Advertisement

அத்தியாயம் – 15
வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான்.
இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர்.
“ஐஸ்கிரீம் சாப்பிடறியா??” என்றான் பிரியன்.
“இப்போ எதுவும் வேணாம்… நீங்க வந்ததுல இருந்து எதாச்சும் வாங்கி கொடுத்திட்டே இருக்கீங்க… போதும்” என்றிருந்தாள்.
“ஆமா நீங்க ஏன் ஹாஸ்டல்ல இருக்கீங்க??” என்று ஆரம்பித்தாள் வதனா.
“அம்மா, அப்பா, தங்கை எல்லாம் நான் செகண்ட் இயர் படிக்கற வரை இங்க தான் இருந்தாங்க… அப்பாக்கு ரயில்வேஸ்ல வேலை…”
“அப்பப்போ ட்ரான்ஸ்பர் ஆகும்… இந்த ஊர்ல தான் ஒரு ஆறு வருஷத்துக்கும் மேல இருந்திருப்போம். இப்போ அப்பாக்கு தமிழ்நாட்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிட்டுது”
“அதான் அவங்க அங்க ஷிப்ட் ஆகிட்டாங்க… நான் இங்க காலேஜ் பாதியில விட்டு போக முடியாதுல அதான்… முடிச்சுட்டு நானும் ஊருக்கு போய்டுவேன்” என்றான்.
“அப்போ காலேஜ் முடிஞ்சதும் நீங்க ஊருக்கு போய்டுவீங்களா…” என்றாள் அவள் வாடிய முகத்துடன்.
“அப்படின்னு ஒரேடியா சொல்ல முடியாது வது… நெக்ஸ்ட் வீக் இங்க கேம்பஸ் நடக்கப் போகுது… மே பீ அதுல நான் செலக்ட் ஆகிட்டா எனக்கு இங்க வேலை கிடைச்சிருமே”
“அப்புறம் எப்படி உன்னைவிட்டு போவேன் சொல்லு…”
“அப்போ வேலை கிடைக்கலைன்னா போவேன்னு சொல்றீங்களா??” என்றவளின் முகம் இன்னமும் தெளிவில்லாமலே இருந்தது.
“வது என்னை பாரு…” என்று அவள் முகவாய் தொட்டு தன் புறம் திருப்பினான்.
“உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன் போதுமா… அப்படியே இந்த ஊரைவிட்டு போகறதா இருந்தாலும் உன்னை கூடவே தான் கூட்டிட்டு போவேன்…”
“நீ கவலைப்படாதே சரியா…” என்று சொன்னவன் அப்போது அறியவில்லை, அவளை தனியே இதே ஊரில் தவிக்கவிட்டு செல்லப் போகிறோம் என்று.
“நெஜமாவா!!”
“உண்மையா தான் சொல்றேன்… என் மனசார சொல்றேன் உன்னை எப்பவும் பிரியமாட்டேன்”
“நீ தான் இந்த பிரியனோட பிரியாவாச்சே…. இல்லையில்லை பிரியாவின் மேல் பிரியமாய் இருப்பவன்… அய்யே இதும் சரியா வரலை”
“ஹ்ம்ம்…” என்று தலைத்தட்டி யோசித்தவன் “பிரியா பிரியன்… இது எப்படி இருக்கு வது!! பாரதி தாசன், சுப்புரத்தின தாசன்னு எல்லாம் அவங்களுக்கு பிடிச்சவர்களோட தாசன்னு வைச்சிருப்பாங்கல்ல”
“அது மாதிரி பிரியா மேல பிரியமா இருக்கவன்னு வைச்சுக்கலாம்… இதுல டபுள் சந்தோசம் இருக்கு வது… கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேர் பின்னாடி என் பேர் வந்த மாதிரியும் ஆச்சு”
“என்னோட பிரியத்தை சொன்ன மாதிரியும் ஆச்சு…” என்று கண்களில் காதல் வழிய சொன்னவனை பெருமை பொங்க ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் வதனா.
