Advertisement

அத்தியாயம் – 6

 

“அம்மா நான் ஊருக்கு போகணும்மா… நாம இன்னைக்கு நைட் கிளம்புவோமா… எனக்கு வெள்ளிக்கிழமை வைவா இருக்கும்மா”

 

“அப்புறம் ரிவிஷன் இருக்கும், அப்புறம் பைனல்ஸ்மா” என்று ராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தமுல்லை.

 

“வசந்தி அம்மா இங்க இருந்து கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நீ ஒண்ணு பண்ணு உனக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கறேன், பகல் ட்ரைன்ல. நீ ஊருக்கு போய்டு அபியை வந்து உன்னை அழைச்சுட்டு போக சொல்றேன்”

 

“ஏம்மா அப்படி என்ன வேலை இங்க உனக்கு?? பாட்டியை சித்தி பார்த்துக்க போறாங்க நீ என்ன பண்ணப் போறே?” என்று சிணுங்கினாள்.

 

“உங்க சித்திக்கு அவ மாமியார் வீட்டு சொந்தத்துல ஒரு கல்யாணம் இருக்கு. அவ ஊருக்கு போயிட்டு வரவரைக்கும் நான் அம்மா கூட இருக்கணும் அதுக்கு தான் சொல்றேன்”

 

“ஏன் அமுதா குமுதா இல்லையா??” என்று வாதம் செய்தாள்.

 

“அவங்களும் தான் கல்யாணத்துக்கு போறாங்க. நீ சும்மா வாயடிக்காம ஊருக்கு போறதுன்னா போ. இல்லைன்னா இன்னும் ஒரு வாரம் இங்க இரு”

 

“உன் காலேஜ்க்கே வந்து நான் சொல்றதுன்னாலும் சொல்றேன்”

 

“நீ ஊருக்கு போறது விட பேசாம இங்கவே இரு. எனக்கும் ஒத்தாசையா இருக்கும்…” என்றார் ராஜம்.

 

“ம்மா ஏம்மா இப்படி பண்ணுறே?? இந்த கோம்ஸ் நேத்தே பத்து தரம் போன் பண்ணிட்டா, எப்போ வர்றேன்னு கேட்டு”

 

“நான் போகலைன்னா எனக்கு அந்த மார்க் கட் ஆகிடும்மா…”

 

“அப்போ டிக்கெட் போட்டு தரேன் நீயே ஊருக்கு போய்டு சரியா” என்றவரிடம் தலையாட்டுவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை.

 

இப்படி தனியே பயணம் செய்தெல்லாம் அவளுக்கு பழக்கமேயில்லை. எப்போதும் அன்னையுடன் தான் செல்வாள்.

 

கல்லூரிக்கு கோமதியுடன் செல்லுவாள். அவள் விடுப்பு எடுத்திருந்த தருணம் மட்டுமே தனித்து பயணம் செய்திருக்கிறாள். இப்போது தனித்து பயணம் செல்வது குறித்து சற்றே யோசனை தான் அவளுக்கு.

 

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தனித்து பயணம். அருகில் இருப்பவர் யாரோ எவரோ கொஞ்சம் கலக்கம் தான் அவளுக்கு.

 

இதற்க்கெல்லாமா கலங்குவார்கள் என்றால் ஆம் அவள் யோசிக்கத் தான் செய்வாள். பஸ்சில் ஏறி அமர்ந்தாலே அவளுக்கு உறக்கம் தன்னைப் போல வரும்.

 

ரயில் வேறு தாலாட்டு பாடுமே தூக்கம் வராமலா இருக்கும் அவளுக்கு. அவள் பாட்டுக்கு உறங்கிவிட்டாள் என்ன செய்வது என்ற யோசனை இப்போது.

 

கல்லூரில் இருந்து வீட்டிற்குள் வருவதற்குள் ஒரு தூக்கம் தூங்கியே எழுவாள் அவள் எப்போதும். கோமதி தான் எழுப்புவாள் அவளை.

 

அவள் வாராத நேரத்தில் தூங்காமல் பார்த்துக் கொள்ளுவாள்.

 

“என்னடி இன்னும் யோசனை பண்ணுறே?? புக் பண்ணவா வேணாமா??”

