Advertisement

அத்தியாயம் – 3

 

“என்னப்பா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதில் சொல்லாம போறே??” என்றவருக்கு அவனை அடையாளம் தெரிந்திருந்தது சற்று முன்பு தான் கரிகாலன் தன் மகன் வருவான் என்று சொல்லி அவன் புகைப்படத்தை அவரிடம் காட்டியிருந்தார்.

 

அவன் நின்று அவரை திரும்பிப்பார்த்து முறைத்தான். அதற்குள் அங்கு ஓரமாய் அமர்ந்திருந்த அவன் அன்னை வேகமாய் எழுந்து அவனருகில் வந்திருந்தார்.

 

“வேந்தா என்னப்பா தலையில கட்டு என்னாச்சு?? எப்படி அடிப்பட்டுச்சு” என்று பதறியவரிடம் “ஒண்ணுமில்லைம்மா லேசான அடி தான்”

 

“தெரியாம இடிச்சுக்கிட்டேன்” என்று சமாளித்தான்.

 

அவன் பேச்சில் முழுதாய் சமாதானம் ஆகாமல் இருந்தாலும் அவர் இருக்குமிடம் உணர்ந்து வேறு பேசினார் அவனிடம்.

 

“வேந்தா எத்தனை மணிக்குப்பா கிளம்பினே?? எப்படி வந்தே?? அப்பா போன் போடுறேன் சொன்னார், நீ வர மாட்டேன்னு நினைச்சேன்”

 

“நல்ல வேளை வந்திட்டே!! எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்குப்பா!!” என்றவரை முறைத்தான் அவன்.

 

“அப்பா போகலாம்ன்னு கூப்பிட்டா நீ உடனே வந்திடுவியாம்மா!! ஏம்மா இப்படி இருக்கே?? இப்படி தான் அப்பா உன்னை விரும்பி கூப்பிட்டார்ன்னு அவரோட வந்திட்டே!!”

 

“அதுக்கு எல்லாருமா சேர்ந்து தள்ளி வைச்சுட்டாங்கல்ல…”

 

“இப்போ மட்டும் எதுக்கு கூப்பிட்டாங்க, கொள்ளி வைக்க பிள்ளை வேணும். நெய் பந்தம் பிடிக்க பேரன் வேணும்ன்னா!!” என்று அடிக்குரலில் பொரிந்தான் அவரிடம்.

 

“வேந்தா அப்படி எல்லாம் பேசக் கூடாதுப்பா… நாம வந்திருக்கறது ஒரு துக்க வீட்டுக்குப்பா!! சாகற நேரத்துலயாச்சும் உங்க தாத்தாக்கு எங்களை மன்னிக்க தோணிச்சே!!”

 

“அதே போதும்ப்பா எங்களுக்கு… நீ உள்ள போய் உங்க தாத்தாவை பாருப்பா!! உங்க பாட்டிக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லு” என்றவரை “நீ மாறவே மாட்டேம்மா” என்று முறைத்தான்.

 

அதற்குள் அவன் தந்தை வெளியில் வந்தார். உள்ளே யாரோ இவன் வந்ததை சொல்லியிருப்பார்கள் போல.

 

‘மூக்கு வேர்த்திடுச்சு வந்திட்டார்’ முணுமுணுத்தான்.

 

“வேந்தா…” என்று கண்டனப் பார்வை கொடுத்தார் அவன் அன்னை கண்மணி.

“என்ன வேந்தன் பண்ணுறே இங்கே?? ஆமா என்னாச்சு தலையில ஏன் கட்டு??”

 

‘கடவுளே இப்போ தான் அம்மாக்கு சொன்னேன். இப்போ இவரா!!’ என்று எண்ணிக்கொண்டவன் அன்னையிடம் சொன்னதை தந்தையிடம் சொல்ல அவர் நம்பாத பார்வை பார்த்தார்.

 

‘இவரு ஓவரா புத்திசாலியா இருக்கக் கூடாது’ என்று வைதான் அவரை.

 

“சரி சரி உங்கம்மா கூட ஆற அமர அப்புறம் பேசு. வந்ததும் முத உள்ள வரவேணாமா??” என்று கண்டிப்பாய் பார்த்தார் அவன் தந்தை கரிகாலன்.

