Advertisement

அத்தியாயம் –11

அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.

                    

“இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ”

“ஆமா துளிர் தான் விட்டுப்போச்சு. என்ன பண்ண முடியும் இனி உங்களால!!” என்ற பிரியனின் பேச்சில் திமிர் இருந்தது.

“ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சியா!! இதுக்கு முன்னாடி என்னாச்சு ஏதாச்சுன்னு கூட தெரியாம உன்னை ஓட ஓட விரட்டினது உனக்கு மறந்திருச்சு போல” என்றார் அவர் பதிலுக்கு.

“மறக்கலை எதையுமே நான் மறக்கலை. உண்மை தான் அப்போ என்ன ஏதுன்னு தெரியாம தான் இருந்திட்டேன். வருஷங்கள் கடந்து தானே தெரிய வந்துச்சு” என்றானவன்.

“அப்போவேஉன்னால எதையும் சரி பண்ண முடியலை. இப்போ மட்டும் என்னடா செஞ்சு கிழிக்க போறே?? ஒழுங்கு மரியாதையா ஓடிரு” என்று சொன்னவரை பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

“உங்களால ஆனதை பாருங்க” என்றுவிட்டு அலட்சியமாய் திரும்பினான் வெளியே செல்ல.

“இங்க இருந்து நீ வெளிய போக முடியாது” என்று அவர் சொல்லவும் அவனை பத்து பேர் மொத்தமாய் சூழவும் சரியாய் இருந்தது.

“இன்னுமா முட்டாளா இருக்கீங்க நீங்க?? டெக்னாலஜி வளர்ந்திட்டே மூளை வளர்ந்திருக்கும்ன்னு நினைச்சேன். அதே மங்குனி அமைச்சர் தானா நீர்!!” என்று அவன் கேலியாய் சீண்டவும் கோபம் கொப்பளித்தது எதிரில் இருந்தவருக்கு.

“என்னடா அதிகமா பேசறே??” என்றவர் அவனருகே வந்திருந்தார்.

“இது ஜிபிஎஸ் ட்ராக்கிங் பென். இங்க வரும் போதே ஆன் பண்ணிட்டு தான் வந்தேன். இங்க நடக்கற காட்சியும் கூட இதுல இருக்கற இந்த கேமரா வழியா ரெக்கார்ட் ஆகிடும்”

“அது என்னோட மெயில்ல சேவ் ஆகி அடுத்த இரண்டு மணி நேரத்துல முக்கியமானவங்களுக்கு தகவல் போய் சேர்ந்திடும்”

“நான் முக்கியமானவங்கன்னு சொன்ன லிஸ்ட்ல முதல்ல இருக்கறது என்னோட வது தான்” என்று அழுத்தி சொன்னான்.

எதிரில் இருந்த அம்மனிதர் அவன் சொன்னதை கேட்டு சற்றே தயங்கி நின்றார்.

அத்தயக்கத்தைதனக்கே சாதகமாக்கிக் கொண்டு “பொறுமையா யோசிங்க என்னை என்ன செய்யலாம்ன்னு நான் கிளம்புறேன்” என்றுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான் அவன்.

வெளியில் வந்ததும் புன்சிரிப்பு அவன் முகத்தில். பின்னே அவன் சொன்னது எல்லாம் நம்பியவர்களை நினைத்து அவனுக்கு சிரிப்பு வராதா என்ன!!

அவனிடத்தில் ஜிபிஎஸ் ட்ராக்கிங் டிவைஸ் இருக்கிறது தான். ஆனால் அதை அவன் அந்நேரம் கொண்டு வந்திருக்கவில்லை.

அவர்களை ஏமாற்ற சிறு விளையாட்டு காட்ட அவர்களும் அதை நம்பி ஏமாந்திருந்தனர்.

____________________

ராம் படுக்கையறையில் இருக்க அவனைத் தேடிச் சென்றாள் அவன் மனைவி.

“என்னங்க இங்க என்ன பண்றீங்க??”

