Advertisement

அத்தியாயம் – 4

 

அவன் செயலில் கண்களில் சீற்றம் தோன்ற சூழ்நிலை கருத்தில் கொண்டு முகத்தை இயல்பாக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்.

 

“சார்க்கு அதை கொடுங்க மேடம்” என்ற மதிவாணனை திரும்பி பார்த்தாள் வதனா.

 

ஒரு வெற்றுப் புன்னகையுடன் அதை அவன் கையில் கொடுத்தாள் என்பதைவிட திணித்தாள் என்று சொல்வதே சிறந்தது.

 

அவன் அதையும் ஒரு புன்னகையுடனே வாங்கிக்கொண்டான்.

 

அவளை மிக நெருங்கி “சேம் கலர் சேம் ஸ்வீட் கொடு” என்றதும் தான் அவனை பார்க்க அவனும் அவள் புடவையின் நிறத்திலேயே சட்டையும் கீரிம் கலரில் பேன்ட்டும் அணிந்திருந்ததை கண்டாள்.

 

இதற்காகவே நான் வேறு புடவை மாற்றியது போல் ஆனதே!! என்ன நடக்கிறது எனக்குள் என்ற ஆராய்ச்சி அவளுக்கு.

 

“என்ன மேடம்?? வாங்கன்னு சொல்லிட்டு வழிவிடாம நிக்கறீங்க??” சொல்லியது நிர்மலா.

 

அவரை பார்த்து லேசாய் அசடு வழிந்தவள் “உள்ள வாங்க மேடம்” என்றாள்.

நிர்மலாவுடன் அவளின் கணவரும் இரு பிள்ளைகள் மட்டுமல்லாது இவனும் உடன் வந்திருந்தான்.

 

மற்றவர்களையும் இங்கிதமாய் வரவேற்றவள் உள்ளே சென்றாள்.

 

“மதி சார் நீங்க பார்மாலிட்டிஸ் பார்த்துக்கோங்க” என்றவள் வேகமாய் அவளறைக்கு தான் சென்றாள்.

 

பின்னே தலைவலி வந்துவிட்டதே அவளுக்கு அவனை கண்டதும்.

 

வந்தது தலைவலியா!! இல்லை தடுமாற்றமா!! எதை மறைக்க இங்கு வந்திருக்கிறோம் என்று புரியவில்லை அவளுக்கு.

 

குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவினாள். துவாலையில் முகத்தை அழுந்த துடைத்தவள் அங்கிருந்த கண்ணாடி முன் வந்து நின்றவள் முகத்தை லேசாய் சீராக்கி கவர்னரை காணச் சென்றாள்.

 

“மே ஐ கமின் சார்”

 

“வாம்மா” என்றிருந்தார் அவர்.

 

“கெஸ்ட் வந்திட்டாங்க சார்… உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காங்க” என்றாள்.

 

“கிளம்பிட்டேன்ம்மா” என்றவர் அவளுடனே பேசிக்கொண்டே வெளியில் வந்தார்.

அங்கு அமர்ந்திருந்தவர்கள் இவர்களை கண்டு எழுந்து நின்றிருக்க வல்லவராயனின் கண்கள் மட்டும் வதனாவையே மொய்த்துக்கொண்டிருந்தது.

 

அவன் பார்வையை கண்டுகொண்டவர்கள் நால்வர். பார்த்திபன் உள்ளே வந்த போதே கண்டுவிட்டிருந்தான். இப்போது நிர்மலாவும் பார்த்துவிட்டிருந்தார்.

 

வதனாவுடன் பேசிக்கொண்டிருந்த ராஜசேகர்ரெட்டி கூட அவன் பார்வையை படித்துவிட்டார். கடைசியாய் உள்ளவர் யாரென்று தனியாய் வேறு சொல்ல வேண்டியதில்லை.

 

அது வதனாவை தவிர யாருமில்லை. ‘எதுக்கு இப்படி பார்த்து வைக்குறான்’ என்றிருந்தது அவளுக்கு.

