அத்தியாயம் – 21

 

வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.

 

“மேடம்…” என்று தயங்கி நின்றான் அவன்.

 

“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு…”

 

“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க…”

 

“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.

 

“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க…” என்று சொல்லி முடித்துவிட்டான்.

 

“பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”

 

“மேம் அவங்க நம்ம சாரோட…”

 

“எந்த சாரோட??”

 

“வல்லவரையன் சாரோட…” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.

 

“அவருக்கு என்ன??”

 

“அவரோட பேரன்ட்ஸ் தான் வந்திருக்காங்க மேடம்…” என்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டான்.

 

‘அவங்க… அவங்க எதுக்கு என்னை?? இத்தனை வருஷமா என்னை பார்க்காம இருந்தவங்க, பார்க்கணும்ன்னு கூட நினைக்காதவங்க இப்போ எதுக்கு?’ என்ற கேள்விகள் அவள் மண்டைக்குள் ஊர்வலம் செய்தது.

 

பார்த்திபன் அவள் பதில் எதிர்பார்த்து காத்திருப்பது புரிய என்ன முடிவெடுக்க என்ற குழப்பம் ஒரு நொடி அவள் மனதில்.

 

பின் ஒரு முடிவெடுத்தவளாய் “வரச் சொல்லுங்க… பார்மாலிட்டிஸ் எதுவும் இருந்தா முடிச்சுட்டு உள்ள அனுப்புங்க…” என்றாள்.

 

“ஓகே மேடம்” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

 

அவன் வெளியேறி சென்று இருபது நிமிடங்கள் கடந்திருக்க அவர்கள் உள்ளே நுழையவும் தன்னையுமறியாமல் எழுந்து நின்றிருந்தாள் அவள்.

 

“உட்காருங்க…” என்று தன்னெதிரில் இருந்த இருக்கையை காட்டினாள்.

 

அவர்கள் அமரவும் தானும் தன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். வந்தவர்கள் வந்த விஷயத்தை ஆரம்பிக்காமல் அவளையே அளவெடுத்தனர்.

 

அவர்கள் அவளை இப்போது தானே முதன் முறையாய் நேரில் பார்க்கிறார்கள். அவர்கள் அவளை பார்ப்பது போல் அவளால் அவர்களை பார்க்க முடியவில்லை.

 

போட்டோவில் பிரியன் அவர்களை காட்டியிருக்கிறான் தான், ஆனாலும் அவளும் அவர்களை இப்போது தான் நேரில் பார்க்கிறாள். ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் போன்று அவளை அளவெடுக்கும் பார்வை அது.

 

இருக்கையில் அமர முடியாமல் அவஸ்தையாக இருந்தது அவளுக்கு. வேறு யாரேனும் என்றால் முகத்தில் அடித்தது போல் பேசியிருப்பாள்.

 

வந்திருந்தவர்கள் பிரியனின் பெற்றோர் என்பதால் அமைதி காத்தாள். அதுவுமில்லாமல் முதன் முறை பார்ப்பவர்களிடத்தில் மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்பதும் சேர்ந்து கொள்ள அமைதி காத்தாள்.

 

வந்தவர்கள் தானாய் பேச்சை ஆரம்பிப்பவர்கள் போன்று தோன்றவில்லை அவளுக்கு. லேசாய் தொண்டையை செருமி அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

 

“சொல்லுங்க… என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க??” என்று அவளே ஆரம்பித்திருந்தாள்.

 

“நாங்க யாருன்னு…” என்று ஆரம்பித்த உமையாளுக்கு “ஹ்ம்ம்… தெரியும் சொல்லுங்க… எதுக்காக என்னை பார்க்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா??” என்றாள் வதனா.

‘நாங்க யாருன்னு தெரிஞ்சுமா இப்படி இருக்கா… கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருப்பாளோ… அதான் பவளா தள்ளியிருக்கானோ…’ என்ற யோசனை உமையாளுக்கு.

 

ஆளவந்தான் அப்படி எதுவும் யோசிக்கவில்லை, வதனாவின் முகம் மட்டுமே பார்த்திருந்தார் எதையோ படித்துவிடுபவர் போல்.

