Advertisement

அத்தியாயம் – 8

 

கையில் எதையோ பிடித்துக் கொண்டு வந்தான். ‘அவருக்கு சாப்பிட ஏதோ வாங்கிட்டு வந்திருக்கார் போல’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தாள்.

 

இருக்கைக்கு வந்து அமரவும் அவனும் அவளை இடித்துக்கொண்டு வந்திருந்தான்.

 

அவனை தேடி அவள் வாயிலுக்கே வந்திருந்ததை பார்த்திருந்தான். உள்ளுக்குள் லேசாய் ஒரு மகிழ்ச்சி சுரக்கத்தான் செய்தது. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 

இருக்கையில் வந்து அமரவும் அவனைப் பார்த்து பொரிய ஆரம்பித்தாள்.

 

“எங்கயாச்சும் போனா சொல்லிட்டு போக மாட்டீங்களா!! உங்களை காணோம்ன்னு இப்படித்தான் தேட வைப்பீங்களா??”

 

“கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன் நானு. இதுல வேற உங்களை நம்பி என்னை உங்ககூட எங்கம்மா அனுப்பியிருக்காங்க…”

 

“போற போக்கை பார்த்தா நான் தான் உங்களை பார்த்துக்கணும் போல…” (இது கொஞ்சம் ஓவரா தெரியலை)

 

அவள் சொல்லி முடிக்கவும் சந்தோசம் சிரிப்பு எல்லாம் கலந்து வந்தது அவனுக்கு.

 

அவன் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கையில் வாங்கி வந்திருந்ததை அவளிடம் நீட்டினான்.

 

“நான் பாட்டுக்கு லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்கேன். என்னத்தை நீட்டிக்கிட்டு இருக்கீங்க நீங்க??” என்றாள் அதை கையில் வாங்காமலே.

 

“முதல்ல சாப்பிடு… அப்புறம் திட்டிக்கலாம்”

 

“எனக்கொண்ணும் வேண்டாம்…” முகம் திருப்பினாள்.

 

“அத்தை என்னை நம்பி தான் உன்னை அனுப்பி இருக்காங்க. உங்க வீட்டில கொண்டு போய்விடுற வரைக்கும் நீ என் பொறுப்பு தான்”

 

“என் மேல இருக்க கோபத்தை சாப்பாட்டுல காட்டாதே!!” என்று அவன் சொல்லவும் அவள் ஒன்றும் பதில் பேசவில்லை.

 

அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டாள். ‘டேய் நான் போட்ட சீனை நீ நம்பிட்டியா!! எனக்கே பசிக்குது, என்ன வாங்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்’

 

‘நல்லவேளை மகராசன் சாப்பாடு வாங்கிட்டு வந்தீங்களேன்னு சந்தோசப்பட்டேன். கோபமா திட்டிட்டோமே கொடுப்பானோ மாட்டானோன்னு ஒரு சின்ன டவுட்டு இருந்துச்சு’

‘அதை செக் பண்ணேன் அதை போய் நம்பி ஏமாந்தியா ராசா!! எனக்கெல்லாம் கோபத்தை விட பசி தான் முக்கியம் சோறு தான் முக்கியமோ முக்கியம்’ என்று தனக்குள்ளாக பேசிக் கொண்டாள் அவள்.

 

உள்ளுக்குள் இவ்வளவு வக்கனையாய் எண்ணிக் கொண்டு வெளியில் பச்சப்பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டாள். கவலையாய் இருக்கிறாளாம்!!

 

சாப்பிட்டு முடித்து இருவருமாய் கை கழுவ ஒரே நேரத்தில் எழுந்தனர்.

 

அவள் பின்னோடு அவனும் வர திரும்பி வரும் போது சரியாய் பிடித்துக் கொள்ளாமல் வந்தவள் முன்னால் சாய பின்னிருந்தவன் அவளை பிடித்து நிறுத்தினான்.

 

“ஒழுங்கா பிடிச்சுக்கிட்டு வரமாட்டியா!! வடிவேல் பேமிலியா நீ!! பஸ்ல ஏறினா கூட கம்பியை பிடிச்சுக்காத ரகமோ!!” என்று கிண்டலடித்தவன் அவள் தோளில் கைப்போட்டு அணைத்தவாறே தான் அவர்கள் இருக்கைக்கு வந்தான்.

 

அப்போதும் அவன் பிடியை விடாமல் நின்றிருக்க “ஹலோ” என்றவள் அவன் இன்னும் தோளில் கைப்போட்டிருந்ததை சுட்டிக்காட்டினாள்.