 

“அம்மாவும் அதை தான் சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு நீங்க வெளிய வந்தீங்கன்னு தெரியலை” என்றான் அவரிடம்.

 

“டேய் வாயை மூடுடா” என்றார் கண்மணி.

 

அவனுக்கு கண்மண் தெரியாத கோபம் தான் ஆனாலும் பல்லைக் கடித்துக்கொண்டு தந்தையின் பின்னே சென்றான்.

 

அவன் அன்னை உள்ளே அவர்களுடன் வரவில்லை என்பதை அப்போது அவனறியவில்லை. அது தெரிந்தால் அவன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பான்.

 

உள்ளே சென்றவன் கண்ணாடி பேழைக்குள் அடங்கியவரை பார்த்து ஓரிரு நிமிடம் கண் மூடி நின்றான்.

 

என்ன இருந்தாலும் அவனை பெற்றவரை பெற்றவர் ஆயிற்றே!! மனதின் உள்ளே எங்கோ ஒரு மூலையில் அந்த பாசம் ஒளிந்து ஒட்டிக் கொண்டிருந்தது இன்னமும்!!

 

பேழையை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். அங்கு பாட்டியின் அருகில் அமர்ந்துக் கொண்டிருந்த வசந்தமுல்லை அவனையே பார்த்திருந்தாள்.

 

அவனுக்கு யாரோ தன்னை பார்க்கும் உணர்வு தோன்றியிருக்க வேண்டும். சட்டென்று திரும்பிப் பார்த்தவனின் பார்வையை அவள் எதிர்க்கொண்டாள்.

 

‘அப்போ இவ எனக்கு அத்தைப் பொண்ணா??’ என்ற சிந்தனை மனதில்.

 

‘இப்போ இது ரொம்ப முக்கியமா!!’ என்று மனம் கேட்க அதை திட்டி உள்ளே அனுப்பினான்.

 

“ஆக வேண்டியதை பார்ப்போம். காலையில நேரமாவே எடுத்திட வேண்டியது தானே காலா” என்றார் பெரியவர் ஒருவர் அவன் தந்தையிடம்.

 

அவன் சுற்றும் முற்றும் பார்க்க தாத்தாவின் அருகில் வயதான பாட்டி ஒருவர் இருந்தார். முல்லையை பார்க்கும் போது அவன் அவர்களை சரியாய் கவனிக்கவில்லை. இப்போது தான் கண் தெரிகிறது நம் வேந்தனுக்கு. ‘ஓ!! இது தான் பாட்டியா!!’ என்று பார்த்தான்.

 

பின்னர் அவன் பார்வை ஒவ்வொருவராய் பார்க்க ராஜத்தை தான் அவனுக்கு தெரியுமே!!

 

அவர் அருகிருந்தவர் ராஜத்தின் சாயலில் சற்று வயது குறைந்திருந்தார், ‘சின்ன அத்தை போல’ எண்ணிக்கொண்டான்.

 

அப்போது தான் அவன் பார்வை அவன் அன்னையை தேடியது, வீபரிதம் ஆரம்பித்தது.

 

கண்மணியை காணவில்லை என்ற எண்ணம் வந்ததுமே அவனுக்கு வேறெதுவும் தோன்றவில்லை. யாரையும் பாராது வேகமாய் வெளியில் வந்து பார்வையை சுழலவிட்டான்.

 

அங்கு ஒரு ஓரமாய் கண்மணி யாரோ போல அமர்ந்திருந்தார். விரைந்து அவரருகில் வந்து நின்றான் மூச்சு வாங்க.

 

“இங்க என்னமா பண்ணறே??”

 

“உட்கார்ந்திருக்கேன் வேந்தா??”

 

“அம்மா காமெடி பண்ணுற நேரமா இது… நீ மட்டும் ஏன் இங்க இருக்கே?? உள்ள வா…” என்று அவரை கைப்பிடித்து எழுப்பினான்.

“வேந்தா கையை விடு… நான் உள்ள வரக்கூடாது” என்றவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்தான்.

 

“நீ வரலைன்னா எனக்கு யாரும் வேணாம். உன்னை உள்ள சேர்க்காம அப்பா மட்டும் எப்படி உள்ள போனார்”

 

“இனிமே ஒரு நிமிஷம் இங்க இருக்க வேண்டாம். நீ இப்போ என்னோட வர்றே…” என்று கத்தினான்.

