Advertisement

அத்தியாயம் – 19

 

மனைவி தானாக வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுததும் அதுவரையில் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு போனது அவனுக்கு.

 

ஒரு கணம் ஒன்றும் ஓடாவிட்டாலும் மறுநொடியே அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது ஆறுதலாய்.

 

“எதுக்கு இப்போ அழறே??” என்றான் நிதானமான குரலில்.

 

“என் மேல உங்களுக்கு என்ன கோபம்??” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள். (என்னைக்கு பதில் சொல்லியிருக்கோம் நாங்க… எங்களுக்கு கேக்க மட்டும் தானே தெரியும்)

 

“நீ தான் இப்போ அழுதிட்டு இருந்தே??” (நாங்க மட்டும் சும்மாவா கேள்வி கேப்போம்ல)

 

“ஆமா அதுக்கென்ன இப்போ??” (பதில் சொல்லிட்டாலும்)

 

“ஏய் என்ன தான்டி உன் பிரச்சனை??”

 

“நீங்க தான்??” என்றவளின் முகத்தை தன் புறம் நோக்கி நிமிர்த்தினான்.

 

அதற்குள் வெளியில் இருந்து ஒரு குரல். வேறு யார் கண்மணி தான். (பேசவிட்டுட்டாலும்)

“வேந்தா அந்த புள்ளைய சாப்பிட கூட்டிட்டு வா… காலையில இருந்தே சாப்பிடாம கிடக்கா” என்று அன்னை குரல் கொடுக்கவும் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனது அவனுக்கு.

 

தனக்காக சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறாளே என்ற நெகிழ்வு தான் அது. “வா…” என்றவன் அவளை எழுப்பினான்.

 

“எனக்கு எவ்வளோ பசி தெரியுமா?? நீங்க எங்க போனீங்க??”

 

“பசிச்சா சாப்பிட வேண்டியது தானே!! நீ தான் பசி தாங்க மாட்டியே!!” என்றான் கரிசனையாக.

 

“நீங்க கோவமா போயிருக்கீங்கன்னு தெரியும் அப்புறம் எப்படி நிம்மதியா நான் மட்டும் சாப்பிட முடியும். நீங்க சாப்பிட்டீங்களோ என்னவோ தெரியலை” என்று மூக்கை உறிஞ்சினாள்.

 

அன்று சாப்பிடுறீங்களா என்று கூட கேட்காத பெண்ணா இவள் என்று கொஞ்சம் ஆச்சரியம் தான் அவனுக்கு.

 

“சரி வா…” என்றவன் அவளுடனே வெளியில் வந்தான்.

 

“நீயும் உட்காரு வேந்தா” என்று கண்மணி சொல்ல “இல்லைம்மா நீங்க அவளை பாருங்க… நான் சாப்பிட்டேன்…” என்று சொன்னவனுக்கு அவன் மனைவி அவனை திரும்பி பார்க்காமல் முறைப்பது நன்றாக தெரிந்தது.

அவள் மட்டுமல்ல மற்றவர்களும் சாப்பிடாமல் இருந்ததை கண்டதும் மனம் குற்றவுணர்ச்சிக்கு தாவியது.

 

“நீங்க எல்லாரும் உட்காருங்க நானே பரிமாறுறேன்” என்றான்.

 

அவன் வீட்டிற்கு வரும் போதே மூன்று மணிக்கு மேல் ஆகிப் போயிருந்தது. அனைவரும் சாப்பிட்டு எழ நான்காகியிருந்தது.

 

“முல்லை நீ வாம்மா கொஞ்சம் வேலை இருக்கு” என்று அவளை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் கண்மணி.

 

வேந்தனுக்கு இப்போதும் கூட யாரும் ஒன்றும் சொல்லியிருக்கவில்லை. ‘என்னைய எதுக்குய்யா தேடுனீங்க எல்லாரும். ரொம்ப தான் அக்கறை’

 

‘என் பொண்டாட்டி கூட பேசக் கூட விடாம யாராச்சும் அவ பக்கத்துலவே இருந்தா நான் என்ன தான்யா செய்வேன்’ என்று மீண்டும் அவன் கோபம் முருங்கை மரத்திற்கு ஏறியது.

 

‘இவளாவது என்ன ஏது என்று சொல்லி சென்றிருக்கக் கூடாதா’ என்ற எண்ணம் வேறு.

 

உள்ளே சென்றவளோ “அத்தை நான் போய் அவர்கிட்ட சொல்லிட்டு வரவா” என்றிருந்தாள்.

