அத்தியாயம் – 16

 

சில்கூரில் அமைந்துள்ள அழகிய பாலாஜி கோவில் அது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் இருப்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.

 

மூலவர் வெங்கடேசப் பெருமாள், இவருக்கு ஒரு சிறப்பு பெயரும் உண்டு அது விசா பாலாஜி என்பது. வெளிநாடு செல்ல விசா கிடைக்காதோர் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் விசா கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

 

அப்படி விசா கிடைத்தவுடன் கோவிலுக்கு சென்று நூற்றிஎட்டு முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.

 

கோவிலின் முக்கிய சிறப்பு எதுவென்றால் இங்கு ஏழை பணக்காரன் என்று எந்த வித்தியாசமில்லாமும் இல்லாமல் அனைவரும் ஒரே வரிசையில் நின்றே கடவுளை தரிசனம் செய்வர். இக்கோவிலில் எந்தவித சிறப்பு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

 

அந்த காலை நேரத்தில் பரபரப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது கோவில். அங்கு அப்போது தான் பிரியனுக்கும் வதனாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது.

 

பிரியனின் தோழர்கள் புடைசூழ அவர்கள் சந்நிதானத்திலிருந்து வெளிவந்து ஒரு ஓரமாய் சென்றனர்.

வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.

 

“வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”

 

“நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்… ஆனா…”

 

“என்ன ஆனா??”

 

“ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு…”

 

“நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான் செஞ்சிருப்பான்… என்னை பார்த்திட்டு சும்மா இருக்க சொல்றியா??” என்றவனுக்குள் லேசாய் கோபம் துளிர்த்து.

 

அவன் கோபம் உணர்ந்தவள் “இல்லை நான் அப்படி சொல்ல வரலை, சாரி…” என்றாள் அவன் முகம் பார்த்து.

 

“எனக்கு தான் யாருமில்லை… உங்களுக்கு எல்லாரும் இருக்காங்க தானே… அவங்களுக்கு தெரியாம நடந்தா பாவம் அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா”

 

இன்னமும் அவன் முகம் சமாதானமடையாததை கவனித்தவள் “நான் இன்னும் படிப்பை கூட முடிக்கலை, அதான் அப்படி சொல்லிட்டேன் வேற ஒண்ணுமில்லை” என்றாள் தொடர்ந்து.

“உன் படிப்பை நான் எந்தவிதத்திலயும் தொல்லை பண்ணமாட்டேன் சரியா… நீ அதை நினைச்சு கவலைப்பட வேண்டாம், புரியுதா…”

 

“உன்னை யாருக்கோ விட்டுத்தர என்னால முடியாது. அதனால தான் இந்த அவசரக்கல்யாணம் மத்தப்படி உனக்காக நான் எவ்வளவு வருஷம் வேணும்னாலும் காத்திட்டு தான் இருப்பேன்…”

 

“அப்புறம் எங்க வீட்டுல சம்மதம் கேட்டு கல்யாணம் பண்ணுற அளவுக்கு இப்போ நமக்கு நேரமில்லை போச்சு அது உனக்கு நல்லா தெரியும் தானே…”

 

“இனிமே எப்பவும் இப்படி பேசாதே… இன்னைக்கு தான் நம்ம கல்யாணம் நடந்திருக்கு, கொஞ்சம் முகத்தை சிரிச்ச மாதிரி வைச்சுக்கோ. எனக்காக தான் இத்தனை பேரும் இப்போ இங்க வந்திருக்காங்க”

 

“ராக்கியை தவிர மத்த எல்லாருமே என்னோட கம்பெனில கூட வேலை பார்க்கறவங்க… நீ இப்படி டல்லா இருந்தா எதுவும் நினைச்சுக்குவாங்க…”

 

வதனாவின் முகம் இப்போது சற்றே தெளிந்திருந்தது. அவனை பார்த்து லேசாய் புன்னகைத்தாள். “அப்பாடா இது போதும் வா…” என்றவன் அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

 

“நீ பேசிட்டு இரு, நான் வீட்டுக்கு போன் பண்ணிட்டு வர்றேன்” என்று பிரியன் நகரப்போக அவள் முகம் மீண்டும் கூம்பியது.