 

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து…” என்று அவர் ஆரம்பிக்கும் போதே “மன்னிக்கணும் குறுக்க பேசுறதுக்கு… நடக்காத விஷயத்தை பத்தி பேச வேண்டாமே…” என்றாள்.

 

“ஏன்??”

 

அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் “திடிர்னு உங்களுக்கு எப்படி எங்க மேல அக்கறை வந்தது??” என்று எதிர் கேள்வி கேட்டாள்.

 

“திடிர்னு எல்லாம் அக்கறை வராது… எப்பவும் இருக்கறது தான்…”

 

“இத்தனை வருஷத்துல உங்களுக்கு எங்களை பார்க்கணும்ன்னு தோணினதே இல்லையே…” என்று கேட்டுவைத்தாள்.

 

“உனக்காச்சும் நாங்க யாருன்னு தெரிஞ்சிருக்கு. பவளன் கண்டிப்பா நாங்க எந்த ஊர்ல இருக்கோம்ன்னும் உனக்கு சொல்லியிருப்பான். எதையும் ஒளிச்சு மறைக்கறவனில்லை அவன்”

 

“ஆனா எங்களுக்கு உன்னை பேப்பர்ல பார்த்த பிறகு தான் தெரியும். உங்க கல்யாண போட்டோவை பார்க்கலைன்னா நீ யாருன்னு கண்டிப்பா எங்களுக்கு தெரிஞ்சிருக்காது”

 

“நீ எங்க கண்ணெதிரில நடந்து போயிருந்தா கூட கண்டிப்பா எங்களுக்கு அடையாளம் கண்டிருக்க முடியாது” என்றார் அவர்.

 

அவர் சொன்னதில் இருந்த உண்மை அவளை சுட்டாலும் அதை சட்டென்று ஒத்துக்கொள்ள அவளால் முடியவில்லை.

 

அன்றைய அவளின் மனநிலையில் பிரியனை தவிர வேறெதுவும் அவள் எண்ணத்தில் இல்லை. சில காலம் கழித்து அவன் பெற்றோரின் எண்ணம் வந்தாலும் அவனே இல்லை அவர்கள் மட்டும் எம்மாத்திரம் என்ற நிலை அவளுக்கு.

 

அவளோ இப்போது அவர்களுக்கு என்ன பதில் சொல்ல என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள். அவளின் அமைதி கண்டு உமையாளே தொடர்ந்தார்.

 

“சரி போனதெல்லாம் போகட்டும்… நீங்க வேணும்ன்னு தான் இப்போ தேடி வந்திருக்கோம்… இனியும் நீங்க…”

 

“சேர முடியாது… அது நடக்காது, என்னை பத்து வருஷமா தவிக்கவிட்டு போனவரோட எப்படி சேர முடியும்…”

 

“ஒவ்வொரு நாளும் நான் தவிச்ச தவிப்பு என்னைத்தவிர யாருக்குமே தெரியாது… சொன்னாலும் புரியாத வலி அது” என்று சொன்னவளின் கண்கள் கலங்கியது.

 

எந்த நேரத்திலும் அது உடைப்பெடுத்து கரையுடைக்க தயாராயிருந்தது.

 

அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ சிறு பிணக்கு பிரிந்திருக்கிறார்கள் போலும் என்று தான் எண்ணியிருந்தனர் பிரியனின் பெற்றோர்.

 

ஆனால் அவள் சொன்னதை கேட்டதும் இருவருமே அதிர்ந்தனர். இருவரும் பத்து வருடமாக பிரிந்திருக்கிறார்கள் என்றால் சேர்ந்து வாழ்ந்தது சில மாதங்களாய் தானிருக்கும் என்று புரிந்தது.

 

ஏன் அப்படி?? என்ன நடந்தது?? தங்கள் மகன் அப்படி விட்டுச் செல்பவனில்லையே என்று தெரிந்தாலும் அவன் அவர்களிடத்தில் பேசும்போது பிரச்சனை என்று ஏதோ சொன்னானே அதனால் சென்றிருப்பானோ!!

 

அந்த பிரச்சனை இருவருக்குள்ளுமா அல்லது வேறு யாராலுமா என்று குழம்பியது அவர்களுக்கு.

