Advertisement

அத்தியாயம் – 10

 

சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.

 

அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன்  குழந்தையை பிரித்து அவர்கள் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் வேறு.

 

அவர்கள் வந்து இறங்கிய அன்று அவளுடன் வந்த சிறுமியை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர், யார் இந்த சிறுமி என்று.

 

அவளின் அழைப்பும் வேறு வதும்மா என்றிருந்ததில் அது அவள் குழந்தையா அல்லது அவளுக்கு தெரிந்தவரின் குழந்தையா என்ற ஆராய்ச்சி அனைவரிடத்திலும்.

 

கபிலன் ஒருவனுக்கே தெரியும் பிரியா அவள் குழந்தை என்று. அவள் யாரையும் கண்டுக்கொள்ளாமல் அவளறைக்கு சென்று மறைந்தாள் குழந்தையுடன்.

 

அப்படியே சென்று அங்கிருந்த கட்டிலில் விழுந்தவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. இவ்வளவு அவசரப்பட்டிருக்கக் கூடாதோ என்று காலங்கடந்த சிந்தனை வேறு.

 

கிளம்பும்போது தான் சுகுணாவிடம் ஒன்றுமே சொல்லியிருக்கவில்லை என்ற குற்றவுணர்ச்சி வேறு அவளை கொன்றது.

 

அதை இன்னமும் அதிகமாக்குவதாய் இருந்தது அவள் மகளின் பேச்சு. “வதும்மா சுகும்மா எங்க போனாங்க… எனக்கு பசிக்குதும்மா” என்று சொல்லி சுகுணாவை ஞாபகம் செய்தாள்.

 

எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் சுகுணா தன் பிள்ளை போல் பார்த்திருந்தாளே!! என் பிள்ளை என்ற இறுமாப்பில் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் கோபத்தில் இப்படி அழைத்து வந்துவிட்டேனே!!

 

என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் அவர்கள் என்ற எண்ணத்தில் அழுகை வேறு வந்தது. அதையெல்லாம் விட குழந்தையின் பசி அவளுக்கு மேலாய்ப்பட எழுந்து சென்றவள் குழந்தைக்கான உணவுடன் வந்திருந்தாள்.

 

ராமிற்கு உடனே அழைத்துப் பேச எண்ணம் தோன்றிய போதும் அவன் மீது கோபமும் இருந்தது அவளுக்கு. வல்லவரையனை விடுவித்திருப்பானே என்ற கோபம் அவளை பேச விடாமல் தடுத்தது, உடன் அவளின் வேலைகளும்.

 

பேசட்டும் அவனே போன் செய்து என்னிடம் பேசட்டும் அப்போது பேசிக்கொள்கிறேன் அவனிடம் என்ற வீம்பு வேறு வந்து ஒட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு.

 

அவளுக்கு ஒரே யோசனை இங்கு வந்து முழுதாய் ஐந்து நாட்கள் கடந்துவிட்டது இன்னமும் ராம் போன் செய்யவில்லையே என்று. சுகுணாவும் கூட போன் செய்திருக்கவில்லை என்று லேசாய் ஒரு வருத்தம் வேறு அவளுக்கு.

 

தானுமே சுகுணாவை அழைத்திருக்கலாம் தானே என்று மனசாட்சி குத்திக் குடைய வெட்கினாள் அவள். அவளால் இயல்பாய் நடமாட முடியவில்லை.

 

கபிலனிடம் கூட அவள் முகம் கொடுத்து பேசவில்லை. மொத்தத்தில் அவள் முற்றிலும் மாறியிருந்தாள். தன்னையே அவளுக்கு பிடிக்காத நிலை. தவறு செய்துவிட்ட உணர்வு வேறு.

 

அவள் வேலை மேலும் ஒரு வாரம் இழுத்துவிட இதோ விடுமுறைக்கு விண்ணப்பித்து மறுநாள் காலையிலே ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள் யாரிடமும் சொல்லாமல்.

 

கபிலனுக்கு எப்போதும் சொல்லிவிடுவாள் இந்த முறையும் அவனிடம் கூட எதையும் பகிரவில்லை அவள்.