“இங்க பாரு திரும்பவும் முகத்தை இப்படி வைச்சுக்காதே… எங்க வீட்டில இருக்கவங்களுக்கு சொல்லிட்டு செய்ய அவகாசம் இல்லை அதனால முதல்ல சொல்லலை”

 

“ஆனா அவங்ககிட்ட நம்ம கல்யாணத்தை நான் மறைக்கவெல்லாம் விரும்பலை… நான் பேசிட்டு வர்றேன், நீ கவலைப்படாதே…” என்று சொல்லி அவன் தனியே நகர்ந்தான்.

 

வதனாவிற்கு உள்ளுக்குள் பதைப்பாக இருந்தது. அவர்கள் என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோ என்று, பிரியன் மீண்டும் திரும்பி வரும் வரை அவன் சென்ற திசையையே வெறித்திருந்தாள் அவள்.

 

திரும்பி வந்தவன் முகத்தில் எந்தவித சலனமுமில்லை. எப்போதும் போல் தான் முகத்தை வைத்திருந்தான், அதிலிருந்து அவளால் ஒன்றும் படிக்க முடியவில்லை.

 

எல்லோரும் இருந்ததால் அவனிடம் ஒன்றும் கேட்கவும் முடியவில்லை, கேட்டால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று அமைதியாகிவிட்டாள் அவள்.

 

அங்கு வந்தவர்கள் அனைவரும் மணமக்களுடன் ஒன்றாய் அமர்ந்து அருகிருந்த ஹோட்டல் ஒன்றில் காலை டிபனை முடித்து அவரவர் வண்டியில் கிளம்பினர்.

 

ராக்கியும் மணமக்களும் மட்டுமே மீதமிருந்தனர். “சரி பவள் நானும் கிளம்பட்டுமா, உங்களை வீட்டில ட்ராப் பண்ணிட்டு நான் அப்படியே ஆபீஸ் கிளம்பறேன்” என்றான் ராக்கி.

 

“இல்லை ராக்கி நாங்க இப்போ வீட்டுக்கு போகலை… எங்களை ஹைதராபாத்ல விட்டிரு, அங்க இருந்து பஸ் பிடிச்சு நகரி போகப் போறோம்…” என்றான் பிரியன்.

 

அவன் சொன்னதை கேட்ட வதனாவின் வதனம் இப்போது மலர்ந்தது. அதை ஓரக்கண்ணில் கண்டுக்கொண்டான் அவன்.

 

“அங்க எதுக்குடா??”

 

“போகணும்…” என்று மட்டும் சொன்னான் அவனிடம்.

 

“நீங்க அங்க போய் சேரவே நைட் ஆகிடுமே, பேசாம நைட்ல கிளம்பலாம்ல காலையில அங்க போய்டுவீங்க…”

 

அதுவும் சரியாகத் தான் தோன்றியது அவனுக்கு, மெதுவாய் திரும்பி அருகிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் “பரவாயில்லை ராக்கி…” என்றிருந்தான்.

 

ராக்கி மேற்கொண்டு தூண்டித் துருவாமல் “அதுவும் சரி தான், இங்க இருந்தா அந்த பிரவீன்  மூலமா எதுவும் தொல்லை வரலாம்…”

 

“நாளைக்கு தான் கோர்ட்ல கேஸ் ஹியரிங் வருது… எப்படியும் நாளைக்கு அவனை கஸ்டடில எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்”

“அதுக்கு தேவையானது எல்லாம் செஞ்சாச்சு… நீங்க பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க”

 

“இல்லை நாம ஈவ்னிங் கிளம்பலாம், இப்போ ஸ்ட்ரைட் பஸ் எதுவும் இருக்காது. நாலரை மணிக்கு தான் பஸ் கிளம்பும்…” என்றாள் வதனா.