பிரியன் விளையாட்டுத்தனமானவனாய் இருந்தாலும் படிப்பில் மிகக் கெட்டியே!! டிஸ்டிங்ஷன் எடுக்கவில்லை என்றாலும் முதல் வகுப்பில் பாசாகிவிடுவானவன்.
எப்படியோ அவன் கேம்பஸில் தேர்வாகியிருந்தான். ஹைதராபாத்தில் இருந்த புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் அவனுக்கு வேலை தயாராய் இருந்தது.
அவன் படிப்பு முடிந்ததும் வந்து சேர்ந்துக் கொள்ள சொல்லி அவனுக்கு உத்திரவு வந்தது. ஊருக்கு அழைத்து தன் பெற்றோரிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்னான்.
மாலை கல்லூரி முடிந்து வெளியில் வரும் போது வதனாவை கண்டவன் நேரே அவளெதிரில் வந்து நின்றான்.
அவளோ பதட்டமாய் அவனை பார்த்தாள். “வது உன்னைப் பார்க்க தான் வந்தேன்… ஒரு சந்தோசமான விஷயம் வா வெளிய போகலாம்” என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்.
அவளோ அவன் கையில் இருந்து தன் கையை உருவிக்கொள்ள முனைந்தாள்.
“என்னாச்சு வது??” என்றவன் அவள் பார்வை போன திக்கை அப்போது தான் கவனித்தான்.
வதனா கல்லூரி முடிந்து அவளின் பேராசிரியை ஒருவருடன் வெளியில் வந்திருந்தாள். பிரியன் எங்கே அதையெல்லாம் கவனித்தான்.
அப்படியே கவனித்திருந்தாலும் அவன் அதையெல்லாம் கண்டுக்கொள்வானா என்ன!! இப்போது திரும்பி அருகில் இருந்தவரை பார்த்துவிட்டு பிடித்திருந்த அவள் கையை மட்டுமே விட்டான்.
“கிளாஸ் முடிஞ்சுதுல்ல போகலாமா!!” என்றான் அவளைப் பார்த்து.
அவளுக்கு தான் அய்யோவென்றிருந்தது அவன் செயல் கண்டு. அவனை பார்த்து முறைத்து வைத்தாள்.
அவள் முறைப்பை கண்டவன் இப்போது அவளருகே நின்றிருந்த பேராசிரியையிடம் பேசினான். “ஹாய் மேம் நீங்க ஏதோ முக்கியமான விஷயமா பேசிட்டு இருந்தீங்க போல சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”
“நீங்க கண்டினியூ பண்ணுங்க… வது நான் பைக் ஸ்டான்ட்ல இருப்பேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அங்கிருந்த பேராசிரியையிடம் மன்னிப்பு கேட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் தான் வதனாவிற்கு மூச்சே வந்தது. “மேம் அது வந்து சாரி மேம்… அவர் இப்படி வந்து சாரி… சாரி மேம்”
“நீ என்ன நிலைமையில படிக்க வந்திருக்கே தெரியும்ல உனக்கு. உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்குறாங்க. அதெல்லாம் கொஞ்சம் மனசுல வை…”
“உனக்கு ஸ்பான்சர் பண்றவங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடாத… நல்ல படிக்கிற பொண்ணுன்னு தான் உனக்கு இவ்வளவு தூரம் இறங்கி வந்து நோட்ஸ் எல்லாம் கொடுத்து படிக்கச் சொல்றேன்”
“கண்டபடி உன் மனசை அலைபாய விடாம படிப்புல உன் கவனத்தை செலுத்து…” என்று அப்பேராசிரியை கொஞ்சம் கண்டிப்பு குரலிலேயே அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் பேசப்பேச கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது அவளுக்கு. மெதுவாய் நடந்து வந்தவளுக்கு பிரியன் சொன்னதெல்லாம் மறந்தே போனது.