 

சுற்றியிருந்தோர் அவனையே பார்த்தனர். சத்தம் கேட்டு கரிகாலன் வெளியில் வந்தார்…

____________________

 

கண்மணியும் கரிகாலனும் காதலித்து மணம் புரிந்தவர்கள். கரிகாலனின் வீட்டில் வேலை செய்து வந்த நளினியின் பெண் அவள்.

 

நளினி வீட்டு வேலை செய்தாலும் மகளை எப்படியோ படிக்க வைத்தார். அன்னைக்கு எப்போதாவது வரமுடியாது போனால் அன்று கண்மணி வந்து வேலை செய்து போவாள்.

 

அப்படி ஓரிருமுறை வந்திருந்த தருவாயில் தான் கரிகாலனின் கண்ணில்பட்டு அவன் கருத்தில் நிறைந்திருந்தாள்.

 

கண்மணி வீட்டிற்கு வாராமல் போனதில் நளினியிடம் லேசுபாசாய் விசாரித்த கரிகாலன் கண்மணியை தேடி அவள் கல்லூரிக்கே சென்றுவிட்டிருந்தார்.

அவளை கண்டதும் காதல் கொண்டதை சொல்ல முதலில் தன் நிலை கருத்தில் கொண்டு மறுத்த கண்மணியை தன்வசம் இழுத்திருந்தார் அவர்.

 

விஷயம் வீட்டிற்கு தெரிய கரிகாலனின் தந்தை பெரியசாமியும் அன்னை பார்வதியும் பலமாய் எதிர்த்தனர்.

 

அதுவுமில்லாமல் கண்மணி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவளென்பதால் அவளை வேண்டவே வேண்டாமென்று மறுத்து அவனுக்கு வேறு பெண் பார்த்தனர்.

 

ராஜம் கரிகாலனிற்கு இரண்டு வயது மூத்தவர். அவருக்கு அப்போதே திருமணம் முடிந்திருந்தது ஆனால் குழந்தை இல்லாமலிருந்தார் அவர்.

 

புஷ்பாவிற்கு அப்போது தான் வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். பெண் கொடுத்து பெண் எடுக்கவென்று கரிகாலனுக்கும் சேர்த்தே பேசியிருந்தனர் பெற்றோர்.

 

கரிகாலனோ அனைத்தையும் மீறி தனக்கு கண்மணி தான் வேண்டுமென்று சொல்லி வீட்டை எதிர்த்து வெளியில் சென்றுவிட்டார்.

 

தன்னுடன் வருவாயா என்று கண்மணியிடம் கேட்க சற்றும் மறுப்பு சொல்லாமல் கரிகாலனுடன் சென்றவர் இன்றும் கணவன் சொல் மீறாதவராகவே இருந்தார்.

 

எப்படியிருந்த போதும் கரிகாலன் கண்மணியின் மீது அவ்வளவு நேசம் வைத்திருந்தார். அதற்காகவே அவர் எதையும் எப்போதும் பெரிதாய் எண்ணியதில்லை.

____________________

 

ஆயிற்று பத்து நாட்கள் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு விரைவாக ஓடியிருந்தது.

 

வேந்தனின் தாத்தாவின் இறுதி சடங்கு முடிந்து இன்று காரியமும் முடிந்து போனது.

 

நாளை அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவர். வீடு நிறைய இருந்த சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கிளம்பியிருந்தனர்.

 

வேந்தனை பார்த்தாலே முல்லைக்கு உதறல் எடுத்தது. அவன் கோபத்தை அன்று நேரிலேயே கண்டவளாயிற்றே!!

 

‘அம்மாடி இவன் என்ன என்னைவிட அதிக கோபக்காரனாய் இருக்கிறானே’ என்று தான் அவளுக்கு தோன்றியது.

 

அவன் கோபம் நியாயமானது என்று புரிந்தாலும் அவன் சற்று அதிகப்படியாய் தான் நடந்தானோ என்றிருந்தது அவளுக்கு.

 

வேந்தன் அவன் தந்தையை நோக்கி வந்தவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த முல்லையை நோக்கி என்ன என்பதாய் புருவமுயர்த்தினான்.

