Advertisement

அத்தியாயம் – 7

 

அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.

 

ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி கிழங்கை கொடுத்திருந்தார்.

 

அவள் போதும் போதும் என்று சொல்லச் சொல்ல நிறைய பூரியை சுட்டு வைத்திருந்தார். அது ஏன் என்று இப்போது தானே அவளுக்கு புரிகிறது.

 

அருகிருந்தவனை ஓரப்பார்வை பார்த்தாள். ‘இவனுக்கு கொடுக்கணுமா என்ன??’ என்று யோசித்தவளின் மனம் மறு நிமிடமே ‘வேணாம்… வேணாம்… அவ்வளோ வொர்த் இல்லை’ என்று சொல்லியது.

 

எல்லாவற்றையும் விட பூரி கிழங்கென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம். அதை விட்டுவிடுவாளா என்ன ‘நமக்கு பூரி கிழங்கு தான் முக்கியம்’ என்று எண்ணியவள் சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.

 

லேசாய் திரும்பி அவனை மீண்டும் பார்க்க அவன் பார்வையோ எங்கோ வெறித்திருந்தது.

 

‘அப்பா பேசாம செகண்ட் கிளாஸ்ல டிக்கெட் போட்டிருக்கலாம்’ என்று தோன்றியது அவனுக்கு.

 

பின்னே இங்கு சன்னல் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறதே!! வேடிக்கையும் பார்க்க முடியவில்லை.

 

அருகிருந்தவள் பேசுவாள் போன்று தோன்றவில்லை. அவனுக்கும் அவளிடத்தில் பேசும் எண்ணமில்லை.

 

அவன் அன்னையிடம் பேசியதே அவனைச் சுற்றி வட்டமிட சிவனே என்று அமர்ந்திருந்தான். திடிரென்று டிபன் வாசனை அவன் நாசியை தாக்க மெல்ல திரும்பி பார்த்தான்.

 

வசந்தமுல்லை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மரியாதைக்காக கூட சாப்பிடுகிறாயா என்று கேட்கவில்லை. கொஞ்சம் வெறுத்து தான் போனது அவனுக்கு.

 

என்னடா இது யாருக்கும் நம்மை பிடிக்கலையா!! அம்மாவே அப்படி சொல்லிட்டாங்க, இவளெல்லாம் எம்மாத்திரம் கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டேங்குறா!! என்ற வருத்தம் அவனுக்கு.

 

காலையில் ஹோட்டலில் கூட அவன் உணவருந்தவில்லை. ரயிலில் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம் என்றுவிட்டான்.

 

இல்லாத பசியும் அவள் உணவருந்த ஆரம்பித்ததில் அவனுக்கும் வந்திருந்தது. பேன்ட்ரி சர்வீஸ் ஆளும் யாரையும் காணவில்லை.

 

அவள் சாப்பிட்டு முடித்தால் எழுந்து செல்லலாம் என்று கைபேசியில் பார்வையை ஓட்டினான். அவள் எழுந்து கை கழுவ செல்லவும் அவன் எழுந்து வெளியில் வந்து நின்றிருந்தான்.

 

வந்தவள் அவள் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். “நான் பேன்ட்ரி வரை போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நகர்ந்துவிட்டான்.

 

‘அடாடா இவர் சாப்பிடலையா!! செத்தேன் நான், ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோ!! ஏன்?? ஏன் கேக்கணும்?? இவர் கேட்டாரா என் கழுத்துல தாலி கட்ட முன்ன??’

 

‘நான் மட்டும் ஏன் கேக்கணும்??’ என்ற எண்ணம் வந்ததும் அவன் மேல் இருந்த கோபம் ஞாபகத்திற்கு வந்தது.

 

“வரட்டும் இருக்கு அவருக்கு” என்று சத்தமாய் முணுமுணுக்க அவனும் வந்திருந்தான்.

 

“யாருக்கு என்ன வைச்சிருக்கே??” என்றவாறே.

 

“ஹ்ம்ம் உங்களுக்கு தான்…”

 

“அப்படியா கொடு…” என்றவனை பார்வையால் எரித்தாள்.

 

“ஷப்பா தாங்காதுடா சாமி… எவ்வளவு அனல்?? எவ்வளவு அனல்?? போதும்மா இப்போ தான் பேன்ட்ரில இருந்து வர்றேன். அங்க விட இங்க ரொம்ப அனலடிக்குது” என்றான்.