கல்லூரியை விட்டு வெளியில் வந்து ஹாஸ்டல் நோக்கி நடக்கவும் “ஹேய் வது உனக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேன்ல… நீ பாட்டுக்கு போயிட்டே இருந்தா எப்படி” என்றவாறே அவன் யமஹாவில் வந்து அவளருகே நின்றான் அவன்.
அவள் முகமோ அழுதது போலிருக்க “என்னாச்சு வது?? வண்டியில ஏறு உன்கிட்ட பேசணும்” என்றான்.
“நான் வரலை…”
“ஏன்??”
“ப்ளீஸ்…”
“சரி நீ இப்போ ப்ளீஸ் பண்ணு எனக்காக இதுக்கு அப்புறம் காலேஜ்ல நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன். உன்கிட்ட எனக்கு இப்போ பேசணும் என்னோட வா” என்றான் அழுத்தமாய்.
அவன் குரலின் அழுத்தத்தில் ஒன்றும் சொல்லாமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள். சற்று தள்ளியிருந்த ஒரு காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தி அவளையும் இறங்கச் சொன்னான்.
“என்னாச்சு வது?? உங்க மேம் எதுவும் திட்டிடாங்களா?? உன் முகமே சரியில்லை… என்னாச்சுன்னு சொல்லுமா??” என்றதும் விழிநீர் கன்னம் நனைக்க நடந்ததை சொன்னாள்.
“சரி நீ இப்போ என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிறே??”
அவளோ புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அவங்க பேசிட்டாங்கன்னு நீ என்னை…” என்று முடிக்கவில்லை அவன்.
“உங்களைவிட்டிருவேன்னு நினைச்சீங்களா?? இல்லை  நீங்க தான் என்னை அப்படியே விட்டிருவீங்களா?? நான் மட்டும் எப்படி உங்களை விடுவேன்…” என்று அவள் கேட்டதில் லேசாய் உள்ளம் குளிர்ந்து போனது.
“நாம காலேஜ்ல கொஞ்சம் கவனமா இருந்தா போதும்… மத்தவங்க பார்வைக்கு கேலிக்கும் பேச்சுக்கும் நாம விருந்தாக வேணாமே…” என்ற அவளின் தவிப்பான குரல் அவனுக்கும் கொஞ்சம் புரிந்தது.
“சரி காலேஜ்ல நீ என்கிட்ட பேச வேணாம். நானும் பேச மாட்டேன், ஆனா என்னால பார்க்காம எல்லாம் இருக்க முடியாது… அதை யார் முன்னாடியும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது” என்றான்.
இவனை என்ன செய்ய என்று பார்த்தாலும் அவனுக்கு சரியென்றே தலையாட்டினாள்.
ஒரு வாரம் சென்றிருக்கும் கல்லூரிக்குள் போலீஸ் வாகனம் ஒன்று நுழைந்தது. வந்தவர்கள் முதலில் பிரின்சிபாலின் அறைக்கு செல்ல பின் பிரியன் அங்கு வரவழைக்கப்பட்டான்.
என்ன நடந்ததோ அவனை ஏற்றிக்கொண்டு அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
ராகேஷ் விபரமறிந்து வந்தவன் நேரே பிரின்சிபாலிடமே சென்று கேட்டான்.
“சார் மே ஐ கம் இன் சார்…” என்றான் பவ்வியமாய்.
“எஸ்…” என்றதும் உள்ளே நுழைந்தவன் “போலீஸ் இப்போ எதுக்கு சார் வந்தாங்க?? பவள் ஏன் கூட்டிட்டு போறாங்க??”
“அவன் செகண்ட் இயர் ஸ்டுடென்ட் பிரவீனை அடிச்சிருக்கான்…”
“யார் சார் பிரவீன்?? அவனை எதுக்கு சார் இவன் அடிச்சிருக்க போறான்??”