அவள் தலை இப்படியும் அப்படியும் உருண்டு ஒண்ணுமில்லை என்றது. “அப்போ உள்ள போ” என்று கூற வேகமாய் உள்ளே சென்று மறைந்தாள்.

 

“என் தாத்தா வீட்டில வந்து என்னையவே உள்ளப் போகச் சொல்றான். இவனை…” என்று உள்ளே சென்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

 

‘அவனுக்கும் இது தாத்தா தானே, பார்க்கப் போனால் உன்னைவிட அவனுக்கு அதிக உரிமை உண்டு இங்கு’ என்று இந்த மனசாட்சி எடுத்துக் கொடுத்தது.

 

“அதெல்லாம் இல்லை எனக்கு தான் அவர் தாத்தா” என்று சொல்லிக் கொண்டாள் வாய்விட்டு.

 

கரிகாலன் யாரிடமோ சீரியசான குரலில் பேசிக் கொண்டிருக்க “அப்பா” என்றழைத்தான்.

 

“சொல்லு வேந்தா” என்றார் அவர் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை விட்டு.

 

“கிளம்பலாம்”

 

“வேந்தா!! பொறு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு நாம இன்னும் ஒரு வாரம் கழிச்சு புறப்படுவோம்” என்று சொல்ல அவரை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.

 

“நீங்க வேணும்ன்னா இந்த மரியாதை தெரியாத வீட்டில இருங்க. என்னால இனியும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில இருக்க முடியாது”

“வேந்தா!! ஏன் இப்படி பண்ணுறே??”

 

“நான் இப்போ என்ன பண்ணிட்டேன்?? அதான் எல்லா வேலையும் முடிஞ்சுடுச்சுல்ல இனி இங்க நமக்கென்ன வேலை, கிளம்ப வேண்டியது தானே!!”

 

“அம்மா சொன்னாங்க இருந்திட்டேன் அவ்வளவு தான். நம்ம கடமை முடிஞ்சு போச்சு அப்புறம் ஏன் இங்க இருக்கணும்??” என்றான் சத்தமாய்.

 

தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்த சத்தத்தில் உள்ளிருந்து புஷ்பாவும் ராஜமும் வந்தனர்.

 

“என்னாச்சு தம்பி??” கேட்டவர் ராஜம்.

 

“என்னன்னு சொன்னா செய்யப் போறீங்களா??” என்று எடுத்தெறிந்து பேசினான்.

 

“வேந்தா பேச்சை குறை. நீ வரம்பு மீறி போய்க்கிட்டு இருக்க” என்றார் கரிகாலன்.

 

“அதை தான் நானும் சொல்றேன். என்னை இப்படி பேச வைக்காதீங்க. எங்க அம்மா இல்லாத இடத்துல நான் இவ்வளவு தூரம் இருந்ததே அதிகம். என்னை விட்டுடுங்க நான் கிளம்புறேன்”

 

“வேந்தா சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளு”

 

தன் கோபம் அவனுக்கே எரிச்சலாய் இருக்க அதை கட்டுப்படுத்த முயன்றான். தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு தந்தையை ஏறிட்டான். ‘என்ன சொல்லணுமோ சொல்லுங்க’ என்பது போல்.

 

“நாம கோவிலுக்கு போகணும் வேந்தா அப்புறம் வேணா நீ ஊருக்கு கிளம்பு. இப்போ நீ போய் அம்மாவை கூட்டிட்டு வா…” என்றவரை கொலைவெறியாய் பார்த்தான்.

 

ஆம் வேந்தனின் அன்னை இங்கில்லை. அவரை ஹோட்டலில் தங்க வைத்திருந்தான் வேந்தன்.

 

அன்று கண்மணியிடம் வேந்தன் போட்ட சத்தத்தில் அவர்களை நோக்கி வந்திருந்தார் கரிகாலன்.

 

“என்ன வேந்தா?? எதுக்கு இப்போ கத்திட்டு இருக்கே??” என்றார் மெதுவாய்.

 

“எங்கம்மா ஏன் வெளிய இருக்கணும்??”