“ஏன்?? என்னாச்சு இப்போ??”

“பாவம் அங்க வதனா பீல் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க கோவமா போனா அவங்க எப்படி தாங்குவாங்க. உங்களுக்கு தெரியாதா” என்றாள் கணவனை பார்த்து.

‘ரெண்டு பேரும் சேர்ந்து இத்தனை நாள்ல என்னைப் படுத்தி வைச்சது பத்தாதா!! உங்களுக்கு இடையில் மாட்டிட்டு ஒருத்தர் பக்கமும் என்னால பேச முடியலை. நான் இனி உங்க விஷயத்துல தலையிடுறதா இல்லை’ என்ற எண்ணம் அவன் மனதில்.

“என்னங்க பேசாமலே இருக்கீங்க??”

“ஒண்ணுமில்லை”

“கோவமா இருக்கீங்களா எங்க மேல??”

“பூரிச்சு போயிருக்கேன்” என்று நக்கலாய் பதில் சொன்னான்.

“நான் அன்னைக்கு பேசினதை மனசுல வைச்சுட்டு தானே இப்படி இருக்கீங்க” என்றவள் அவனை நெருங்கி வந்திருந்தாள்.

“நான் எதுவும் சொல்றதாயில்லை சுகுணா. அன்னைக்கு ஒரு சின்ன டென்ஷன் உன்னை கோபமாய் பேசிட்டேன் தப்பு தான்”

“உனக்கு குழந்தையை காணுங்கற பதட்டம் போல தானே எனக்கும் இருந்திருக்கும். அதுல முன்னப்பின்ன நான் பேசியிருக்கலாம்”

“அதை நான் உள்ளார்ந்து சொல்லியிருப்பேன்னு நீ நினைக்கறியா!! நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல உன்னை நான் எதுவும் சொல்லியிருக்கேனா”

“உன்னோட உணர்வுகளை புரிஞ்சுக்க முடியாதவன்னு என்னை நினைச்சியா!! அந்த நேரத்துல இருந்த குழப்பத்துல கவனிக்காம இருந்திருப்பேன். அதுக்காக உன்னை நான் புரிஞ்சுக்காம இருந்திடுவேனா”

“அன்னைக்கு சொன்னியே ஒரு வார்த்தை உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னை இழுக்காதீங்கன்னு. கொஞ்சம் இல்லை ரொம்பவே காயப்படுத்திடுச்சு”

“குழந்தையை கண்டதும் உன் கோபம் வருத்தமெல்லாம் பனியா கரைஞ்சு போச்சு. என் வருத்தம் சட்டுன்னு போகாது. நீ பேசி கஷ்டப்படுத்தினே, அவ பேசாம கஷ்டப்படுத்திட்டா”

“உங்க ரெண்டு பேரோட சந்தோசம் எனக்கு எப்பவும் முக்கியம். இந்த நிமிஷம் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு சந்தோசமா இருக்கறது எனக்கு நிறைவா இருக்கு”

“இதுக்கு மேல என்கிட்ட எதையும் அதிகமா எதிர்பார்க்காதே சுகும்மா…”

சுகுணாவிற்கு கண்ணில் நீர் நிறைந்துவிட்டது. “உங்க கோபம் மாதிரி தானே நானும் ஒரு வருத்ததுல பேசிட்டேன். அதுக்காக ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க” என்றாள் தழுதழுப்பாய்.

“நத்திங் சீரியஸ் விட்டு தள்ளு சுகு… கோபத்துல சின்னது பெரிசுன்னு எதுவுமில்லை.நமக்குள்ள இனி எந்த சண்டையும் வேண்டாம்”

“நான் சண்டை போடுறனா??” என்றாள் அவள் இப்போது பாவமாய்.

“நான் எப்போ அப்படி சொன்னேன். இந்த மாதிரி சிறு பிசகும் நமக்குள்ள இனி வேணாம் சரியா…”

“ஹ்ம்ம்” என்று தலையாட்டினாள்.