“அந்த பிரவீன் யாருன்னு அவனோட லவ்வர்கிட்ட போய் கேளு இங்க வந்து என்னை கேள்வி கேட்குற வேலை வைச்சுக்காதே… அப்புறம் உன் மேல ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும்” என்று அவனை எச்சரித்தார் அவர்.
“எடுத்துக்கோங்க சார் அதைப்பத்தி எல்லாம் எனக்கு கவலையில்லை. ஒருத்தனை மாத்தி மாத்தி எல்லாருமா தப்பா நினைச்சு அவனையே தண்டிக்கறீங்க… என்ன சார் உங்க நியாயம்” என்று கொதித்தான் அவன்.
“கெட் அவுட் ஆப் திஸ் பிளேஸ்… உனக்கு பதில் சொல்ல எனக்கு எந்த அவசியமுமில்லை” என்று அவர் சத்தம் போட அவன் வெளியில் வந்தான்.
‘இதென்ன புதுசு புதுசா கிளம்புது’ என்ற எண்ணம் தான் அவனுக்கு இப்போது. கல்லூரி முடிந்ததும் நேரே வதனாவை தான் சந்திக்க வந்தான்.
“பிரவீன் யாரு??” என்று அவன் மொட்டையாய் கேட்கவும் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்.
“என்ன கேட்கறீங்க?? என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு ஒண்ணுமே புரியலை…” என்றாள் அவள்.
“பவள் மறுபடியும் போலீஸ் கூட்டிட்டு போயிருக்காங்க…”
“என்ன??” என்று அதிர்ந்தவள் “எதுக்காக??” என்றாள்.
“யாரோ பிரவீனாம் அவனை அடிச்சிட்டான்னு தான் விசாரிக்க கூட்டிட்டு போயிருக்காங்க”
“என்ன அவர் பிரவீனை அடிச்சாரா?? நான் அன்னைக்கே அவர்கிட்ட சொன்னனே அப்படி செய்ய வேணாம்ன்னு… செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு அவனை அடிச்சிட்டாரா… எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை” என்றவளின் முகமே கலங்கிப் போனது.
“பிரவீன் யாருன்னு கேட்டேன்??” என்றான் ராகேஷ் இப்போது சற்றே குரலுயர்த்தி.
வதனாவும் அவனைப்பற்றி சொன்னவள் நடந்த விஷயத்தை பிரியனிடமும் அவள் பகிர்ந்ததை கூறினாள்.
“எனக்கு அவரை பார்க்கணும்…”
“எதுக்கு??” என்றான் அவன் இப்போது சிடுசிடுப்பாய்.
“என்னால தானே அவருக்கு பிரச்சனை… நான் வேணா ஸ்டேஷன்ல போய் பேசட்டுமா…”
“அதெல்லாம் வேணாம், கேர்ள்ஸ் யாராச்சும் ஸ்டேஷன் போவாங்களா… அதும் பிரவீன் பத்தி நீ அங்க பேசப் போறியா… தேவையில்லை பவள்க்கு அதெல்லாம் புடிக்காது…”
“அப்போ அவர் எப்படி வெளிய வருவார்…”
“நான் பார்த்துக்கறேன்…” என்றுவிட்டு ராகேஷ் கிளம்பிச் சென்றுவிட்டான்.
வதனாவிற்கு மனம் கேளாமல் விசாரித்துக்கொண்டு மறுநாள் காலை அவனை பார்க்கச் சென்றுவிட்டாள்.
வீங்கியிருந்த அவன் புற கன்னமும் கண்களும் அவனை பார்த்ததுமே அவளுக்குள் அழுகை பீறிட்டது.
அவனோ “நீ இங்க எதுக்கு வந்தே??” என்றான்.
“நீங்க ஏன் பிரவீனை அடிச்சீங்க?? நான் தான் அன்னைக்கே உங்ககிட்ட வேணாம்ன்னு சொன்னேன்ல… உங்களுக்கு தெரியாம இருக்கக் கூடாதுன்னு தான் நடந்ததை உங்ககிட்ட சொன்னேன்”
“இல்லன்னா அவனைப்பத்தி உங்ககிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன்” என்றாள் கண்களில் வழிந்த நீருடன்.
