Advertisement

அத்தியாயம் – 8

 

அனுமனுக்கு இணையாய் ராமநாமம் ஜெபித்தவன் பிரியனாய் தானிருப்பான்.

 

அவன் வாய் ராம் ராம் ராம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது எதிரில் நின்றவனிடம்.

 

“என்னாச்சுன்னு சொல்லு ராம்… அந்த குழந்தை என்னோட குழந்தையா ராம் சொல்லுடா… என்னை பழிவாங்காதே!!”

 

“என்னை கொன்னாக்கூட பரவாயில்லைடா ப்ளீஸ் சொல்லுடா… ராம்… ராம்…” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவனோ அதை காதில் வாங்கியும் வாங்காமலும் நின்றிருந்தான்.

 

ராமிடம் முதலில் மிஞ்சி பார்த்தான், இதோ கெஞ்சியும் பார்க்கிறான். ஆனால் அவன் கேட்ட பதில் மட்டும் அவனுக்கு கிடைக்கவேயில்லை.

 

பிரியன் நான்கு நாட்கள் மட்டுமே இருந்து போகலாம் என்று தான் வந்திருந்தான் அங்கு. ஆனால் பதினைந்து நாட்கள் ஆகிப்போனது அவன் வந்து.

 

குழந்தையை அவன் தூக்கி வந்த அன்று ராம் வருவான் என்று எதிர்பார்த்திருக்க அதன் பின் நடந்தது எல்லாம் அவனே எதிர்பாராதது.

____________________

குழந்தைகள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணி வெளியில் சென்றிருந்த வதனாவும் பார்க்கிற்கு வந்தாள்.

 

சுகுணாவிற்கு சற்று முன் தான் போன் செய்திருந்தாள், எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்து.

 

அவளும் குழந்தையை பற்றி எதுவும் காட்டிக்கொள்ளாமல் இன்னும் வீட்டிற்கு வரவில்லை தாங்கள் வருவதற்கு அரைமணி நேரமாகும் என்றிருந்தாள்.

 

வதனாவும் தான் அங்கு தான் வருகிறோம் என்று சொல்லாமலே போனை வைத்துவிட்டாள்.

 

குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்திருக்க அவளே அதிர்ந்து போயிருந்தாள் அங்கு வந்ததும்.

 

ராம் அங்கிருந்து கிளம்பிச் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் பார்க்கின் உள்ளே நுழைந்திருந்தாள்.

 

சுகுணா வீட்டிற்கு எப்படிச் செல்ல… வதனா பிரியாவை பற்றி கேட்டால் என்ன சொல்ல… என்ற எண்ணத்துடன் யோசனையாய் நின்றிருக்க அவள் முன் வந்து நின்றாள் வதனா.

 

“ராமோட காரை பார்த்தேன் வழியில… எங்க போறான்??” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அவள்.

 

“அது… அது வந்து…” என்று இழுத்தாள் சுகுணா. அவளின் முகம் பயத்திலும் கவலையிலும் வெளுத்திருந்தது. அழுதிருப்பாள் போலும் முகம் வீங்கியிருந்தது.

 

“என்னாச்சு சுகுணா?? எதுவும் பிரச்சனையா?? நீங்க அழுதீங்களா” என்றவாறே நெருங்கி வந்தாள்.

 

சுகுணா அதற்குமேல் மறைக்காது நடந்ததை சொல்லிவிட ரௌத்திரம் சுமந்தது அவள் விழிகள்.

 

ராமிற்கு அழைத்தவள் என்ன கேட்டாளோ அவளும் சுகுணாவை தனியேவிட்டு கிடைத்த வண்டியை பிடித்துக்கொண்டு சென்றிருந்தாள்.

 

சற்றும் தாமதியாது அவளும் ராம் சென்ற அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தாள் அவன் பின்னேயே.

 

ராமை தள்ளிக்கொண்டு புயலாய் உள்ளே நுழைந்திருந்தவள் ராம் தடுத்தும் கேளாமல் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டிருந்தாள்.

 

அங்கிருந்த இசைப்பிரியாவோ “வதும்மா நீங்க எப்போ வந்தீங்க. அப்பா தான் வருவாங்கன்னு அங்கிள் சொல்லிட்டு இருந்தாரு” என்று கையில் அப்பிய கேக்குடன் நின்றிருந்தவளை முதுகில் ஒன்று வைத்தாள்.