 

உமையாள் ஏதோ பேச வாயெடுக்க ஆளவந்தான் அவரை தடுத்து “உங்களுக்குள்ள இந்த பிரிவு எதனால வந்திச்சின்னு எனக்கு தெரியலைம்மா…”

 

“தப்பு யார் மேலன்னு சொல்றதுக்கு என்ன நடந்துதுன்னு எங்களுக்கும் முழுசா தெரியாது… ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும்ன்னு தோணுது” என்று நிறுத்தினார் அவர்.

 

‘என்ன சொல்லப் போகிறார்’ என்று அவரையே பார்த்தாள் அவள்.

 

“உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பொதுவாவே சொல்றேன். உங்களைப்பத்தி மட்டுமே யோசிக்காம குழந்தையைபத்தியும் யோசிங்க… அவளோட எதிர்காலத்தை பத்தி நினைச்சு பாருங்க…”

 

“அந்த குழந்தைக்கு எல்லா உறவு இருந்தும் இல்லாத நிலை வேணாமே… மற்ற உறவுகளை விட முக்கியமா அப்பா அம்மா உறவும் அன்பும் சேர்ந்தாப்புல அந்த குழந்தைக்கு கிடைக்க வேணாமா…”

 

“இதை நிச்சயம் வல்லாக்கும் நான் போய் சொல்லுவேன்…” என்றவர் அவளை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தார்.

 

பின் மனைவியை திரும்பி பார்த்தார் கிளம்பலாம் என்பது போல்.

 

அவர்கள் எழவும் பார்த்திபன் அவளுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது. “யாரு??” என்று கேட்டவளின் முகம் மாறிக்கொண்டிருக்க “அனுப்புங்க….” என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

 

‘இன்னைக்கு குடும்பமா வந்து என்னை ஒரு வழி செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டாங்களா…’ என்று ஆயாசமாயிருந்தது அவளுக்கு.

 

போனில் அழைத்த பார்த்திபன் வல்லவரையன் வந்திருக்கிறான் என்று சொன்னானே!! என்று வாசல் பார்த்தாள்.

 

உள்ளே வரும் முன் “எக்ஸ்கியூஸ் மீ மே ஐ கமின்” என்றான்.

 

அவனை பார்த்து பல்லைக்கடித்தவள் தலையசைக்க “தேங்க்ஸ்” என்றுவிட்டு உள்ளே வந்தவன் இப்போது அவளை நோக்கவில்லை.

 

“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க??” என்று ஆளவந்தானையும் உமையாளையும் பார்த்து கேட்டான்.

 

“இல்லை பவளா பேசலாம்ன்னு வந்தோம்… நீங்க ரெண்டு பேரும்…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் “என்னை கேட்காம நீங்க இங்க வந்திருக்க கூடாது…”

 

“நான் தான் சொன்னேன்ல… எதையும் தெளிவு படுத்தாம சரி செய்யாம என்னால ஒண்ணுமே செய்ய முடியாது இப்போன்னு… கொஞ்ச நாள் பொறுத்துக்க மாட்டீங்களா!! அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்குன்னு இங்க வந்தீங்க”

 

“மத்தவங்க மாதிரி என் மேல உங்களுக்கும் நம்பிக்கை இல்லையா!!” என்று சொன்னபோது ஓரக்கண்ணில் தன்னவளை பார்க்கத் தான் செய்தான்.

 

அவன் பேச்சு அவளுக்கு கோபத்தை தூண்டியது. ஆனாலும் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றாள். ‘என்ன நம்பிக்கை இல்லாம போய்ட்டாங்க’ என்று அவளுள் கேள்வி எழாமலும் இல்லை.

 

“வாங்க போகலாம்…” என்று அவர்களை பார்த்து சொன்னவன் மருந்துக்கும் அவள் புறம் திரும்பவேயில்லை.

 

“நாங்க போயிட்டு வர்றோம்மா…” என்று அவனின் பெற்றோர் ஒரே சேர சொல்ல அவள் தலை தன்னையுமறியாமல் அவர்களுக்கு தலையசைத்து விடை கொடுத்தது.

 

பிரியன் தன்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே என்ற எண்ணம் வதனாவிற்கு. அவன் எதுவும் சொல்வானா என்று செல்லும் அவனையே பார்த்திருந்தாள்.