 

இதற்கு பதிலில்லை அவரிடம். விஞ்ஞானம் ஆயிரம் வளர்ந்திருந்தாலும் மெய்ஞானம் கொண்டிருந்தாலும் சில ஊர்களில் இன்னமும் இது போன்ற கட்டுப்பெட்டித்தனங்கள் இருக்கவே செய்தது.

 

கரிகாலனின் வீட்டு பெரியவர்கள் அதை வெகு சிரத்தையாய் கடைப்பிடித்து வந்தனர்.

 

அவரின் உறவினர்களும் அப்படியே!! இப்படியிருக்க மகன் கேட்கும் கேள்விக்கு என்ன சொல்ல என்று மனைவியை பார்த்தார்.

கணவனின் பார்வையை புரிந்த கண்மணி “வேந்தா தேவையில்லாத பிடிவாதம் வேண்டாம். இங்க எல்லாம் இப்படி தான்”

 

“சில விஷயங்களை மாத்த முடியாது வேந்தா… புரிஞ்சுக்கிட்டு நடக்கற வழியை பாரு”

 

“நான் ஏன் புரிஞ்சுக்கணும்?? இங்க புரிஞ்சுக்காதவங்களுக்கு புரிய வைங்க… நான் சரியா தான் பேசிட்டு இருக்கேன்”

 

“தப்பை தான் திருத்தணுமே தவிர தப்பை சுட்டிக்காட்டுறவங்களை எதுக்கு மாத்த முயற்சி பண்ணுறீங்க??”

 

எல்லாமே பாயிண்ட் பாயிண்ட்டாக தான் கேட்டு வைத்தான். கண்மணிக்கு கணவரின் அவஸ்தை நன்றாய் புரிந்தது.

 

பெங்களூரில் இருந்து கிளம்பி வரும் போதே மனைவியிடம் சொல்லிவிட்டார். அங்கு எப்படியிருக்கும் என்ன நடக்கும் என்று தெரியாது, எனக்காய் நீ பொறுத்துக்கொள்.

 

இது என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமை அதை நான் செய்தே ஆகவேண்டும் என்று மனைவியின் கைப்பிடித்து சொன்னார்.

 

“வேந்தா!!”

 

“ம்மா எதுவும் பேசாதீங்க… வாங்க நாம கிளம்பலாம்…” என்று குதித்தான்.

 

“வேந்தா நீ ஏன் இன்னைக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறே?? எப்பவும் பொறுமையா இருக்கவன் தானே நீ??”

 

“எங்க பொறுமையா இருக்கணுமோ அங்க இருப்பேன்ம்மா… இங்க என்னால இப்படி தான் இருக்க முடியும்”

 

எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான். அயர்ந்து தான் போனார் கண்மணி.

 

“வேந்தா இதில எல்லாம் கோபத்தை காட்டக் கூடாது. பேசாம உள்ள வாப்பா!!” என்றார் கரிகாலன் தணிந்தகுரலில்.

 

“அதே தான்பா நானும் சொல்றேன். இந்த நேரத்துலயும் எதுக்கு இந்த வழக்கமெல்லாம்!!”

 

மீண்டும் கண்மணியை பார்த்தார். “வேந்தா நான் சொல்றதை புரிஞ்சுப்பியா??”

 

“முடியாதும்மா” என்று அவன் கத்த இப்போது கரிகாலனுக்கு கோபம் வந்தது.

 

“என்னடா நினைச்சுட்டு இருக்கே?? சும்மா சும்மா கிடந்து குதிக்கிற… இங்க என்ன நடந்திருக்கு நீ என்ன பண்ணிட்டு இருக்கே??”

“ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குறே??” என்று அவனிடம் கத்தினார்.

 

“இவங்க எல்லார் முன்னாடியும் எங்கம்மாவை அவமானப்படுத்துறதை மட்டும் நான் எப்படி பொறுத்துக்க முடியும்” என்று அவரையும் விட அதிகமாய் கத்தினான்.

 

வெளியில் நடக்கும் கூத்தை ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்திருந்தாள் வசந்தமுல்லை.

 

கண்மணி வேந்தனை பிடித்து தனியே இழுத்து சென்றார். “வேந்தா நான் சொல்றதை கொஞ்சம் கேளு”

 

“முடியாதும்மா” அடம் பிடித்தான்.