 

“நாம பஸ் வேணா மாறி மாறி போய்க்கலாம்…”

 

“வேண்டாம் அலைச்சல் தானே, பேசாம ரூம்க்கே போய்டலாம்” என்றாள் அவள்.

 

ராக்கியும் “நீங்க பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க, நான் போய் கார் எடுத்திட்டு வர்றேன்” என்று நகர்ந்தான். அவன் அப்புறம் சென்றதும் தன்னவளை நோக்கி திரும்பிய பிரியன் “சரி ரூம்க்கே போய்டலாம், இப்போ சந்தோசமா” என்றான்.

 

அவள் தலை பதில் சொல்லாமல் மெதுவாய் ஆடியது. இருந்தும் அவள் முகத்தில் யோசனை ரேகைகள்.

 

“எங்க வீட்டுல என்ன சொல்லியிருப்பாங்கன்னு யோசிக்கறியா??”

 

“பெரிசா ஒண்ணுமில்லை நல்லா திட்டினாங்க… உடனே அவங்க ஏத்துக்கறது நடக்கற காரியமில்லை வது… அவங்களுக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்…”

 

“அவங்க மனசும் மாறலாம் அதுவரைக்கும் நாம காத்திட்டு தான் இருக்கணும்… எனக்கு ஒரு தங்கை வேற இருக்கா, என்னால அவளுக்கு ஒரு பிரச்சனை வந்திட்டா என்ன செய்யன்னு தான் எங்க வீட்டில யோசிக்கறாங்க…”

 

“எதுவா இருந்தாலும் அதையெல்லாம் நீ இப்போதைக்கு உன் மைன்ட்ல ஏத்திக்காதே, நடக்கிறது தான் நடக்கும்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் நடந்தான் ராக்கியின் காரை நோக்கி.

 

ராக்கி அவர்களை பிரியன் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில் விட்டுச் சென்றான். “மதியம் சாப்பாடு நான் ஆர்டர் பண்ணிடுறேன் நீங்க வெளிய போக வேண்டாம்…” என்று சொல்லி கிளம்பியிருந்தான் அவன்.

 

ராக்கி கிளம்பவும் நான்காவது மாடியில் இருந்த அவனறைக்கு அவளை லிப்ட்டில் அழைத்துச் சென்றான் பிரியன். முதன் முறையாக அவனுடன் தனித்து அவனறைக்கு செல்கிறோம் என்பதே அவளுக்கு லேசாய் பதட்டமாயிருந்தது.

 

“வா…” என்ற பிரியன் அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். சாவியை அவளிடம் கொடுத்து கதவை திறக்கச் சொன்னான்.

 

இருவரும் சேர்ந்து உள்ளே நுழைந்ததும் அவன் கதவை அடைத்துவிட்டு வந்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொள்ள இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு.

அந்த அணைப்பு அவளுக்கும் தேவையானதாய் இருந்தாலும் ஏதோ தவறு செய்யும் உணர்வு அவளுக்கு.

 

தனக்கும் அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை கழுத்தில் அணிந்திருந்த தாலி உறுதி செய்தாலும் மனம் இன்னும் அதற்கு முழுதாய் தன்னை தயார்ப்படுத்தியிருக்கவில்லை.

 

“என்னாச்சு நெர்வஸா இருக்கியா…” என்றவன் இப்போது அவளைப் பிரிந்து சற்று தள்ளி வந்தான்.

 

“கொஞ்சம் பயமாயிருக்கு…”

 

“உட்காரு…” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் உட்கார யோசிக்கும் அவளின் கைப்பிடித்து அமர வைத்தான்.

