அத்தியாயம் – 17

 

மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.

 

ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.

 

அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை.

 

அவளை தன் புறம் திருப்பியவனின் கண்கள் அவள் கண்களை நோக்க அதில் அவன் கண்டதோ பயம் மட்டுமே…

 

என்ன செய்து விடுவானோ என்ற அச்சமும் கலவரமும் அவள் கண்களில் அப்பட்டமாய் வழிந்தது.

 

அவளை தள்ளி நிறுத்தியவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டான்.

 

அவன் எதுவும் சொல்லாமல் சென்றது அவளுக்கு மேலும் கலக்கத்தை கொடுக்க கோபமாயிருக்கிறானோ என்று அவன் பின்னோடு உள்ளே சென்றாளவள்.

 

அவன் அங்கிருந்த கட்டிலில் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்திருந்தான். அவனருகே சென்று அமர்ந்தவள் “கோபமா??” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

 

“ஒண்ணுமில்லை, நீ படு”

 

“அப்போ கோபம் தானே…” என்றவள் அவன் சும்மாயிருந்தாலும் அவள் சும்மாயில்லாமல் கேள்வி கேட்டாள்.

 

“எதுவுமில்லை வது…”

 

“அப்போ என் முகத்தை பார்த்து சொல்லுங்க…”

 

‘வீணா வம்பை விலை கொடுத்து வாங்குறாளே…’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

“சரி ஒண்ணுமில்லை போதுமா…” என்றுவிட்டு மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டான் அவன்.

 

“எப்பவும் என் முகத்தை பார்த்து தான் பேசுவீங்க… இப்போ ரெண்டு நிமிஷம் கூட நீங்க தொடர்ந்து என்னை பார்க்கலை…” என்றாள் அவள் இன்னமும் கலக்கம் தீராமல்.

 

“வது ப்ளீஸ் பேசாம படு… என்னால முடியலை…”

 

“என்ன??”

 

“எனக்கு நீ வேணும்ன்னு தோணுது வது… உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்… ஆனா என்னோட எண்ணம் எல்லாம் எங்கயோ தறிகெட்டு ஓடுது… உன் கண்ணுல என்னை பார்த்து கலவரம் தெரியுது…”

 

“அது எனக்கு ஒரு மாதிரியா கில்டியா இருக்கு, அதனால தான் பேசாம வந்து உட்கார்ந்திருக்கேன்… நீ வேற என்ன என்னன்னு கேட்டு என் உயிரை எடுக்காதே…”

 

அவன் சொன்னதை முழுதும் கேட்டவள் ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்திருந்தாள்…

 

பிரியனுக்குள் ஏதோவொரு தைரியம் வரப்பெற்று அவள் முகம் பார்த்து கண் நோக்கி “உனக்கு சம்மதமா வது…” என்று கேட்டே விட்டான்.

 

வதனாவிற்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. காதலனாய் கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பாள் கணவனாய் மாறிவிட்டிருந்தவனை அவளால் மறுக்க முடியவில்லை.

 

சற்று முன் அவனால் அவளுக்குள் உண்டான  உணர்வுகள் அவளுக்கு பயம் கொடுத்தாலும் ஒரு இனிமையை கொடுத்து தான் சென்றிருந்தது.

 

பிரியனோ இன்னமும் அவள் முகம் பார்த்தே காத்திருந்தான். “வது மௌனமா இருந்தா நான் என்ன நினைக்கிறது…”

 

அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கரத்தில் தன் கரத்தை வைக்க அதையே சம்மதமாய் ஏற்றுக் கொண்டு இருவரும் தங்கள் வாழ்வை தொடங்கினர். ஈருயிர் ஒருயிராய் சங்கமித்தது…

 

மறுநாள் காலையில் நேரம் கழித்தே இருவரும் எழுந்தனர். “வது தாங்க்ஸ்டா… மனைவிகிட்ட நன்றி சொல்லக் கூடாது தான் ஆனாலும் எனக்காக தானே நேத்து நீ சரின்னு சொன்னே…” என்றான்.

