Advertisement

அத்தியாயம் – 4

 

வேந்தனின் செய்கையை தூரத்திலேயே பார்த்து விட்டிருந்த கண்மணி வேகமாய் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.

 

கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவர், அங்கேயே அவனை மாறி மாறி அறைந்தார்.

 

“என்னடா நினைச்சுக்கிட்டு உன் மனசுல?? என்ன காரியம் செஞ்சு வைச்சிருக்கே??” என்றவருக்கு கோபமும் அழுகையும் வந்தது.

 

தன் கணவரை திரும்பி பார்க்க கரிகாலன் ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்.

 

கண்மணிக்கு மகன் செய்த செயல் குறித்த கவலை அப்பட்டமாய் அவர் முகத்தில் தெரிந்தது.

 

அதற்கு மாறாய் வேந்தனோ கொஞ்சமும் வருத்தம் கொள்ளவில்லை அவன் செய்த காரியத்திற்கு.

 

திமிராய் நின்றிருந்தான், அவன் அன்னை எல்லோர் முன்னும் அடித்துவிட்டது தான் அவனுக்கு அவமானமாய் போயிருந்தது.

 

மற்றபடி வேறு எதற்கும் அவன் கவலை கொள்ளவில்லை. அதற்குள் அங்கு புஷ்பாவும் ராஜமும் வந்திருக்க வசந்தமுல்லை அழுதுக்கொண்டே அவள் அன்னையின் தோள் சாய்ந்திருந்தாள்.

நல்லவேளையாக கோவிலுக்கு அவர்கள் குடும்பம் மட்டுமே வந்திருந்தனர். உறவினர்கள் யாரும் உடன் வந்திருந்தால் அது வேறு பேச்சாய் போயிருக்கும்.

 

‘அய்யோ இவன் செய்த காரியத்திற்கு எல்லாரும் என்னைத் தானே சொல்லுவார்கள்’ என்று எண்ணி அதை மகனிடம் அவர் சொல்லி முடிக்கவில்லை புஷ்பாவோ “தாயை போல பிள்ளைங்கறது சரியா தான் இருக்கு” எனவும் கண்மணிக்கு கண்ணீர் இறங்கிவிட்டது.

 

“என்ன தாயை போல பிள்ளையை நீங்க கண்டுட்டீங்க?? எங்கம்மாவா எங்கப்பா கழுத்துல தாலி கட்டுனாங்க??” என்று வெடுக்கென்று கேட்டான் அவன்.

 

கரிகாலனும் தங்கையை எச்சரித்தார். “புஷ்பா பையன் செஞ்சது தப்பா இருக்கலாம். அதுக்காக என் மனைவியை பேச உனக்கு எந்த அதிகாரமும் இல்லை பேசாம போய்டு”

 

புஷ்பா மேற்கொண்டு பேச வாயை திறக்க ராஜம் அவரை அடக்கினார்.

 

“அம்மா எனக்கு இது வேணாம்மா??” என்றவாறே கழுத்தில் இருந்ததை கழற்றப் போன மகளை கண்டிப்பாய் பார்த்தார் அவர்.

 

புஷ்பாவும் “அக்கா இந்த வெறும் பய கட்டினதை நம்ம புள்ள எதுக்கு சுமக்கணும். அதை இங்கவே தூக்கி போடட்டும்க்கா” என்று கூற ராஜம் “வாயை மூடு புஷ்பா”

 

“தாலி கழுத்துல ஏற வேண்டிய நேரத்துல ஏறும், எம் பொண்ணுக்கு அது ஏறிடுச்சு. இதோட இதை விட்டுடு”

 

“அக்கா நீ என்ன இப்படி பேசிக்கிட்டு இருக்கே?? நல்ல நாள் பார்த்து தான்க்கா அது நம்ம புள்ள கழுத்துல ஏறணும்”

 

“இப்படி கண்டவனும் வந்து கட்டிப்போகவா” என்று இன்னும் ஆத்திரம் தீராமலே பேச இப்போது கரிகாலன் கோபமாய் தங்கையை முறைத்தார்.