 

அவன் அதற்கெல்லாம் சட்டையே செய்யவில்லை. “எடுக்க முடியுமா?? முடியாதா??” என்று முறைத்திருந்தாள் இப்போது.

“மாமன் தானே பிடிச்சா என்ன??” என்று அவள் காதில் ரகசியம் சொல்லி குறுஞ்சிரிப்புடன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

 

“என்ன நினைச்சுட்டு இப்படி பண்றீங்க??”

 

“வா… வா.. பேசி தீர்த்திடலாம்… அதுக்கு தான் வெயிட் பண்ணுறேன்”

 

“என்ன பேசி தீர்க்கப் போறீங்க நீங்க??”

 

“ஆமா நான் யாருன்னு உனக்கு தெரியும் தானே??”

 

“ஹ்ம்ம் தெரியாது”

 

“அதுவே தெரியாம எதுக்கு என்கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி சண்டை போட்டே??”

 

“நானா?? எப்போ??”

 

“என்னை பிடிக்கலைன்னா பேசாம இருக்க வேண்டியது தானே. நான் ட்ரைன்ல ஏறினா உனக்கென்ன?? ஏறலைன்னா உனக்கென்ன??”

 

“நீ எதுக்கு எனக்காக பதறணும்??” என்று பதறாமல் அவன் கேட்க முல்லை வாயை மூடிக்கொண்டாள்.

 

ஏனென்று காரணம் தெரியவில்லை… ஆனால் அவன் வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த கோபத்தை தான் அவன் வந்ததுமே தப்பாமல் காண்பித்திருந்தாள்.

 

“என்ன பதிலே காணோம்??”

 

“அ… அது வந்து நீங்க என்னோட மாமா பையன்… அதனால ஒரு அக்கறையில கேட்டிருப்பேன். அதுக்கு உரிமை எடுத்துக்கறதா…”

 

அவள் பேச்சு அவளுக்கே நியாயமாக படவில்லை. ஆனாலும் தோன்றியதை சொன்னாள் அவனிடம்.

 

“அதே உரிமை தானே எனக்கும். என் அத்தை பொண்ணுன்னு உரிமை தானே எனக்கும்”

 

“அ… அதுக்காக… என்ன வேணா செய்வீங்களா??”

 

“உன்கிட்ட கேட்காம உன் விருப்பம் தெரியாம நான் உன் கழுத்துல தாலி கட்டினது தப்பு தான்”

 

இருவருமே அவர்களுக்கு மட்டுமே கேட்குமாறு மெதுவாய் பேசிக் கொண்டிருந்தனர்.

 

“நான் செய்ததை நியாயப்படுத்தலை. அது சரின்னும் நான் சொல்ல வரலை… எனக்கு அது பிடிக்காமலும் இல்லை” என்று தன் மனதை சூசகமாக அவளிடம் சொன்னான்.

 

நம் அறிவு முல்லைக்கு இதெல்லாம் சட்டென்று புரியாதே!! அவன் சொன்னதை மனதிற்குள் சொல்லி பார்த்தாள். அப்போதும் விளங்கவில்லை அவளுக்கு!! அவனை திரும்பி பார்த்தாள்.

 

“நான் என்ன சொன்னேன்னு புரிஞ்சுதா??” என்றான் கேள்வியாய்.

 

“ஹ்ம்ம் இல்லை…” என்று தலையை உருட்ட அதை ரசித்து பார்த்திருந்தான் அவன்.

 

பின் ‘டேய் வேந்தா!! தலையெழுத்துடா இதை புரிய வைக்கவே இப்படின்னா… இன்னும் நீ என்னென்ன கஷ்டமெல்லாம்படப் போறியோ போ!!’ அவன் மனதின் குரல் கேட்டது அவனுக்கு.

 

“என்ன புரியலை உனக்கு??”

 

“நீங்க சொன்னதே புரியலை எனக்கு??” என்றாள்.

 

“உன் மேல கோபமா தான் இருந்தேன், இருக்கேன் இப்போவும். ஆனா அதெல்லாம் மீறி உன்னை எனக்கு பிடிக்குது… ரொம்ப” வாய்விட்டு சொல்லியே விட்டான்.

 

“ஹான்…” என்றவள் தான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

 

மனதிற்குள் இனம்புரியாத உணர்வொன்று ஆட்டிப்படைத்தது அவளை. அவன் பிடிச்சிருக்கு என்று சொன்னது இன்னமும் அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

 

ஒரு இனிய அவஸ்தை அவளுக்குள். பிடித்தது போலவும் பிடிக்காதது போலவும்.