“நீங்க வதனாகிட்ட பேசி…..” என்று இழுத்தவளை நிறுத்துமாறு சைகை செய்தான்.

“உன்னைவிட அவளை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். இவ்வளவு பிரச்சனையில அவளுக்கு ஒரு முறை கூட என்கிட்ட பேசணும்ன்னு தோணவேயில்லைல”

“அப்புறம் நான் மட்டும் எப்படி உடனே போய் பேசுவேன்…”

“என்னங்க நீங்க சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கறீங்க… பிரண்ட்ஸ்குள்ள இப்படிலாம் இருக்கவே கூடாது…”

“நான் சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கறேனா… சரி விடு உனக்கு நான் சொல்ல வர்றது புரியாது… வதனா என்கிட்ட பேசட்டும் நான் அப்புறம் பேசிக்கறேன்” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான் அவன்.

அவன் வெளியில் வரவும் அவன் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

அதில் வந்த எண்ணை பார்த்தவன் எதிரில் இருந்த சோபாவில் இருந்தவளை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டே அவளின் எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் வந்து அமர்ந்தான்.

“சொல்லு வல்லா” என்றவாறே அழைப்பை ஏற்று காதில் வைக்க வதனாவின் முகமோ சுருங்கியது. அதை திருப்தியுடன் பார்த்துக்கொண்டான் ராம்.

மறுமுனையில் இருந்தவனோ “சாரி ராம் ஊருக்கு போய் இவ்வளோ நாள் கழிச்சு போன் பண்ணுறேன்னு தப்பா எடுத்துக்காத?? ரொம்ப நாள் வேலை எல்லாம் பெண்டிங் ஆகிடுச்சு அதான்…”

“நாம ஒழுங்கா பேசிக்காதப்பவே நீஇவ்வளோ நாள் கழிச்சு பேசறேன்னு என்கிட்ட மன்னிப்பு கேட்குற… என்னை நல்லா புரிஞ்சவங்கன்னு நினைச்சவங்க எல்லாம் ஏன்னு கூட கேட்டு என்கிட்ட பேசறதில்லை” என்றான்வதனாவை பார்த்துக்கொண்டே.

அவளோ இவனை பார்த்து முறைப்பதும் பல்லைக் கடிப்பதுமாக இருந்தாள். ‘என்னைப்பத்தி பேச அவன் தான் கிடைச்சானா உனக்கு’ என்ற கோபம் அவள் முகத்தில் அப்பட்டமாய்.

ராம் அதையெல்லாம் கண்டுகொள்பவனா என்ன… அவன் அசட்டையாய் அவளை பார்த்து தன் பேச்சை வல்லவனுடன் தொடர்ந்தான்.

“சொல்லு வல்லா என்ன விஷயமா என்கிட்ட பேசணும்”

“இசை எப்படி இருக்கா?? பிபியை தேடி போயிருந்தேன், அவ ஊர்ல இல்லைன்னு சொன்னாங்க… அப்போ குழந்தையை கூட்டிட்டு எங்கயும் போயிட்டாளா தெரியலையே” என்று அவன் கவலையுடன் கேட்கவும் பேசிக்கொண்டே எழுந்திருந்தான் ராம்.

“இங்க தான் வந்திருக்கா….” என்றான் மெதுகுரலில்.

“எப்போ?? எப்போ வந்தா??”

“காலையில வந்திருப்பா போல, என்கிட்ட எதுவும் சொல்லலை வல்லா. இனிமே தான் என்னன்னு கேட்கணும். இசை நல்லாயிருக்கா…” என்று வல்லவனுக்கு தேவையான பதிலை கொடுத்தான்.

“இ… இசை இனி… இனிமே எங்க இருப்பா…” என்றான் எதிர்முனையில் இருந்தவன்.

“இங்க தான் வல்லா இருப்பா…”

“நா… எ… எனக்கு பார்க்கணும் போல இருந்தா வரலாமா…” என்று தயங்கி தயங்கி அனுமதி கேட்கவும் ராமிற்கு ஏதோ போலானது.