 

ஒன்பதரை மணிக்கு பிடித்த பிளைட் பத்தரை மணிக்கு தரையிறங்கி இருந்தாள். இசைப்பிரியாவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டாள். ராமின் எண்ணுக்கு கூட அவளுக்கு அழைக்க தோன்றவில்லை.

 

வெளியில் வந்து டாக்ஸி ஒன்றை பிடித்து அவள் செல்ல வேண்டிய முகவரி சொல்லி ஏறி அமர்ந்தவள் பிரியாவை சீட்டில் சாய்த்து பின் தானும் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள்.

 

கண் மூடி சயனித்திருந்தாள் வதனா. ஹைதராபாத்தில் கிளம்பி வந்த அன்றிலிருந்து அவளுக்கு சரியான உறக்கமில்லை, வேலையில் கவனமில்லை.

 

அனைத்தையும் மீறி பிரியாவின் மீதான சுகுணாவின் அன்பை அவள் சென்னை வந்திறங்கிய அடுத்த சில மணி நேரங்களிலேயே புரிந்துக் கொண்டிருந்தாள்.

 

பிரியா ஒவ்வொரு முறையும் சுகும்மாகிட்ட எப்போ போவோம். சுகும்மா இப்படி செய்வாங்க, சுகும்மா இதெல்லாம் செய்யக் கூடாது சொன்னாங்க.

 

சுகும்மா எனக்கு இதை தான் கொடுப்பாங்க என்று மூச்சு பேச்சு என்று அனைத்தும் சுகுணாவே தான் பிரியாவினிடத்தில்.

 

உடனே கிளம்ப வேண்டும் என்று எண்ணிய அவளின் எண்ணத்தை அவளின் வேலைகள் வேறு பிடித்திழுத்திருக்க அதை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள்.

 

கவர்னர் இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருப்பார் என்பதால் அதற்கு தேவையான கோப்புகளை கவனிப்பது தொடர்பான வேலைகள் அவளை அழுத்தியது.

 

விளைவு குழந்தையை சரிவர அவளால் கவனிக்க முடியவில்லை. சுகுணாவின் பெயர் சொல்லி சொல்லியே பிரியாவை ஒரளவிற்கு கட்டுக்குள் வைத்திருந்தாள்.

 

தன் வேலைகளை விரைந்து முடித்து இதோ கிளம்பியும் வந்துவிட்டாள். அவள் சென்னை வந்துவிட்ட இத்தனை நாளில் ராம் தானாய் அவளுக்கு அழைத்திருக்கவில்லை, அது அவள் மனதை வெகுவாய் வருத்தியது.

 

சுகுணாவை எப்படி எதிர்நோக்கப் போகிறோம் என்ற பதைப்பு அவளுக்கு லேசாய் எழுந்திருந்தது.

 

இதோ வீட்டிற்கும் வந்தாயிற்று. வாசலில் வந்து இறங்கியவள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டிருந்தாள்.

 

டாக்ஸிக்கு செட்டில் செய்து வருவதற்குள் அவளைக் கண்ட செக்யூரிட்டி அவளுக்காய் கேட்டை திறந்து வைத்திருந்தான்.

 

அவனுக்கு ஒரு புன்னகையை பதிலாக்கி நன்றியுரைத்து உள்ளே சென்றாள். ராம் இந்நேரம் அலுவலகத்திற்கு சென்றிருப்பான் என்பது அவளறிந்ததே!!

 

வீட்டில் சுகுணாவும் சரணும் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே உள்ளே செல்லப் போக சுகுணாவே வேகமாய் இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் வந்து இறங்கியதுமே செக்யூரிட்டி உள்ளே அழைத்து சொல்லியிருந்தார்.

 

இவள் வரப்போவதாக கணவன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று மனதில் ஒரு கேள்வியும் வலியும் எழுந்தாலும் அதை மறைத்து அவள் முன் வந்து நின்றிருந்தாள்.

