அத்தியாயம் – 19

 

பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.

 

கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.

 

ராகேஷ் ஹைதராபாத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாய் அவனிடம் தான் பேசியிருப்பான். ஆனால் அவனோ அப்போது அங்கு இல்லாது போனதால் என்ன செய்வது என்று விழித்திருந்தவனின் நினைவில் வந்து போனது ராம் மட்டுமே.

 

அவனின் எண் அவனிடத்தில் இல்லை, நல்ல வேலையாக அவனிருந்த இடத்தில் டெலிபோன் இன்டெக்ஸ் இருந்ததால் ராமின் அலுவலக எண்ணை கண்டுப்பிடிக்க முடிந்தது.

 

அலுவலகத்தில் அந்த நேரத்தில் அவனை தொடர்பு கொள்ள முடியாது என்று அவனறிவான். என்ன செய்ய என்று மீண்டும் தலைதட்டி யோசித்த தருவாயில் தான் அவன் தந்தையின் பெயர் நினைவிற்கு வர அதை வைத்து அவன் வீட்டு எண்ணை கண்டுப்பிடித்தான்.

 

ராமின் குடும்பம் ஹைதராபாத்தில் மிகப் பிரசித்தமே என்பதால் அவன் வீட்டு முகவரியும் அனைவரும் அறிந்ததே. அதைக் கொண்டு சுலபமாய் அவன் எண்ணை தேட முடிந்தது.

 

அவன் தனக்கு உதவி செய்வான் என்று தான் எப்படி உறுதியாய் நம்பினோம் என்று தெரியவில்லை அவனுக்கு. ஆனால் அவன் செய்வான் என்று மனதின் உள்ளே ஆழமாய் ஒரு நம்பிக்கை இருந்தது.

 

அதை இன்று வரை ராம் காப்பாற்றி இருக்கிறான். தன் உயிரானவளை மட்டுமல்ல, தன் உயிரில் உதித்தவளையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கும் ராம் அவனை பொறுத்தவரை தெய்வமாக தோன்றினான்.

 

அவனை தன் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது என்பதை உணர்ந்தான் பிரியன். தனக்காய் அவன் செய்த இந்த உதவிக்கு தான் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்பது அவனுக்கு புரியவில்லை. காலம் அதை தெரிந்து வைத்திருந்தது…

 

அதே நேரம் பிரியனிடம் வதனாவின் ட்ரான்ஸ்பர் பற்றி பேசிவிட்டு வைத்த ராம்க்கும் பிரியனின் நினைவே. தன்னிடம் போன் பேசி வைத்த பின்னே நடந்த நிகழ்வுகளை அவன் அசைப்போட்டான் இப்போது…

____________________

 

பிரியனின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அவன் அழைத்திருந்த எண்ணுக்கு முயற்சி செய்ய அதுவோ தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக சொன்னது.

ராமிற்குள் குழப்பம், நடந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ண ஊர்வலம்.

 

தன்னுடைய எண் எப்படி அவனுக்கு கிடைத்திருக்கும். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை தான் ராவ் கிரானைட்ஸ் என்ற தங்களின் அடையாளமே போதுமே…

 

ராமினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ராகேஷ் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை அவனறிவான். அவனின் எண்ணுக்கு தன் வீட்டு எண்ணில் இருந்தே அழைத்திருந்தான் இப்போது.

 

‘இந்நேரம் அவனுக்கு விடிந்திருக்கும்’ என்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டான். எதிர்முனையில் அழைப்பை ஏற்றவன் “எஸ் ராகேஷ் ஹியர்”

 

“ராக்கி ராம் பேசறேன்…” என்றவன் நண்பனின் நலம் விசாரிக்க பதிலுக்கு அவனும் விசாரித்து முடித்திருந்தான்.

 

“என்ன சர்ப்ரைஸ் நீ எனக்கு போன் பண்ணியிருக்கே… இந்தியா டைம் டூ யர்லி ஆச்சே”

 

“இல்லைடா சும்மா தான் போன் பண்ணேன்… தூக்கம் வரலை சீக்கிரம் எழுந்திட்டேன், உன்கிட்ட பேசி நாளாச்சேன்னு போன் பண்ணேன்…”

 

“அப்புறம் உன் பிரண்ட் பவள் எப்படியிருக்கான்??” என்று பேச்சில் தூண்டில் போட்டான் அவன்.

 

“அடடா பாருடா இவரு அவரை விசாரிக்கறதை… அவனா நீ!!” என்று கிண்டலாய் கேட்டாலும் “நல்லாயிருக்கான்டா, அவனுக்கு மேரேஜ் ஆகிட்டு தெரியும்ல”

 

“ஹ்ம்ம் நீ தானே சொன்னே…”

 

“ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி பார்த்திட்டு வந்தேன்… ஆபீஸ் வந்தா சாட் வருவான்… கொஞ்ச நாளா ஆளே காணோம்” என்றான் அவன்…

 

மேலும் ஒரு ஐந்து நிமிடம் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் மிக தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான்.