 

“இங்க பாரு நீ பயப்படுறன்னு எனக்கு தெரியுது… நம்ம கல்யாணம் முடிஞ்சதுல ஒரு சின்ன எக்சைமென்ட் எனக்கு அதுனால உன்னை ஹக் பண்ணிட்டேன்”

 

“மத்தப்படி நான் வேற எதுவும் யோசிக்கலை இந்த நிமிஷம் வரை. அப்படி ஒரு எண்ணத்தோட எல்லாம் உன்னை இங்க அழைச்சிட்டும் வரலை, என்னை நீ நம்புற தானே…”

 

“ஹ்ம்ம்”

 

“எப்பவும் இந்த நம்பிக்கையை என் மேல வை…” என்றவனுக்கு தலையசைப்பாய் பதில் சொன்னவள் காலப்போக்கில் அந்த எண்ணத்தை முற்றிலுமாய் விடப் போவது அறியாமல் போனாள்.

 

ராக்கி சொன்னது போலவே இருவருக்குமான உணவை ஆர்டர் செய்திருந்தான் போலும். மதியம் ஒன்னரை மணிக்கு சரியாக உணவு வந்து சேர்ந்திருந்தது.

 

அதுவரையிலும் காலையில் நேரமாய் எழுந்ததில் சோர்வாய் இருந்த இருவரும் உறங்கியிருந்தனர். காலிங்பெல் சத்தத்தில் தான் விழித்தான் பிரியன்.

 

உணவை வாங்கி டிபாயின் மீது வைக்கவும் வதனா கண் விழிக்கவும் சரியாய் இருந்தது.

 

“ராக்கி சாப்பாடு சொல்லியிருந்தான்ல வந்திடுச்சு… எழுந்து முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்…” என்ற பிரியன் அவளுக்கு இடத்தை காட்டிவிட்டு நகர்ந்தான்.

 

இருவருக்குமாய் தட்டும் தண்ணீரும் எடுத்து வந்து டிபாயின் மீது வைக்கவும் வதனா முகம் கழுவி வந்திருந்தாள்.

 

“நீங்க உட்காருங்க நானே வைக்குறேன்” என்று பிரியனை தடுத்து இருவருக்குமாய் உணவை எடுத்து தட்டில் வைத்தாள்.

 

பொழுது எப்படியோ நகர்ந்திருக்க மூன்றரை மணியளவில் வதனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பேருந்து நிலையத்திற்கு. இருவருக்குமாய் நகரிக்கு செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.

 

மறுநாள் நாலரை மணியளவில் நகரிக்கு வந்து இறங்கினர். “இந்த நேரத்துக்கு எல்லாரும் எழுந்திருக்க மாட்டாங்க, நாம இங்க ஹோட்டல்ல ரூம் போட்டுக்கலாம். ரெப்ரெஷ் பண்ணிட்டு உங்க இல்லத்துக்கு போகலாம் ஓகே தானே”

 

“ஹ்ம்ம்…”

 

அருகிருந்த ஒரு ஹோட்டலில் அறையை பதிவு செய்தான் அவன்.

 

“கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு… ஆறு மணி போல குளிச்சுட்டு சாப்பிட்டு கிளம்புவோம்”

 

“ஆறு மணிக்கே எல்லாரும் எழுந்திடுவாங்க” என்றாள் அவசரமாய்.

 

“அதுக்காக காலையிலேயே அவங்களை டிஸ்டர்ப் பண்ணணுமா… ஏழு மணிக்கு போனா வேணான்னு சொல்லிடுவாங்களா…”

 

“இல்லை அப்படி…”

 

“படு…” என்றுவிட்டு அவன் கட்டிலின் ஒரு புறம் படுத்துக்கொள்ள அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்ட வதனாவிற்கு உறக்கம் வருவேனா என்றது.