 

“பண்ணும்மா வேற வழி…”

 

“சரி நான் புக் பண்ணுறேன். ட்ரைன்ல நீ பாட்டுக்கு தூங்கிறாதே!! அக்கம் பக்கம் பராக்கு பார்க்காம ஒழுங்கா இரு”

 

“நான் இல்லைன்னு கண்டதும் ட்ரைன்ல வாங்கி சாப்பிடாதே!!” என்று லிஸ்ட் போட்டார் ராஜம். ‘இதெல்லாம் எனக்கு தோணலைன்னாலும் நீயே தோண வைச்சுடும்மா’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

முதல் நாள் வேந்தனை பார்க்க சென்றிருந்த போது தான் கோமதி போன் செய்து பேசியிருந்தாள் கல்லூரிக்கு உடனே வருமாறு.

 

வேந்தனுக்கு மருந்திட்டு முடித்தவள் கையை கழுவி வர அதுவரையிலும் அவன் பார்வை அவளை சுற்றியே வட்டமிட்டதை அவள் அறியவில்லை.

 

பின் அவள் தோழியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு தானிருந்தான் வேந்தன்.

 

மறுநாள் அவன் உடல் நலம் சற்று சீர்பட ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றான் அன்னையிடம்.

 

“ம்மா… நான் ஊருக்கு கிளம்பறேன். எனக்கு இந்த வாரக் கடைசியில ஒரு முக்கியமான கிளையன்ட் மீட்டிங் இருக்கும்மா…”

 

“பத்து நாளைக்கு மேல வொர்க் அட் ஹோம்ன்னு சொல்லி வேலை பார்த்திட்டேன். இனியும் போகலைன்னா அப்புறம் ரொம்ப கஷ்டம்மா” என்றான்.

 

“நான் வேணாம்ன்னு சொன்னா நீ கேக்கவா போறே!! முடிவு பண்ணிட்டு தானே வந்து என்கிட்ட சொல்றே!!” என்று இருபொருள்பட பேசினார் அவர்.

“அம்மா அன்னைக்கு நடந்ததை மனசுல வைச்சுட்டு பேசறீங்களா?? ம்மா கொஞ்சம் என்னை பாரும்மா… என்னன்னு சொல்லும்மா…”

 

கண்மணியோ முகத்தை திருப்பிக் கொண்டார். “விடு வேந்தா உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை”

 

“கொஞ்சமாச்சும் அந்த பொண்ணை பத்தி யோசிச்சு பார்த்தியா நீ!! உனக்கு அப்படி என்ன ஆங்காரம்??

 

“உன்னை யாரும் எதுவும் சொல்லலை தானே!! என்னை தானே வேணாம்ன்னு சொன்னாங்க. நீ இப்படி பண்ணதால யாருக்கு கஷ்டம் சொல்லு”

 

“பாரு நான் சொன்ன மாதிரியே அவங்க என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. ஆனா நீ செஞ்சதை மாத்த முடியுமா சொல்லு”

 

“எனக்கு அவங்க முகத்திலேயே முழிக்க முடியலை நீ செஞ்சு வைச்ச காரியத்தால…” என்றார் அவர் வேதனையான குரலில்.

 

“ம்மா என்னை முதல்ல பாரும்மா… முகத்தை திருப்பிக்கிட்டா நான் எப்படி சொல்றது”

 

“கண்ணு பொய் சொல்லாதுன்னு நீ சொல்லுவே தானேம்மா. என் கண்ணை பார்த்து சொல்லும்மா”

 

“உன் புள்ளை தப்பானவனா?? நீயே இப்படி பேசினா எப்படிம்மா?? நான் என்னமோ பல நாள் பிளான் பண்ணி செஞ்ச மாதிரி பேசறீங்க…”

 

“எனக்கு அத்தைங்க இருக்காங்க அவங்களுக்கு பசங்க இருக்காங்க இந்த அளவுக்கு தான் எனக்கு தெரியும். அவங்களை நான் பார்த்தது கூட கிடையாதுன்னு உனக்கே தெரியும்மா”

 

“உண்மையாவே சொல்றேன்ம்மா அன்னைக்கு அவங்க பண்ணது எனக்கு பிடிக்கலை. ஆயிரம் காரணம் சொல்லட்டும் என்னால இப்போவரை அதை ஏத்துக்க முடியலை”

 

“வான்னு கூப்பிட வேணாம், கையை பிடிச்சு உள்ள அழைச்சுட்டு போக என்ன வந்துதாம்…” என்றவனுக்கு அன்றைய நாளின் நினைவில் இன்னமும் கோபம் வந்தது.