 

என்னைவிட்டு போய் இவர் சந்தோஷமா இருந்த மாதிரி தெரியலையே… ஆனா என்னை வந்து பார்க்கவுமில்லையே!! இத்தனை வருஷத்துல தனக்குன்னு வேற வாழ்க்கையை தேடியிருக்கலாமே!! ஏன் தேடலை??

என்ன தான் பிரச்சனை இவருக்கு?? நான் தான் பிரச்சனைன்னு விலகிப்போனாரா இல்லை வேற எதுவும் பிரச்சனை இருக்குமா!! என்று முதன்முறையாக அவளவனுக்கு ஆதரவாய் யோசிக்க ஆரம்பித்தது அறிவு.

 

‘இவரை புரிஞ்சுக்கறதுல நான் எங்கயாச்சும் தப்பு பண்ணிட்டனா… இல்லை இவர் தான் என்னை தேடி வரலை… நான் இந்த நிமிஷம் வரைக்கும் இவரை தானே நினைச்சுட்டு இருக்கேன்’ என்று அவள் மனமே மாற்றி மாற்றி யோசித்தது.

 

வாயில் வரை வந்தவள் செல்லும் அவர்களையே வெறித்திருந்ததை உணரவேயில்லை அருகில் பிரியன் வந்து நிற்கும் வரை.

 

“கொஞ்சம் பேசணும்… உள்ள போய் பேசலாமா??” என்று அனுமதி கேட்டவனிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.

 

“இங்க சிசிடிவி இருக்கா?? ஐ மீன் இந்த ரூம்ல??”

 

அவனை முறைத்தவள் “வெளிய இருக்கு, இங்க இல்லை. இது என்னோட பர்சனல் ரூம்… ஆனா எதுக்காக கேட்கறீங்க??” என்றாள்.

 

“ஹ்ம்ம் சொல்றேன்… அதுக்கு முன்னாடி, நன்றி…”

 

அவளுக்கு அது நேரம் வரை அவன் ஒன்றுமே பேசாமல் சென்றானே என்றிருந்தவளுக்கு ‘எதுக்காக இப்போ திரும்பி வந்தான்?? நன்றி எதுக்காக??’ என்ற குழப்பமும் யோசனையும்.

 

“தேங்க்ஸ்…” என்றான் மீண்டும்.

 

எதற்கு அதையே தமிழிலும் ஆங்கிலத்திலுமாய் சொல்கிறான் என்று புரியாமல் அவனை ஏறிட்டாள். ‘பெரிய மேஜர் சுந்தர்ராஜன் இவரு’ என்று எண்ணினாள்.

 

“என் மேல உள்ள கோபத்தை எங்கம்மா அப்பாகிட்ட காட்டாம இருந்ததுக்கு”

 

“நான் ஏன் அவங்க மேல கோபத்தை காட்டணும், அவங்க என்ன தப்பு செஞ்சாங்க…”

 

“புரிஞ்சா சரி…” என்றவனின் பேச்சு அவளுக்கு புரியாமல் போனது.

 

“என்ன புரியாம போச்சு இப்போ எனக்கு…” என்றாள் கோபமாய்.

 

“புரியாத பிரியம் பிரியும் போது புரியும்ன்னு சொல்வாங்க… அது நம்ம விஷயத்துல உல்டா ஆகிடுச்சுல” என்று அவன் சொன்னதும் அவள் மூக்கின் நுனி சிவந்து அவளின் கோபத்தின் அளவை காட்டியது.

 

எதிரெதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் இருவருக்கிடையில் இடைவெளி இருந்தது அதுவரை. இப்போது அவளருகே நெருங்கி வந்து அவன் இடைவெளி குறைக்கவும் கோபம் மறந்து விழியகல அவனையே பார்த்தாள்.

 

சற்று முன் அவனுக்காய் பரிந்த மனதின் இளக்கமே காரணமானது போலும். அவள் விழிகளுக்குள் முழ்கியவன் போல் அவன் பார்வை இப்புறம் அப்புறம் நகராமல் நோக்கியது அவளை.

 

அவள் கண்ணிமைக்கவும் மறந்து பார்க்க எதிர்பாரா கணத்தில் அவளை இழுத்து அணைத்திருந்தான்.

