Advertisement

அத்தியாயம் – 5

 

அவளிடம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தவரை “உட்காருங்க” என்று சொல்லி கட்டிலை காட்டினாள்.

 

“நீ இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா” என்றார்.

 

“இல்லை பரவாயில்லை”

 

“பார்மாலிட்டி எல்லாம் வேணாம் நீ வா” என்று கை காட்டினார் அவர் அருகில் அமருமாறு..

 

அதற்கு மேல் எதுவும் மறுப்பு சொல்லாமல் சென்று அமர்ந்தாள்.

 

அங்கு சிலநொடி கனத்த அமைதி. எப்படி ஆரம்பிப்பது என்று கண்மணி அமர்ந்திருக்க என்ன சொல்லுவாரோ என்று முல்லை அமர்ந்திருந்தாள்.

 

கண்மணி பேச ஆரம்பிக்கும் முன் முல்லையே ஆரம்பித்திருந்தாள். “உங்களுக்கு எங்க மேல கோபம்??” என்று.

 

“உன் மேலயா?? நான் எதுக்கும்மா?? அதுக்கு அவசியமே இல்லையே… தப்பு எங்க மேல இருக்கும் போது”

 

“இல்லை அது வந்து… உங்களை மதிக்கலைன்னு பேசலைன்னு…” என்று அவள் இழுத்ததுமே புரிந்தது அவள் எங்கு வருகிறாள் என்று. உண்டு அவருக்கு லேசாய் மனதில் ஒரு வருத்தம் உண்டு தான். பெரியவர்களுக்குள் பேசித் தீர்க்க ஆயிரம் இருக்கிறது தான். சின்னப்பிள்ளைகளுக்கு என்ன வந்தது என்ற எண்ணம் உண்டு தான்.

 

அந்த வருத்தம் முல்லை மீது மட்டுமல்ல. அமுதவல்லி, குமுதவல்லியின் மீதும் தான் அவருக்கு. சிறு பிள்ளைகள் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுவிட்டார் அவர்.

 

“நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது அத்தை. நாங்க செஞ்சது தப்பு தான் ஆனா வேணுமின்னு எல்லாம் செய்யல”

 

“எங்களுக்கு நிஜமாவே உங்களை முன்னப்பின்ன தெரியாது. முதல் முறையா உங்களை நாங்க இங்க தான் பார்த்தோம். நீங்க தான் மாமாவோட வைப்ன்னு அப்போ தான் தெரியும்”

 

“மாமாவையாச்சும் நான் இங்க இருக்கற போட்டோஸ்ல பார்த்திருக்கேன். ஒரு முறை அவங்க தாத்தாவை பார்க்க வந்த போது கூட பார்த்த ஞாபகம்”

 

“உங்களை நாங்க கண்டுக்கலைன்னு உங்களுக்கு கொஞ்சம் வருத்தமாயிருக்கலாம்…” என்றுவிட்டு அப்படியே நிறுத்தினாள்.

 

“எனக்கு தெரியும் அத்தை உங்களுக்கு சங்கடமா இருக்கும்ன்னு. ஆனா எங்கம்மா சொல்லியிருக்காங்க துக்க வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கேட்க கூடாதாமே!! அதுவும் கூட ஒரு காரணம் தான்”

 

“கொஞ்ச வருஷம் முன்னாடி லூசுத்தனமா ஒரு டெத்ல வைச்சு எங்க சொந்தக்காரங்க ஒருத்தரை வாங்க வாங்கன்னு சொல்லிட்டேன்…”

 

“அதுக்கு எங்கம்மா என்னை ரவுண்டு கட்டி அடிச்சாங்க. அப்படி எல்லாம் கேட்க கூடாதுன்னு”

 

“நான் கூட கேட்டேன் ஏம்மா போன வாரம் நாம போன ஷர்மி அக்கா கல்யாணத்துல நான் யாரையும் வாங்கன்னு சொல்லலைன்னு என்னை அவ்வளவு திட்டினீங்களே இப்போ நீங்களே இப்படி சொல்றீங்களேன்னு” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த தினுசில் கண்மணிக்கு இதழோரத்தில் லேசாய் ஒரு சிரிப்பு படர்ந்தது.

