Advertisement

அத்தியாயம் – 20

 

உதய்பூர் லேக் பேலஸ்

 

லேக் பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீர மாளிகை.

 

1743ம் ஆண்டு மஹாராணா ஜக் நிவாஸ் சிங் இந்த அரண்மனையை கோடை வசிப்பிடமாக கட்டியுள்ளார். இது தான் தற்சமயம் ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது.

 

நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மாளிகை திகழ்கிறது. உலகிலுள்ள வசீகர அரண்மனைகளில் இது ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

அழகிய தூண்களுடன் கூடிய மேல்தளங்கள், சாரங்களுடன் காட்சியளிக்கும் முற்றங்கள், தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகள் போன்றவை இந்த அரண்மனையின் எழில் அம்சங்களாகும்.

 

இந்த அரண்மனையிலுள்ள அறைகள் இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள், வண்ணந்தீட்டப்பட்ட கண்ணாடிகள், விதான வளைவு அமைப்புகள் மற்றும் பசுமையான தாமரை இலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

 

இந்த அரண்மனை விடுதிக்குள் குஷ் மஹால், படா மஹால், தோலா மஹால், ஃப்பூல் மஹால் மற்றும் அஜ்ஜன் நிவாஸ் போன்ற தங்கும் குடியிருப்புகள் உள்ளன.

 

அதில் ஒன்றைத் தான் வேந்தன் அவர்கள் இருவருமாய் தங்குவதற்கு பதிவு செய்திருந்தான். அவர்கள் அறையில் இருந்து பார்த்தால் ஏரி தெரியும் விதமான அழகிய அறை அது.

 

வேந்தன் பெங்களூருக்கு வந்த இரண்டு நாளில் அவர்கள் அனைவரும் மகிழின் திருமணத்திற்காய் திருச்சி வந்து சேர்ந்திருந்தனர்.

 

மகிழின் திருமணம் முடித்த மறுநாள் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் பின் மீண்டும் ஒரு விமானப் பயணம் சென்னையில் இருந்து உதய்பூருக்கு.

 

இருவருக்குமே பயணத்தினால் அதீத களைப்பு அன்று. வந்ததுமே சாப்பிட்டு உறங்கி போயினர்.

 

மறுநாளைய விடியலில் நேரமாகவே விழிப்பு தட்டியது முல்லைக்கு. அவளை அணைத்து படுத்திருந்த வேந்தனின் கரத்தை மெல்ல விலக்கி எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து வந்தாள்.

 

அதுவரையிலும் வேந்தன் எழவேயில்லை. ஏரியை பார்த்தது போல இருந்த அந்த அகல சன்னலின் அருகே இருந்த இருவர் அமரும் மெத்தையில் சென்று அமர்ந்துக் கொண்டாள் அவள்.

 

சன்னலின் திரை லேசாய் விலக்கி மெத்தையில் அமர்ந்திருந்தவள் இருக்கையின் மீது இருகை ஒன்றின் மீது ஒன்றாய் மடித்து அதில் தலைசாய்த்தவாறே விடியலின் அழகையும் ஏரியின் அழகையும் ஒன்றாய் பருகினாள் விழிகளில்.

 

அரைமணி நேரம் சென்றிருக்கும் அவள் தோள்வளைவில் சூடான மூச்சுக்காற்று. திரும்பாமலே அது வேந்தன் என்று அவளால் உணர முடிந்தது.

 

உடல் லேசாய் கூசி சிலிர்த்த போதும் அவன் மீது  சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள் இப்போது.

 

“அங்க என்ன பார்த்திட்டு இருக்க, என்னை பார்க்காம” என்றவனின் மென்குரல் அவள் காது மடலை தீண்டியது.

 

“நீங்க தூங்கிட்டு இருந்தீங்க… அதான் இங்க வந்து உட்கார்ந்திருந்தேன்… எவ்வளோ அழகா இருக்கு இந்த இடம்” என்று சிலாகித்தாள்.

 

“உங்களுக்கு எப்படி இந்த இடத்துக்கு போகலாம்ன்னு தோணுச்சு” என்றாள் அவள் இப்போது அவன் புறம் திரும்பி.

 

“நீ இப்படியே இரு, எனக்கு அது தான் வசதியா இருக்கு” என்று அவளை முன்பு போலவே சன்னலின் புறம் திருப்பி அவளை பின்னிருந்து அணைத்தவாறே பதில் சொன்னான் அவளுக்கு.