 

அவளுக்கோ அவன் முகம் பார்க்கவே முடியாமல் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தாள். “நாம இன்னைக்கு ஈவினிங் கிளம்பிடலாம், அப்போ தான் காலையில நேரமா ஊருக்கு போய்டலாம்”

 

அவளிடமிருந்து எதற்கும் பதிலில்லை. “வது ப்ளீஸ் எதுவும் பேசாம இருக்காதே… இது வேணும்ன்னு எனக்கு உன்கிட்ட கேட்க உரிமை இருக்கறப்போ, அதை மறுக்கவும் மறுத்து பேசவும் உனக்கும் உரிமை இருக்கு”

 

“என்கிட்ட நீ நீயா இரு வது… இப்படி முகம் திரும்பினா எனக்கு சங்கடமா இருக்கு…”

 

“இல்லை அப்படி எல்லாம் எதுவுமில்லை…” என்று மெதுவாய் உரைத்தவள் எழுந்து குளியலறை புகுந்திருந்தாள்.

 

அன்றைய பொழுது எப்படியோ ஓடிவிட மாலை இருவருமாக பேருந்து நிலையம் சென்றனர். ஹைதராபாத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு அதில் அமர்ந்தனர்.

 

வதனாவின் எண்ண அலைகள் அருகில் இருந்தவனையே சுற்றி சுற்றி வந்தது.

 

இவன் தான் தனக்கானவன் என்று தெரிந்தாலும் எப்படி ஒரே நாளில் அனைத்தும் மாறிப் போனது என்பதை அவள் மனம் நினைவில் கொண்டு வந்தது.

____________________

 

பிரவீன் விஷயத்தில் இருந்து வெளியில் வந்த பின் பிரியன் தானுண்டு தன் வேலையுண்டு என்று தானிருந்தான்.

 

பிரவீனின் விஷயத்தில் வதனா தான் வெகுவாய் கலங்கி போயிருந்தாள். அவன் எதையும் துணிந்து செய்ய யோசிக்க மாட்டான் என்று சொல்லி பிரியனை எந்த வம்பிற்கும் போக வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

 

உண்மையிலேயே வெளியில் வந்திருந்த பிரியனுக்கு பிரவீனை ஒருவழியாக்க தான் எண்ணமே… தனக்காய் வருந்துபவளை எண்ணத்தில் கொண்டு பேசாமல் சென்றான்.

 

பிரவீனும் சற்று அடங்கியே இருந்தான் போலும்… அந்த கல்லூரில் இருந்து அவனை எப்போதோ டிஸ்மிஸ் செய்திருந்தனர்.

 

இருந்தாலும் அவ்வப்போது வெளியில் வதனாவின் பார்வையில் அவன் விழுந்துக் கொண்டே தானிருந்தான்.

 

அவள் செய்த தவறு அவனை கண்டதை பிரியனிடம் சொல்லியிருக்கவில்லை. எங்கே மீண்டும் ஒரு பிரச்சனை எழுமோ என்ற அச்சம் அவளுக்கு.

 

பிரியன் வெற்றிகரமாய் தன் கடைசி வருட படிப்பை முடித்திருந்தான். வதனாவும் மூன்றாம் வருடத்திற்கு வந்திருந்தாள்.

 

மேலும் இரண்டு மாதம் கடந்திருக்க பிரியன் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்.

 

வாரம் ஒரு முறை வந்து வதனாவை பார்த்து செல்வது அவன் வழமை. அந்த வாரம் அவன் பெற்றோரை காண ஊருக்கு செல்வதால் வரமுடியாது என்பதை முன்பே அவளிடம் தெரிவித்திருந்தான்.

 

அதுவரை சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்த குள்ளநரி பிரவீன் மெதுவாய் தன் வேலையை ஆரம்பித்தான்.

 

அவன் வதனாவை மட்டுமல்ல பிரியனையும் கண்காணித்ததில் அவன் ஒரு வாரம் ஹைதராபாத்தில் இருக்க மாட்டான் என்பதை கண்டுக் கொண்டிருந்தான்.

 

அதை உத்தேசித்தே தன் சித்து வேலையை காட்டினான் அவன். முதல் இரண்டு நாட்கள் வதனாவின் பின்னே அவளறியாமல் பின் தொடர்ந்தான். மூன்றாம் நாள் வதனாவின் உள்ளுணர்வு எச்சரித்ததில் பின்னே வந்தவனை அவள் கண்டுகொண்டாள்.

 

மேலே நடக்காமல் நின்றவள் “என்ன வேணும் உனக்கு??” என்று அவனை முறைத்திருந்தாள்.

