Advertisement

அத்தியாயம் – 18

 

இரவு எட்டு ஐம்பது மணி

————————————————

 

நேரமாகவே உறக்கம் வருகிறது என்று சொல்லி முல்லை அறைக்குள் சென்றிருந்தாள்.

 

அமுதாவிற்கு அவளின் இந்த ஓட்டம் தெரியுமென்பதால் அவள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினாள்.

 

இத்தோடு இருபத்தியேழாவது முறையாக அவள் கைபேசியை எடுத்து பார்த்துவிட்டாள். அறைக்கு வந்ததில் இருந்து அவளுக்கு கைபேசியை துழாவி பார்ப்பது மட்டுமே வேலையாய் இருந்தது.

 

வேந்தன் சொன்னது போல மகிழிடம் வீட்டின் இன்டர்நெட் பாஸ்வார்ட் வாங்கி போட்டும் விட்டாள். எங்கே அவனிடமிருந்து தான் ஒன்றையும் காணோம்.

 

இவள் கல்லூரி தோழிகளின் குரூப்பில் இருந்து தான் மெசேஜ்கள் வந்த வண்ணமிருந்தது. இவள் ஆன்லைனில் இருப்பதை கண்டு ஆளாளுக்கு இவளை பேச வருமாறு தனித்தனியாக மெசேஜ் வேறு.

 

‘போங்கடி’ என்று நினைத்துக்கொண்டு நெட்டை ஆப் செய்தாள். இப்போது நேரம் பார்க்க எட்டு ஐம்பத்தியொன்பது.

 

அய்யோ இவரு சரியான நேரத்துக்கு பிறந்தவரா இருப்பார் போல. ஒரு ஐஞ்சு நிமிஷம் முன்னாடி கூப்பிட்டா என்ன குறைஞ்சா போவாரு என்று கோபம் வரத் துவங்கியது வேந்தனின் மனையாளுக்கு.

 

வேந்தனோ சரியாக ஒன்பது மணிக்கு தான் அழைத்தான் அவளை. கையிலேயே வைத்திருந்ததால் வேகமாய் பொத்தானை அழுத்தியிருந்தாள்.

 

இருவரின் குரலும் ஒன்றாய் மோதிக் கொண்டன ஹலோ என்று. பின் அமைதியும் ஒன்றாய்!! மீண்டும் பேச்சை ஆரம்பிக்க “நான் பேசிடறேன்” என்று அவன் சொல்ல முல்லை அமைதியானாள்.

 

“என் போன்காக வெயிட் பண்ணிட்டு இருக்கியா” என்றவனுக்கு தெரிந்தே தானிருந்தது அவள் காத்திருக்கிறாள் என்று இருந்தாலும் அதை அவள் வாய் மொழி சொன்னால் கூடுதல் சந்தோசம் தானே.

 

‘பின்னே வேற எதுக்காக காத்திட்டு இருக்க போறேன்’ என்று மனதிற்குள்ளாக அவனை வைதுவிட்டு “ஹ்ம்ம் ஆமா” என்று சொல்லி அவன் மனதை குளிர வைத்தாள்.

 

“நிஜமா தான் சொல்றியா??” என்று மீண்டும் அவள் ஆம் சொல்வதை கேட்கும் ஆவலில் கேட்டு வைத்தான்.

 

‘பின்னே பொய்யா சொல்வாங்க… அடப்போய்யா இதை கேட்க தான் போன் பண்ணியா…’ என்று தான் தோன்றியது அவளுக்கு.

“பின்னே வேற எதுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேனாம்”

 

“ரொம்ப சந்தோசமா இருக்கு இதை கேட்கும் போது”

 

அவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை அதனால் “சாப்பிட்டீங்களா??” என்று கேட்டு வைத்தாள். (அவளுக்கு தெரிஞ்சதை தானே கேட்க முடியும்)

 

“ஹ்ம்ம் சாப்பிட்டேன், நீ??”