 

பிரியாவை கண்டதும் தூக்கிக் கொள்ள கைகள் பரபரத்த போதும் ஏனோ வாங்குவதற்கு யோசித்தாள். தன்னை வெகுவாய் கட்டுப்படுத்த முயன்றாள் சுகுணா. கண்கள் பளபளத்தது விழி நீரில்.

 

வதனாவிற்கு சுகுணாவின் தவிப்பும் அலைப்புறுதலும் நன்றாய் புரிந்தது. அவள் வந்ததுமே பிரியாவை கண்டு அவள் கண்கள் மின்னியதென்ன இப்போது தன்னிடம் குழந்தையை வாங்க யோசிப்பதென்ன!!

 

பெரும் மனப்போராட்டம் இரு பெண்களின் உள்ளத்திலும். பெற்றவளுக்கும் வளர்த்தவளுக்கும் உண்டான உரிமை போராட்டம் தான்.

 

வளர்த்தவளை புரிந்து பெற்றவள் வந்து நின்றிருந்தாள் அவள் முன். தாயில் பேதமேது பெற்றவள் வளர்ந்தவள் என்று!! தன்னமில்லாத அன்பை கொடுப்பவளே தாய் தானே!!

 

யார் முதலில் ஆரம்பிக்க என்று தான் பார்த்திருந்தனர். இப்போது சுகுணாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் வதனா.

அவளாய் பிரியாவை வாங்குவாள் என்று தோன்றவில்லை. தோளில் தூங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கி சட்டென்று சுகுணாவின் கைகளில் கொடுத்தாள்.

 

சுகுணாவிடம் கொடுக்கும் போதே பிரியாவிடம் அசைவு தெரிந்தது. உறக்கத்திலேயே மெதுவாய் விழித்த பிரியா சுகுணாவை அடையாளம் கண்டு கொண்டிருந்தாள்.

 

“ம்மா… சுகும்மா வந்துட்டீங்களா… எங்கம்மா போனீங்க” என்றவாறே அவள் கழுத்தை கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைக்க இப்போது சுகுணாவின் விழிகள் நிரம்பியிருந்தது.

 

அவள் உள்ளத்து கோபமெல்லாம் எங்கோ சென்றுவிட்டிருந்தது இப்போது. மனதில் ஒரு நிம்மதி தோன்றுவதை அவளால் உணர முடிந்தது.

 

எதிரில் கண்கள் என்னை மன்னித்துவிடு என்ற யாசகத்துடன் கண்கள் கலங்கி சுகுணாவின் முன் மன்னிப்பை வேண்டி நின்றிருந்தாள் வதனா.

 

வார்த்தைகளற்ற பேச்சு அங்கு விழிகளின் மூலமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது. சுகுணாவும் ஒன்றுமில்லை விட்டுவிடுங்கள் என்பதாய் பதில் பார்வை பார்த்தாள்.

 

“என்னை மன்னிப்பீங்களா சுகுணா” என்ற வார்த்தையுடன் வதனா இப்போது உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள்.

“நான் தப்பு பண்ணிட்டேன்… எனக்கு தெரியும் நீங்க பிரியா மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்கன்னு”

 

“பெத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு இருந்தவ அன்னைக்கு அவன் மேல இருந்த கோபத்தை நான் பிரியாகிட்டயும் உங்ககிட்டையும் தான் காட்டிட்டேன்”

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லை வதனா, எனக்கு புரியுது”

 

“நீங்க இல்லைன்னு சொன்னாலும் அது தான் உண்மை சுகுணா. எல்லாம் அவனால தான், அவன் திரும்ப வந்ததுல தான் இதெல்லாம் நடக்குது” என்றவளின் குரலில் அழுகையோடு கோபமும் இருந்தது.

 

கண் மூடி தன்னை நிதானித்தாள். “வேண்டாம் வதனா ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க… எனக்கு புரியுது” என்றாள் சுகுணா.

 

“இல்லை நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன் சுகுணா. என்னை மன்னிச்சிருங்க, உங்க குழந்தையா இருந்தவளை ஏதோவொரு உரிமையில தூக்கிட்டு போயிட்டேன்”

 

“கேக்க மாட்டேன் சுகுணா… இனிமே அந்த உரிமையை நான் கேக்க மாட்டேன்” என்றவளுக்கு அதற்கு மேல தாள முடியாமல் அழுகை வர அங்கேயே மடிந்து அழ ஆரம்பித்தாள்.