 

“நீ தான் வேணும்…” என்றான் அவன் ஒரு மார்க்கமாய்.

 

அவன் பார்வை தன்னை முழுதுமாய் அலசுவதை அசூசையாக உணர்ந்தவள் “செருப்பு பிஞ்சிடும்டா, கொழுப்பா உனக்கு…”

 

“வாங்கினது எல்லாம் உனக்கு பத்தலையா… இன்னும் வேணுமா உனக்கு??”

 

“வாங்கினேனா நானா… ஹா ஹா… செம காமெடி போ… என் மேல எவனாச்சும் கைவைச்சிடுவானா என்ன… விஷயம் தெரிஞ்சதால நான் சும்மா பாவ்லா பண்ணேன்…”

 

“என்னை யாருன்னு நினைச்சே… உனக்கு மட்டும் தான் ஆளிருக்கா, எனக்கும் ஆளிருக்கு… எங்க இப்போ வரச்சொல்லு உன் ஆளுங்களை…” என்றான் அவன்.

 

“அவர் ஊருக்கு போயிருக்கார்ன்னு தெரிஞ்சே தான் வந்து என்கிட்ட வம்பு பண்ணுறியா… வேணாம் இது உனக்கு நல்லதில்லை…” என்று எச்சரித்தாள்.

 

“அவன் மட்டுமா உனக்கு ஆளு…” என்று அவன் சொல்லவும் அவள் கரம் அவன் கன்னத்தில் பதிந்தது அழுத்தமாய். ஆம் அவள் அவனை அடித்திருந்தாள்.

 

‘என்ன வார்த்தை பேசுகிறான் இவன்…’ என்ற ஆத்திரம் அவளுக்கு. யாரை இவன் என் ஆள் என்கிறான், கடவுளே நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறானே இவன்… என்று மனதார அவனை சபித்தாள்.

 

“ஹேய் என்னடி என்னையே அடிக்கிறியா… அவ்வளவு திமிரா உனக்கு… உன்னை என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும்டி…”

 

“இனி எவன் உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த வர்றான்னு பார்க்கறேன். நமக்கு நாளைக்கு கல்யாணம் ரெடியா இரு…”

 

“இனிமே நீ எனக்கு தான்… என்னடா இவன் லூசா… சொல்லிட்டு செய்யறானேன்னு பார்க்கறியா… சொல்லாம திடுதிப்புன்னு தாலி கட்டுறது எல்லாம் என் ஸ்டைல் இல்லை…”

 

“அதான் சொல்லிட்டே செய்யறேன்… காலேஜ்க்கு வராம ஹாஸ்டல்ல இருந்துக்கலாம், இல்லை ஊரைவிட்டு ஓடிப் போகலாம்ன்னு நீ என்ன வேணா டிசைன் டிசைனா பிளான் போடு”

 

“அதெல்லாம் முறியடிச்சு உன் கழுத்துல நான் தாலி கட்டுவேன்…” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

வதனா அவன் பேச்சில் விக்கித்து நின்றிருந்தாள். அவளிடம் செல்போன் கூட கிடையாது உடனுக்குடன் பிரியனுக்கு தகவல் சொல்ல… என்ன செய்யவென்று விழித்தவள் கல்லூரிக்கு செல்லாமல் பாதியிலேயே விடுதிக்கு திரும்பினாள்.

 

விடுதிக்கு அருகில் இருந்த டெலிபோன் பூத்திற்கு சென்றவள் பிரியனின் எண்ணை அழுத்தி அழைப்பிற்காய் காத்திருந்தாள்.

 

அவள் கெட்ட நேரமோ பிரவீனின் நல்ல நேரமோ பிரியனின் எண் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

 

தன்னையறிமால் அவள் விரல்கள் மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு முயற்சி செய்து களைப்படைந்தது.

 

ஒன்றும் தோன்றாமல் அறைக்குள் வந்து விழுந்தாள். பேசாமல் இல்லத்திற்கு போன் செய்து அய்யாவிடம் சொல்லிவிடலாமா, சீதாம்மாவிடம் சொல்லிவிடலாமா என்று தான் அவள் எண்ணம் சென்றது.