“நீ நம்புறியா நான் தான் அவனை அடிச்சேன்னு…”
“அப்போ…”
அவள் கண்களின் நம்பாத தன்மை கண்டவனுக்குள் கோபம் உற்பத்தியானது. “ஆமாடி நான் தான் அவனை அடிச்சேன். அதுக்கு முன்னாடி நடந்துச்சே உன் பிரண்டு ஜான்சி விஷயம் அதுக்கும் நான் தான் காரணம்” என்று கண்கள் சிவக்க கூறினான்.
அவன் அப்படிச் சொல்லவும் அவளுக்கு அவன் செய்திருக்க மாட்டானோ என்று தோன்ற ஆரம்பித்தது.
“நிஜமாவே நீங்க அடிக்கலையா…”
“நான் தான் அடிச்சேன்…” என்றான் அவன் சீறலாய்.
அவன் முகத்தில் தான் தவறு செய்யவில்லை என்ற கோபம் நன்றாய் தெரிந்தது. என்னை தெரிந்தவர்களே புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அப்பட்டமாய் அவன் முகத்தில்.
ஒரு சிறு தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறியவள் முதலில் சென்றது கல்லூரி முதல்வரின் அறைக்கே.
அனுமதி வாங்கி அவர் அறைக்குள் நுழைந்தவள் தன் பெயரையும் படிக்கும் வகுப்பையும் சொல்ல அவர் நினைவுக்கு வந்த விதமாய் முகம் சுருக்கி அவளை பார்த்தார்.
“எதுக்கு சார் பிரியனை போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க??”
“எல்லாம் தெரிஞ்சுட்டு வந்து ஆளாளுக்கு என்கிட்ட கேள்வி கேட்கறீங்களா… உங்களுக்கு யார் அந்த ரைட்ஸ் கொடுத்தது” என்றார் அவர்.
“சார் உங்களை கேட்காம வேற யாரை சார் நாங்க கேட்க முடியும். அன்னைக்கு இங்க வந்து தானே அவரை அரெஸ்ட் பண்ணிட்டு போயிருக்காங்க…”
“ஜான்சி விஷயத்துல நான் தப்பு பண்ணிட்டேன்னு என்னை கூப்பிட்டு நீங்க சத்தம் போட்டீங்க… இப்போ மட்டும் அவர் தப்பு பண்ணியிருப்பார்ன்னு நீங்க நினைக்கறீங்களா…”
“அவர் தப்பு செஞ்சிருந்தா அதை ஒத்துக்கற தைரியம் அவருக்கு இருக்கு சார். ஆனா நீங்க அவரை நம்பாம எந்த ஸ்டெப்பும் எடுக்காம விட்டீங்களே சார்…” என்றாள் ஆதங்கமாய்.
முதல்வரின் குரல் இப்போது தணிந்திருந்தது. “நீ சொல்றது சரியா கூட இருக்கலாம். ஆனா இப்போ என்னால எதுவுமே செய்ய முடியாதும்மா…”
“ஏன் சார்??”
“எக்ஸ் மினிஸ்டர் ஒருத்தர் பிரவீன் பின்னால இருக்கார். பொலிடிகல் பிரஷர் இருக்கும்மா… பிரவீன் அவனாவே கேஸ் வாபஸ் வாங்கினா தான் உண்டு… இல்லன்னா அவன் சொல்றது பொய்ன்னு நிருப்பிக்கணும் வேற வழியில்லை” என்றார்.