 

நேரம் கடத்துவது நல்லதல்ல என்று தோன்ற அவசரமாய் குளியலறை புகுந்திருந்தான் அவன். வேறு உடைக்கு மாறி வெளியே செல்ல தயாராகி வந்தவனை எதிர்கொண்டார் அவன் அன்னை.

 

“எங்கடா கிளம்பிட்டே இந்நேரமே?? பத்து மணிக்கு மேல தானே ஆபீஸ் போவே??”

 

“அம்மா எனக்கு கொஞ்சம் வெளிய வேலையிருக்கு, இன்னைக்கு ஆபீஸ்க்கு நான் வரமாட்டேன்… அப்பாவை போக சொல்லிடுங்க, நான் அப்புறம் அவர்க்கு போன் பண்ணுறேன்”

“டேய் என்ன விளையாடுறியா நீயே உங்கப்பாகிட்ட சொல்லிட்டு போ…” என்று அவர் குரல் உயர்த்த “எனக்கு முக்கியமான வேலையிருக்கும்மா…” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் காரில் ஏறியமர்ந்தான்.

 

வீட்டிலிருந்து கிளம்பி விட்டானே தவிர அவனுக்கு வதனாவை எப்படி சந்திப்பது என்பதில் இன்னமும் குழப்பம் தான்.

 

பிரியனுக்கு பிடிக்காது என்பதற்காகவே அவனிடத்தில் பொதுவாய் கூட நின்று பேசாதவளாயிற்றே!! இப்போது எப்படி அவள் முன் சென்று நிற்பது.

 

என்னவென்று சொல்வது… பிரியனின் பெயரை சொன்னால் அவள் என்னுடன் பேசாமல் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

 

பிரியன் போன் செய்தான் என்று சொன்னாள், அவன் எங்கு சென்றிருக்கிறான் என்று விசாரிப்பாள் என்ன சொல்ல அதற்கு… இப்படியாய் பல குழப்பம் அவனுக்குள்.

 

ஒரு வழியாய் பிரியன் சொன்ன முகவரிக்கு வந்து சேர்ந்துமிருந்தான். உள்ளே செல்லத்தான் இன்னமும் யோசனை.

 

எதுவாயிருந்தாலும் சமாளிக்க வேண்டியது தான். அங்கு சென்ற பிறகு என்ன தோன்றுகிறதோ அதையே பேசுவோம் என்று முடிவிற்கு வந்து லிப்டிற்குள் நுழையும் முன் வெளியே இருந்த போர்டை பார்த்தான்.

அது அந்த முகவரியில் உள்ள அனைத்து பிளாட்டில் உள்ளவர்களின் பெயர் அடங்கிய போர்ட், அதை கண்டதும் மனதிற்குள் உடனடியாய் ஒரு எண்ணம் உதித்தது.

 

நான்காவது மாடிக்கான பொத்தானை அழுத்தி காத்திருந்தான். லிப்ட் நின்றதும் வெளியில் வந்தவன் சரியாய் பிரியனின் வீட்டு காலிங்பெல்லை அழுத்தவும் உள்ளே யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது அவனுக்கு.

 

அவசரமாய் வந்து கதவு திறந்தவளின் கண்கள் அழுது வீங்கியிருந்தது. எதிரில் நின்றவனை கண்டதும் முகம் மொத்தமாய் வாடிப் போனது அவளுக்கு.

 

ராமால் புரிந்து கொள்ள முடிந்தது அவளை. பிரியன் என்று நினைத்து கதவை திறந்திருப்பாள் என்று. அவளோ இவனை முன்பே பார்த்த உணர்வெல்லாம் இல்லாமல் என்னவென்பது போல் பார்த்தாள் அவனை.

 

“D5 சங்கீத் ரெட்டி??”

 

“சாரி தெரியாது…” என்றாள் அவள்.

 

“என்னை ஞாபகமிருக்கா??” என்றான் ராம்.

 

கொஞ்சம் யோசனையாய் அவனை ஏறிட்டாலும் சட்டென்று அவள் நினைவடுக்கில் எதுவும் தோன்றவில்லை அவளுக்கு “தெரியலை…” என்றிருந்தாள்.

 

“ராம்… ஞாபமிருக்கா ஒரு முறை பிரவீன் ப்ரோப்ளம்ல நாம மீட் பண்ணியிருக்கோம். ஒரே காலேஜ் தான் நாம, உங்க சீனியர் நானு” என்று கவனமாய் பிரியனை ஞாபகம் செய்யாமல் அவளிடத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“ஆமா சாரி… நீங்க ராம் தானே…” என்று முதலில் அசுவாரசியமாய் பதில் சொன்னவளுக்கு இவனுக்கு பிரியனை பற்றி எதுவும் தெரிந்திருக்குமா என்ற ஆவலும் பரபரப்பும்.