இசைப்பிரியா இங்கிருந்து சென்று இத்தனை நாட்களில் அவளில்லாத அந்த நாட்கள் அவனுக்கு எவ்வளவு வெறுமை என்று அவன் மட்டுமே அறிவான்.

என்ன தான் சரண் வீட்டில் இருந்தாலும் அவனுக்கு பிரியாவை அதிகம் தேடியது என்றே சொல்லலாம்.சரணுக்கு இன்னும் பேச்சே வரவில்லை. பிரியாவோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள்.

அவள் பிறந்ததில் இருந்து அவன் கைக்குள்ளேயே இருக்கிறாளே!! இன்று அவளை பார்த்த போது அவன் கண்களும் துளிர்த்ததே!!

பெறாதபிள்ளையின் மேல் தனக்கிருக்கும் பாசம் இத்தனை வருடமாய் பார்க்காத தான் பெற்ற பிள்ளையின் மீது அவனுக்கு பாசமிருக்காதா!! அவன்நிலை இன்னும் பரிதாபமாய் தோன்றியது.

“என்னாச்சு ராம்?? நான் வர்றது தர்மசங்கடம்ன்னா நான் வரலை ராம்…” என்று சொல்லும் போதே அவன் குரல் உள்ளே சென்றதுவோ!!

“அதெல்லாம் ஒண்ணுமில்லை வல்லா… நீ எப்போ வேணும்ன்னாலும் இங்க வரலாம். அவ உன்னோட பொண்ணு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்து என்னைக்கு கேட்கறீங்களோ அன்னைக்கு அவ உங்ககிட்ட இருப்பா…” என்றான் ராம்.

வல்லவனுக்கு சட்டென்று நெகிழ்ந்து போனது உள்ளம். “தேங்க்ஸ் தேங்க்ஸ் ராம்… காலம் சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணும்ன்னு நம்புறேன்…”

“ராம்… அப்புறம் இன்னொரு விஷயம்” என்றான் வல்லவன் பீடிகையுடன்.

“என்னாச்சு வல்லா சொல்லு??”

“உன்கிட்ட நான் தனியா பேசணும் வதுவை பத்தி. ரொம்பவும் அவசரம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசணும்”

“நான் எப்போ எங்க வரணும்ன்னு சொல்லு. நான் வந்து உன்னை பார்க்குறேன்” என்றான் வல்லவன்.

‘அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும். இருவரும் பிரிந்த கதையாக இருக்குமோ…’ என்று யோசித்தவனுக்கு ‘இருக்காது வேறு ஏதோ இருக்கிறது’ என்று மூளை அறிவுறுத்த உடனே“நான் சென்னை வர்றேன்” என்றான் வல்லவனிடம்.

“நாளைக்கு மார்னிங் பிளைட்ல வர்றேன், வந்ததும் போன் பண்ணுறேன் வல்லா… நாம மீட் பண்ணுவோம்… ஆனா என்ன விஷயமா எதுவும் பிரச்சனையா??”

“ஹ்ம்ம்ஆமா ராம்…” என்றது மறுமுனை.

“அவளாலயா?? இல்லை அவளுக்கா??”

“அவளுக்கு!!! நாம இதைபத்தி நேர்ல பேசலாம்…” என்று முடித்து போனை வைத்துவிட்டான் வல்லவன்.

போனை வைத்துவிட்டு சோபாவில் சற்று சாய்ந்தவனுக்குள் யோசனை குமிழ்கள். எதிரில் ஒருத்தி இருந்தாளே என்னவானாள் என்று கூட அவன் யோசிக்கவில்லை.

“உனக்கு என்னைவிட அவன் தான் முக்கியமா போயிட்டானா” என்ற குரல் அவனை தீண்டும் வரை.

நிமிர்ந்து பார்த்தவன் “என்கிட்டயா பேசினே??”