 

“அப்புறம் தான் அம்மா விளக்கம் கொடுத்தாங்க… வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்டு உபசரிக்கணும், எங்காச்சும் வெளிய போனா தெரிஞ்சவங்களை பார்த்து நலம் விசாரிக்கணும்ன்னு”

 

“துக்க வீட்டுல மட்டும் அதை செய்யக் கூடாதுன்னு!!” என்று விளக்கம் சொன்னாள்.

 

‘இல்லைன்னா நீ பேசியிருப்பியா!!’ என்று கேட்கத் தோன்றியது கண்மணிக்கு.

 

“அப்பா இருக்க வரை இப்படி எங்கயும் நாங்க போனதில்லை. அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா எங்களை தனியாவிட்டு எங்கயும் போனதில்லை”

 

“அப்படி ஒரு முறை அவங்களோட போனப்போ தான் நான் இந்த லூசு வேலை செஞ்சேன்” என்று பெருமை போல சொன்னாள்.

 

“அப்புறம் கூட நாங்க ஏன் பேசலைன்னு உங்களுக்கு தோணியிருக்கும் தானே. இல்லைன்னு நீங்க தலையாட்டினாலும் இருக்கும்ன்னு தெரியுது”

 

“வீட்டில இருந்து கிளம்பும் போதே அம்மா சொல்லி தான் அனுப்பினாங்க. அங்க அத்தை வருவாங்க நீங்க பேசணும்ன்னு ஆனா வந்த இடத்தில என்னென்னமோ ஆகிப்போச்சு” என்றவளின் முகம் வாடியது.

 

நடந்ததை நினைக்கிறாள் போலும் என்று எண்ணினார் கண்மணி.

 

‘இவள் சிறுபெண்ணா இல்லை வளர்ந்த குழந்தையா!! விவரமாக பேசுவது போலவும் இருக்கிறது இல்லாதது போலவும் இருக்கிறது’ என்று தோன்றியது அவருக்கு.

 

‘இயல்பாக பேசக்கூடியவள் தான் போல. வாயே அதிகம் திறக்காத வேந்தன் அதிகம் பேசியே அவர் இங்கு தான் கண்டார்’

 

‘இவள் நன்றாகவே பேசுகிறாள். பொருத்தம் தான் இருவருக்கும்’ என்று கணக்கு போட்டாலும் இதில் முடிவை அவள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 

தான் வந்த காரணம் நினைவு வர அவளிடத்தில் பேச்சை ஆரம்பித்தார்.

 

“என் பையன் செஞ்சது ரொம்பவே தப்பு தான்மா. அதுக்காக நீ என்னை மன்னிக்கணும்”

 

“மன்னிக்க முடியாத தப்புக்கு நான் இப்படி கேட்குறது சரியில்லை தான். இருந்தாலும் கேட்கறேன்…”

 

“இந்த விஷயத்துல நீ என்ன முடிவெடுக்குறயோ நீ சுதந்திரமா எடுக்கலாம். நாங்க அதுக்கு கட்டுப்படுவோம்”

 

அதுவரையிலும் கண்மணியிடம் சகஜமாய் பேசிக் கொண்டிருந்த முல்லை காணாமல் போயிருந்தாள்.

 

கழுத்தின் கனம் இப்போது அவள் நெஞ்சிலும். அதைப்பற்றிய முடிவை அவள் எடுக்க வேண்டுமா!! என்னை கேட்டு தான் அது நடந்ததா!!

 

‘எனக்கு மட்டும் ஏன் அப்படி?? உங்கள் மேலிருந்த கோபத்தை என் மேல் அவர் எப்படி காட்டலாம்’ என்ற வீம்பு அவள் மனதில்.

 

“என்னம்மா எதுவும் பேசாமே இருக்கே?? உன்னை நாங்க யாரும் வற்புறுத்த மாட்டோம். நீ…” என்று கண்மணி பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்திருந்தார் ராஜம்.

 

“கண்மணி கொஞ்சம் பேசாம இரு”

 

“இல்லை அண்ணி… நான் சொன்னது தான் அவளுக்கு என்ன விருப்பமோ அது தான்… அவளை நீங்க யாரும் கட்டாயப்படுத்த கூடாது” என்று முல்லைக்காக பேசினார்.

 

“கண்மணி கொஞ்சம் இரு…” என்று கையமர்த்தியவர் மகளை திரும்பி பார்த்தார்.

 

“வசந்தி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. நிமிர்ந்து என்னை பாரு” என்று சொல்ல அவளும் நிமிர்ந்து அன்னையை நோக்கினாள்.