 

“அந்த கோபத்துல தான் அப்படி செஞ்சுட்டேன். பெரியவங்க தான் இப்படின்னா அந்த வீட்டில இருக்கற சின்ன பசங்களுக்கு எல்லாம் என்ன வந்துச்சாம்” என்று அவன் சொல்லும் போது கண்மணி தடுத்து எதையோ சொல்ல வந்தார்.

 

வேந்தன் அதெல்லாம் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தான். “அவங்களும் தானே முறைச்சுட்டு போனாங்க. அந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து தான் அப்படி பண்ணிட்டேன். எதையும் நான் ப்ளான் எல்லாம் செய்யலை”

“கோவில்ல வைச்சு தான் அப்படி தோணுச்சு. இந்த வீட்டோட உறவை பலப்படுத்திக்கணும்ன்னா இப்படி செஞ்சா தான் சரியா வரும்ன்னு செஞ்சேன்”

 

“உங்களுக்கு அது தப்பா தெரிஞ்சா மன்னிச்சிருங்க. ஆனா எனக்கு அது தப்பாவே தெரியலை” என்று விளக்கம் சொன்னான்.

 

“அந்த பசங்க பேசலைன்னா நீ அப்படி செய்வியா வேந்தா. நீ சொல்ற விஷயத்துக்கே வர்றேன். பெரியவங்க சண்டை பெரியவங்களோட அதானே நீ சொல்ல வர்றது”

 

“அப்போ நீ மட்டும் இப்போ என்ன செஞ்சு வைச்சிருக்கே வேந்தா. நாங்க பேசி தீர்த்துக்க வேண்டிய விஷயத்துல நீ ஏன் நடுவுல வந்தே!! எதுக்கு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினே”

 

“அவங்க செஞ்சது சரியில்லைன்னு நீ சொன்னா, நீ செஞ்சது மட்டும் எப்படி சரின்னு நான் ஒத்துக்க முடியும்”

 

“நீ செஞ்சதுக்கு எல்லாம் ஏதாவது காரணம் சொல்லாதேடா!! நீ பொறுமையானவன்னு நினைச்சேன், இப்படி அவசரக்குடுக்கையா இருந்திட்டியே” என்றவரின் பேச்சில் இன்னமும் சமாதானம் வந்திருக்கவில்லை.

 

“அம்மா உனக்கு என்னை திட்டணும்ன்னா திட்டிக்கோம்மா… வேணும்ன்னா வாட்ஸ் அப்ல திட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்பு… நான் ஊருக்கு கிளம்பறேன்”

அன்னை சொல்வது நியாயம் போல தெரிந்தாலும் அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஏதோ தன்னை இன்னமும் குற்றவாளியாக்கி அவர் பேசுவது போன்ற உணர்வு தான் அவனுக்கு.

 

“டேய் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எனக்கென்னன்னு பதில் சொல்றியேடா!! நீ என்ன முடிவுல தான் இருக்கே!! எதையும் உருப்படியா செய்ய மாட்டியா!!”

 

“இப்போ என்ன தெரியணும் உங்களுக்கு??” என்று நேரடியாகவே கேட்டான்.

 

“அந்த பொண்ணோட நிலைமைடா??” என்றார் கேள்வியாய்.

 

“அவ இப்போவே என்னோட வருவாளா சொல்லும்மா, நான் போய் கூட்டிட்டு வர்றேன்”

 

“நீ செஞ்சு வைச்ச காரியத்துக்கு அவ ஆஹான்னு உன் கைப்பிடிச்சு வருவான்னு நினைப்பா உனக்கு”

 

“ம்மா… அப்போ நீ என்ன தான் சொல்ல வர்றே… நான் அவளோட வாழறதுக்கு ரெடியா தான் இருக்கேன். அவ வருவாளான்னு சொல்லு”

 

“நான் ஒண்ணும் அவளை அப்படியே விடணும்ன்னு நினைக்கலை. உடனே ஆரம்பிக்காதேம்மா அவ வரமாட்டான்னு. அவளுக்கு எப்போ வரணும்ன்னு தோணுதோ அப்போ வரட்டும்”

“நீ என்னடா!! அவளோட போனா போகுதுன்னு வாழறேன்னு சொல்ற மாதிரி சொல்லுற!! அவ சொல்லணும்டா இதை!!” என்று நன்றாகவே ஊசி ஏத்தினார் அவர்.