 

“வதனா…” என்று இரு ஆண்களுமே கத்தினர் அவளின் அச்செயலில்.

 

குழந்தை ஓவென்று அழ ஆரம்பிக்க அடித்த கைகளே குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டு விம்மியது.

 

“இனி ஒரு தரம் என் குழந்தையை தொட்டே!! என்ன நடக்கும்ன்னே தெரியாதே சொல்லிட்டேன்” என்றவள் குழந்தையை தோளில் சாய்த்துக்கொண்டு பிரியனை எரித்துவிடுவது போல் பார்த்து அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“ராம் இவனை ஜெயில்ல போட சொல்லுடா… போலீஸ் இப்போ வந்திடும். இவனை பார்த்தா நான் கொலைக்காரி ஆகிடுவேன் இனி… நான் போறேன்” என்று சென்றுவிட்டிருந்தாள்.

 

ராமும் பிரியனும் ஒன்றும் பேசாமலே நின்றிருக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்திருந்தது போலீஸ்.

 

பிரியனை அவர்கள் கைது செய்யப் போக ராம் தடுத்தான். ஆனாலும் அவர்கள் அவனை கைது செய்திருந்தனர்.

 

கம்பிளைன்ட் கொடுத்தவரே வந்து வாபஸ் செய்தால் மட்டுமே விடமுடியும் என்று அவர்கள் பிரியனை அழைத்து சென்றுவிட்டனர்.

 

ராமிற்கு பிரியனை பார்த்தால் பாவமாகத் தோன்றியது. ‘எதுக்கு இப்படி விதி இவனை துரத்துது?? தப்பு பண்ணிட்டியே வல்லா… தானா கனிஞ்சிருக்கும்… தடியால அடிச்சு காயப்படுத்திட்டே’

 

‘இனி அவ சும்மாயிருக்க மாட்டாளே!!’ என்று உண்மையாகவே கவலை கொண்டானவன் பிரியனுக்காய்.

 

இரண்டு நாட்கள் ஆகிப்போனது பிரியனை கைது செய்து. இரண்டு நாளில் அவனை கோர்ட்டில் ஒப்படைத்து விடுவார்கள்.

 

வதனா எதற்கும் மனமிறங்கவில்லை. ராமின் பேச்சை கூட அவள் இப்போது கேட்பதாயில்லை. அன்றே குழந்தையை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பப் போவதாக அடம் பிடித்தாள்.

 

சுகுணாவின் முகம் வாடிப்போனதை கவனிப்பவர் யாருமில்லை அங்கு.

 

ராமிற்கு அடம் பிடிக்கும் வதனாவை அமைதிப்படுத்துவதே பெரும் வேலையாகிப் போனது.

 

“வதனா அவனுக்கு பிரியா அவனோட குழந்தைன்னே தெரியாது. அவன் என்கிட்ட ஏதோ விளையாட்டு காட்ட நினைச்சு செஞ்சுட்டான்”

 

“அவன் செஞ்சது தப்பு தான். அதுக்காக அவனை ஜெயில்ல பிடிச்சு கொடுக்கறது எல்லாம் வேணாம். ப்ளீஸ் எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் செய். நீ போலீஸ் ஸ்டேஷன் கூட வரவேண்டாம்”

 

“இந்த கம்பிளைன்ட் வித்ராயல் லெட்டர்ல மட்டும் சைன் பண்ணு அது போதும் நான் பார்த்துக்கறேன்”

“நீ எதுக்கு அவனை காப்பாத்த நினைக்கிறே??” என்று கோபமாய் முறைத்தாள் ராமை.

 

“உனக்காக தான்… உனக்காக மட்டும் தான் இதை நான் செய்யறேன்… இப்போ உனக்கு புரியாது, புரியும் போது நீ எனக்கு நன்றி சொல்லுவே”

 

“உனக்கு நன்றி சொல்வேன் ஆயிரம் என்ன லட்சம் முறை கோடி முறை சொல்லுவேன். என்னை நீ காப்பாத்தினதுக்காக, அவனை நீ காப்பாத்துறதுக்காக இல்லை”

 

“சரி எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். ஆனா எனக்காக ப்ளீஸ்… நான் உன்கிட்ட எனக்கு எதுவும் வேணும்ன்னு கேட்டதில்லை தானே”

 

“எனக்காக நான் உன்கிட்ட கேட்குற உதவி இது தான். செய்…”

 

“முடியாதுன்னு சொன்னா” என்றாள் அவள் இரக்கம் சற்றும் காட்டாத தொனியில்.