 

கல்லூரியிலும் இப்படித் தான் அழிச்சாட்டியம் செய்வான். அருகில் யார் இருக்கிறார் என்னவென்று எல்லாம் பார்க்கவே மாட்டான்.

 

கொஞ்சமும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை சைட் அடித்து வைப்பான் அவன்.

 

அதாவது கல்லூரி கலாட்டா என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இங்கு இவன் என்ன செய்து வைக்கிறான் என்ற பதட்டம் அவளுக்கு.

 

அருகில் கவர்னர் மட்டும்மல்லாது இன்னும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இருக்கின்றனர்.

ஏன் அவன் யாருடன் வந்தானோ அந்த நிர்மலா கூட ஒரு ஐஏஎஸ் அதிகாரி தானே. இதென்ன சோதனை என்பது போல் முள் மேல் நின்றிருந்தாள் அவள்.

 

அவன் பார்ப்பது வேறு எரிச்சலாக இருந்தது. அதை உணர்ந்தும் காணாமல் வேறு இருக்க வேண்டுமே!! அருகில் இவர்கள் எல்லாம் இல்லையென்றால் அவனை ஒருவழி செய்திருப்பாள்.

 

அவள் பற்கள் நறநறத்தாள். கவர்னர் அவர்களை பார்த்து சிரித்த முகமாய் பேச ஒருவருக்கொருவர் அறிமுகம் நடந்தது.

 

அவர் நிர்மலாவையும் வல்லவனையும் பாராட்டி பேசினார்.

 

நிர்மலாவும் வேறு அவனை நல்லவன் வல்லவன் என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததை விருப்பமில்லாத விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் வதனா.

 

வல்லவனின் பார்வையும் பேச்சும் அவர்களிடத்தில் இருந்தாலும் மனம் முழுதும் தன்னவளை சுற்றியே வந்துக் கொண்டிருந்தது.

 

கல்லூரியில் பார்த்த போதிருந்ததைவிட இப்போது இன்னமும் வனப்பாய் வாளிப்பாய் இருந்தவளை கண்கள் என்னும் கேமிரா படம் பிடித்து தள்ளியது. ஒருவாறு அவர்கள் எழுந்து உணவருந்த சென்றனர்.

 

தெரியாமல் நடந்ததோ இல்லை திட்டமிட்டு நடந்ததோ வதனாவிற்கு அடுத்திருந்த இருக்கையில் அவளவன் அமர்ந்திருந்தான்.

 

நடுவில் ராஜசேகர்ரெட்டி அமர்ந்திருக்க அவருக்கு அடுத்து வதனாவும் வல்லவராயனும் எதிரில் நிர்மலா குடும்பத்தினர்.

 

ஏதோ அவர்கள் குடும்பமாய் உணவருந்துவது போல இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் வரை ஏன் இங்கிருக்கிறோம் என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள் வதனா.

 

அதுவரை அமைதியாகத் தானிருந்தான் அவன். ஐஸ்கிரீமிற்காய் அமர்ந்திருக்கும் போது மெதுவாய் கையை கீழிறக்கி அருகில் அமர்ந்திருந்தவளின் கையை பற்றியிருந்தான்.

 

வதனாவின் முகம் கோபத்தில் சிவந்தது. அதை கூட அவன் ரசனையாகவே பார்த்திருந்தான்.

 

‘மாலை போட்டுட்டு இவன் ஏன் இப்படி எல்லாம் பண்ணுறான்??’ என்று எண்ணியவள் ஏதோ சந்தேகமாய் அவனை திரும்பி பார்க்க அவன் மலைக்கு சென்று வந்துவிட்டிருந்தான் போலும்.

 

பேன்ட் ஷார்ட் எல்லாம் போட்டிருந்தானே என்று தாமதமாய் அவளுக்கு நினைவு வந்தது. முதல் முறை அவனை இந்த மாளிகையில் பார்த்த போது கழுத்தில் மாலை நெற்றியில் சந்தனக்கீற்று கருப்பில் வேட்டி என்று அணிந்திருந்தான். இப்போது அதெல்லாம் இல்லையே!!