 

அதற்கு மேல் அவனருகில் அமர்ந்திருப்பதே முள் இருப்பது போலிருந்தது. அவனை பார்க்கவே கூச்சமாயிருந்தது. இதுவரை அவள் உணராத உணர்வது.

 

அவளிடம் சொல்லி முடிந்திருந்தவனோ ஆவலாய் அவள் முகம் பார்த்து காத்திருந்தான். எதுவும் பேசுவாளா என்று ஆனால் அவள் தான் முகம் பார்க்கவில்லையே!!

 

மீண்டுமொரு சுணக்கம் அவன் மனதில். ‘என்னைப் பிடிக்கவில்லையா!!’ என்பதது.

 

‘சொல்லாமலே இருந்திருக்கலாமோ!!’ என்று கூட தோன்றியது அவனுக்கு.

 

“நான் சொன்னது புரிஞ்சுதா??” என்று கேட்டிருந்தான்.

 

அதுவரை ஏதோ ஒரு இனிமையான உணர்வில் இருந்தவளுக்கு நூல் அறுந்த பட்டம் போல் இனிமையும் பட்டென்று விட்டுப்போனது.

 

‘என்ன பதில் சொல்லணும் நான் இப்போ. புரிஞ்சுதுன்னு சொன்னா அதுக்கு அடுத்து என்னோட பதில் என்னன்னு எதிர்பார்ப்பார். புரியலைன்னு சொன்னா திரும்பவும் சொன்னதையே சொல்லுவாரோ’

 

‘இவருக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா நான் அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும். வாங்க டூயட் பாடலாம்ன்னு சொல்லணும்ன்னு எதிர்பார்க்கிறாரா என்ன’ என்று சுருசுருவென்று வந்தது அவளுக்கு இப்போது.

 

“என்ன எதிர்பார்க்கறீங்க என்கிட்டே??” என்று நேராகவே கேட்டுவிட்டாள்.

 

“நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதான்னு மட்டும் தான் கேட்டேன். சிம்பிள் ஆமாம் இல்லைன்னு சொன்னா முடியப் போகுது. அதுக்கு எதுக்கு முகத்தை இப்படி கடுகடுன்னு வைச்சுட்டு பேசுறே” என்றவன் கடுப்புடன் தான் சொன்னான் அவளிடம்.

 

“பின்னே நீங்க செஞ்சு வைச்சதுக்கு வேற எப்படி பேசுவாங்களாம்??”

 

“அம்மா தாயே ஆளைவிடு. உன்கிட்ட போய் மனசு திறந்து பேசணும்ன்னு நினைச்சேன் பாரு. என்னைத் தான் அடிச்சுக்கணும்”

 

அவளோ அதற்கும் ஏதோ பேச எத்தனிக்க “போதும் விட்டிரு… இதுக்கு மேல உன்கிட்ட இந்த விஷயத்தை நான் பேசுறதா இல்லை” என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.

 

இருவருமே அவரவர் சிந்தனையில் வசப்பட்டிருக்க ரயில் எழும்பூரில் வந்து நின்றிருந்தது.

 

இருவருமே பேசிக்கொள்ளவில்லை, படியேறி வெளியில் வந்தனர்.

 

“எங்க போகணும்?? வீட்டு அட்ரஸ் சொல்லு??” என்றவனை முறைத்தாள் அவள்.

 

‘தெரியாத மாதிரியே கேட்குறதை பாரு’ என்று தான் பார்த்திருந்தாள்.

 

“கேட்டேன் பதில் சொல்லலை”

 

“ஹ்ம்ம் தெரிஞ்சுக்கிட்டே கேட்கறீங்க??” என்றாள்.

 

“தெரிஞ்சுக்கிட்டு கேட்கிறனா!! நிஜமாவே எனக்கு தெரியாதும்மா வீடு எங்க??”

 

“போதும் உங்க நடிப்பு!!” என்றவள் பழைய மனநிலைக்கு வந்திருந்தாள். பேருந்து நிலையத்தில் அவள் பெயர் தெரிந்தே தானே பாடினான்.

 

அவள் எந்த ஏரியாவில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும் தானே!! என்ற எண்ணம் இன்னமும் அவள் மனதில்.

 

வேந்தனுக்கு இப்போது சுருசுருவென்று கோபம் வந்தது. “கேட்டா பதில் சொல்ல மாட்டியா!! அதைவிட்டு ஏதோ லூசு மாதிரி உளர்றே??”

 

“என்ன லூசா?? யாரு நானா?? நீங்க தான் லூசு…”

 

அவன் தம்பி அவளை பேசினாலே சும்மாயிருக்க மாட்டாள். இதில் இவன் பேசினால் சும்மாயிருப்பாளா என்ன!! பதிலுக்கு பதில் பேசவில்லை என்றால் அவள் முல்லையில்லையே!!