 

ஆனால் இவர்கள் இருவருக்கும் தான் ஒருவரை ஒருவர் பிடிக்காதே அப்புறம் எப்படி விசாரிப்பது என்று யோசித்தாள். ராகேஷுக்கு இவனை நன்றாக தெரியும் என்று அவளறிவாள்.

 

இவனிடம் கேட்டால் ராகேஷ் பற்றி அறிய முடியும், பிரியனுடன் படித்தவர்கள் மற்ற நண்பர்கள் விபரம் கூட கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற தோன்றியது.

 

அவள் யோசனையை கண்டுக்கொண்டவன் “எனி ப்ராப்ளம்?? நான் எதுவும் ஹெல்ப் பண்ணணுமா??” என்று கேட்டேவிட்டான்.

 

அவள் கேட்குமுன் முந்தியவனை நினைத்து உள்ளே ஆறுதல் தோன்றியது அவளுக்கு. கண்களில் மளுக்கென்று கண்ணீர் கட்டியது.

 

“பிரியன் இல்லையா வீட்டில??” என்றான் தொடர்ந்து.

 

“உங்களுக்கு தெரியுமா??”

 

“ராகேஷ் எனக்கும் பிரண்ட் தான்… நீங்க மேரேஜ் செஞ்சுக்கிட்டீங்கன்னு எனக்கு தெரியும்” என்றான் ராம்.

 

அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று ஆயிரம் யோசனைகளையும் மீறி பிரியனின் பிரிவே அவளை வாட்ட அவனிடம் உதவி கேட்பது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.

 

அவனை அழைத்து அமர வைத்து முன் தினம் இருவருக்குமான சண்டை என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி பின் பிரியன் காணாமல் போனதை பற்றி சொன்னாள்.

 

“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு?? என் மேல கோபமா போனார்?? எங்காச்சும் வண்டி எடுத்திட்டு போய் அவருக்கு எதுவும் ஆகி….” என்று சொல்லும் போதே ஓவென்ற கதறல் அவளிடத்தில்.

 

“ரிலாஸ் ப்ளீஸ் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது… நாம எதுக்கும் போலீஸ்ல ஒரு கம்பிளைன்ட் பண்ணிடலாம்… நான் பிரியன் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கறேன்”

 

“போலீஸ் கம்பிளைன்ட்டா…” என்றாள் அதிர்வாய்.

 

“நத்திங் ராங்… அது பேசிக் பார்மாலிட்டி தானே, ப்ளீஸ் வாங்க போவோம்…”

 

“நானா…”

 

“ஆமா நீங்க கண்டிப்பா வரணும்… ஒண்ணும் பயம் வேண்டாம் நான் தான் கூட இருக்கேன்ல… பிரியனோட போட்டோ வேணுமே…” என்றான்.

 

“எதுக்கு??”

 

“ஸ்டேஷன்ல கேட்பாங்க கொடுக்கணும்…”

 

அவன் பேசப்பேச அவள் நெஞ்சு உலர்ந்தது. கடவுளே அவனுக்கு எதுவும் ஆகியிருக்ககூடாது அவன் நன்றாயிருக்க வேண்டும் என்பதே அவளின் பிரார்த்தனையாய்.

 

உள்ளே சென்று எதையோ தேடியவளின் கையில் அவர்கள் திருமணத்தின் அன்று எடுத்த புகைப்படம் சிக்கியது.

 

அதைக் கொண்டு வந்து ராமிடம் கொடுக்க “அவன் மட்டும் தனியா இருக்கற போட்டோ இல்லையா??”

 

“இது கல்யாணத்தனைக்கு எடுத்தது… வேற வேற…” என்று யோசித்தவள் மீண்டும் உள்ளே சென்று தேடினாள்.

 

“இந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஓகே வா…” என்று அவனிடத்தில் கொடுக்க “ஹ்ம்ம்…” என்றவன் இரண்டு போட்டோவையும் தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான்.

“சரி போவோம்…” என்று சொல்லி அவன் எழ அவளும் பின்னாலேயே எழுந்தாள்.

 

“ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க… நான் கீழே கார்ல இருக்கேன்…” என்றுவிட்டு வெளியில் வந்தான் ராம்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி நலுங்கியிருந்த உடையை மாற்றி வேறு அணிந்து அவளும் கீழே வந்தாள்.

 

முன்னால் உட்காருவாளோ மாட்டாளோ என்று எண்ணி அவன் பின் கதவை திறக்கப் போக ‘உதவி பண்ண வந்தவரை எனக்கு டிரைவர் ஆக்குறதா’ என்று எண்ணி அவள் முன்னால் ஏறிக் கொண்டாள்.