 

“நீ யாரையாச்சும் விரும்பறியா??”

 

“ம்மா…” என்று முறைத்தாள்.

 

“கேட்டதுக்கு ஆமா இல்லைன்னு ஒரு வரியில பதில் சொல்லு”

 

“இல்லை” என்றவளின் குரலில் எரிச்சல் சேர்ந்திருந்தது.

 

“ஏன்??”

 

“இதென்னம்மா கேள்வி?? ஏன்னு கேட்குற?? எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண உனக்கு தெரியாதா… புதுசா கேட்குற… நான் எப்பவோ உன்கிட்ட சொல்லிட்டேன், எனக்கு லவ் பண்ணுற ஐடியா எல்லாம் இல்லைன்னு” என்று பொரிந்தாள் அவள்.

 

‘கேட்டியா…’ என்பது போல் ஜாடை காட்டினார் கண்மணியிடம். இதில் என்ன இருக்கிறது என்பதாய் பார்த்தார் கண்மணி. ராஜம் மகளிடம் தொடர்ந்தார்.

 

“அப்போ இந்த கல்யாணத்தை பத்தி நீ என்ன நினைக்கிறே??”

 

“நினைக்க என்ன இருக்கு?? எனக்கு எரிச்சலா இருக்கு?? யாரை கேட்டு எனக்கு தாலி கட்டுனார் அவர்?? எனக்கு கோபமா வருது??” என்று அப்பட்டமாய் கோபத்தை முகத்தில் காட்டினாள்.

 

“உங்க எல்லார் மேல இருக்க கோவத்தை என் மேல காட்டிட்டு போய்ட்டார்ல அவர். நான் தான் பலியாடா உங்களுக்கு” என்று சற்று முன் மனதில் நினைத்ததை சொன்னவளுக்கு கண்ணில் நீர் குளம் கட்டியது இயலாமையில்.

 

“சரி இப்போ நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா??”

 

“இன்னும் என்னம்மா இருக்கு சொல்றதுக்கும் கேக்குறதுக்கும்?? என்னை கேட்டு எதுவும் நடக்கலையே!! நினைக்காதது எல்லாம் தான் நடந்திடுச்சே”

 

“அதெல்லாம் விடு…. நீ கேப்பியா?? மாட்டியா??”

பதில் சொல்லவில்லை அவள், வெறுமே பார்த்திருந்தாள் என்ன கேட்கணும் என்பது போல்.

 

“அவர் தான் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு வைச்சுக்க. தாலி கட்டினது கட்டினது தான். உன் மனசு எப்போ இது சரின்னு சொல்லுதோ அப்போ நீ உன் வாழ்க்கையை தொடங்கு. அதுவரை என் பேச்சை கேளு” என்று முடிவாய் சொன்னார்.

 

“அண்ணி என்ன பேசறீங்க நீங்க??” என்று தடுத்த கண்மணியை “முதல்ல நாம வெளிய போவோம்” என்றுவிட்டு கண்மணியை கையோடு வெளியில் இழுத்துச் சென்றாள்.

 

அமுதாவும் குமுதாவும் கூட கண்மணியிடம் வந்து பேசினார்கள். அவர்களும் மன்னிப்பு கேட்கவும் அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது. கண்மணி இதை எதிர்ப்பார்க்கவில்லை.

 

அன்று அங்கேயே தங்கச் சொன்னவர்களிடம் “வேந்தன் என்ன பண்ணுறான்னு தெரியலை. ஊருக்கு போறேன்னு சொன்னான். அவனை போய் பார்க்கணும்”

 

“நாங்க கிளம்பறோம்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியவர்கள் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

 

வந்ததும் மகனின் அறைக்கதவை தட்ட அவன் திறந்த பாடில்லை. அவன் கைபேசிக்கு அழைப்பு விடுத்து அதும் அடித்து ஓய்ந்தது.

 

உள்ளே கைபேசி ஓசை கொடுப்பதை கேட்டனர். லேசாய் ஒரு பதட்டம் பெற்றவர்களிடத்தில்.

 

இன்னும் ஒரு முறை தட்டிப்பார்ப்பது இல்லையென்றால் ரிசெப்ஷனில் சொல்லி அறைக்கதவை உடைப்பதென்று.