 

அவளிடம் பேசக்கூடாது என்று எண்ணியதெல்லாம் மறந்து பேச்சை துவங்கியிருந்தான்.

 

“கொஞ்சம் உள்ள போய் உட்காரு நான் சாப்பிடணும்” என்று அவன் சொல்ல எழுந்து அவன் சீட்டில் அமர்ந்தாள்.

 

அவன் சாப்பிட்டு கைகழுவிவிட்டு வரவும் மீண்டும் அவள் இருக்கைக்கு மாறியிருந்தாள். மீண்டும் அமைதி அங்கு.

 

மொட்டு மொட்டென்று அமர்ந்திருப்பது கடுப்பாய் இருந்தது அவனுக்கு. எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது என்று.

 

அருகில் இருந்தவள் வம்புக்காவது தன்னிடம் பேசுவாள் என்று பார்த்தால் அமைதியாயிருந்தாள்.

 

அந்நேரம் அவன் கைபேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்புவர அதை ஏற்று காதில் வைத்திருந்தான்.

 

“ஹலோ நான் அத்தை பேசுறேன்ப்பா” என்றது எதிர்முனை.

 

‘அத்தை…’ என்று யோசித்தவன் அருகிருந்தவளை திரும்பி பார்க்கவும் புரிந்தது. “சொல்லுங்க அத்தை” என்று அவன் சொல்லவும் இப்போது முல்லை அவனை திரும்பி பார்த்தாள்.

 

‘ஆத்தி இந்தம்மா இவருக்கு எதுக்கு போன் பண்ணுது’ என்று யோசனை.

 

“சாப்பிட்டீங்களா?? பூரியும் கிழங்கும் செஞ்சிருந்தேன். உங்களுக்கு பிடிக்கும்ன்னு கண்மணி சொன்னதுனால தான் செஞ்சேன்”

 

‘அடிப்பாவி… கொஞ்சம் கூட கொடுக்காம முழுங்கிட்டியே!!’ என்று அருகிருந்தவளை மனதார சபித்து “சாப்பிட்டேன் அத்தை ரொம்ப சூப்பரா இருந்துச்சு” என்றான்.

 

‘இந்த அம்மாவுக்கு அறிவே இல்லை!! எப்படி போட்டு கொடுக்கறாங்க!! இவரும் கூசாம சாப்பிட்டேன்னு பொய் சொல்றதை பாரேன்’ வேறு யார் முல்லை தான் திட்டியது.

 

போனை இப்போது அவளை நோக்கி நீட்டினான் ‘உன்கிட்ட பேசணுமாம்’ என்ற வாயசைப்புடன்.

 

“ம்மா…. ஹ்ம்ம் சொல்லும்மா… சாப்பிட்டாச்சு சாப்பிட்டாச்சு… சரிம்மா தூங்கலை… சும்மா சொன்னதே சொல்லிட்டு இருக்காதேம்மா”

 

“சீக்கிரமா ஊருக்கு வந்து சேரும்மா… உங்கம்மாவோடவே தங்கிடாதே!!” என்றுவிட்டு போனை கட் செய்து அவனிடம் கொடுத்தாள்.

“எதுக்கு பொய் சொன்னீங்க எங்க அம்மாகிட்ட??”

 

“என்ன பொய்??”

 

“நீங்க சாப்பிட்டீங்கன்னு…”

 

“நான் சாப்பிட்டேன் தானே…”

 

“நான் தான் உங்களை சாப்பிடவே சொல்லலையே அப்புறம் ஏன் பொய் சொன்னீங்க??”

 

“பொய் சொன்னேன்னு சொல்லாத… உண்மையை மறைச்சேன்னு வேணா சொல்லு…”

 

“நான் என்ன சாப்பிட்டேன்னு அவங்ககிட்ட சொல்லலை அவ்வளவு தான்”

 

“நான் சாப்பிட்டது சூப்பர்ன்னு மட்டும் தான் சொன்னேன். இதுல எங்க இருந்து பொய் வந்துது”

 

“நான் சாப்பிடலைன்னு சொல்லியிருந்தா உனக்கு தான் திட்டு விழுந்திருக்கும். அதான் சொல்லலை”

 

“ரொம்ப தான் அக்கறை” என்று கழுத்தை ஒடித்தாள்.