 

“இப்போ தான் சாப்பிட்டேன்…” என்றதும் இருவரிடையே சின்ன மௌனம் அவளுக்கு அதை தொடர பிரியமில்லாமல் “நீங்க என்ன சாப்பிட்டீங்க??” என்று மீண்டும் தனக்கு தெரிந்ததை கேட்டாள்.

 

“சப்பாத்தி சப்ஜி”

 

“சப்ஜின்னா??”

 

‘இப்போ இது ரொம்ப முக்கியம்??’ என்று அவன் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை.

 

அவனுக்கு என்ன தெரியும் அவள் இது ஏதோ புது டிஷ் என்று கேட்கிறாள் என்று.

 

“அது சைட்டிஷ்” என்றான்.

 

“அதான் என்னன்னு கேட்டேன்??”

 

“சைட்டிஷ்ன்னு இங்கிலீஷ்ல சொல்றதை தான் ஹிந்தில சப்ஜின்னு சொல்லுவாங்க…” என்று அவன் இப்போதும் அதை மட்டுமே விளக்கினான்.

 

“ஏன் என்ன சைட்டிஷ்ன்னு சொன்னா என்ன… அதை சொன்னா எனக்கு புரிஞ்சுட்டு போகுது…” என்றாள்.

 

அவனுக்கு பொறுமை கொஞ்சம் கரைந்திருந்தது. “அதை தெரிஞ்சு நீ இப்போ என்ன பண்ணப் போறே??” என்று சிடுசிடுப்பாய் வந்தது பதில்.

 

“இப்போ எதுக்கு கத்துறீங்க?? நான் என்ன தப்பா கேட்டேன். எனக்கு தெரிஞ்சதை கேட்டேன், பதில் சொல்றதுன்னா சொல்லுங்க. இல்லைன்னா போங்க…” என்று சிறுகுழந்தையாய் பேச அவனுக்கு அய்யோவென்றானது.

 

‘டேய் வேந்தா இந்த பேபி வைச்சுட்டு நீ என்னடா பண்ணப் போறே… இவளை கரெக்ட் பண்ணணும்ன்னா நீ ருசியா சமைச்சா தான் முடியும்’ என்று இவன் சிந்தனை சென்று கொண்டிருக்க எதிர்முனையில் ஏதோ பேச்சு சத்தம் கேட்க காதை தீட்டினான்.

 

“யாருகிட்ட வசந்தி பேசிகிட்டு இருக்க??” என்றவாறே உள்ளே வந்திருந்தார் ராஜம்.

 

அவள் சற்றும் யோசிக்கவில்லை “உங்க மருமகன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லவும் “நீ பேசு…” என்றவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

அதற்குள் எதிர்முனையில் இவனோ டவாலி ஆகியிருந்தான், முல்லை என்று மூன்று முறை அழைத்து.

 

“எதுக்கு என் பேரை இப்படி ஏலம் விட்டுக்கிட்டு இருக்கீங்க… இங்க தானே இருக்கேன்…”

 

“யார் வந்தாங்க??”

 

“எங்கம்மா…”

 

“என்னவாம்??”

 

“போன்ல யாருன்னு கேட்டாங்க??”

 

“நீ என்ன சொன்ன??” (தெரிந்து கொண்டே கேள்வி கேட்க உன்னால தான்டா வேந்தா முடியும்)

 

“நீங்க தான்னு சொன்னேன்…”

 

“அவங்க எதுவும் சொல்லலையா??”

 

அவளுக்கு இப்போது கடுப்பாக வந்தது. “என்ன சொல்லியிருக்கணும்ன்னு எதிர்பார்க்கறீங்க??” என்றாள் வெடுக்கென்று.

 

‘வேந்தா சூடு ஜாஸ்தியாகுதுடா அடக்கி வாசி…’ என்று மனசாட்சி சட்டென்று எடுத்துக்கொடுக்க சமாதான உடன்படிக்கைக்கு வந்தான் அவன்.

 

“இல்லை நான்னு சொன்னதும் எதுவும் சொல்லுவாங்களோன்னு தான் கேட்டேன்… வேற ஒண்ணுமில்லை” என்று சமாளித்தான்.