 

“புஷ்பா வார்த்தையை அளந்து பேசு. அவன் ஒண்ணும் கண்டவனில்லை. என்னோட பையன் அவனை எப்படியும் பேசலாம்ன்னு நினைக்காதே!! நான் சும்மாயிருக்க மாட்டேன்” என்று கடுமையாய் பார்த்தார்.

 

“புஷ்பா பேசாம இருன்னு சொன்னா கேட்க மாட்டியா நீ!! எனக்கு நல்ல நேரம் காலம் பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைச்சாங்க”

 

“என்ன நடந்துச்சு நான் இப்போ இப்படி நிக்கறேன். அதனால எதுவும் நம்ம கையில இல்லை. கடவுள் சித்தம் இது தான்னா நாம எதுவும் செய்ய முடியாது”

 

ராஜத்தின் பேச்சை கேட்டு கண்மணி ஓரளவிற்கு சமாதானம் ஆனாலும் மகனின் இந்த செயல் அவருக்கு சற்றும் பிடிக்கவில்லை.

“குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரணும்ன்னு தான் நீ இதெல்லாம் செஞ்சியா!! இப்போ சந்தோசமா உனக்கு” என்றார் கண்மணி.

 

“ஏன்மா உனக்கும் அப்பாக்கும் கல்யாணம் நடக்கும் போது இப்படி பிரச்சனை எல்லாம் வரும்ன்னு தெரியாமலா நீங்க கல்யாணம் பண்ணீங்க”

 

“இப்போ மட்டும் என்னை சொல்றீங்க?? நான் செஞ்சது எனக்கு தப்பாவே தோணலை. நம்ம குடும்பம் சேரணும்ன்னு தான் செஞ்சேன்”

 

“உன்னை இனி யாரும் வேண்டாம்ன்னு சொல்ல முடியாதுல” என்று சொன்னவனை என்ன செய்ய என்று தான் கரிகாலனும் கண்மணியும் பார்த்திருந்தனர்.

 

“நீ பண்ண தப்புக்கு சப்பைக்கட்டு கட்டாதேடா” என்று சத்தம் போட்டார் அன்னை.

 

“என் கண்ணு முன்னாடியே நிக்காதே!! எங்காச்சும் போ!!” என்று அவர் போட்ட கூச்சலில்.

 

“நீங்க சொன்னதுக்காக எல்லாம் போகலை. என்னோட லீவ் ரெண்டு நாள்ல முடிய போகுது நான் இன்னைக்கே நைட்டே ஊருக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு நில்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

கரிகாலனுக்கும் கண்மணிக்கும் என்ன செய்ய என்று தெரியாமல் நின்றிருந்தனர். ராஜம் தான் வாயை திறந்தார், “காலா வீட்டுக்கு போவோம்” என்று.

“ஹ்ம்ம் போகலாம்க்கா… ஆனா அக்கா…” என்று அவர் ஆரம்பிக்க “உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்து வண்டியில ஏறு” என்றவர் முன்னே நகர்ந்து விட்டார்.

 

“என்னங்க இதெல்லாம்?? இவன் ஏங்க இப்படி எல்லாம் செஞ்சான்??”

 

“விடு கண்மணி எல்லாம் நல்லதுக்கு தான்னு எனக்கு தோணுது. என்ன இவன் கொஞ்சம் அவசரப்பட்டுட்டான் அவ்வளவு தான்”

 

“கொஞ்ச நாள் கழிச்சு நாமே போய் பொண்ணு கேட்டிருந்தா எங்கக்கா கண்டிப்பா கொடுத்திருப்பான்னு தோணுது”

 

“விடும்மா எல்லாத்துக்கும் ஒரு காரணமிருக்கும். நீ எதுவும் கவலைப்படாதே!! கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காதே!!” என்று ஆறுதல் செய்தார் மனைவியை.

 

எல்லோருமாய் காரில் ஏறிக்கொள்ள வண்டி அவர்கள் வீட்டை நோக்கி பயணப்பட்டது. வசந்தமுல்லை அழுதது அழுதபடியே இருந்தாள்.