 

“ஏன் இருக்கக் கூடாதா??” என்றவன் இயல்பிற்கு வந்திருந்தான்.

 

“எதுக்கு இருக்கணும்?? யார் நீங்க??”

 

அவள் காதுக்கருகே குனிந்தவன் “சொல்லிடட்டும்மா” என்றான் மெதுகுரலில்.

 

அவன் நெருங்கியிருந்ததில் அவளுக்கு கூச்சம் உண்டாகியிருக்க சட்டென்று விலகினாள் சிவந்த முகத்துடன்.

 

அவள் விலகியதும் அவன் முகம் சுருங்க திரும்பி அவளை பார்த்தவனுக்கு அவள் முகச்சிவப்பு லேசாய் ஒரு புன்னகையை தோற்றுவித்தது அவன் இதழ்க்கடையில்.

 

“கொஞ்சம் பேசலாமா உன்கிட்ட??” என்றான் அவன் சற்றே பின்னே சாய்ந்து ஆனால் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

 

அவன் சொன்னது அவளுக்கு கொஞ்சி பேசலாமா என்று கேட்டுவிட ஆரம்பித்துவிட்டாள் “என்ன கொஞ்சி பேசணுமா?? எவ்வளவு இது இருந்தா இப்படி சொல்வீங்க நீங்க??”

 

“ஹேய் ஹேய் நில்லு நான் கொஞ்சம் பேசணும்ன்னு சொன்னேன். கொஞ்சி பேசணும்ன்னு சொல்லலை”

 

“எதுவா இருந்தாலும் நீங்க பேசுறதை நான் கேட்கணும்ன்னு என்ன அவசியம்” என்று வெடித்தாள்.

 

“உனக்கு கேட்க இஷ்டமிருந்தா சொல்லு”

 

“எல்லாம் என்னிஷ்டப்படியா நடக்குது” என்று முகம் திருப்பினாள்.

 

அங்கு அன்னை!! இங்கு இவளா!! குத்திக்காட்டியே கொன்று விடுவார்கள் போல!! என்று சலித்தான்.

 

அவன் ஒன்றும் பேசவில்லை, அமைதியாகியிருந்தான். சற்று பொறுத்து பார்த்தவள் “பேசணும்ன்னு சொன்னீங்க??” என்றாள்.

 

“நீ கேட்கிறேன்னு சொல்லவேயில்லையே!!”

 

“என்னை கேட்டு எதுவும் நடக்கறதில்லைன்னு சொன்னேன். அதிலென்ன தப்பிருக்கு”

 

“அதை பத்தி தான் நான் பேசணும்ன்னு சொன்னேன். நீ கேட்க இஷ்டப்படாத போல பேசினே!! அதான் பேசாம இருந்தேன்”

 

“நான் பேசட்டுமா!! வேணாமான்னு வாயை திறந்து சொல்லு. நீ குத்தி காட்டுறதை எல்லாம் என்னால பதிலா எடுத்துக்க முடியாது” என்றான் அவன் கறாராய்.

 

“சொல்லுங்க…”

 

“முதல்ல நான் உன்கிட்ட கேட்க வேண்டியது மன்னிப்பு…”

 

“கத்தியால அறுத்திட்டு சாரி தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு” என்றாள் குத்தலாகவே.

இதற்கு மேலும் இவ்வளவு பொறுமையாய் அவளுக்கு பதில் சொல்ல வேண்டுமா என்றிருந்தது அவனுக்கு.

 

அவளைப் பொறுத்தவரை தான் செய்தது தவறு என்று தோன்ற பொறுத்துக்கொண்டான் அவள் பேச்சை.

 

“நான் மன்னிப்பு கேட்டேன், அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன்னிஷ்டம்”

 

“ஆமாமா நான் ஏத்துக்கிடலைன்னா நீங்க ஏன் கவலைப்படணும்” என்று வெட்டினாள்.

 

அவளுக்கு அவன் செய்த செயல் இன்னமும் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருக்க அவனை உண்டுயில்லை ஆக்கிவிடும் எண்ணத்தில் இருந்தாள்.

 

அவன் பேசுவதெல்லாம் குற்றமாக்கிக் கொண்டிருந்தாள். சட்டென்று நிகழ்ந்து விட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

வீட்டில் பேசினால் அன்னை ஏதாவது சொல்லி வாயடைகிறார். சித்தி ஒருவரே சப்போர்ட் செய்தார் அவரும் இப்போது ஒன்றும் சொல்லாதவாறு அன்னை எதையோ செய்து வைத்துவிட்டார்.