 

இருவருமாய் போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்பிளைன்ட் கொடுத்தனர். ராம்க்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் என்பதால் அவளை அதிகம் கஷ்டப்படுத்தவில்லை அவர்கள்.

 

இருந்தாலும் தூண்டி துருவி கேள்விகளை கேட்டு அவள் சொன்னதை குறித்துக் கொண்டனர். ராம் அவனின் செல் எண்ணை கொடுத்து வந்தான் அவர்களிடம்.

 

அவர்கள் அங்கிருந்து வெளியில் வர “அவர் கிடைச்சிருவாருல” என்றாள் ஆற்றாமையுடன்.

 

“கண்டிப்பா கிடைச்சிருவான் நோ வொர்ரிஸ்” என்றவன் தன் கைபேசி எண்ணை அவளுக்கு கொடுத்தான்.

 

“எப்போ வேணாலும் போன் பண்ணுங்க… உங்களை வீட்டுல விட்டு நான் கிளம்பறேன்” என்று சொல்லி அவளை கூட்டிச் சென்று வீட்டில் விட்டான்.

 

செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி அவளுக்கு உணவு பார்சல் செய்திருந்தான்.

 

“வேண்டாமே…”

 

“எப்படியும் நீங்க சாப்பிடாம இருக்க தான் பார்ப்பீங்க… பிரியன் வரும் போது நீங்க தெம்பா இருக்க வேண்டாமா… தயக்கம் வேணாம்” என்று சொல்லி வீட்டில் அவளை இறக்கி விடும் போது அவள் கையில் அதை கொடுத்தான்.

 

வதனா கல்லூரிக்கு செல்லவில்லை, தினமும் ஒரு முறையாவது ராமிற்கு போன் செய்து பிரியனை பற்றி விசாரித்தாள்.

 

அவனை தொந்திரவு செய்கிறோமோ என்று அவ்வப்போது குற்றவுணர்வு வேறு எழும் அவளுக்கு.

 

இப்படியாக அந்த நாட்கள் கடக்க பிரியனை பிரிந்த பத்தாவது நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தகவல் வந்தது அவர்களை நேரில் பார்க்கச் சொல்லி.

 

ராம் நேராய் வந்து அவளை அழைத்துச் சென்றான். அங்கு இன்ஸ்பெக்டர் சொன்ன செய்தி ராமை குழப்பியது என்றால் வதனாவை முற்றிலும் நிலை குலைய வைத்தது.

“நீங்க நினைக்கிற மாதிரி இவர் காணாம எல்லாம் போகலை மிஸ்டர். ராம். இவரு உங்ககிட்ட எல்லாம் சொல்லாம கொள்ளாம வெளிநாட்டுக்கு போய்ட்டார் போல…”

 

“மே பி இவர் மனைவி மேல இருக்க கோபத்துல கூட சொல்லாம போயிருக்கலாம்…”

 

“என்ன??” என்றனர் இருவருமே அதிர்ந்து.

 

“இல்லை அவரு அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டார், கோபமா இருந்தா கூட அவரா வந்து என்கிட்ட பேசுவாரு. இவ்வளவு பெரிய விஷயமெல்லாம் அவர் செய்ய மாட்டாரு”

 

“என்னைவிட்டு எல்லாம் வெளிநாட்டுக்கு போயிருக்க மாட்டார்” என்ற வதனாவின் குரல் உடைந்து கதற ஆரம்பித்தது.

 

“ரிலாக்ஸ் மேடம், நான் நல்லா விசாரிச்சுட்டு தான் சொல்றேன்… அவர் ஆபீஸ்ல மூலமா தான் அவர் வெளிநாடு போயிருக்கார்…” என்றார் அவர்.

 

ராம் அவருக்கு நன்றி சொல்லி வதனாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். “நீங்க கார்ல உட்காருங்க, நான் அவனோட ஆபீஸ் பிரண்ட்ஸ்கிட்ட விசாரிக்கறேன்”

 

“ஒரு வாரம் முன்னாடி அவங்களுக்கு போன் பண்ணப்போ அவன் ஆபீஸ் வரலைன்னு தான் சொன்னாங்க… இன்ஸ்பெக்டர் சொல்றது பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியலை” என்றான் அவன்.

 

டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் அவள் முன்னேயே யாருக்கோ போன் செய்தான். “நிவாஸ் ராம் ஹியர்…” என்று ஆரம்பித்து அவன் பிரியனை பற்றி கேட்டான்.

 

“எஸ் ராம்… பிரியன் கனடா போயிருக்கான் போல, நேத்து தான் ப்ராஜெக்ட் ஹெட் சொன்னாரு… ஆனா நான் அவனை நேர்ல பார்க்கவே இல்லை…”

 

“இவ்வளோ தூரம் க்ளோஸா பழகிட்டு எங்ககிட்ட கூட அவன் ஒரு வார்த்தை சொல்லவேயில்லை…” என்று ஆதங்கமாய் அந்த நிவாஸ் என்பவன் பேசி முடிக்க அவனிடம் மேலும் இரண்டொரு வார்த்தை பேசி போனை வைத்தான் ராம்.