 

“அவன் ஏற்கனவே கோபமா இருக்கான்மா. இப்போ உன்னை உள்ள கூட்டிட்டு வந்துட்டேன்னு இன்னும் கோபமா இருப்பான். நீ இப்போ போகாதே. நான் மகிழ்கிட்ட சொல்லி அவன்கிட்ட பேச சொல்றேன்” என்றார் அவர்.

 

அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை மாமியார் சொல்லும் போது கேட்டுக்கொள்ள தானே வேண்டும் என்று அமைதியாகிவிட்டாள்.

 

ஆனாலும் வேந்தனை நினைத்து அவளுக்கு கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. ‘என்னிடம் ஆசையாய் பேசத் தானே வந்தார், சரியாக பேச முடியவில்லையே’ என்றிருந்தது அவளுக்கு.

 

மாலை வேளையின் போது எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தாள் முல்லை. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவளிடம் என்ன பேச முடியும் அவனால்… நன்றாக அவளை முறைக்க மட்டுமே செய்தான்.

 

மகிழ், வேந்தனை வெளியில் செல்ல அழைத்தான். “நான் வரலைடா காலையில முழுக்க சுத்தினது எனக்கு கால் வலிக்குது” என்று மறுத்தான் மற்றவன்.

 

“சரி வெளிய போக வேண்டாம் கொஞ்சம் வெளிய வா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று அவனை வெளியில் தள்ளிக்கொண்டு வந்தான்.

 

“என்னடா”

மகிழ் அன்றைய இரவை பற்றிச் சொன்னவன் உடன்பிறந்தவனை கேலி பேச வேந்தனுக்கு மகிழ்ச்சிக்கு பதில் சுருசுருவென்று கோபமே வந்தது.

 

இதற்காக தான் என்னை அலைக்கழித்தார்களா என்றிருந்தது அவனுக்கு. ‘இது வாழ்க்கையில் ஒரு அங்கம் தானே தவிர இதுவே வாழ்க்கையல்ல’ என்பதை தெளிவாய் உணர்ந்தவன் அவன்.

 

அவனுக்கு தன் மனைவியுடன் பேச வேண்டும், பழக வேண்டும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆசையும் விருப்பமும்.

 

என்னவோ அவன் அவசரப்பட்டுவிடுவான் என்ற ரீதியில் மற்றவர்கள் நடந்து கொண்டது அவனுக்கு கொஞ்சம் எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருந்தது.

 

‘நான் என்ன அது தான் முக்கியம் என்று அலைந்து கொண்டா இருக்கிறேன். இவ்வளவு நாள் பொறுத்தவனுக்கு இதற்கு பொறுக்கத் தெரியாதா என்ன’

 

‘இத்தனை நாளும் நான் காத்திருந்தது அவளின் மனதில் இடம் பிடிக்கவும் எங்களின் மனதை பகிர்ந்து கொள்ளவும் தானே தவிர அவளுடன் கட்டிலை பகிர்ந்து கொள்ளவதற்கு அல்ல’ என்று அவன் மனம் பொருமத் துவங்கியது.

 

அந்த கோபத்தின் சிடுசிடுப்பை மகிழிடம் அப்படியே காண்பித்தான் அவன்.

 

“எதுக்கு யாழ் கோபப்படுறே?? பெரியவங்க எல்லாம் நல்லதுக்கு தான் செய்வாங்க…” என்று அவன் இலவச ஆலோசனை வழங்கவும் இன்னும் கடுப்பானது அவனுக்கு.

 

“நான் என்ன அவசரப்பட்டுட்டேன்னு இப்படி பேசிட்டு இருக்க நீ?? ஆமா அவசரப்பட்டேன் அவளை கல்யாணம் பண்ணதுல கொஞ்சம் அவசரப்பட்டேன் தான்”

 

“அதுக்காக எல்லாத்துக்கும் நான் அவசரப்படுவேனா என்ன?? என்னை எல்லாரும் என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க” என்று பொரிந்தான்.

 

“இதுல அவகிட்ட வேற என்ன சொல்லி வைச்சீங்களோ தெரியலை. என் முன்னாடியே வர மாட்டேங்குறா…” என்று கொஞ்சம் சத்தமாகவே பேசினான்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா அவங்களுக்கு எல்லாம் தெரியும். அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க”

 

“அதுனால தானா அவ என் கூட பேச கூட மாட்டேங்குறா…” என்று அதற்கும் சண்டை பிடித்தான்.