இல்லத்தில் அவர்கள் திருமணத்தை எப்படி எடுத்துக்கொள்வார்கள். இதுவரை படிப்பிற்காய் உதவிக் கொண்டிருந்தவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் அவள் சிந்தனை சென்றுக் கொண்டிருந்தது.

 

யாரும் அவளை எதிர்த்தெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றாலும் மனதினுள் ஒரு கலக்கம் அவளுக்கு.

 

கடவுளே என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிவிட்டாய் என்று மகிழ்வதா இல்லை திருமணம் என்ற பந்தத்திற்குள் என்னை தள்ளிவிட்டாய் என்று கலங்குவதா என்றிருந்தது அவள் நிலை.

 

பிரியன் தான் அவளுக்கு இனி எல்லாமும் என்று முடிவு செய்திருந்தாலும் படிப்பை கூட முடிக்காத இந்த நேரத்தில் தனக்கு இது அவசியமா என்ற கேள்வி தான் அவளுக்குள்.

 

எல்லாவற்றுக்கும் பாழாய் போன அந்த பிரவீன் தானே காரணம் என்று அவன் மேல் கோபம் கோபமாய் வந்தது.

 

ஒரு புறம் அவனிடமிருந்து தப்பித்ததில் மனம் நிம்மதியுற்றிருந்தது உண்மையே… அவள் எல்லாம் அப்படியே சென்றுக் கொண்டிருக்க பிரியன் எழுந்து அமர்ந்திருந்தான்.

 

“நீ போய் குளிச்சுட்டு வா… அதுவரைக்கும் நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்” என்றான் அவன்.

‘அதுக்குள்ள மணி ஆறாகிடுச்சா’ என்றெண்ணியவாறே எழுந்திருந்தாள் அவள்.

 

முதல் நாள் கிளம்பும் முன் அவளுக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் டிரஸ் வாங்கியிருந்தனர். அவள் தேவையான உடுப்பை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

இருவருமாய் தயாராகி அறையை விட்டு வெளியில் வந்தனர். எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றில் காலை உணவை அருந்தினர்.

 

“இங்க இருந்து எப்படி போகணும்??”

 

“பஸ் வரும் அதுல போய்டலாம்…”

 

“ரொம்ப தூரமா இங்க இருந்து…”

 

“ஒரு நாலு ஸ்டாப் போல தான் வரும்…”

 

“ஆட்டோ பிடிக்கறேன் போயிடலாமே…”

 

“ஹ்ம்ம் சரி” என்று அவள் சொல்லவும் அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றை பேசினான். வழியை அவளிடம் கேட்டுக்கொண்டு இருவருமாய் அதில் ஏறி அமர்ந்தனர்.

 

ப்ரியபாலா மழலைகள் இல்லம் வெளியில் இருந்து பார்க்க சிறு கட்டிடமாய் தோன்றினாலும் இறங்கி உள்ளே செல்ல நீண்டிருந்தது அந்த கட்டிடம்.

சிறு குழந்தையாய் இறங்கி உள்ளே ஓடியவளை பார்த்துக்கொண்டே பின்னோடு பிரியனும் இறங்கி அவள் பின்னே சென்றான்.

 

தாய் வீட்டிற்கு சென்ற மகளைப் போலிருந்தது அவள் குதூகலம். உண்மையில் இது அவளுக்கு தாய் வீடு தானே என்ற எண்ணம் ஓடியது அவனுக்கு.

 

உள்ளே  நுழைந்தவுடன் மஞ்சள்நிற சரக்கொன்றை மரம் அவர்களை வரவேற்கும் விதமாய் மஞ்சள் பூக்களை வழியெங்கும் அள்ளி தெளித்திருந்தது…

 

கொஞ்சம் நடந்து உள்ளே சென்ற பின்னே இடதுபுறமாய் இருந்த அந்த சிறிய கட்டிடத்துக்குள் நுழைந்தாள் வதனா.