 

“கேட்டுட்டு பேசு வேந்தா…” என்று இடைவெளி கொடுக்க அவன் அமைதியே பதிலாய் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு பேசினார் அவர்.

 

“இங்க பாரு இன்னைக்கு நிலைமை எப்படியோ அதெல்லாம் விடு. பின்னால எல்லாருமே பண்ணது தப்புன்னு நினைச்சு நம்மகிட்ட வந்து பேசும் போது நாளைக்கு நமக்கு குத்தும் வேந்தா”

 

“இந்த காரியத்தை நாம நல்லபடியா நடத்தி கொடுக்கலையேன்னு. அதுவுமில்லாம இறந்து போனவருக்கு சாந்தி கொடுக்க வேணாமா சொல்லு வேந்தா”

 

“என்னைக்காச்சும் நாம இதுக்காக வருத்தப்படுற மாதிரி ஆகிடக்கூடாது. அது மிகப்பெரிய பாவம்ப்பா, எனக்காக நீ பார்க்காத… இது உன்னோட கடமை நீ போய் செய்…”

 

“இல்லை முடியாதுன்னா சரி. நான் இப்போவே உன் கூட வர்றேன்…” என்றவரை முறைத்து பார்த்தான்.

 

“என்னமோ பண்ணுங்க…” என்றுவிட்டு அங்கேயே அமர்ந்தான்.

 

பொழுது நன்றாய் விடிந்த பின்னே சாங்கியங்கள் நடக்க கரிகாலனின் மனைவியாய் கூட எதிலும் பங்குக்கொள்ள கண்மணியை யாரும் அழைக்கவில்லை.

 

எல்லாவற்றையும் ஒரு கோபத்துடன் பார்த்துக் கொண்டு தானிருந்தான் அவன், ஒன்றும் பேசவில்லை.

 

அவன் அன்னைக்காக எல்லாம் பொறுத்துக் கொண்டு தந்தையுடன் சேர்ந்து அவன் தாத்தாவின் ஈமச்சடங்கை செய்து முடித்தான்.

 

எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு வரும் போதும் கண்மணி வெளியிலேயே அமர்ந்திருந்தார். எதுவும் சாப்பிட்டது போல் தெரியவில்லை.

 

சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். வேகமாய் வந்து அன்னையின் அருகில் நின்றவன் “அவ்வளவு தானேம்மா போகலாமே!!” என்றிருந்தான்.

 

“வேந்தா இப்போ தான் அங்க போயிட்டு வர்றீங்க!! நீ உள்ள போ சாமி கும்பிடு சரியா!!” என்று மகனை உள்ளே அனுப்பி வைத்தார்.

 

உள்ளே சென்று விளக்கின் முன் நின்று வேண்டிவிட்டு வெளியில் வர ஒவ்வொருவராய் குளித்து வந்துக் கொண்டிருந்தனர்.

 

‘அப்போ அம்மா எங்க குளிப்பாங்க??’ என்ற எண்ணம் தோன்ற அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை வெளியில் வந்திருந்தான்.

 

“என்னப்பா சாமி கும்பிட்டியா??”

 

அவருக்கு பதில் சொல்லாதவன் “வாங்க போகலாம்” என்றிருந்தான்.

 

‘என்னடா இது பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது இவனுக்கு’ என்று ஆயாசமாய் இருந்தது அவருக்கு.

 

“வேந்தா”

 

“அம்மா போதும்மா வந்த வேலை முடிஞ்சுது”

 

“வேந்தா”

 

“அம்மா எதுவும் பேசாதீங்க… நீங்க இன்னும் குளிக்கக் கூட இல்லை. ஒருத்தரும் வந்து எதுவும் கேட்ட மாதிரி தெரியலை. ஒரு காபி கூட நீங்க குடிச்ச மாதிரி தெரியலை. கண்ணு எல்லாம் சோர்ந்து போய் தெரியுது. பேசாம என்னோட வாங்க”

 

“டேய் ஏன்டா இப்படி பண்ணுறே??”