 

அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க போராடியவள் எப்போதும் போல் அவனிடம் தோற்றாள்.

 

அவன் பிடி எப்போதும் இரும்புப்பிடி தான். லேசில் விட்டுவிட மாட்டான். அவர்கள் பழக ஆரம்பித்த காலத்தில் கூட இப்படி தான் அவள் கையை பிடித்தால் விடவே மாட்டான்.

 

அருகில் உடன் படிக்கும் மாணவர்கள் நின்றாலும் சரி  பேராசிரியர் நின்றாலும் சரி ஏன் கல்லூரி முதல்வரே இருந்தாலும் பிடியை விடமாட்டான்.

 

அதே பிடிவாதம் இப்போதும். ‘எதுக்குடா திரும்ப வந்தே?? ஏன் இப்படி படுத்தற’ என்று மனதிற்குள் நினைக்க கண்ணில் நீர் நிறைந்துவிட்டது இயலாமையில்.

 

‘உன்கிட்ட மட்டும் தோத்துக்கிட்டே இருக்கேன்??’ என்று எண்ணியவுடன் மளுக்கென்று கண்ணீர் வழிந்துவிட்டது.

 

மற்றவர்கள் இவர்ளை கண்டும் காணமல் பேசிக் கொண்டிருந்தனர். வல்லவன் அவள் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவன் அதில் கண்ணீரில் மிதக்கவும் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.

 

சட்டென்று கிடைத்த விடுதலை உணர்வில் அவள் எழுந்துள் நின்றுவிட்டாள். ராஜசேகர்ரெட்டி அவளை ஏற இறங்க பார்த்தார்.

 

“என்னாச்சும்மா??”

 

“என்னம்மோ எனக்கு ஏதோ ஒத்துக்கலை… வா… வாமிட் வர்ற மாதிரி இருக்கு… சாரி சார், ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ…” என்று அனைவரையும் பொதுவாய் பார்த்தாள்.

 

அதற்கு கவர்னர் அவளை பார்த்து செல்லுமாறு தலையசைத்திருக்க அடக்கி வைத்திருந்த விம்மலை கட்டுப்படுத்த முடியாமல் வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

 

அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து ஏன் எதற்கு என்று தெரியாமலே அழுது முடித்திருந்தாள்.

 

பின் நிதானத்திற்கு வந்து தன்னை சரிப்படுத்தினாள். முகத்தை குளிர்ந்த நீரில் அடித்து கழுவினாள். எவ்வளவு தண்ணீர் ஊற்றி கழுவினாலும் அவள் அழுத அடையாளம் நன்றாய் தெரிந்தது.

 

முகவீக்கமும் சிவந்திருந்த முகமுமே அதை காட்டிக்கொடுத்தது. இப்படி பாதியில் கிளம்பி வந்தது சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

 

லேசாய் பவுடரை முகத்துக்கு போட்டுக்கொண்டு கொஞ்சம் தெளிந்தது போல் தெரிந்த பின்னே தான் வெளியில் வந்தாள்.

அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்து கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் வெளியில் வந்து நின்றதிலேயே புரிந்து கொண்டிருந்தாள்.

 

வல்லவராயனின் கண்கள் அவளைத் தான் ஆராய்ந்தது. அவளின் அழுத முகம் ஒரு புறம் ஆறுதல் கொடுத்தாலும் அவனுக்கு வேதனையாகவும் இருந்தது.

 

அங்கிருந்து தலையசைத்து கிளம்பியவன் அவளைப் பார்க்க அவள் அவன் பார்வையை தவிர்க்க வேண்டி எங்கோ பார்வையை பதித்திருந்தாள்.

 

சட்டென்று மனதில் ஒரு கோபம் மூண்டது அவனுக்கு. “நான் வெளிய இருக்கேன் ஒரு போன் பண்ணணும்” என்று நாசூக்காய் சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

 

வந்தவன் பார்த்திபனை கண்களால் துழாவ அவன் எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. உள்ளே வரும் போது பார்த்தோமே என்று எண்ணியவன் எதற்கு தேடிக்கொண்டு போன் செய்வோம் என்று எண்ணினான்.