 

அவளுடனே பிரியனும் உள்ளே நுழைந்திருந்தான். “சீதாம்மா… சீதாம்மா…” என்று அழைத்துக் கொண்டே சென்றாள் அவள். அவனை கண்டுக் கொள்ளவேயில்லை. பிரியன் வரவேற்பு போல் இருந்த அந்த அறையிலேயே தேங்கிவிட்டான்.

 

“ஆயா, சீதம்மா எங்க போனாங்க… அய்யா எப்போ வருவாங்க…” என்று அவள் யாரிடமோ பேசுவது கேட்டது.

 

பின் அவள் குரல் தேய்ந்து மறைய பிரியனுக்கு உள்ளே செல்வதா அங்கேயே அமர்வதா என்றிருந்தது. வரவேற்பு போன்ற அந்த இடத்தில் யாருமில்லை.

 

அவர்கள் காலையிலேயே அங்கு வந்துவிட்டிருந்த படியால் அந்த இடம் கொஞ்சம் காலியாயிருந்தது.

 

அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரவா வேண்டாவா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளை வதனா நடுத்தர வயதை தாண்டிய பெண்மணி ஒருவருடன் வந்தாள்.

 

“இவரு…” என்று அவள் இவனை நோக்கி கைக்காட்ட “வதுவோட ஹஸ்பன்ட்” என்று தன் அறிமுகத்தை முடித்திருந்தான் அவன்.

 

அப்பெண்மணியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தோன்றிய போதும் ஒரே நொடியில் அதை புறந்தள்ளி வதனாவை பார்த்தார்.

 

அவளோ தலையை தொங்கப்போட அவன் சொல்வது உண்மையென்று புரிந்தது அவருக்கு.

 

இனி தான் இதற்கு மேல் பேச வேண்டுமென்றால் தன்னைப்பற்றி நல்ல அறிமுகத்தை வதனா தான் கொடுக்க வேண்டும் என்று புரிந்து பிரியன் அமைதி காத்தான்.

 

“சாரிம்மா… நாங்க ரெண்டு பேருமே இப்போ கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு நினைக்கலை… ஆனா சூழ்நிலை, என்னை காப்பாத்த தான் இவர் என்னை உடனே கல்யாணம் செஞ்சுக்கிட்டார்” என்றவள் வேகமாய் நடந்ததை சொல்லியிருந்தாள்.

 

“எல்லாம் சரி வதனா, எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு உனக்கு தோணலையா… ஒரு போன் செஞ்சிருக்கலாம்ல…”

 

இப்போது பவளப்பிரியன் இடையிட்டான்… “தப்பா எடுத்துக்காதீங்க மேடம் குறுக்க பேசறேன்னு… இப்படி ஒரு சூழ்நிலையில எப்படி தப்பிக்கறதுன்னு தான் யோசிச்சோம்…”

 

“ரெண்டாவது கொஞ்சம் அவகாசம் கொடுத்தாலும் பிரவீன் என்னவும் செய்ய காத்திருந்தான். என்னால இவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது, அதனால தான் எல்லாத்துக்கும் ஒரே தீர்வா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்றான் அவன்.

 

“ஆக்சுவலா நான் இவ்வளவு கேள்வி கேட்கணும்ன்னு அவசியமேயில்லை… ஆனாலும் உன்னை சின்ன வயசுல இருந்து பார்த்துனாலயும் உன் மேல உள்ள அக்கரையிலும் பிரியத்துலயும் தான் கேள்வி கேட்டேன்”

 

“மத்த பசங்க மாதிரி நீ படிச்சு முடிச்சதும் வேலை தேடிட்டு வெளிய போயிருக்க வேண்டியது… ஒரு ஸ்பான்சர் கிடைச்சு உன் படிப்பு மேல தொடர்ந்ததுனால தான் நீ இங்க இன்னமும் இருக்கே”

 

“சீதாம்மா…”

 