 

கண்மணிக்கு கணவன் சொன்ன சமாதானம் எல்லாம் இப்போது காற்றோடு போனது. அழும் முல்லையை பார்த்திருந்தார் கண்ணில் கண்ணீருடன்.

 

அவருக்கு அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

ராஜம் எதுவும் சொல்ல மாட்டார் என்று தோன்றினாலும் புஷ்பா எதுவும் சொல்லிவிடுவாரோ என்ற எண்ணத்தில் தன்னை கட்டுப்படுத்தி பேசாமல் அமர்ந்திருந்தார்.

 

தன்னால் வீண் ரசாபாசம் ஆவதை அவர் விரும்பவில்லை. நடப்பதை எல்லாம் நடத்திவிட்டு எனக்கென்ன என்று மகன் சென்றுவிட்டது கூட அவருக்கு கோபம் தான்.

 

அப்படி இப்படி யோசித்து வீடும் வந்திருந்தது. வேகமாய் முதலில் கீழே இறங்கினார் ராஜம். புஷ்பாவை ஜாடை காட்ட மகளை அழைத்துக்கொண்டு அவரும் உள்ளே சென்றார்.

 

வழக்கம் போல் கண்மணி வெளியில் நின்றுவிட்டார். அவருக்கு உள்ளே போவதா வேண்டாமா என்ற குழப்பம், உடன் கரிகாலனும் நின்றிருந்தார்.

 

“நீங்க உள்ள போங்க”

 

“தேவையில்லை கண்மணி. நம்ம வந்த வேலை முடிஞ்சுது நாம கிளம்ப வேண்டியது தான்”

 

“உனக்கு மரியாதை இல்லாத இந்த வீட்டில இனி எனக்கு எந்த வேலையுமில்லை. என் கடமையை செய்ய தான் வந்தேன். அது நல்லபடியா முடிஞ்சுது, நாம கிளம்புவோம்” என்றுவிட்டு மனைவியின் கைப்பிடித்து வெளியில் நடந்தார்.

 

“காலா” என்ற குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

 

“இங்க வாங்க” என்று அழைத்தது ராஜம்.

 

“நீங்க போங்க உங்கக்கா கூப்பிடுறாங்க…” என்று கண்மணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே “ரெண்டு பேரும் வாங்க” என்றிருந்தார் அவர்.

 

ஒரு ஆச்சரியத்துடனே இருவரும் வாசலுக்கு விரைய புஷ்பா கையில் ஆரத்தி தட்டுடன் வந்திருந்தார்.

 

“புஷ்பா என்ன பார்க்குறே?? ஹ்ம்ம் ஆரத்தி எடு…” என்று ராஜம் குரல் கொடுக்க விருப்பமில்லை என்றாலும் அவர் சொன்னதை செய்தார்.

 

“உள்ள வாங்க ரெண்டு பேரும்…” என்று கண்மணியின் கைப்பிடித்து அழைத்து சென்றார் ராஜம்.

 

இருவருக்குமே ஆச்சரியம் தான். கண்மணியின் கண்கள் லேசாய் கலங்கியதுவோ!!

 

“அம்மா தம்பியும் உன் மருமகளையும் உள்ள கூப்பிட்டு வந்தாச்சு. சந்தோசமாம்மா…” என்று சொல்லிக்கொண்டே ராஜம் அவர் அன்னையின் அருகில் அமர்ந்தார்.

 

“இங்க வந்து உட்காரு கண்மணி” என்று கைப்பிடித்து தன்னருகே அமர்த்தினார் ராஜம். அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலை அவருக்கு.

 

“என்னடா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் இப்படி செய்யறாங்கன்னு தோணுதா??”