 

அமுதா கேட்கவே வேண்டாம் சரியான பெரியம்மா கோண்டு. எல்லாரும் அம்மா கோண்டாக இருப்பார்கள், இவள் சற்று வித்தியாசம்.

 

அவளுக்கு ராஜம் சொல்வதே எப்போதும் வேதம். புஷ்பா ஒன்றை சொன்னால் கூட உடனே செய்ய மாட்டாள்.

 

“பெரியம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்கிறேன், அவங்க சொன்னா சரியா இருக்கும்” என்று சொல்லி ராஜத்தை தான் கேட்பாள்.

 

அவளை அதிகம் நம்ப முடியாது. குமுதா பதினோரு வயது பெண். அவளுக்கு சொன்னாலும் புரியாது. என்னடா இது என் நிலைமை இப்படி ஆகிப் போனதே என்று தான் இருந்தது அவளுக்கு.

 

ஹோட்டலுக்கு வேந்தனை பார்க்கச் சென்ற போது பெரியவர்கள் ஏதோ அவர்களை பற்றி தான் பேசியிருக்க வேண்டும். அமுதா உளவு பார்க்கிறேன் என்று சென்றவள் தான்.

 

ஒன்றையும் அறியாமல் தான் திரும்பி வந்திருந்தாள். இப்படியே அவள் யோசித்துக் கொண்டிருக்க “உன்கிட்ட பேசணுமா?? வேணாமா??” என்றான் அவன் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில்.

 

“வேணாம்ன்னு சொன்னா என்ன செய்வீங்க??” என்று முகத்திலடித்தது போல் சொன்னாள்.

 

“சரி தான் போடி” என்றுவிட்டு அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.

 

‘கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா தான் பண்ணுறா’ என்று எண்ணிக்கொண்டவன் அவன் மடிகணினியை எடுத்து மேலே வைத்துக்கொண்டு அதில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கு அலுவலகத்தில் இருந்து போன் வேறு வர ஆரம்பித்தது போலும். ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

 

அவ்வப்போது சிக்னல் கட் ஆகி போனும் கட் ஆனாலும் மீண்டும் போன் செய்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் அவன் பேசியது.

 

‘என்ன இவரு இவ்வளவு பீட்டர் விடுறாரு?? நமக்கும் இங்கிலீஷ்க்கும் காத தூரமாச்சே!! நான் காலேஜ்ல இங்கிலீஷ் படிக்கறதே ஏழுமலையான் புண்ணியம்’

 

‘பாதி கிரடிட் கோம்ஸ்க்கு தான் சேரும். அவ தமிழ்ல சொல்லிக் கொடுக்கலைன்னா நானெல்லாம் பாஸ் பண்ணுறதே பெரிசு’ என்று எண்ணிக்கொண்டு அவன் பேசுவதை புரியாமலே கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

கண்கள் மெல்ல சொருக அன்னை சொன்ன அறிவுரை எல்லாம் காற்றில் பறந்தது. அவள் தூங்கும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

 

லேசான குளிரும் தாலாட்டாய் ரயில் பயணமும் இதமாயிருக்க காதில் இளையராஜா பாடலை ஒலிக்கவிட்டு சாய்ந்திருந்தவளை உறக்கம் இதமாய் தழுவியிருந்தது.

 

அதைக் கூட கவனியாமல் அவன் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று அவன் தோள் மீது ஏதோ பாரம் அழுந்த திரும்பி பார்த்தால் அவள் உறங்கியிருந்தாள் போலும். தூக்கத்தில் அவன் தோள் மீது சாய்ந்திருந்தாள்.

 

‘இப்படியே மடியில சாய்ச்சு தூங்க வைச்சா என்ன!!’ என்று அவசரமாய் மனதில் தோன்றிய எண்ணம் கொஞ்சம் வியப்பாய் இருந்தாலும் ‘இதென்ன இப்படி ஒரு எண்ணம்’ என்ற ஆராய்ச்சியும் அவன் மனதில்.