 

எப்போதும் அவளை சமாதானம் செய்ய அவன் செய்யும் தந்திரம் அது. ஆனால் இப்போது அவன் அவளை சமாதானம் செய்யவெல்லாம் அதை செய்திருக்கவில்லை.

 

எங்கே அவன் பெற்றோரிடம் மரியாதை குறைவாக நடந்துவிடுவாளோ என்று தான் அவ்வளவு விரைவாக அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

ஆனால் அவள் அவர்களிடம் மிகப்பொறுமையாகவே பேசிக் கொண்டிருந்ததை கண்டவனுக்குள் அப்படி ஒரு நிம்மதி.

 

வதனாவின் மனதில் இன்னமும் தான் அழுத்தமாய் தான் பதிந்திருக்கிறோம் என்று. தான் விட்டுச்சென்றதாய் எண்ணியிருப்பவளுக்கு இந்த கோபம் கூட வரவில்லை என்றால் தானே ஆச்சர்யம்.

 

இந்த நிமிடம் அவன் மனம் அவளைக் குறித்து அவ்வளவு மகிழ்ந்திருந்தது. அதை வெளிப்படுத்தவே தான் அவளை அணைத்திருந்தான்.

 

அவனின் அணைப்பில் முதலில் திகைத்து நின்றிருந்தவள் அவனை உந்தித்தள்ள எடுத்த முயற்சி அனைத்தும் வீணே.

 

முன்பு போல அவனில்லை, இப்போது உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தான். உடற்பயிற்சி எல்லாம் செய்வான் போலவே!! என்று தான் தோன்றியது. மெதுவாய் அவளும் அவன் அணைப்பில் கட்டுண்டாள்.

 

மென்மையாய் ஆரம்பித்திருந்த அந்த அணைப்பு மெதுவாய் வன்மையாய் மாறிக் கொண்டிருந்தது. நீண்ட நெடிய காலத்திற்கு பின்னான மனைவியின் அருகாமை அவனை தன் வசமிழக்க செய்துக் கொண்டிருந்தது.

 

அவனின் அணைப்பு இறுகவுமே சுய உணர்விற்கு வந்தவள் “விடுங்க!!” என்றாள் வாய்விட்டு.

 

“உன்னை என்னால எப்பவும் விட முடியாது வது!! லவ் யூ வது!! நீ இல்லாம நான் நானாவே இல்லை!!” என்று அவன் உதடுகள் அவள் காதில் முணுமுணுக்க அந்த பதில் அவளை ஒரு கணம் உருக்கிய போதும் தன்னை சுதாரித்துக்கொண்டு “விடப்போறீங்களா இல்லையா” என்றாள்.

 

மெதுவாய் அவளை விடுவித்தவன் “உன் மிரட்டலுக்காக எல்லாம் உன்னை விடலை…”

“இது நீ வேலை செய்யற இடம்ன்னு தான் விட்டுட்டு போறேன்… சீக்கிரமே பார்ப்போம்… பை டியர்” என்று சொல்லி பழைய குறும்புடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டி போனான் அவன்.

 

அவன் சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. ஒரு நொடி, ஒரு நொடி என்றாலும் தான் அவனிடம் இளகி நின்றோமே என்றிருந்தது அவளுக்கு.

 

அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். மேஜையில் இருந்த நீரை எடுத்து அருந்தினாள். இப்போது தான் சுவாசம் சீரானது போல் ஓர் உணர்வு.

____________________

 

ஊருக்கு சென்றிருந்த ராம் திரும்பி வந்திருந்தான். ஹைதராபாத்திற்கு வந்ததும் அவன் முதல் வேலையாக போன் செய்தது வல்லவரையனுக்கே.

 

“வல்லவா நான் ஹைதராபாத் வந்திட்டேன்… நாம எப்போ மீட் பண்ணலாம்ன்னு சொல்லு நான் கிளம்பி வர்றேன்” என்றான் அவன்.

 

“வேணாம் ராம்… இப்போ தான் நீ ஊர்ல இருந்து வந்திருக்கே, உனக்கு அலைச்சல் வேணாம்… நானே வர்றேன்…”

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை வல்லவா நான் பிளைட்ல தானே வந்தேன்… அவ்வளோ டயர்ட் எல்லாம் இல்லை… நானே வர்றேன்…” என்றவன் என்ன நினைத்தானோ “நீயே வா… நீ இங்க வந்தா ப்ரீ குட்டியை நேர்ல பார்த்த மாதிரி இருக்கும்” என்றான்.