 

“நான் என் புருஷன் கூட தானே பேசிட்டு இருக்கேன். வெட்டியா ஒண்ணும் கடலை போடலையே!! அவங்க என்ன சொல்லியிருக்க போறாங்க…” என்று அவள் படபடப்பாய் சொன்னதை கேட்டு அவன் இதயம் பலமாய் முரசு கொட்டியது மகிழ்ச்சியில் தான்.

 

‘வேந்தா ரொம்ப டைம் எடுக்க வேண்டியது இல்லை போலவே… இப்படியே பேசி கரெக்ட் பண்ணு’ என்று மனசாட்சியின் அறிவுரையை பின்பற்றி மெதுவாய் பேச ஆரம்பித்தான்.

 

இருவரும் மெதுவாய் இயல்பான உரையாடலுக்கு வந்திருந்தனர். வேந்தனுக்கு அவளுடன் சகஜமான பேச்சு வந்திருந்தாலும் மனதில் ஓரத்தில் ஒரு சின்ன வலி இருக்கவே செய்தது.

 

அது அவள் அவன் வாங்கிக் கொடுத்த மோதிரத்தை திருப்பிக் கொடுத்தாளே என்ற வருத்தத்தினால் உண்டானது.

 

அதை போனில் எல்லாம் பேசி தீர்க்க முடியாது என்று எண்ணியவன் அந்த பேச்சை விட்டு சாதாரணமாய் அவளிடம் பேசவாரம்பித்திருந்தான்.

 

அவளும் அவனுடன் பேசியதில் அகமகிழ்ந்து தான் போயிருந்தான்.

இருவரும் பெரிதாய் ஸ்வீட் நந்திங்க்ஸ் பேசியிருப்பார்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அது தவறு.

 

முல்லை தனக்கு தெரிந்த விஷயத்தை பற்றி மட்டுமே அவனிடம் பேசினாள். வேறு வழி வேந்தனும் அவளை ஒட்டியே பேச ஆரம்பித்திருந்தான்.

 

பின்னே பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்.

 

அந்த ஒன்றரை மாதமும் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் ஓடிவிட்டதாகவே தோன்றியது வேந்தனுக்கும் முல்லைக்கும்.

 

இன்னும் ஒரு வாரத்தில் மகிழின் திருமணம். அன்று காலையிலேயே வந்துவிட்டான் அவள் கணவன்.

 

வந்ததும் முல்லையை தான் தேடினான். ஆடி முடிந்து அவள் பெங்களூருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவனில்லாத நாட்களில் அவனறையில் தான் இருந்தாள்.

 

போனில் அவனிடம் பேசிய போது கூட அதை சொல்லியிருந்தாள். அறையில் அவள் இருந்ததிற்கான அடையாளமாய் கட்டிலின் விளிம்பில் ஒட்டியிருந்த பொட்டும் அறையில் புதிதாய் குடி வந்திருந்த பெட்டியுமே சொன்னது.

 

அவன் வந்ததில் இருந்து அவளை தான் காண மாட்டோமா என்றிருக்க அவள் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருந்தாள் அவன் முன் வராமல்.

 

அறைக்குள் வந்து விழுந்த வேந்தனுக்கு கோபமாக வந்தது. ‘நான் வருவேன்னு இவளுக்கு தெரியும் தானே. கிளம்புறதுக்கு முன்னாடி கூட போன் பண்ணேன் தானே’

 

‘இறங்கிட்டும் போன் பண்ணேன், அப்போ கூட நல்லா தானே பேசினா. இப்போ நான் வீட்டுக்கு வரவும் எங்க தான் போனாளோ தெரியலையே’ என்ற கறுவல் அவனிடத்தில்.

 

கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தவன் கைபேசி எடுத்து வேண்டுமென்றே அவளுக்கு அழைப்பு விடுத்தான். அவள் எடுத்தால் தானே அதில் இன்னமும் காண்டாகிப் போனவன் மொபைலை தூக்கி எறிந்துவிட்டு கோபமாக வெளியில் சென்றுவிட்டான் யாரிடமும் சொல்லாமல்.