“சார் அப்போ நீங்க அவங்களுக்கு தான் இம்பார்டன்ஸ் கொடுக்கறீங்களா”
“இங்க பாரும்மா எனக்கு எல்லா ஸ்டுடென்ட்ஸ் ஒரே மாதிரி தான்… அன்னைக்கு இதே பிரியன் மேல நீ ஏன் கம்பிளைன்ட் கொடுத்தன்னு உன்னை நானே திட்டியிருக்கேன்”
“இப்பவும் அதே தான் சொல்றேன்… நானா போய் யார் மேலயும் கம்பிளைன்ட் கொடுக்கலை… சம்மந்தப்பட்டவங்க தான் புகார் கொடுத்திருக்காங்க…”
“போலீஸ் லீகல் ஆக்சன் எடுத்திருக்கு… அவங்களுக்கு நான் கோஆப்பரேட் பண்ணித்தான் ஆகணும்… பிரியன் மேல தப்பில்லைன்னு உறுதியா தெரிஞ்சா நான் பிரவீனை கண்டிப்பா டிஸ்மிஸ் செய்வேன்”
“உனக்கு இப்போவாச்சும் புரியும்ன்னு நினைக்கிறேன் நான் என்ன சொல்ல வர்றேன்னு” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அவர்.
வதனாவிற்கு அடுத்து இந்த பிரச்சனையை எப்படி அணுக என்ற குழப்பம். முதல்வரின் அறையில் இருந்து வெளியில் வந்தவள் அவள் வகுப்பிற்கு செல்லப் போக எதிரில் யாரோ வழிமறித்தனர்.
மறித்தது வேறுயாருமல்ல பிரவீனே தான். நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தவள் கடந்துச் செல்லப் போக “நில்லு” என்றிருந்தான் அவன்.
“எங்க போயிட்டு வர்றே??”
“அதை நான் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியமில்லை”
“உன் ஆளை பார்த்திட்டு வர்றியா…”
“பிரவீன் உன் வேலையை மட்டும் பாரு…”
“நான் பார்த்த வேலைக்கு தானே அவனை உள்ள வைச்சிருக்காங்க…”
“என்ன சொன்னே??” என்று முறைத்தாள் அவனை மீண்டும்.
“பாரு உன் ஆளு எப்படி என் கையை உடைச்சு கட்டு போட வைச்சிருக்கான் பாரு…” என்று அவன் கட்டிட்ட கையை தூக்கி அவள் முன்னே காட்டினான்.
“அவர் அப்படி செஞ்சிருக்க மாட்டார்…”
“ஆமா செய்யலை”
“அப்புறம் ஏன்டா அவர் மேலே கம்பிளைன்ட் பண்ணே??”
“எதுக்குன்னு உனக்கு தனியா நான் சொல்லணுமா??”
“பிரவீன்…” என்றாள் உரத்த குரலில்.
“உனக்கு கெஞ்சலாம் வராதா… ப்ளீஸ் அவரை விட்டுடுங்கன்னு எல்லாம் கேட்க மாட்டியா?? அவ்வளவு திமிராடி உனக்கு…”
“நான் எதுக்குடா கெஞ்சணும் உன்கிட்ட”
“அப்போ அவன் காலம் பூரா உள்ளவே இருக்கட்டும்… குண்டு வெடிப்புல சந்தேகப்பட்டு அவனை கைது செஞ்சிருக்கோம்ன்னு சொல்லி அவனை உள்ளவே வைக்குற மாதிரி ஒரு கேஸ் போடச் சொல்றேன்”
“தீவிரவாதி ரேன்ஜ்க்கு அவனை ஏத்திவிட்டா அப்புறம் அவன் வெளியவே வர முடியாதுல”
“வருவாரு… நாளைக்கே அவர் வெளிய வருவாரு… உன்னால ஆனதை பாருடா… தப்பு செஞ்சவன் நீயே தைரியமா நடமாடுற, தப்பே பண்ணாம அவர் உள்ள இருப்பாரா…”
“வருவாருடா திரும்பி வருவாரு… அப்போ இருக்கு உனக்கு… அதுக்கு பிறகு நீ என்னாவேன்னு பாரு…” என்று உக்கிரமாய் அவனிடம் உரைத்து நகர்ந்தாள்.