 

“தேங்க்ஸ் ராம்… நானே அதை தான் சொல்லலாம்ன்னு நினைச்சேன்… எப்படி….”

 

“இங்க பாரு இசை உன் பொண்ணு, அவளை பார்க்க நீ அனுமதி கேட்கணும்ன்னு அவசியமில்லை… நீ எப்போ வேணா வந்து பார்க்கலாம்…”

 

“வதனா புது ஆபீஸ்க்கு போக போறதுனால இப்போதைக்கு இங்க வர முடியாதுன்னு சொல்லிட்டா, சோ எந்த தடையும் இல்லை இப்போ”

 

“அவளே இங்க இருந்தா கூட குழந்தையை நீ பார்க்கக் கூடாதுன்னு தடை சொல்ல முடியாது…” என்றான் அவன் தொடர்ந்து.

 

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உனக்குபட்ட நன்றிக்கடனை அடைக்கவே முடியாது ராம்…”

 

“போதும்டா ஓவரா சென்டிமென்ட் டயலாக் பேசுற, உன் பொண்டாட்டி காத்து எதுவும் அடிச்சிருச்சா உனக்கு” என்று கிண்டல் செய்தான் ராம்.

 

“ஏன் அவ இப்படி சொல்வாளா எப்பவும்??”

 

“எப்பவும் இல்லை எப்போ பார்த்தாலும் இந்த டயலாக் அடிப்பா… திட்டி திட்டி இப்போ தான் நிறுத்தியிருக்கா…”

“அதுக்கு நீ தகுதியானவன் தானேடா…”

 

“சரி நீ இப்படியே பேசிட்டே இரு, நான் போனை வைக்குறேன்…” என்றான் ராம்.

 

“ராம்… ராம்… ப்ளீஸ் ஒரு நிமிஷம், இன்னொரு விஷயம்டா… அம்மாவும் அப்பாவும் என்னை பார்க்க வந்தாங்க…” என்றவன் நடந்ததை சொன்னான் அவனிடம்.

 

“மேடம் ரியாக்சன் என்ன??”

 

“என்னவா இருக்கும், என்னோட வரமாட்டேன்னு சொல்லியிருக்கா?? எதிர்ப்பார்த்தது தானே…”

 

“ஆனா வல்லவா…” என்று ஆரம்பித்து அமைதியானான் ராம்.

 

“சொல்லு ராம்…”

 

“ஒண்ணுமில்லைடா அதான் நீ நேர்ல வர்றேன்னு சொன்னியே பேசிக்கலாம்…” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

____________________

 

ஒரு மாதத்திற்கு வரமுடியாது என்று சொன்னவள் புது வேலையில் சேரும் முன் ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தாள்.

 

கிளம்பும் முன் எப்போதும் போல் ராமிற்கு தகவல் கொடுத்திருந்தாள். ‘வரமாட்டேன்னு சொல்லிட்டு வர்றா, என்னாச்சு…’ என்று யோசித்தாலும் ராம் எதுவும் சொல்லவில்லை.

 

அவளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு காரை அனுப்பி வைத்திருந்தான். நல்ல வேளையாக அவள் இன்றே வருகிறாள்.

 

வல்லவரையன் இன்னும் இரு தினங்களில் நேரில் வருவதாக கூறியிருந்தான். அவன் இருக்கும் போதென்றால் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.

 

வாசலில் கேட்ட காரின் சத்தத்திலே தெரிந்து போனது அவள் வந்துவிட்டாள் என்று. வாயிலுக்கு வந்திருந்தான் ராம். அவளுக்கு காரை திறந்துவிட்டவன் “வாங்க மேடம்…” என்றான்.

 

“என்ன புதுசா மேடம்ன்னு சொல்றே??”

 

“நீங்க இப்போ வேற வேலைக்கு போகப் போறீங்க… புது ஆபீஸ் புது வேலை அதான் மரியாதை கொடுக்கறேன்” என்று கிண்டலாய் சொன்னான்.

 

“போடா…” என்றுவிட்டு அவள் உடமைகளுடன் உள்ளே சென்றாள்.