 

“அம்மா ஏன்மா என்னை குத்திக்காட்டணும்ன்னு முடிவு பண்ணியே செய்யறியாம்மா” என்று முறைத்தான் கண்மணியை.

 

“உண்மையை சொன்னா உனக்கு வலிக்குதா வேந்தா??”

 

“ரொம்ப பெரிய உண்மையை சொல்லிட்டீங்கம்மா… ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு… நான் ஒண்ணு நினைச்சு செஞ்சேன். அதுக்கு நீங்க என்னை நல்லா செய்யறீங்கம்மா…”

 

“இப்போ நான் என்ன பண்ணணும்?? சொல்லுங்கம்மா இப்போ நான் என்ன பண்ணணும்??”

 

“எல்லாம் எங்க இஷ்டப்படியா வேந்தா நடந்துச்சு”

 

“அப்போ நான் என்ன தான் செய்யணும்ன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க. அவ கால்ல போய் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா??”

 

“நான் அப்படி சொல்லலை வேந்தா… சும்மா இஷ்டத்துக்கு எல்லாம் சொல்லாதே”

 

“அப்போ… அப்போ நான் அவளுக்கு டிவோர்ஸ் கொடுக்கணுமா!! அதை தான் என் வாயால நான் சொல்லணும்ன்னு நீங்க விரும்புனீங்க போல. சரிம்மா டிவோர்ஸ் கொடுத்திர்றேன்!!”

 

“அப்போ சந்தோசமா இருக்குமா உங்களுக்கு” என்றவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததை அதை சொல்லும் போது.

 

தான் எதையோ நினைத்து செய்ய இப்படி எல்லாம் பூமராங் போல தன்னையே திருப்பி அடிக்கும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

 

மனம் வெறுத்து போனது அவனுக்கு. அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை அறையை விட்டு வெளியேறினான்.

 

கண்மணி பேச வந்ததை கூட அவன் கவனிக்கவில்லை. கோபம் கண்ணை மறைத்தது அவனுக்கு. அன்னை கூட தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் வேறு அவனை கரையானை போல அரித்தது.

 

அவன் அறைக்கு சென்ற சில மணி நேரங்களில் கரிகாலன் கதவை தட்டி உள்ளே வந்தார்.

 

மகனின் முகத்தை பார்த்தே அவருக்கு புரிந்தது அவன் இன்னமும் கோபமாய் இருக்கிறான் என்று. “வேந்தா நாளைக்கு ஊருக்கு போகணும்ன்னு சொன்னியாமே!!”

 

“ஹ்ம்ம் ஆமாப்பா!!”

 

“என் பிரண்டு ரயில்வேஸ்ல இருக்கான். நான் டிக்கெட் போட சொல்லட்டுமா??”

 

“வேண்டாம்ப்பா நானே ஆன்லைன்ல போட்டுக்கறேன்”

 

“இருக்கட்டும்ப்பா நான் என் பிரண்டுகிட்ட சொல்லி போடச் சொல்றேன். பகல்ல ட்ரைன்னா?? நைட்டா??”

 

இங்க இருந்து என்ன பண்ணப் போறோம் என்று எண்ணியவன் “நாளைக்கு காலையில ட்ரைன்ல கிடைச்சா கூட பாருங்கப்பா”

 

“கோவமா இருக்கியா வேந்தா??”. அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

 

“வேந்தா அம்மா பேசுனதை மனசுல வைக்காத… நடந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொண்ணோட நிலையில இருந்து யோசிச்சு பார்த்தா தான் புரியும்”

 

“கண்மணி அப்படி யோசிச்சதுல தப்பில்லை. நீ ஊருக்கு போ… நாங்களும் ரெண்டு நாள்ல கிளம்பிருவோம் பெங்களூர்க்கு… நீ லீவுக்கு வீட்டுக்கு வரும் போது ஆற அமர பேசிக்கலாம்” என்று முடித்தார் அவர்.

 

அவன் சரியென்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை.

 

அன்று இரவு அவன் ஊருக்கு செல்ல வேண்டிய டிக்கெட்டை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தவர் அவன் எதுவும் சொல்வானா என்று பார்க்க அவனோ அமைதியாய் இருந்தான்.

 

“நாளைக்கு வைகையில கிளம்புற மாதிரி எடுத்திருக்கேன். ஒன்பது மணிக்கு ட்ரைன்” என்றார் அவர்.

 

டிக்கெட்டை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டவன் ஊருக்கு கிளம்பும் வரை அவன் அன்னையுடன் பேசவேயில்லை.