 

அவர்களை வேறு இதில் தொல்லை செய்ய வேண்டுமா என்று ஒரு மனம் அவளை கேள்வி கேட்டது. மனம் எந்த பக்கமும் முடிவெடுக்க முடியாமல் பிரவீன் என்ன செய்வானோ என்று ஒவ்வொரு நிமிடமும் அச்சத்திலேயே கழிந்தது அவளுக்கு.

 

அவளிடம் ராகேஷின் எண் கூட இல்லை… இருந்திருந்தால் நிச்சயம் அவனுக்கு அழைத்திருக்கலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

இரவெல்லாம் தூங்காமல் அவள் கண்கள் எரிந்துக் கொண்டிருந்தது. அவள் எப்போது உறங்கினாள் என்பதே அறியாமல் உறங்கிப் போயிருந்தவள் கண் விழித்த போது பிரவீன் எதிரிலிருந்தான்.

 

“ஹாய் பேபி… என்னை நினைச்சு நைட்டெல்லாம் தூங்கலை போல… கண்ணு சிவந்து போச்சு… அதான் உன்னை தூக்கிட்டு வந்தது கூட தெரியாம உறங்கியிருக்க” என்று அவன் சொல்லவும் பதட்டமாய் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தாள்.

 

அது எந்த இடம் என்று அவளுக்கு தெரியவில்லை, ஆனால் அது நிச்சயம் அவள் ஹாஸ்டல் இல்லை என்பது மட்டும் உறுதி அவளுக்கு.

 

“ஹேய்… இங்க எதுக்கு என்னை தூக்கிட்டு வந்தே??”

 

“இதென்ன கேள்வி பேபி நம்ம கல்யாணம் பண்ண வேணாமா… அதுக்கு தான் எல்லாம் ரெடி பண்ணிட்டேன், நீ சமத்தா இந்த புடவையை கட்டிட்டு வந்திடு…”

 

“நாம கோவிலுக்கு போறோமாம்… அங்க நமக்கு கல்யாணமாம்…” என்று அவன் இளித்ததை காண சகிக்கவில்லை அவளுக்கு.

 

அங்கு அவன் மட்டுமல்லாது தாட்டியமாய் மேலும் மூவர் இருக்க அவள் விழிகள் அச்சத்தை சுமந்தது.

 

‘கடவுளே இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்த மாட்டியா… நான் என்ன பாவம் செஞ்சேன், பெத்தவங்களை தான் என்கிட்ட இருந்து பறிச்சிட்டே!!”

 

‘என் மனசுக்கு பிடிச்சவரையும் என்கிட்ட இருந்து பறிக்கிறது தான் உன் நோக்கமா… இவன் மட்டும் என் கழுத்தில தாலி கட்டினான்… இவனை கொன்னுட்டு நானும் செத்திடுவேன்’ என்று கடவுளிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தாள்.

 

“டைம் இல்லை பேபி… சீக்கிரம் எழுந்து போய் குளிச்சுட்டு ரெடி ஆகு… இந்த ரூம்விட்டு உன்னால எங்கயும் போக முடியாது… நாங்க வெளிய இருக்கோம்” என்றவன் அவள் முழங்கைப் பற்றி எழுப்பி அவளை குளியறைக்குள் தள்ளிவிட்டு அவனும் வெளியில் சென்றான்.

 

உள்ளே நுழைந்தவளோ ஒன்றும் புரியாமல் அப்படியே கதவில் சாய்ந்து நின்றுவிட்டாள்.

 

அவள் எண்ணங்களோ இது போன்ற சூழ்நிலையில் சினிமாவில் எல்லாம் இந்த ஜன்னலை உடைத்து செல்வார்களோ என்று யோசிக்க நிமிர்ந்து அங்கிருந்த ஜன்னலை நோட்டம் விட்டாள்.

 

அடுத்த நிமிடமே அவள் யோசனை சரியானதில்லை என்பது அவளுக்கு புரிந்தது. பின்னே அங்கிருந்தது அந்த ஜன்னலை உடைக்கவெல்லாம் முடியாது என்று அவளுக்கு புரிந்து போனது.

 

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை மட்டும் உணர்ந்தாள். இந்த நேரத்தில் வேகமாய் சிந்திக்காமல் விவேகமாய் சிந்தித்து தான் செயல்பட வேண்டும் என்று அறிவு சரியான வழி சொல்ல கண்ணை மூடி நிதானித்தாள்.