 

“பிரண்ட் ஒருத்தர் இப்படி ஒரு இடம் இருக்குன்னு சொன்னார். நெட்ல போய் பார்த்தேன் ரொம்ப பிடிச்சுது. அப்போவே முடிவு பண்ணிட்டேன் நம்ம பர்ஸ்ட் நைட் இங்க தான் நடக்கணும்ன்னு” என்றதும் வேகமாய் திரும்பி அவனை பார்த்தாள் இப்போது.

 

கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் பெருமை என்று அனைத்து உணர்வுகளும் ஒன்றான கலவையாய் அவனை பார்த்திருந்தாள்.

 

‘இதற்கு தான் அன்று அப்படி இருந்தாரா… சரியான கள்ளன் தான்… இல்லையில்லை கல்லுளிமங்கன்…’ என்று மனதிற்குள்ளாக அவனை செல்லமாக வைதுக் கொண்டாள்.

 

“என்னை திட்டுறியா??” என்றான் சிரிப்புடன்.

 

“இல்லை கொஞ்சுறேன்…”

 

“எப்படி?? கொஞ்சிக்காட்டு??” என்றான் இதழ்களில்  குறுநகையோட!!

 

“கேடி…”

 

“யாரு நானா??”

 

“பின்னே வேற யாராம்… ஆமா இந்த ப்ளான் எப்போ இருந்து?? போன் பேசும் போது கூட ஒரு வார்த்தை சொல்லலையே” என்றாள் கொஞ்சம் அங்கலாய்ப்புடன்.

 

“உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைக்கலை. கொஞ்சம் சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு தான். அப்புறம் எப்போ நீ என் கூட பேச ஆரம்பிச்சியோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இங்க தான் வரணும்ன்னு.”

 

“வீட்டில இருக்கவங்க ஆயிரம் பார்க்கலாம், நல்ல நாள் அது இதுன்னு என்னை பொறுத்தவரை நாம மனசுவிட்டு பேசுற நாள் தான் நல்ல நாள்ன்னு தோணிச்சு”

 

“அதுவும் இல்லாம கொஞ்சம் கோபம் தான் எல்லார்மேலயும்… நீங்க என்ன எங்களுக்கு நாள் குறிக்கறது நாங்க நினைச்சா தான் எதுவும்ன்னு ஒரு வீம்பு”

 

“மகிழ் கல்யாண தேதி முடிவு பண்ணதுமே தோணிடுச்சு உன்னை இங்க கூட்டிட்டு வந்தே ஆகணும்ன்னு. அதுக்குள்ள உன்னை எப்படி கரெக்ட் பண்ணுறதுன்னு தான் என் யோசனை”

 

“நல்ல வேளை நீ என் கூட போன்ல பேசினே… இல்லன்னா உன்னை டெல்லிக்கு தூக்கிட்டு வந்திரலாம்ன்னு தான் நினைச்சேன்”

 

அவன் சொன்னதை “ஹான்…” என்று வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

 

“நீங்க ரொம்ப அமைதி பொறுமையானவர்ன்னு நினைச்சேன்”

 

“பொறுமை தான் அமைதி தான் ஆனா உன்கிட்ட இல்லை”

 

“ஆஹான்…”

 

“உனக்கு என் மேல எதுவும் கோபமிருக்கா?? இவ்வளவு பொறுமையா எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருந்தானேன்னு”

 

“இல்லையே… ஏன் அப்படி கேட்கறீங்க??”

 

“நிஜமா தானா… மகிழ் அளவுக்கு நான் வேகமா இல்லைன்னு பார்(படி)க்கறவங்க எல்லாரும் சொல்லிட்டாங்க உனக்கு அப்படி தோணலையா”

 

“நீங்களே சொல்லிட்டீங்களே!! வேகம் அது உங்க தம்பியோட குணம். நீங்க இப்படி இருந்தது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுது”

 

“அவசரப்பட்டு என் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் அவசரமில்லாம தான் மத்த விஷயத்துல நடந்துக்கிட்டீங்க”

 

“உங்க மனசை எனக்கு புரிய வைச்சதாகட்டும்… பெரியவங்க சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினதாகட்டும்…”

 

“அபி உங்க மனசு கஷ்டப்படும் படி பேசினப்போ கூட நீங்க பொறுமையா தான் இருந்தீங்க”

 

“அதெல்லாம் தான் உங்களை என்னை நினைக்க வைச்சுதுன்னு சொல்லலாம். அன்னைக்கு மால்ல வைச்சு அந்த நகைக்கடையில எனக்கு மோதிரம் வாங்கி போட்டுவிட்டப்போ உண்மையாவே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு”

 

“அன்னைக்கு அதெல்லாம் காட்டிக்க முடியலை. பயம், பதட்டம் தான் அதிகம் இருந்துச்சு” என்றவள் இப்போது உரிமையுடன் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

 

அவள் கரம் பற்றி தன் கன்னத்தில் ஒற்றிக்கொண்டான் அவன். காலை உணவிற்கு பின் இருவரும் ஏரியில் போட்டிங் சென்றனர்.