 

கரிகாலன் மீண்டுமொரு அழைப்பை மகனுக்கு விடுத்தார். இம்முறை அவன் மெதுவாய் எழுந்து வந்து கதவை திறந்திருந்தான்.

 

“என்னாச்சு வேந்தா??” என்று கண்மணி கேட்கும் போதே அவனால் நிற்க கூட முடியவில்லை.

 

அவர்களுக்கு பதில் கூட சொல்லத் தோன்றாமல் மெதுவாய் வந்து கட்டிலில் விழுந்தான் மீண்டும்.

 

என்னாச்சு என்று பதறிப்போய் அவன் நெற்றியை தொட்டுப் பார்க்க அது அனலாய் காய்ந்தது.

 

அவன் நெற்றிக் காயம் வேறு ஆறாமல் பழுத்திருந்தது. ‘அச்சோ நானும் இதை சரியா கவனிக்காம விட்டேனே!!’

 

அதற்குள் கரிகாலன் ஹோட்டல் ரிசெப்ஷனுக்கு அழைத்திருந்தார், மருத்துவர் இருந்தால் அறைக்கு அனுப்புமாறு.

 

ரிஷப்ஷனில் இருந்து அழைத்தவர்கள் ஹோட்டல் மருத்துவர் இல்லையென்று விட அருகில் இருந்த ஒரு மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கு சென்று பார்க்க சொன்னார்கள்.

“என்னாச்சுங்க டாக்டர் வர்றாங்களா??”

 

“இல்லை பக்கத்துல ஆஸ்பிட்டல் இருக்காம். அங்க வேணா போங்கன்னு சொல்றாங்க” என்றதும் கண்மணிக்கு கவலையாய் இருந்தது.

 

“என்னங்க இவனால எழுந்திருக்க கூட முடியலையே!! என்ன செய்ய?? எப்படி டாக்டர்கிட்ட கூட்டிப் போக??”

 

“நான் ஆஸ்பிட்டல் போய் கேட்டு பார்க்கறேன்” என்றுவிட்டு அவர் அறையில் இருந்து வெளியில் சென்றவர் அடுத்த அரைமணியில் மருத்துவர் ஒருவருடன் உள்ளே நுழைந்திருந்தார்.

 

கண்மணிக்கு அப்போது தான் நிம்மதியே!! மருத்துவருக்கு எழுந்து இடம் கொடுக்க அவர் அவனை பரிசோதித்தார்.

 

“இந்த அடி எப்படி பட்டுச்சு??”

 

“தெரியலை டாக்டர்… இவன் சென்னையில இருந்து வரும் போதே இருந்துச்சு. தெரியாம இடிச்சுக்கிட்டேன்னு சொன்னான்” என்று பதில் கொடுத்தார் கண்மணி.

 

“ஏதோ ஷார்ப் எட்ஜ் பட்டு ஆழமா காயமாகியிருக்கு. டிரெஸ்ஸிங் பண்ணாம இருந்திருக்கார். டேப்லெட்ஸ் எடுத்தாரா ஒழுங்கா??”

 

கண்மணிக்கு அதெல்லாம் தெரியாதே!! அவர் வந்த இடத்தில் வேறு எண்ணத்தில் இருந்ததால் இதையெல்லாம் சரியாய் கவனிக்கவில்லை.

 

அங்கிருந்த பத்து நாட்களும் வேந்தனும் அலுவலக வேலை என்று அறைக்குள்ளேயே இருந்து கொள்வான். அவனை தொந்திரவு செய்யக் கூடாதென்று அவரும் எதுவும் கேட்கவில்லை.

 

உணவருந்தும் நேரத்தில் மட்டுமே அவனை அழைப்பதும் கவனிப்பதுமாய் இருந்ததில் காயத்தை மறந்திருந்தார்.

 

“பீவர் அதனால தான் வந்திருக்கு. செப்டிக் இன்ஜெக்ஷன் போடுறேன், பீவர் குறையறதுக்கும் சேர்த்து போடுறேன்” என்றவர் அவன் காயத்திற்கு மருந்திட்டு  மருந்தெழுதி கொடுத்தார்.

 

“ஹி மே பி ஆல்ரைட் டுமாரோ… டோன்ட் வொர்ரி” என்றுவிட்டு கிளம்பினார்.