 

“அன்னைக்கு உள்ள வான்னு கூப்பிடுற நிலைமையில நாங்க இல்லை. முத முத உங்களை அந்த விஷயத்துக்காக வாங்கன்னு கூப்பிட மனசில்லை. அதனால தான் கூப்பிடலை”

 

“அதுவும் இல்லாம இன்னும் சிலர் அந்த பழைய கோட்பாடுகள் பழக்க வழக்கங்களை பிடிச்சு தொங்கிட்டு தான் இருக்காங்க”

 

“வந்திருந்த உறவுக்காரங்கல்ல அப்படி ஆளுங்க தான் நெறைய பேரு. அவங்க சொல்றது பெரிய விஷயமா எடுத்துக்க கூடாதுன்னாலும் துக்க வீட்டில தேவையில்லாத ரசாபாசம் வேணாம்ன்னு தான்”

 

“இன்னைக்கு எல்லா காரியமும் முடிஞ்சிருச்சு. கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு. இப்போவும் உங்களை கூப்பிடாம இருந்தா நல்லாயிருக்காது”

 

“நான் நேத்தே நினைச்சது தான். அம்மாகிட்ட கூட பேசிட்டேன், ஆனா அதுக்குள்ளே இப்படி ஆகிப்போச்சு. மருமகனோட கோபம் நியாயமானது தான்…” என்று முடிக்காமல் விட்டுவிட்டார் ராஜம்.

 

அதுவே கண்மணிக்கு குற்றவுணர்ச்சியாகி போனது. “இல்லை அண்ணி அவன் பண்ணது ரொம்ப தப்பு. அதுக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம். இந்த விஷயத்துல நீங்க என்ன முடிவெடுத்தாலும் நாங்க அதுக்கு உடன்படுறோம்” என்று விழியில் அரும்ப இருகரம் கூப்பினார்.

 

“கண்மணி விடு. நடந்ததை மாத்த முடியாது. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்” என்ற ராஜம் ஒரு முடிவுக்கு வந்தது போல் பேசினார்.

 

“என்னம்மா நடக்க வேண்டியது?? இன்னும் என்ன நடக்கணும்ன்னு நீ எதிர்ப்பார்க்கற??” என்று அழுகையைவிடாமல் பேசினாள் வசந்தமுல்லை.

 

“வசந்தி கொஞ்சம் வாயை மூடு. எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று மகளை அடக்கினார் ராஜம்.

 

“அக்கா போதும் சும்மா நம்ம பிள்ளையவே நீ அடக்காத!! இங்க அடங்காத பிள்ளையை பெத்து ஊர் மேய விட்டு இருக்காங்க. அதெல்லாம் உனக்கு…” முடிக்கவில்லை புஷ்பா அறைந்திருந்தார் அவள் அன்னை.

 

“புஷ்பா போதும் நீ ரொம்ப பேசுற… உங்கப்பாக்கு தான் ஜாதி மதம்ன்னு பேய் பிடிச்சு இருந்துச்சு. உனக்குமா அது பிடிச்சிருக்கு. நீ எதுவும் பேச வேணாம் அமைதியா இரு”

 

“என் பேரனை பத்தி நீ தப்பா பேசாதே!! இந்த பத்து நாளா நாம பார்த்திட்டு தானே இருக்கோம். தேவையில்லாம ஒரு வார்த்தை பேசி இருப்பானா!! இல்லை தப்பான பார்வையை நம்ம புள்ளைங்களை நோக்கி பார்த்து இருப்பானா!!”

“நீ பேசுறது அனாவசியம் இனிமே இப்படி பேசாதே!!” என்று கண்டிப்பாய் மகளை பார்த்தார்.

 

இத்தனை வயதிற்கு மேல் பெற்றவள் கை நீட்டி அடித்தது அதுவும் தன் பிள்ளைகளின் முன்னும் அவளுக்கு பிடிக்காத கண்மணியின் முன்னும் அடித்தது புஷ்பாவிற்கு அசிங்கமாய் போய்விட்டது.

 

“என் புருஷன் வெளிநாட்டுல இருக்கார்ன்னு நான் இங்க வந்து இருக்கேன்ல. அதான் என்னை அடிக்க கை நீட்டுறீங்க!!”

 

“இனிமே ஒரு நிமிஷம் நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன். அமுதா, குமுதா கிளம்புங்க” என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே மகள்களின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேற போனார் புஷ்பா.