 

உடனே பார்த்திபனுக்கு அழைக்க “ஹலோ” என்றான் அவன் மறுமுனையில்.

 

“நான் பிரியன் பேசுறேன்…”

 

அவனோ “வல்லவராயன் சாரா” என்றான்.

 

“ஹ்ம்ம் ஆமா எங்க இருக்கே??”

“இங்க தான் சார்” என்றவன் போனை அணைத்து அவன் முன் வந்து நின்றான்.

 

“சொல்லுங்க சார் என்னை எதுக்கு தேடுனீங்க??”

 

“பிபியோட நம்பர் வேணும் எனக்கு??”

 

“பிபியா அப்படின்னா புரியலை சார்”

 

வல்லவன் பெருமூச்சொன்றை வெளியேற்றி “சாரி வதனாவோட நம்பர் வேணும் எனக்கு”

 

“எனக்கு தெரியாது சார்” என்றவனை மற்றவன் முறைத்தான்.

 

“என்னை எதுக்கு சார் முறைக்கறீங்க?? நிஜமாவே எனக்கு தெரியாது”

 

“என்னால நம்பர் வாங்க முடியாம எல்லாம் இல்லை. ஆனா அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். ப்ளீஸ் பார்த்திபன் கொஞ்சம் புரிஞ்சுக்கோ, எனக்கு நம்பர்” என்றவனின் குரலில் கெஞ்சல் இல்லை ஆனால் பேச்சு கெஞ்சலாகவே தோன்றியது.

 

“சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. என்கிட்ட அவங்க நம்பர் இல்லை” அடித்து கூறியவனை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்திருந்தான்.

 

கோபமாக வந்தது அவனுக்கு இப்போது. இவனிடம் கோபப்பட்டு ஒன்றும் நடக்காது என்று அவனுக்கு புரிந்தது. தன்னை இப்படி நிலையில் நிறுத்தியவர்கள் மீது தான் அவன் கோபம் திரும்பியது.

 

முக்கிய இளமைப்பருவத்தை தொலைத்து நிற்கிறோம் இருவரும் என்று நினைக்க நினைக்க ஆத்திரம் தீயாய் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது அவன் மனதில்.

 

நிர்மலா வரவும் காரில் ஏறி கிளம்பிச் சென்றுவிட்டான். வெளியில் வந்ததுமே வண்டியை நிறுத்தச்சொல்லி நடு வழியிலேயே இறங்கிக்கொண்டான். யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை அவனுக்கு.

 

கால் போன போக்கில் நடந்தான்… நடந்தான்… நடந்துக் கொண்டியிருந்தான்…

 

எல்லோரும் கிளம்பிச் சென்ற பின்னர் உண்மையிலேயே அவளுக்கு நிம்மதி தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அவளால் நிம்மதியாயிருக்க முடியவில்லை.

 

மனம் அமைதியடைய மறுத்தது. சுற்றிலும் அவன் நினைவுகளே!! அவனை பார்த்த முதல் நாள் முதல் கடந்திருந்த நிமிடம் வரையிலான அவனின் அசைவுகள் மொத்தமும் மனக்கண்ணில்.

 

படுத்தாலும் உறக்கம் வரவில்லை, கபிலனுக்கு அழைக்கலாமா என்ற எண்ணம் வந்து கையில் கைபேசியையும் எடுத்திருந்தாள். பின்னே கபிலனின் மனைவி சஞ்சனாவின் முகம் வந்து தடுக்க அப்படியே வைத்துவிட்டாள்.

அடுத்து அவனுக்கு அழைத்தால் என்ன என்று தோன்றியது. பாவம் அவனே இப்போது தான் வீட்டிற்கு வந்திருப்பான்.

 

மனைவி குழந்தைகளுடன் அவன் செலவிடும் நேரம் இது என்று எண்ணி அதையும் விட்டாள்.