 

அவன் பொறுமை பறந்து கொண்டிருந்தது. “நீ சொல்றியா?? இல்லை அத்தைக்கு போன் பண்ணவா??” என்று அவன் சொன்னது வேலை செய்தது அவளிடத்தில்.

 

“குமணன்சாவடி” என்ற அவள் பதில் அவனுக்கு ஆச்சரியமே!!

 

“அங்கயா இருக்கீங்க?? நானும் அங்க பக்கத்துல தான் இருக்கேன்!!” என்றான் ஆச்சரியமாய்.

 

“சரி கேப் புக் பண்ணுறேன்” என்றவன் கைபேசியில் நோண்டிக் கொண்டிருந்தான்.

 

“ஏன் சார் பஸ்ல போக மாட்டீங்களோ??” வம்பிழுத்தாள்.

 

“ஏன் நீங்க கேப்ல வரமாட்டீங்களோ??” நக்கலடித்தான்.

 

“ஹ்ம்ம்…” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. அவன் புக் செய்திருந்த வண்டி வருவதற்கு பத்து நிமிடம் ஆகும் போல் இருக்க “வா அந்த ஹோட்டல்ல போய் ஜூஸ் சாப்பிடலாம்”

 

“நான் வரலை”

 

“நீ வரலைன்னா இங்கவே நடுரோட்டுல தனியா நிக்க போறியா என்ன… நீ எதுவும் சாப்பிடலைன்னா பரவாயில்லை வந்து எனக்கு கம்பெனி கொடு”

 

“வர்றேன்” என்று பல்லைக்கடித்து அவனுடன் சென்றாள்.

 

வசந்தபவனில் சென்று அமர்ந்தவன் அவனுக்கு ப்ரெஷ் ஜூஸ் சொல்லிவிட்டு ஒரு வெண்ணிலா மில்க்ஷேக் சொன்னான்.

 

“ரெண்டும் யாருக்கு??”

 

“எனக்கு தான்…” என்று அலட்டாமல் பதில் சொன்னான்.

 

‘என்னை கூட்டிட்டு வந்திட்டு ஒரு வார்த்தை நீயும் சாப்பிடுன்னு சொன்னா தான் என்னவாம்’ என்றிருந்தது அவளுக்கு.

 

அவள் மனசாட்சியோ ‘நீ கேட்டியா சாப்பிடுங்கன்னு நீ கேட்டியா முதல்ல… தன் வினை தன்னைச் சுடும்’ என்று குத்திக்காட்டியது.

 

அவன் ஆர்டர் செய்திருந்தது வரவும் ஜூசை அவன் எடுத்துக்கொண்டு மில்க்ஷேக்கை அவள் புறம் நகர்த்தினான்.

 

“உன்னை பார்க்க வைச்சு என்னால சாப்பிட முடியாது. குடிக்கறதுன்னா குடி இல்லை கீழே ஊத்திடு” என்று கூலாக சொன்னான்.

 

“கொழுப்பா??”

 

“எனக்கில்லை…”

 

“அப்போ எனக்கா??”

 

“கூல் டியர்… ஜில்லுன்னு இதைக்குடி அப்புறம் பேசலாம்” என்றவன் அதை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

 

வேறுவழியில்லாமல் அதை வாங்கிக் குடித்து முடிந்திருந்தாள் அவள்.

 

வேந்தன் புக் செய்திருந்த வண்டியும் வந்திருக்க இருவரும் அதிலேறி பயணம் செய்தனர்.

 

வண்டியில் ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பாதி தூரம் சென்றிருப்பர்.

 

அவளின் கைபேசி அழைப்பு விடுத்தது. ‘இவகிட்ட போனிருக்கா, இவ்வளவு நேரம் எங்க வைச்சிருந்தா’ என்று அவன் யோசிக்கும் போதே ஹேன்ட்பேக்கில் இருந்து அதை வெளியே எடுத்திருந்தாள்.

 

‘நம்பரை எப்படியாச்சும் வாங்கிடணும். எப்படி??’ என்ற சிந்தனை அவனுக்கு.

போனை காதில் வைத்தவள் “சொல்லுடா??” என்றிருந்தாள்.

 

எதிர்முனையில் அழைத்தது அவளின் செல்லத் தம்பியே தான்.

 

“எங்க இருக்க??”

 

“எங்க இருந்தா உனக்கென்னடா??”

 

‘நம்மகிட்ட மட்டுமில்லை எல்லார்க்கிட்டயும் இப்படி தான் பேசுவா போல’ என்றது வேந்தனின் மனம்.