 

“வதும்மா ஏன் அழறே?? அழாதம்மா” என்றாள் பிரியா.

“வதனா என்ன சின்ன குழந்தை மாதிரி அழறீங்க?? முதல்ல எழுந்து உள்ள வாங்க” என்றழைத்தாள்.

 

அவளுக்கு கைக்கொடுத்து எழுப்பினாள் சுகுணா. இருவருமாய் குழந்தையுடன் உள்ளே சென்றனர்.

 

“ப்ரீ குட்டி தம்பி அவனோட ரூம்ல விளையாடுறான் நீங்களும் போய் அவனோட விளையாடுங்க” என்று பிரியாவை உள்ளே அனுப்பி வைத்தாள்.

 

உள்ளே சென்று குழந்தைகள் இருவருக்கும் சாப்பிட ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு வதனாவிற்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

 

“என்னை மன்னிப்பீங்களா சுகுணா!!”

 

“நான் உங்களை மன்னிக்க என்ன இருக்கு??”

 

“அப்போ உங்களுக்கு என் மேல கோபம் போகலை தானே!! எனக்கு நீங்களும் ராமும் இந்த குழந்தைகளும் மட்டும் தான் உறவு”

 

“வேற யாருமில்லை சுகுணா எனக்கு. உங்களுக்கு கோபம் வந்தா என்னை நேராவே கேளுங்க. உங்களை பார்த்தாலே தெரியுது நீங்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பீங்கன்னு”

 

“எல்லாம் என் முட்டாள்த்தனம் தான், அவரசபுத்தி தான் எல்லாத்துக்கும் காரணம்”

 

“வதனா போதும் விடுங்க. எனக்கு உங்க மேல வருத்தம் தான், கோபமில்லை. நீங்க மூணு பேருமா ஒண்ணா ஒரே குடும்பமா சேர்ந்து போயிருந்தா எனக்கு வருத்தம் இருந்திருக்காது” என்றவளை இவள் என்ன சொல்கிறாள் என்பது போல் பார்த்தாள் வதனா.

 

பின் அவள் சொல்ல வந்தது புரியவும் முகம் கன்றிப் போனது அவளுக்கு. “எனக்கு புரியுது நீங்க அதுக்கு தயாரா இல்லைன்னு. அந்த பேச்சை விடுவோம்”

 

“நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ன்னு தோணிச்சு. எல்லாத்தையும் விட இப்போ நீங்க பிரியாவை உங்க கூட கூட்டிட்டு போறதும் சரியா வராதுன்னு தோணிச்சு”

 

“இதை நீங்க அன்னைக்கே எங்ககிட்ட பேசியிருக்கலாம்ல அப்போவே எல்லாமே சரியாகியிருக்குமே. இப்படி சங்கடம் தேவையிருந்து இருக்காது” என்றாள் வதனா பதிலுக்கு.

 

“போனதை விட்டிருவோம், மறந்திடுங்க வதனா” என்று மற்றவளை சமாதானம் செய்தாள் சுகுணா.

 

கடந்த நிமிடம் வரை அவளையே அவளால் சமாதானம் செய்ய முடியாமல் இருந்தவள் பிரியாவை கண்டதும் சரியாகி இருந்தாள். அவளுக்கே அது ஆச்சரியம் தான்.

 

“இனிமே எதுவா இருந்தாலும் ராம் மாதிரி நீங்க என்கிட்டே நேராவே பேசணும் சுகுணா. நீங்களும் என்னோட பிரண்டு தான், ப்ளீஸ்”

“கண்டிப்பா” என்றவள் “எங்க உங்க பிரண்டு?? உங்களை முன்னாடி அனுப்பிட்டு அவர் இன்னும் வீட்டுக்கு வரலை”

 

“யாரு ராமா??”