 

பிரவீன் பேசியதை நினைவு கொணர்ந்தாள். திருமணம்

கோவிலில் என்று அவன் சொன்னது ஞாபகத்தில் வர பிரவீனிடமிருந்து தப்பிக்க அது ஒன்றே வழி என்பதை மனதில் ஏற்றினாள்.

 

கோவில் என்றால் பொது இடம் எப்படியும் ஆட்கள் இருப்பார்கள், அங்கிருந்து எப்படியும் தப்பித்தே தீரவேண்டும் என்று வெகு தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.

 

மெதுவாய் அவள் தயாராகி வெளியில் இருந்த கட்டிலில் வந்து அமர அந்த அறையின் கதவு திறந்து உள்ளே வந்தான் பிரவீன்.

 

“வாவ் பேபி சூப்பரா ரெடி ஆகிட்ட” என்றவன் “எதுவும் பிளான் பண்ணுறியா??”

 

“பிளான் பண்ணா மட்டும் என்ன நடக்கப் போகுது…” என்றாள் அலட்சியமாய்.

 

“அப்போ ஏதோ பிளான் பண்ணியிருக்க??”

 

“நான் என்ன பிளான் பண்ணாலும் அதை கண்டுப்பிடிச்சு நீ தான் முறியடிப்பேன்னு சொன்னேல… அதை செய்…” என்றுவிட்டு அமைதியாய் இருந்தாள் அவள். அவளின் அந்தே பேச்சே அவனுக்கு சந்தேகத்தை கிளம்பியது.

 

“சரி வா போவோம்… உன் திட்டம் என்னவா இருந்தாலும் அது நிறைவேறாது… அதையும் உன் மைன்ட்ல ஏத்திக்கோ” என்றுவிட்டு அவன் முன்னே செல்ல பின்னோடு அவளும் சென்றாள்.

 

வெளியில் நின்றிருந்த காரில் முன்னே டிரைவர் இருக்கையில் ஒருவனும் அருகே மற்றொருவனும் அமர்ந்துக்கொள்ள நடுவில் இருந்த இருக்கையில் அவளை அமரச்செய்து தானும் ஏறி அதில் அமர்ந்து கொண்டான் பிரவீன்.

 

மீதமிருந்த ஒருவனும் பிரவீனின் அருகிலேயே ஏறியிருக்க கார் அங்கிருந்து கிளம்பியது. உள்ளுக்குள் பதட்டம் எவரெஸ்ட்போல் உயர்ந்திருந்தாலும் வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தாள் அவள்.

 

பிரவீனுக்கு அவளின் இந்த நடவடிக்கை தான் அதிகம் யோசிக்க வைத்தது. எப்படி எதுவுமே நடக்காதது போல அமைதியாய் இருக்கிறாள்.

 

அவளிடம் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே எதிர்பார்த்திருந்தான் அவன். முதல் நாள் கூட அவ்வளவு பேசினாளே… என்று அவளை சுற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் பிரவீன்.

 

வதனா வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த வழியை அவளால் கண்டுப்பிடிக்க முடியுமாவென்று.

 

ஹைதராபாத்துக்கு அவள் புதிது தான், ஆனாலும் தெரிந்த ஒன்றிரண்டு இடமாவது கண்ணில் படுகிறதா என்பதை தான் நோட்டம் விட்டாள்.

 

ஒருவழியாய் அவர்கள் ஊரை தாண்டி இருந்த அந்த சிறிய கோவிலுக்கும் வந்து சேர்ந்தனர். அந்த கோவிலில் சற்றும் ஆள்நடமாட்டமே இல்லை என்பதை திடுக்கிடலுடன் பார்த்தாள் வதனா.

 

அங்கு சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சிறிய குன்றுகள் தான் அந்த வழியில். பயம் இப்போது அவள் கண்களில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

 

அதை சுலபமாய் கண்டுக்கொண்டான் பிரவீன். அவன் இதழ்கடையில் ஒரு சிரிப்பு “என்ன பேபி இவ்வளவு தானா உன் பிளான், பயம் கண்ணுல தெரியுது…”

 

“ச்சே… ஏமாத்திட்டியே!! பெரிசா பிளான் பண்ணியிருப்ப எப்படி அதை உடைக்கலாம்ன்னு நான் வேற பெரிசா யோசிச்சேன்… சரி சரி வா இதுக்கு மேல எதுவுமே செய்ய முடியாது…” என்று சொல்லி அவள் கையை பிடிக்க தன்னுணர்வு வந்தவள் வெடுக்கென்று அவன் கையை உதறினாள்.