 

“கேட்டா ஒழுங்கா சொல்ல மாட்டியா?? மாமா இருக்காரா பக்கத்துல…” என்று அவன் கேட்டது தான் தாமதம் அவனுக்கு ஆறுக்கால பூஜை நடத்தினாள் அவன் தமக்கை.

 

“யாருடா உனக்கு மாமா??”

 

“யார் சொன்னாங்க உனக்கு இதெல்லாம்?? நீ பார்த்தியா?? உனக்கென்ன தெரியும்??………………..” ஆரம்பித்தவள் தான் எவ்வளவு நேரமோ தெரியவில்லை அர்ச்சனை முடிந்தபாடில்லை.

 

இப்போது அழைத்தது வேந்தனின் கைபேசி. அவளை திரும்பி பார்த்தான் அவள் நிறுத்தியிருக்கவில்லை.

 

புது எண்ணில் இருந்து அழைப்பு வேறு. அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான் “ஹலோ” என்றவாறே.

 

“நான் அபிஷேக் பேசறேன்”

 

“அபி… ஹ்ம்ம் சொல்லு அபி” என்றான் அவன். முல்லையின் தம்பி தான் என்று புரிந்தது அவனுக்கு.

 

“எங்க இருக்கீங்க??”

 

“எதுக்கு கேட்குறேப்பா??”

 

“என்ன நீங்க அவளை மாதிரியே கேள்வி கேட்குறீங்க??”

 

“வானகரம் தாண்டி வந்திட்டு இருக்கோம்”

 

“வீட்டுக்கு வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்??”

 

“கொஞ்சம் டிராபிக்கா இருக்கு. எப்படியும் அரைமணி நேரம் ஆகும்ன்னு நினைக்கிறேன்”

 

“ஹ்ம்ம் அப்போ சரி… நான் வைக்குறேன்” என்று எதுவும் சொல்லாமல் வைக்கப் போனவனை “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான் வேந்தன்.

 

“உங்கக்கா இன்னும் போனை வைக்கவேயில்லை நீ எப்படி எனக்கு போன் பண்ணே?? என்ன விஷயம்ன்னு ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்”

 

“அது எங்க அத்தை நம்பரு… திட்டு நான் வாங்கலை இப்போ அவங்க தான் வாங்குறாங்க…” என்றுவிட்டு ஒன்றும் சொல்லாமேலே போனை வைத்துவிட்டான்.

 

‘அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி தான் போல. அவங்க வேலையில கவனமா இருக்காங்க’

 

முல்லை போனை வைக்காமல் இருந்ததை பார்த்தவன் “யார்கிட்டம்மா பேசுறே??” என்றான்.

 

“என் தம்பி…”

 

“அவன் இப்போ தான் என்கிட்ட பேசினான். உன் போனை செக் பண்ணி பாரு லைன் கட்டாகியிருக்க போகுது”

 

“லைன்ல தான் இருக்கான். என் தம்பி அப்படி எல்லாம் செய்ய மாட்டான்”

 

“சொல்லாம கொள்ளாம செய்யறது எல்லாம் உங்க பழக்கம். என் தம்பிக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது” என்று வெடுக்கென்று சொல்லிவிட காயம் அவன் மனதில்.

 

‘ஒரே ஒரு தப்பை பண்ணிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

‘இவ கழுத்துல தாலி கட்டினது பெரிய தப்பு. எனக்கு நானே ஆப்பு வைச்சுக்கிட்டேன்’ என்று சொல்லிகொண்டான் மனதிற்குள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மழுங்கிவிட்டது தனக்கு என்று எண்ணிக்கொண்டான்.

 

அவசரத்தில் செய்து அவகாசத்தில் அழு நிலை தான் இப்போது அவனுக்கு.

 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான். கோபம் வேறு தன்னை போல வந்தது.

 

பேசாமல் இங்கயே இறங்கி சென்றுவிடலாமா என்று கூட தோன்றியது. ராஜம் அவன் மேல் நம்பிக்கை வைத்து அவளை வீட்டில் விடச் சொன்ன ஒரே காரணத்திற்காய் அமைதியாயிருந்தான்.

 

அவளிடமே வீட்டிற்கு வழி கேட்டு இதோ அவள் வீட்டின் முன் வந்து நின்றிருந்தனர்.

 

அகிலா வாசலிலேயே நின்றிருந்தாள். ‘இந்த அத்தை எதுக்கு இங்க நிக்குது’ என்று எண்ணிக்கொண்டே இறங்க அவர் இருவரையும் ஒன்றாய் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்…..

 

Advertisement