனை வாரியணைத்து கொண்டவன் தன் மடியில் இருத்திக் கொண்டு இப்போது மகளை பார்த்தான் நீ சொல்லு என்பது போல்.

 

“அவங்க வதும்மா…”

 

“அப்போ நானு??”

 

“அப்பா…”

 

“அப்போ உனக்கு ரெண்டு அம்மா இல்லையா இசை… இதோ இருக்காங்கல இவங்களை நீ அப்பான்னு தான் கூப்பிடணும்… சரியா…”

 

“ஏன்??”

 

“அதுக்கு தானே இப்போ உனக்கு விளக்கம் கொடுத்தேன்… உனக்கு வதும்மா, சுகும்மா மாதிரி நான் ராம் அப்பா, இவங்க பவளப்பா ஓகே வா” என்றான் மகளிடம்.

 

“அப்புறம் இந்த தாத்தாவும் பாட்டியும் பவளப்பாவோ அப்பாவும் அம்மாவும் தான் சரியா…” என்று சேர்த்து சொன்னான் அவன்.

 

அதை கேட்டுக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு கண்ணில் இருந்து மளமளவென்று கண்ணீர் வந்துவிட்டது.

 

எதற்கும் அதிகம் கலங்கியதில்லை அவன், தன் மகளின் முன் தான் அடையாளம் காட்டப்படுவது அவனுக்கு பெரும் வேதனையாய். விழியில் வழிந்த நீரை துடைக்க கூட இல்லை அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

 

ராம் அதை கண்டும் காணாமல் கண்டுக்கொண்டான். வல்லவரையனின் வருத்தம் அவனுக்கும் புரிந்தது. இசை இப்போது “அப்பா நீங்க இவங்களை பவளப்பான்னு சொன்னீங்க, ஆனா நீங்க ஏன் வல்லான்னு கூப்பிடுறீங்க..” என்று கேட்டாள்.

 

“அவங்களுக்கு ரெண்டு பேருடா இசை… காலேஜ்ல அவனோட பேரு பவளப்பிரியன், உங்க வதும்மாவை பொறுத்தவரை வல்லவரையன் தான் இவர் பேரு… அப்பா வல்லா, வல்லவான்னு கூப்பிடுவேன்…”

 

“வதும்மாக்கு இவங்களை தெரியுமா… அவங்க ஏன் இவங்களை பத்தி பேசினதே இல்லை” என்று மீண்டுமொரு கேள்வியெழுப்பினாள் அவள்.

“நானும் சுகும்மாவும் எப்படியோ அப்படி தான் பவளப்பாவும் வதும்மாவும் உனக்கு… பவளப்பா கொஞ்ச நாள் வெளிநாட்டுல இருந்தாங்க… அதான் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து இருக்கலை…”

 

“வதும்மாவும் இவங்களும் வேற வேற ஊர்ல இருந்தாங்களா அதான் தனி தனியா இருக்காங்க… இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் சேர்ந்து தான் இருப்பாங்க…” என்று மகளுக்கு விளக்கம் கொடுத்தான் ராம்.

 

குழந்தைகளின் கேள்விக்கு பதில் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல… அவர்களுக்கு புரியும் விதமாக தெளிவாக எடுத்து சொல்வது என்பது தலையால் தண்ணி குடிப்பது போல்.

 

ராம் அதை புரிந்தவனாய் தெளிவாய் எடுத்துரைத்தான். பின் அவன் மகளை நோக்கி ஜாடை காட்ட இசை பிரியனை நோக்கிச் சென்றாள் “அப்பா…” என்றழைத்து.

 

அந்த ஒற்றை சொல் அவன் உயிர் வரை தீண்டிச் சென்று இனித்தது அவனுக்கு. இசையுடன் சேர்ந்துக் கொண்டு சரணும் அவனை அப்பாவென்று அழைக்க அவனின் மனநிலையை சொல்ல வார்த்தைகளில்லை.

 

இருவரையும் இருகரம் கொண்டு வாரியணைத்துக் கொண்டான் அவன். இத்தனை நாள் தான் பட்டதெல்லாம் ஒன்றுமேயில்லை இந்த ஓர் வார்த்தையின் முன் என்றே தான் தோன்றியது அவனுக்கு.

 

அவனின் வலி, வேதனை, விரக்தி எல்லாமும் கரைந்தே போனது அந்த நொடியில். எதை செய்தாவது தன் குடும்பத்துடன் ஒன்றாக வேண்டும் என்ற உத்வேகமும் வெறியும் கொழுந்துவிட்டு எரிந்தது அவனுள்.

 

உமையாளும் ஆளவந்தாரும் மகனையும் அவன் மகளையும் கண்டு மனம் உருகி போயிருந்தனர்.

 

குழந்தைகள் பெரியவர்களிடம் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். சுகுணாவின் பெற்றோருக்கு இசையை பிடிப்பதில்லை என்பதால் சுகுணா அவள் வீட்டிற்கு அதிகம் செல்ல மாட்டாள்.

 

அவர்களும் பொதுவாய் இங்கு வருவதில்லை. அது போலவே ராமின் தந்தைக்கு இசையை மகன் இன்னமும் தங்கள் வீட்டில் வைத்திருப்பதில் விருப்பமில்லை.