“எப்பவும் உன்னோட அதே சீதாம்மா தான்… தள்ளி வைச்சு பேசறேன்னு நினைக்க வேண்டாம்… மனசுல தோணினதை சொல்லிட்டேன்”

“உன்னோட ஸ்பான்சர்க்கு நான் விஷயத்தை கன்வே பண்ணிடறேன்…”

 

“சீதாம்மா…”

 

“வதனா இதெல்லாம் ரூல் அதை தான் சொல்லிட்டு இருந்தேன்… இனி உன் பொறுப்பு இவரோடது தான்…” என்று வதனாவின் முகம் பார்த்து சொன்னவர் இப்போது பிரியனை நோக்கினார்.

 

“வதனா மேல பிரியம் இருக்கற ஒரு அம்மாவா இதை கேட்கறேன்… உங்க பேரென்ன, நீங்க என்ன பண்றீங்க??”

 

“என் பேரு பவளபிரியன்… ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான்…”

 

“ஓ!! நீங்க ஸ்டுடென்ட்டா??”

 

“இப்போ இல்லை, இப்போ நான் விப்ரோல வொர்க் பண்றேன்… அம்மா, அப்பா, தங்கை எல்லாம் தஞ்சாவூர்ல இருக்காங்க…”

 

“நான் மட்டும் இங்க படிச்சிட்டு இருந்தேன், வேலை கிடைக்கவும் இங்கவே இருக்கேன்… நீங்க கவலையேப்பட வேணாம்… உங்க பொண்ணை நான் நல்லா பார்த்துக்குவேன்” என்று முடித்தான் அவன்.

 

அவனின் தயங்காத தெளிவான பேச்சு அவருக்கு அவன் மேல் நம்பிக்கையை கொடுத்தது.

 

“சந்தோசம்… இனிமே நீங்க தான் அவளை பார்த்துக்கணும், யாருமில்லை அவளுக்கு எல்லாமே இனி நீங்க தான்…” என்றார் அவர்.

 

“கண்டிப்பா பார்த்துக்குவேன்…” என்றவன் அறியவில்லை இன்னும் சில மாதங்களில் அவளை தனியே தவிக்கவிட்டு செல்லப் போவதை.

 

“வதனா உன்னோட திங்க்ஸ் இங்க கொஞ்சமிருக்கு அதை நீ எடுத்துட்டு போம்மா… அய்யா ஊருக்கு போயிருக்காங்க, வர்றதுக்கு பத்து நாளாகும்… அவர் வந்தா நான் விஷயத்தை சொல்லிடறேன்” என்றார் அப்பெண்மணி.

 

வதனா நிமிர்ந்து அவனைப் பார்க்க “உனக்கு தேவையானதுன்னா எடுத்துக்கோ…” என்று சொல்ல அவள் உள்ளே சென்றாள்.

 

“மேடம் ஒரு விஷயம்…” என்றான் பிரியன்.

 

“சொல்லுங்க…”

 

“இந்த ஹோம்க்கு நான் உதவலாமா…”

 

“வித் பிளஷர்… வதனாக்காகவா!!”

 

“அவளுக்காக தான், ஆனா அவளுக்காக மட்டுமில்லை… அவளைப் போல படிக்கணும்ன்னு நினைக்கற பசங்களுக்கு உதவலாம்ன்னு ஒரு எண்ணம்…”

 

“அது போல இருக்கவங்கள்ள ஒருத்தரை எனக்கு அடையாளம் காட்டுங்க… என்னால முடிஞ்ச வரை நான் இதை செய்வேன்…” என்றான் மனமார.

 

“தாங்க்ஸ் மிஸ்டர். பிரியன்… வதனா ஒரு நல்லவர்கிட்ட தான் சேர்ந்திருக்கான்னு கொஞ்சம் நிம்மதியாயிருக்கு எனக்கு…” என்றவர் எதையோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார்.