 

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்த மாளிகையின் அழகு கண்ணை பறித்தது இருவருக்கும். சுற்றி இருந்த நீருக்குள் அவ்வளவு அழகாய் பிரமாண்டமாய் அனைத்து வசதிகளும் கொண்டு மாளிகை அமைப்பதென்பது அவ்வளவு எளிதானதா என்ன…

 

அத்தனையும் உள்ளடக்கிய அழகிய வெள்ளை மாளிகை உள்ளம் கொள்ளை கொள்ளும் மாளிகை. அருகினில் மனதிற்கினியவர் கேட்கவும் வேண்டும் அழகு பன்மடங்காகத் தானே தெரியும்.

 

பின் மாலையில் அவர்கள் மாளிகைக்கு திரும்பிவிட அறைக்கு சென்று இருவரும் ரெப்ரெஷ் செய்துக்கொண்டனர். பின்னர் வேந்தன் அவளை அங்கிருந்த வியூவ் பாயின்ட்டிற்கு கூட்டிச் சென்றான்.

 

அங்கிருந்து பார்த்தால் ஏரியின் மொத்த அழகையும் பார்க்க முடியும். அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே இருவரும் சூரிய அஸ்தமனத்தை கண்டு களித்தனர்.

 

மாலை மங்கி இருள் சூழ ஆரம்பிக்கும்போது அறைக்குள் செல்லலாம் என்று முல்லை சொல்ல வேந்தனோ “இரு அப்புறம் போகலாம். சூரியனை பார்த்தாச்சு சந்திரனை பார்க்க வேண்டாமா” என்று சொல்லி அவளை தன்னருகில் இருத்திக்கொண்டான்.

 

பின்னிருந்து அவனின் இறுக்கமான அணைப்பில் நின்றுக்கொண்டு இயற்கையை ரசிப்பதும் ஒரு அழகு தான்.

 

மெல்ல நிலவுப் பெண் வருகை கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறிக் கொண்டிருக்க இப்போது ஏரியின் மொத்த நீரும் வெள்ளிப்பாளமாய் ஜொலிக்க காற்றில் லேசாய் எழுந்த நீரின் மெல்லிய அசைவும் ஒரு அழகைக் கொடுத்தது.

 

இருவரும் ஒருவித மோன நிலையிலேயே இருந்தனர் அதைக்கண்டு.

 

இரவு உணவை அங்கிருந்த ரெஸ்டாரண்ட்டில் முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பினர். அறைக்கு வந்த பின்னே தான் புரிந்தது முல்லைக்கு வேந்தன் ஏன் அவளை தாமதமாய் அறைக்கு அழைத்து வந்தான் என்று.

 

தேனிலவு தம்பதிகளுக்காய் அறை சிறப்பாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேந்தன் அவன் பெட்டியில் இருந்து ஒரு கவரை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

 

“என்ன இது??”

 

“பிரிச்சு பாரு… ரெடியாகு நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று அவன் அறையைவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

அவன் சென்றதும் அந்த கவரை பிரித்து பார்க்க அதில் அழகிய டிசைனர் புடவை ஒன்று இருந்தது.

 

ராமர் பச்சையில் தங்கநிற பூக்கள் இரு கரையும் அலங்கரித்திருக்க அம்சமாய் இருந்தது அந்த புடவை.

 

“புடவை இருக்கு இது பிளவுஸ் என்ன போடுறதாம்… ஒரு வேளை முதல் மரியாதை ஸ்டைல்ல இருக்கட்டும்ன்னு நினைச்சாரோ” என்று எண்ணும் போதே கொஞ்சம் கலவரமாய் தோன்றியது அவளுக்கு.

 

“ச்சே… ச்சே அப்படி எல்லாம் இருக்காது” என்று எண்ணிக்கொண்டே அந்த கவரை எடுத்து கட்டிலில் தலைகீழாய் போட உள்ளிருந்து விழுந்தது அந்த புடவைக்கு தோதான ரவிக்கை.