 

அவனின் அருகாமை வேறு அவளுக்கு ஞாபகம் வந்துக் கொண்டிருந்தது. மூச்சு மூட்டுவது போல் இருந்தது அவளுக்கு.

 

நிம்மதியாய் சுவாசிக்க கூட தடையோ!! என்று எண்ணி கண்ணீர் வேறு வந்தது. ‘நீ ஏன் சும்மா சும்மா வர்றே??’ என்று கண்ணை துடைத்து திட்டிக்கொண்டாள்.

 

‘முடியாது இதற்கு மேல் முடியவே முடியாது. எனக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருக்கிறது’ என்று எண்ணியவள் ஒரு வாரம் விடுப்பு கோரினாள்.

 

அவள் விடுப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட சற்றே ஆசுவாசமானது. கவர்னர் மறுநாள் அதிகாலையிலேயே கிளம்பிவிட அவளும் கிளம்பிவிட்டாள் அடுத்த பிளைட்டில் பெங்களூருக்கு அவனைப் பார்க்க.

 

கிளம்புமுன் கபிலனுக்கு அழைத்தாள். “இப்போ தான் உனக்கு கால் பண்ணணும்ன்னு தோணிச்சா!! நேத்து நைட்டே நீ கால் பண்ணுவேன்னு நினைச்சேன்” என்றான் அவன்.

 

“சஞ்சு திட்டுவான்னு தான் பண்ணலை”

“ஏன் அவ என்ன புதுசாவா பேசுறா!! அதை நீ எப்பவும் காதுல போட்டு இருக்கியா என்ன?? என்னாச்சு சொல்லு??”

 

“என்ன என்னாச்சு??” என்றவளை போனில் முறைத்தால் அவளுக்கு எப்படி தெரியும் ஆனாலும் முறைத்திருந்தான் அவன்.

 

“நேத்து என்னாச்சுன்னு கேட்டேன்??”

 

“ஒண்ணும் ஆகலையே!!”

 

“ஏன்டி இப்படி இருக்கே நீ?? நான் கேட்டா எதையும் சொல்லிடாதே!! அப்படியே எவரெஸ்ட் முழுங்கினவளாட்டம் ஒண்ணுமில்லைன்னு சொல்றதை பாரு” என்று எகிறினான் அவன் அந்தப்புறம்.

 

“நிஜமாவே ஒண்ணும்மில்லைடா”

 

“அப்போ எதுக்கு கால் பண்ணே சொல்லு??”

 

“சும்மா தான் பேசலாம்ன்னு”

 

“என்ன பேசலாம்ன்னு??”

 

“நான் ஊருக்கு போறேன்டா”

 

“எதுக்கு??”

 

“என்னமோ மனசே சரியில்லாம இருக்கு??”

“மனசு ஏன் சரியில்லை??”

 

‘இவனை…’ என்று பல்லைக் கடித்தவள் ‘இவன்கிட்ட சொன்னா ஓவரா குதிப்பான். அன்னைக்கு அவனை உள்ள விடவே அப்படி குதிச்சான்’

 

‘வேணாம் எதுவும் சொல்ல வேணாம்’ என்று எண்ணி “இல்லைடா அவனை பார்க்க ஹைதராபாத் போகலாம்ன்னு இருக்கேன்”

 

“ஹ்ம்ம் போடி!! போ!! உனக்கெல்லாம் நான் சரியா வர மாட்டேன். அவன் தான் சரியா வருவான், என்னன்னு கேட்டா எனக்கா பதில் சொல்ல மாட்டேங்குற??”

 

“என்னன்னு கேட்காமலே அவன் உன்கிட்ட எல்லா பதிலும் வாங்குவான் பாரு. என்னை தானே எப்பவும் ஏய்ப்ப அவனை உன்னால ஏய்க்க முடியாது. போ அங்க போய் அவன்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கோ” என்று சபித்துவிட்டு போனை வைத்தான் கபிலன்.

 

விமானத்திற்கான அழைப்பு வர உள்ளே சென்றாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்தாள்.