 

கண்மணி சற்றும் யோசிக்கவில்லை. விரைந்து வந்து “என்னை மன்னிச்சுடுங்க” என்று புஷ்பாவின் காலில் விழ போக ராஜமும் கரிகாலனும் ஒன்று போல் “கண்மணி” என்று அதட்டினர்.

 

புஷ்பாவும் சற்று அதிர்ந்து தான் போனார். ராஜம் தான் வந்து தங்கையை திட்டி அதட்டி உருட்டி உள்ளே அழைத்து வந்தார். புஷ்பாவை தனியே அழைத்து சென்று பேசினார்.

 

“நம்ம அம்மா தானே அடிச்சாங்க. அதுக்காக கோவிப்பியா!! நீ பேசினது யாரைன்னு தெரியுமா!! நம்ம காலனோட புள்ளைய… நம்ம வீட்டு புள்ளையை பத்தி நாமே தப்பா பேசுறதா புஷ்பா. கண்மணியை பார்த்த தானே!! எவ்வளவு பணிவு… நாம தேடியிருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை நம்ம காலனுக்கு கட்டி வைச்சிருப்போமா தெரியாது”

 

“நீ என்ன நினைச்ச கண்மணியை… வீட்டு வேலை செய்யற பொண்ணுன்னா… பெங்களூர்ல அவ என்னவா இருக்கான்னு உனக்கு தெரியுமா??”

 

“ஒரு காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரொபசரா இருக்கா… சீக்கிரமே பிரின்சிபல் ஆகப்போறா!! ஆனா அந்த கர்வமோ ஆணவமோ எதுவுமே அவகிட்ட கிடையாது”

 

“நீ அவ்வளவு பேசியும் உன் கால்ல விழ வந்தா பார்த்தே தானே!! இது தான் பணிவு. எவ்வளவு உயரத்துல இருந்தாலும் இந்த விட்டுக்கொடுக்கற குணமும் பணிவும் தான் ஒரு மனுஷனுக்கு நல்ல பேரை வாங்கிக்கொடுக்கும்”

 

“இனியாச்சும் புரிஞ்சுக்கோ புஷ்பா இப்படி எல்லாம் செய்யாத…” என்ற ராஜம் அவர்களின் பின்னேயே வந்திருந்த வசந்தமுல்லையையும் அர்த்தமாய் பார்த்து வைத்தார்.

 

“இது புஷ்பாக்கு மட்டுமில்லை, உனக்கும் தான்…” என்றுவிட்டு வெளியேறினார்.

 

கண்மணிக்கு முல்லையிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அதை ராஜத்திடமும் கேட்டார். “நான் பேசட்டுமா!! என் பையன் செஞ்சது தப்பு தானே!! அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்”

 

“அவ எப்பவும் உங்க மருமக தான் நீங்க போய் பேசுங்க… இதை வேந்தன் தம்பி தாலி கட்டினதுனால சொல்லலை. என் தம்பியோட மனைவின்னு தான் சொல்றேன்”

 

“போய் பேசுங்க உள்ள தான் இருக்கா…” என்று அறையை காட்ட கண்மணி அவளிருந்த அறைக்குள் நுழைந்திருந்தார். கரிகாலன் வெளியே ஹாலிலேயே அமர்ந்துவிட்டார்.

 

புஷ்பா கொஞ்சம் சமாதானமாயிருந்தாள். அவளும் வெளியில் வந்து ராஜத்துடன் சேர்ந்து கொண்டாள்.

 

கட்டிலில் அமர்ந்து கொண்டு கழுத்தில் பாரமாய் தொங்கிக் கொண்டிருந்த அந்த கயிற்றையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

 

உள்ளே கதவை தட்டி நுழைந்தவரை கண்டு எழுந்து நின்றுவிட்டாள் அவள். அவரை நிமிர்ந்து பார்த்தாள் முல்லை.

 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா??” என்று அனுமதி கேட்டார்.

 

அன்னை சற்று முன் அவள் சித்தியிடம் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. படித்தவர் என்பதை நிருபித்தார் கண்மணி.

Advertisement