 

மறுநாள் காலையில் ஸ்டேஷனுக்கு அவர்களும் கிளம்பியிருக்க “என்னப்பா புதுசா இருக்கு. நான் பெங்களுர்ல இருந்து வார வாரம் சென்னைக்கு போகும் போது ஒரு முறை கூட நீங்க வந்ததில்லை”

 

“இப்போ மட்டும் என்னோட வர்றீங்க??” என்றான் கேள்வியாய்.

 

“ஏன் நாங்க வரக்கூடாதா??” என்று கேட்ட கண்மணியை பார்த்து முறைத்தான்.

 

“அவன் அம்மா நானு… நான் வருவேன்… இப்போ என்ன?? அவன் என்னை வரவேணாம்ன்னு சொல்லிருவானா??”

 

“அப்பா இப்போ எதுக்கு அம்மா இப்படி பண்ணிட்டு இருக்காங்க…” என்று சலித்தவன் “என்னமோ பண்ணுங்க…” என்றான்.

 

அவன் ஸ்டேஷன் வந்த பின்னே தான் தெரிந்தது அவர்கள் எதற்கு அவனுடன் வந்தனர் என்று.

 

ஏசி சேர் காரில் புக் செய்திருந்தார் அவன் தந்தை. உள்ளே செல்லும் முன் வெளியில் அவர்கள் நின்றிருக்க ராஜம் தன் மகள் சகிதம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

‘இவங்க எதுக்கு வர்றாங்க??’ என்ற கேள்வியும் அவரின் அருகில் வந்தவளின் மீது பார்வையும் ஓடியது அவனுக்கு.

 

முதல் நாள் அன்னையிடம் பேசியது எல்லாம் கண் முன் ஓட பார்வையை வேறு புறம் திருப்பினான். ராஜத்துடன் வசந்தமுல்லையும் அமுதவல்லியும் உடன் வந்திருந்தனர்.

 

இவனை பார்த்ததும் அவள் திருதிருவென விழித்தாள். அவனும் பையுடன் இருப்பதை பார்த்ததும் ‘இவரும் வர்றாரா… அப்பாடா அப்போ நிம்மதியா தூங்கலாம்’ (அவனவனுக்கு அவனனவன் கவலை) என்று தான் எண்ணினாள்.

 

அருகே வந்திருந்த ராஜம் அவனை குசலம் விசாரித்துக் கொண்டார். “எப்படியிருக்கீங்க தம்பி?? உடம்பு தேவலாமா??”

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்…”

 

“நீங்களும் ஊருக்கு போகறீங்கன்னு காலன் சொன்னான். இவளுக்கும் நாளைக்கு காலேஜ் போகணுமாம்”

 

“அதான் உங்களோடவே அனுப்பிடலாமேன்னு தம்பியை டிக்கெட் போட சொல்லிட்டேன்” என்று அவர் சொன்னதும் அவசரமாய் அவன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்தான்.

 

முதல் நாள் தந்தை டிக்கெட்டை கொடுத்தும் அதை கவனிக்காமல் கூட வாங்கி வைத்திருந்தான். கரிகாலன் சற்று நின்றபோது கூட அவன் எதுவும் சொன்னானில்லை.

 

அவன் தான் டிக்கெட்டை பார்க்கவேயில்லையே… ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது பார்த்தான் தான். ஆனால் வெறுமே எந்த கோச் என்று பார்த்திருந்தான் அவ்வளவே.

 

இருவருக்குமாய் என்பதை இப்போது தான் பார்க்கிறான். ஏனோ சட்டென்று மனதில் ஒரு மகிழ்ச்சி ஊற்று பொங்கியது.

 

அது ஏனென்று அவனுக்கே புரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன்.

 

‘அடராமா இந்த அம்மா என்னை ப்ளான் பண்ணி தான் இவரோட அனுப்புதா’ என்ற எண்ணம் வந்ததும் வசந்தமுல்லை முறுக்கினாள். அன்னையை தனியே தள்ளிச் சென்றாள்.

முல்லைக்கு அவள் அன்னை வேண்டுமென்றே அவனுடன் பயணம் செல்ல டிக்கெட் போட்டது அப்போது தான் புரிந்தது.

 

“அம்மா நீ வேணுமின்னு தான் இப்படி டிக்கெட் போட்டியா?? ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லலை?? நான் இவரோட போகமாட்டேன்” என்று அன்னையின் காதை கடித்தாள்.