 

அவன் தந்தை வாயிலில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருக்க அவரிடம் தலையசைத்து வெளியே சென்று வருவதாக மட்டும் சொல்லி கிளம்பிவிட்டான்.

 

கால்கள் தன் போக்கில் நடந்துக் கொண்டிருக்க அவனுக்கு கொதித்துக் கொண்டிருந்தது.

 

கையில் யார் கிடைத்தாலும் கைமா ஆகிவிடும் நிலை தான் இப்போது. மனம் அமைதியின்றி தவித்தது.

 

‘என்னை பிடிக்கலையா!!’ என்ற எண்ணத்திற்கு வந்து மேற்கொண்டு எதையும் எண்ணப் பிடிக்காமல் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான்.

 

அருகில் இருந்த மாலுக்கு சென்றவன் கால்கடுக்க அந்த மாலை சுற்றி சுற்றி வந்தான். வீட்டில் தேடுவார்கள் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு வரவேயில்லை.

 

வந்தாலும் அதைப்பற்றி அவனுக்கு இப்போது கவலையுமில்லை. அவன் தான் கோபமாயிருக்கிறானே!! எப்படி அதை வெளிக்காட்டுவதாம்!!

 

வேந்தனுக்கு லேசில் கோபம் வராது. வந்தால் அவனை மலையிறக்குவதென்பது மிகப்பெரிய காரியம்.

 

முல்லை விஷயத்தில் அவன் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மட்டுமே இறங்கி வந்திருந்தான்.

 

அதனாலேயே அவளிடத்தில் கோபமிருந்த போதும் அதை மீறி நேசம் மட்டுமே அவனிடத்தில் வெளிப்பட்டது.

 

மத்தப்படி அவன் அன்னை விஷயத்தில் மற்றவர்களின் போக்கு இன்னமும் அவனால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று தான்.

 

மதிய உணவு வேளை நெருங்க பசிப்பது போல தோன்றவும் மாலில் இருந்த பூட் கோர்ட்க்கு சென்றவன் உணவருந்தினான்.

 

எந்த நேரமாக இருந்தாலும் உணவருந்தும் நேரத்தில் அவனுக்கு முல்லை ஞாபகம் வராமல் போனதில்லை எப்போதும்.

 

அவளுக்கு இது பிடிக்குமா அது பிடிக்குமா என்று எண்ணியவாறே சாப்பிட்டு முடித்தவனின் மனம் இப்போது அமைதியடைந்திருந்தது போலிருந்தது.

 

மாலில் இருந்து வெளியில் வந்தவன் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்லவும் கண்மணி வாயிலிலேயே பரபரப்பாய் நின்றிருந்தார்.

 

கண்மணி கலங்கிய விழிகளுடன் நின்றிருப்பதை கண்டு அவரருகில் சென்றவன் “என்னம்மா என்னாச்சு எதுக்கு இங்க நிக்கறீங்க??”

 

“எங்கடா போனே நீ??” என்று அழுதுவிடும் குரலில் கேட்டார் அவர்.

 

“ஏன் அப்பாகிட்ட சொல்லிட்டு தானே போனேன். கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்னு”

 

“ஏன் எங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு போக உங்களுக்கு குறைஞ்சு போகுதா?? போன் வேற எடுக்காம போயிருக்க?? நாங்க என்னன்னு நினைக்கறது??”

 

“உயிரே போய்டுச்சு… உன் பொண்டாட்டிகிட்ட தான் தினமும் பேசுறல… அவகிட்டயாச்சும் சொல்லிட்டு போயிருக்கலாம்ல” என்று சொன்னதும் அவனுக்கு புஸ்சென்று கோபம் வந்தது இப்போது.