 

‘இதென்ன ஆராய்ச்சி உனக்கு, சென்னையில இருந்து ட்ரைன்ல வரும் போதே சைட் அடிச்சவன் தானே நீ!! பிடிக்காமலா ஒரு பொண்ணை சைட் அடிப்பாங்க’ என்று இந்த மானங்கெட்ட மனசாட்சி வேறு எடுத்து கொடுத்தது அவனுக்கு. ‘பேசாம போயிரு’ என்று வம்படித்தான் அதனிடம்.

 

அவளுக்கு வசதியாய் சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். மடிகணினியை அணைத்து பையில் வைத்தவன், போனையும் சைலென்ட் மோடில் போட்டான்.

 

அவள் காதில் இருந்த ஹெட்போனின் ஒரு முனையை எடுத்து மெதுவாய் அவன் காதில் வைத்துக் கொண்டான். இதமான மனதிற்கு நிறைவான ராஜாவின் கானங்கள் தேனாய் செவிக்குள் நுழைந்தது.

 

பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்..
தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது,
இளைய மனது
இணையும் பொழுது,
இணையும் பொழுது, இளைய மனது
தீம்தன தீம்தன
இணையும் பொழுது
தீம்தன தீம்தன..ஆஅ..
பூஜை மணியோசை, பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே…

 

அவனுமே பறந்தான் இப்போது புதியதோர் உலகிலே…

 

அவனையும் உறக்கம் மெல்ல தழுவ ஆரம்பிக்க காதில் மாட்டியிருந்த ஹெட் போனை எடுத்து மீண்டும் அவள் காதில் வைத்துவிட்டு உறங்கிப் போனான் இனிய நினைவுகளில்.

 

முல்லை உறக்கத்திலேயே அவள் இரு காலையும் எடுத்து சீட்டில் வைத்துக்கொண்டு உறங்கியிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மடி சாய்ந்திருந்தாள்.

 

அன்னை மீது சாய்ந்து உறங்கும் வழக்கம். நல்ல உறக்கத்தில் இருந்தவள் வசதியாய் படுத்திருந்தாள்.

 

திடிரென்று விழிப்பு தட்ட கண் விழித்திருந்தான் வேந்தன். தன் மடியில் வசதியாய் சாய்ந்து கொண்டு காலை குறுக்கி படுத்திருந்தவளை பார்த்ததும் மனதிற்குள் ஒரு இதம் பரவியது.

 

அவளை எழுப்பவா வேண்டாமா என்ற யோசனை வேறு. ‘இது கூட நல்லா தான்யா இருக்கு’ மனம் கவுன்ட்டர் கொடுத்தது.

 

‘கொஞ்ச நேரம் முன்னாடி தான் அப்படியே சாய்ச்சுக்கணும்ன்னு நினைச்சேன். கடவுள் கருணை காட்டிட்டார்’ (டேய் கடவுள் இதுக்கெல்லாமாடா கருணை காட்டுறாரு)

 

அவளிடம் அசைவு தோன்றவும் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. தூங்குவது போல் பாவனை செய்வோமா!! இல்லை அப்படியே இருப்போமா!!

 

‘நாம ஏன் தூங்குற மாதிரி நடிக்கணும். பார்ப்போம் இவ என்ன தான் பண்ணுறான்னு’ என்று எண்ணிக்கொண்டு அவள் விழிப்பதற்காய் ஆவலாய் காத்திருந்தான் அவளின் ரியாக்சன் பார்க்க.

 

உறக்கத்திற்கும் அவளுக்கும் வெகு பொருத்தம் போலும், இன்னமும் எழும்பவில்லை அவள்.

 

உண்ட மயக்கம் இப்படியா இருக்கும்… அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது உறங்கிவிட்டாளா?? அல்லது மயங்கிவிட்டாளா?? என்று.

 

எழுப்பலாமா என்று மீண்டும் தோன்றிய எண்ணத்தை செயல்படுத்தலாமா என்று யோசிக்கும் போதே கலைந்திருந்தது அவளின் தூக்கம்.

 

கண் விழித்து பார்த்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்று முதலில் புரியவில்லை.

 

அவளிடம் அசைவை உணர்ந்தவன் எங்கே கீழே விழுந்துவிடப் போகிறாள் என்று எண்ணி சட்டென்று குனிந்து அவளைப்பற்ற அவனை கண்டதும் அவசரமாய் அவள் எழ இதழ்கள் லேசாய் மோதிக் கொண்டது.