 

“சரி போகாதே என்னோடவே இரு. நாம அடுத்த வாரம் சேர்ந்து போவோம்” என்றார் அவர் அலட்டாமல்.

 

“ம்மா ஏம்மா படுத்தறே??”

 

“நீ தான் விளையாடுற… தனியா உன்னை அனுப்பணுமேன்னு பயந்திட்டே இருந்தேன்”

 

“காலன் தான் வேந்தன் தம்பியும் ஊருக்கு கிளம்பறதா சொன்னான் சரின்னு உனக்கும் சேர்த்து டிக்கெட் போடச் சொன்னேன்…”

 

“ஏம்மா அவரையே எனக்கு இப்போ தான் தெரியும். எந்த நம்பிக்கையில அவரோட என்னை போகச் சொல்லுறே??” என்றவளை முறைத்தார் ராஜம்.

 

“உன்னை கூட்டிப்போக வேந்தன் தம்பி தான் யோசிக்கணும். நீ எதுக்கு யோசிக்கறே?? ஊர்ல இருந்து வரும் போது நம்மோட தானே வந்தாங்க… பார்த்த தானே அவங்களை…”

 

“நல்ல பொறுப்பானவர் தான்… அதுவுமில்லாம என் தம்பி பையன் அந்த நம்பிக்கையும் இருக்கு எனக்கு”

 

“நீ போறதுன்னா இப்போவே கிளம்பு. இல்லைன்னா போகாதே எனக்கும் ரொம்ப நிம்மதியா இருக்கும்” என்று முடித்தார்.

 

“நீங்க வேணுமின்னே பண்ணுறீங்க” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.

 

“ட்ரைன் கிளம்ப போகுது உள்ள ஏறு…” என்று மகளிடம் சொன்னவர் பல அறிவுரைகளையும் சேர்த்து சொல்ல அவளுக்கு ரத்தமே வந்துவிட்டது காதிலிருந்து.

 

கண்மணி மகனுடன் பேசவேயில்லை. மருமகள்களிடம் தான் பேசிக் கொண்டிருந்தார்.

 

“இவளை கொஞ்சம் வீட்டில விட்டுட்டு மட்டும் போய்டுங்க தம்பி. அப்போ தான் எனக்கு நிம்மதியே!!”

 

‘இவருக்காச்சும் நம்ம மேல நம்பிக்கை இருக்கே’ என்று எண்ணிக்கொண்டவன் “ஹ்ம்ம் சரிங்க அத்தை” என்றிருந்தான்.

 

ரயில் கிளம்பும் தருவாயில் கண்மணி அவனருகே வந்தார். “பார்த்து பத்திரமா கூட்டிட்டு போடா அவளை” என்றவரை பார்த்து முறைத்தான்.

 

“இல்லை பாதியிலேயே இறக்கிவிட்டுடுவேன்” என்று விதண்டாவாதம் செய்தான்.

“நீ உன் இஷ்டத்துக்கு தானே எல்லாம் செய்வே… நான் சொல்லி கேட்க போறியா என்ன??”

 

“நீயே தாலியும் கட்டுவே, நீயே டிவோர்ஸ் பண்ணுறேன்னு பெரிய வார்த்தையும் பேசுவ…” என்ற குத்தலுடன் முதல் நாள் போலவே ஆரம்பித்தார்.

 

“அம்மா மறுபடியும் ஆரம்பிக்காதேம்மா… அப்பா உன்னை கூப்பிட்டார் உனக்கு பிடிச்சதாலே நீ அவர் பின்னாடியே போனே”

 

“நான் அப்படி செய்யலை… அவ்வளவு தான் வித்தியாசம்… திரும்ப திரும்ப இப்படி பண்ணிட்டன்னு கேட்காதேம்மா” என்றான்.

 

கண்மணிக்கு இப்போது குழப்பம் ‘என்ன சொல்கிறான் இவன்?? இவன் தந்தை என்னை விரும்பினார் நான் உடன் சென்றேன். இவன் அப்பெண்ணை விரும்புகிறானா?? இல்லையா??’ பெரும் யோசனை அவருக்கு.

 

அன்னையை குழப்பிவிட்டவன் தன் மனைவியுடன் ரயிலில் ஏறினான். இருவர் மட்டுமே அமரும் இருக்கை அது. அவர்கள் சீட்டை தேடி அதில் சென்று அமர்ந்தனர் இருவரும்…

 

Advertisement