 

கண்மணி அன்று இரவு மகனுடனே இருந்து அவனை கவனித்துக் கொண்டார். மருந்தின் தாக்கத்தில் அவன் நன்றாய் உறங்கினான்.

 

காலையில் பத்து மணி வாக்கில் தான் கண் விழித்தான் வேந்தன். அருகில் அமர்ந்திருந்த அன்னையை கண்டதும் “என்னம்மா இங்க இருக்கீங்க??” என்றான்.

 

“என்னாச்சுடா உனக்கு?? நேத்து வரும் போது நீ கதவை கூட திறக்கலை. எப்படியோ வந்து திறந்திட்ட, பார்த்தா அவ்வளவு ஜுரம்”

 

“இந்த காயம் எப்படியாச்சு உனக்கு?? இதுக்கு நீ ஒழுங்கா கட்டுப்போடலைன்னு டாக்டர் சொன்னார். அதுனால தான் காய்ச்சல்னு சொன்னார்”

 

“ம்மா இப்போ நல்லா தான் இருக்கேன் நானு. நேத்து ரூம்க்கு வரும் போதே முடியலை. கொஞ்சம் படுக்கலாம்ன்னு படுத்தது தான் தெரியும். நீங்க வந்தப்போ கூட கதவை திறந்த வரை தான் ஞாபகம் இருக்கு” என்றான்.

 

“பயந்திட்டேன்டா வேந்தா…”

 

“ஒண்ணுமில்லைம்மா அப்பா எங்கே??”

 

“உனக்கு டிபன் வாங்கிட்டு வரச்சொன்னேன். அதான் போயிருக்கார்…”

 

கரிகாலன் கையில் பார்சலுடன் உள்ளே நுழைந்தார். “எப்படி இருக்கே வேந்தா??” என்றவரின் முகத்தில் கவலை தெரிந்தது.

 

“ஐ யம் ஓகே நவ்ப்பா”

 

“கண்மணி!! அக்கா போன் பண்ணியிருந்தாங்க. வேந்தனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னேன். அவங்க வர்றேன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல வருவாங்கன்னு நினைக்கிறேன்”

 

“ப்பா… எதுக்கு இதெல்லாம் அவங்ககிட்ட சொன்னீங்க??” என்று அங்கலாய்த்தான் மகன்.

 

“ஆமாங்க எதுக்கு போய் சொல்லிக்கிட்டு அவங்களை அலையவிடுறீங்க…”

 

“நானா போன் பண்ணி சொன்ன மாதிரி சொல்றீங்க… அவங்க பண்ணாங்க சொன்னேன். உன்கிட்டயும் இவன்கிட்டயும் பேசணும்ன்னு கேட்டாங்க. அப்போ தான் சொன்னேன்”

 

“என்கிட்டயா?? என்கிட்ட என்ன பேசணும்??”

 

“அது பார்மாலிட்டியா பேசுவோம்ல எப்படி இருக்கேன்னு அதுவா இருக்கும்” என்றுவிட்டு கண்மணிக்கு ஜாடை காட்டினார்.

 

“இவனை சாப்பிட வைக்குறேன்” என்ற பதிலில் கணவருக்கு சேதி இருக்க அவர் வெளியில் சென்றார்.

 

வேந்தன் எழுந்து பல் துலக்கி காலைக்கடன் எல்லாம் முடித்து வந்தான். கண்மணி டிபன் கொடுக்க சாப்பிட்டு மாத்திரையை விழுங்கினான்.

 

ஜுரம் முற்றிலும் விட்டாலும் அவனுக்கு அலுப்பிருந்ததது. “அம்மா நான் கொஞ்சம் படுக்கறேன். நீங்க வெளிய போறதுன்னா கதவை சாத்திட்டு போங்க”

“நீ படுத்துக்கோ வேந்தா… நான் அப்பா வந்ததும் போறேன்” என்றுவிட்டு அவர் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அவன் உறங்கவும் ராஜமும் தன் அன்னை தவிர்த்து மற்றவர்களுடன் உள்ளே நுழைந்தார்.

 

“வாங்க வாங்க…” என்று வரவேற்றார் கண்மணி.

 

“என்னாச்சு திடிர்னு??”