 

“எங்க இசை, சரண் எல்லாம்…”

 

“ஸ்கூல்க்கு போக வேண்டாமா அவங்க… என்னை மாதிரியே ஆபீஸ்க்கு போகாம உனக்காக காத்திட்டு இருக்க வைக்கணுமா அவங்களை…”

 

“எதுக்குடா இப்படி குதர்க்கமாவே பேசுறே… யதார்த்தமா தானே கேட்டேன்…”

 

“யதார்த்தம் எல்லாம் ஓகே தான், கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே… வர வர உனக்கு யோசனை பண்ணுற அளவுக்கு மூளை வேலை செய்ய மாட்டேங்குது போலவே…”

 

“உன் மூளைக்குள்ள வேற ஏதோ விஷயங்கள் வந்து உட்கார்ந்திட்டு உன்னை ஆட்டுவிக்கற மாதிரி இருக்கு…” என்று அவளாய் வல்லவரையன் வந்த விஷயத்தை பேசுகிறாளா என்று போட்டு வாங்கினான் அவன்.

 

அவன் பேச்சில் அவளுக்கு ஆயாசம் தான் வந்தது, பதிலொன்றும் சொல்லவில்லை அவள். “சுகுணா இல்லையா…” என்று அவள் கேட்கும் போதே இவர்கள் சத்தம் கேட்டு கையில் பழச்சாறுடன் வந்தாள் அவள்.

 

“உட்காருங்க சுகுணா… உங்களை பார்க்கலாம்ன்னு தான் வந்தேன்…” என்று அவளிடம் சொல்ல சுகுணா இப்போது தன் கணவனை ஏறிட்டாள் ‘என்ன விஷயம்’ என்பது போல்.

 

இது மிகவும் புதிது, எப்போதும் வதனா வந்தால் ராமிடம் தான் அதிகம் பேசுவாள். சுகுணாவிடமும் பேசுவாள் தான், ஆனால் ராமும் குழந்தைகளும் தான் அதில் முதலிடத்தில் இருப்பார்கள். இன்றைய அவளின் பேச்சு இருவருக்குமே கொஞ்சம் வித்தியாசமாய் பட்டது.

 

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்த ராம் “சரி நீங்க பேசுங்க, நான் ஆபீஸ் கிளம்பறேன்…” என்றான்.

 

“ஹ்ம்ம் சரிடா… ஈவினிங் பார்க்கலாம்…” என்று சொன்ன வதனாவை ஆழ ஊன்றி பார்த்தான் அவன்.

 

‘என்னவோ ஒரு வித்தியாசம் தெரியுதே…’ என்று யோசித்துக்கொண்டே தங்கள் அறைக்கு சென்றவன் “சுகு கொஞ்சம் வாயேன்… நேத்து இங்க ஒரு பென் டிரைவ் வைச்சேன்…”

 

“அது எங்கன்னு கொஞ்சம் தேடி கொடு, எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு…” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான் அவன்.

 

“ஒரு நிமிஷம் வதனா இதோ வந்திடறேன்…” என்று அவளும் எழுந்து உள்ளே சென்றாள்.

 

அவள் அறைக்குள் வந்ததும் இயல்பு போல் கதவை லேசாய் அவன் அடைக்கவும் “என்னங்க என்ன பேசணும் என்கிட்டே??” என்றாள் சுகுணா அதை எதிர்ப்பார்த்தவள் போல்.

 

“எப்படிடி என்னை நீ தெரிஞ்சு வைச்சிருக்கே?? இதுக்காகவே உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது…” என்றவன் அவள் இடையோடு வளைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

“சொல்ல வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க… நம்மை பத்தி அப்புறம் பேசலாம்…” என்று நினைவூட்டினாள் கணவனுக்கு.