 

தங்க நிற பூக்களில் ஆங்காங்கே புடவையின் நிறத்தில் பூக்கள் இருக்க புடவைக்கு பொருத்தமான ரவிக்கை தைக்கப்பட்டிருந்தது.

 

“எப்படி?? எப்படி தைச்சாரு??” என்று தோன்றினாலும் அதை அவனிடமே கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணியவள் குளியலறை புகுந்திருந்தாள்.

 

குளித்து முடித்து வெளியில் வந்தவள் அப்புடவையை அணிந்துக் கொண்டு தயாராக கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது அவளுக்கு.

 

கண்ணாடி முன் நின்று தன்னை பார்க்கவே அவளுக்கு வெட்கிப் போனது. முகம் சிவந்து அவள் அப்படியே நின்றிருக்க கதவை தட்டி உள்ளே வந்தவனோ மனைவியை கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

 

அறையில் இருந்த மஞ்சள் நிற ஒளியில் அவள் முகமும் அகமும் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

தன் மனைவியை மகாராணியாய் தான் அந்நேரம் அவன் கண்டான். அவளை அள்ளி அணைக்கத் துடித்த கரங்களை கஷ்டப்பட்டு தான் அடக்கினான்.

 

அவன் இமைக்காமல் பார்த்த போது அவள் முகம் ரத்த நிறம் கொண்டது. ஆனால் அவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் நிற்கவும் நன்றாக இல்லையோ என்ற எண்ணம் அவளுக்கு.

 

“ஒரு பைவ் மினிட்ஸ்” என்று சொன்னவன் அடுத்திருந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.

 

முல்லையோ நிலைக்கண்ணாடியின் புறம் திரும்பி “நாம நல்லா இல்லையா என்ன??” என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“கொஞ்சம் நல்லா தானே தெரியறோம். எதுக்கும் கொஞ்சம் மை வைப்போமா” என்று எண்ணி விழிகளில் மை தீட்டி நெற்றி வகிட்டில் பொட்டிட்டு பார்க்க கொஞ்சம் திருப்தியாய் தோன்றியது அவளுக்கு.

 

“இன்னும் இங்க நின்னுட்டு என்ன பண்ணுறே??” என்று குரல் கேட்கும் வரை அங்கேயே நின்றிருந்தது உரைக்க திரும்பி பார்த்தாள்.

 

வேந்தன் அழகாய் வெள்ளை வேட்டியும் அவள் புடவையின் நிறத்திற்கு தோதான நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான்.

 

‘ரொம்ப தான் விவரம்’ என்று மனதிற்குள்ளாக  கணவனை பாராட்டிக் கொண்டாள்.

 

“என்ன யோசனையில இருக்கே??” என்றவன் இப்போது அவளருகே வந்திருந்தான்.

 

அதுவரையிலும் ஒன்றும் தோன்றாது அவனையே பார்த்திருந்தவளின் இருதயம் வேகமாய் துடித்தது.

 

“ஒண்ணும்மில்லை” என்று தலை தானாய் ஆடியது.

அவளின் பதட்டம் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவள் கையை ஆறுதலாய் பற்றினான், பின் அவளை தன் இருகைகளாலும் தூக்கிக்கொள்ள அவள் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

 

ஏரியை நோக்கி இருந்த அந்த மிகப்பெரிய சன்னலின் மூலையில் வீற்றிருந்த கட்டிலில் அவளை மெல்ல இறக்கினான்.

 

அவள் விழிகள் மிரட்சியாய் அவனை நோக்க “என்னை பார்த்து உனக்கு பயமாயிருக்கா??”

 

அவள் தலையோ மாறாய் இல்லையென்று ஆடியது, உள்ளே ஆமாம் என்று சொல்லிக்கொண்டு.

 

“இங்க நீயும் நானும் மட்டும் தான் அதுக்கே என்னைக்கண்டு உன் முகம் இப்படி இருக்கு”

 

“இதுல எல்லார் முன்னாடியும் நீ என்ன செஞ்சு இருப்பே??”

 

‘யாருக்கு தெரியும்’ என்று தான் நினைத்துக் கொண்டாள் அவள்.

 

“அது போல உன்னை சங்கடப்படுத்த எனக்கு இஷ்டமில்லை அது மட்டும் தான் உன்னை தனியா கூட்டிட்டு வர காரணம்” என்றவன் அவளருகே அமர்ந்து கொண்டான்.

 

முல்லையிடம் இருந்து பேச்சே இல்லை.

“பேச மாட்டியா??”