 

“ஏன் மகராணி உங்ககிட்ட கம்பிளைன்ட் பண்ணாளா நான் சொல்லலைன்னு?? வீட்டுக்கு ஒருத்தன் வந்தா பார்க்கறதுக்கு ஆளைக் காணோம். அப்புறம் எதுக்கு என்னை காணோம்ன்னு எல்லாம் தேடுறீங்க”

 

“என்னமோ ரொம்ப அக்கறையா இருக்கற மாதிரி. இதுக்கு நான் பேசாம டெல்லிலவே இருந்திருக்கலாம்”

 

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மகிழும் கரிகாலனும் உள்ளே நுழைந்தனர்.

 

‘இவங்களுக்கு வேற சொல்லணுமா இனி’ என்று பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்லப் போக “யாழ் எங்கே போனே??” என்றான் மகிழ்.

 

“எங்கயோ போனேன் இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி வரிசையா விசாரிக்கறீங்க??” என்று சிடுசிடுத்து உள்ளே சென்றுவிட்டான்.

 

“என்னாச்சு கண்மணி??” என்று மனைவியிடம் விசாரிக்க “கோபமாயிருக்கான்…” என்றார் அவர் பதிலுக்கு.

 

“ஏனாம்??” என்றவரின் கேள்விக்கு வேந்தன் பேசியதை பதிலாக்க மற்றவர்களும் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டனர்.

 

இவ்வளவு களேபரம் நடந்த போதும் முல்லை அவனெதிரில் வந்திருக்கவில்லை. வேந்தன் அறியாத ஒன்று அன்று அவர்களுக்கு முதலிரவென்பது!!

 

முல்லைக்கு விஷயம் முதலிலேயே தெரியுமென்பதால் அவனிடம் அதை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு அவன் முன் வராமல் அவள் போக்கு காட்டினாள்.

 

வீட்டிற்கு வந்தபின் அவன் போன் செய்திருந்த போது அவள் குளிக்க சென்றிருந்தாள் அதனாலேயே பார்க்காமல் விட்டிருந்தாள்.

 

குளித்து வந்து போனை பார்க்க வேந்தன் அழைத்திருந்தது கண்டு இதற்கு மேல் அவனிடம் விளையாட முடியாது என்று எண்ணி அவனுக்கு போன் செய்ய அது சுவிட்ச் ஆப் என்று வந்திருந்தது.

 

கண்மணியிடம் சொல்லிக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்து பார்க்க காலியாக இருந்த அறையும் அவன் வீசி எறிந்திருந்த போனும் தான் கண்ணில்பட்டது அவளுக்கு.

 

ஏதோ விபரீதமாய் தோன்றிய போதும் ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக காட்டிக் கொண்டாள். கரிகாலன் அவன் எங்கோ வெளியில் சென்றிருப்பதாக கூற மற்றவர்களும் பேசாமல் விட்டனர்.

 

நேரமாக ஆக அவனை தேடிய போது தான் அவளால் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பின் மகிழும் கரிகாலனும் அவனைத் தேடி செல்லவும் அவனே வீட்டிற்கு வந்தான்.

 

முல்லை அதுவரையிலும் அவர்களின் அறையில் கட்டிலில் குப்புறப்படுத்து அழுதுக் கொண்டிருந்தாள். வேந்தன் உள்ளே நுழையவும் கட்டிலில் படுத்திருந்தவளின் தோற்றம் எதுவோ செய்ய ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று அமர்ந்தான்.

 

அவன் வந்துவிட்டது கூட உணராமல் அழுது கொண்டிருப்பவளை சமாதானப்படுத்தும் எண்ணமெல்லாம் அவனுக்கு வரவேயில்லை.

 

கோபம் இன்னமும் மிச்சமிருந்தது. கண் முன்னால் வராமல் என்னை அலைக்கழிப்பது பின் கண்ணீர் வடிப்பதா!! என்ற நினைப்பு அவனுக்கு.

 

அவள் நிறுத்துவாள் போல தோன்றாததால் கொஞ்சம் சலிப்புடனே “முல்லை” என்றழைத்தான். அடுத்த நொடி அவன் மனைவி அவனை இறுக்கி அணைத்திருந்தாள்…

 

Advertisement