 

“என்னாச்சு…” என்றவளிடம் நிவாஸ் சொன்னதை சொல்ல வதனா முற்றிலும் நொறுங்கினாள்.

 

யாருமற்ற அநாதையாய் தனிமரமாய் நிற்பது போன்ற உணர்வு. இதற்கு முன்பும் அவளுக்கென்று யாரும் இருந்ததில்லை தான்.

 

ஆனால் அங்கு இவளை போல இருந்த ஜீவன்களுக்கு இவளும், இவளுக்கு அவர்களுமாய் துணையாய் இருந்தனர்.

 

பிரியன் இப்படி பாதியில் அவளை விட்டுச் செல்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை நடப்பதை நடந்ததை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறியது அவளுக்கு.

 

வதனாவை அவள் வீட்டில் இறக்கி விடும் போது ராமிற்கு அவளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பிரியனை பற்றி அவன் கேட்ட தகவல் எந்தளவிற்கு உண்மை என்றும் அவனுக்கு புரியவில்லை.

 

எது எப்படி இருந்த போதும் பிரியனை முழுதாய் தவறாய் அவனால் நினைக்க முடியவில்லை என்பது மட்டுமே நிஜமாய்!!

 

“வதனா இதெல்லாம் உண்மையான்னு இப்பவும் எனக்கு சந்தேகமா தான் இருக்கு… நான் அவங்க சொன்ன கனடா பிரான்ச்ல எதுக்கும் விசாரிக்கறேன்…”

 

“அவன் அங்க இருந்தா அவனோட காண்டக்ட் நம்பர் வாங்கி உங்களை பேச வைக்கிறேன், எதுவும் பீல் பண்ணாதீங்க” என்று பேசி கிளம்பினான்.

 

ஏனோ இன்று அவளை தனியாய் இறக்கி விடும் போது மனதிற்கு கஷ்டமாக தோன்றியது அவனுக்கு. அவன் அறிவு அவளை தனியாய் விடாதே என்றும் சொல்லியது.

 

ஆனாலும் அவனால் அங்கே இருக்க முடியாதே என்பதால் அங்கிருந்து கிளம்பினான். அவளை விட்டு நேரே அலுவலகம் வந்து சேர்ந்தான்.

 

அவன் அறிந்தவர் தெரிந்தவர் என்று யாரையெல்லாமோ பிடித்து பிரியன் கனடா சென்ற செய்தி உண்மை என்பதை பிடித்தான். அங்கு அவனின் காண்டாக்ட் எண்ணை வாங்கி பேச முயற்சி செய்தான்.

 

அங்கிருந்தவர்களோ அவன் இன்று விடுமுறை என்றனர், அவன் மொபைல் எண் கேட்டால் இந்த ஊருக்கு இப்போது தானே வந்திருக்கிறான், இன்னும் புது எண் அவனுக்கு வழங்கப்படவில்லை என்றனர்.

 

எல்லாம் உறுதியாய் தெரிந்த போதும் பிரியனிடம் பேச மட்டும் அவனால் முடியவில்லை. அதுவே ராமிற்கு எங்கோ ஏதோ தவறு நடக்கிறது என்பதை பறைசாற்றுவதாய் தோன்றியது.

 

அவன் வீட்டிற்கு கிளம்பும் போது வெகுவாய் களைத்திருந்தான். எட்டு மணிக்கு மேல் தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்.

 

வீட்டுக்கு செல்லும் முன் ஏனோ வதனாவை ஒரு எட்டு பார்த்து செல்வோம் என்று தோன்ற வண்டியை பிரியனின் அபார்ட்மெண்ட் நோக்கி செலுத்தினான்.

 

நான்காவது மாடிக்கு வந்தவன் அவர்களின் பிளாட்டின் அழைப்பு மணியை அழுத்தி காத்திருக்க எந்த பதிலுமில்லை.

 

மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய மணி அடித்து ஓய்ந்தது தான் மிச்சமாய்!! மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது அவனுக்கு.

கதவை தட்டி பார்த்தும் பதிலில்லை என்றதும் பதட்டம் தொற்றிக்கொண்டது அவனை. கிட்டத்தட்ட கதவை தன் தோளால் இடித்து திறக்க முயற்சி செய்ய கதவு திறப்பேனா என்றிருந்தது.

 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் எட்டிப் பார்க்க அவர்களிடம் விஷயத்தை சொல்லி உதவி கேட்டான். தன் தோழனின் மனைவி என்று வதனாவை சொல்லி தன்னையும் யாரென்று அடையாளப்படுத்த அவனை ஓரிருவருக்கு தெரிந்திருந்தது.