 

ராமின் அன்னைக்கு இசை மீது பிரியமிருந்தாலும் கணவரை மீறி அவரும் எதையும் செய்ய மாட்டார். அதனால் ராம் தன் திருமணம் முடிந்ததுமே தனியே வந்துவிட்டான்.

 

அவன் அன்னை ,தந்தை மற்றும் சித்தப்பாமார்கள் எல்லாம் இன்னமும் ஒன்றாய் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.

 

அதனால் இசைக்கும், சரணுக்கும் தாத்தா பாட்டியின் அருகாமை அதிகம் கிடைத்ததில்லை. அதை அவர்கள் உணர்ந்ததுமில்லை.

 

இப்போது உமையாளும் ஆளவந்தாரும் சிறு குழந்தைக்கு நிகராக பேசுவதும் விளையாடுவதும் குழந்தைகளுக்கு அவர்களிருவரையும் மிகப் பிடித்தது.

 

“ஏன்பா நாங்க லீவ்க்கு இவங்களை ஊருக்கு கூட்டிட்டு போகலாமா?? நான் பேத்தியை மட்டும் சொல்லலை, இந்த குட்டி கண்ணனையும் சேர்த்து தான்” என்று மெதுவாய் தயங்கியவாறே கேட்டார் உமையாள்.

 

“தாராளமா கூட்டிட்டு போங்கம்மா…” என்றான் ராம்.

 

“அம்மா அதெல்லாம் வேணாம்… எல்லாம் சரியாகட்டும் அப்புறம் பார்ப்போம்… அதுவரை நீங்க இங்க வந்தே பார்த்துக்கோங்க…” என்றிருந்தான் வல்லவன்.

 

“வல்லா அவங்க விருப்பத்தை கெடுக்க வேணாம். எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக்கறேன்… வதனாவை நான் சமாளிச்சுக்குவேன்…”

 

“வதுவை நான் பிரச்சனையா நினைக்கலை ராம். இது வேற… நாம அதைப்பத்தி அப்புறம் பேசுவோம்…” என்று மற்றவர்களை ஜாடை காட்டினான் அவன்.

 

“ஏன்பா நீ தான் ராமா??” என்றார் உமையாள்.

 

“என்னம்மா கார்ல ஏறும்போதே சொன்னேன்ல இவன் தான் ராம்ன்னு மறந்திட்டீங்களா??” என்று கேள்வியாய் வல்லவரையன்.

 

“அப்போ நான் சரியா கவனிக்கலை பவளா… குழந்தையை பார்க்கற எண்ணம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு அதான்…” என்றவரிடம் “என்னம்மா என்கிட்டே எதுவும் கேட்கணுமா??” என்றான் ராம் இப்போது.

 

“அதில்லை…” என்று தயங்கி தயங்கி ஆரம்பித்தவர் “ஏன் பவளா?? இந்த ராம் தானே உன் காலேஜ்ல படிச்சது… இவனை உனக்கு பிடிக்காது தானே…”

 

“நீங்க ரெண்டு பேரும் எப்போமே முறைச்சுட்டே இருப்பீங்கன்னு தானே நீ அப்போலாம் சொல்லிட்டு இருப்ப…” என்று சொன்னதும் வல்லவன், ராம் இருவரின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.

 

“எனக்கு மட்டுமில்லைம்மா ராம்க்கும் என்னை பிடிக்காது…” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் மகன். “ஆனா இப்போ எப்படி ரெண்டு பேரும் ஒண்ணா??” என்று கேள்வியாக்கினார் அவர்.

 

அந்த எண்ணம் அவருக்கு மட்டுமல்ல சம்மந்தப்பட்ட இருவருக்கும் கூட அதே சிந்தனை தான். இது என்ன மாதிரியான புரிதல் என்று இருவருக்குமே தெரியவில்லை.

 

எந்த உரிமையில் தான் ராமிடம் உதவி கேட்டோம் என்று வல்லவன் யோசித்தால், எந்த எண்ணத்தில் தான் அவன் சொன்னதை கேட்டு அவனுக்கு உதவி புரிந்தோம் என்று ராமிற்கும் தெரியவில்லை.

 

இதில் ஒருவர் ஆணாக பிறந்து மற்றவர் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவர்களுக்குள் காதல் பிறந்திருக்குமோ என்னவோ…

 

முன் ஜென்ம பந்தம் போல் தான் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து இருந்தனர். கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு அவர்கள் இருவரிடத்தில்.

 

குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் விளையாடி அவர்களுடனே உறங்க சென்றிருக்க, வல்லவனும் ராமும் அன்று வெகு நேரம் தனித்து பேசினர். வல்லவன் தன் வாழ்க்கையில் நடந்த அத்துனையும் ராமிடம் பகிர்ந்திருந்தான்…

 

காலம் கொடுத்த

வலியில் பிரிவென்னும்

பெரு மழை

அடித்து ஓய்ந்திருந்தாலும்

மனதில் புயலாய் மாறி

கரை கடந்திருந்தாலும்

அது விட்டுச் சென்ற

மிச்சங்கள் ஆழ்மனதில்!!

 

Advertisement