 

“ஹ்ம்ம் ஆமா!! அவர் தான் எங்கே போனார்”

 

“நான் தான் அவனுக்கு போன் பண்ணவேயில்லையே!! கோவிக்க போறான்”

 

“நிஜமாவா சொல்றீங்க”

 

“நிஜம் தான் வதனா நான் எதுவும் சொல்லலை அவன்கிட்ட”

 

சுகுணாவிற்கு ஆச்சரியம் தான் வதனா ராமிடம் கூட சொல்லாமல் நேராக தன்னை பார்க்க வந்தது கொஞ்சம் இதமாகத் தானிருந்தது.

 

மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஓரமாய் ஒட்டியிருந்த ஆதங்கம் கூட மறைந்தே போனது.

 

“சரி நான் சாப்பாடு ரெடி பண்ணுறேன் வதனா நீங்க பசங்க கூட விளையாடிட்டு இருங்க” என்று அவள் எழவும் “இல்லை இன்னைக்கு நானும் உங்களோட வர்றேன்” என்று வதனாவும் சேர்ந்து கொண்டாள்.

 

இருவருமாய் பேசிக்கொண்டே சமைத்தனர். அதுநாள் வரை ராமின் தோழியாய் மட்டுமே வதனாவை பார்த்திருந்த சுகுணா அவளை இப்போது தன் தோழியாகவே பார்த்தாள்.

 

வதனா அங்கு அவ்வப்போது வருபவள் தான். பெரும்பாலும் அவளின் பேச்சு ராமுடன் தான் இருக்கும்.

 

வதனா அவள் துவண்டிருந்தால் அவ்வப்போது ஆறுதல் சொல்வது என்று இருப்பாள் தான்.

 

ஆனால் இன்று போன்ற நெருக்கம் இதற்கு முன் இருந்ததாய் அவளுக்கு தோன்றவில்லை. வதனாவை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

 

அவள் கடந்து வந்த பாதை அவளின் திமிர், பிடிவாதம் எல்லாமே சுகுணாவிற்கு பிடிக்கும். அதையும் மீறி இன்று அவளை புதிதாய் அவளுக்கு பிடித்தது.

 

குழந்தைகளுக்கு உணவூட்டினர், பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். “நீங்க படுங்க வதனா” என்று சொல்ல அவளும் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

சுகுணாவிற்கு தன் கணவனிற்கு தெரிந்திருக்குமோ அவன் எதையோ செய்து தான் வதனா வந்திருப்பாளோ என்று லேசாய் ஒரு சந்தேகம் இருந்தது.

 

அதை உறுதிப்படுத்திக்கொள்ள கணவனுக்கு அழைத்தாள். “ஹலோ சொல்லு சுகுணா”

 

“வதனாக்கு நீங்க போன் பண்ணீங்களா??”

 

“என்ன?? வதனாக்கா?? நான் பண்ணவேயில்லை. அவ ஊருக்கு போனதுல இருந்து நானும் பண்ணலை, அவளும் பண்ணலை”

 

“நிஜமா தான் சொல்றீங்களா?? நான் வருத்தமாயிருக்கேன்னு நீங்க அவங்ககிட்ட சொல்லவேயில்லையா??”

 

“என்ன கேள்வி இது சுகுணா?? நான் அப்படி எல்லாம் எதுவும் அவகிட்ட பேசலை. ஆமா நீ எதுக்கு இதெல்லாம் கேட்குறே??” என்றான் அவன் இப்போது யோசனையுடன்.

 

“ஈவ்னிங் வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு” என்றுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டாள் அவள்.

 

ராம் கபிலனுக்கு உடனே அழைத்தான். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, வதனா எங்கோ வெளியில் சென்றிருக்கிறாள் விடுப்பு எடுத்துக்கொண்டு என்று சொன்னான்.

 

எத்தனை நாட்கள் விடுப்பு என்பது அவனுக்குமே தெரியவில்லை. ராமிற்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிந்தது.

 

கொஞ்சம் கோபம் வந்தது அவனுக்கு. மாலை வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினான். வரவேற்பறை தாண்டியிருந்த ஹால் சோபாவில் அவன் மனைவியும் தோழியும் சீரியசாக பேசிக் கொண்டிருந்ததை கண்டான்.