“பின்ன வேற யார்கிட்ட பேசுவாங்களாம்” என்றாள் அவள் சிடுசிடுப்பாய்.

“உனக்கு என்னைலாம் ஞாபகம் இருக்கா??” என்றவனை முறைத்தாள் வதனா.

“அப்புறம் என்ன கேட்டே?? ஹான் ஞாபகம் வந்திடுச்சு அவன் தான் முக்கியம்ன்னு கேட்டேல?? ஆமா அதை ஏன் நீ கேக்குற??” என்று வெடுக்கென்று கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியில் லேசாய்கண்கள் கலங்கிவிட “அப்போ நான் உனக்கு முக்கியமில்லையா. நான் உன்னை எதுவும் கேட்க கூடாதா…” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைய ஆரம்பித்திருந்தது.

“அதை நானும் கேட்கலாமே” என்றிருந்தான் அவன்.

“ராம்…”

“எனக்காக கூட நீ எதையும் செய்யணும்ன்னு நினைக்கலை தானே… அதை கூட விடு அதுல உனக்கு பிடித்தமில்லைன்னு எடுத்துக்கலாம்”

“ஆனாநான் சொல்ல சொல்ல கேட்காம பிரியாவை கூட்டிட்டு போனியே ஏன்?? உன்னை மீறி நான் எதையும் செஞ்சுடுவேனா??”

“வல்லாவை வெளிய எடுத்தேன் தான். அவன் தெரியாம தானே அதை செஞ்சான். நான் அவனை சீண்டி பேசினேன் அதுனால தான் அப்படி செஞ்சான்”

“அப்போ அவன் செஞ்சது சரின்னு நீ சொல்றியா ராம்??”

“அந்த தப்புல எனக்கும் பங்கிருக்குன்னு சொல்றேன். அவன் செஞ்சது சரியோ தப்போ பிரியா யாருன்னே தெரியாம அவன் அதை செஞ்சுட்டான்…”

“அவனை வெளிய எடுக்கறது தான் அப்போ எனக்கு சரின்னு தோணிச்சு செஞ்சேன். நான் இதுவரைக்கும் உனக்கு பாதகமா எதையும் செஞ்சதில்லைன்னு உனக்கு தெரியும் தானே”

“அப்புறமும் நீ பிரியாவை உன்னோட கூட்டிட்டு போனியே அது ஏன்னு எனக்கு புரியலை. சோ நீ என்னை புரிஞ்சது அவ்வளவு தான் இல்லை”

“ராம் அன்னைக்கு நான் பிரியாவை கூட்டிட்டு போனது தப்பு தான்டா… அதுவும் சுகுணாவை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்…”

“என்னால உடனே அங்க இருந்து திரும்ப முடியலை. உனக்கே தெரியுமே பழைய கவர்னர் மாறப் போறார்ன்னு அந்த வேலை எல்லாம் என்னை இழுத்திட்டு. நேரம் கிடைச்சதும் நேரா இங்க தானேடா வரேன்…”

“எனக்கு உங்களை விட்டா வேற யாருமே சொந்தமில்லை ராம்” என்று சொல்லும் போது விழி நீர் கன்னத்தில் வழிந்திருந்தது.

“சுகுணாவை மட்டும் தான் கஷ்டப்படுத்தினியா…” என்றவன் பின் எதுவும் சொல்லாமல் அமைதியானான்.

“ராம்… ஏன்டா இப்படி பண்ணுறே?? இப்படி எல்லாரும் என்னை சுத்தி சுத்தி அடிச்சா நான் என்னடா செய்வேன். நீயே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறியே ராம்” என்றவள் எழுந்து சென்று அவனருகில் இருந்த மற்றுமொரு ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.