 

ரோஜா பூவிதழ் மோதிய உணர்வில் அவனும், மின்சாரம் தாங்கிய உணர்வில் அவளும்.

 

அவன் சட்டென்று பின்னால் சாய்ந்தான். அதன் பின்னே தான் அவள் எழ முடிந்தது.

 

‘அச்சோ இவர் மேலவா படுத்து தூங்கினோம். இந்தம்மா அத்தனை முறை சொல்லி அனுப்பினாங்க தூங்காத தூங்காதன்னு கேட்டனா நானு’ என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

எதிர்பாரா அவள் இதழ் ஸ்பரிசத்தில் வேந்தன் முகத்தில் ஆயிரம் வோட்ஸ் பிரகாசம். உள்ளுக்குள் ஜில்லிப்பு ஓட சுகமாய் இருந்தது அவனுக்கு.

 

‘நான் தான் தூங்கிட்டேன், இவராச்சும் எழுப்பியிருக்கலாம்ல. பேசாம இருந்திருக்கார், எவ்வளவு திண்ணக்கம் இருக்கணும்’ என்று தன் தப்பையும் அவன் மேலேயே போட்டாள் சுலபமாய்.

 

அவள் உறங்கி எழுந்ததில் உண்ட உணவு செரித்துவிட்டது போல பசி எடுக்க ஆரம்பித்தது அவளுக்கு. வயிறு எதையாவது கொடேன் என்று கேட்க ஆரம்பித்தது.

 

எதுவாவது நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிடலாம் என்றால் ‘இவர் என்னைப்பத்தி என்ன நினைப்பாரோ’ என்று அமைதியாயிருந்தாள்.

 

மதியமே அவள் வீட்டிற்கு சென்று விடுவாள் என்பதால் ராஜம் காலை உணவை மட்டுமே கொடுத்துவிட்டிருந்தார்.

 

தான் சொன்னாலும் செவிமடுக்காமல் மகள் ரயிலில் எதையாவது வாங்கி உண்ணுவாள் என்பது அன்னைக்கு தெரியும். அதனால் தான் அவர் அப்படி செய்தார்.

 

அவளும் வாங்கி சாப்பிடுவாள் தான். ஆனால் அருகில் ஒருவன் இருக்கிறானே, தீனிப்பண்டாரம் என்று அவளை எண்ணிவிட்டால் என்ற கவலை அவளுக்கு.

 

ரயில் விழுப்புரத்தை எப்போதோ தாண்டியிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மேல்மருவத்தூர் ஸ்டேஷன் வந்துவிடும் அங்காவது ஏதாவது வாங்கி சாப்பிடுவோம் என்று நினைத்து அமர்ந்திருந்தாள்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்டேஷன் வந்துவிட அவன் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றிருந்தான்.

 

‘பாரு எதுவும் சொல்லாம எழுந்து போறாரு. நமக்கெல்லாம் இப்படி முடியுமா!! பொறந்தாலும் ஆம்பிளை பிள்ளையா பொறக்கணும்!!’

‘இஷ்டத்துக்கு ஊர் சுத்துறது என்னமோ!! நினைச்ச நேரத்துக்கு வெளிய போறது என்னமோ!! கொடுத்து வைச்சவங்க!!’

 

‘நம்மளை தான் ஏன் லேட்டு?? எதுக்கு லேட்டு?? எப்போ வருவே?? அங்க போகாதே?? இங்க போகாதே?? தொல்லைடா சாமி’ என்று மனதிற்குள்ளாக அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

 

வண்டி கிளம்புவதற்கு அறிகுறியாய் சத்தம் கேட்டு முடிக்கவும் அவளுக்குள் பதட்டம்.

 

‘அச்சோ அவரு இன்னும் வரலையே!!’ என்றவள் பதறி எழுந்து கதவருகே வரவும் வண்டி லேசாய் நகர ஆரம்பிக்கவும் அவளை பதட்டம் அதிகமாய் தொற்றிக் கொண்டது.

 

சரியாய் அவனும் அப்போது தான் உள்ளே ஏறினான். அவனை கண்டதும் தான் நின்றிருந்த மூச்சு லேசாய் விட முடிந்தது அவளுக்கு.

 

‘பாவி… பாவி கொஞ்ச நேரத்துல பதற வைச்சுட்டானே!!’ என்றிருந்தது அவளுக்கு….

Advertisement