அதற்கு மேல் பார்வையை அவர்கள் பக்கம் திருப்பக் கூட இல்லை அவர்களை தாண்டி செல்ல வதனா தான் “ராம்… டேய் ராம்” என்று அழைத்திருந்தாள்.

 

ராம் அதை காதில் வாங்கினால் தானே, அவன் வருவதை கண்டிருந்த பிரியா தான் ஓடி வந்து “அப்பா” என்று அவனை கட்டிக்கொள்ள அந்த நொடி தான் புரிந்தது அவனுக்கு

 

அவனும் பிரியாவை எவ்வளவு தேடியிருக்கிறான் என்று. அவன் கண்ணில் லேசாய் நீர், விழிகளை உருட்டி அதை உள்ளே தள்ளியவன் அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டான்.

 

“என்னங்க யாரு வந்திருக்காங்கன்னு பார்க்காமலே போறீங்க?? என்னன்னு கேட்க மாட்டீங்களா??” என்றாள் அவன் மனைவி.

 

குழந்தையை அணைத்தவாறே நின்று நிதானமாய் அவளை தீர்க்கமாய் பார்த்தவன் “உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் எப்பவும் வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்…..

____________________

 

அலுவலகம் கிளம்பச் செல்ல தயாராகி பிரியன் வெளியில் வந்து அவன் வண்டியில் அமரவும்  ஸ்கார்பியோ வண்டி ஒன்று அவனை உரசிக்கொண்டு வந்து நின்றது.

 

‘யாரது??’ என்ற கோபத்துடன் பார்த்தான்.

வண்டியில் இருந்து ஆஜானுபாகுவாய் ஒருவன் இறங்கி அவன் முன் வந்திருந்தான். பிரியன் அவனை மேலிருந்து கீழாய் அளவெடுத்துக் கொண்டிருக்க “வண்டியில ஏறு” என்றிருந்தான் அவன்.

 

“எதுக்கு??”

 

“ஏறுன்னு சொன்னா ஒழுங்கா ஏறிடு!! தேவையில்லாதது எல்லாம் பேசி உடம்பை புண்ணாக்கிக்காதே!!” என்று மிரட்டலாய் சொன்னான்.

 

“எங்க கை வைச்சு பாரு”

 

“இங்க பாரு உன்னை அடிக்க எல்லாம் வரலை. ஒழுங்கா பேசாம வந்து ஏறு, இல்லைன்னா அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய்டுவேன்” என்று மற்றவன்.

 

“என்னால உன் வண்டியில எல்லாம் வரமுடியாது. அட்ரஸ் சொல்லு நானே வர்றேன்”

 

“அதெல்லாம் முடியாது மரியாதையா வா…” என்று பிரியனின் சட்டையை பிடித்திருந்தான் அவன் இப்போது.

 

“கையை எடு?? கையை எடுன்னு சொன்னேன்??” என்று உறுமலாய் பிரியன் சொல்லவும் பிடியை தளர்த்திவிட்டிருந்தான் மற்றவன்.

 

வண்டியில் இருந்து இறங்கிய பிரியன் “என்னை யாரு அழைச்சுட்டு வரச் சொன்னாங்களோ அவங்களுக்கு உடனே போன் போடு நான் பேசணும்”

“என்னடா ஓவரா ராங் பண்ணிக்கிட்டு இருக்க?? மரியாதையா பேசினா நீ கேட்க மாட்டியா??” என்றவன் பிரியனை அடித்து இழுத்துச் செல்லும் எண்ணத்துடன் கையை வைக்க பிரியன் அதை லாவகமாய் தடுத்தான்.

 

முன்பே பயிற்சி பெற்றவன் போலிருந்தது அவன் தடுக்கும் விதம். மற்றவனை பார்த்து சொன்னான், “நான் நீ அடிக்கிறதை தடுக்க மட்டும் தான் செய்யறேன்”

 

“இதுவரை உன்னை அடிக்கணும்ன்னு நினைக்கலை. கொஞ்சம் பேசாம இரு” என்றவன் வண்டியின் கதவை திறந்து அந்த மலையை கைவைத்து உள்ளே தள்ளினான்.