 

“ஒண்ணுமில்லை இவன் தலையில ஒரு காயமாகிடுச்சு. அதை தான் கவனிக்காம விட்டிருக்கான். காயம் பழுத்து ஜுரத்துல விட்டிருச்சு”

 

“டாக்டர் என்ன சொன்னாங்க?? அவர்க்கு இப்போ எப்படி இருக்கு??” கேட்ட வசந்தமுல்லையை ஆச்சரியமாய் பார்த்தனர் மற்றவர்கள்…

 

கண்மணி சொன்னதை கேட்ட வசந்தமுல்லைக்கு குற்றவுணர்ச்சி ஆகியது, மனம் வருந்த ஆரம்பித்தது. ‘அச்சோ என்னால தானே அவருக்கு இப்படியாச்சு’ என்று கவலைக்கொண்டாள்…

 

“இன்ஜெக்ஷன் போட்டிருக்கார், இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லாம தான் இருக்கான். கொஞ்சம் டயர்டா இருக்குன்னு தான் தூங்குறான்” என்று பதில் கொடுத்தார் கண்மணி.

 

அவர்களின் பேச்சு அவனுக்கு தொந்திரவாக இருக்கும் என்று எண்ணி ராஜம் மெதுவாய் பேச “நாம அந்த ரூம்க்கு போய்டுவோம், நீங்க வாங்க” என்று எழுந்திருந்தார் கண்மணி.

 

“இல்லை அப்போ மருமகன் கூட யாராச்சும் ஒருத்தர் இருப்போமே” என்ற ராஜத்திடம் “ஏம்மா நீ இங்க இரும்மா… நான் மாமாவை அனுப்பறேன் கொஞ்ச நேரத்துல அவர் வந்ததும் நீ வந்திடு” என்று வசந்தமுல்லையிடம் சொன்னது கண்மணியே.

 

சொல்லிவிட்டு ராஜத்தை பார்க்க அவரும்
“ஆமா வசந்தி நீ இங்க இரு, எனக்கும் உங்க அத்தைக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. போய் பேசிட்டு வந்திடறோம்” என்று நகர்ந்தனர்.

 

வீட்டில் பாட்டிக்கு துணையாய் குமுதாவை விட்டு வந்திருந்தனர். “அம்மா அம்முவை என் கூட விட்டுப் போங்க…” என்றுவிட்டு அமுதாவை பார்த்தாள்.

 

“என்ன பார்க்கறீங்க?? நீங்க பெரியவங்க பேசும் போது அவ என்ன பண்ணுவா… அவ என் கூட துணைக்கு இருக்கட்டும்” என்றுவிட்டு அமுதாவை பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.

 

அவர்கள் எதையோ நினைத்து செய்ய மகள் தெளிவாய் இருந்ததில் ராஜம் ஒன்றும் பேச முடியவில்லை. கண்மணியும் “ஆமா ரெண்டு பேரும் இருக்கட்டும்” என்றார் மருமகளின் முகம் பார்த்து.

 

அவர்கள் அப்புறம் சென்றதும் அமுதா ஆரம்பித்தாள். “ஏன் வசந்தி என்னை இருக்க வைச்சே??”

 

“பெரிசுங்க ஏதோ ப்ளான் பண்ணுதுங்க… அதை தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டியே??” என்று வசந்தமுல்லையை பார்த்து கேட்டாள் அமுதவல்லி.

 

“அப்படியா அம்மு சொல்றே?? நான் அவங்க என்னை இருக்க வைச்சதே பிளானோன்னு தான் உன்னைய இங்க இருக்க வைச்சேன். இப்போ என்ன செய்ய??” என்று கேட்டவளை முறைத்தாள் மற்றவள்.

 

“ஹ்ம்ம் இப்போ வந்து கேளு என்ன செய்யன்னு நீயெல்லாம் அதுக்கு சரியா வரமாட்டே!! உன்னை போய் எப்படி தான் இவரு கட்டினாரோ??” என்று கட்டிலில் இருப்பவனை சுட்டிக்காட்டி சொன்னாள்.

 

“ஏன்டி இப்போ கத்துறே?? எழுந்து வைக்க போறார்… எனக்கென்னடி குறைச்சல். எதுக்கு அப்படி சொன்னே??” என்று அவளை முறைத்தாள்.

 

“இவர் தூங்கிட்டு தானே இருக்கார். நீ கொஞ்ச நேரம் இங்க பார்த்துக்கோ நான் அப்படியே ஒரு வாக் போயிட்டு அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டு வர்றேன்” என்றவள் எழுந்து வெளியில் சென்றாள்.