 

ராம் கெஞ்சலை விட்டிருந்தான் இப்போது. “செய்ய முடியுமா?? முடியாதா??”

 

“முடியாது… செய்ய முடியாது… நீ கேட்டு நான் முடியாதுன்னு சொல்லுறேன். உன் நல்லதுக்காக தான் ராம்… வேண்டாம் விட்டுடு”

 

“என்னால முடியாம எல்லாம் இல்லை. அஞ்சு நிமிஷம் ஆகாது அவனை வெளிய கொண்டு வர்றதுக்கு. பிரியா அவனோட குழந்தை தான்னு சொல்ல ஒரு சின்ன டெஸ்ட் எடுத்தா போதும்”

 

“அவன் குழந்தையை தான் அவன் தூக்கிட்டு போய் கொஞ்சினான்னு நிருப்பிச்சேன்னா உனக்கு தான் அவமானம். சொல்லு அது தான் உனக்கு வேணுமா” என்று ராம் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றாள்.

 

இப்போது கேட்டான் “செய்வியா?? மாட்டியா??” என்று.

 

ஒன்றும் சொல்லவில்லை அவள். “கடைசியா கேட்…” அவன் முடிக்கவில்லை அவன் கையில் இருந்ததை பிடுங்கி கையெழுத்திட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

 

மறுநாளே பிரியன் வெளியில் வந்திருந்தான். வதனா குழந்தையுடன் சென்னைக்கு சென்றுவிட்டிருந்தாள்.

 

அவன் வெளியில் வந்து இத்தனை நாட்களாய் ராமின் பின்னே தான் நடையாய் நடந்திருந்தான்.

 

ராமின் வாயில் இருந்து உதிரும் சொல்லுக்காய் தான் காத்திருந்தான். மனம் அது அவன் குழந்தை என்று சொன்னது, அதனால் தான் குழந்தையை கண்ட அன்றிலிருந்து மனம் அவளை நினைத்தது என்று.

 

பார்க்கில் முதல் நாள் பிரியா பேசியதை எண்ணி அறைக்கு வந்தவன் அதையே வெகு நேரம் நினைத்திருந்தான்.

அன்றைக்கு புரியாதது இப்போது புரிந்தது அவனுக்கு. வதனாவாக கண்டிப்பாக சொல்ல மாட்டாள்.

 

ராம் சொல்லாமல் வேறு யாரிடமிருந்தும் தகவல் வாங்க முடியாது என்பதையும் அவனறிவான்.

 

அதனாலேயே அவன் பின்னேயே சென்று கொண்டிருந்தான். ராம் மனமிறங்கினால் தானே!!

 

“ராம் நீ சொல்லலைன்னாலும் பிரியா என் குழந்தைன்னு என்னால உணர முடியுது. உறுதிபடுத்திக்க தான் கேட்குறேன் ராம்”

 

“கடைசியா கேட்குறேன் ராம் ப்ளீஸ் சொல்லு. என் லைப்ல எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்து நிக்கறேன். அதை எப்படி மீட்க போறேன்னு எனக்கு தெரியலை”

 

“என் குழந்தையை பத்தி கூட தெரியாம இருக்கேன். இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது ராம். என்னை கொல்லாதடா ராம்”

 

“இப்படி அணுவணுவாய் சித்ரவதை அனுபவிக்கறதுக்கு பதிலா நான் அப்போவே செத்து போயிருக்கலாம் ராம்…” என்று அவன் சொன்னதும் ராமிற்கு மனம் வருந்திப் போனது அவன் நிலைக்கண்டு.

 

“இசைப்பிரியா உங்க ரெண்டு பேருக்கும் பிறந்த குழந்தை தான் வல்லா” என்று சொன்னதும் தாவி அணைத்துக் கொண்டான் எதிரிலிருந்தவனை.

ராம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘அய்யோ நான் அவன் பொண்டாட்டியா என்ன இப்படி கட்டிப்பிடிக்கறான்’ என்று தான் தோன்றியது.

 

வல்லவனின் மகிழ்ச்சியை அவன் அணைப்பிலேயே அவனால் உணர முடிந்தது. ஏனோ ராமிற்கு இந்த நொடி வல்லவனை பிடித்து போனது.