 

‘தப்பிக்கணும், எப்படியாச்சும் தப்பிக்கணும்… யோசிக்கவே கூடாது ஒரு முயற்சியாச்சும் செஞ்சு பார்த்திடணும்…’ என்று எண்ணிக்கொண்டு வேகமாய் யோசிக்க ஆரம்பித்தாள்.

 

கடவுளே கதி என்று சரணடைவதில் எந்த புண்ணியமும் இல்லை, அதற்கான முயற்சி எடுக்கும் வரை. முயன்றால் மட்டுமே கடவுளும் துணை புரிவான்…

 

அவளும் தன் முயற்சி எடுக்க முனைந்தாள். காரில் இருந்து கோவிலுக்குள் செல்வதற்கு நீண்ட பாதையிருந்தது. அவளை சுற்றி வளைத்தார் போல பிரவீனின் ஆட்கள்…

 

எந்த புறம் வழி கிடைக்கிறது என்று அவள் சுற்று முற்றும் பார்க்க “சார் பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று ஒருவன் நகர்ந்தான்.

 

இதைவிட்டால் வேறுவழியில்லை என்று உணர்ந்தவள் கிடைத்த அந்த இடைவெளியை பயன்படுத்தி வந்த வழியே திரும்ப ஓட அந்த தாட்டியமானவர்கள் அவளை துரத்திக் கொண்டு வந்தனர்.

 

காரின் அருகே வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள் அங்கிருந்தவனை கண்டு. ஆம் பிரியன் வந்திருந்தான் அங்கு, எப்படி?? எப்படி வந்தான்?? என்று யோசித்துக்கொண்டே ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள்.

 

“சார் நீங்களே பாருங்க…” என்று அவன் அருகே நின்றிருந்தவனை பார்க்க அவர்கள் விரைந்து வந்து அவளை துரத்தியவர்களை தங்கள் பிடியில் கொண்டு வந்தனர்.

 

பிரவீனையும் அரெஸ்ட் செய்ய அவர்கள் முன்னே செல்ல வதனாவின் பதட்டம் இன்னமும் தணியவில்லை. “எப்படி வந்தீங்க நீங்க??” என்றாள் நிமிர்ந்து அவனை பார்த்து.

 

“நீ தானே சொன்னே?? நீ சொல்லி வராம இருப்பேனா??”

 

“நானா நான் தான் உங்களுக்கு போன் செஞ்சேன்… உங்க போன் தான் ஆப் பண்ணியிருந்துச்சே… அப்புறம் எப்படி??” என்றவளுக்கு “வாய்ஸ் மெசேஜ்…” என்றான் ஒற்றை வார்த்தையாய்.

 

அவளுக்கு சகலமும் புரிந்து போனது. முதல் நாள் அவள் வெகு நேரமாய் அவனுக்கு முயற்சி செய்து சோர்ந்தவள், அவன் போன் வாய்ஸ் காலுக்கு செல்லவும் எதுவோ தோன்ற சொல்ல வேண்டியதை சுருக்கமாய் வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தாள்.

 

அப்போது கூட அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை அதையெல்லாம் கேட்டு அவன் வருவான் என்று.

 

ஏதோ ஒரு நப்பாசையில் மட்டுமே அதை அனுப்பினாள். ஆனால் பிரியன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு மதியம் போல் வந்திருந்தவன் மிஸ்டு கால் அலர்ட்டில் ஹைதராபாத்தில் இருந்து அழைப்பு என்பதை பார்த்தான்.

நிறைய தவறவிட்ட அழைப்புகள் என்று மெசேஜ் வரவும் வாய்ஸ் மெசேஜ் கேட்டவன் முகம் இடுங்க அங்கிருந்தவாறே ராக்கிக்கு அழைத்து விபரம் சொன்னான்.

 

பிரவீனை கண்காணிக்க ஏற்பாடு செய்யச் சொன்னான். இரவு ரயிலிலேயே தான் கிளம்பி மறுநாள் வந்துவிடுவதாக சொன்னவன், தந்தையிடம் சொல்லி உடனே டிக்கெட் போட்டான்.