 

“அம்மு சொல்றதை கேளு இங்க இரு…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் சென்றுவிட்டிருந்தாள்.

 

“யாருமே நம்மை மதிக்கிறதே இல்லை…” என்று முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

 

உறங்கும் அவன் மேல் பார்வையை பதித்தாள். நெற்றில் இருந்த காயம் இன்னமும் குற்றவுணர்வை கொடுக்க பார்வையை வேறு புறம் திருப்பியவளுக்கு எதுவோ தோன்ற அவனை பார்த்தாள்.

 

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘இப்போ தான் முழிச்சாரா!! இல்லை தூங்கின மாதிரி எதுவும் நடிச்சாரா!!’ என்ற கேள்வி அவளுக்குள்.

 

அவன் முகத்தில் தெரிந்த களைப்பில் ’ச்சே!! ச்சே!! அப்படியெல்லாம் இருக்காது. நம்ம கற்பனை’ என்று எண்ணிக் கொண்டவள் எழுந்து அவனருகே வந்தாள்.

 

“அத்தையை கூப்பிடணுமா?? இல்லை உங்களுக்கு எதுவும் வேணுமா??” என்றவளை இமைக்காது பார்த்தான். லேசாய் உதடு வளைந்தது அவனுக்கு.

 

அதை அவள் உணரும் முன்னே மறைத்தவன் “கொஞ்சம் அந்த மருந்து எடுத்து இங்க தடவி விடு”

 

“என்ன??” என்றவள் இரண்டடி பின்னே நகர்ந்தாள்.

 

“என்ன?? என்னன்னு கேக்குற?? இந்த காயத்துக்கு நீ தானே காரணம்” என்று அவன் சொன்னதும் திக்கென்றிருந்தது அவளுக்கு.

 

எச்சில் கூட்டி விழுங்கியவள் ‘தெரிஞ்சு போச்சா இவனுக்கு’ என்ற ரீதியில் அவனை பார்த்தாள் கண்ணில் ஒருவித கலவரத்துடன்.

 

“நான்… அது வந்து… நான்… அடி…”

 

“நீ தானே அன்னைக்கு ஸ்டேஷன்ல வைச்சு இடிச்சிட்ட, ஒத்துக்கறேன் நீ தெரியாம தான் இடிச்சே!! ஆனா அது ஆறியிருந்த புண்ணை கிளறிவிட்டுச்சு”

“உங்களுக்கு எப்படி அடிப்பட்டுச்சு…” அவனுக்கு தெரியுமாவென்று பார்க்க கேட்டாள்.

 

“தெரியலை… பஸ் ஸ்டான்ட்ல நின்னுட்டு இருக்கும் போது. எதுவோ வந்து என் தலையில நச்சுன்னு பட்ட ஞாபகம் மட்டும் தான் இருந்துச்சு. உடனே ரத்தம் கொட்ட ஆரம்பிச்சதுல என்ன விழுந்துச்சுன்னு நான் கவனிக்கவே இல்லை”

 

“அப்புறம் ஒருத்தர் தான் அது கால்குலேட்டர்ன்னு பார்த்திட்டு சொன்னார். உடைஞ்சு போனது போல அதை தூக்கி கீழே போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

 

“என்ன கொஞ்சம் வேகமா எறிஞ்சுட்டாங்க போல அது என் மேல விழுந்திட்டு. அந்த கால்குலேட்டரோட ஷார்ப் எட்ஜ் பட்டு தான் இந்த காயம்” என்று நீளமாய் விளக்கம் சொன்னான்.

 

‘அப்பாடா இப்படியே மெயின்டெயின் பண்ணிக்கட்டும், தெரியாம போட்டாங்கன்னு. தெரிஞ்சு போட்டேன்னு தெரிஞ்சா என்னாகுமோ’ என்று மனதிற்குள்ளாகவே பேசிக்கொண்டாள்.

 

“மருந்து போட்டு விட மாட்டியா!! வலிக்குது எனக்கு”

 

“அத்தையை கூப்பிடறேன்”

 

“உன்னால தானே எல்லாம் நீ இப்போ போடுறே!!” என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் மருந்து எங்கே என கேட்டு அதை எடுத்து அவனுக்கு தடவிவிட்டாள். அவள் தடவும் போது அவனை பார்க்காமல் விட்டுவிட்டாள்….

 

Advertisement