 

“நீங்க முதல்ல என்னை புரிஞ்சுக்கோங்க. இங்க இருந்து மத்த காரியம் எல்லாம் நான் பார்க்கணும்ன்னு நீங்க நினைச்சா என்னோட கிளம்புங்க”

 

“இல்லைன்னா நான் இப்போவே ஊருக்கு கிளம்பறேன். நான் பண்ணுறது மட்டும் தான் உங்களுக்கு தப்பா தெரியுது”

 

“அப்படி என்னம்மா எல்லாருக்கும் வீம்பு. இங்க எல்லாரும் வாயை மூடிட்டு இருக்காங்க அதெல்லாம் தெரியலை உங்களுக்கு” என்று கத்தவும் கரிகாலன் வெளியில் ஓடி வந்தார்.

 

மகன் பேசியது அவருக்கும் கேட்டது. அதில் நியாயமும் தோன்றியது அவருக்கு, குளிக்கக் கூட யாரும் அவரை அனுமதித்திருக்கவில்லை என்பது அவருக்கும் வேதனையாகவே இருந்தது.

 

“கண்மணி நீ வேந்தனோட போ… அவன் சொல்றது சரி தானே!!” என்று அவரும் அனுமதி கொடுக்க மகனுடன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார் அவர்.

 

அன்று போனவர் தான் அதன்பின் அவரை எதற்கும் வேந்தன் வரவிடவில்லை. இப்போது தந்தை சொன்னார் என்று அவரை அழைக்கத் தான் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தான்.

 

அந்த வீட்டிற்கு அன்னையை மீண்டும் அழைத்து வர அவனுக்கு பிடிக்கவில்லை. நேரே கோவிலுக்கு வந்துவிடுவதாக கூறிவிட்டான் கரிகாலனிடம்.

 

உறையூர் வெக்காளி அம்மன் கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு அவன் அன்னையுடன் வந்திறங்க அங்கு மற்றவர்கள் ஏற்கனவே வந்திருந்தனர்.

 

இவர்கள் வந்ததும் கரிகாலன் அவர்களுடன் இணைந்து கொள்ள யாழ்வேந்தனுக்கோ மனம் இன்னமும் ஆறவில்லை.

 

ஒருவர் கூட அவன் அன்னையை வெறும் பேச்சுக்காய் கூட வாவென்று அழைத்திருக்கவில்லை.

 

பெரியவர்களுக்கு தான் வீம்பு பிடிவாதம் என்றால் இவளுக்கு என்னவாம் என்று அங்கிருந்த வசந்தமுல்லையை பார்த்து முறைத்தான்.

 

அவளுடன் புஷ்பாவின் இரண்டு மகள் அமுதவல்லி, குமுதவல்லியும் நின்றிருந்தனர். வசந்தமுல்லை ராஜத்திற்கு ஆறு வருடம் கழித்து பிறந்த பெண்.

 

புஷ்பாவின் மூத்தப் பெண் அமுதவல்லிக்கும் வசந்தமுல்லைக்கும் ஆறு மாதம் வித்தியாசமே. எப்போதுமே அவர்கள் ஒன்றாய் தான் திரிவர்.

 

வேந்தனின் பார்வை தன்னை முறைப்பாய் பார்ப்பதை கண்ட வசந்தமுல்லைக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

 

அவள் தன்னை பார்ப்பதை பார்த்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மனதிற்குள் ஏதோ வேகக்கணக்கை போட்டான்.

 

மற்ற இருவரும் கண்ணை மூடி கடவுளை வேண்ட இவள் மட்டும் இவனை பார்த்திருந்தாள். அவன் இவளை கண்டுக்கொண்டான் என்றதும் கண்ணை மூடி கடவுளை பிரார்த்திக்க தொடங்கினாள்.

 

அவர்கள் வீட்டின் மற்ற பெரியவர்கள் யாரும் அங்கில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் நேராய் அவர்களை நோக்கி சென்றவன் நிமிடத்தில் அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான்.

 

அவள் பின்னங்கழுத்தில் ஏதோ கூச லேசாய் சிலிர்த்தவள் அருகில் யாரோ நிற்கும் அரவம் தோன்ற கண்ணை திறக்க எதிரில் நின்றவன் அதற்குள் அவள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து முடித்திருந்தான்.

 

அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க அருகில் இருந்த அமுதாவும் குமுதாவும் கூட அதிர்ந்து தான் பார்த்திருந்தனர்….

Advertisement