 

அபார்ட்மெண்ட் செகரட்டரி வந்து சேர கதவை உடைப்பது என்ற முடிவிற்கு வந்து கிட்டத்தட்ட கதவை அவர்கள் உடைத்து உள்ளே செல்ல வதனா தூக்க மாத்திரை விழுங்கி மயங்கியிருந்தாள்.

 

அவளை தூக்கிக்கொண்டு அவன் மருத்துவமனைக்கு விரைந்தான். அவள் தூக்க மாத்திரை விழுங்கியது ஒரு அதிர்ச்சி என்றால் அங்கு மருத்துவமனையில் அவனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அங்கு அவளை சேர்த்துக்கொள்ள அவர்கள் பார்மாலிட்டிஸ் பார்க்க அவன் தனக்கு தெரிந்தவர்களை கொண்டு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

 

அவள் ஐசியூவில் இருக்க ஒரு மணி நேரம் கழித்து வந்த மருத்துவர் அவனை அழைத்தார்.

 

“மிஸ்டர். ராம் இவங்க உங்களுக்கு என்ன வேணும்??” என்றார் அவர்.

“என் பிரண்ட் வைப் டாக்டர்… அவன் ஊருக்கு போயிருக்கான், இவங்க அவன் பிரிவு தாங்க முடியாம இப்படி செஞ்சுட்டாங்க… எனிதிங் சீரியஸ் டாக்டர்??”

 

“இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், அவங்க ஹஸ்பன்ட் உடனே வரவைங்க… இவங்க இப்போ கர்ப்பமா இருக்காங்க…” என்றதும் ராம் அப்படியே நின்றுவிட்டான்.

 

“ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… நல்ல வேலையா அவங்க சாப்பிட்ட மாத்திரையோட அளவு கம்மியா இருந்ததால அவங்களை சேப் பண்ண முடிஞ்சது…”

 

“இல்லன்னா ஒண்ணுக்கு ரெண்டு உயிரோட நிலைமை ரொம்பவும் கஷ்டமா போயிருக்கும்… ஒரேடியா எல்லாம் சரியாகிட்டு சொல்ல முடியாது…”

 

“இவங்க எடுத்துக்கிட்ட டேப்லேட்னால பேபிக்கு பின்னாடி எதுவும் ப்ராப்ளம் வந்தாலும் வரலாம். இப்போதைக்கு ரெண்டு பேருமே ஓகே தான்…”

 

“ஷி நீட் சம் ரெஸ்ட், யாராச்சும் கூடவே இருக்கணும்… அவங்க ஹஸ்பன்ட்கிட்ட பேசி உடனே வரச்சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே சென்றவர் ராமின் யோசனை முகம் கண்டு நிறுத்தினார்.

 

“எனி இஷ்யூ ராம்?? உண்மையை சொல்லுங்க என்கிட்ட, நீங்க கிஷோர் பிரண்ட் அப்படிங்கறதால தான் நான் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கேன்”

ராம் இப்போது பிரியன் அவனிடம் பேசியது தவிர்த்து அவனைப் பற்றி அவன் தற்போது அறிந்த தகவல்களை அவரிடம் சொன்னான்.

 

“என்ன மனுஷன் அவரு?? சின்ன சண்டைக்கெல்லாம கோவிச்சுட்டு போவாங்களா… அதுவும் ஊரைவிட்டே, சம்திங் பிஷ்ஷி” என்றார் அவர்.

 

“ஐ நோ ஹிம், ஹி இஸ் நாட் லைக் தட் கை… என்னாச்சு சரியா தெரியலை… எனக்கு தெரிஞ்சு அவன் இப்போ காணாம போனதா தான் தோணுது…”

 

“ஆனா எதுக்காக என்னன்னு எனக்கு தெரியலை…” என்று தன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னான் அவரிடத்தில்.

 

“ஓகே அதை பத்தி எனக்கு இப்போ தேவையில்லை… ஆனா இதுனால எனக்கு எதுவும் பிரச்சனை வந்திடற மாதிரி செய்யாதீங்க ராம்…”

 

“அவங்க கூடவே ஒரு ஆள் எப்பவும் இருக்கணும்… தனியா விடாதீங்க, டிஸ்சார்ஜ் ஆக முன்னே  சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ஒரு கன்சல்டேஷன் காமிச்சிடலாம்” என்று சொல்லி முடித்தார்.

 

“ஓகே டாக்டர், தேங்க்ஸ் பார் யூவர் கைண்ட் ஹெல்ப்” என்று அவருக்கு நன்றியுரைத்து வெளியில் வந்தான்.

 

அவன் வீட்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது கைபேசியில். “சொல்லுங்கம்மா…”

“டைம் ஆச்சு ராம் நீ எப்போ வீட்டுக்கு வருவே??”