 

“டேய் நீ ரொம்ப டென்ஷனா இருக்கே… நான் எதுவும் மேற்கொண்டு பேசலை. நீ உன் ரூமுக்கு போய் குளிச்சுட்டு ரெடி ஆகு…”

 

“எதுக்கு??” என்று விதண்டாவாதம் செய்தான்.

 

“டேய் மறுபடியும் முதல்ல இருந்தாடா”

வேந்தன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்தான். அவனறையில் அலங்காரம் என்று ஒன்றை கூட செய்யவிடவில்லை அவன்.

 

இரவு உணவின் போது முல்லை அவனருகில் தான் அமர்ந்து உணவருந்தினாள். அவளுக்கு அவன் முகத்தை ஏறிட்டு கூட பார்க்க முடியவில்லை.

 

அவனுக்கு அவளை பார்த்து சங்கடத்துக்கு ஆளாக்க அவனும் விரும்பவில்லை. அமைதியாய் உணவருந்தி எழுந்தும் சென்றுவிட்டான்.

 

எல்லாம் முடிந்து இரவும் வந்தது வேந்தன் அறைக்குள் வருவதற்கு  முன்னமே முல்லை அந்த அறையில் இருந்தாள். வேந்தன் சாப்பிட்டதும் காற்றாட வெளியில் சென்று நின்றுவிட்டான்.

 

பின் அவன் அறைக்குள் நுழைந்தவன் கதவை தாழிட்டுவிட்டு அவளைக் கண்டுக்கொள்ளாமல் கட்டிலின் மறுபுறம் சென்று அமர்ந்தான்.

 

முல்லைக்கு பெருத்த ஏமாற்றம். ‘போன்ல பேசினதெல்லாம் காதல் வசனம் இப்போ என்ன ஓவரா பண்ணுறார்’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டு அவனை நோக்கி திரும்பி அமர்ந்தாள்.

 

அவன் பேசுவான் போல தோன்றவில்லை. கையிலிருந்த கைபேசியில் எதையோ தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

“என்னங்க…”

 

“என்ன??”

 

“என்ன பண்ணுறீங்க??”

 

“ஏன் தெரியலையா உனக்கு??”

 

“தெரியுது. இப்போ இது ரொம்ப முக்கியமா??”

 

“இல்லை இது முக்கியமில்லை. எனக்கு இப்போ உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும் அது தான் முக்கியம். என்ன செய்யவா??” என்று வேண்டுமென்றே கடுப்பாய் மொழிந்தான் அவன். (உள்ளத்து ஆசை வெளிய வந்திருச்சோ)

 

“நான் எப்போ வேணாம்ன்னு சொன்னேன்” என்ற அவளின் பதிலில் கைபேசி அவன் கையில் இருந்து நழுவியது.

 

“என்ன சொன்னே??”

 

“காது கேட்காதவரையா நான் கட்டிக்கிட்டேன். அச்சோ அத்தை உங்க பையன் அப்படி இப்படின்னு சொன்னீங்க, இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லையே!!” என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்து சொன்னவளின் விழிகள் சொன்ன மொழியில் அவளை எட்டிப் தன் புறம் இழுத்திருந்தான் அவன்.

 

அவள் பேச்சு கொஞ்சம் இதமளிக்க கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது. எங்கே தன்னுடன் பேசாமல் இருந்துவிடுவாளோ என்று கொஞ்சம் கவலையாயிருந்தான் அவன்.

 

பின்னே அவன் வீட்டினர் செய்த கூத்து அப்படியாயிற்றே. இப்படி விஷயம் என்று முதலிலேயே தன்னிடம் சொல்வதை விட்டு இவளிடம் சொல்லி இவள் எனக்கு போக்கு காட்டி கோபம் வந்து தேவையா இது!!

 

மெதுவாய் அவளிடம் கேட்டான் “முல்லை உனக்கு என்னை பிடிச்சிருக்கா”

 

“எப்போ கேட்க வேண்டியதை எப்போ கேட்கறீங்க??” என்று கேள்வி தான் கேட்டு வைத்தாள் அவனிடம்.

 

“இப்போவாச்சும் கேட்டேன்ல பதில் சொல்லேன்”

 

“போன்ல கூட நீங்க இதை கேட்கலை…”

 

“போன்ல உன் முகத்தை பார்க்க முடியாதே!! அதனால தான் நேர்ல கேட்கறேன்”

 

“பிடிக்காம தான் பேசுவாங்களா” என்றவள் தானாய் வந்து அவன் நெஞ்சின் மீது சாய்ந்திருந்தாள் இப்போது.