 

அவள் வெளியில் வரவும் அவளை அழைக்க கார் வந்திருந்தது. பழக்கமான டிரைவர் ஸ்ரீனிவாசலு தான் வந்திருந்தார்.

 

‘இவனுக்கு மட்டும் எப்படி தான் மூக்கு வேர்க்குமோ… நான் வர்றேன்னு போன் பண்ணலை. ஆனா வண்டியை அனுப்பிட்டான். எப்படி தான் கண்டுப்பிடிக்கிறானோ??’ என்று எண்ணிய மறுநிமிடம் கபிலனின் முகம் வந்து போனது.

 

‘அந்த அடிமை தான் போன் பண்ணி இந்த அடிமைக்கிட்ட சொல்லியிருக்கும். அதான் வண்டியை அனுப்பி வைச்சிருக்கான் போல’

 

‘போன ஜென்மத்துல ரெண்டு பெரும் லவ்வர்ஸ்ஆ இருந்திருப்பானுங்க போல… தினமும் போன் போட்டு பேசிக்கறானுங்க…’

 

‘என் மூலமா தான் இந்த கபிக்கு இவனை தெரியும் ஆனா பல வருஷ பழக்கம் மாதிரி எப்படி தான் ஒட்டிக்கிட்டானுங்களோ…’ என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள் நண்பர்கள் பற்றிய நினைவில்.

 

எப்போது ஹைதராபாத் வந்தாலும் அவளுக்கு அவன் நினைவு வாராமல் போகாது. இப்போதும் தப்பாமல் அவன் நினைவு வந்தது.

 

மொழி தெரியாமல் இங்கு தானே தான் தனித்திருந்தோம்.

 

என்னை நடுரோட்டில் தவிக்கவிட்டு அவன் சென்றதும் இங்கு தானே!! கடவுளுக்கு என் மேல் இருந்த கருணை அவனை என் கண்ணில் காட்டினார்.

 

இல்லையில்லை அவன் கண்ணில் என்னை காட்டினார். இல்லையென்றால் தான் இந்நேரம் நிச்சயம் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவளறிவாள். படிப்பைக் கூட முடிக்காத அந்நாளில் தான் பட்ட வேதனைகளை சொல்லி மாளாது என்றே அவளுக்கு தோன்றியது.

 

அவள் எண்ணவோட்டம் முடியும் முன்னே கார் அந்த வீட்டின் முன் நின்றது.

 

அவள் இறங்குமுன்னே கதவு திறக்கப்பட அவன் நின்றிருந்தான், அவளையே பார்த்துக்கொண்டு.

 

“அப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி நான் இறங்கறதா வேணாமா??”

 

“மகராணியை உள்ள தூக்கிட்டு போய் வேற விடணுமோ!! அதான் கார் கதவு திறந்து விட்டாச்சே அப்புறம் என்ன??”

 

அவளும் சட்டென்று இறங்கிக்கொள்ள கதவை அறைந்து சாற்றியவன் அவளுடன் நடந்தான். எதுவும் கேட்கவில்லை.

 

‘ஏன் வந்தாய்?? எதற்கு வந்தாய்??’ எதுவும் கேட்கவில்லை.

 

“என்னடா அமைதியா வர்றே??”

 

“யாரு நானா??”

 

“பின்ன நானா??”

“இல்லைங்கறியா!!” என்றவன் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான் அவளை.

 

அத்துடன் வாயை மூடிக்கொண்டு உள்ளே சென்றாள். பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டனர்.

 

அதிலும் இசைப்பிரியா அவள் கழுத்தை கட்டிக்கொண்டு “வதும்மா ஏன் இவ்வளவு நாளா நீ வரலை??” என்று சிணுங்கினாள்.

 

“அம்மாக்கு வேலைடா செல்லம். அதான் நீங்க அப்பா கூட இருக்கீங்கல்ல அப்புறமென்ன?? உனக்கு தான் விளையாட சரண் இருக்கான்ல அப்புறம் என்னடா தங்கம்”

 

“அம்மா அவன் ரொம்ப குட்டிப்பையன். அப்பா என்னை அவனை தூக்கக் கூடாது சொல்றார். நான் பெரிய பொண்ணு தானே தூக்கினா என்ன??” என்று கம்பிளைன்ட் வாசித்தாள்.