 

அவன் கைபேசியில் அவன் சந்தேகத்தில் வைத்திருந்த அந்த எண்ணுக்கு அழைத்தான் இப்போது. எதிர்முனை எடுத்து ஹலோ என்றதும் “வல்லவரையன் பேசறேன்”

 

“என்ன??” என்றது எதிர்முனை.

 

“உங்க வண்டியில என்னால வரமுடியாது. ஒழுங்கா உங்க ஆளை அட்ரஸ் சொல்ல சொல்லுங்க நானே வர்றேன்” என்றவன் போனை ஸ்பீகரில் போட்டு “சொல்லுங்க” என்றிருந்தான்.

 

எதிர்முனை இப்போது அட்ரஸ் கொடுக்கச் சொல்லி போனை வைத்துவிட்டது.

 

அடுத்த முக்கால்மணி நேரத்தில் பிரியன் அந்த முகவரிக்கு சென்றிருந்தான்.

அது திருவான்மியூரை தாண்டி கிழக்கு கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த ஒரு அழகிய பங்களா.

 

வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி அவனை செக் செய்து உள்ளே அனுப்பினான்.

 

இவன் செல்வதற்குள் அந்த மலையும் அங்கு வந்திருந்தது. “இங்க உட்காரு வருவாரு” என்றது.

 

அவன் அமரவும் படியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அவர். சில வருடத்திற்கு முன் பார்த்தவரே தான் இப்போதும்.

 

வயது நன்றாய் நரைத்திருந்த அவர் தலைமுடியில் தெரிந்தது. அவர் அவனை பார்த்த பார்வையில் இன்னமும் அதே ஏளனமே கலந்திருந்தது.

 

அதற்கெல்லாம் பிரியன் சற்றும் கவலைப்படவில்லை அலட்சியமாய் தான் அவரை பார்த்தான்.

 

“என்ன ஓடி ஒளியலாம்ன்னு நினைச்சியா??” என்றார்.

 

“யாரு நானா??” என்றான் பிரியன் நக்கலாய்.

 

“உன் அடையாளத்தை மாத்தினா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா??”

 

“அப்புறம் ஏன் இவ்வளவு நாளா சும்மா இருந்தீங்க??” என்று கேட்டு வைத்தான்.

“அதான் ஊருக்கே வெட்டவெளிச்சமாகிடுச்சே?? முழுக்க நனைஞ்சுட்ட அப்புறம் என்ன??”

 

“வெட்டவெளிச்சம் ஆகிடுச்சு தான்… ஆனா இன்னும் முழுசா ஆகலை”

 

“நீ அதிகமா பேசறே??”

 

“என்னை பேச வைக்குறது நீங்க தான்…”

 

“ஒழுங்கா மரியாதையா போய்டு”

 

“முடியாது…”

 

“அவ உன்னை மறந்திட்டா”

 

“வதனா வல்லவரையன்னு தான் அவளை இப்போ எல்லாருக்கும் தெரியும். பத்தாதுக்கு எங்க கல்யாண போட்டோவும் வந்தாச்சு”

 

“நாங்க சீக்கிரம் ஒண்ணா சேரப் போற நாள் ரொம்ப தூரத்திலே இல்லை” என்றான் திமிர் கலந்த குரலில்.

 

“அதுக்கு நாங்க விட்டாத் தானேடா”

 

“இவ்வளவு நாளா விட்டுத்தானே வைச்சிருந்தீங்க ஒண்ணும் செய்யாம… இனி எப்போமே ஒண்ணுமே செய்ய முடியாது உங்களால… என்கிட்டே இருந்து அவளை பிரிக்க முடியாது” என்று சவாலாய் பேசினான்…

 

தன்னுயிரை

தன்வசமாக்க

தனித்தே களத்தில்

தீரமாய் நின்றவன்

சதுரங்க காய்களை

சாமார்த்தியமாய் நகர்த்தி

சவாலை சமாளிப்பானா??

சாதுர்யமாய் வெல்வானா??

Advertisement