 

“அப்போ அன்னைக்கு மோதிரத்தை திருப்பி கொடுத்திட்டு போனே” என்றான் அதை பற்றி தெரிந்துவிடும் நோக்குடன்.

“அதை வாங்கிட்டு போய் எங்கம்மாகிட்ட நான் என்ன சொல்றதாம்”

 

“ஏன் என்ன சொல்லுவாங்க??”

 

“என் பிரண்ட்ஸ் எதுவும் கிப்ட் வாங்கி கொடுத்தாலே எனக்கு திட்டு விழுகும். இதுல நீங்க வேற அதை கொடுத்தா நான் என்ன செய்யறதாம். நீங்க வீட்டுக்கு வந்து கொடுத்திருந்தா கூட பரவாயில்லை. அதான்…” என்று இழுத்தாள்.

 

அவள் சொன்னது சரி தானே என்ற எண்ணம் ஓட “ஓ!! அதனால தான் திருப்பி கொடுத்தியா” என்று அசடு வழிந்தான்.

 

“இல்லை அதுமட்டுமில்லை. நீங்க பாட்டுக்கு திடுதிப்புன்னு தாலி கட்டுனீங்க. அப்புறம் உங்க இஷ்டத்துக்கு மோதிரம் வாங்கி கொடுக்கறீங்க”

 

“நான் என்னன்னு நினைக்கறது. என்னைப்பத்தி நீங்க யோசிக்கவே இல்லை. எனக்கு இதெல்லாம் சட்டுன்னு ஒத்துக்கவும் முடியலை, ஒதுக்கவும் முடியலை”

 

“எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு நிஜமாவே எனக்கு தெரியலை. உங்களோட கோபத்தை பார்த்து பயமா வேற இருந்துச்சு”

 

“யாரு!! நானு!! கோபமா!!”

 

“பின்ன வேற யாராம்”

“ஊர்ல வைச்சே எப்போ பார்த்தாலும் என்னை முறைச்ச மாதிரியே இருப்பீங்க”

 

“அது கோபம்…”

 

“அதை தான் நானும் சொன்னேன். ஆனா என் மேல என்ன கோபம் உங்களுக்கு??”

 

“ஏன் உனக்கு தெரியாதா?? நான் அங்க எதுக்கு சண்டை போட்டேன்னு”

 

“தெரியும், ஆனா என் மேல எதுக்கு உங்க கோபம் திரும்பிச்சு??”

 

“நீங்களும் கூட யாருமே அம்மாவை கண்டுக்கலைன்னு தான் கோபம்”

 

“அப்போ அமுதா குமுதா மேல கோபம் வரலியா??”

 

“வந்துச்சு. ஆனா உன் மேல தான் ரொம்ப வந்துச்சு. ட்ரைன்ல வேற உன்னை சைட் அடிச்சிட்டே வந்தனா!! அப்புறம் வீடு வரைக்கும் கூட அப்படியே தான் இருந்துச்சு”

 

“நமக்கு தெரிஞ்ச பொண்ணு பிடிச்ச பொண்ணு அதுக்கு மரியாதை தெரியலியேன்னு கோபம். நம்ம குடும்பம் சேர இது தான் வழின்னு வேற தோணுச்சு. அதான் யோசிக்கவே இல்லை கோவில்ல அப்படி நடந்துகிட்டேன்”

 

“இப்போ தான் புரியுது, உறவுகள் மட்டுமில்லை நீயும் வேணும்ன்னு நினைச்சு தான் என் மனசு அப்படி நடந்துக்கிச்சுன்னு”

 

“எனக்கு உன் மேல அந்த கோபம் இன்னமும் இருக்கு” என்றான் விடாமல்.

 

“நான் வேணும்ன்னு எல்லாம் அப்படி செய்யலை” என்றவள் அவன் அன்னையிடம் கொடுத்த விளக்கத்தையே இப்போது அவனுக்கும் கொடுக்க அவன் கோபம் சுத்தமாய் மட்டுப்பட்டுவிட்டது.

 

“ஆமா நான் கொடுத்த அந்த மோதிரத்தை என்ன பண்ணே??” என்றான் அவள் அதை என்ன செய்தாள் என்ற பேராவலுடன்.

 

“அது என்கிட்ட தான் இருக்கு…”

 

“எங்க இருக்கு?? இப்போ போட்டுக்கலாமே அதை…” என்றவன் “நான் போட்டுவிடவா” எனும் போது குரல் கனிந்து ஒலித்தது.