 

ஒரு காலத்தில் தான் அவனைக்கண்டு பொறாமை கொண்டோமே எவ்வளவு அறிவீனம் என்பதையும் உணர்ந்தான் அக்கணம்.

 

உண்மையில் நான் தான் அதிர்ஷ்டசாலியாய் இருந்திருக்கிறேன். நிம்மதியான குடும்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை என தனக்கு சகலமும் கிடைத்திருக்கிறது.

 

ஆனால் பிரியனுக்கு எல்லாமிருந்தும் இல்லாத கொடுமை… இது போல் தன் எதிரிக்கும் வரக்கூடாது என்று பிரியனை கண்ட நொடி உணர்ந்தான் அவன்.

 

எது வந்தாலும் சரி இனி அவனுக்காய் எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ராமிற்கு வந்துவிட்டது.

 

ராமை அணைத்திருந்தவன் அவனை விட்டு விலகி நின்றான். அவன் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியும் வேதனையும் ஒருங்கே தோன்றியது.

 

ராமினால் அவனை புரிந்து கொள்ள முடிந்தது. எதுவும் பேசாமல் எதிரில் இருந்தவனை பார்த்திருந்தான்.

“ராம் நீ தப்பா நினைக்கலைன்னா உன்கிட்ட ஒரு ரெக்வஸ்ட்”

 

ராம் தான் இப்போது அவனுக்காய் எதையும் செய்யும் மனநிலையில் இருந்தானே, “சொல்லு வல்லா”

 

“உன் வைப் நான் பார்க்கணும். அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் ராம். என்னால அவங்களுக்கு தான் கஷ்டம்” என்று கேட்டவனை வியப்பாய் பார்த்தான் மற்றவன்.

 

“அதுக்கெல்லாம் அவசியமில்லை வல்லா… அவ அப்படி எடுத்துக்க மாட்டா!!”

 

“நான் பண்ணது தப்பு ராம், அன்னைக்கு குழந்தை காணோம்ன்னதும் அவங்க தவிச்ச தவிப்பை நான் பார்த்தேன்”

 

“தப்பு பண்ணுறோம்ன்னு தோணிச்சு. ஆனாலும் உன் மேல இருக்க கோபத்துல தான் அப்படி செஞ்சேன். நஉங்க கோபமும் அவங்க மேல தான் காமிச்சு இருப்பீங்க”

 

“சோ நான் பண்ணது எவ்வளவு முட்டாள்த்தனம் பாரு. உங்க எல்லாருக்கும் கஷ்டம் என்னால…”

 

ராம் இப்படி யோசிக்கவேயில்லை. பிரியன் சொன்னதும் உண்மை தானே!! தானும் அன்று சுகுணாவை தானே கடிந்தோம்.

 

இத்தனை நாளில் அவளிடம் சாதாரணமாய் பேசியதாய் கூட நினைவில்லை அவனுக்கு. பிரியனை விட அதிக முட்டாள்த்தனம் தான் செய்தது தான் என்று அவனுக்கும் உரைத்தது.

 

பிரியனை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சுகுணா உள்ளே இருந்தாள் போலும். “வல்லா நீ இங்க உட்காரு, நான் போய் அவளை கூட்டிட்டு வர்றேன்” என்று நகர்ந்திருந்தான்.

 

அவன் மனைவி அவர்களின் தனியறையில் கட்டிலில் படுத்திருந்தாள். சரண் அவளருகில் உறங்கிக் கொண்டிருந்தான்.

 

சுகுணாவோ உறங்காமல் ஏதோ யோசனையாய் படுத்திருந்தது கண்ணில்ப்பட்டது அவனுக்கு. மனம் ஒரு மாதிரியாகிப் போனது.

 

அருகே சென்று அவள் தலை மூடி கோத அந்த ஸ்பரிசத்தில் எழுந்து அமர்ந்தாள். “என்னாச்சு சுகும்மா?? உடம்பு எதுவும் சரியில்லையா??” என்றான் அக்கறையாய்.

 

‘இப்போ தான் என் நினைப்பு இவருக்கு வருதா!!’ என்று தோன்றிய போதும் ஒன்றும் பேசவில்லை அவள். பின் தான் யோசனை இந்த நேரத்தில் வீட்டிற்கு வரமாட்டாரே என்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“என்னாச்சுன்னு கேட்டேன் சுகும்மா??”