 

“பாரு அதை மறந்திட்டேன்…” என்றவன் “வதனாக்கு என்னாச்சுன்னு தெரியலை… உன்கிட்ட பேசணும்ன்னு வந்திருக்கேன்னு சொல்றா…”

 

“மனசுவிட்டு பேசுவான்னு நினைக்கிறேன்… என்கிட்ட கூட அவளால ஒரளவுக்கு மேல எதையும் ஷேர் பண்ணியிருக்க முடியாது…”

 

“என்ன தான் இருந்தாலும் நான் ஆண் அப்படிங்கறதுனால சொல்லியிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்… உன்கிட்ட என்ன பேசுறா எப்படி பேசுறான்னு பாரு…”

 

“அதை வைச்சு தான் வல்லவன் வரும் போது என்ன பண்ணுறதுன்னு முடிவெடுக்கணும்…” என்று தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தான் அவன்.

 

“எனக்கும் அதே ஆச்சரியம் தான் என்கிட்ட பேசணும்ன்னு சொல்றாங்களேன்னு… நீங்க சொல்ற மாதிரி தான் இருக்கும்ன்னு தோணுது… வதனாவை நான் பார்த்துக்கறேன் நீங்க ஆபீஸ் கிளம்புங்க…” என்றாள் அவள்.

 

“என்னை எதுவும் ஸ்பெஷலா கவனிக்க மாட்டியா சுகு!!” என்று அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து அவன் கேட்க “ரெண்டு உதை கொடுக்கட்டுமா ஸ்பெஷலா…”

“வேற புதுசா எதுவும் தெரியாதா உனக்கு… ஒரு நாலு கிஸ் இங்க… ஒரு லாங் கிஸ் இங்க…” என்று கன்னமும் உதட்டையும் சுட்டிக்காட்டி அவன் சொல்ல முகம் சிவந்து போனாள் அவள்.

 

“வேலையில்லை உங்களுக்கு, வெளிய வதனா இருக்காங்க…” என்று அவள் நகர முற்பட “இருக்கட்டும்… இதெல்லாம் அவ பார்க்கட்டும் அப்போ தான் சீக்கிரம் அவ புருஷனோட போய் சேரணும்ன்னு தோணும் அவளுக்கு…”

 

“எத்தனை நாளைக்கு தான் இந்த சாமியார் வேஷம் போடுவா அவ… வல்லவன் வந்ததுல இருந்தே அவ அவளா இல்லை… நாலு நாள் முன்ன அவனோட பேரண்ட்ஸ் இவளை போய் பார்த்திருக்காங்க…”

 

“இதுவரைக்கும் வாயை திறந்தாளா பாரு… என்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணுறவ தானே, இப்போ மட்டும் என்னவாம்…” என்று அவன் சொல்லும் போது அவள் தன்னிடம் பகிரவில்லை என்ற மனத்தாங்கலும் லேசாய் வெளிப்பட்டது.

 

“கள்ளம் வருது மனசுக்குள்ளன்னா என்ன அர்த்தம்… நம்மகிட்ட இருந்து அவ மனசை மறைக்க பார்க்கறான்னு தானே அர்த்தம்… அவளுக்குள்ள தடுமாற்றம் இருக்குன்னு தானே அர்த்தம்”

 

“அப்பப்பா ரொம்ப தான் அர்த்தத்தை கண்டுட்டீங்க நீங்க… உங்ககிட்ட எல்லாமே சொல்லணுமா, பேசாம ஆபீஸ் கிளம்புங்க…” என்று சொல்லி அவன் பேச்சை முடிக்கப் பார்த்தாள் சுகுணா.

 

“ஓகே சுகு கிளம்பறேன்” என்று சொல்லி அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்…

 

வதனா சுகுணாவிடம் மனம்விட்டு பேசியிருக்க இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தவள் மூன்றாம் நாள் காலையில் சென்னைக்கு கிளம்பினாள்.

 

அவள் அப்புறம் செல்லவும் அன்று மாலையே வல்லவரையன் ஹைதராபாத் வந்து இறங்கினான். ராமிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். அவன் மட்டுமாய் தனியே வந்திருக்கவில்லை, உடன் அவன் பெற்றோரும்…

 

அன்பை கொடுத்தாய்

மனம் கொய்தாய்

உறவை கொடுத்தாய்

உயிர் கொடுத்தாய் – பின்

விலகிப் போனாய்

விட்டுச் சென்றாய் – இனி

வாராமல் போவாய்

என்றே நானிருக்க

மீண்டும் வந்தாய்

வா வாழ்வோமென்றாய்

உன் வரவில்

குழம்பித் தவிக்கிறதென் மனமே!!