 

“சொல்லுங்க மேடம்…”

 

“இல்லை ஒண்ணுமில்லை அய்யா தான் இவளை வந்து கேட்பார்… நான் அவர்கிட்ட பேசிக்கறேன், நீங்க உட்காருங்க ரொம்ப நேரமா நிற்க வைச்சே பேசிட்டு இருக்கேன்…” என்றவர் “ஆயா சார்க்கு காபி எடுத்திட்டு வாங்க…” உள்நோக்கி குரல் கொடுத்தார்.

 

இருவரும் அங்கிருந்த குழந்தைகளையும் அவளின் தோழியர் இருவரையும் பார்த்துவிட்டு கிளம்ப மேலும் மூன்று மணி நேரம் பிடித்தது.

 

மீண்டும் அவர்கள் அறைக்கு வந்து சேர மதிய வேளை நெருங்கியிருந்தது. சாப்பிட்டு நேராக அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவர்கள் தான் மாலை எழும் போது மணி ஆறாகி போயிருந்தது.

 

“வது நேத்தெல்லாம் ட்ராவல் பண்ணது எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… இன்னைக்கு இங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு கிளம்புவோமா…”

 

“நாளைக்கு மார்னிங் ரெண்டு மூணு பஸ் பிடிச்சு கிளம்பிடலாம் ஓகே தானே…” என்று பிரியன் சொல்ல “சரிங்க…” என்றுவிட்டாள் அவள்.

 

அறைக்குள்ளேயே இரவு உணவை வாங்கி வந்து இருவரும் உண்டு முடித்திருந்தனர். பிரியன் அவன் கைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க அந்த அறையில் இருந்து வெளியில் சென்ற பால்கனியில் சென்று நின்றுக் கொண்டாள் வதனா.

 

தூரத்தே தெரிந்த மலையில் ஓரிரு இடத்தில் வெளிச்சப்புள்ளிகள்… இப்படி தான் தன் வாழக்கையிலும் ஆங்காங்கே வெளிச்சம் தோன்றி மறைகிறதோ என்று அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

அது வாடைக்காலம் என்பதால் லேசாய் வீசிய காற்று உடலுக்குள் பாய்ந்து ஊடுருவிச்செல்ல மயிர் கூச்செறிந்தது அவளுக்கு.

 

அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவினால் இழுத்துப் போர்த்துக் கொண்டாள். வண்டிகளின் இரைச்சல் எல்லாம் சற்றே அடங்க ஆரம்பித்த நேரமென்பதால் இந்த இரவு அவளுக்கு அமைதியானதாயிருந்தது.

 

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ அவள் பின்னால் மெதுவாய் வந்து நின்ற பிரியனின் உடல் சூடு அவள் மேல் படவும் திரும்ப முயற்சித்தவளை திரும்பவிடாது அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் பிரியன்.

 

அவன் இதழ்கள் எதையும் யோசிக்காது அவள் தோள் வளைவில் மெல்ல புதைந்து அவள் காதில் மெதுவாய் கிசுகிசுத்தது. “கொஞ்ச நேரம் இங்கவே நிற்போமே…” என்று…

 

வதனாவின் மேனியில் ஒரு சிலிர்ப்பு ஜில்லிப்பாய் ஓடியது…

 

காலம் மட்டும்

எதையும் மாற்றவல்லதல்ல

காலனும் மாற்றி செல்வான்

ஆம் அவன் காலனே

மாற்றிச் சென்றான்

பிரியாத பந்தத்தில்

பிரியமானவர்கள்

தங்கள் வாழ்க்கையை

ஒன்றோடொன்றாய்

இணைக்க ஈடில்லா  

தருணத்தை தன்னாலே

உருவாக்கி ஈருயிரை

ஒருயிராக்கி சென்றானவன்!!

இவன் தான்

ராகு காலமாய் இருப்பானோ

சமயத்தில் ராகு காலமும்

நல்ல காலமே!!