 

“அம்மா நான் இப்போ ஆஸ்பிட்டல்ல இருக்கேன்” என்றவன் சுருங்க விபரமுரைத்தான்.

 

“இப்போ அந்த பொண்ணுகூட யாருமில்லைம்மா நான் இன்னைக்கு இங்க இருக்கேன்… நீங்க படுங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்” என்று பேசி வைத்துவிட்டான்.

 

கிட்டத்தட்ட ஒரு வாரம் வதனா மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டி இருந்தது. அவளை கணமும் தனியே விடவில்லை ராம்.

 

அவன் வீட்டிலேயே இருக்கும் அவன் சித்தி பெண் வருணியை அவனில்லாத நேரத்தில் அவளை பார்த்துக் கொள்ள கேட்டிருந்தான்.

 

இருவருமாக ஆள் மாற்றி ஆள் பார்த்துக் கொண்டனர் அவளை. இடையில் இரண்டு மூன்று முறை ராமின் அன்னையும் வந்து பார்த்து சென்றார்.

 

ராமின் தந்தைக்கு அவன் இப்படி செய்வதெல்லாம் பிடித்தமில்லை என்பதால் அவர் இந்த விஷயத்தில் தலையிடவில்லை, அதே சமயம் மகனை எதிர்க்கவும் இல்லை.

 

அன்று அவளை டிஸ்சார்ஜ் செய்து அவனின் வீட்டிற்கே அழைத்து வந்தான். “இதெல்லாம் வேண்டாங்க ராம், நான் அங்கவே போறேன்…” என்று மறுத்தாள் அவள்.

“வதனா அது பிரியனுக்கு ஆபீஸ்ல கொடுத்தது நீங்களே விருப்பப்பட்டாலும் அங்க இனி தொடர்ந்து இருக்க முடியாது…” என்று உண்மை பாதியும் அவள் நலன் கருதியும் கூட குறைய சேர்த்து சொன்னான்.

 

“அப்… அப்போ நான் பழைய மாதிரி என்னோட இல்லத்துக்கே போய்டறேன்… அங்க போய் ஏதாச்சும் வேலை பார்த்து…”

 

“ஸ்டாப் இட் வதனா… சும்மா தேவையில்லாத பேத்தல் எல்லாம் வேணாம்… என்னை உன்னோட பிரண்டா நினைச்சுக்கோ… எப்பவும் நான் உன்னோட இருப்பேன்…” என்றவன் பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறியிருந்தான்.

 

“இல்லை… அது…”

 

“உன் வயித்துல ஒரு குழந்தை இருக்கு, அதை மனசுல வை… நாளைக்கு பிரியன் வரும் போது நீ இப்படி இருந்தா…” என்று அவன் தொடரும் போதே அவனை கைக்காட்டி நிறுத்தினாள்.

 

“இனிமே அவர் பேரை என்கிட்ட சொல்லாதீங்க… நான் வேணாம்ன்னு போனவர் இனியும் வருவாரான்னு எனக்கு தெரியலை…”

 

“அதை நம்பி ஏமாற நான் இன்னும் முட்டாளில்லை. ஒரு மாசமா என்னை அவர் தேடவேயில்லை, வந்து பார்க்கவுமில்லை…”

 

“இனியும் வருவாருன்னு எனக்கு நம்பிக்கையும் இல்லை… எனக்கு இந்த குழந்தை வேணாம்…” என்றாள்.

 

“முட்டாள் மாதிரி பேசாதே வதனா… அந்த உயிர் உன்னை என்ன பண்ணுச்சு, அது பாவம் தானே… அதை அழிக்கணும்ன்னு ஏன் நினைக்கிறே??”

 

“இல்லை அந்த ஜீவனுக்கும் என்னை போல யாருமில்லைங்கற நிலை வரக்கூடாதுல அதுக்காக தான் சொன்னேன்” என்றவள் கதற ஆரம்பிக்கவும் அவனுக்கு அவளை எப்படி சமாதானம் செய்ய என்றானது.

 

“இங்க பாரு உன்னை மாதிரி உன் குழந்தைக்கு யாருமில்லாம எல்லாம் போக மாட்டாங்க… தந்தை ஸ்தானத்தில இருந்து அவளை நான் பார்த்துக்குவேன்…”

 

“அவளோட அம்மா நீ எப்பவும் அவ கூட இருப்பே, என்னோட மொத்த குடும்பமும் உனக்காக இருக்கும்… உனக்கு எந்த கவலையும் வேணாம்” என்று பலவிதமாய் பேசி அவளை சமாதானம் செய்தான்.

 

பிரியனின் வீட்டிலிருந்த அவள் உடைமைகள் மொத்தமும் காலி செய்து அவன் வீட்டிற்கு கொண்டு வந்தான்.