 

“ஒண்ணும்மில்லை” என்ற அவள் பதிலில் சுரத்தேயில்லை.

 

“நான் அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன் சுகும்மா. அதையே இன்னும் நினைச்சுட்டு இருக்கியா?? சாரிடா” என்றவன் இருக்கைகளால் அவள் கன்னத்தை தாங்கியவாறே சொன்னான்.

 

கணவனின் அன்றைய பேச்சு அவளுக்கு வருத்தம் தான். அவன் ஏதோ டென்ஷனில் தான் பேசியிருக்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது தான்.

 

ஆனால் அவளின் இப்போதைய கவலையே வேறு. அதை அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று எண்ணி அமைதியாயிருந்தாள்.

 

“என் மேல என்ன கோபமிருந்தாலும் பேசு சுகுணா. இப்படி இருந்தா எனக்கு கஷ்டமாயிருக்குடி”

 

அவன் பேச்சு எதுவோ செய்ய “கோபமெல்லாம் இல்லை” என்றிருந்தாள்.

 

“அச்சோ உன்னை பார்த்ததும் சொல்ல வந்ததை மறந்திட்டேன் பாரு. வல்லவன் வந்திருக்கான் உன்னை பார்க்கணுமாம்” என்றதும் கணவனை பார்த்தாள்.

 

வதனாவிடம் வல்லவரையனுக்காய் அவன் பேசியதே அவளுக்கு சற்று ஆச்சரியம் தான். இப்போது அவனே அவரை அழைத்து வந்திருப்பது பெரும் ஆச்சரியமே அவளுக்கு.

“வாங்க” என்றுவிட்டு வேகமாய் வெளியில் வந்திருந்தாள்.

 

அவளை கண்டதும் சட்டென்று எழுந்து நின்றான் வல்லவரையன்.

 

அவள் லேசாய் புன்னகைக்க அவனுக்கு தான் சங்கடமாய் போனது. தன்னால் இவருக்கு தான் தேவையில்லாத சங்கடம் ஆனாலும் இவர் என்னை பார்த்து சிரிக்கிறாரே என்று குற்றவுணர்வு அவனுக்கு.

 

“வல்லா என்னோட வைப் சுகுணா” என்றான் ராம்.

 

“தெரியும் பார்த்திருக்கேன் ராம்” என்றதும் ராமிற்கும் நினைவு வந்தது.

 

“அன்னைக்கு நான் அப்படி பண்ணது…” என்றவன் “என்னை மன்னிச்சுடும்மா… என்னால உனக்கு தான் கஷ்டம்…” என்று அவன் சொன்னதும் சுகுணாவிற்கு அவனை கண்டு பாவமாய் போனது.

 

கட்டியவன் புரிந்து கொள்ளவில்லை, உடன் பழகிய வதனா கூட அவளை கண்டுக்கொள்ளவில்லை.

 

ஆனால் தவறு செய்துவிட்டு அதற்கு தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கும் வல்லவனை அவளுக்கு உடனே பிடித்துப் போனது.

 

“நீங்க என்கிட்ட போய் எதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிட்டு. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லை” என்று அவள் சொன்னபோது ராமிற்கு லேசாய் குத்துப்பட்ட உணர்வு.

 

அவளின் வலியை அன்று அவனுமே புரியாமல் தானே இருந்துவிட்டான். அந்த வருத்தம் அவள் வார்த்தைகளில் தன்னையும் அறியாமல் வெளிப்பட்டுவிட்டது.

 

“மன்னிப்பு கேட்குறதுக்கு பெரிய ஆளாவோ சின்ன ஆளாவோ இருக்கணும்ன்னு தேவையில்லைம்மா. தப்பு செஞ்சா கேட்டு தானே ஆகணும்”

 

“அதுலயும் அன்னைக்கு உன் கண்ணுல தண்ணி வந்ததை பார்த்தும். சட் நான் ஒரு முட்டாள் அப்படி பண்ணிட்டேன்”

 

“கோபம் கண்ணை மறைச்சிடுச்சு!! என் கையால கண்ணை குத்திக்கறேன்னு தெரியாமலே குத்திக்கிட்டேன். அதோட வலியை என்னால உணர முடியுது”

 

“இதுல உங்களுக்கும் என்னால சிரமம்” என்று உள்ளார்ந்து பேசினான் அவன்.