அவள் வாய் வார்த்தையாய் சொன்னாளோ அன்றி உணர்ந்து சொன்னாளோ அவள் சொன்னது போலவே பிரியன் மறுநாள் வெளியில் வந்திருந்தான்.
எதனால் யாரால் அவன் வெளியில் வந்தான் என்பது இதுவரை யாருமே அறியாத ரகசியமே. ஆனால் நடந்த தவறுக்கு தான் தான் காரணம் என்ற பிரவீனின் வாக்குமூலமே பிரியன் வெளிவர மற்றவர்களால் நம்பப்படும் காரணம்.
கல்லூரி முதல்வர் சொன்னது போலவே பிரவீனை கல்லூரியில் இருந்து நீக்கினார்.
பிரியன் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தாலும் வதனாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவளை பார்க்கக் கூட அவன் முயற்சி செய்யவில்லை.
தன்னை அவள் நம்பவில்லை என்ற கோபம் இன்னமும் அவனுக்குள் கனன்றது. கல்லூரியில் வேறு அனைவரும் தன்னையே பார்ப்பது போல ஒரு தோற்றம் வேறு அவனுக்கு.
அவனால் இயல்பாய் நடமாட முடியவில்லை. வதனா அவனிடம் பேச முயற்சித்தும் அவளை தவிர்த்து வந்தான்.
பதினைந்து நாட்கள் கூட அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை அவளிடம் பேசாமல், அவளைப் பார்க்காமல்.
கண்கள் அவள் வரும் திசை நோக்கிப் பாய்வதை தடுக்க முடியாமல் ஒரு வாரம் கல்லூரிக்கு விடுப்பு கூட எடுத்து பார்த்துவிட்டான்.
பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த வேளை அருகில் இருந்த ராகேஷ் “டேய் பவள் என்னாச்சு உனக்கு?? நீ ஏன் பிரியாகிட்ட பேசுறதில்லை” என்று ஆரம்பித்தான்.
“உனக்கு முதல்ல இருந்து சொல்லணுமா??” என்று முறைத்தான் பிரியன் நண்பனை.
“இல்லைடா அவ பாவம் தானே… நேத்து வந்து என்கிட்ட அழுதிட்டே பேசிட்டு இருந்த… மனசுக்கு கஷ்டமா போச்சு…”
“நீ தானேடா அவளுக்கு இருக்க… எதையும் உன்கிட்ட தானே உரிமையா கேட்குறா… அவ அன்னைக்கு உன்னை நம்பாம பேசினப்போ எனக்கு கூட கோவம் வந்துச்சு மச்சான்”
“ஆனா நம்ம பிரின்சியை போய் ஒரு வாங்கு வாங்கியிருக்கா தெரியுமா… நம்ம பியூன் ரெட்டி தான் சொன்னாரு…”
“அந்த பிரவீன் வேற அவளை ஏதோ மிரட்டியிருப்பான் போல, பதிலுக்கு நல்லா திட்டிட்டு வந்திட்டான்னு அவ கூட படிக்கிற அந்த ரேஷ்மி தான் சொன்னா”
“என்னடா லுக் விடுற, ரேஷ்மி யாருன்னு பார்க்கறியா… உன் ஆளோட கிளோஸ் பிரண்டு நம்மளை மாதிரியே…”
பிரியன் தலையில் அடித்துக்கொண்டான். “ஏன்டா அடுத்த ரூட்டா…”
“இல்லைடா பிக்ஸ் ஆகிட்டேன்…”
“கர்மம்” என்று இடித்துக்கொண்டான் அவன் மீண்டும்.
“நிஜமாவே அவ பிரின்சிபால்கிட்ட போய் சண்டை போட்டாளாடா!! எனக்காகவா!!” என்றான் பிரியன்.