“நான் இதுக்கு மேல இதைப்பத்தி உன்கிட்ட பேசலை போதுமா. கண்ணைத் துடை முதல்ல…”

“கண்ணீரை மட்டும் துடைக்க சொல்லலை… அதுல நீ போட்டிருக்க கோபம், இயலாமைஇன்னும் உன்னைச்சுத்தி நீ போட்டிருக்க வேலியையும் சேர்த்து துடைச்சு எறி”

“அப்போ தான் உன்னால புதுசா யோசிக்க முடியும். சரி எது தப்பு எதுன்னு உனக்கு விளங்கும்” என்ற ராமின் பேச்சு அவளுக்கு புரியவில்லை.

‘இப்போ என்ன எனக்கு புரியாம இருக்கு…’ என்று யோசித்தாள் வதனா.

“இந்த கதை எல்லாம் விடு… ஆமா இங்க இருந்து நீ ஊருக்கு போய் எத்தனை நாளாச்சு எனக்கு ஒரு போன் பண்ணணும்ன்னு உனக்கு தோணவே இல்லையா??” என்றான் ராம்.

வதனா அவள் கண்களை அழுந்த துடைத்தவள் “இப்போ தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு… ஆமா நான் ஊருக்கு போனனே அப்படியே போகட்டும்ன்னு நீ எனக்கு போன் பண்ணாமையே இருந்திட்டியாடா??” என்று பதில் கேள்வி கேட்டாளவள்.

“நான் கேட்டா நீ திருப்பி கேட்கறியா?? உன்கிட்ட பேசலைன்னாலும் நீ பண்றேன்னு எனக்கு தெரியாம இருக்காது”

“அதான் உன் அல்லக்கை கபிலன் இருக்கானே அவன் சொல்லியிருப்பான்…” என்று அவள் நக்கலாய் சொன்னாள்.

“ஹ்ம்ம் உண்மை தான்… ஆனா நீ அவன்கிட்ட கூட சொல்லாம வருவேன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது…”

“இல்லை ராம்… பிரியாவை கூட்டிட்டு போனதுல இருந்து ஒரே குற்றவுணர்ச்சியா இருந்துச்சு… யாரையும் பார்த்து பேச பிடிக்கலை…”

“கபி வேறஅப்போ தான் ஊருக்கு போயிட்டு வந்தான். என்கிட்ட பேச வந்தவன்கிட்ட நான் தான் முகம் கொடுத்து பேசலை… மனசு பூரா குழப்பமாவும் ரொம்ப பாரமாவும் இருந்துச்சு ராம்… சாரிடா… நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என்றவள் அவன் கரம் பற்றி மன்னிப்பு கேட்டாள்.

“கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா வேணா மன்னிக்கறேன்… இந்த கையை காலா நினைக்கிற கதை எல்லாம் வேணாம்…” என்றவன் முற்றிலும் இயல்பான மனநிலைக்கு வந்திருந்தான்.

கணவனின் இயல்பான பேச்சை உள்ளிருந்து கேட்ட பின்னே தான் வெளியே வந்தாள் சுகுணா இருவருக்கும் சிற்றுண்டியுடன்.

மனைவியைஏறிட்டு பார்த்துகண்சிமிட்டி லேசாய் முறுவல் செய்ய ‘எப்படி தான் என்னை கண்டுப்பிடிக்கிறாரோ’ என்று தன் கணவனை மெச்சிக்கொண்டு உள்ளே சென்றாள் அவள்.

மறுநாள் சென்னை செல்வதற்கு டிக்கெட் போடலாம் என்று அவன் கணினியில் அமர்ந்திருக்க அவன் அலுவலகத்தில் இருந்து முக்கிய அழைப்பு அவனுக்கு.

மறுநாள்புவனேஷ்வருக்கு அலுவலக நிமித்தமாக செல்ல வேண்டி வந்தது. அங்கு அவன் பத்து நாட்கள் வரை இருக்க வேண்டிய சூழல். உடனே வல்லவனுக்கு அழைத்தான் ராம்.

‘இப்போ தானே பேசி வைச்சோம், ராம் எதுக்கு உடனே கூப்பிடுறான்’ என்ற யோசனையுடனே போனை எடுத்து காதில் வைத்தான் வல்லவன்.