 

“அதெல்லாம் வேண்டாங்க, மறந்திடுவோம் அதை அப்படியே விட்டிருங்க…” என்று அவனை இயல்பாக்க சொன்னாள்.

 

“நிக்கறீங்களே உட்காருங்க…” என்று அவனிடம் சொன்னவள் திரும்பி கணவனிடம் “ஏங்க நீ பேசிக்கிட்டு இருங்க… நான் சமையல் பண்ணிடுறேன். அவங்க சாப்பிட்டு தான் போகணும்” என்றாள்.

 

“இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம்”

 

“என்னை உங்க சிஸ்டரா நினைச்சுக்கோங்க இந்த தயக்கம் எல்லாம் வேண்டாம். நீங்க சாப்பிட்டா தான் நான் மன்னிப்பேன் இல்லைன்னா உங்க சாரி ஓகே சொல்ல மாட்டேன்”

 

“ராம் சொல்லுடா”

 

“இங்க இருந்து சாப்பிட்டு போ வல்லா” என்று அவன் மனைவிக்கு ஒத்து ஊதினான்.

 

“ராம் நல்லாவேயில்லை இதெல்லாம். நீயும் நானும் சகஜமா பேசிக்கிறதாவது!!” என்ற வல்லவன் இப்போது இயல்புக்கு வந்திருந்தான்.

 

“ஏன் ப்ரோ நான் உங்களை பார்த்து கொஞ்சம் ஹாப்பியா இருக்கேன். நீங்க என்ன இப்படி சொல்றீங்க”

 

“எனக்கும் தான், ராம் கூட இப்படி என்கிட்ட பேசுவான்னு நினைக்கலை”

 

ராம் இருவர் பேசுவதையும் பார்த்திருந்தான் பார்வையாளனாய் பதிலொன்றும் சொல்லவில்லை. அவன் பார்வை முழுதும் வல்லவனை ஆராய்வதிலேயே இருந்தது.

 

அவன்பட்ட வலி எல்லாம் அவன் முகத்தில் நிரந்தரமாய் குடிக்கொண்டிருந்த கடுமை காட்டிக் கொடுத்தது.

 

ராமிற்கு அவனை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது. நாமே கொஞ்சம் முன்பே இவனை தேடியிருக்கலாமோ!! அவனாய் தேடி வரும் வரை விட்டிருக்கக் கூடாதோ என்ற யோசனை.

 

வெகுநேரமாய் வல்லவன் அழைப்பதே அவன் காதில் விழவில்லை. “ராம்…” என்று சொல்லி அவன் உலுக்கவும் தான் “என்ன வல்லா??” என்றான்.

 

“என்ன யோசனை ராம்??”

 

“ஒண்ணும்மில்லை வல்லா… உன்கிட்ட நான் பேசணும் நெறைய பேசணும்…”

 

“எனக்கும் பேசணும் ராம்… ஆனா இப்போ எனக்கு நேரமில்லைடா, ஆபீஸ் வேலை அழைக்குது. நான் நைட் ட்ரைன்ல சென்னை கிளம்பறேன்”

 

“இன்னைக்கு நைட்டேவா??”

 

“ஹ்ம்ம் ஆமா…”

 

“நான் இன்னைக்கு பிரியா பத்தி சொல்லாம விட்டிருந்தா என்ன பண்ணியிருப்பே??”

 

“நாளைக்கு போயிருப்பேன்”

“சாரி வல்லா…” என்றான் உள்ளார்ந்து.

 

“எதுக்கு ராம் சாரி சொல்றே?? என்னை பிடிக்காமலே எனக்கு நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கே தெரியுமா”

 

“ஆயுசுக்கும் உன்னை என்னால மறக்க முடியாதுடா… நான் தொலைச்சிட்டு போன என்னோட குடும்பத்தை நீ தான் மீட்டு கொடுத்திருக்கே” என்றவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்துவோ என்று எண்ணும் போதே அது மறைந்திருந்தது.

 

சுகுணா இப்போது வந்திருந்தாள். “சாப்பிட வாங்க…” என்று இருவரையும் அழைத்தாள்.

 

சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு எதுவும் உரையாடல்கள் நிகழவில்லை அங்கு.