‘அப்பாடா மலையிறங்குறான்…’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு “ஆமாடா நிஜம் தான், நீ நம்பலைன்னா நான் ரெட்டியை கூட்டிட்டு வர்றேன் நீயே கேளு…”
“வேணாம்…” என்றவன் “ரொம்ப பீல் பண்ணாளா…”
“ஆமாடா…”
“எனக்கு கூட அவளை பார்க்காம பேசாம இருக்கவே முடியலை… அவளுக்கு தெரியாம பார்த்திட்டு தான் இருக்கேன்…”
“அதான் தெரியுமே…”
“எப்படி??”
“அதான் இப்போ சொன்னியே?? இல்லைடா நீ பார்க்காம இருக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்…”
“நான் அவளை பார்க்க போறேன்”
“டேய் சார் கிளாஸ் எடுத்திட்டு இருக்கார்டா, அவளும் இப்போ கிளாஸ்ல தான் இருப்பா…”
“ஆமால கிளாஸ் எப்போடா முடியும்…”
“லவ் பண்ணுங்கடா வேணாம் சொல்லலை… பிரண்ட்ஸ் ஏன்டா தொல்லை பண்றீங்க…”
“போடா…” என்ற பிரியன் கல்லூரி முடிந்ததும் முதல் ஆளாய் வெளியில் வந்திருந்தான்.
வதனாவிற்காக காத்திருக்க அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்தவளின் பார்வை அவன் மீதே இருந்தது. வேகமாய் ஓடிச்சென்றவன் அவள் கைப்பிடித்து தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.
அவன் பைக் நிறுத்துமிடம் வந்ததும் பைக்கை வெளியில் எடுத்து “ஏறு வது…” என்றிருந்தான்.
“நான் வரலை…”
“கோபமா??”
“எனக்கில்லை…”
“எனக்கும் இப்போ இல்லை ப்ளீஸ் வது ஏறு டியர்… எல்லாரும் பார்க்கறாங்கன்னு அப்புறம் நீ தான் முறைப்பே ஏறுடி”
“என்ன??”
“சரி சரி ஏறு செல்லம்”
“ஹ்ம்ம்…” என்றதும் பைக்கில் விர்ரென்று கிளப்பியவன் அடுத்து சென்று நிறுத்தியது சஞ்சீவையா பார்க்கில் தான்.
“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க… எனக்கு ஹாஸ்டல்க்கு டைம் ஆகிடும்…”
“ப்ளீஸ் வது உன்கிட்ட பேசணும் கொஞ்ச நேரம் அதான்…” என்று அவளை கைப்பிடித்து கூட்டி வந்தவன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
“உட்காரு…”
“சொல்லுங்க…”
“பிரவீன் உன்கிட்ட என்ன சொன்னான்??” என்று தான் ஆரம்பித்திருந்தான்.
“அதெப்படி உங்களுக்கு தெரியும்…”
“சொல்லு வது உன்கிட்ட எதுவும் தப்பா நடந்துக்கிட்டானா… அன்னைக்கே அவனை எதுவும் செய்ய முடியாம போச்சு…”
“நீ சொன்னேன்னு தான் பேசாம இருந்தேன். இப்பவும் அப்படியே இருக்க மாட்டேன் வது…”
“அச்சோ ப்ளீஸ் விடுங்களேன், அதெல்லாம் வேணாம். அவன் தான் தப்பை ஒத்துக்கிட்டான்ல. பிரவீன் பிரச்சனையை இதோட விட்டிருவோமே… நம்மளை பத்தி மட்டும் பேசுவோமே” என்றாள்…
அவர்களே எதிர்பார்த்திருக்கவில்லை பிரவீன் என்பவன் மீண்டும் அவர்களுக்கிடையில் வருவான் என்று. அவன் மீண்டும் வரும் போது………..
வில்லங்கம்
விலை கொடுத்து
வாங்கவில்லை
ஆனாலும்
தேடி வந்தது
இணையை சேர்க்க
வந்திருந்தது…

Advertisement