“ராம் பேசறேன்…”

“சொல்லு ராம் என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா??”

“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை வல்லா. நாளைக்கு என்னால சென்னை வர முடியாது போல நான் அவசரமா புவனேஷ்வர் போக வேண்டிய வேலை…”

“நான் கண்டிப்பா போயாகணும், அங்க ஒரு பத்து நாள் வேலையிருக்கு. அது முடிஞ்சதும் நேரா சென்னை வந்திடறேன்”

“பரவாயில்லை ராம்… அவசரம் வேணாம் நீ உன் வேலை முடிச்சுட்டு சொல்லு நானே ஹைதராபாத் வந்து உன்னை பாக்குறேன்”

“வல்லா அதுவரைக்கும் வதனாவை நீ தான் பார்த்துக்கணும்” என்றுராம் சொல்லும் போதே சிறுபிள்ளைத்தனமாய் தான் அவனுக்கே தோன்றியது.

வல்லவன் அதற்கு ஒன்றும் சொல்லாமல் லேசாய் சிரித்து வைத்தான். விரக்தியாய் சிரிக்கிறான் என்பது அவன் சொல்லாமலே மறுமுனையில் இருந்தவனுக்கு புரிந்தது.

“தப்பா எடுத்துக்காதே வல்லா… கபிலனுக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்கு அவன் கேரளா போறான். அவனும் இனி வதனா கூட இருக்க மாட்டான்”

“நீ வேற அவளுக்கு பிரச்சனைன்னு சொன்னியா… அது தான் அப்படி சொல்லிட்டேன்… ப்ளீஸ் டோன்ட் பீல் வல்லா, ஐ யம் சாரி…”

“நீ சொன்னதுல தப்பு எதுவும் இல்லையே ராம்… இவ்வளவு நாளா நீ தானே அவ மேல எந்த தூசும் துரும்பும் படாம பார்த்துக்கிட்டே”

“என்னால புரிஞ்சுக்க முடியுது, நான் எதுவும் தப்பா நினைக்கலை ராம். எதுவும் செய்யாம கையாலாகாம இருந்திட்டோம்ன்னு தான் தோணுச்சு”

“வல்லா… அப்படி எல்லாம் பேசாதே… உன் மேல எனக்கு வருத்தம் உண்டு ஆனா கோபமில்லை. எதுவோ இருக்குன்னு தெரியும்… ஆனா என்னன்னு தெரியாது”

“உன்னை சீண்டியிருப்பேன் அது கூட நீயா பேசுவேன்னு தான்… உன்னை என்னைக்கும் என்னால தப்பா நினைக்க முடியாது வல்லா… உனக்கு என்னைக்கு என்கிட்ட சொல்லணும்ன்னு தோணுது அன்னைக்கு சொல்லு”

“சரி வல்லா டேக் கேர்… வதனா நாளைக்கு சென்னை வந்திடுவா, கபிலன் இன்னும் ரெண்டு நாள் தான் சென்னையில இருப்பான்… பார்த்துக்கோ” என்று சொல்லி போனை வைத்தான் அவன்.

வதனா மறுநாள் சென்னை வந்திருக்க அவளுக்கு வேலை மாற்றல் வந்திருந்தது இப்போது.

கபிலன் கிளம்பிச் செல்வதற்கு முதல் நாள் அவளின் ட்ரான்ஸ்பர் உறுதியானது. அவளை அறநிலையத்துறைக்கு மாற்றியிருந்தனர்.

ராமிற்கு அழைத்து விஷயத்தை சொன்னவள் அறியவில்லை அங்கு சென்ற பின்னே அவள் வாழ்வில் நடக்கப் போகும் முக்கிய மாற்றங்களை!!

அழகுநதியென்று

அதனுள்ளேபாதம்நனைக்க

உள்ளிழுக்கும்சுழலோ

அறியாபேதையைஅழைக்க

சதிமீட்க

பதியவன்வருவானோ

விதியோடுசதிசெய்து

புதுவிதிதருவானோ!!

Advertisement