 

வெளியில் சோபாவில் வந்து அமர்ந்ததும் வல்லவரையன் எதுவோ கேட்க நினைப்பதும் தயங்குவதுமாய் இருந்தான்.

 

சுகுணா உள்ளே சென்றவள் கையில் ஒரு ஆல்பத்துடன் வந்திருந்தாள். “பிரியாவோட போட்டோஸ் சின்ன வயசுல இருந்து எடுத்தது எல்லாமே இருக்கு” என்று சொன்னதும் நெகிழ்ந்து போனான் வல்லவரையன்.

 

ராமின் கையை பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டான். “உங்க ரெண்டு பேரையும் என்னால எப்பவும் மறக்கவே முடியாது. ரொம்ப தேங்க்ஸ்மா, இதை நானே எடுத்துக்கலாமா”

 

“அது உங்களுக்குரியது தான் ப்ரோ எடுத்திட்டு போங்க. எங்களுக்கு சொந்தமில்லையே உரிமைப் பட்டவங்களுக்கு தானே சொந்தம்” என்ற அவளின் பேச்சில் ஏதோ வலி தெரிந்தது.

 

அவள் கண்களும் நொடிப்பொழுதில் கலங்கிப் போனது. அவள் மறைக்க முயன்றும் முடியாமல் அழுகை வெடித்தது அவளிடத்தில்.

 

ராமிற்கு அவள் எதற்காய் அழுகிறாள் என்றே புரியவில்லை. எவ்வளவு தான் மனைவியை புரிந்தவராய் இருந்தாலும் எங்காவது தவறுவது இயற்கை தானே!!

 

தோழியை பற்றி எண்ணியவன் பிரியாவின் மீதான மனைவியின் அன்பை எண்ணாமல் விட்டுவிட்டான்.

 

அருகிருந்தவனுக்கு புரியாது போனது எதிரிலிருந்தவனுக்கு புரிந்தது. “வதனா குழந்தையை அவளோட கூட்டிட்டு போயிட்டான்னு பீல் பண்ணுறியாம்மா!!”

 

“வேணுமின்னு இப்படி செஞ்சிருக்க மாட்டா!! என் மேல உள்ள கோபத்துல செஞ்சிருப்பா!!” என்று மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.

 

ராமிற்கும் வல்லவன் பேசிய பின்னே தான் மனைவியின் வருத்தம் புரிந்தது. அவனருகில் இருக்கும் இருவரையும் அவனுக்கு தெரியும்.

 

அவர்கள் இருவருமே முன்பே பார்த்துக் கொண்டவர்களில்லை, பழகியவர்கள் இல்லை.

 

சுகுணாவின் வருத்தம் எனக்கே தெரியவில்லை. அவன் புரிகிறான், அவன் வருத்தம் இவள் புரிகிறாள். என்ன விந்தை இது என்று தான் யோசித்தான் ராம்.

 

நமக்கு அருகிருப்பவர் தானே, தெரிந்தவர் தானே என்று நமக்கு எப்போதும் ஒரு இறுமாப்பு இருக்கும். ஆனால் அவரைத் தான் நாம் பல சந்தர்ப்பங்களில் நம்மையே அறியாமல் காயப்படுத்திவிடுவோம்.

 

குழந்தையை பற்றிய அவன் ஏக்கத்தை பிரியாவை பிரிந்த சுகுணாவால் சுலபமாய் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதே போல் தான் வல்லவரையனுக்கும்.

 

பார்க்கில் அவள் பிரியாவிற்காய் துடித்ததை நேரில் பார்த்தவன் தானே. அவள் பேச்சில் அந்த வலி தெரியவுமே புரிந்து கொண்டிருந்தான் அவன்.

 

ராமின் எண்ணை வாங்கிக்கொண்டு தன் கைபேசி எண்ணை அவனுக்கும் பகிர்ந்து சுகுணாவிற்கு ஆயிரமாவது முறையாய் நன்றி சொல்லி அன்றிரவே அவன் சென்னைக்கு கிளம்பினான்.

 

அங்கு அவனுக்காய் பிரச்சனைகளும் போராட்டங்களும் வரிசைக்கட்டி நின்றிருந்தது…..

 

வலி என்பதே அவனுக்கு

வளியாகிப் போனது

வழி தேடி தொலைத்திட்டான்

வாழ்வுதனை

மீள்வானா??

மாள்வானா??

 

Advertisement