 

“ஒரு நிமிஷம்” என்றவள் கழுத்தில் அணிந்திருந்த அவன் முதன் முதலாய் கட்டியிருந்த மஞ்சள் கயிறை வெளியில் எடுக்க அதனுடன் பின் சேர்த்து அந்த மோதிரத்தை இறுக்கமாய் கோர்த்திருந்தாள் அதில்.

 

அதை கண்டவன் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும். எதுவும் பேசவில்லை, அவளை தன்னோடு இறுக அணைத்திருந்தான்.

அத்திருமண மண்டபம் களைக்கட்டியிருந்தது. மகிழின் திருமணம் இன்று. ஆடி முடிந்து ஆவணி பிறந்ததுமே கிடைத்த நல்ல நாளில் மகிழின் திருமணம் நிச்சயமாகி இருந்தது.

 

வேந்தன் போல் அல்லாது மகிழ் எல்லாவற்றையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தான் பார்த்தான்.

 

பத்து நாள் லேட்டானாலும் பரவாயில்லை ரெண்டு முகூர்த்தமும் ஒரே நாள்ல தான் இருக்கணும் என்று திட்டவட்டமாய் சொல்லிவிட்டான்.

 

கண்மணிக்கு தான் அவன் பேச்சில் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருந்தது. வேந்தன் இவனைவிட பல மடங்கு மேல் அவனுக்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்ற அளவிற்கு அவருக்கு தோன்றி போனது.

 

இதோ இன்று திருமணம் என்று வந்து நின்றது. மண்டபத்தின் வாயிலில் நின்றிருந்த வேந்தன் தான் வருவோர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான்.

 

அருகில் அவனை ஒட்டி நின்றிருந்தது அவன் மனைவி வசந்தமுல்லை. அவனுடன் ஒன்றாய் இப்படி அருகில் நிற்போம் என்று அவளே எண்ணியிருக்கவில்லை. உள்ளே ஒரு உற்சாகக் குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

மனதில் சொல்லொணாத நிம்மதி அவளுக்கு. திரும்பி அருகில் இருந்தவனை பார்த்தாள். அவனுமே அக்கணம் அவளைத் தான் பார்த்திருந்தான் போலும்.

 

“என்னம்மா??”

 

“ஏன் பார்க்கக்கூடாதா??” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

 

“ஹ்ம்ம் அது சரி” என்றவன் எதுவும் சொல்லவில்லை.

 

“என்ன பார்த்திட்டே இருக்கே?? என்ன வேணும்??” என்றான் மீண்டும்.

 

“பசிக்குது எனக்கு”

 

“உனக்கு பசிக்கலன்னா தான் அதிசயம்” என்று கிண்டல் செய்தான் அவன்.

 

“என்னைப்பத்தி தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணீங்க??”

 

“இல்லை தப்பு. உன்னை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்டி பொண்டாட்டி”

 

“ஹ்ம்ம் போங்க…” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

“சரி சரி கூல் கூல் இந்தா கூலா இந்த போவன்டோ குடி”

 

“இது எப்படி எனக்கு பத்தும்”

 

“இப்போ உனக்கு என்ன தான் வேணும்”

 

“நான் போய் சாப்பிட்டு வரட்டுமா!!”

 

அவனோ தலையிலடித்துக் கொண்டான். “ஹ்ம்ம் இப்படிலாம் பண்ணா அப்புறம் எனக்கு கோவம் வந்திரும்”

 

“வந்தா என்ன பண்ணுவே??”

 

“எனக்கு வேற கோபம் வந்தா ரொம்ப பசிக்கும்” என்று அவள் சொன்ன தொனியில் அவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வர “அம்மா தாயே நீ போய் சாப்பிடு” என்று அவளை அனுப்பி வைத்தான்.

 

மகிழின் திருமணம் முடிந்த மறுநாள் வேந்தனும் முல்லையும் ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

 

வேந்தன் முல்லையிடம் ஒரு வாரத்திற்கு தேவையான உடைமைகளை முதல் நாளே அவளிடத்தில் எடுத்து வைக்க சொல்லியிருந்தான்.

 

எதற்கு என்று அவனிடத்தில் கேட்காத போதும் எதற்காய் இருக்கும் என்ற எண்ணத்தில் லேசாய் முகம் சிவக்க முதல் நாளே அனைத்தும் தயாராய் தான் வைத்திருந்தாள்….

 

Advertisement