 

ராமின் அன்னை ஒரு நேரம் அவளிடம் நன்றாய் பேசுவார் ஒரு நேரம் முகம் திருப்பி போவார். ராமின் தங்கை வருணி எப்போதும் அவளுடன் இருப்பதால் தனிமை கொஞ்சம் தூரமானது அவளுக்கு.

வேகமாய் மாதங்கள் கடந்திருக்க வதனாவிற்கு பிரசவ வலியும் கண்டது. சுகப்பிரசவம் செய்ய முயற்சிக்க ஏனோ அது முடியாமல் போக கடைசியாக ஸ்கேன் எடுத்த போது தான் தெரிந்தது.

 

குழந்தையின் ஒரு கால் சற்றே வளைந்திருப்பது… வதனாவாலும் குழந்தையை பிரசவிக்க முடியவில்லை, குழந்தையும் வெளியே வர சிரமப்பட இறுதியாக அறுவைசிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

 

வதனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறக்க மருத்துவர் அவளை கொண்டு வந்து ராமின் கைகளில் கொடுக்க முதன் முறையாய் அவனுக்கு கண்கள் கலங்கி போனது.

 

பிஞ்சு கைகளை குழந்தை அசைக்க அந்த நொடி பிரியனுக்காய் ஒரு நொடி வருத்தப்பட்டான் அவன். “இந்த சந்தோசமான தருணத்தை அனுபவிக்க முடியாம எங்கேடா போனே??” என்றான் வாய்விட்டு.

 

குழந்தைக்கு இசைப்பிரியா என்று பெயரிட்டான் ராம். வதனா குழந்தையை பெற்றாலும் அவளை முழுவதுமாய் தன் வசம் வைத்திருந்தது ராமே!!

 

அக்குழந்தையின் கால்கள் தரையில் படாமலே பார்த்துக் கொண்டான். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் போல் தான் அவளை கவனித்தான். அதுவரையிலும் பேசாமல் இருந்த ராமின் அன்னை அவனை கோபமாய் எடுத்தெறிந்து பேசினார் ஒரு நாள்.

குழந்தையை தன்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்று சத்தம் போட்டார். வதனா வந்ததில் இருந்து ராம் தன்னை பற்றி சிந்தனை எல்லாம் மறந்து போனதாக குற்றம் சாட்டினார் அப்பெண்மணி.

 

அவர்கள் வழக்கத்தில் ஆண்கள் இருபத்தியைந்து வயதிற்குள் திருமணம் செய்து கொள்வர்.

 

ராம் அதெல்லாம் மறந்து போனவனாய் வதனாவின் பின்னேயும் அவள் பெற்ற குழந்தையின் பின்னேயும் செல்கிறான் என்று கடுமையாக சாட ராம் வேறுவழியில்லாது அவன் திருமணத்திற்கு சம்மதித்தான்.

 

வருணி வேறு திருமணமாகி சென்றுவிட்டதால் வதனாவிற்கு துணையென்று யாருமில்லை. மேலும் வதனாவை கட்டாயப்படுத்தி மீண்டும் கல்லூரியில் சேர்த்துவிட்டான் அவள் படிப்பை முடித்து வருமாறு.

 

அவளுக்காய் தமிழை கற்றுக்கொண்டான் அவன். பிரியனை பிரிந்து தூக்க மாத்திரை விழுங்கியிருந்த அந்த நாட்களில் அவள் தமிழில் புலம்பிய எதுவுமே அவனுக்கு புரியவில்லை.

 

கொஞ்சம் கொஞ்சம் புரிந்த தமிழ் கூட அவனுக்கு விளங்கவில்லை. சமயத்தில் அவள் பேசுவதை ரெக்கார்ட் செய்து நன்கு தமிழ் அறிந்த அவன் நெருங்கிய பெண் தோழி ஒருத்தி மூலம் கேட்டறிந்தவன் முதலில் கற்றது தமிழை தான்.

 

ராமின் அன்னை இன்று பெண் பார்க்க செல்ல வேண்டும் என்று அவனிடம் சொல்லியிருந்தார். அவருக்கு எங்கே ராம் வதனாவை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று விடுவானோ என்ற பயம்.

 

அந்த பயத்தில் தான் மகனிடம் ஏறுக்குமாறாய் பேசி அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார். சுகுணாவை போட்டோவில் பார்த்ததுமே பிடித்து போனது அவனுக்கு…

 

அவளை பெண் பார்க்க சென்றவன் உள்ளே சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளிடம் தனியே பேச வேண்டும் என்பதை தான் சொல்லியிருந்தான்…

 

அவன் என்

நண்பனுமல்ல

எதிரியுமல்ல

துரோகியுமல்ல

தியாகியுமல்ல

உயிருமல்ல

உணர்வுமல்ல

ஆனால்

என் உயிரானவளை

காப்போனவன்

காப்பானவன்

தாயுமானவன்

தந்தையுமானவன்

மொத்தத்தில் எனக்கு

அனைத்துமானவன் அவன்!!