 

“ஏன் தூக்கக் கூடாதுன்னு சொன்னே??” என்று அவனை முறைத்தாள்.

 

“அப்படி தான் சொல்வேன் என்னாங்குற?? நாங்க அப்பாவும் பொண்ணும் ஜாலியா சண்டை போட்டுக்குவோம் நீ இதுக்கு நடுவுல எல்லாம் வராதே” என்று அவளை முறைத்தான்.

 

“பிரியா…” என்று அவன் அழைக்கவும் “என்னப்பா” என்று குழந்தையும் “என்னடா” என்று வதனாவும் கேட்க அவன் வதனாவை முறைத்து “உன்னை நான் அப்படி கூப்பிட மாட்டேன்னு தெரியும்ல”

 

“அப்புறம் எதுக்கு நீ என்னடான்னு கேட்குறே??” என்று அவளை அதட்டி “பிரியா குட்டி நீங்க சரண் கூட்டிட்டு உள்ள போங்க”

 

“அம்மா இப்போ தானே வந்தாங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

 

“அப்புறம்”

 

“அப்புறம் என்ன??”

 

“ஹ்ம்ம்”

 

“என்ன ஹ்ம்ம்??”

 

“வேறென்ன??”

 

“வேற ஒண்ணுமில்லை”

 

“நிஜமாவா??”

 

“எதுக்குடா இப்படி கேள்வியா கேட்குறே?? முடியலைடா உன்னோட!!”

 

“நான் கேள்வியே கேட்கலையே!!”

“இப்போ என்ன உனக்கு நான் இங்க ஏன் வந்தேன்னு தெரியணும் உனக்கு அதானே??”

 

“நான் எதுவும் சொல்லலை”

 

“ஆனா எனக்கு தெரியும். உனக்கு அதுக்கு பதில் தெரியணும். அதுக்கு தான் என்னை இப்படி கேள்வியா கேட்டு படுத்தி எடுக்குற??”

 

“ஏன் நான் இங்க வரக்கூடாதா?? அதுக்கு எனக்கு உரிமையில்லையா??”

 

“நான் எப்போ சொன்னேன் உன்னை இங்க வரக்கூடாதுன்னு?? நீ என்ன பண்ணாலும் நான் பேசாம தானே இருக்கேன்”

 

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கறேன் தானே?? நீ எண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லு உடனே பண்ணிக்க நான் ரெடியா இருக்கேன்”

 

“எத்தனை முறை சொல்றேன் உன்கிட்ட இப்படி பேசாதேன்னு?? உனக்கு வேற நினைப்பே கிடையாதா??”

 

“இல்லையே??”

 

“சுகுணாகிட்ட சொல்லிடுவேன்” மிரட்டினாள்.

 

“அவகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். நீ எப்போ ஓகே சொன்னாலும் உன்னை கட்டிக்குவேன்னு. அவளும் சரின்னு சொல்லிட்டா!! இதெல்லாம் எங்க கல்யாணத்தப்பாவே நாங்க போட்ட உடன்படிக்கை தான்” என்றான் அவன் கூலாக.

 

“டேய் ராம் போதும்டா… ஓவரா பண்ணாதே…” என்று அதட்டினாள் வதனா.

 

ராம் மோகன் ராவ் அவளின் நண்பன், எதிரி, அன்னை, தந்தை என்று அனைத்துமாய் இருப்பவன் மட்டும்மல்ல அவளை எப்போதும் காப்பவனும் அவனே…

 

அரன் அவனைக் கண்டு

அவள் தடுமாற்றம் கொண்டு

அரண் தேடி வந்தாள்

அவன் தோழனவன்

அணையிடுவானா??

அரவணைப்பானா??

அரன் சேர்ப்பானா??

Advertisement