 

இதற்கிடையில் ராக்கி முதல் நாள் பிரவீனை கண்டுப்பிடிக்க முயற்சி செய்ய அவன் முயற்சி அனைத்தும் தோல்வியே.

 

என்ன செய்தும் அவனைப் பற்றி கண்டுக்கொள்ள முடியவில்லை. அவன் வீட்டினரை எப்படியும் தொடர்பு கொண்டிருப்பான் என்று என்னென்னவோ செய்து ஒரு வழியாய் மறுநாள் காலையில் தான் கண்டிருந்தான்.

 

அவன் நோக்கம் புரிந்ததும் போலீஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு பிரியனை ரயில் நிலையத்திற்கு சென்று அழைத்துக்கொண்டு நேராய் கோவிலுக்கு வந்திருந்தனர் அவர்கள்.

 

பாதி வழியிலேயே பிரவீனின் காரை கண்டுக்கொண்டிருந்தாலும் அவன் பின்னேயே தொடர்ந்தால் கண்டுப்பிடித்து விடுவான் என்று இடைவெளி அதிகம்விட்டே அவனை தொடர்ந்திருந்தனர்.

 

அவர்கள் வண்டி அந்த பாதையில் சென்று சில மணித்துளிகள் கழித்தே தான் அவர்களும் உள்ளே வந்திருந்தனர். அதற்குள் பிரவீன் கும்பல் உள்ளே சென்றிருப்பது புரிய பின்னே தொடர்வதற்குள் தான் வதனா ஓடிவந்திருந்தாள்.

 

பிரவீன் அவள் ஹாஸ்டலில் அசந்த நேரமாய் பார்த்து தான் உள்ளே சென்று அவளை தூக்கி வந்திருந்தா. அதனால் பிரியன் அவளை மீண்டும் ஹாஸ்டலுக்கு அனுப்ப யோசித்தான்.

 

பிரவீன் எதுவும் செய்வான் என்பதை நேராகவே கண்டுவிட்டவனுக்கு இனியும் அவளை தனியேவிட எண்ணமில்லை.

 

ராக்கியும் “டேய் நீங்க இன்னைக்கே மேரேஜ் பண்ணிக்கோங்களேன்…” என்று கூற பிரியனுக்கு அந்த யோசனை சரியாக பட வதனா தான் மறுப்பாய் பார்த்தாள்.

 

“நாளைக்கு தான் ஏதோ முகூர்த்த நாள்ன்னு நேத்து அம்மா பேசிட்டு இருந்தாங்க… நாளைக்கே கல்யாணத்தை வைச்சுக்கலாம்… அதுக்கு என்ன வேணுமோ அதை பார்ப்போம்…” என்று நண்பனுக்கு சொன்னவன் வதனாவை பேசியே சம்மதிக்க வைத்திருந்தான்.

 

அன்று முழுவதும் அவர்கள் அந்த வேலையாகவே அலைந்தனர். இரவோடு இரவாக சில்கூர் வந்து இறங்கியவர்கள் அங்கு ஹோட்டலில் தங்கி இதோ திருமணமும் முடிந்திருந்தது.

 

தன் நினைவு கலைந்து அவன் கரங்களுக்குள் கைக்கோர்த்து அவள் சாயப் போக “வது பஸ் இங்க நிக்குது நைட் டிபன் இங்க முடிச்சிறலாம்” என்று பிரியன் எழவும் தான் நேரமே பார்த்தாள் அவள்.

 

இரவு ஒன்பதரை மணியாகியிருந்தது அவ்வளவு நேரமாகவா தான் யோசித்துக் கொண்டிருந்தோம் என்று எண்ணி லேசாய் தலையில் தட்டிக்கொண்டவள் அவனுடன் எழுந்து நடந்தாள்…

 

அது அவனுக்கு

சனிப்பெயர்ச்சி காலம்

போலும்…

ஆம் கலி

பிடித்துக்கொண்டது

அவனை

ஒன்றல்ல இரண்டல்ல

ஏழரை வருடமுமல்ல

பத்து வருடங்கள்!!

பாகுகனாகிப் போனானவன்!!

தன் மனையாள்விட்டு

சென்றவன் விட்டுவிட்டு

செல்லவில்லை அவள்

நினைவு சுமந்து சென்றானவன்!!

மீண்டு(ம்) வருபவனை

புரிவாளா அவள்??