 

“இல்லை என்ன பேசன்னு தெரியலை”

 

“உனக்கு பேசத் தெரியலைன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க” என்று அவன் கிண்டல் குரலில் சொல்லவும் சண்டைகோழி கொஞ்சம் சிலிர்த்தது.

 

“ஹ்ம்ம் அப்புறம்” என்றவள் இயல்பாய் பேச ஆரம்பித்தாள்.

 

“உனக்கு சாப்பிட தெரியும் நல்லா பேசத் தெரியும்” என்று அவன் சொல்ல ஆரம்பிக்க “என்னை பத்தி தெரியும் தானே அப்புறம் என்ன” என்றவள் அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.

 

அவளின் தளிர் கரத்தை ஒரு கையால் அடக்கியவன் சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொள்ள முதலில் ஒன்றும் புரியாமல் திகைத்தவள் அவன் அணைப்பில் கட்டுண்டாள்.

 

இருவரின் இல்லறமும் அணைப்பிலும் இதழ் தீண்டலின் ஆரம்பித்து அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியது….

 

பத்து நாட்களுக்கு பின்

——————————————–

 

முல்லையும் வேந்தனும் தங்களின் தேனிலவு பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னர் தான் பெங்களூர் திரும்பி இருந்தனர்.

மகிழ் தான் கொஞ்சம் கடிந்துக் கொண்டான் வேந்தனை. கொஞ்சம் பொறுத்திருந்தால் தாங்களும் உடன் வந்திருப்போம் ஒன்றாய் சென்றிருக்கலாம் என்று.

 

வேந்தனுக்கு அதில் உடன்பாடில்லை, தவிர மகிழ் திருமணம் முடித்து மறுவீடு அது இதுவென்று திருச்சிக்கும் பெங்களூருக்கும் அலைய வேண்டுமே என்று தான் விட்டுச் சென்றான்.

 

“அதுக்கென்ன மகிழ் நீ அமுதாவை லண்டன்க்கு உன்னோடவே கூட்டிட்டு போ. அதான் இன்னும் மூணு மாசத்துல நீ அங்க திரும்ப போகப் போறியே!!” என்றான் வேந்தன்.

 

மகிழ் மற்றும் வேந்தன் இருவரின் திருமணமும் திருச்சியில் நடந்ததால் பெங்களூரில் இருந்த அவர்களின் உற்ற நண்பர்களுக்காவும் அண்டை வீட்டார்க்காகவும் தனியாக வரவேற்பு ஒன்று கொடுக்கப்பட்டது.

 

அன்று மாலை இரு ஜோடிகளுக்குமே வரவேற்பு இருந்ததால் அவரவர் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

 

முல்லை தயாராகி அவள் அறையில் இருந்து வெளியில்வர வேந்தன் அவளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்திருந்தான்.

 

“எதுக்கு இப்படி தள்ளிட்டு வர்றீங்க??”

“லைட்டா ஒரு கிஸ் அடிக்கலாம்ன்னு” என்றவன் சட்டென்று அவள் இதழ்களை அணைத்து அவளை பேச்சிழக்க செய்துவிட்டு சற்று பொறுத்து அவளை விலக்கி நிறுத்தினான்.

 

“இப்போ பாரு நீ ரோஸ் பவுடர் போடாமலே முகம் சிவந்து போச்சு. இதுக்கு தான் நான் இப்படி செஞ்சேன்” என்று அவன் சொல்லி முடிக்கவும் “ப்ரோ நாங்களும் ரோஸ் பவுடர் போடுவோம்ல” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர் கணவன் மனைவி இருவரும்.

 

அங்கு மகிழும் அருகில் அமுதாவும் நின்றிருந்தனர். “டேய் நீ எப்போடா வந்தே??”

 

“நீ ரோஸ் பவுடர் போட்டேன் சொன்னப்ப தான் ப்ரோ வந்தேன். ரொம்ப கவலைப்பட வேண்டாம்…” என்று மகிழ் சொல்லவும் கொஞ்சம் ஆசுவாசம் வந்தது அவர்களுக்கு.

 

ஜோடிகள் இருவரும் மேடையேறியிருக்க அவர்களின் வரவேற்பும் கோலாகலமாய் நடந்துக் கொண்டிருந்தது.

 

சொந்தமில்லை என்றவன் தன்னை சொந்தமாய் பார்த்துக் கொண்டிருக்கும் முல்லையின் அருகில் சந்தோசமாய் நின்றுக்கொண்டு தன்னவளை முகம் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்…

 

முற்றும்

Advertisement